குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Friday, May 7, 2010

பசு ஏறி காளை மரணம்

ஆபிதீன் அவர்ககளின் சிறுகதை “அங்கனெ ஒண்ணு , இங்கனெ ஒண்ணு” படித்த போது மட்டுமே நான் மிகச் சந்தோஷமாயிருந்தேன். சிறுகதையென்றால் சிறுகதைதான் போங்கள்.

அன்பு நண்பர்களே, உங்களுக்கும் நிச்சயமாய் சிரிப்பு வரும். படித்து விட்டு அவருக்கொரு பதிலெழுதிப் போடுங்கள். சுகமாயிருக்கும் அவருக்கு.

நன்றி ஆபிதீன் சார்.


link : http://www.thinnai.com/?module=displaystory&story_id=11005024&format=html

Tuesday, May 4, 2010

நன்றி மறவாமை

கரூர் ஸ்ரீராமகிருஷ்ண ஆஸ்ரமத்தின் நிர்வாகத்தில் பல பள்ளிகளும், இரண்டு பெண்கள் கல்லூரிகளும் இருக்கின்றன. அத்தனை பள்ளிகள் மற்றும் இரண்டு கல்லூரிகளின் கணிப்பொறித் துறையின் மேற்பார்வையாளராகவும், ஆசிரியராகவும் நான்காண்டுகள் தொண்டு செய்து வந்த போது நடந்த சுவாரசியமான சம்பவம்தானிது. மேற்படி பள்ளி மற்றும் கல்லூரிகளின் தாளாளராக இருந்தவர் திரு ஆத்மானந்தா அவர்கள். அறுபது வயது இளைஞர். என் வாழ் நாளில் இவரைப் போன்ற மன உறுதி கொண்டவரைக் கண்டதே இல்லை. பத்து வருடங்களுக்கு முன்பே கிட்டத்தட்ட நூறு கோடி ரூபாய் சொத்து மதிப்புக் கொண்ட நிறுவனத்தின் தலைவராக இருந்தார்.

மாதந்தோறும் இரண்டு தடவையாவது சாமியுடன் காண்டசாவில் சென்னை சென்று வருவேன். சென்னை ரிச்சி ஸ்ட்ரீட்டில் இருக்கும் சுப்ரீம் கம்யூட்டர் நிறுவனத்தில் தான் மொத்தமாக உதிரி பாகங்களை வாங்கி வந்து அசெம்பிள் செய்து கல்லூரியில் கணிணி நெட்வொர்க்கில் இணைப்பேன். அசெம்பிள் என்ற உடன் எனக்கு அடிக்கடி நினைவுக்கு வரும் இந்த சம்பவம்.

ஒரு தடவை ஹிந்து முன்னனி தலைவர் திரு ராமகோபாலன் ஆசிரமத்தில் தங்கி இருந்தார். அவருக்கு போலீஸ் பாதுகாப்பெல்லாம் கொடுத்திருந்தார்கள். மெட்டல் டிடெக்டர் வைத்து சோதித்த பிறகு தான் அவரைச் சந்திக்க முடியும். அவர் தங்கி இருந்த ஹெஸ்ட் ஹவுஸ்ஸின் இடது பக்கத்திலிருக்கும் அறையில் தான் அடியேனின் வாசம். அறை முழுதும் கணிணி பாகங்களாக இறைந்து கிடக்கும். புதிய ஆள் எவராவது பார்த்தால் தீவிரவாதி வெடிகுண்டு தயாரிக்கிறான் என்றே நினைத்து விடுவார்கள். எஸெம்பிஎஸ் மற்றும் பாக்ஸ்களும், மானிட்டர்களுமாய் அறை நிரம்பிக் கிடக்கும். அதனூடே தான் படிப்பது, தூங்குவது எல்லாம்.

திரு ராமகோபாலனுக்கு காவலுக்கு வந்த காவல்துறை அதிகாரி அறையை நோட்டம் விட்டு படக்கென்று கதவைத் திறந்து துப்பாக்கியை நெஞ்சை நோக்கி நீட்டினார் பாருங்கள். அரண்டு விட்டேன். அதன் பிறகு விபரம் சொல்லி ஒரு வழியாக தப்பித்தேன். அன்றிலிருந்து அந்த காவல்துறை அதிகாரிக்கு என்மேல் கொள்ளை அன்பு. சாப்பிட்டீர்களா என்று அடிக்கடி விசாரித்துக் கொண்டே இருப்பார்.

