குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Monday, February 13, 2012

பூச்சுமை

கரிசல் பூமி ஏழைகளை கொன்று போடும் கந்தகம் தகிக்கும் பூமி. மழையற்ற பூமியின் மண்ணுக்குள் ஏழ்மையோடு போராடி போராடி தோற்றவர்களின் எத்தனையோ கதைகள் புதைந்து போய் கிடக்கின்றன. உழைப்பின் பயனை அனுபவத்தறியா மக்கள் வாழும் மரணத்தின் சுவடுகள் புகையாய் கவிழ்ந்த பூமி கரிசல் பூமி.

சம்சாரிகளுக்கு ஒரு கஷ்டமென்றால் ஏழைபாழைகளுக்கு வேறு கஷ்டம், இப்படியே வாழ்க்கை வண்டியை அதனதன் துன்பத்தோடு ஓட்டிச் சென்று முடியாத வாழ்க்கைப் பாதையில் வழியில் ஏதோ ஒரு திருடனால் கழட்டி விடப்படும் ஜனங்கள் நிரம்பிய அப்பூமியின் சில நிகழ்வுகளை மேலாண்மைப் பொன்னுச்சாமியின் பூச்சுமை புத்தகம் எழுத்துக்களில் காட்சியாய் வடித்திருந்தது.

புத்தகத்தைப் படிக்கப் படிக்க மனதில் பாரொமொன்று படிந்து விலக நேரம் பிடித்தது. பூச்சுமையில் அனைத்தும் சிறு கதைகள். என்னைப் பாதித்த ஒரு சிறுகதை “மைதானம்”.

பேச்சி என்கிற ஒன்பது வயதுச் சிறுமி தன் தாயின் துயரத்தில் பங்கெடுக்க தன் ஆடிப்பாடி விளையாடிக் கொண்டிருந்த தன் மைதானத்தை விட்டு தீப்பெட்டித் தொழிற்சாலைக்குச் செல்கிறாள். அங்கு தன் வயதின் காரணமாய் அடிபைப்பில் தண்ணீர் அடிக்க அதைக் கண்டு மேஸ்திரி திட்டுகிறான். கோபத்தில் அவரை எதிர்த்துப் பேசுகிறாள். மறு நாள் அவளை பஸ்ஸில் ஏற்றிக் கொள்ள மறுக்க அச்சிறுமிக்கு பயமேற்பட்டு விட, ஏஜெண்ட் ஏதேதோ பேசி சமாளித்து கம்பெனிக்கு அனுப்பி வைக்கிறான். பல பேர் முன்னிலையில் அவமானப்பட்ட அச்சிறுமியின் கண்களில் நீர்ப் பூக்கிறது. அதை மறைக்க அவள் சன்னலோரம் முகத்தை திருப்புகிறாள். அங்கு அவள் விளையாண்ட மைதானம் அவளை விட்டு தூரப் போய்க் கொண்டிருக்கிறது. அவள் தனக்குள் நினைக்கிறாள் “ விளையாடுவது தவறா?” என்று.

மனதைக் கனக்கச் செய்த சிறுகதை. அதன் தாக்கம் தீர கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் ஆகி விட்டது.

வார்த்தைகளில் காட்சியைப் பிடிப்பது என்பது “ மேலாண்மை பொன்னுச்சாமி” அவர்களுக்கு கை வந்த கலை. ஒவ்வொரு சிறுகதையும் ஒவ்வொரு படம். மனித வாழ்க்கையின் அவலங்களைப் படம் பிடித்துக் காட்டுகின்றன.  அனைவரும் படிக்க வேண்டிய புத்தகம்.

இன்றைக்கு செய்தி தாளில் ஒரு செய்தி வெளியாகி இருந்தது. பவர் கட் ஆன நேரத்தில் பக்கத்து வீட்டுப் பசங்களால் ஒரு பெண்மணி கற்பழிக்கப்பட்டிருக்கிறார் என்று. பவர் கட் இன்னும் என்னென்ன செய்ய இருக்கிறதோ தெரியவில்லை. தங்கம் விற்கும் விலைக்கு பவர் கட் பல பேரின் வாழ்க்கையை கட் செய்து விடாமல் இருக்க வேண்டும். அரசு விரந்து ஆவண செய்தால் நலம்.

- ஃப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

Thursday, February 9, 2012

புத்தக இடுக்கினுள் மறைந்து கிடக்கும் மயிலிறகுகளும் ஒன்பது மணி நேர மின்வெட்டும்



கோவையில் இதுவரையிலும் காணாத மின்வெட்டு. காலையில் மூன்று மணி நேரம், மதியம் மூன்று மணி நேரம், இரவில் ஒரு மணி நேர இடைவெளியில் அடுத்து அடுத்து இரண்டு மணி நேரம் மின்வெட்டு செய்கிறார்கள், இதுவும் போதாது என்று விடிகாலையில் ஒரு மணி நேரம் என்று மின்வெட்டினை அமல்படுத்துகின்றார்கள் மின்சார வாரியத்தார். மொத்தமாய் ஒன்பது மணி நேர மின்வெட்டு.

எங்கள் பகுதியில் காலை ஒன்பது மணிக்கே மின்சாரம் போய் விடுகிறது. ஆன்லைனில் வேலை பார்க்கும் என்னைப் போன்றோரின் கதியை ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். கஸ்டமருடன் தொடர்பு கொள்ள முடியவே இல்லை. இரவிலோ தொடரும் அசாதாரண மின்வெட்டினை நினைத்தாலே “டென்ஷன்” ஏறுகிறது. விடிகாலையில் மின்வெட்டு வேறு. பேசாமல் வீட்டினை சென்னைக்கு மாற்றி விடுங்கள், இப்பிரச்சினையில் இருந்து தப்பிக்கலாம் என்றார் நண்பர்.

நடக்கக்கூடிய காரியமா இது? ஏன் இப்படியானது தமிழகம்? தமிழகத்தில் மக்கள் வாழக்கூடிய சூழ் நிலைகள் ஒவ்வொன்றாய் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. மின்சாரம் இல்லையென்றால் மனிதன் எப்படித்தான் வாழ்வது? ஆட்சிக்கு வந்த ஆறு மாதங்களில் மின்வெட்டு சரி செய்யப்படும் என்றார்களே, என்ன ஆயிற்று? யாரிடம் கேட்பது இப்பிரச்சினை பற்றி? விரைவில் சரிசெய்கிறோம் என்கிறார்கள். ஆனால் ஒன்றும் நடக்க மாட்டேன் என்கிறது.

கேபிள் டிவிக்கு 70 ரூபாய் கட்டணம் என்கிறது அரசு, ஆனால் எங்கள் பகுதி கேபிள் ஆபரேட்டர் 100 ரூபாய் வாங்குகிறார். ஒளிபரப்பும் சரியில்லை. ஏன் என்று கேட்டால் அங்கிருந்து அப்படித்தான் வருகிறது என்கிறார்கள். இதுபற்றி யாரிடம் முறையிடுவது? எங்கே கம்ப்ளைண்ட் செய்வது என்றே புரியவில்லை. அரசு போடும் உத்தரவை கேபிள் ஆபரேட்டர் கூட மதிக்கமாட்டேன் என்கிறார்கள்.

உறவுகளால், நண்பர்களால் பிரச்சினை வரும். துன்பம் வரும், துயரங்கள் வரக்கூடும். ஆனால் வாழ்க்கையில் பிரச்சினைகளை அரசே உருவாக்குகிறது என்பது கொடிய விஷயம்.

