பல வருடங்களுக்கு முன்பு ஸ்பெயின் நாட்டில் இருக்கும் டெக்ஸ்டைல் இறக்குமதியாளருக்கு அங்கீகரிக்கப்பட்ட இந்தியாவின் பையிங் ஏஜென்டாக இருந்தேன். ஜெர்மனியில் இருக்கும் பிரபல தியேட்டர் ஒன்றின் சீருடை ஒன்றின் ஆர்டருக்காக கோவை வரும் சூழ் நிலை ஏற்பட்டது. நானும், வாசுதேவன் என்கிற நண்பரும் காரில் வந்து கொண்டிருந்த போது பல்லடம் தாண்டி ஒரு வளைவு வரும். வலது புறமாய் பெட்ரோல் பங்க் ஒன்று கூட இருக்கிறது. அது ஒரு எஸ் பெண்ட் போல இருக்கும். அந்த வளைவில் அடிக்கடி டிராஃபிக் ஆகி விடும். எங்களின் கார் (எனக்குப் பிடித்த ப்ரீமியர் 118 கார் ) முன்னே ஒரு பெண் எங்களைத் தாண்டிச் செல்ல முயன்று கொண்டிருந்தார்.
நண்பர் வாசுதேவன் கிரீச்சிட்டார். ”தங்கம், அங்கே பாருங்க அழகின் அற்புதத்தை!” என்றார் சத்தமாய். நிச்சயம் இது நாள் வரையிலும் நான் அப்படியான அழகுப் பெண்ணைப் பார்த்ததே இல்லை. ஒரு கணம் என் மூச்சு நின்று பின் நிதானமானது. அழகு என்றால் அப்படி ஒரு அழகு. பிரம்மன் மறந்து போய் படைத்து விட்ட அற்புதத்தின் பேரழகி அப்பெண். நானும் என் நண்பரும் மூச்சடைத்து, பிரம்மையின் உச்சத்தில் மித மிஞ்சிய இன்பத்தில் ஆழ்ந்தோம். பார்ப்பதில் கூட இப்படி ஒரு இன்பம் இருப்பதை அன்று நாங்கள் அறிந்து கொண்டோம். இன்றைக்கு எங்கள் சார்பு நிறுவனமான ஃபெமோ மாடலிங் கம்பெனியில் எண்ணற்ற பெண்கள் விளம்பரங்களுக்காகவும், சினிமாவில் நடிப்பதற்காகவும் எங்களை அணுகுகின்றனர். இந்தியாவின் மிகப் பிரபலமான பல மாடல்கள் எங்கள் நிறுவனத்தின் மாடல்கள். இருப்பினும் அவர்களில் எவரும் இதுகாறும் நான் அன்று கண்ட “அற்புத அழகியினை” ஒத்தார்கள் இல்லை.
ஒரு பெண் அழகு என்று எப்படி உணருவது என்று கேட்கத் தோன்றும். தோற்றத்தை வைத்து அதை உணரலாம். பிற விஷயங்கள் பற்றி எழுத கூச்சமாய் இருப்பதால் விட்டு விடுகிறேன். வில் இருக்கிறதே வில் அதை பார்த்திருப்பீர்கள். காமத்தின் கடவுள் மன்மதன் கையில் இருக்கும் மனிதர்களைக் கொல்லும் வில், அதை நேரில் நிறுத்திப் பார்த்திருந்தீர்கள் என்றால் ஒரு பெண்ணின் வடிவம் எவ்வாறு இருக்கும் என்பதை நீங்கள் அனுமானித்திருக்க முடியும். இதற்கு மேல் விளக்கமாய் எப்படி எழுதுவது? இதோ ஒரு வில்லின் படம். மன்மதனின் கையில் வில் ஏன் என்ற கேள்விக்கு பதிலை நான் அந்த அழகின் அற்புதப்படைப்பினைக் கண்ட போது அறிந்து கொண்டேன்.
( எனக்குப் பிடித்த கடவுள் ராமரின் கையில் வில். இவர் கையில் வில் ஏன் என ஒரு கணம் எண்ணிபாருங்கள். கடவுள் படைப்பின் மகத்துவத்தினை உணரலாம், பிரமிக்கலாம், புரிந்து கொள்ளவே முடியாத கடவுள் படைப்புகளின் மகத்துவத்தை அறியலாம் )
ஜானி என்ற படத்தில் ஸ்ரீதேவி அப்படியான தோற்றத்தில் வருவார். அவருக்குப் பின்பு வந்த எந்த ஒரு கதாநாயகியும் அவ்வாறான தோற்றத்தில் இல்லை.
இளையராஜாவின் “தமிழ்ச் சங்கத்தில் பாடாத கவிதை உன் அங்கத்தில் யார் தந்தது?” என்ற பாடலை கேட்கின்ற போதெல்லாம் என் மனதின் நினைவுகளூடே அப்பெண்ணின் அழகிய முகம் இடறிக் கொண்டிருக்கும். இதோ அப்பாடலையும், இப்பாடல் சம்பந்தமான சுவாரசியமான ஒரு பதிவினையும் படித்துப் பாருங்கள்.
பாட்டைக் கேட்கின்ற போதே தாலாட்டும் இளையராஜாவின் இசையமுதம் உங்களைத் தழுவிக் கொள்ளும். மார்கழி மாத விடிகாலைக் குளிரில் கோலம் போடும் அம்மாவைப் பார்க்க முயலும் குழந்தையை, குளிருக்கு இதமாய் தழுவி தன் முந்தானையால் மூடிக் கொள்ளும் அம்மாவின் அணைப்புப் போல.
- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்
3 comments:
அருமையான பாடல் அது .. இளையராஜா என்றும் ராஜா தான்
உங்களுக்காக ..
நண்பன் படமும் அஜித் ரசிகர்களும்
நல்ல ரசனை உங்களுக்கு!
Post a Comment
கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.