இதே போல நடு இரவில் ஒரு நாள் நெற்றியில் ரத்தச் சிவப்பில் குங்குமம் இட்ட ஒருவரும் அவருடன் மற்றொருவரும் வந்திருந்தனர். வேறு அறைகளில் தங்குவதற்கு இடமில்லாத காரணத்தால் என் அறையில் தங்கியிருக்குமாறு சொல்லியிருக்கின்றார்கள். இந்து முன்னணியின் ஏதோ ஒரு மாவட்ட தலைவராம் அவர். கூட வந்திருந்தவர் அவருக்கு துணையாக வந்திருப்பார் போல எண்ணிக் கொண்டிருந்த போது இடுப்பிலிருந்து கருப்புக் கலரில் துப்பாக்கியை எடுத்தார் பாருங்கள். நடு நடுங்கிப் போய் விட்டேன். என்னடா இது வம்பு என்று பயந்து கொண்டே அவரைப் பற்றி விசாரித்தேன். போலீஸ் என்று சொன்னார்.

இது போல எண்ணற்ற சம்பவங்கள் ஆஸிரம வாழ்க்கையில் நடந்தது. அதையெல்லாம் தனியாக நாவலாக எழுதலாமென்று இருக்கிறேன். மேலும் சாரு நிவேதிதாவுடன் மூன்று வருடங்களாக தொடரும் நட்பும் மிகப் பெரிய நாவலுக்கான விதையை ஊன்றி விட்டது. கொஞ்சம் கொஞ்சமாக எழுதி வருகிறேன்.

சரி விஷயத்துக்கு வருவோம். விடிகாலை நான்கு மணிக்கு எழுந்து குளித்து விட்டு பகவான் ராமகிருஷ்ணரை தரிசித்து விட்டு காரில் அமர்வோம். அதற்கு முன்பே சமையல்காரர் எழுந்து எனக்கும், சாமிக்கும், டிரைவருக்கும் தேவையான காலை உணவைத் தயார் செய்து காரின் பின்னால் வைத்து விடுவார். முதல் நாள் இரவே சென்னையிலிருக்கும் ஸ்ரீராமகிருஷ்ண தபோவனத்தின்(பிராஞ்ச்) நிர்வாகியிடம் போனில் நானும் சாமியும் வருகிறோம் என்று சொல்லி வைத்து விடுவேன். எனக்குப் பிடித்த காலிபிளவர் சாம்பாரும், ரசம்(SUPER TASTY) மற்றும் பிற உணவுப் பொருட்களை திரு நாராயணனந்தா அவர்கள் தன் கைப்படவே சமைத்து வைத்திருப்பார். உணவின் ருசி அவ்வளவு பிரமாதமாக இருக்கும்.

சரியாக ஏழு மணிக்கு கார் திருச்சி டூ சென்னை சாலையிலிருக்கும் ஒரு பத்ரகாளி அம்மன் கோவிலின் முன்னால் நிறுத்தப்படும். அங்குதான் எனக்கும், ஆத்மானந்தாவிற்கும் காலை உணவைப் பரிமாறுவார் டிரைவர். சாப்பிட்டு முடித்து விட்டு சற்று நேரம் உலாவுவார் ஆத்மானந்தா சாமி. நான் காரில் அமர்ந்திருப்பேன். கிளம்பும் தருவாயில் கோவிலுக்குச் சென்று நமஸ்கரித்து விட்டு உண்டியல் போட்டு விட்டு வருவார். பத்ரகாளி அம்மன் நமக்குச் சாப்பிட இடமும், நிழலும் தந்தார் அல்லவா அந்த நன்றிக் கடன் தான் இது என்றார் என்னிடம். சமீபத்தில் என் குடும்பத்தாருடன் ராமேஸ்வரம் சென்று வந்த போது ஒரு அம்மன் கோவிலில் காரை நிறுத்தி சாப்பிட்டோம். ரித்திக்கிடம் பணம் கொடுத்து உண்டியலில் சேர்க்கச் சொன்னேன். நிவேதிதாவையும், ரித்திக்கையும் அம்மனை தரிசிக்கச் சொன்னேன். என் நண்பர் என்னிடம் ஏன் இவ்வாறு செய்யச் சொல்கின்றீர்கள் என்று கேட்டார். அவருக்குத்தான் இந்தப் பதிவு.

