குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Saturday, September 14, 2013

22 நாடுகள் சேர்ந்து விரட்டப்படவரின் நிகழ்காலத்தில் கதை

ஒவ்வொருவருக்கும் அவரவருக்கு தகுந்தவாறு பிரச்சினைகள் இருக்கின்றன. தீதும் நன்றும் பிறர் தர வாரா. ஒவ்வொரு நன்மைக்கும், தீமைக்கும்  நாமே காரணமாய் இருப்பதை நாம் அறிந்து கொள்வதில்லை. அறிந்து செய்யும் செயலோ அல்லது அறியாமல் செய்யும் செயலோ, என்ன செய்தோமோ அதற்குரிய பலன் அது நன்மையோ அல்லது தீமையோ அனுபவித்து தான் ஆக வேண்டும். ஒரு துன்பம் வருகிறது என்றால் ஏன் வந்தது என்பதை அறிந்து கொண்டு விட்டால் பிரச்சினையின் மூலம் தெரிந்து விடும். பின்னர் எது வரினும் கவலை ஏன் வரப்போகிறது.

இது ஒரு பக்கம் இருக்கட்டும். நாம் எப்போதாவது நிழல்காலத்தில் வாழ்வதை உணர்ந்திருக்கிறோமா என்று கேட்டால் பெரும்பாலானோர் “ நிகழ்காலமா?, அப்படியென்றால்” என்று கேட்பார்கள். இது ஒன்றுமில்லை. எது செய்யினும் அத்துடன் ஒன்றியிருத்தல் என்பதுதான்.

கார் ஓட்டிக் கொண்டிருக்கும் போது வீட்டு நினைவோ அல்லது சினிமா நினைவோ அல்லது காதலிகள் நினைவோ வந்தால் என்ன ஆகும்? எங்காவது ஓரிடத்தில் காரை முட்டி விடுவோம். செய்யும் வேலையில் முழுக்கவனமும் இல்லையென்றால் “கெட்டது காரியம்”.  நிகழ்காலத்தில் வாழ்ந்து பாருங்கள்.வெற்றிப்படிக்கட்டு கண்ணில் தெரியும். இதுதான் வெற்றியின் சாவி. பூட்டைத் திறக்க சாவி கிடைத்து விட்டது. இனி என்ன? பூட்டைத் திறந்து வெற்றிப்படிக்கட்டில் ஏற வேண்டியதுதான் பாக்கி.

ஒரு ஜோக் உங்களுக்காக,

சிலர் எப்போதுமே ஒரே மனநிலையில் வாழ்வர். மனிதர்களுக்கு எதையுமே எஸ்ட்ரீமாக செய்வதுதான் வழக்கம். அப்படி ஒரு மனிதரைப் பற்றித்தான் ஓஷோ சொல்லி இருக்கிறார்.

ஒரு புகழ் பெற்ற அறுவைசிகிச்சை நிபுணர் ஆப்பிரிக்காவிற்க்கு கானக பயணம் சென்றார். அவர் திரும்பி வந்தவுடன் அவரது தோழர்கள் பயணம் எப்படி இருந்தது எனக் கேட்டனர். அதற்கு அவர் அது மிகவும் ஏமாற்றமளிப்பதாக இருந்தது. நான் ஒரு மிருகத்தைக் கூட கொல்லவில்லை. அதற்கு பதிலாக நான் இங்கேயே ஆஸ்பத்திரியில் இருந்திருக்கலாம். என்றார்.

நீ எங்கிருந்தாலும், எங்குசென்றாலும் நீ நீயாகவே, உனது மனமாகவே, உனது குறிக்கோளாகவே இருக்கிறாய். இங்கு இப்பொழுது என்பதே உனக்கு இல்லை.

இக்கதையில் இருக்கும் பிரச்சினை என்னவென்று உங்களுக்குப் புரிந்து விட்டால் இனி “வானம் கூட வசப்படலாம்”

Sunday, August 18, 2013

வாழும் வரையிலும்

இப்பூமியில் எத்தனையோ உயிர்கள் பிறக்கின்றன இறக்கின்றன. இந்தச் சுழற்சி தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறது. அனைவருக்கும் தெரிந்த உண்மை. எத்தனையோ மகான்கள், நூல்கள் நிலையற்ற வாழ்வினைப் பற்றிச் சொன்னாலும் மனிதர்களுக்கு அதெல்லாம் புரிவதே இல்லை.

மனிதனுக்குள்ளே மறைந்து நிற்கும் தானென்ற அகம்பாவமும், தானென்ற சுய நலமும் அவனுக்குக் கொடுக்கும் துன்பம் என்பது அளவிடற்கரியது. ஒரு கட்டத்தில் சுய நலத்தின் உருவாகவே மாறி விடும் மனிதனுக்கு தன் வயதான காலத்தில் தான் தாம் என்ன செய்தோம் என்ற தவறு புரிய ஆரம்பிக்கும்.

பிறர் கொடுத்த ரத்தத்தால் வந்தோம். பிறரின் உழைப்பில் வளர்ந்தோம். இப்படி பிறராலே உயர்ந்தோம். நம் அறிவும், அனுபவமும் பிறரின் அறிவாலே நமக்கு கிடைத்தது. இவ்வுலகில் நமக்கு கிடைத்த ஒவ்வொரு பொருளும் பிறரின் உதவியின்றி கிடைப்பதில்லை என்பதை நாம் உணர மறுக்கிறோம்.

கொடுத்தே புகழ் பெற்ற ஒருவர் இப்பூமியில் இருந்திருக்கிறார். சிபிச் சக்கரவர்த்தி, பாரி இவர்களின் வரிசையில் வந்தவர் அவர். கடந்த வாரத்தில் கர்ணன் திரைப்படம் பார்த்த போது அவரைப் பற்றி பாடிய பாடல்கள் உங்களுக்காக. படித்துப் பாருங்கள்.