தலைப்பிற்கும் இப்பதிவிற்குமான சம்பந்தம் என்ன என்று கேட்கத் தோன்றுகிறது அல்லவா?

மேலே இருப்பது புலம்பல்கள். எழுதியாவது மன ஆற்றாமையை தீர்த்துக் கொள்ளலாம் என்று எழுதியதால் மனவெழுச்சி கொஞ்சம் குறைந்திருக்கிறது.

மதத்திற்கு மனிதன் தேவையா? இல்லை மனிதனுக்கு மதம் தேவையா? என்பது பற்றிய முகத்தில் அறையும் அப்பட்டமான உண்மை பற்றிய பதிவினைத்தான் எழுத நினைத்தேன். ஆனால் ஆளும் அரசால் படும் வேதனை முன்னே வந்து நின்று கொண்டு மூளையை வேலை செய்ய விடமாட்டேன் என்கிறது. ஆகவே மின்சாரம் இருக்கும் போது, நேரம் கிடைக்கும் போது எழுத முயற்சிக்கிறேன். அதுவரை

- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

Sunday, February 5, 2012

தாம்பத்ய ரகசியம் என்பது என்ன?





”86 வயசு தம்பி” என்றார். இடமொன்றினைப் வாங்குவதற்காக பார்வையிடச் சென்றிருந்த போது, அருகிலிருந்த வீட்டில் வாயிலில் ஏதோ வேலை செய்து கொண்டிருந்தன் பெரியவரிடம், தண்ணீர் கேட்க, கொடுத்த முதியவரிடம் கேட்ட கேள்விக்கு பதில் கிடைத்தது இப்படி.

”13 குழந்தைகள்” என்றார் தொடர்ந்து. விழிகள் விரிய அவரைப் பார்த்தேன். வீட்டுக்கார அம்மாள் சமையல் செய்து கொண்டிருக்கிறார் என்றார் மேலும் தொடர்ந்து. சுவாரசியமான மனிதராக இருப்பதை விட அனுபவசாலியாய் இருக்கின்றாரே, அவருடன் சற்றே உரையாடலாம் என்று நினைத்து, காரை ஓரமாக நிறுத்தச் சொல்லி, வீட்டு வாசலில் கிடந்த கயிற்றுக் கட்டிலில் அமர்ந்தேன்.

முதியவரின் மனைவி வீட்டினுள் இருந்து வந்து வரவேற்றார். பூமி வாங்கவா வந்தீர்கள் ? என்று விசாரணையை ஆரம்பித்து, கல்யாணம் ஆகிடுச்சா, எத்தனை குழந்தைகள் என்று தொடர, நானோ ”உங்க அளவுக்கு இல்லை பாட்டி, ஏதோ என்னால் முடிந்தது ஆணொன்று பெண்ணொன்று ”என்றேன். பாட்டி ரகளையான ஆள் போல. பேச்சில் எள்ளலும், துள்ளலும் விளையாடியது.

”இந்தக் கிழவனிருக்காரே, பெரிய ஆளு. மூனு மாசத்துக்கொருதடவை அணைச்சாருன்னா, இடுப்பொடுஞ்சி போகும். அடுத்து பத்து மாசத்துக்கு பக்கத்துலே விட மாட்டேன். போதும் போதும்னு சொன்னாக்கூட விடாமல், அதைச் சொல்லி, இதைச் சொல்லி 13 பேராக்கிட்டாரு தம்பி” ன்னாரு பாட்டி.

13 பெருக்கல் 10 - 130 மாதம் கிட்டத்தட்ட கல்யாணம் ஆகி பதினோறு வருடமாய் அலுக்காமல் சலிக்காமல் பிள்ளை பெற்றுக் கொண்டிருந்திருக்கிறார்கள் இருவரும். அத்தனை பிள்ளைகளும் உயிரோடாதினிருக்கின்றார்களாம். திருமணமாகி பேரக்குழந்தைகளுடன் வசித்துக் கொண்டிருக்கிறார்களாம். திருமணம் ஆன ஒரு மாதத்தில் தனிக்குடித்தனம் வைத்து விடுவாராம் பெரியவர். இப்படியே அனைவருக்கும். பெண்பிள்ளைகளுக்கு காலத்தே சொந்தத்தில் திருமணம் செய்து வைத்து விடுவார்களாம். வரதட்சிணைப் பிரச்சினையெல்லாம் இல்லை தம்பி, ஏன்னா சொந்தக்கார பசங்களுக்கே பொண்ணுங்களைக் கொடுத்து, பெண் எடுத்தேன் என்றார் பெரியவர்.

இரவில் நீண்ட நேரம் கழித்து பார்ட்டிக்குச் சென்று வீடு திரும்பிய மனைவியைப் பற்றி அவள் அம்மாவிடம் ரிப்போர்ட் சொன்ன ஒரே காரணத்திற்காக, மருமகன் மீது பாகிஸ்தான் தீவிரவாதி இல்லை இல்லை சைனாக்காரன் அளவுக்கு பகை கொண்டு டிவோர்ஸ் வாங்கிக் கொடுத்த பெண்மணியைப் பார்த்திருக்கிறேன். அதை பெண் சுதந்திரம் என்றுச் சொல்லி சப்பைக்கட்டு கட்டிய கணவருக்கு இன்று ஒரு வாய் சோறு போடக்கூட நேரமில்லாமல் பார்ட்டி, மீட்டிங், பேச்சு, அரசியல் என்று அலைந்து கொண்டிருக்கும் பெண்மணியை சமூகத்தில் பெண்ணுரிமைவாதி என்று பலர் பேசக் கேட்டிருக்கிறேன்.

இப்படியான ஒரு காலகட்டம் நடந்து கொண்டிருக்கும் போது, தள்ளாத வயதில் தன் கணவனின் சளித் தொந்தரவிற்கு “தூதுவளை ரசம்” வைத்துக் கொண்டிருக்கும் முதிய பெண்மணியைப் பார்க்கின்ற போது மனதுக்குள் ஆயாசம் எழுவதை என்னால் தடுக்கவே முடியவில்லை.

எனக்குத் தெரிந்த அரசியல்வாதிப் பெண்மணி ஒருவரைப் பற்றி இங்கே நான் உங்களுக்குச் சொல்லியே ஆக வேண்டும். கணவன் சம்பாதித்துக் கொடுக்கும் காசில் குடும்பம் நடத்த தெரியாதவள் பெண்ணே அல்ல என்பார்கள் கிராமப்புறத்தில். இந்தப் பெண்மணிக்கு கணவன் சம்பாதித்துக் கொண்டு வரும் காசு வாரம் ஒரு முறை சேலை வாங்கவே போதவில்லை. என்ன செய்யலாம் என்று யோசித்துக் கொண்டிருக்கும் போது, அருகாமை வீட்டிலிருந்த ஒரு கிளைச்செயலாளர் ஒருவருடன் பேசும் வாய்ப்புக் கிடைத்தது. கிளைச் செயலாளர் கட்சிக்குப் பணி செய்தாரோ இல்லையோ, இந்தப் பெண்மணிக்கு நன்றாக ஆயில் சர்வீஸ் செய்து, ஒருவழியாக பிரச்சாரத்திற்கு வந்த தலைவரிடம் அறிமுகம் செய்து வைத்தார். அதன் தொடர்பாக தலைவருக்கு இவர் செய்த சர்வீஸ் காரணமாக, உயர்ந்த மாவட்டப் பிரதி நிதித்துவம் கிடைக்க காசு கொட்ட ஆரம்பித்தது. அதன் பிறகு அந்த தலைவருக்கு சப்ளை செய்யும் பிரதான வேலையைச் செய்ய ஆரம்பித்து என்னென்னவோ ஆகி விட்டது. இத்துடன் அரசியல் பெண்மணியைப் பற்றி முடித்து விடுகிறேன். மேலும் கிளறினால் “ நாறிப் போய்விடும்”.