Monday, April 26, 2010

மொழி

கனவுகளிடையே வழிந்தோடும்
எண்ணங்களின் நீட்சியாய்
இசையும் பேச்சுமற்ற
பெருவெளியில் நீயும் நானும்
ஏதும் பேசிக் கொள்ளாமலே
அமைதியாய் இருந்த போது
உன் அதரங்களில்
பாம்பு போல நெளிந்த
புன்னகை சொன்னது
மொழி என்பது
சத்தமல்ல என்பதை

*****

Monday, April 19, 2010

ஒரு நாள் உணவு தேவை என்ன தெரியுமா?

ஒரு நாள் உணவு தேவை என்ன தெரியுமா? (இது ஏசியில் அமர்ந்து வேலை செய்பவர்களுக்கு மட்டும்)

காலையில் சுமார் ஆறு மணி அளவில் ப்ளாக் டீ வித் நாட்டுச் சர்க்கரை. பால் வேண்டவே வேண்டாம். இடையிடையே டீயும், காஃபியும் வேண்டவே வேண்டாம்.

எட்டு மணி அளவில் இரண்டு அல்லது மூன்று எண்ணெய் சேர்க்காத கோதுமை தோசையுடன், புதினாவோ அல்லது கொத்து மல்லியோ அல்லது தக்காளியோ சட்னியாக இரண்டு டீஸ்பூன் அளவில் எடுத்துக் கொள்ளவும். கோதுமை தோசை, மாவு தோசை(இரண்டு மட்டும்), இட்லி இரண்டு மட்டும், சப்பாத்தி இரண்டு(கண்டிப்பாக எண்ணெய் தவிர்க்கவும்). மேலும் கொஞ்சம் பழங்கள் ஏதாவது சேர்த்துக் கொள்ளவும். சீசனுக்கு தகுந்தவாறு பழங்களைத் தேர்ந்தெடுக்கவும்.

சரியாக ஒரு மணி நேரம் கழித்து அரை லிட்டருக்கும் மேல் தண்ணீர் சாப்பிடவும்

பின்னர் ஒரு மணிக்கு ஒரு கப் (400கிராம்) சாதத்தோடு, ஒரு கப் கீரை, ஒரு கப் காய்கறியை (கண்டிப்பாக உருளைக் கிழங்கு தவிர்க்கவும்) பருப்போடோ அல்லது குழம்பாகவோ அல்லது கூட்டாகவோ செய்து தேங்காய் தவிர்த்து சாப்பிடவும். இதே அளவில் டேஸ்ட் வேறு வேறாக வரும்படி செய்து சாப்பிடவும். கோதுமையில் சாதம் கூட சேர்க்கலாம்.

சரியாக ஒரு மணி நேரம் கழித்து அரை லிட்டருக்கும் மேல் தண்ணீர் குடிக்கவும்.

இரவு எட்டு மணி அளவில் மீண்டும் கோதுமை தோசையோ அல்லது கோதுமை ரவையோ சட்னியுடன் சேர்த்துக் கொள்ளவும். ஊத்தப்பம் சேர்க்கலாம் அல்லது இடியாப்பம் கூட ஓகே. இரவில் குறைவாக உண்ணும் போது நடு இரவில் பசிக்கும். தண்ணீர் குடித்துக் கொள்ளவும். நாளடைவில் நிம்மதியான உறக்கம் நிச்சயம். குறட்டை வரவே வராது.

சரியாக ஒரு மணி நேரம் கழித்து அரை லிட்டருக்கும் மேல் தண்ணீர் குடிக்கவும்.
இது வரையிலும் ஒன்றரை லிட்டருக்கும் மேல் தண்ணீர் அருந்தியிருப்பீர்கள்.

மேலும் ஒரு லிட்டரை கூட சேர்த்தால் நாளொன்றுக்கு தேவையான மூன்று லிட்டர் தண்ணீர் தேவை முடிந்து விடும். ஆகையால் இடை இடையே கொஞ்சம் கொஞ்சம் தண்ணீர் சேர்த்துக் கொள்ளவும்.