சில உண்மைகள் புரியும்.

மழை கொடுக்கும் கொடையும் ஒரு இரண்டு மாதம்
வயல் கொடுக்கும் கொடையும் ஒரு மூன்று மாதம்
பசு வழங்கும் கொடையும் ஒரு நான்கு மாதம்
பார்த்திபனாம் கர்ணனுக்கோ நாளும் மாதம்

நானிச் சிவந்தன மாதரார் கண்கள்
நாடுதோறும் நடந்து சிவந்தன பாவலர் கால்கள்
நற்பொருளைத் தேடிச் சிவந்தன ஞானியர் நெஞ்சம்
தினம் கொடுத்து தேய்ந்து சிவந்தது கர்ண மாமன்னன் திருக்கரமே

என்ன கொடுப்பான் எவை கொடுப்பான்
என்று இவர்கள் எண்ணும் முன்னே
பொன்னும் கொடுப்பான், பொருள் கொடுப்பான்
போதாது போதாது என்றால் இன்னும் கொடுப்பான்
இவையும் குறைவென்றால் எங்கள் கர்ணன்
தன்னை கொடுப்பான் தான் உயிரும் தான் கொடுப்பான்
தயா நிதியே



Monday, July 22, 2013

தினமலர் அக்கம் பக்கத்தில்

கடந்த செவ்வாய்க் கிழமையன்று கோவை தினமலர் அக்கம்பக்கத்தில் எனது பிளாக்கை அறிமுகம் செய்திருந்தார்கள். இதோ அப்பக்கங்கள் கீழே. நன்றி தினமலர். படத்தைக் கிளிக் செய்து படிக்கலாம்.




சாஸ்திரங்களில் உணவு சாப்பிடும் முறைகள்(1)

கடந்த சனிக்கிழமை எனது நண்பர் திரு ஜோதி ஸ்வாமிகள் அவர்கள் பாடி மக்களுக்கு அர்பணித்த “திருமந்திரம் 3000” ஒலிப்பேழை வெளியீட்டு விழா பூண்டி வெள்ளிங்கிரி ஸ்வாமிகள் ஆலயத்தில் நடைபெற்றது. வெள்ளிங்கிரி மலையடிவாரத்தில் தூவிக் கொண்டிருந்த மழையிலும், சில்லென்று வீசிய மலைக்காற்றின் குளுமையிலும் விழா இனிமையாக நடந்தேறியது. 

விழாவின் இடையில் விழா மேடையில் ஒவ்வொருவரும் பேசி முடித்த பிறகு பொறுப்பாக கை தட்டி அனைவரையும் உற்சாகப்படுத்திக் கொண்டிருந்தார்.

நூற்றுக் கணக்கான நபர்கள் கூடியிருந்தனர்.விழாவில் கொடுக்கப்பட்ட மிக்ஸர், ஜிலேபி,  தண்ணீர் பாட்டில்களை சாப்பிட்டபின் தான் அமர்ந்திருந்த இடத்திலேயே குப்பையைப் போட்டு விட்டுச் சென்றனர். 

விழா முடிந்த பிறகு அங்கு கிடந்த தண்ணீர் பாட்டில், மிக்ஸர் காகிதம் போன்றவற்றை அழகிய இளைஞர் ஒருவர் பொறுக்கி எடுத்து அங்கு வைத்திருந்த குப்பைக்கூடையில் போட்டுக்கொண்டிருந்தார்.  இதோ அந்த இளைஞர் உங்கள் பார்வைக்காக.




சரி, இனி முக்கியமான விஷயத்திற்கு வருவோம்.

மனிதனுக்கு நோய் ஏன் வருகிறது? உடம்பிற்குள் செல்லும் பொருட்கள் மற்றும் மனசு (??????) இரண்டைத் தவிர வேறு எந்தக் காரணத்தினாலும் நோய் வரக்கூடிய சாத்தியங்கள் இல்லவே இல்லை எனலாம். ஆனாலும் மூன்றாவதாய் வேறொரு காரணமும் உண்டு. உயிருக்கு உணவே தேவையில்லை என்பார் எனது மாஸ்டர். மூன்றாவது காரணத்தை இங்குச் சொல்வதில் அர்த்தமில்லை என்பதால் சமயம் வரும்போது எழுதுகிறேன்.

முன்னோர்கள் தன் வம்சங்கள் நோயின்றி வாழ எத்தனையோ நல்ல வழிகளை அனுபவித்து உணர்ந்ததை எழுதியும், சொல்லியும் வைத்துச் சென்றிருக்கின்றார்கள். ஆனால் நாமோ எதைப் பற்றியும் கவலைப்படுவதும் இல்லை. உணர்ந்து கொள்வதும் இல்லை.

சாஸ்திரங்களில் உணவு உட்கொள்ளும் முறைகளைப் பற்றிச் சொல்லி இருக்கின்றார்கள். ஸ்ரீ வராகி விஜயம் என்ற புத்தகத்தில் விரிவாக எழுதி இருந்தார்கள். அதில் முக்கியமானவை உங்களின் கவனத்திற்காக. மனதில் குறித்துக் கொள்ளுங்கள். 

ஆயுளை விரும்புகிறவன் கிழக்கு முகமாக அமர வேண்டும்
கீர்த்தியை விரும்புவன் தெற்குமுகமாக அமர வேண்டும்
சம்பத்தை விரும்புவன் மேற்கு முகமாக உட்கார வேண்டும்.
சத்தியத்தை விரும்புகிறவன் வடக்கு முகமாக உட்கார்ந்து உணவு வேண்டும்.

