குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, January 18, 2017

கெணத்தடிப்பாம்பு

இவனுக்கும் பாம்புக்கு ஏதோ முன் ஜென்ம பகை இருக்கிறதோ என்று உங்களுக்கு நினைவிலாடும். அப்படியெல்லாம் ஒன்றும் இல்லை. பாம்புகள் இருக்கும் இடத்தில் நான் இருக்கிறேன். அவ்வளவுதான். அதுகள் வசிக்க வேண்டிய இடங்களிலெல்லாம் மனிதர்கள் வசிக்க ஆரம்பித்தால் வேறு எங்கே செல்லும்?  நாய்கள் மாதிரி பாம்புகளும் மனிதர்களுடன் தான் வசிக்கும். வேறு வழி?

வீட்டிற்கு வருகை தரும் மயில்கள் கிட்டத்தட்ட 25க்கு மேல் இருக்கும். வீட்டின் மொட்டை மாடி மீது காலையிலும் மாலையிலும் தோகை விரித்து ஆடிக்கொண்டிருக்கும். வீட்டுக்கு வரும் நண்பர்கள் சாலையில் நின்று வேடிக்கைப் பார்ப்பார்கள். பறவைகள், முயல்கள், காடைகள், காக்காய்கள், குருவிகள், அணில்கள், சிட்டுக்குருவிகள், நாரைகள் ஆகியவைகள் வசிக்கும் இடமெல்லாம் வீடுகள் ஆகி விட்டன. அவைகளும் வேறு வழி இன்றி நம்மோடு வசிக்க ஆரம்பித்து விட்டன. 

எனது சிறு குழந்தைப் பருவத்தில் ஆழ்துளைக்கிணறுகள் இல்லை. கிணறுகளும் குளங்களுமே ஒவ்வொரு கிராமத்தின் தண்ணீர் தேவையை நிறைவேற்றின. அறிவியலின் வளர்ச்சி காரணமாக கிணறுகள் ஆழ்துளைக் கிணறாக வடிவெடுத்தன. குளங்களுக்கான தேவையும் அற்றிப் போக கொஞ்சம் கொஞ்சமாக அவைகள் காணாமல் போய்க் கொண்டிருக்கின்றன. மழையும் குறைய ஆரம்பித்தன. குளங்கள் அழிய அழிய பூமியின் தண்ணீர் வற்ற ஆரம்பித்து விட்டன. எந்தளவுக்கு தண்ணீர் வெளியில் எடுக்கின்றோமோ அந்தளவுக்கு தண்ணீர் பூமிக்குள் செல்ல வேண்டுமென்பதை மறந்து விட்டோம். விளைவு இப்போதைய தண்ணீர் பஞ்சம். எதிர்காலத்தில் என்ன ஆகுமோ என்று நினைக்கவே பயமாக இருக்கிறது.

சென்னையில் கேன் வாட்டர் தான் குடிக்கின்றார்கள். நல்ல தண்ணீர் இப்போது கிடைப்பதே இல்லை. கோவையில் நல்ல தண்ணீர் கிடைப்பது அரிதாகிக் கொண்டிருக்கிறது. தண்ணீர் சுத்திகரிப்பு இப்போது பெரிய தொழிலாக மாறி உள்ளது. இந்த ஒவ்வொரு பிரச்சினைக்கும் காரணம் நாமே. வேறொருவரை விரல் நீட்டிக் குற்றம் சொல்ல எவருக்கும் அருகதை இல்லை. ஏனென்றால் தமிழக அரசு கொண்டு வந்த அற்புதமான மழை நீர் சேகரிப்பு திட்டத்தினை இதுவரையிலும் எத்தனை வீடுகளில் செயல்படுத்தி வருகிறோம் என்று யோசித்துப் பாருங்கள். 

எடுத்துக்கொள்ள வேண்டும் என்பது மட்டுமே இப்போதைய மனிதனின் நோக்கம். கொடுப்பது என்பதை மறந்தே போய் விட்டான்.

கிட்டத்தட்ட 40 வருடங்களுக்கு முன்னால் கிராமத்துப் பெண்களின் வாழ்க்கை முறையில் ஒரு சிறு துளியை அனுபவக் கதையாக எழுதி உள்ளேன். அது மலைகள் டாட் காமில் வெளியாகி உள்ளது. படித்துப் பாருங்கள்.

இணைப்பைக் கிளிக் செய்து படித்துக் கொள்ளவும்.

நன்றி : ஆசிரியர் சிபிச்செல்வன் மற்றும் மலைகள் இணையதளம்.