அதிக உப்பு, பால், வெள்ளைச் சர்க்கரை மூன்றையும் நிச்சயமாய் தவிர்த்து விடவும். வெள்ளைச் சர்க்கரை விஷம். இந்தச் சர்க்கரை சேர்த்த எந்த பொருளானாலும் உங்களுக்கும், உங்கள் குடும்பத்தாருக்கும் சேர்த்து தவிர்த்து விடவும். ஹோட்டல் சாப்பாடு வேண்டவே வேண்டாம். ஹோட்டலில் சாப்பிட்டே ஆக வேண்டுமென்றால் அதற்கு பதில் அவித்த காய்கறிகளோடு கொஞ்சம் பழங்களைச் சாப்பிட்டுக் கொள்ளவும்.

மேலும் இரவில் படுக்கச் செல்லும் முன்பு இரண்டோ அல்லது மூன்று சுமாரான துண்டுகள் நன்கு பழுத்த பப்பாளியைச் சாப்பிடவும். காலையில் டாய்லெட் செல்லும் போது வயிற்றைச் சுத்தம் செய்து விடும். நோய் எதுவும் அண்டாது.

மேலும் சில அவசியக் குறிப்புகள் :

புளிக்குப் பதிலாக கொடபுளியை உணவில் சேர்க்கவும். இது கொழுப்பைக் குறைத்து விடும். நாட்டுக் காய்கறிகளைச் சுவையாக செய்து தரும்படி வீட்டுக்கார அம்மாவிடம் சொல்லி வையுங்கள். உப்பு நாளொன்றுக்கு முக்கால் டீஸ்பூன் சேர்த்துக் கொள்ள வேண்டும். தினமும் சூடான இடத்தில் நின்று வியர்வை வெளியேறுமாறு செய்து கொள்ளவும். மூன்று டீஸ்பூன் எண்ணெய் சேர்க்கலாம். அதற்கு மேல் சேர்த்தால் கொழுப்பு சேரும்.

மட்டன் வேண்டவே வேண்டாம். சாப்பிட்டே ஆக வேண்டுமென்றால் இரண்டு துண்டு கொஞ்சம் குழம்பு சாப்பிடவும். இதற்கு பதிலாக தொடர்ந்து சற்றே எண்ணெய்,உப்பு தவிர்க்கவும். கோழியில் நாட்டுக்கோழி உத்தமம். மசாலா குறைத்து, எண்ணெய் குறைத்து சமைத்து வாரம் ஒரு முறை உண்ணலாம். மீனில் திருக்கை வேண்டாம். மற்றவை குழம்பு வைத்து சாப்பிடவும். வறுத்த மீண் வேண்டவே வேண்டாம். குழம்பில் கொடபுளியைச் சேர்க்கவும். காரம் கொஞ்சூண்டு சேர்க்கவும். சாம்பாரில் புளி கொஞ்சமாய் இருக்க வேண்டும்.

சாதத்தோடு மோர் சேர்க்கலாம். பசும்பாலில் ஆடை நீக்கிய மோர் நல்லது. தினமும் எக்சர்சைஸ் செய்ய வேண்டியது இல்லை. தேவையென்றால் நடக்கவும். அது போதும். காய்கறிகளில் நாட்டுக்காய்கறிகள் நல்லது. கிழங்கு வகைகள் தேவையில்லை. தண்ணீர் சத்து அதிகமிருக்கும் உணவுகள் உத்தமம். வியர்வையில் நாம் உண்ணும் உப்பு வெளியேற வேண்டும். இது ரொம்பவும் முக்கியம்.

இவ்வாறு சாப்பிட்டு வந்தால் நூறாண்டுகள் நிச்சயம். இடையிடையே ஏற்படும் காய்ச்சல், சளி தொல்லைகளை எளிதில் சமாளித்து விடலாம். பெரு நோய்கள் வந்தால் வேதனையுடன், விரயமும் உண்டாகும். தமிழக அரசின் இலவச மருத்துவக்காப்பீடு இருக்கிறது என்று எண்ணி ஆப்பசைத்த குரங்காகி விடாதீர்கள் ஜாக்கிரதை.