சாப்பிடும் போது அன்னத்தில் மயிர் இருந்தால் அந்த அன்னத்தைக் கீழே வைத்து விட்டு மீதி உள்ளதை புசிக்க வேண்டும். தலைமயிரையும், நகத்தையும், வேஷ்டியில் பிரித்த நூலையும் வீட்டு முன்வாசலில் போடுதல் கூடாது. பின் வாசலில் தான் போட வேண்டும்.

சாப்பிடும் போது வாயில் மயிர் அகப்படுதல் முன் கூட்டியே வரும் கவலையை உணர்த்துவதாகும். அப்படி வந்தால் அதை உமிழ்ந்து விட்டு ஒரு நெல் சாப்பிட்டு விட்டால் எந்தக் கவலையும் வராது. வந்தாலும் சிக்கல் இருக்காது.

இன்னும் இருக்கிறது.

தொடரும் விரைவில்...


Friday, July 12, 2013

நிலம்(2) - லீகல் ஒப்பீனியன் ஜாக்கிரதை

வெளிநாடு வாழ் தமிழர்கள் சிலருக்கு அவர்களின் தேவைக்காக, நிலம் தேர்ந்தெடுத்து, அதற்குத் தேவையான டாக்குமெண்ட்களை பெற்று, சரிபார்த்து, மார்க்கெட் விலைக்கு ஏற்ப விலை நிர்ணயித்து கிரயம் செய்து கொடுத்து வருகிறேன். அவர்கள் பணம் அனுப்புவதோடு சரி. கையெழுத்துப் போட மட்டும் வருவார்கள். அதன் பிறகு பட்டா, சிட்டா, அடங்கல், வரி, கந்தாயம் போன்றவற்றை அவர்கள் பெயருக்கு மாற்றி கொடுத்தும் வருகிறேன். கடந்த வருடம் இரண்டு  ஏக்கர் 23 லட்சத்துக்கு வாங்கிக் கொடுத்தேன். இன்றைக்கு இந்த தேதியில் அதன் விலை ஏக்கர் 45 லட்சம் செல்கிறது. எவ்வளவு பெரிய வருமானம் பாருங்கள். அடுத்த வரும் ஏக்கர் 50 லட்சம் ஆகி விடும். கோடீஸ்வரர் ஆகி விடுவார். 

எனது இத்தொழில் மூலம் நான் அறிய வந்த சில தகவல்களைத்தான் பகிர்ந்து கொள்கிறேன். அது அனைவருக்கும் உதவும் என்ற நம்பிக்கையின் காரணமாக.

ஒவ்வொரு நிலமும் ஒவ்வொரு விதம். அந்த நிலத்தின் வரலாறோ அது ஒரு விதம். அதன் டாக்குமெண்ட்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதம்.சிலர் தேவையான டாக்குமெண்ட்கள் வைத்திருப்பார்கள். சிலருக்கு என்னவென்றே தெரியாது. மூதாதையர் நிலமாய் இருக்கும். அதன் உரிமையாளர்கள் யார் என்று கண்டுபிடிப்பது பெரும் சிரமம்.  

ஒரு நிலத்தின் கையெழுத்துதாரர்கள் 170 பேர் இருந்தார்கள். இவர்களை ஒன்று திரட்டி கையெழுத்து வாங்குவது பற்றி ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். நான்கு அல்லது ஐந்து வேன்கள் வாடகைக்கு எடுக்க வேண்டும். இப்படியெல்லாம் ஒரு சில நிலத்தின் கதைகள் இருக்கும். 

இப்படித்தான் ஒரு தடவை,நண்பரொருவர் நிலம் வாங்க வேண்டி டாக்குமெண்ட்கள் சரிபார்க்க என்னிடம் வந்தார். அவர் கொடுத்த அத்தனை டாக்குமெண்ட்களையும் வாங்கி சரிபார்த்து வரும் போது வக்கீல் ஒருவரின் லீகல் ஒப்பீனியன் ஒன்றும், டைப் செய்யப்பட்ட ரிஜிஸ்டருக்கு தயாராக இருந்த பத்திரம் ஒன்றும் இருந்ததைப் பார்த்தேன்.

அனைத்து டாக்குமெண்ட்களையும் வரிசைப்படுத்தி ஒவ்வொன்றாக செக்கிங் செய்து வந்த பிறகு,  வக்கீல் கொடுத்த லீகல் ஒப்பீனியனை படித்தேன்.
சி ஷெட்யூலின் படி நண்பருக்குப் பாத்தியப்பட்ட சொத்தினை வக்கீல் பி ஷெட்யூல் என்று போட்டு, சொத்து விபரத்தையும் தவறாக குறிப்பிட்டு எல்லாம் 100% சரி என்று சான்று கொடுத்திருந்தார்.இதை ஆதாரமாக வைத்துக் கொண்டு, டாக்குமெண்ட்டும் தயார் செய்யப்பட்டு வந்திருந்தது. இந்த சொத்தினை நண்பர் வாங்கினால்,கிரையம் செய்திருந்தால் விளைவு என்ன? அப்பத்திரம் செல்லாது. கொடுத்த பணமும் போச்சு. நண்பரும் பணத்தை இழந்திருப்பார்.

கோவையில் ஏக்கர் 15 லட்சத்திலிருந்து 10 கோடி வரை விலை போகிறது. பல ஊரிலிருந்து பலர் இங்கு வசிக்க, தொழில் செய்ய வருகின்றனர்.  இவர்களில் பலர் சொத்துக்களை வாங்குகிறார்கள். பின்னர் விற்கிறார்கள். ஆக நிலத்தின் வரலாற்றை அட்சர சுத்தமாய் கண்டுபிடிக்க பெரும் பிரயத்தனம் செய்ய வேண்டும்.நிலம் வாங்க நினைக்கும் போது அந்த நிலத்தின் அத்தனை வரலாற்றினையும் எடுத்து ஆராய்ந்து பார்த்து வாங்க வேண்டும். இல்லையென்றால் பணமும் அத்தோடு நிம்மதியும் போய் விடும். நிலம் வாங்கும் போது அதிக கவனம் தேவை என்பதை நினைவில் கொள்ளுங்கள்.

