சர்க்கரைக்கொல்லி எனும் சிறுகுறிஞ்சான் (கடல் கடந்த தமிழ் மருத்துவம் )
மதுமேகம் எனும் நீரிழிவு தோன்றும் வழிபற்றிச் சித்தர்கள் கூறிய கருத்துக்களை இங்கே காண்போம். அகத்தியரால் 1200இல் பின்வருமாறு நோய்வரும் வழி விவரிக்கப்பட்டுள்ளது.
கோதையர் கலவி போதை
கொழுத்தமீ னிறைச்சி போதைப்
பாதுவாய் நெய்யும் பாலும்
பரிவுட ணுன்பீ ராகில்
சோதபாண் டுருவ மிக்க
சுக்கில பிரமே கந்தான்
ஒதுநீ ரிழிவு சேர
உண்டென வறிந்து கொள்ளே'
கொழுத்தமீ னிறைச்சி போதைப்
பாதுவாய் நெய்யும் பாலும்
பரிவுட ணுன்பீ ராகில்
சோதபாண் டுருவ மிக்க
சுக்கில பிரமே கந்தான்
ஒதுநீ ரிழிவு சேர
உண்டென வறிந்து கொள்ளே'
அதாவது பலருடன் / அதிக அளவில் உடலுறவில் ஈடுபடுதல், மீன் இறைச்சி போன்ற மாமிச உணவுகளை மிக அதிகமாகப் புசித்தல், நெய், பால் போன்ற உணவுவகைகளை அதிகமாகப் புசித்தலாலும் இந்நோய் தோன்றும் என அகத்தியர் தெரிவிக்கிறார். அளவுக்கு மிஞ்சினால் அமிர்தமும் நஞ்சு என்பது முதுமொழி. அதற்கேற்ப உடல் உறவு மற்றும் உணவு முறைகளிலும் குறிப்பிட்ட அளவுக்கு மேல் ஈடுபடும் போதும் மதுமேகம் எனும் நீரிழிவு தோன்றுகிறது.
நமது உடலில் ஏழு உடல் தாதுக்கள் உண்டு. அவை சாரம், செந்நீர், ஊன், கொழுப்பு, என்பு, மூளை மற்றும் சுக்கிலம் / சுரோணிதம் ஆகும். அதாவது நாம் உண்ணும் உணவானது செரித்தபின் “சாரம்”' எனப்படும். இது குடலுறிஞ்சிகளால் உறிஞ்சப்பட்டு “செந்நீர்”' ஆகிறது. பின் இது “ஊன்” எனப்படும் மாமிசமாக மாறும். மேலும் உறிஞ்சப்பட்ட சத்துகள் “கொழுப்பாக”' உடலில் சேர்த்து வைக்கப்படுகிறது. இதிலிருந்து என்பு, மூளை மற்றும் சுக்கிலம் / சுரோணிதம் எனப்படும் ஆண் மற்றும் பெண்ணின் இனப் பெருக்கத்திற்கான சக்தியாக மாறும்.
இந்த மாறுதல்கள் நம் அனைவருக்கும் முன்னோக்கி நடைபெறுகிறது. ஆனால் மதுமேகம் உடையவர்களுக்கு இது ஒன்றன் பின் ஒன்றாகக் குறைவுபட்டு உடல் எடை குறைகிறது. மது மேகத்தினால் உடலில் 10 விதமான அவஸ்த்தைகள் தோன்றுகின்றன.
இனி சிறுகுறிஞ்சான் எனும் சர்க்கரைக் கொல்லியின் மகத்துவம் பற்றிப் பார்ப்போம். இதில் நாம் பயன்படுத்துவது இலையாகும். இந்த இலையினை வாயில் இட்டு மெல்லும் போது இது இனிப்புச் சுவையை நாம் அறிய விடாமல் செய்கிறது. இதுவே இதன் பயன்பாட்டிற்குத் தொடக்கமாக இருந்திருக்கக் கூடும். மதுமேகம் மட்டுமல்லாது கரப்பான், மலக்கட்டு, வயிற்றில் ஏற்படும் நோய்கள், உடலில் இருந்து நீர் சரியாக வெளியேறாது இருத்தல் மற்றும் ஈரல் நோய்களிலும் இதன் பயன்பாடும் இருந்து வந்துள்ளது. ஆயின் முக்கியமாக இது மதுமேகத்திற்கே பயன்படுத்தப்படுகிறது. பொன்குரண்டி போலவே பயன்படுத்தப்படும் இது இந்திய மருத்துவ முறைகளில் பல நூற்றாண்டுகளாக இருந்துவந்துள்ளது.
சிறுகுறிஞ்சான் தென் இந்தியாவில் அதிகமாக வளர்க்கப்பட்டு மூலிகை ஏற்றுமதியிலும் முக்கியப் பங்கு வகிக்கிறது. மதுமேகம் ஆங்கில மருத்துவத்தில் இரு பிரிவுகளாகப் பிரிக்கப்படுகிறது. அவை 1. இன்சுலின் எடுக்க வேண்டியது அவசியமாக உள்ளது. 2. இன்சுலின் தேவையற்றது. இதில் சிறுகுறிஞ்சானின் பயன் இரண்டாவது வகையிலேயே அதிகமாக உள்ளது.
சர்க்கரைக் கொல்லியின் மருத்துவப் பயன்பாடு நவீன மருத்துவ முறையில் 1930களில் இருந்து உணரப்பட்டு வந்துள்ளது. சர்க்கரைக் கொல்லி இலை இரத்தத்தில் இன்சுலின் அளவை அதிகரிக்கிறது. நமது உடலிலுள்ள கணையத்திலிருக்கும் பி.செல் இன்சுலினை உற்பத்தி செய்கிறது. இதில் ஏற்படும் குறைபாடே இரத்தத்தில் சர்க்கரையை அதிகரிக்கச் செய்கிறது. இந்த செல்களின் எண்ணிக்கையை சிறு குறிஞ்சான் அதிகரிக்கிறது. இதன் மூலம் இரத்தத்தில் சர்க்கரையின் அளவைக் குறைக்கிறது. இது தவிர கொலஸ்டிரால் மற்றும் டிரைகிளிசரைடின் அளவையும் குறைக்கிறது. இந்த செயல்கள் அனைத்திற்கும் சிறுகுறிஞ்சானில் இருக்கும் ஜிம்னிக் அமிலமே காரணியாகும். இதுதவிர சிறுகுறிஞ்சான் குடலுறிஞ்சிகளில் இருந்து குளுக்கோஸ் உறிஞ்சப்படுவதைக் குறைக்கிறது.
நன்றி - தாகம்