குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, February 25, 2014

ஆண்கள் அவசியம் படிக்க வேண்டியது

எது நல்லது? இதுவா?

ஜெர்மனியில் இருந்து ஒரு தமிழ் பெண் அழைத்தார். எனக்குத்தான் வசியம் பற்றி நிறைய அழைப்புகள் வரும் என்று முன்பே சொல்லியிருந்தேன் அல்லவா? அதே பிரச்சினைதான் இப்போதும்.

அவர் துயரத்தை என்னவென்று கேட்போம் என்று தொடர்ந்து பேசினேன்.

திருமணம் ஆன நாள்  முதலாய் அவரின் கணவர் எப்போதும் அவர் குடும்பத்தாரோடுதான் பேசிக் கொண்டிருப்பாராம். இவர் தனியாளாய் அறைக்குள் அடைந்து கிடப்பாராம். இரவு வந்தால் அறைக்கு வந்து குடும்பம் நடத்துவாராம்(???). அவரின் அம்மா, அப்பா, தங்கைகளுக்குத்தான் முதல் மரியாதை. இப்பெண்ணிடம் ஏதும் அதிகமாய் பேசிக் கொள்வதில்லையாம். இப்படியே காலங்கள் கழிந்த நாட்களில் இருவருக்கும் இரண்டு பசங்கள் பிறந்து விட்டார்கள்.

திடீரென்று சில நாட்களாகவே அவர் கெட்ட சகவாசப் பெண்களுடன் ஊர் சுற்றுகின்றாராம். வீட்டுக்கும் வருவதில்லை. அம்மா வீடே கதியென்று கிடக்கின்றாராம். அப்பெண் பெரும் துயரத்தோடு என்னிடம் கதைத்துக் கொண்டிருந்தார். வேதனையாக இருந்தது.

பிரச்சினை ஆணிடம் உள்ளது. 

இந்த ஆண்களுக்கு ஒரு விஷயம் புரிபடவே இல்லை.

அம்மா, அப்பா, அண்ணன், தங்கை, தம்பிகளுக்கு மரியாதையும், அவர்களுக்குச் செய்ய வேண்டியதையும் செய்துதான் தீர வேண்டும். அது கடமை என்பதில் எந்த மாற்றுக் கருத்தும் இல்லை.

ஆனால் இன்னொரு வீட்டில் செல்லமாக வளர்ந்த பெண் புகுந்த வீட்டுக்கு வரும் போது அவளின் ஒரே நம்பிக்கை, ஆதாரம் எல்லாம் கணவன் தான். ஆடித் திரிந்த அவள் இனிமேல் வேறொருவருக்குச் சொந்தம் என்று வரும் போது அவளுக்குள் ஏற்படும் சில உள்மனப் போராட்டங்களை ஆண்கள் சரியாகப் புரிந்து கொள்வதில்லை. தன் வீட்டாருடன் அவள் திடீரென்று சினிமாவில் வரும் கதாபாத்திரங்கள் நடந்து கொள்வது போல, புகுந்த வீட்டாரிடம் ஒட்டிக் கொண்டு அனைவரிடம் நல்ல பேர் எடுக்க வேண்டுமென நினைக்கும் மனோபாவத்தில் தான் பெரும்பாலான ஆண்கள் இருக்கின்றார்கள்.

சினிமா ஒவ்வொரு காட்சியாக எடுக்கப்பட்டு பின்னர் கோர்க்கப்படுவது.

அதுவும் வாழ்க்கையும் ஒன்றில்லை என்பதை ஆண்களின் மனது புரிந்து கொள்ள மறுக்கிறது. அதே போல சில பெண்களும் இருக்கின்றார்கள்.

தன் குடும்பத்தினர் ஒவ்வொருவரையும் புரிந்து கொண்டு அவள் தனக்கொரு குடும்பத்தை நிர்மாணிக்க தயாராக வேண்டும். அதற்குரிய மனப்பக்குவம் சிலருக்குத்தான் இருக்கும். இப்போதையப் பெண்களுக்கு அது கிடையாது. ஒரு சிலர் விதி விலக்காக இருக்கலாம்.

ஆணும் பெண்ணும் இணைந்து ஒரு குடும்பம் என்கிற ஆலமரத்தினை உருவாக்குவதுதான் இறைவனின் படைப்பியல் நோக்கம். இதற்கொரு முழு உதாரணமாய் சொல்ல வேண்டுமெனில்  எழுத்துச் சித்தர், தமிழர்களின் தலைவர் திரு. கலைஞரைத்தான் சொல்ல வேண்டும். அவர் ஒரு மிகச் சிறந்த குடும்பத்தலைவர். அவர் ஒருவரால் எத்தனை வாரிசுகள் இருக்கின்றார்கள் என்பதை ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். இதைத்தான் வாழ்க்கை என்பது.
ஒரு ஆணுக்கு அம்மா, அப்பா, அண்ணன், தம்பி, தங்கை, அக்கா செய்ய முடியாததை அவனின் மனைவி செய்வாள். திருமணம் ஆன ஆணுக்கு மிகவும் முக்கியமானவர் அவனின் மனைவி. 