Tuesday, April 13, 2010

சர்க்கரை நோய் தீர பச்சிலை மருந்து



சர்க்கரைக்கொல்லி எனும் சிறுகுறிஞ்சான்
(கடல் கடந்த தமிழ் மருத்துவம் )


மதுமேகம் எனும் நீரிழிவு தோன்றும் வழிபற்றிச் சித்தர்கள் கூறிய கருத்துக்களை இங்கே காண்போம். அகத்தியரால் 1200இல் பின்வருமாறு நோய்வரும் வழி விவரிக்கப்பட்டுள்ளது.


கோதையர் கலவி போதை
கொழுத்தமீ னிறைச்சி போதைப்
பாதுவாய் நெய்யும் பாலும்
பரிவுட ணுன்பீ ராகில்
சோதபாண் டுருவ மிக்க
சுக்கில பிரமே கந்தான்
ஒதுநீ ரிழிவு சேர
உண்டென வறிந்து கொள்ளே'

அதாவது பலருடன் / அதிக அளவில் உடலுறவில் ஈடுபடுதல், மீன் இறைச்சி போன்ற மாமிச உணவுகளை மிக அதிகமாகப் புசித்தல், நெய், பால் போன்ற உணவுவகைகளை அதிகமாகப் புசித்தலாலும் இந்நோய் தோன்றும் என அகத்தியர் தெரிவிக்கிறார். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது முதுமொழி. அதற்கேற்ப உடல் உறவு மற்றும் உணவு முறைகளிலும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஈடுபடும் போதும் மதுமேகம் எனும் நீரிழிவு தோன்றுகிறது.


நமது உடலில் ஏழு உடல் தாதுக்கள் உண்டு. அவை சாரம், செந்நீர், ஊன், கொழுப்பு, என்பு, மூளை மற்றும் சுக்கிலம் / சுரோணிதம் ஆகும். அதாவது நாம் உண்ணும் உணவானது செரித்தபின் “சாரம்”' எனப்படும். இது குடலுறிஞ்சிகளால் உறிஞ்சப்பட்டு “செந்நீர்”' ஆகிறது. பின் இது “ஊன்” எனப்படும் மாமிசமாக மாறும். மேலும் உறிஞ்சப்பட்ட சத்துகள் “கொழுப்பாக”' உடலில் சேர்த்து வைக்கப்படுகிறது. இதிலிருந்து என்பு, மூளை மற்றும் சுக்கிலம் / சுரோணிதம் எனப்படும் ஆண் மற்றும் பெண்ணின் இனப் பெருக்கத்திற்கான சக்தியாக மாறும்.


இந்த மாறுதல்கள் நம் அனைவருக்கும் முன்னோக்கி நடைபெறுகிறது. ஆனால் மதுமேகம் உடையவர்களுக்கு இது ஒன்றன் பின் ஒன்றாகக் குறைவுபட்டு உடல் எடை குறைகிறது. மது மேகத்தினால் உடலில் 10 விதமான அவஸ்த்தைகள் தோன்றுகின்றன.

இனி சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக் கொல்லியின் மகத்துவம் பற்றிப் பார்ப்போம். இதில் நாம் பயன்படுத்துவது இலையாகும். இந்த இலையினை வாயில் இட்டு மெல்லும் போது இது இனிப்புச் சுவையை நாம் அறிய விடாமல் செய்கிறது. இதுவே இதன் பயன்பாட்டிற்குத் தொடக்கமாக இருந்திருக்கக் கூடும். மதுமேகம் மட்டுமல்லாது கரப்பான், மலக்கட்டு, வயிற்றில் ஏற்படும் நோய்கள், உடலில் இருந்து நீர் சரியாக வெளியேறாது இருத்தல் மற்றும் ஈரல் நோய்களிலும் இதன் பயன்பாடும் இருந்து வந்துள்ளது. ஆயின் முக்கியமாக இது மதுமேகத்திற்கே பயன்படுத்தப்படுகிறது. பொன்குரண்டி போலவே பயன்படுத்தப்படும் இது இந்திய மருத்துவ முறைகளில் பல நூற்றாண்டுகளாக இருந்துவந்துள்ளது.