Sunday, January 15, 2017

செம கிளுகிளுப்பா இருக்கு

திரு. தங்கவேல்,

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்... எனது கருத்துக்கு தாங்கள் எழுதியுள்ள பதிலை வேறு எப்படி குறிப்பிடுவது என்று தெரியவில்லை, பதில்+கட்டுரை, ஆஹா!!!!

It look like you are driven by Values and Principle, money would be a least factor to influence you, otherwise you could have accumulate lot of wealth, given the platform you have with people and ability to make money in quick succession.

I have seen few people like you are driven by ideology and like to stick to the core, probably I may also belongs to that category. Because of that I started to like your writing from 1st hour.

The diverse nature in which you touch upon life and things amaze me, each one to the depth. The completeness in which the article written should be appreciated, probable in has the sequence of Incident-your view-solution, it is a 360 degree, right ?!!!!

Probably you are WRITTING (it) away from the negative influence, the case in point is injury happened to your wife and your subsequent learning out of it. (பாதிப்புகள் வடு எடுக்கும் முன்னர் எழுத்தால் வழி எடுத்து விடுகிறீர்கள் )

I raise a point in my previous mail on whether you were writing somewhere else, is simply because this writing should reach larger Tamil community.

If possible, request you to venture out in social media, it has both consequences, but you know its reach and effect, for example the menace of adulterated oil awareness in social media bring back the age old style of extracting oil.

ஒரு சிறு தீப்பொறி காட்டு தீயாக மாறுவது போல், ஒரு சில பதிவுகள் நம் தலை முறையின் எதிர்கால போக்கை மாற்ற கூடியது. ஆகையால் தங்கள் பதிவுகள் நம் சந்ததியினரின் பெற்றோர்களுக்கு போய் சேர வேண்டும், அதற்க்கு  இந்த சமூக வலை தளம் மற்றும் பத்திரிக்கை உதவியாக இருக்கும் என்று நினைகிறேன்.

Suggestion:

*If possible kindly activate comment section in your blog, we can post anything there. These comments and feedback gives the feeling of community out there and others could learn from those feedback, essentially it will create some sort of bonding.

*you were told you write less, peg your pardon, I wonder how you allocate time for all these writing besides work commitment, which is lot of writing, keep it up.

You are really fortunate to live along western ghats and visiting foothills of Velliangiri Mountain often, those place are blessed with wisdom and you inherited lot.

We are all fortunate to live in these auspicious land, some of our fellow men is excelling in all format of life, for example Chandra (Chandrasekaran, CEO of TCS) has been promoted to head india's biggest conglomerate TATA yesterday, his journey was remarkable, he born in a small place called "Mohanur" near my native village which is adjacent to Velur(close to Karur) and his life put in to orbit only after 42. He was a simple campus recruit after finishing his graduation in NIT, Trichy and now he has to manage more $100bn of revenue !!!! buoy !!!

So for all of us nothing is impossible, lets have society which is full of humanity and brilliancy.

உங்களுக்கும் உங்கள் அம்மு, பையன் மற்றும் மனையாளுக்கும் இனிய தமிழர்/பொங்கல் திருநாள் வாழ்த்துக்கள், நன்றி  

Babu
13/Jan/2017

குறிப்பு :

பாபு, 

வாழ்த்துக்களுக்கு நன்றி. உங்கள் ஆங்கிலம் படித்துப் புரிந்து கொள்ள சிரமமாக இருந்தபோலத் தெரிந்ததால் கும்பகோணத்திலிருந்து வந்த ஒரு ஆடிட்டரிடம் காட்டி ”இவர் என்னைத் திட்டியிருக்கின்றாரா என்று படித்துச் சொல்லவும், ஆங்கிலத்தில் நமக்கு கொஞ்சம் தகராறு” என்று கேட்டேன். அவரும் படித்து விட்டு முகம் கோணலாகி என்னிடம் ”அவரொன்றும் உங்களைத் திட்டவில்லை. சஜெஜ்சன் சொல்லி இருக்கின்றார்” என்றார். ”அப்படியா?” என்று கேட்டு விட்டு போனை வாங்கிக் கொண்டேன். கொஞ்ச நேரம் கழித்து என்னருகில் வந்தவர் ”எத்தனை வருடமாக எழுதுகின்றீர்கள்?” என்று கேட்டார். ”சுமாரா எட்டு வருஷமாக எழுதுகிறேன்” என்றேன். ”அப்ப சரி, சித்தம் என்றால் என்ன?” என்று கேட்டார். 