அவள் சரியில்லை என்றால் நிதர்சனம் என்னவென்றுச் சொல்லிக்கொடுக்க வேண்டும். அவளை நிதர்சன வாழ்க்கைக்குத் தயார் செய்தல் வேண்டும். அவளை தன் வாரிசுகளை உருவாக்கி அதை நல்வழியில் சீர்படுத்திச் செல்ல கொஞ்சம் கொஞ்சமாய் சொல்லிக்கொடுத்து அவளை முழுமையாகத் தயார் செய்தல் வேண்டும்.

என் அம்மா சொல்வதைத்தான் கேட்பேன். என் உடன்பிறந்தார் தான் முக்கியம் என்றால் நீ சும்மா இருக்க வேண்டும். வேறொரு வீட்டுப் பெண்ணைக் கொண்டு வந்து லூசுத்தனமாக நடந்து கொள்ளக் கூடாது.

இப்போதெல்லாம் குழந்தை பெறுவதை தள்ளிப் போடுவது ஒரு பேஷனாக வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். பப்புக்குச் செல்வது, குடிப்பது, கூத்தடிப்பது தான் வாழ்க்கை என்றால் குடும்பம் என்கிற அமைப்பு எதற்கு? திருமணம் ஆன உடன் குழந்தை பெற்றுக் கொள்ளுங்கள். குடும்பப் பொறுப்பு தன்னாலே வந்து விடும். எக்காரணம் கொண்டும் பிள்ளை பெறுவதை தள்ளிப்போடாதீர்கள்.

இப்படித்தான் ஹிப்பிகள் என்றொரு கூட்டம் கஞ்சா, குடி, கூத்து, பல ஆண்களிடம் படுப்பது, பல பெண்களை சுகிப்பது என்று திரிந்து கொண்டிருந்தார்கள். இப்போது அவர்கள் எங்கே என்றுச் சொல்லுங்கள் பார்ப்போம். ஒரு ஹிப்பி கூட கிடையாது.

இயற்கைக்கு மாறான எந்த ஒரு விஷயமும் நாளடைவில் அழிந்து போகும் என்பது இயற்கை.

சில பெண்கள் கல்யாணம் ஆன நாள் முதல் கணவன் தன்னுடனேயே இருக்க வேண்டும். அவன் தான் சொல்வதை மட்டும் தான் கேட்க வேண்டும் என்று நினைப்பது பைத்தியக்காரத்தனம். அது ஒரு கடைந்தெடுத்த முட்டாள்தனமானதும் கூட. 

சுற்றமும், நட்பும் இல்லையென்றால் இந்த உலகில் மனிதன் எவனும் உயிருடன் வாழலாம். ஆனால் மகிழ்ச்சியாக வாழவே முடியாது. ஒருவருக்கொருவர் உதவி செய்து வாழ்வதுதான் மனித வாழ்க்கையின் தத்துவம். 

அதை விடுத்து தன் புருஷனை அழைத்துக் கொண்டு அம்மா வீட்டுக்குச் செல்வது. பின்னர் மாமியார் சொல்வதை மந்திரமெனக் கேட்பது என்று மாற்றி விடுகின்றார்கள். இதே நடத்தையை நாளை அவள் பிள்ளைகள் செய்வார்கள். உடனே இவர்கள் மருமகள் கொடுமை என்பார்கள். இவர்கள் முன்பே செய்ததை அவர்கள் பிள்ளைகள் செய்தால் கொடுமை என்று கதறுவார்கள்.
ஒவ்வொரு தனி ஆணுக்கும் பெண்ணுக்கும் சொல்லிக் கொள்வது ஒன்றே ஒன்றுதான்.

கணவன், மனைவி உறவு என்பது மிகவும் புனிதமானது. அது ஒரு பாரம்பரியத்தை உருவாக்கி தன் இருப்பை உலகுக்கு விட்டுச் செல்லும் ஆலமரம் போன்றது. அதை மறந்து விட்டு பைத்தியக்காரத்தனமான செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருந்தால் இப்படித்தான் குடும்பம் சிக்கி சின்னாபின்னமாகப் போய் விடும். 

இதுவா?

எங்கெங்கும் நோக்கினும் கை விடப்பட்ட வயதானவர்களாய் தெரு ஓரத்தில் விழுந்து உழல்வீர்கள். அந்த நிலைக்குச் செல்ல வேண்டுமெனில் ஆடுங்கள், பாடுங்கள், குடியுங்கள், கூத்தடியுங்கள். சில லூசுத்தனமான எழுத்தாளர்கள் சொல்வதைக் கேட்டுக் கொண்டு பைத்தியக்காரத்தனமான செயல்களைச் செய்யுங்கள். 

எதைச் செய்யினும் ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். இந்தச் செயல் என்ன நன்மை தரும் என்று ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். விஷயம் விளங்கி விடும். விஷமமானவற்றை புரிந்து கொள்வீர்கள்.

1 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இயற்கையை மீற முடியாது...

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.