மிடில் கிளாஸ் குடும்பங்களிடம் காணப்படும் ஜாதி வெறிகள் பணமுடையவர்களிடம் கிடையாது. பெரும் தனக்காரர்கள் பணம், பதவிகளை முன்வைத்து திருமணங்களை நடத்துகின்றனர். அவர்கள் ஜாதி பார்ப்பதில்லை. ஏனென்றால் பணத்திற்கு ஜாதி கிடையாது. ஏழ்மையான குடும்பத்திற்கும், மிடில் கிளாஸ் குடும்பத்திற்கும் ஜாதி, ஜாதகம் போன்றவை இல்லையென்றால் வாழ்க்கையே இல்லை. இது ஒரு மாயவலை என்றே நினைக்கத்தோன்றுகிறது.

இதற்கிடையில் பெண்ணீயவாதிகள் பெண்களுடனான தனிமையை பெரிது படுத்தி, நீ இதற்காகவா பிறப்பெடுத்தாய் என்றெல்லாம் ஊதி ஊதி குடும்ப வாழ்க்கைக்கு வெடி வைத்துக் கொண்டிருக்கிறார்கள். தனிமை மனிதர் அனைவருக்குமான பொதுவான ஒன்று. அது ஆணானாலும் சரி, பெண்ணானாலும் சரி. பெண்களின் வாழ்க்கையில் வெறுமை மட்டுமே மிச்சம் என்பதாயும், அவர்கள் ஆண்களின் ஆக்கிரமிப்பில் அழிந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதாயும் இல்லாததும், பொல்லாததுமான புரட்டுக்களை கட்டுக்கதைகளாக்கி, குடிப்பதையும் கண்டவனுடன் படுப்பதையும் பெண்ணுரிமை என்று பேசி வருபவர்களால் குடும்ப அமைப்பு சீரழிந்து கொண்டிருக்கிறது. எங்கோ ஒருவரோ அல்லது ஒரு சிலரோ செய்யும் தவறுகளை சில பத்திரிக்கைகள் பெரிது படுத்தி, பெரும்பான்மை சமூகத்தில் இந்த வகையான கொடுமைகள் நடந்து கொண்டிருப்பதாய் கதை விட்டு மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி, பெண்களைத் தனிமைப்படுத்தி தன் இச்சைகளுக்கு ஆளாக்கி வருகின்றனர். ஆணோ பெண்ணோ தனக்காக மட்டுமே வாழ முடியாது. மனிதர்கள் பிறரிடமிருந்து பெற்று கொண்டு, பெற்றுக் கொண்டதை பிறருக்கு வழங்கி வாழ வேண்டியவர்கள்.

திருமணத்திற்குப் பிறகான வாழ்க்கையில் ஆணுக்கும் பெண்ணுக்குமான வாழ்க்கையில் சலிப்பு தட்டி விடக்கூடாது என்பதற்காகத்தான் காலத்தே குழந்தைகளைப் பெற்றுக் கொள்ள வேண்டும் என்றுச் சொல்லி இருக்கின்றார்கள். இல்லற இன்பத்தில் சலிப்புத் தட்டுமுன் குழந்தை உருவாக்கம் ஒரு நீண்ட இடைவெளியை தம்பதியினரிடையே உருவாக்கி விடும். தொடர்ந்து கிடைத்துக் கொண்டிருந்த இல்லற இன்பம் வாரிசுக்காக தள்ளி வைக்கப்படும் போது, மனைவியின் மீதான ப்ரியம் கணவனுக்குக் குறைந்து விடாது. அவள் நல்ல முறையில் குழந்தை பெற்று வந்து மீண்டும் தனக்கு இல்லற இன்பத்தைத் தர வேண்டும் என்ற ஆவலில் கணவன் ஆசையாய் உழைத்துக் கொண்டிருப்பான். மனைவியைக் கண்ணும் கருத்துமாய் பாதுகாத்து, அவள் வேண்டுவன வாங்கிக் கொடுத்து அரவணைத்து வருவான். அந்தப் பாட்டியும் பெரியவரும் இத்தகைய வாழ்க்கையை வாழ்ந்ததால் தான் 13 குழந்தைகள் பெற முடிந்தது. இன்னும் அவர்களுக்கிடையேயான இல்லறம் இனிதே நடந்து கொண்டிருக்கிறது.

ஆணும் பெண்ணும் தனியாய் வாழலாம் என்று இயற்கை நினைக்கவில்லை. அதை சில செக்ஸ் வெறி பிடித்த மனித அரக்கர்கள் நினைக்கின்றார்கள். ஆகையால் பெண்கள் மட்டுமல்ல ஆண்களும் கூட இத்தகைய பெண்ணீயம் பேசும் வாதிகள், பத்திரிக்கைகளிடம் இருந்து தன் குடும்பத்தை மட்டுமல்லாது தன் வாழ்க்கையையும் பாதுகாத்துக் கொள்ள வேண்டியது ஒவ்வொருவரின் கடமை.

- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

Sunday, January 29, 2012

சேலை கட்டினால் கேன்சர் வரலாம்


”நிம்மதியாக வாழ வேண்டுமா, யார் வாயிலும் விழாமல் வாழக் கற்றுக் கொள்” என்பார்கள். பிரச்சினைகள் நம்மைத் தேடி வருவதில்லை, அதை நாம் தேடிக் கொள்கிறோம் என்பார்கள். அதை எனது நண்பர் சொன்ன உண்மைச் சம்பவம் மூலம் அறிய நேர்ந்தது. ஆனானப்பட்ட ஹிட்லருக்கும் விதி ஒரு நாள் குறித்தது. உலகையே வெல்ல முயன்ற அலெக்சாண்டருக்கும் விதி தன் முடிவை எழுதியது. உலகில் நிரந்தரமானது எதுவுமில்லை அது எதுவானாலும் சரி !

பெண் பிள்ளை சரியில்லை என்றால் குடும்பம் மட்டுமல்ல, பரம்பரையே படுகுழிக்குள் சென்று விடும். அப்படி ஒரு அடாவடியான பெண்மணி ஒருவருக்கு விதி அடித்த ஆப்பு இருக்கிறதே அது தான் இந்தக் கதை. இந்தக் கதை நடந்தது திருநெல்வேலிப்பக்கம். அந்தப் பெண்மணி சற்றே வசதியானவள். திமிர், அகங்காரம், ஆணவம், எடுத்தெறிந்து பேசும் குணம் இவற்றின் மொத்த உருவம் அந்தப் பெண். கணவனோ அப்பாவி. வீடுகள் கட்டி வாடகைக்கு விட்டு வசூல் செய்து கொண்டிருக்கிறாள் அப்பெண். வாடகைக்கு வருவோரை ஆட்டிப் படைப்பது அவளின் பொழுதுபோக்காம். பணம் பற்றிய கவலை இல்லை என்றால் மனிதனுக்கு வேறு குணங்கள் வந்து விடும். இப்படியான பெண்மணிக்கு விதி ஒரு முடிவு கட்ட எண்ணியது.