சிலர் வக்கீல் லீகல் ஒப்பீனியன் கொடுத்தால் போதும், அதை வைத்து கிரயம் பெறலாம் என்று நினைத்துக் கொண்டிருப்பார்கள். லீகல் ஒப்பீனியன் சரி என்று நினைத்தால் அதுவும் தவறாகப் போய் விடும் ஆபத்து இருக்கிறது என்பதை நினைவில் கொள்ளுங்கள்.  

தொடரும் விரைவில்

Wednesday, July 3, 2013

வள்ளுவரும் வாசுகியும் - வாழ்க்கைத் தத்துவம்



எல்.சி.டி டிவி, உடலை கொன்று கூறாக்கும் ஏ.சி, ஷோபா, மெத்தை, கட்டில், கையணி, காதணி, ஒன்றுக்கும் உதவாத பட்டுச்சேலைகள், பளபளக்கும் ஆடைகள், கார், ஃப்ளைட் என்று ஆண்களும், பெண்களும் பொருட்களின் மீதான மோகத்தில் திளைத்து, அதற்காக தன் வாழ்க்கையை வேலை வேலை என்று அட்டையைப் போல உறிஞ்சும் கார்ப்பொரேட் கம்பெனிகளுக்கு உழைத்து அவர்கள் போடும் காசைப் பொறுக்கிக் கொண்டு, அதே கார்ப்பொரேட் கம்பெனிகள் நடத்தும் மால்களில், அவர்களால் தயாரிக்கப்பட்டு விற்கப்படும் பொருட்களை வாங்கி ஏமாந்து போய் நிற்கிறார்கள் இன்றைய நவ நாகரீக மனிதர்கள். அதுமட்டுமா, உழைத்து முடித்து உடலில் அத்தனை நோய்களையும் பெற்றுக் கொண்டு, முடிவில் ஏமாற்றுவதையே தொழிலாகக் கொண்ட ஆன்மீக வியாபாரிகளிடம் சென்று அடைக்கலமாகி இருக்கும் சொத்தினையும் அவர்களிடம் இழந்து விடுகின்றார்கள். இதைப் பற்றிய புரிதல் என்பது கொஞ்சம் கூட மனிதர்களிடையே இல்லை என்பதுதான் நாகரீகத்தின் மோசமான விளைவினைக் காட்டுகிறது. மூளைச் சலவை செய்து சுத்தமாக மடித்து வைக்கப்பட்ட துணியைப் போல ஆகி விட்டார்கள் மனிதர்கள்.

எத்தனை லட்சம் கொடுத்து வாங்கினாலும் கார் தெருவில்தான் நிற்கும். எத்தனை லட்சம் கொடுத்து ஆடைகள் வாங்கினாலும் அது கிழிந்து சாயமிழந்து பழதாகி விடும். இன்றைக்கு எல்.சி.டி நாளைக்கு என்ன டிவியோ? வாங்கிய எல்சிடிக்கு என்ன மதிப்பு இருக்கிறது? ஒன்றுமில்லை. இன்றைக்கு ஆப்பிள் போன். நாளைக்கு அப்கிரேடு ஆனால் வாங்கிய போன் மதிப்பிழந்து போய் விடும். நான் பிராண்டட் சர்ட்தான் போடுவேன். நான் வைத்திருக்கும் காரின் விலை 20 லட்சம் என்றெல்லாம் பேசிக் கொண்டு திரிகிறார்கள். இப்பெருமை வந்தது இப்பொருட்களால் என்றால் அது பொருட்களை தயாரிப்பவர்களுக்குத்தானே சேரும். உனக்கு என்ன இதில் தற்பெருமை இருக்கிறது? இப்படியான பொருட்களை விற்பவர்களுக்கு வேண்டுமானால் லாபம் கொட்டும். வாங்கியவர்களுக்கு ஈகோவினால் பொருள் இழப்புதான் மிச்சம். இப்படியான மக்களுக்குத்தான் இந்தக் கதை. தொடர்ந்து படியுங்கள்.

திருவள்ளுவரின் திருக்குறளில் ஒரு இடத்தில் கூட கமா போட்டு விடமுடியாது. வார்த்தைகளை மாற்றிப் போடவும் முடியாது. அப்படிப் போட்டால் பாடலின் அர்த்தமே மாறிப்போய்விடும். இப்படியான படைப்பை இன்றிருக்கும் எவராவது எழுத முடியுமா?  ஏன் முடியவில்லை? என்ன காரணம்? யாராவது யோசித்துப் பார்த்ததுண்டா? வள்ளுவரும் அவரின் மனைவியும் எப்படி வாழ்ந்தார்கள் தெரியுமா? வள்ளுவரும், அவரின் மனைவி வாசுகியும் ஒரே ஒரு ஆடையை ஒருவர் மாற்றி ஒருவர் அணிந்து கொண்டுதான் வெளியில் சென்று வருவார்களாம். வள்ளுவரின் தேவைகளை அறிந்து அவருக்கு பணிவிடை செய்வது மட்டுமே தன் வாழ் நாள் கடமையாக கொண்டிருந்தவர் வாசுகி அம்மையார். இன்றைக்கு வாழும் கணவன் மனைவிகளில் எத்தனை பேர் இவர்களைப் போல இருக்கின்றார்கள். ஏதோ அங்கொன்றும் இங்கொன்றுமாய் ஒரு சிலர் இருக்கலாம். கணவன், மனைவி உறவென்பது படைக்கும் தொழில், ஆக்கும் தொழில் கொண்டது. இல்லையென்று எவராவது மறுக்கமுடியுமா? இவ்வுறவுக்கு இன்றைக்கு நாகரீகம் என்ற பெயரில், ஸ்டைல் என்ற பெயரில் எவ்வளவு கேடுகள் விளைவிக்கப்படுகின்றன. ஒவ்வொரு குடும்ப நல நீதிமன்றங்களில்  பார்த்தால் தெரியும்? எத்தனை எத்தனை வழக்குகள். ஏன் ? எதற்கு? என்று கேட்டால் ஒரே ஒரு காரணம் தான் சொல்வார்கள். “பொருள்”