சிறுகுறிஞ்சான் தென் இந்தியாவில் அதிகமாக வளர்க்கப்பட்டு மூலிகை ஏற்றுமதியிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. மதுமேகம் ஆங்கில மருத்துவத்தில் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. அவை 1. இன்சுலின் எடுக்க வேண்டியது அவசியமாக உள்ளது. 2. இன்சுலின் தேவையற்றது. இதில் சிறுகுறிஞ்சானின் பயன் இரண்டாவது வகையிலேயே அதிகமாக உள்ளது.


சர்க்கரைக் கொல்லியின் மருத்துவப் பயன்பாடு நவீன மருத்துவ முறையில் 1930களில் இருந்து உணரப்பட்டு வந்துள்ளது. சர்க்கரைக் கொல்லி இலை இரத்தத்தில் இன்சுலின் அளவை அதிகரிக்கிறது. நமது உடலிலுள்ள கணையத்திலிருக்கும் பி.செல் இன்சுலினை உற்பத்தி செய்கிறது. இதில் ஏற்படும் குறைபாடே இரத்தத்தில் சர்க்கரையை அதிகரிக்கச் செய்கிறது. இந்த செல்களின் எண்ணிக்கையை சிறு குறிஞ்சான் அதிகரிக்கிறது. இதன் மூலம் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. இது தவிர கொலஸ்டிரால் மற்றும் டிரைகிளிசரைடின் அளவையும் குறைக்கிறது. இந்த செயல்கள் அனைத்திற்கும் சிறுகுறிஞ்சானில் இருக்கும் ஜிம்னிக் அமிலமே காரணியாகும். இதுதவிர சிறுகுறிஞ்சான் குடலுறிஞ்சிகளில் இருந்து குளுக்கோஸ் உறிஞ்சப்படுவதைக் குறைக்கிறது.



நன்றி - தாகம்

Monday, April 12, 2010

புற்றுநோய்க்கு இலவச மருந்து

அன்பு நண்பர்களே,

என் நண்பர் ஒருவர் பெரும் கோடீஸ்வரர் புற்று நோயினால் அவதிப்பட்டார். முட்கள் கொட்டி விட்டன. கைகால்கள் சிறுத்து விட்டது. சாப்பாடு குறைந்து விட்டது. சென்னையிலிருக்கும் மிகப்பிரபலமான மருத்துவமனையில் மாதந்தோறும் சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்தார். அந்தச் சமயத்தில்தான் ஒரு பச்சிலை மருந்தைப் பற்றி அறிய நேர்ந்து அதை உட்கொள்ள ஆரம்பித்தார். அந்தப் பச்சிலை இரத்தத்தில் கலந்து இருக்கும் புற்று நோய்க்கிருமிகளை கொஞ்சம் கொஞ்சமாக அழித்து விடுகிறது. சஃபாரி காரில் கோட் சூட்டுடன் தற்போது வெகு சந்தோஷமாய் வலம் வருகிறார்.

பச்சிலை சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போதே, அலோபதி மருத்துவத்தையும் தொடர்ந்தார். புற்று நோய்க்கிருமிகள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து அவரின் வாழ்வாதார நாட்கள் அதிகரித்து விட்டன. பழையபடி ஆள் பெருத்து சரியாகி விட்டார்.

இந்த மருந்துக்கு காசு ஒன்றும் தர வேண்டியதில்லை. பச்சிலை கொடுக்கும் இடத்திற்கு சென்று வர வேண்டியது மட்டும்தான் செலவு.

உங்களின் நண்பர்களுக்கோ அல்லது உறவினர்களுக்கோ மேற்படி புற்று நோய் இருந்தால் எனக்கு தெரிவிக்கவும். அந்தப் பச்சிலை எங்கு கிடைக்கிறது என்ற விபரத்தினை அனுப்பி வைக்கிறேன்.

எனது மெயில் அட்ரஸ் : thangavelmanickam@gmail.com


அன்புடன் தங்கவேல்

Sunday, March 14, 2010

ராமேஷ்வரம்

எனது நெருங்கிய நண்பருடன் குடும்பத்தோடு ராமேஷ்வரம் சென்று வந்தேன். கோவையிலிருந்து ராமேஷ்வரம் சென்று வர கிட்டத்தட்ட 750 கிலோ மீட்டர் தூரம்.