விதி வலியது அல்லவா? எப்படி சிக்கினேன் பாருங்கள்.

அவரிடம், ”அய்யோ! அதெல்லாம் எனக்கொன்றும் தெரியாது” என அலறினேன். தொடர்ந்து, “சாமிகிட்டே கேளுங்கள், அவர் சொல்லுவார்” என்றுச் சொல்லித் தப்பித்தேன். 

சாமியிடம் கேட்டார் சிரத்தையுடன். சாமியோ ”கொஞ்சம் இருங்கள், குரு நாதரிடம் கேட்டுச் சொல்கிறேன்” என்றுச் சொல்லி விட்டார். என்ன நினைத்தாரோ இவனுங்க நம்மை ஓட்டுறானுவ போலன்னு நினைச்சா மாதிரியே எனக்குத் தோன்றியது.

அப்பாடா தப்பித்தேன். நமக்கு ஏது சித்தம் சிவனெல்லாம். கண்டதே காட்சி கொண்டதே கோலம் அல்லவா?

Thursday, January 12, 2017

மறைந்து போன பெண்களின் வாழ்க்கை முறை - கெணத்தடிப்பாம்பு

காலம் மனிதர்களின் எத்தனையோ பழக்க வழக்கங்களைத் தன்னுள்ளே இழுத்து விழுங்கி விடுகின்றது. காலம் காலமாக இருந்து வந்த மனித வழக்கங்களையும், சுவாரசியங்கள் நிறைந்த காட்சிகளையும் கூட அழித்து விடுகிறது. இதுவரை எவரும் காட்டாத ஒரு வழக்கத்தினை சிறுகதையாக எழுதி மலைகள் இணைய தளத்தில் வெளியிட ஆசிரியர் சிபிச் செல்வனுக்கு அனுப்பி இருக்கிறேன். நினைத்தாலே இன்பச் சிலீரிடும் பழைய காலத்து இயல்பு வாழ்க்கையை முடிந்த அளவு சுவாரசியமாக வித்தியாசமான தொனியில் எழுதி உள்ளேன். 114 இதழாக வெளிவரப்போகும் மலைகள் டாட் காமில் ‘கெணத்தடிப்பாம்பு’ சிறுகதை அதை உங்களுக்கு அளிக்கும் என்று நம்புகிறேன். படித்துப் பாருங்கள். இன்னும் ஒரு சில நாட்களில் 114 இதழ் வெளிவரும். 

மலைகள் இணைய இணைப்பு : www.malaigal.com

வாசகர் கடிதத்திற்கு பதிலும் வசியப் பிரச்சினையும்

திரு. தங்கவேல்,

நான் உங்கள் கட்டுரைகளை கடந்த சில நாட்களாக படித்தேன், எளிமையான, இயல்பான நடை. சற்றேக்குறைய அனைத்து கட்டுரையும் நமது வாழ்க்கையின் சுவாரசியமான நிகழ்வுகள். உங்கள் குழந்தைக்கு நீங்கள் கற்றுகொடுக்கும் பாரம்பரிய விளையாட்டுகள், TV பாதிப்புகள், தங்களுக்கும் பாம்பிற்கும் உள்ள பந்தம்(!) மற்றும் பல சட்ட விளக்கம் அனைத்தும் பல பல தலங்களுக்கு இழுத்து செல்கிறது. இருந்தாலும் திருவாதிரை உங்களுக்கு ருத்திரம் மாதிரி தான் தெரியுது? நானும் நேற்று முழுவதும் விரதம் இருந்து என் ஆதரவை தெரிவித்து விட்டேன்.

இந்த Blog தவிர வேறு எங்கேயும் எழுதுகிறீர்களா? இந்த அனுபவ பதிவுகள் மற்றும் ஆலோசனை பல நபர்களுக்கு சென்று சேரவேண்டும் என்பதே என் அவா. 

வாழ்த்துக்கள்

Babu


அன்பு பாபு அவர்களுக்கு,

மிக்க நன்றி. கடிதம் மகிழ்வைத் தந்தது. என் பிள்ளைகள் அதனைப் படித்தார்கள். அம்முவுக்கு ஆச்சரியம் தாங்கமுடியவில்லை. பையன் வழக்கம் போல மவுனச் சாமியாராக இருந்தான். மனையாளோ கடுப்படித்துக் கொண்டிருந்தார். ”என்னை வம்பு இழுக்காமல் உங்களுக்குப் பொழுது போகாதே” என்றார். “ உன்னுடன் வம்பு இழுக்காமல்,  பக்கத்து வீட்டுக்காரன் பொண்டாட்டிகிட்டேவா வம்பு இழுக்க முடியும்? விளக்குமாத்தாலே பிச்சுப்புடுவாங்க, அது உனக்கு உசிதமா?” என்று கேட்டேன்.  முறைத்தபடி சென்று விட்டார். 