திருப்பதியில் ஜீவசமாதி அடைந்து திருப்பதி பெருமாள் சன்னிதிக்கே பெரும் புகழைத் தேடித்தந்த கொங்கனவர் என்கிற சித்தர் ஒரு முறை திருவள்ளுவரும், வாசுகி அம்மையாரும் வசிக்கும் தெருவழியாகச் செல்லும் போது பசியெடுக்க, இவர்களின் வீட்டு வாசலில் நின்று கொண்டு பிச்சை கேட்டிருக்கிறார். அந்த நேரத்தில் வாசுகி அம்மையார் திருவள்ளுவருக்கு உணவிட்டுக் கொண்டிருந்திருக்கிறார். கணவர் சாப்பிட்டு முடித்தவுடன் வாசலுக்கு வர, அங்கு கொங்கணவர் கோபத்துடன் நின்று கொண்டிருக்கிறார்.

இந்தக் கொங்கணவர்  மகா தவ பலம் நிரம்பியவர். வழியில் வந்து கொண்டிருக்கையில் அவர் மீது எச்சம் போட்ட கொக்கினை கோபத்துடன் பார்க்க அந்த நிமிடத்தில் கொக்கு தீப்பிடித்து இறந்து விட்டது. அவரின் கண் வீச்சுக்கு அவ்வளவு சக்தி. அச்சம்பவம் முடிந்த பிறகுதான் வாசுகி அம்மையாரிடம் பிச்சை கேட்டு வந்திருக்கிறார். அம்மையார் வர காலதாமதமானதால் கோபத்துடன் அவரை நோக்க, அவரைப் பார்த்துச் சிரித்த வாசுகி அம்மையார், “கொக்கென நினைத்தாயோ கொங்கணவா?” என்று கேட்க சித்தருக்கு சித்தபிரமை பிடித்து விட்டதாம்.

இவருக்கு எப்படி அச்சம்பவம் தெரியும் என்று குழம்புகிறார். பிறகு தெளிவுறுகிறார். எத்தனையோ காலம் தவம் செய்து கிடைத்த பலனை, ஒரு சாதாரண பெண் வெகு அலட்சியமாய் சொல்கிறார் என்றால் காரணம் என்ன? கணவனுக்கு பணிவுடை செய்யும் மனைவிக்கு அத்தனை சக்தி எப்படிக் கிடைக்கும்? இதெல்லாம் சாத்தியமா?

ஆம். எல்லாம் சாத்தியமே. 

அர்ப்பணிப்பு, தூயமனது, தியாகம்.

வள்ளவருக்கும் வாசுகிக்கும் இருந்தது அர்ப்பணிப்பு, தூயமனசு, தியாகம். வாசுகியின் அர்ப்பணிப்பு தான் வள்ளுவருக்கு திருக்குறளை எழுத வைத்தது.

கொங்கணவர் இவர்கள் இருவரும் இருக்கும் ஏழ்மை நிலையைப் பார்த்து விட்டு வள்ளுவரை தனி இடத்துக்கு அழைத்துச் செல்கிறார். தன் தவ வலிமையால் நினைத்ததைச் சாதிக்கும் வல்லமை படைத்த அச்சித்தர், தன் கமண்டலத்திலிருந்து கொஞ்சம் தீர்த்தம் எடுத்து எதிரில் இருந்த பாறை மீது தெளிக்க அது தங்கமாகிறது. வள்ளுவரிடம் காட்டி, இதை வைத்துக் கொண்டு வசதியாய் வாழுங்கள் என்றுச் சொல்லி இருக்கிறார்.

அவரைப் பார்த்து நகைத்த வள்ளுவர், இன்னும் கொஞ்ச தூரத்தில் இருந்த பாறையின் அருகில் சென்று அதன் மீது சிறு நீர் கழித்திருக்கிறார். அப்பாறையே தங்கமாகி விட்டது.

கமண்டலத்தின் தீர்த்தத்துக்கு இருந்த வல்லமை வள்ளுவரின் சிறுநீருக்கு இருக்கிறது என்றால் என்ன அர்த்தம்? யோசித்துப் பாருங்கள். 
வள்ளுவர், வாசுகியின் வாழ்க்கை புரியும்.

குறிப்பு : இக்கதைகள் எனது மாஸ்டர் சொல்லி நான் கேட்டது. அவரிடம் அனுமதி கேட்டு பதிக்கப்பட்டது.

Friday, June 28, 2013

திருமந்திரம் இசைத்தட்டு வெளியீடு விழா - வெள்ளிங்கிரி சுவாமிகள் ஆஸ்ரமம்


தமிழகத்தின் முதல் சாத்திர நூல் திருமந்திரம். திருமூலர் அவர்கள் திருவாவடுதுறையில் தங்கி இருந்து மூவாயிரம் ஆண்டுகள் தவம் இருந்து ஆண்டுக்கு ஒரு பாடலாகப் பாடியதாக கருதப்படும் திருமந்திரத்தினை ஒலி வடிவில் இசைத்தட்டாக எனது உயிரோடு உயிராய் நின்று எனக்குள்  நிறைந்திருக்கும் எனது குரு நாதரின் அருமைச் சீடரும், துன்பம் வரும் முன்பே ஓடோடி வந்து நின்று காத்தருளும் ஜோதி ஸ்வாமிகளின் குரலில் வெளிவருகிறது.