மாலை நேரம் 6.10க்கு பாம்பன் பாலத்தில் காரை நிறுத்தி இறங்கினேன். கடற்காற்று பிசிபிசுப்புடன் உடலைத் தழுவ இறுக்கமான மன நிலையிலிருந்த மனசு சட்டென லேசாகியது.

சுற்றிலும் கடல். நடுவே வானவில்லைப் போன்ற பாலம். தனித்தீவாய்க் கிடந்தது ராமேஷ்வரம்.

குளு குளுவென காற்று உடலைத் தழுவ, மாலை நேரத்துச் சூரியன் தகதகவென ஜொலிக்க அந்தக் காட்சிகளைக் கண்ணுற்ற மனசு ஆரவாரித்தது. கடலுக்குள் எழுந்து ஆர்ப்பரித்து வரும் அலைகள் சிறிது நேரத்தில் கடலுக்குள்ளேயே மரித்துப் போவதை பார்த்தேன். எல்லையற்ற பிரபஞ்சத்தில் தூசி அளவே இருக்கும் பூமியில் இரண்டடி அகலத்தில் இயற்கையின் கருணையின் காரணமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் மனிதர்களையும், அவர்களின் ஆசா பாசங்களையும், அதனால் உண்டாகும் பிரச்சினைகளையும், சக மனிதர்களைக் கொன்று குவித்துக் கொண்டிருக்கும் மனிதர்களையும், கோடி கோடியாய் பணக்கட்டுகளை பாதுகாப்பாய் வைக்க நினைத்து லாக்கர்களில் மறைத்து வைத்திருக்கும் மனிதர்களையும் நினைத்து சிரிப்புதான் வந்தது. கடலுக்குள் எழுந்து காணாமல் போகும் அலைகளைப் போலே சடுதியில் விதியென்னும் கயிற்றில் உயிரினை விட்டு அம்போவென போவும் மனிதர்களுக்குத் தான் எவ்வளவு ஆசைகள், கொலை வெறி.

தலையில் வெளிச்சப்பொட்டாய் விளக்கு ஒளிர அமைதியாய் சென்னை செல்லும் ரயில் வண்டியொன்று ரயில் பாலத்தில் ஊர்ந்து சென்றது.

ஹோட்டல் ஒன்றில் தஞ்சமடைந்தோம்.

18 ஏக்கர் நிலப்பரப்பில் பரந்து விரிந்து கிடந்த கோவில். கோவிலின் வரலாறு என்ன? ஏன் அங்கு செல்ல வேண்டும்? அதனால் என்ன பலன்? இப்படி இன்னும் பல சுவாரசியமான தகவல்களை அறிந்து கொள்வோம். படிப்பவருக்கு கொஞ்சமேனும் உதவிகரமாய் இருக்கும் இனி வரும் பதிவுகள்.


விரைவில் தொடரும்

Tuesday, February 2, 2010

தகப்பனுக்கும் தாய்மை உண்டு

என் மகள் நிவேதிதா நாப்தலீன் பால்ஸை சாப்பிட்டு விட்டு மயக்கமாகி விட்டாள். வாயில் நுரை தள்ளியது.

டாக்டர் காப்பாற்றுவது கடினம் என்றார். அதைக் கேட்டதும் என் கண்களில் கண்ணீர் வழிந்து கொண்டிருந்தது என்னை மீறி. கைகள் சோர்ந்து விட்டன. மனசு செத்துப் போய் நடை பிணம்போல ஆகி விட்டேன்.

வேறு மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். அங்கிருந்த பல பெற்றோர் என் கண்களிலிருந்து தானாக வடிந்து கொண்டிருந்த கண்ணீரைக் கண்டு உள்ளம் துடித்து அவரவரும் வந்து ஆறுதல் சொல்ல ஆரம்பித்து விட்டனர்.

விடிகாலை இரண்டு மணி. லேப் டெஸ்ட்டில் நாப்தலீன் பால்ஸ் என்ற விபரம் தெரிய, டாக்டர் என்னிடம் வந்து கையைப் பிடித்துக் கொண்டு ”கவலைப் படாதீர்கள் தங்கம், சாதாரண பிரச்சினைதான், குழந்தைக்கு ஒன்றுமில்லை இப்போதாவது உங்கள் கண்ணீரை துடையுங்கள்” என்றார்.

