பணம், பதவி, புகழ் போன்றவையே வாழ்க்கையில் சிறந்தவை என்று கருதும் சிவாஜிக்கு, இவையெல்லாம் எதுவும் உண்மையில்லை குணமும், அன்பும் தான் நிரந்தரமானது என்றுப் புரிய வைக்கும் மிகச் சிறந்த ஒரு படம் தான் தாய்க்கு ஒரு தாலாட்டு என்ற படம். இப்படத்தை எப்போது பார்க்க நேர்ந்தாலும் உடனே கவனத்தை ஈர்த்து விடும். சிவாஜியுடன் பத்மினி, பாண்டியராஜன் நடித்திருப்பர். பாடல்கள் ஒவ்வொன்றும் அருமையாக இருக்கும்.
இப்படத்தில் பத்மினி இறந்தவுடன் கவனிப்பு இன்றி சிவாஜி சிரமப்படுவார். அதிகாரம் செய்ய ஆள் இருக்கும் போதுதான் அதிகாரம் செய்ய அர்த்தமிருக்கும் என்பார் சிவாஜி.
ஆம், குடும்ப வாழ்வில் கணவன் இறந்தால் மனைவிக்கும், மனைவி இறந்தால் கணவனுக்கும் வாழ்வில் என்ன பிடிப்பு இருக்க முடியும்? யாரிடம் அதிகாரம் செய்ய முடியும்? யாரிடம் மனம் விட்டுப் பேச முடியும்?
கோயமுத்தூரில் இருக்கும் மிகப் பெரிய கோடீஸ்வரர், பிசினஸ்ஸை தன் பையனிடம் ஒப்படைத்து விட்டு அழகான ஹெஸ்ட் ஹவுசில் தன் மனைவியோடு தங்கி விட்டார். ஒரு முறை அவரைச் சந்தித்த போது மனைவியை அவர் “அம்மா” என்றழைத்தார். அவர் மனைவி இவரை “அப்பா” என்றழைத்தார்.
தாம்பத்தியத்தின் உச்சகட்ட நிலை இது. வாழ்வியலின் அத்தனை இன்பங்களும் கிடைக்ககூடிய தருணம் இது என்றார் அவர். இருவரின் பெரும்பாலான நேரமும் பிரார்த்தனையிலே கழிகிறது. அமைதி என்றால் அப்படி ஒரு அமைதியான வாழ்க்கையை அவர்கள் வாழ்கின்றார்கள்.
இந்தியாவில் சினிமாக் கலாச்சார ஊடுறுவல் அதிகமான பின்பு, விவாகரத்துக்கள் பெருமளவில் நடக்கின்றன. பப்புகளிலோ, பார்க்கிலோ, பணத்தினாலோ அரங்கேறும் அசிங்கமான உறவுப் பாலங்கள் நாளடைவில் கோர்ட் படியேறி நிற்கின்றன.
வாழும் காலம் கொஞ்சம், அதற்குள் ஏன் இத்தனை கட்டுப்பாடுகள் என்று கேட்கின்றார்கள் இளைய தலைமுறையினர்.
சாலையில் காரில் சென்று கொண்டிருக்கின்றீர்கள் என்று வைத்துக் கொள்ளுங்கள். எதிரே வருபவன் கட்டுப்பாட்டுடன், நியதிப்படி வரவில்லை என்றால் ஒழுங்காகச் செல்லும் உங்கள் காரும் விபத்தில் சிக்கும் அல்லவா? அது போலத்தான் கட்டுப்பாடுகள் இல்லாத வாழ்க்கை விபத்தில் முடிந்து விடும் அல்லது பிரச்சினையில் சிக்கி விடும்.
தாய்க்கு ஒரு தாலாட்டுப் படத்தில் பத்மினி இறந்தவுடன் வரும் ஒரு பாடல் மனைவியின் அருமையைச் சொல்லும். அப்பாடலை நீங்களும் கேட்டு வையுங்கள். மனதுக்கு இதமாய் இருக்கும்.
தாம்பத்திய வாழ்க்கையில் விட்டுக் கொடுத்தலும், நேசித்தலும், தியாகமும், அர்ப்பணிப்பும் அவசியம். சுய நலத்தோடு வாழ முற்பட்டால் விவாகரத்துகள் தான் நடக்கும். அது வாழ்க்கையை விவகாரமானதாக்கி விடும்.
காசே தான் கணவன் என்று நம்பிய மனைவி ஒருத்தி, பலரிடம் சிக்கி சின்னாபின்னமாகி, சிதைந்து போன கதையை நான் நேரில் பார்த்திருக்கிறேன். அதைப் பற்றி பிறிதொரு நாள் எழுதுகிறேன்.
* * *