அவளின் வீட்டுக்கு குடி வந்திருந்த குடும்பத்தில் ஒருவன் ஏதோ குடும்பப் பிரச்சினையில் அவனது நண்பனைக் கொன்று விட்டான். அவனை மூட்டையாகக் கட்டி வெளியில் கொண்டு போய் போட்டு விட வீட்டு ஓனரின் பைக்கை இரவல் கேட்க, அவரும் கொடுத்திருக்கிறார். ஒரு வாரத்தில் கொலையாளியை ட்ரேஸ் செய்த போலீஸார், வீட்டு ஓனரையும் கைது செய்து சிறையில் அடைத்து, கொலைக்கு சாட்சியாய் பைக்கையும் பறித்து விட்டார்கள். ஒருவழியாக ஜாமீனில் வெளிவந்து செத்த பாம்பாய் நடந்து கொண்டிருக்கிறார் அந்த ஆசாமி. இப்போது அந்தப் பெண்மணி அரண்டு போய் திரிகின்றாராம்.

இப்படி ஒரு சம்பவம் தன் வாழ்க்கையில் நடக்கும் என்று அந்தப் பெண்மணி நினைத்துக் கூட பார்த்திருக்கமாட்டார். கோடியாய் பணமிருந்து என்ன பலன்? ஜெயிலில் போட்டு விட்டார்களே? இனி அந்த அவமானத்தை எங்கு போய் துடைக்க? இதற்குத்தான் சொல்வார்கள் “ஓவராக ஆடக்கூடாது” என்று.

அடக்கம் இல்லையென்றால் இறைவன் அடக்கி விடுவான்.

இன்றைய டைம்ஸ் ஆஃப் இந்தியாவில் சேலை உடுத்தும் பெண்கள் பயன்படுத்தும் பாவாடை நாடாவை இறுக கட்டுவதால் கேன்சர் வரக்கூடிய சாத்தியங்கள் இருக்கின்றன என்று செய்தி வெளியாகி இருக்கிறது. நாடா அகலமானதாக இருக்க வேண்டுமாம். அதுவும் இறுக்கமாய் கட்டக்கூடாதாம்.  இக்கட்டுரையைப் படிக்க இங்கே சொடுக்கவும்.


- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

Saturday, January 28, 2012

சரியாகச் சாப்பிட்டால் உடல் எடை குறையுமாம்

கல்கண்டில் வெளியாகி இருக்கும் ஒரு கட்டுரை உடல் நலத்திற்கு சில நல்ல கருத்துக்களை கொண்டிருப்பதால் அதை இங்கு அவர்கள் அனுமதிப்பார்கள் என்ற நம்பிக்கையுடன் வெளியிடுகிறேன். நன்றி : கல்கண்டு மற்றும் ஜே.டி.எஸ்

- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

உடல் எடையைக் குறைக்க சரிவரச் சாப்பிடுங்கள்

உங்களுக்குப் பிடித்தமான உணவுகளை நன்கு மென்று சாப்பிட்டு வந்தால் உங்கள் இடுப்பளவும் குறையும். நீங்கள் விரும்பியதை விட இரண்டு மடங்கு வேகத்தில் உடல் பருமன் குறையவும் வாய்ப்புள்ளது. மென்று சாப்பிடுவதால் பசி எடுப்பதும் குறைவதால் உடல் பருமன் குறைவதும் உறுதி.

உதாரணமாக உணவிற்குப் பிறகு காபி, தேநீர் அருந்தினால் இரும்புச் சத்து உடலில் சேராது என்பார்கள். ஆனால் உணவிற்குப் பிறகு அருந்தும் காபி அல்லது தேநீர் வளர்சிதை மாற்றத்தை 12% கூடுதலாகத் துரிதப்படுத்துவதால் சாப்பிட்ட உணவுகள், குறிப்பாக கொழுப்புகள் தங்காமல் எரிக்கப்பட்டு ஜீரணமாகி விடுகின்றன. சாப்பிட்ட உணவில் கண்டிப்பாக புளி, மிளகாய், ஏலக்காய், இஞ்சி என ஏதாவது ஒன்று இடம் பெற்றிருக்கும். இவற்றில் உள்ள வைட்டமின் சி, தேநீரில் உள்ள (காபியில் உள்ள) இரும்புச் சத்தை அழிக்காமல் ஜீரணிக்க வைத்து விடும்.

எனவே, மதியம் பிரியாணி, பரோட்டா என்று சாப்பிட்டால் ஒரு கப் தேநீர் அல்லது காபி அருந்துங்கள்.

பழங்கள், காய்கறிகள், கொட்டைகள், அசைவம் என எதைச் சாப்பிட்டாலும் அவை வேகமாக எரிய நன்கு மென்று சாப்பிட்டு ஒரு கோப்பை தேநீர் அருந்துங்கள். ஆப்பிள், திராட்சை போன்றவற்றை நன்கு மென்று சாப்பிடுங்கள்.

கலோரியை வேகமாக எரிப்பதுடன் குறைவாகச் சாப்பிட வைப்பது கைக்குத்தல் அரிசி, சம்பா ரவை, கேழ்வரகு, சோளம், பருப்புவகைகள். பருப்பு வகை 50% என்ற கணக்கில் சாப்பிட்டால் குறைவாகச் சாப்பிடுவோம். இவற்றில் உள்ள நார்ச்சத்து வயிற்றை நிரப்பும் துத்தநாக உப்பு அதிகம் சாப்பிட்ட திருப்தியைத் தரும். இதனால் கு றைந்த அளவு உடலில் சேர்ந்த உணவும் உடலில் வேகமாக எரிக்கப்படும்.

மூன்றாவதாக சக்தி தரும் உணவுகளையும் நன்கு சேர்த்துக் கொள்ள வேண்டும். பால் சேர்க்காத கறுப்பு தேநீரிலும் காபியிலும் உள்ள காஃபைன், சாப்பிட்ட உணவுகளை வேகமாக எரிக்கிறது. பால், சர்க்கரை சேர்க்காமல் அருந்துங்கள். ஐஸ் கிரீம் சாப்பிடாமலும் பார்த்துக் கொள்ளவும். கிரீன் டீயும் பால் சேர்க்காமல் அருந்த வேண்டும்.


கிரீன் டீயில் காஃபைன் இல்லை. ஆனால், காட்சின்ஸ் என்ற ஆன்ட்டிஆக்ஸிடெண்ட் உள்ளது. இது தினமும் 80 கலோரிகளை வளர்சிதை மாற்றமடைய விரைவுபடுத்தி எரித்துவிடுகிறது.

கறுப்பு நிற சாக்லெட்டுகளில் காஃபைன், காட்சின்ஸும் இருப்பதால் தினமும் 18 கிராம் அளவே சாப்பிட்டு வரவும். இவ்விரண்டும் வளர்சிதை மாற்றத்தை அதிகரிப்பதால் கலோரி வேகமாக எரிக்கப்படும். உடற்பயிற்சி, நடைப்பயிற்சி செய்ய ஆரம்பிக்கும்போது சாக்லெட்டை சாப்பிடுவது நல்லது.

சாக்லெட்டில் கொழுப்பும் கலோரியும் அதிகம். எனவே 18 கிராமைத் தாண்டக்கூடாது.

நான்காவதாக, உடலுக்கு வெப்பம் தரும் உணவுகளைச் சேர்க்க வேண்டும். சமையலில் இஞ்சி, மிளகு, பூண்டு, கடுகு, கிராம்பு, ஏலக்காய் சேரவேண்டும். இவை கொழு ப்பையும் தீவிரமாக எரித்து விடும். குறிப்பாக, நீரிழிவு நோயாளிகள் போல எனத் தினமும் சாப்பிட்டால் இவை வரமிளகாய் துவையல், கறிவேப்பிலைத் துவையல், மிளகு போன்றவை 100 கலோரியை தினந்தோறும் எரிக்கும்.

