குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label நட்பு. Show all posts
Showing posts with label நட்பு. Show all posts

Thursday, June 20, 2013

நட்பிற்கு மரியாதை உண்மைச் சம்பவம்

நேற்று ஆஃபீசுக்கு வரும்  வழியில் சத்திரோடு அன்னபூர்ணா ஹோட்டலின் முன்புறம் டிவிஎஸ் ஒன்று அடிபட்டு கீழே கிடந்தது. பல்சர் பைக்கில் மோதியவன் நின்று கொண்டிருந்தான். விழுந்து கிடந்தவன் கைலி கட்டி இருந்தான். ஆள் பார்க்க கிராமத்தான் போலிருந்தான். அன்னபூர்ணா செக்யூரிட்டி பார்த்துக் கொண்டிருந்தார்.  சாலையில் சென்று கொண்டிருந்தோர் ஒருவர் கூட அவருக்கு உதவி செய்ய முன்வரவில்லை. இடித்தவன் அவன் பாட்டிற்கு நின்று கொண்டிருந்தான். அடிபட்டு விழுந்தவன் அவனாகவே தட்டுத்தடுமாறி எழுந்தான். கண்களில் கண்ணீர் வடிய வலியில் துடித்தபடி எழுந்தான். வண்டியை நிமிர்த்தினான். பரிதாபத்துக்குரிய அந்த இளைஞன் அழகாய் இல்லை. அவன் ஒரு பெண்ணாக இல்லை. அவனிடம் பளபளப்பான ட்ரஸ் இல்லை. அழுக்காய் இருந்தான். இச்சமூகத்தின் மன நிலையை இச்சம்பவம் எனக்கு பளீரென சுட்டிக்காட்டியது.

தூரத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருந்தேன். என்னால் அவனுக்கு உதவ எனதுடல் ஒத்துழைக்காது. மனவலியுடன் அவன் மெதுவாக வண்டியை நிமிர்த்தி கண்ணீருடன் சென்றதைப் பார்த்துக் கொண்டிருந்தேன். பல்சர் பரதேசி எப்போதே சென்று விட்டான்.

சக மனிதன் துன்பத்தைக் கூட கண்டு கொள்ளாத உலகில் வாழ்வதை நினைத்து வேதனைதான் மண்டியது. 

எனது நண்பரொருவர் கணபதியில் வசிக்கிறார். அவருக்கு ஒரு நண்பர், அவர் ஒரு கோவில் பூசாரி. தனிக்கட்டை. கல்யாணம் ஏதும் செய்துகொள்ளவில்லை. 

அன்றைக்கு விடிகாலையில் பூசாரிக்கு நெஞ்சு வலி வந்து விட்டது. வலியில் துடித்திருக்கிறார். நம் ஆயுள் முடியப்போகிறது என்பதை அவர் உணர்ந்திருக்கிறார். அவருக்கு உதவி செய்தவர்கள் ”உங்கள் சொந்தக்காரர் யாராவது இருக்கின்றார்களா, சொல்லி அனுப்புகிறோம்” என்று கேட்க அவர், “எனது நண்பரிடம் சொல்லுங்கள், அவர் வந்தால் க் கொள்வார்” என்றுச் சொல்லி இருக்கிறார். எனது நண்பருக்குத் தகவல் வந்து பூசாரியார் இருக்குமிடம் செல்லுகையில் உயிர் போய் விட்டது. விடிகாலை 5.45க்கு உயிர் பிரிந்து விட்டது. வேறு எந்தச் சொந்தக்காரரிடம் சொல்லவில்லை. தன் நண்பரிடம் மட்டும் தகவல் சொல்லி விட்டு அவர் விண்ணுலகை அடைந்து விட்டார். 

எனது நண்பர் பூசாரி நண்பனை மரியாதையுடன் தகனம் செய்து அத்தனை செலவினையும் செய்து விட்டு வீடு திரும்பினார்.

நட்பிற்கு வீற்றிருக்கை யாதெனின் கொட்பின்றி 
ஒல்லும்வாய் ஊன்றும் நிலை. - திருவள்ளுவர் 

(நட்பின் உன்னதம் என்னவென்றால் எப்போதெல்லாம் நண்பன் துன்பப்படுகின்றானோ அவனுக்கு தன்னால் இயன்ற நிலையில் நின்று அவனின் துன்பத்தை நீக்குவது தான்  உண்மையான நட்பு)

பிசிராந்தையார், கோப்பெருஞ்சோழனின் நட்பினைப் பற்றிய சில கேள்விகள் எனக்குள் எழுந்ததுண்டு. இப்படியெல்லாம் இருக்க முடியுமா என்று கூட நினைத்தேன். 

இக்காலத்தில் நட்பினால் தான் மிகப் பெரும் பகை வளரும். கூடாத நட்பின் விளைவாக சொத்து, சுகம் இழந்தவர்கள் எண்ணற்றோர். இப்படி இருக்கும் கலிகாலத்தில் மனதை சிலிர்க்கச் செய்யும் இச்சம்பவத்தில் நானொரு சாட்சியாக இருந்தேன். அதை உங்களிடம் பகிர்ந்து கொள்ள விரும்பித்தான் இப்பதிவு.