கோயமுத்தூரின் அடையாளம், கோவைக்கு உயிர் கொடுத்து வரும் வெள்ளியங்கிரி மலை அடிவாரத்தில் எனது குரு நாதர் சுவாமி வெள்ளிங்கிரி ஜீவசமாதியில், ஜூலை மாதம் 20 ஆம் தேதி, 2013, ஆடி மாதம் 4ம் தேதி சனிக்கிழமை அன்று மூன்று மணி அளவில் வெளியீட்டு விழா நடக்கிறது.
இசைத்தட்டு இலவசமாய் வழங்கப்படுகிறது. கோவையில் இருக்கும் நண்பர்கள் விழாவில் அவசியம் கலந்து கொண்டு திருமூலர் வழங்கிச் சென்ற திருமந்திரத்தின் இசைத்தட்டினைப் பெற்றுச் செல்ல அழைக்கிறேன்.

சுவாமி வெள்ளிங்கிரி ஜீவசமாதி ஆஸ்ரமத்திற்குச் செல்லும் வழி :

ஈஷா யோகமையம் செல்லும் வழியில் முள்ளங்காடு செக்போஸ்டில் இடதுபுறம் திரும்பினால் சுவாமியின் ஆஸ்ரமத்திற்குச் செல்லலாம். 

ஜோதி ஸ்வாமிகளை தொடர்பு கொள்ள : 9894815954

திருமந்திரத்திலிருந்து சில பாடல்கள் உங்களுக்காக இங்கே !

பாடல் 85 :
யான்பெற்ற இன்பம் பெறுக இவ் வையகம்
வான்பற்றி நின்ற மறைப்பொருள் சொல்லிடின்
ஊன்பற்றி நின்ற உணர்வுறு மந்திரம்
தான்பற்றப் பற்றத் தலைப்படுந் தானே

பாடல் : 270
அன்பு சிவம் இரண்டு என்பர் அறிவிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிகிலார்
அன்பே சிவமாவது ஆரும் அறிந்தபின்
அன்பே சிவமாய் அமர்ந்திருந் தாரே.

பாடல் :1624
ஒடுங்கி நிலைபெற்ற வுத்தமர் உள்ளம்
நடுங்குவ தில்லை நமனுமங் கில்லை
இடும்பையும் இல்லை இராப்பகல் இல்லை
படும்பயன் இல்லை பற்றுவிட் டோர்க்கே.

Thursday, June 27, 2013

கோவையில் கண்ணதாசன் விருது 2013- முத்துலிங்கம் அசோகமித்திரன்



கோவை கிக்கானி பள்ளியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை கண்ணதாசன் கழகம் மரபின் மைந்தர் முத்தையா மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நடத்திய விருது விழா நடைபெற்றது. நிகழ்ச்சி ஆரம்பித்து சிறிது நேரமாகி விட்டிருந்தது. நானும் ரித்திக் நந்தாவும் சென்றிருந்தோம்.

அரங்கம் நிரம்பி வழிந்தது. வெகு அமைதியாக இருந்தது. அரங்கத்திலிருந்து ஒருவர் கூட வெளியில் செல்லவில்லை. சினிமா பிரபலங்களை காணத்தான் இவ்வளவு கூட்டம் கூடும். ஆனால் இந்த நிகழ்வு என்னை வெகுவாய் ஆச்சரியப்படுத்தியது. இலக்கியத்திற்காகவும் சிறு கூட்டம் இருக்கிறதே என்று சந்தோசம். சாரு நிவேதிதா, ஜெயமோகன், ராமகிருஷ்ணன் போன்றவர்கள் புத்தக வெளியீட்டு விழாவினை கோவையில் வைக்கலாம். நிச்சயம் வாசகர்கள் கூடுவார்கள். 

நண்பர் திரு பாரதி கிருஷ்ணகுமாரும், எங்களால் முதலாளி சார் என்றழைக்கப்படும் முதலாளியும் என்னை அழைத்திருந்த காரணத்தால் முதன் முதலாய் இப்படிப்பட்ட விழாவிற்குச் செல்ல எனக்கொரு சந்தர்ப்பம் கிடைத்தது. 

முதலாளி சார் எனக்கு கோவையின் பிரதான கிளப்பில் வைத்து திரு. பாரதி கிருஷ்ணகுமாரை அறிமுகப்படுத்திய போது அவருடனான உரையாடலில் ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கும் மனதை நெகிழச் செய்து கொண்டே வந்தார். சில நாட்கள் சென்ற பிறகு அவரிடமிருந்து “அப்பத்தா”, “அருந்தவப்பன்றி பாரதியார்” என்ற நூல்களும் அவர் இயக்கிய ஆவணப்படங்களும் வந்திருந்தன. அப்பத்தா சிறுகதைத் தொகுப்பில் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதம். மனதை கீறிச் செல்லும் கதைகள் அவை. அருந்தவப்பன்றி பாரதியார் நூல் பாரதியார் வாழ்க்கையில் இதுவரை எவரும் சொல்லாத வரலாற்று சம்பவங்களை பதிவாகியிருக்கிறது. இதற்காக பெரும் உழைப்பினை அவர் கொடுத்திருக்கிறார். இந்த நூல் இனி பாரதியாரின் வரலாற்றில் ஒரு தனி இடம் பிடித்தே தீரும். 

வாச்சாத்தி தீர்ப்பு என்பது உலகளவில் மிகப் பெரிய வரலாற்று நிகழ்வு. அதிமுக ஆட்சியில் செங்கோட்டையன் அமைச்சராக இருந்த போது வாச்சாத்தி என்ற கிராமத்தில் நடைபெற்ற வனக்காவலர்கள், காவல்துறை அதிகாரிகளின் பாலியல் வன்கொடுமை பற்றிய கொடூரத்தை விளக்கிய  ஆவணப் படைப்பினை திரு பாரதி கிருஷ்ணகுமார் எடுத்திருக்கிறார். 