இத்துடன் கொழுப்பு நீக்கப்பட்ட, பால், தயிர், இரண்டு டம்ளர் சுடுநீர், மூன்று தக்காளி, அன்னாசிப்பழம், 100கிராம் திராட்சை போன்றவையும் உணவில் இடம் பெறுவது நல்லது.

சாதம் ஒரு கரண்டி அல்லது இரண்டு கரண்டி என்று குறைத்துக் கொண்டு மற்ற உணவுகளை சற்று தாராளமாக சேருங்கள். நன்கு மென்றும் சாப்பிடுவதே மிக முக்கியமானது. இதுவே உடல் எடையைக் கட்டுக்குள் வைக்கும்.

- கே.டி.எஸ்.

Friday, January 27, 2012

கண் திருஷ்டி பிரச்சினை

மனிதனின் சில துன்பங்களுக்கு காரணம் பிறரின் கண் பார்வை. நான் அதை இது நாள் வரையிலும் அனுபவித்து வருகிறேன். எனக்கு திருமணமான புதிது. நானும் மனைவியும் தனியாக குடித்தனம் நடத்தி வந்தோம். அன்றொரு நாள் மதியம் மனைவி சாப்பாடு கொண்டு வந்தார். அப்போது அடிக்கடி வியாபாரம் தொடர்பாய் யூபிஎஸ் விற்கும் விற்பனை பிரதிநிதி வந்தார். ஆஃபீஸ் அறையின் கதவு மூடியிருந்தும், தட்டினார். யாரென்று பார்க்க கதவைத் திறந்த போது உள்ளே வந்து விட்டார். உள்ளே வந்தவரை வெளியேவா போகச் சொல்ல முடியும். அப்போது தட்டில் சாப்பாடு பரிமாறி இருந்தது. தட்டைப் பார்த்தார், என்னைப் பார்த்தார், “வாழ்ந்தால் உங்களைப் போல வாழ வேண்டும் சார் !” என்றார். சாப்பிடுங்கள் என்றுச் சொல்லியும் கேட்கவில்லை.

நீங்கள் நம்புவீர்களோ இல்லையோ தெரியவில்லை, அன்றிலிருந்து சாப்பாடு கொண்டு வரமுடியவில்லை. நேரத்திற்குச் சாப்பிடவும் முடியவில்ல நீண்ட காலத்திற்கு.

நானும் குழந்தைகளோடு மனைவியும் எங்காவது சென்று வந்தால் சரியாக ஒரு மாதம் எங்களுக்கு காய்ச்சல் வந்து விடும். படாத பாடு படுவோம். சிங்காநல்லூரிலிருக்கு மசூதிக்குச் சென்று கயிறு போட்டுக் கொண்டு வந்தால் உடனடியாக காய்ச்சல் நிற்கும். அதே போல வீறு வீறு என்று அழுதுகொண்டு காய்ச்சலில் அவதிப்படுவர்களை மந்திரித்து தாயத்துக்கட்டுபவரிடம் அழைத்துச் சென்று வந்த பிறகு குழந்தை அது பாட்டுக்கு சிரித்துக் கொண்டு, ,காய்ச்சல் நின்று போய் இருக்கும். இரண்டு குழந்தைகளை வளர்த்துக் கொண்டிருக்கும் அனுபவத்தில் சொல்கிறேன் மேற்கண்ட சம்பவங்கள் உண்மையாய் இன்றும் நடந்து கொண்டிருக்கின்றன.

என்ன பரிகாரம் செய்யலாம் என்று கேட்டால், வரக்கூடிய திருஷ்டிகளை வேற்றுப்பக்கமாய் திருப்புவது தான் பரிகாரம் என்கிறார்கள். வீடென்றால் வாழை வைக்கலாம். அல்லது திருஷ்டிப் பூசணிக்காய் கட்டலாம். மனிதனென்றால் கருப்புக் கயிறு கட்டலாம், இல்லை தாயத்து அணியலாம்.

கண் திருஷ்டி என்பது மனிதனைத் தாக்கும் கொடிய ஒரு வகை பார்வை நோய்.  அதன் கோரப்பிடியிலிருந்து தப்பிப்பது என்பது முடியவே முடியாத காரியமாக இருக்கிறது.

- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

Thursday, January 26, 2012

ஒரு குவளை நீருக்குள் காந்தி - ஆத்மா பற்றிய அறிவியல் விளக்கம்


நேற்றைக்கு முதல் நாள் இரவு ஒன்பது மணி போல நேஷனல் ஜியாகரபி சேனலைப் பார்த்துக் கொண்டிருந்தேன். இவ்வுலகம் அணுக்களால் ஆனது என்றார்கள். குடிக்கும் தண்ணீருக்குள் கோடிக்கணக்கான அணுக்கள் இருக்கின்றன என்றார்கள். எந்த அணுவும் அழிவதில்லை என்றார்கள். அது உருவம் மட்டுமே மாறிக் கொண்டிருக்கிறது என்கிறார்கள். நாம் குடிக்கும் தண்ணீருக்குள் மஹாத்மா காந்தியை உருவாக்கிய அணுக்கள் இருக்கலாம். அதாவது சுருக்கமாய்ச் சொன்னால் நாம் காந்தியைக் கூட குடித்திருக்கலாம்.

இந்து மார்க்கத்தில் ஜீவாத்மாவிற்கு அழிவே இல்லை என்றும், உடல் மட்டுமே அழிகிறது என்றும் ஆனால் ஆத்மா அழிவதே இல்லை என்றும் விரிவாக எழுதி இருக்கின்றார்கள்.

ஆன்மீகத்தினைப் புரிந்து கொள்ள எளிதில் முடியாது என்று எனது நண்பர் ஒருவர் சொல்வார். ஆன்மீகத் தத்துவங்கள் பல அறிவியலுக்கும் அப்பாற்பட்டது. எனது வாழ்வில் நான் பல உண்மை ஆன்மீகவாதிகள், போலி ஆன்மீகவாதிகளுடன் பழகி இருக்கிறேன். அப்போதெல்லாம் ஜீவாத்மாவிற்கு(மனிதனின் ஆத்மா) அழிவில்லை என்றுச் சொல்லக் கேட்டிருக்கிறேன். இவ்வாக்கியம் எனக்கு குழப்பத்தையே இதுகாறும் தந்து கொண்டிருந்தது. ஆனால் அதை ஜியாகிரபிக் சேனல் நிவர்த்தி செய்து விட்டது.

ஆமாம் நண்பர்களே, ஜீவாத்மாவிற்கு அழிவே இல்லை என்பது நிரூபிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பான மேலதிக விபரத்திற்கு நீங்கள் நேஷனல் ஜியாகிரபிக் சேனலைத் துருவிப் பார்க்கவும்.

அணுக்களால் உருவம் மாற்றமடையுமே தவிர அந்த அணு அழிவதில்லை என்பதுதான் ஆத்மா அழிவதில்லை என்பதாகும். அதாவது அணுக்கள் ஒன்று சேர்ந்து மனிதனாய், விலங்காய், செடியாய், கொடியாய், புல்லாய், பூண்டாய், மரமாய், தண்ணீராய் மாறும். அதே அணுக்கள் பிறகு வேறொரு மாற்றம் பெரும். இதைத்தான் இன்று அறிவியல் கண்டுபிடித்திருக்கிறது. இதைப் பற்றி முன்னே சொல்லி வைக்கப்பட்டிருக்கிறது. அணுவை ஆத்மா என்றார்கள். அவ்வளவுதான். அதைத்தான் நாம் குடிக்கும் நீருக்குள் காந்தியை உருவாக்கிய அணுவோ அல்லது அன்னை தெரெஸாவை உருவாக்கிய அணுவோ இருக்கலாம். இதை வைத்துப் பார்க்கும் போது, முன் ஜென்மம் என்பதெல்லாம் இருக்க 100% சதவீத வாய்ப்பு இருக்கிறது என்று எண்ணத் தோன்றுகிறது.

