2006இல் எடுக்கப்பட்ட ஒரு சர்வே இந்திய பற்பசை மார்கெட்டில் பற்பசை விற்பனை 2200 கோடி ரூபாய் என்று சொல்கிறது. இந்தியாவில் கோல்கேட் பிராண்ட் பற்பசை மார்கெட்டில் 50 சதவீத மார்க்கெட்டை தக்க வைத்திருக்கிறது என்று சர்வேக்கள் சொல்கின்றன.இவ்வளவு பெரிய மார்க்கெட்டா இருக்கிறது என்று மலைத்து விடாதீர்கள். 2020 ஆம் ஆண்டில் இந்திய நுகர்வோர் சந்தையின் மதிப்பு 820 பில்லியன் டாலர்ஸ் (820,000,000,000$) என்றுச் சொல்கின்றார்கள் மார்க்கெட்டிங்க் துறையினர். கோடீஸ்வர கம்பெனிகள் இந்தச் சந்தையை தன் பக்கம் திருப்பி விட பெரும் பிரயத்தனங்களைச் செய்து கொண்டிருக்கின்றன. உங்களுக்கு இப்போது தெரிந்திருக்குமே, ஏன் ரிலையன்ஸ் நிறுவனத்தார் நுகர்வோர் சந்தையில் நுழைந்த காரணம். இந்தியாவின் பேஸ்ட் மார்க்கெட்டில் இருக்கும் பிராண்டுகளைப் பார்க்கலாம்.
Top 5 Brands - Market Share (2006)
1. Colgate Dental Cream 34%
2. Close-Up 14%
3. Pepsodent Complete 10 11%
4. Colgate Cibaca Top 5.7%
5. Colgate Fresh Energy Gel 3%
6. Other Brands 32.3% (Anchor, Babool, Ajanta, etc)
( Thanks to Ragul )
இனி, இந்த பேஸ்ட்டுடனான எனது தொடர்பு சம்பந்தமாய் பார்க்கலாம்.
வீட்டின் பின்புறமுள்ள தோட்டத்துக் கிணற்றிலிருந்து வெதுவெதுப்பான நீரை தண்ணீர் பொக்கையில் நிரப்பி குளிக்கும் பரவச உணர்வுக்கு ஈடான ஒரு குளியலை எந்த ஒரு ஐந்து நட்சத்திர ஹோட்டலும் தராது. அவ்வாறான நாட்களில் எனது குளியல் இன்றைக்கு மறைந்தே போன மைசூர் ஜாஸ்மின் சோப்பின் மல்லிகை வாசத்துடன், குளோசப் பேஸ்டின் வாசத்துடன் ஒவ்வொரு நாளும் அற்புத அனுபவத்தை தரும்.
குளோசப் அறிமுகமான அன்றிலிருந்து சிகப்பு கலர் மீதான ஈர்ப்பின் காரணமாய் பயன்படுத்த ஆரம்பித்தேன். அது என்ன விதமான விளைவுகளை உருவாக்கும் என்பதெலலாம் எனக்கு தெரியாது. வியாபார உத்தியின் பிரகாசமான மார்க்கெட்டிங் வித்தையில் மனசு மயங்கிய நேரமிது. ஏனென்றால் அந்த நேரம் என் உடம்பில் சூடான இளம் ரத்தம் ஓடிக் கொண்டிருந்தது. அழகான பொருட்கள், ஆடம்பரமான அழகு சாதனங்களின் மீதான கவன ஈர்ப்புக்கால வயது அது.
பல வருடங்களாக குளோசப் பேஸ்ட் என்னுடன் பயணித்துக்கொண்டே வந்தது. ஒவ்வொரு நாட்களும் ரத்தக்கசிவுகள் பற்துலக்கும் போது வெளிப்படும். அதை ஒரு பெரிய பிரச்சினையாக கருதவில்லை. ஒரு முறை பற்கள் பிரச்சினைக்காக மருத்துவரை நாடிய போது அவரிடம் நல்ல டூத் பேஸ்ட் ஒன்றின் குணாம்சம் என்ன என்று கேட்டேன். பேஸ்ட் எண்ணெய் போல வழுவழுப்பாக இல்லாமல் இருக்க வேண்டும் என்றுச் சொன்னார். கோல்கேட் சிபாகா பேஸ்ட்டினை சிபாரிசு செய்தார். அன்றிலிருந்து சிபாகாவை உபயோகப்படுத்த ஆரம்பித்தேன். பல் துலக்கும் போது உருவான ரத்தக் கசிவு காணாமல் போய் விட்டது. குளோசப் பேஸ்ட் என் உடம்பிற்கு ஒத்து வரவில்லை. வாயில் புண்ணை உண்டாக்கி இருந்திருக்கிறது. அது பற்றிய பிரச்சினை நீண்ட நாட்களாய் தெரியாமலே இருந்திருக்கிறது.
இப்படியாக குளோசப் பேஸ்ட் என் வாழ்க்கைப் பாதையில் இருந்து விடை பெற்றுக் கொண்டது. இப்போதும் சில விளம்பரங்களைப் பார்க்கும் போது இளமைக்கால கிணற்றுக் குளியலும், குளோசப் பேஸ்ட்டும் நினைவிலாடும்.
பாவக்காய் மாதிரியான மாங்காயைப் பார்த்திருக்கின்றீர்களா? அது போல ஒரு மாமரம் எங்கள் வீட்டில் இருந்தது. அது கொல்லப்பட்ட கதை ஒன்றிருக்கிறது. அதை விரைவில் படிக்கலாம்.
* * *