இவ்வழக்கினை சிபிஐ கையிலெடுத்து கிட்டத்தட்ட 269 அரசு அதிகாரிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்த “உண்மை” வெற்றி பெற்ற சம்பவம் அது. அதை அவர் ஆவணப்படுத்தியிருந்த விதம் நெகிழச் செய்தது. இந்த தீர்ப்பினைக் எழுதிய நீதிபதி பிரபல கட்சியின் மாநில அமைப்பாளரும் எனது நெருங்கிய நண்பரின் உறவுக்காரர்.  நாங்கள் இருவரும் இத்தீர்ப்பினைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது “மனச்சாட்சி” மற்றும் “சட்டத்தின்” படி தீர்ப்பு வழங்கப்பட்டதாக அவர் சொன்னார். 

இந்த ஆவணப்படம் தமிழர்களின் வரலாற்றில் ஜனநாயக அரசுகளின் கொடுங்கோலாட்சி எப்படி இருக்கும் என்பதற்கு உதாரணமாய் இருந்தது. (சார், இன்னும் உங்களின் மூன்று படைப்புகளைப் பார்க்கவே இல்லை. மனது சரியாகட்டும் என்று காத்திருக்கிறேன்)

பாரதி கிருஷ்ணகுமாரின் இணையதளம் : www.bharathikrishnakumar.com

இனி விருதுக்கு வரலாம்.

அசோகமித்திரன் - படைப்பானது எப்போதும் இளமையாகவே இருப்பது போல அவரிடம் இளமை இருந்தது. அதிகம் பேச முடியவில்லை. ஆனால் அவரின் படைப்புகளை ஒரு வாசகியாக பாராட்டிய முனைவர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் கண்களிலும் பேச்சிலும் அசோகமித்திரன் தெறித்தார். படுவீச்சு ! அசோகமித்திரனை நான் அதிகம் வாசித்திருக்கவில்லை. பாவாடை அகலமாயிருந்தால் பஸ்ஸில் ஏற வசதியாய் இருக்குமே என்று நினைக்கும் பெண்களின் உள்மனதைக் கூட படைப்புகளில் காட்டியிருக்கும் அசோகமித்திரன் பற்றி புகழ்ச்சி சூப்பர். இவர் கண்ணதாசனைப் பற்றிப் பேசுவார் என்று எதிர்பார்த்தேன். 

முத்துலிங்கம் - கிட்டத்தட்ட 70 வயதுக்கும் மேலான திரைக்கலையுலக படைப்பாளி. அவரின் பாடல்கள் பற்றி பேசினார். கண்ணதாசனைப் பற்றிப் பேசினார். கொடுத்திருந்த நேரத்தில் திருக்குறளைப் போலச் சுருக்கமாய் பேசினார். முதுகுவலி என்று முதுமைக்கே உரிய காரணமொன்றினைச் சொன்னார். 

இசைக்கவி ரமணன் அவர்கள் பேசினார்கள். சிலாகிக்கும் அம்சங்கள் ஒன்றுமில்லை. பாடினார் ஆனால் பாருங்கள்  எனக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை. இந்தக் காலத்து சின்னப் பிள்ளைகள் கூட எவ்வளவு நன்றாகப் பாடுகிறார்கள். இவர் ஏன் அப்படிப்பாடினார் என்று புரியவில்லை. ஏதாவது காரணமிருக்கும். அது அவருக்கு நியாயமாய் இருக்கலாம். 

பேராசிரியர் ராமசந்திரன் - கண்ணதாசனைப் பற்றிப் பேச வந்து விட்டு, இந்தக் கால பட்டிமன்ற பேச்சினைப் பேசினார். பேராசிரியர் சார் என்னதான் சொல்லுங்கள் கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்து மதம் பற்றிப் பேசினால் கேட்கின்றவர்கள் ஒருவர் கூட அவ்விடத்திலிருந்து எழுந்து கொள்ள முடியாது. கட்டிப் போடும் காந்தக்குரலோன் அவர். ஆனால் கடைசியாகப் பேச வந்த பேராசிரியர் வியர்த்துக் கொண்டே கிச் கிச் மூட்டிக் கொண்டிருந்தார். வேடிக்கையாக இருந்தது.

ஆனால் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் போனதே தெரியவில்லை. 
அழியாத வரலாறு படைத்த கண்ணதாசன் அழகாய் போட்டோவில் சிரித்துக் கொண்டிருந்தார். ஆனால் எனக்குத்தான் இவ்விருது விழா முழுமையற்றதைப் போல தோன்றியது, பாதிவயதில் காலமுமாகிப் போன கண்ணதாசனைப் போல.

Thursday, June 20, 2013

நட்பிற்கு மரியாதை உண்மைச் சம்பவம்

நேற்று ஆஃபீசுக்கு வரும்  வழியில் சத்திரோடு அன்னபூர்ணா ஹோட்டலின் முன்புறம் டிவிஎஸ் ஒன்று அடிபட்டு கீழே கிடந்தது. பல்சர் பைக்கில் மோதியவன் நின்று கொண்டிருந்தான். விழுந்து கிடந்தவன் கைலி கட்டி இருந்தான். ஆள் பார்க்க கிராமத்தான் போலிருந்தான். அன்னபூர்ணா செக்யூரிட்டி பார்த்துக் கொண்டிருந்தார்.  சாலையில் சென்று கொண்டிருந்தோர் ஒருவர் கூட அவருக்கு உதவி செய்ய முன்வரவில்லை. இடித்தவன் அவன் பாட்டிற்கு நின்று கொண்டிருந்தான். அடிபட்டு விழுந்தவன் அவனாகவே தட்டுத்தடுமாறி எழுந்தான். கண்களில் கண்ணீர் வடிய வலியில் துடித்தபடி எழுந்தான். வண்டியை நிமிர்த்தினான். பரிதாபத்துக்குரிய அந்த இளைஞன் அழகாய் இல்லை. அவன் ஒரு பெண்ணாக இல்லை. அவனிடம் பளபளப்பான ட்ரஸ் இல்லை. அழுக்காய் இருந்தான். இச்சமூகத்தின் மன நிலையை இச்சம்பவம் எனக்கு பளீரென சுட்டிக்காட்டியது.

தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். என்னால் அவனுக்கு உதவ எனதுடல் ஒத்துழைக்காது. மனவலியுடன் அவன் மெதுவாக வண்டியை நிமிர்த்தி கண்ணீருடன் சென்றதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். பல்சர் பரதேசி எப்போதே சென்று விட்டான்.

சக மனிதன் துன்பத்தைக் கூட கண்டு கொள்ளாத உலகில் வாழ்வதை நினைத்து வேதனைதான் மண்டியது. 

எனது நண்பரொருவர் கணபதியில் வசிக்கிறார். அவருக்கு ஒரு நண்பர், அவர் ஒரு கோவில் பூசாரி. தனிக்கட்டை. கல்யாணம் ஏதும் செய்துகொள்ளவில்லை. 

அன்றைக்கு விடிகாலையில் பூசாரிக்கு நெஞ்சு வலி வந்து விட்டது. வலியில் துடித்திருக்கிறார். நம் ஆயுள் முடியப்போகிறது என்பதை அவர் உணர்ந்திருக்கிறார். அவருக்கு உதவி செய்தவர்கள் ”உங்கள் சொந்தக்காரர் யாராவது இருக்கின்றார்களா, சொல்லி அனுப்புகிறோம்” என்று கேட்க அவர், “எனது நண்பரிடம் சொல்லுங்கள், அவர் வந்தால் க் கொள்வார்” என்றுச் சொல்லி இருக்கிறார். எனது நண்பருக்குத் தகவல் வந்து பூசாரியார் இருக்குமிடம் செல்லுகையில் உயிர் போய் விட்டது. விடிகாலை 5.45க்கு உயிர் பிரிந்து விட்டது. வேறு எந்தச் சொந்தக்காரரிடம் சொல்லவில்லை. தன் நண்பரிடம் மட்டும் தகவல் சொல்லி விட்டு அவர் விண்ணுலகை அடைந்து விட்டார். 

எனது நண்பர் பூசாரி நண்பனை மரியாதையுடன் தகனம் செய்து அத்தனை செலவினையும் செய்து விட்டு வீடு திரும்பினார்.

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி 
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை. - திருவள்ளுவர் 

(நட்பின் உன்னதம் என்னவென்றால் எப்போதெல்லாம் நண்பன் துன்பப்படுகின்றானோ அவனுக்கு தன்னால் இயன்ற நிலையில் நின்று அவனின் துன்பத்தை நீக்குவது தான்  உண்மையான நட்பு)

பிசிராந்தையார், கோப்பெருஞ்சோழனின் நட்பினைப் பற்றிய சில கேள்விகள் எனக்குள் எழுந்ததுண்டு. இப்படியெல்லாம் இருக்க முடியுமா என்று கூட நினைத்தேன். 

இக்காலத்தில் நட்பினால் தான் மிகப் பெரும் பகை வளரும். கூடாத நட்பின் விளைவாக சொத்து, சுகம் இழந்தவர்கள் எண்ணற்றோர். இப்படி இருக்கும் கலிகாலத்தில் மனதை சிலிர்க்கச் செய்யும் இச்சம்பவத்தில் நானொரு சாட்சியாக இருந்தேன். அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்பித்தான் இப்பதிவு.

Monday, June 10, 2013

வெள்ளிங்கிரி மலையிலிருந்து வரும் ஓடை



நெரூர் சதாசிவ பிரம்மேந்திராள் ஜீவ சமாதிக்குச் செல்லும் போதெல்லாம் அகண்ட காவிரியில் சுழித்து ஓடும் தண்ணீர்ல் கிட்டத்தட்ட இரண்டு மணி நேரம் குளியல் போட்டு, துணிகளைத் துவைத்து காய வைத்து விட்டு, பகல் பனிரெண்டு மணிக்கு நடக்கும் பூஜையில் கலந்து கொண்டு அவரைத் தரிசித்து விட்டு வருவேன்.

கிட்டத்தட்ட 12 வருடங்கள் ஓடி விட்டன. 

நேற்று நானும் என் குழந்தைகள் இருவரும் முள்ளங்காட்டில் இருக்கும் வெள்ளிங்கிரி சித்தர் ஜீவ சமாதிக்குப் பின்புறம் வெள்ளிங்கிரி மலையில் இருந்து வரும் ஆற்றில் குளித்து விட்டு வந்தோம்.

குளிர் தண்ணீர், மலையில் இருந்து வருகிறது. உடம்புச் சூடெல்லாம் வடிய கண்கள் சிவக்க குளித்தேன். காவிரியில் குளித்த அன்று இருந்த சந்தோஷம் நேற்று எனக்கு கிடைத்தது.

ஜோதி சுவாமி மாங்காய் சாம்பாரும், அருமையான ரசமும், முட்டைக்கோசு பொறியலும், பொங்கலும் தந்து உபசரித்தார்.

நெஞ்சம் நிறைந்து வீடு திரும்பினேன். பூண்டி வெள்ளிங்கிரி கோவிலுக்குச் செல்பவர்கள் அந்த ஆற்றில் குளியல் போடுங்கள். மூலிகைத் தண்ணீர். உடலுக்கு நல்லது அல்லவா?