இன்று கண்டுபிடிக்கப்பட்ட இந்த அறிவியல் உண்மை, நம் ஆன்மீகத்தில் என்றோ கண்டுபிடிக்கப்பட்டிருப்பதை நினைக்கும் போது, ஆன்மீகத்தின் வழி சென்றால் அறிவியலில் என்னென்னவோ கண்டுபிடிப்புகளை நிகழ்த்தலாம் என்று நம்பிக்கை வருகிறது.

இந்துக் கலாச்சாரத்தின் மேன்மைக்கு ஈடாக எதையும் சொல்ல முடியாது அல்லவா?

- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

Tuesday, January 24, 2012

நடிகர் விஜய்யின் சரியான நகர்தல்


குருவி படத்தில் விஜய் எங்கிருந்தோ பறந்து பறந்து வந்தெல்லாம் அடித்து தூள் கிளப்புவார். சினிமா தியேட்டரில் இண்டர்வல்லில் ரசிகன் ஒருவன் தன் நண்பனிடம் இது பற்றி அலுத்துக் கொள்ள, "நண்பன் இதே சூர்யா செய்தால் ஒத்துக் கொள்வோமா? இதற்கு விஜய்தான் லாயக்கு" என்றான். சினிமா தியேட்டருக்கு ரெகுலராக வருகை தரும் ரசிகன், தன் நண்பரான தியேட்டர் மேனேஜரிடம் “ என்னாங்க இது, காத்துல பறக்கறாரு, படம் பார்க்க புடிக்கல காசைக் கொடுங்க” என்றுச் சொல்லி வந்து நின்றார். இதெல்லாம் விஜய் படத்தின் ரிலீசின் போது அவரின் ரசிகர்கள் பேசிக் கொண்டது.

ஆனந்த விகடன் நேர்காணலின் போது பிரபல இயக்குனர்களின் லிஸ்ட்டில் விஜய்யின் பெயரே இல்லை என்று எழுதி இருந்தார்கள். அப்போது புது இயக்குனர்களுக்கு வாழ்வு கொடுக்கிறேன் என்றுச் சொன்ன விஜய் தற்போது உண்மை நிலவரத்தைப் புரிந்து கொண்டிருப்பார் என்று நினைக்கிறேன்.

அவர் விரும்பிய, நம்பிய பறந்து பறந்து போடும் சண்டை இல்லை,பஞ்ச் டயலாக் இல்லை, ஆனால் படம் வெற்றி. விஜய்யிடம் என்ன பிரச்சினை என்றால் தான் செய்யும் சில அசட்டைகளை அவர் இன்னும் விடாமல் நடிப்பில் பயன்படுத்துவதுதான். ஒரே மாதிரியான அசட்டைகள் எரிச்சலை உருவாக்கும் என்பதை அவர் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்று நண்பன் படத்தினைப் பார்க்கின்ற போது தெரிய வருகின்றது.  இது மாதிரியான விஷயங்கள் எல்லாம் நண்பன் படத்தின் வெற்றிக்கு முன்னால் காணாமல் போய் விட்டன என்பதால் அதைப் பற்றி அதிகம் பிரஸ்தாபிக்கத் தேவையில்லை.

இவருக்குப் பின்னால் வந்த சூர்யா பிரபல இயக்குனர்களின் ஹிட் லிஸ்ட்டில் இருக்கிறார். சூர்யா நடிப்பில் எங்கோ சென்று விட்டார். தனுஷோ இன்னும் ஒரு படிமேல் சென்று விட்டார். போக்கிரி, வில்லு, வேட்டைக்காரன், சுறா போன்ற அக்மார்க் அட்டர் பிளாப்புகளால் தன் இமேஜ்ஜை வேறு விதமாக புரிந்து கொண்டிருந்தார் விஜய். ஆனால் தற்போது அவரின் நண்பன் படம் அந்த அடிதடி இமேஜ்ஜை உடைத்து, அவருக்கு வேறு விதமான பாதையைக் காட்டி இருக்கிறது. அவர் நிச்சயம் தற்போது தன் நிலையையும், ரசிகர்களின் போக்கினையும் புரிந்து கொண்டிருப்பார் என நம்பலாம்.

இயக்குனர் சங்கருக்கென்று இருக்கும் ஆடியன்ஸை தன் பக்கம் இழுத்திருக்கும் விஜய், அடுத்து வரப்போகும் முருகதாஸின் “துப்பாக்கி”, கவுதம்மின் “யோகன் அத்தியாயம் ஒன்று” போன்ற படங்களினால் நிச்சயம் அமீர்கான் போன்ற சிறந்த நடிகராக மிளிர்வார் என்று நம்பலாம். இயக்குனர் முருகதாஸுக்கு என்று இருக்கும் ஆடியன்ஸ், கவுதமிற்கு என்று இருக்கும் ஆடியன்ஸ் என்று பல பிரபல இயக்குனர்களின் ஆடியன்ஸ்களை தன் பக்கம் ஈர்ப்பதில் தான் நடிகரின் ரசிகர்கள் கூட்டம் அதிகமாகும். வியாபாரமும் அதிகமாகும். இந்த நடிகரை வைத்து படமெடுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் லாபம் வரும். அதற்காக புதிய இயக்குனர்களின் படங்களை ஒத்துக் கொள்ளக் கூடாது என்றுச் சொல்லவில்லை. கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் கவனம் வேண்டும். ரசிகர்களைக் கவரும் கதைகளைத் தேர்ந்தெடுப்பதில் மிக்க கவனம் கொள்ள வேண்டும். தமிழ் சினிமா உலகின் சாபக்கேடு கதை திருட்டு. அதை விஜய்யின் தந்தை செய்கிறார் என்று சில சர்ச்சைகள் இருக்கின்றன.  இதன் காரணமாக கூட நல்ல  நல்ல கதைகள் கூட விஜய்யை எட்டி விடாமல் போகலாம். விஜய் இது போன்ற சின்ன சின்ன விசயங்களைச் சரி செய்து கொள்ள வேண்டியது அவரின் வெற்றிக்கு முக்கியம்.

இப்போதிருக்கும் காலம் எம் ஜி ஆர் காலம் அல்ல. இது டெக்னாலஜி ஆட்சி செய்யும் டெக் உலகம். அதை நடிகர்கள் உணர்ந்து தன் மீதான வியாபார உத்தியைப் பெருக்க வழி வகை செய்ய வேண்டும். அதை விடுத்து, “ நான் போகும் பாதை தனிப்பாதை” என்றெல்லாம் பஞ்ச் டயலாக் விட்டு, தானும் ரஜினி போன்று வரலாம் எனக் கனவுக் கோட்டை கட்டினால் அது காற்றின் சிறு சலசலப்பில் கலைந்து போகும்.

விஜய் அதை உணர்ந்து கொண்டால் மிக நல்ல நடிகராக பரிணமளிக்கலாம். இல்லை என்றால் ஒரு காலத்தில் மிகப் பிரபலமான, பெண்களால் அதிகம் காதலிக்கப்பட்ட “திரு மோகன்” கதி போல ஆகி விடுவார் என்பது நிச்சயம். உலகம் மாறிக்கொண்டிருக்கிறது, அதே போல மாற்றப்பட்ட வியாபார உத்திகளை புகுத்தாத எவரும் வெற்றி பெறுவது அவ்வளவு எளிதல்ல.

- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

Monday, January 23, 2012

அழகின் அற்புதம் படைப்பின் உச்சகட்டம்(A)

பல வருடங்களுக்கு முன்பு ஸ்பெயின் நாட்டில் இருக்கும் டெக்ஸ்டைல் இறக்குமதியாளருக்கு அங்கீகரிக்கப்பட்ட இந்தியாவின் பையிங் ஏஜென்டாக இருந்தேன். ஜெர்மனியில் இருக்கும் பிரபல தியேட்டர் ஒன்றின் சீருடை ஒன்றின் ஆர்டருக்காக கோவை வரும் சூழ் நிலை ஏற்பட்டது. நானும், வாசுதேவன் என்கிற நண்பரும் காரில் வந்து கொண்டிருந்த போது பல்லடம் தாண்டி ஒரு வளைவு வரும். வலது புறமாய் பெட்ரோல் பங்க் ஒன்று கூட இருக்கிறது. அது ஒரு எஸ் பெண்ட் போல இருக்கும். அந்த வளைவில் அடிக்கடி டிராஃபிக் ஆகி விடும். எங்களின் கார் (எனக்குப் பிடித்த ப்ரீமியர் 118 கார் ) முன்னே ஒரு பெண் எங்களைத் தாண்டிச் செல்ல முயன்று கொண்டிருந்தார்.

நண்பர் வாசுதேவன் கிரீச்சிட்டார். ”தங்கம், அங்கே பாருங்க அழகின் அற்புதத்தை!” என்றார் சத்தமாய். நிச்சயம் இது நாள் வரையிலும் நான் அப்படியான அழகுப் பெண்ணைப் பார்த்ததே இல்லை. ஒரு கணம் என் மூச்சு நின்று பின் நிதானமானது. அழகு என்றால் அப்படி ஒரு அழகு. பிரம்மன் மறந்து போய் படைத்து விட்ட அற்புதத்தின் பேரழகி அப்பெண். நானும் என் நண்பரும் மூச்சடைத்து, பிரம்மையின் உச்சத்தில் மித மிஞ்சிய இன்பத்தில் ஆழ்ந்தோம். பார்ப்பதில் கூட இப்படி ஒரு இன்பம் இருப்பதை அன்று நாங்கள் அறிந்து கொண்டோம். இன்றைக்கு எங்கள் சார்பு நிறுவனமான ஃபெமோ மாடலிங் கம்பெனியில் எண்ணற்ற பெண்கள் விளம்பரங்களுக்காகவும், சினிமாவில் நடிப்பதற்காகவும் எங்களை அணுகுகின்றனர். இந்தியாவின் மிகப் பிரபலமான பல மாடல்கள் எங்கள் நிறுவனத்தின் மாடல்கள். இருப்பினும் அவர்களில் எவரும் இதுகாறும் நான் அன்று கண்ட “அற்புத அழகியினை” ஒத்தார்கள் இல்லை.

ஒரு பெண் அழகு என்று எப்படி உணருவது என்று கேட்கத் தோன்றும். தோற்றத்தை வைத்து அதை உணரலாம். பிற விஷயங்கள் பற்றி எழுத கூச்சமாய் இருப்பதால் விட்டு விடுகிறேன். வில் இருக்கிறதே வில் அதை பார்த்திருப்பீர்கள். காமத்தின் கடவுள் மன்மதன் கையில் இருக்கும் மனிதர்களைக் கொல்லும் வில், அதை நேரில் நிறுத்திப் பார்த்திருந்தீர்கள் என்றால் ஒரு பெண்ணின் வடிவம் எவ்வாறு இருக்கும் என்பதை நீங்கள் அனுமானித்திருக்க முடியும். இதற்கு மேல் விளக்கமாய் எப்படி எழுதுவது? இதோ ஒரு வில்லின் படம். மன்மதனின் கையில் வில் ஏன் என்ற கேள்விக்கு பதிலை நான் அந்த அழகின் அற்புதப்படைப்பினைக் கண்ட போது அறிந்து கொண்டேன்.



( எனக்குப் பிடித்த கடவுள் ராமரின் கையில் வில். இவர் கையில் வில் ஏன் என ஒரு கணம் எண்ணிபாருங்கள். கடவுள் படைப்பின் மகத்துவத்தினை உணரலாம், பிரமிக்கலாம், புரிந்து கொள்ளவே முடியாத கடவுள் படைப்புகளின் மகத்துவத்தை அறியலாம் )

ஜானி என்ற படத்தில் ஸ்ரீதேவி அப்படியான தோற்றத்தில் வருவார். அவருக்குப் பின்பு வந்த எந்த ஒரு கதாநாயகியும் அவ்வாறான தோற்றத்தில் இல்லை.

இளையராஜாவின் “தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை உன் அங்கத்தில் யார் தந்தது?” என்ற பாடலை கேட்கின்ற போதெல்லாம் என் மனதின் நினைவுகளூடே அப்பெண்ணின் அழகிய முகம் இடறிக் கொண்டிருக்கும். இதோ அப்பாடலையும், இப்பாடல் சம்பந்தமான சுவாரசியமான ஒரு பதிவினையும் படித்துப் பாருங்கள்.




பாட்டைக் கேட்கின்ற போதே தாலாட்டும் இளையராஜாவின் இசையமுதம் உங்களைத் தழுவிக் கொள்ளும். மார்கழி மாத விடிகாலைக் குளிரில் கோலம் போடும் அம்மாவைப் பார்க்க முயலும் குழந்தையை, குளிருக்கு இதமாய் தழுவி தன் முந்தானையால் மூடிக் கொள்ளும் அம்மாவின் அணைப்புப் போல.

- ப்ரியங்களுடன்

கோவை எம் தங்கவேல்



Sunday, January 22, 2012

நெரூர் சதாசிவ பிரம்மேந்திராள் கோவிலும் எஸ்எம்கிருஷ்ணாவும்

கரூர் பசுபதிபாளையத்தைக் கடந்து செல்லும் அமராவதி ஆற்றின் கிழக்கிலிருந்து வடக்கே செல்லும் பாதையில் சென்றால்,  வழியெங்கும் சாயப்பட்டறைகளும், சிதைந்து போன மடங்களும், பாதசாரிகள் தங்கிச் செல்லும் கற்களால் ஆன சிதைந்த மண்டபங்களும் வரும். அதைத் தொடர்ந்து சென்றால் பச்சைப் பசேல் வயல் வெளிகளும், படர்ந்து விரிந்த ஆலமரமும், பிராமணாள் வீதி ஒன்றும் கண்களில் படும். தென்னஞ்சோலைகளும், மரங்களும் நிரம்பிய பாதையில் சென்றால் சிவப்பு சாயம் பூசிய கோயில் ஒன்று தென்படும். அது தான் நெரூர் சதாசிவ பிரம்மேந்திராள் ஜீவ சமாதி அடைந்த திருக்கோயில்.  அங்கே ஒரு ஆஸ்ரம் கூட இருக்கிறது.

சதாசிவ பிரம்மேந்திராள் பற்றித் தெரிந்து கொள்ள கீழே இருக்கும் பிளாக்கைப் படித்துப் பார்த்துக் கொள்ளவும்.