தாய் தன் இரத்தத்தால் தன் பிள்ளையை வளர்க்கிறாள். தந்தை தன் ஆன்ம பலத்தால் தன் பிள்ளையை வளர்க்கிறான்.

தாய்க்கும் மகளுக்கும் இடையேயான பாசத்தை சொல்லுகிறது இப்பாடல்.


">

தந்தைக்கும் தாய்மை உண்டு என்பதைச் சொல்லுகிறது கீழே வரும் பாடல்.

">

Thursday, January 28, 2010

பாலும் சோறும் ஊட்டி வளர்த்த அம்மா

">

வேல்முருகனின் குரல் என்னை ஹிம்சைப் படுத்தி விட்டது. துறவிக்கே அம்மாப் பாசம் பாடலாய் பிரவாகமெடுத்தது. பாடலாய் பாடி கண்ணீரில் உழன்றே நன்றிக் கடன் செலுத்த பெற்ற தாயின் உடம்பில் நெருப்பு வைத்தார்.

கோடி கோடியாய் சம்பாதித்துக் குவித்து வைத்திருக்கும் கோடீஸ்வரர்களால் கூட செய்ய முடியாத செய் நன்றி கடன் தான் அம்மா. உலகையே ஆளுபவர்களால் கூட சாதிக்க முடியாத ஒன்று அம்மாவிற்கான செய் நன்றிக் கடன்.

அம்மாவைப் படுத்தி எடுத்த பாவத்தை என்ன செய்து கழிக்க முடியும்?








Tuesday, December 22, 2009

நரலீலைகள்

சாதனையென்ற சத்தம்

சாதனை என்ற சொல்லை மனிதர்கள் அனைவரும் கேட்டிருப்பார்கள். சாதனையின் பால் ஈர்க்கப்பட்ட மனிதன் மதி மயங்கி, மனம் குறுகி, இயக்கம்மாறி, வழி தெரியாமல், இது தான் வழி, இது தான் சாதனை என்றோடிக் களைத்தபிறகு திரும்பிப் பார்த்தானென்றால் அவன் முன்னே வெட்டவெளியாய் கடந்துபோன காலம் நகைக்கும். விரக்தி நிலையில் மனம் வெதும்பி, ஆயாசமாய், அனைத்தும் முடிந்து போய் விட்டதே என்று உள்ளுக்குள் குமைந்து குமைந்துகுழப்பமுறுவான்.

அந்தச் சொல்லின் சத்தம் மூளையின் ஏதோ ஒரு நரம்புக்குள் சிக்கி உடம்பெங்கும்அதிர்வுகளை கிளப்பிக் கொண்டேயிருக்கும். ஒலியின் வேகம் தாங்காமல் மனம்அதனோடு கூட ஓடி ஓடி சத்தமடங்கும் வேளையிலே அவனைச் சுற்றும் வெளிப்பேய்களிடமிருந்து தப்பிக்க இன்னும் வேகமாக ஓடுவான். ஓடுவான்... வாழ்க்கையின் எல்லைக்கே. ஆம் எல்லைக்கே ஓடி முடிப்பான் சாதனையின்ஓட்டத்தை.

என்ன தான் வாழ்க்கை, என்ன இருக்கிறது வாழ்வில் என்று புரியாமல், சாரம்புரியாமல், சூட்சுமம் தெரியாமல், எங்கெங்கோ ஓடி, ஓடிக் களைத்து, இளைப்பாறவும் முடியாமல் உயிரை விடுவான்.

அந்த மனித வாழ்க்கையின் ஓட்டங்களில் பங்குபெற்ற பீமாவின் ஓட்டத்தையும், அவனோடு கூட ஓடி வந்த சில ஓட்டக்காரர்களின் ஓட்டத்தையும் நரலீலைகள் என்ற தலைப்பில் பதிவு செய்ய விரும்புகிறேன்.

வழக்கம் போல உங்களின் அன்பான உள்ளத்தில் எனக்கும் ஒரு இடத்தை தந்துஅருள்வீர்கள் என்ற நம்பிக்கையோடு.