(சன்னதிக்கும் செல்லும் கோவிலின் முன்புறத் தோற்றம் )


இரண்டு வருடங்களாக ஞாயிறு தோறும் காலை பத்து மணிக்கு நெரூர் சென்று விடுவேன். கோவில் தாண்டி ஓடிக் கொண்டிருக்கும் காவிரி ஆற்றில் இரண்டு மணி நேரக் குளியல். துணிகளைத் துவைத்துக் காய வைத்து பின்னர் சரியாக பனிரெண்டு மணிக்கு கோவிலுக்குள் செல்வேன்.  காசி விஸ்வநாதர் ஆலயத்தின் அய்யர் கண் தெரியாதவர். அருமையாக அர்ச்சனை செய்வார். பின்புறம் பிரம்மேந்திராள் ஜீவ சமாதி ஆன இடத்திற்குச் சென்று அமைதியாக பத்து நிமிடம் தியானம். குளிர்ச்சி என்றால் அப்படி ஒரு குளிர்ச்சி தென்படும் அவ்விடத்தில்.  நடை சாற்றிய பிறகு கோவிலின் வெளியே உள்ள நாகலிங்க மரத்தின் அடியில் அமர்ந்து இருப்பேன்.

மதியம் இரண்டு மணிக்கு மேல் கிளம்பி, இருப்பிடம் வந்து சேர்வேன். இந்தக் கோவிலுக்கு இளையராஜா போன்ற மிகப் பிரபலமான பலர் வந்து செல்வதாகச் சொல்வார்கள். வட நாட்டில் இருந்து பலர் வருவர்.

நமது வெளியுறவுத் துறை அமைச்சர் எஸ் எம் கிருஷ்ணா மீது லோக்யாயுக்தா ஊழல் விசாரணை தொடர்கிறது என்ற செய்தியை படித்தேன். நெரூர் சதாசிவ பிரம்மேந்திராள் கோவிலுக்கு அமைச்சரின் பயணம் பற்றிப் படித்தேன்.  பிரம்மேந்திராள் சமாதி மீது எழும்பியிருந்த வில்வ மரம் பட்டே போய் விட்டது என்ற செய்தியையும் படித்தேன். மனதுக்குள் வெறுமை மண்டியது.

ஒரு முறை டிஸ்கவரி சானலில் அருமையான நிகழ்ச்சி ஒன்றினைப் பார்க்க நேர்ந்தது. பெரும் மலைகளும், மரங்களும் சூழ்ந்திருக்கும் இடங்களில் வசிக்கும் காட்டுவாசிகள் கோடையில் தண்ணீர் இருக்கும் இடத்தினைக் கண்டு பிடிக்க முடியாது.  தண்ணீர் இன்றி வாழ முடியாதே, ஆகவே எப்படியாயினும் தண்ணீர் இருக்குமிடத்தினைக் கண்டுபிடிக்க வேண்டுமல்லவா?  தண்ணீர் இருக்கும் இடங்களை குரங்குகள் தெரிந்து வைத்திருக்கும் என்பது இவர்களுக்குத் தெரியும். குரங்குகளை வைத்து அவ்விடங்களைக் கண்டுபிடிக்க இவர்கள் உத்தி ஒன்றினைக் கையாள்வார்கள். 

மரமொன்றில் துளையொன்றினைச் செய்வார்கள். அத்துளை வாயில் சிறிதாய் இருக்கும். ஆனால் உட்புறம் பெரிதாய் அகண்டு இருக்கும். சிலர் ஒன்று சேர்ந்து பல குரங்குகளை அம்மரத்தினடிக்கு விரட்டி வரும் போது, ஒருவர் நல்ல பெரிய பெரிய உப்புக் கட்டிகளை அம்மரத்தின் துளைக்குள் போடுவார். அதை அக்குரங்குகள் பார்க்கும் படிச் செய்வார்கள்.  அவ்வாறு செய்து விட்டு செடிகொடிகளுக்குள் மறைந்து கொள்வார்கள். ஏதோ வெள்ளையாக துளைக்குள் போட்டிருப்பதைக் கண்ட குரங்குகளில் ஏதோ ஒன்று துளைக்குள் கையை விட்டு உப்புக் கட்டிகளை எடுத்து விடும். உள்ளங்கைக்குள் உப்புக் கட்டி வந்தவுடன் கை விரிவடைந்து விடுமல்லவா? துளையில் கை மாட்டிக்கொள்ளும். குரங்கோ கட்டியை விடாது கையை வெளியில் எடுக்க முயற்சிக்கும். உப்புக்கும் ஆசை, கைக்கும் ஆசையாய் குரங்கு படாத பாடு படும். உடனே காட்டுவாசிகள் குரங்கிடம் சென்று அதைப் பிடித்து இடுப்பில் ஒரு கயிறும், காலில் ஒரு கயிறுமாய் கட்டி மரத்தோடு பிணைத்து உப்புக்கட்டிகளை வெளியில் போடுவார்கள். மரத்தின் துளையிலிருந்து குரங்கின் கையையும் விடுவிப்பார்கள். ஆசை ஆசையாய் உப்புக்கட்டியை விழுங்கும் குரங்கினை நக்கலுடன் பார்த்து விட்டு வீடுகளுக்குள் சென்று விடுவார்கள்.

உப்பைத் தின்றால் தாகமெடுக்கும் அல்லவா? ஒரு நாள் முழுக்க தாகத்தால் தவித்துக் கொண்டிருக்கும் குரங்கு.  மரத்தோடு கட்டிக் கிடப்பதால் தவித்து உருண்டு புரண்டு கொண்டிருக்கும். மறு நாள் வந்து குரங்கினை அவிழ்த்து விட்டு அது செல்லும் பாதையில் அதனுடன் ஓடுவார்கள். தாகத்தால் தவித்த குரங்கு தண்ணீர் இருக்கும் இடம் தேடி கண்மண் தெரியாமல் படு வேகத்தில் செல்லும். காட்டுவாசிகள் குரங்கினை வைத்து தண்ணீர் இருக்கும் இடத்தினைக் கண்டு பிடித்து விடுவார்கள்.

ஐந்தறிவு உள்ள குரங்கிற்குத் தெரியாது உப்பைத் தின்றால் தாகம் எடுக்கும் என்பது. ஆனால் மனிதனுக்குத் தெரியுமே. இருப்பினும் அவன் ஏன் பாவத்தினைத் தொடர்ந்து செய்கிறான்? விதி என்பதா? இல்லை ஆசை என்பதா? இரண்டும் வேறு வேறு அல்ல. விதியின் மறுபெயர் தான் பேராசை.

நமக்கு நடக்கும் நல்லதும் கெட்டதும் நாமே உருவாக்கி கொண்டவைகள். தெரிந்து செய்யும் தவற்றை இறைவன் என்றைக்குமே மன்னிக்க மாட்டான். தெரியாமல் செய்யும் தவறுகள் தவறுகளே அல்ல என்கின்ற புண்ணிய நூல்கள். இரும்புத்தாது ஏற்றுமதியில் நான் கண்ட அக்கிரமங்களுக்கு சாட்சியாய் விளங்கியவர்கள் இன்றைக்கு இருக்கும் நிலைக்கு காரணம் அவர்களே அன்றி வேறு யார்?

ஏழேழு ஜென்மப் பிறப்பெடுத்தாலும் செய்த பாவம் தலைமுறைக்கும் வரும் என்கின்றார்கள் முன்னோர்கள். எந்தக்  கோவிலுக்குச் சென்றாலும், கோடி பேருக்கு அன்னதானம் செய்தாலும் பாவத்தின் சம்பளம் கிடைத்தே ஆகும். வேலையை செய்தால் கூலி கிடைக்கும் அல்லவா?

- அன்புடன்
கோவை எம் தங்கவேல்