சாரு ஆன்லைனில் சாருவின் கட்டுரைகளைப் படித்து சரி செய்து பதிவேற்றிய காலத்தில் எழுதலாம் என்று நினைத்து ஆரம்பித்ததுதான் எனது பிளாக். தத்தித் தடுமாறி வார்த்தைகளைக் கோர்த்து எழுத ஆரம்பித்து எட்டு வருடங்களாக தொடர்ந்து எழுதி வருகிறேன். பனிரெண்டு நாடுகளில் படிக்கின்றார்கள் என்று விசிட்டர்ஸ் லிஸ்ட் காட்டுகிறது.

மலேசிய பத்திரிக்கையில் புனைப்பெயரில் காட்டமான அரசியல் கட்டுரைகள் எழுதினேன். தற்போது நிறுத்தி விட்டேன். பரபரப்புச் செய்தி இதழில் எழுதினேன். ஆழம் பத்திரிக்கையில் எழுதினேன். திண்ணையில் எழுதினேன். சிறு இதழாசிரியனாக இருந்து மூன்று இதழ்களில் எழுதினேன். இப்போது மலைகள் டாட் காமில் எழுதுகிறேன். எனது பிளாக்கைப் பற்றி தினமலரில் செய்தி வெளியாகி இருந்தது.

ஆனாலும் பிளாக்கில் தொடர்ந்து எழுதி வருகிறேன். எழுத எவ்வளவோ இருக்கின்றன. லெளகீக வாழ்க்கைக்கு முன்னால் அடிக்கடி சோர்வு ஏற்பட்டு விடுவதால் அனைத்தையும் எழுத இயலவில்லை. எழுத்து இன்னும் வசமாகவில்லை. படிப்பவர்களுக்கு ஏதாவது ஒரு உபயோகம் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். அதனால் தேவையற்ற சொரிதல்களை எழுதுவதில்லை என்று முடிவு செய்துள்ளேன்.

வெகுஜன பத்திரிக்கைகளுக்கு சிபாரிசு முக்கியம். இல்லையென்றால் வெளியிடமாட்டார்கள். தோல் சிவப்பாக அழகாக இருந்தால் (உதாரணம் தமிழச்சி) பெண்பிள்ளையாக இருந்தால் உடனடியாக வெளியிட்டு ப்ரிவியூவும் எழுதுவார்கள். நான் ஆணாகப் போய் விட்டேன். 

வெகு ஜன பத்திரிக்கைகளில் ஆக்கங்கள் வெளியாகி கிடைக்கும் புகழினால் ஒரு கரண்டி தோசை மாவு கூட வாங்க முடியாது என்பதால் ஆர்வமில்லை. விகடன், குமுதத்தில் ஆக்கங்கள் வெளியாகினால் தலையில் இல்லாத கிரீடத்தைச் சுமப்பது போல என்னால் நினைக்கமுடியாது. வெற்றுப் புகழ் மாலைகளினால் ஒரு புண்ணாக்கும் கிடைக்காது. 

இருப்பினும் பிளாக் எழுதுவதினால் ஒரு சில சுவாரசியங்கள் நடக்கின்றன.

எழுத ஆரம்பித்த நாளில் இருந்து பல அழைப்புகள், கடிதங்கள் வந்து கொண்டிருக்கின்றன. என்ன ஒன்று? வசியமை கேட்டுத்தான் அதிக அழைப்புகள் வந்த வண்ணமிருக்கின்றன. ஆரம்பத்தில் அதைப் பற்றி எழுதி இருக்கிறேன் என்றுச் சொல்லிப் பார்த்தேன். எவரும் கேட்பதாக இல்லை. பிறகு ’ஒரு டப்பா ஒரு இலட்சம், உடனடி பலன், பணத்தை அக்கவுண்டில் கட்டுகின்றீர்களா?’ என்று கேட்க ஆரம்பித்தேன். ஓடிப்போனார்கள். பிளாக்கில் இலவசமாய் படிக்க கிடைப்பது போல வசியமருந்தும் இலவசமாய் கிடைக்கும் என்ற நப்பாசையில் இரவு பகல் பாராது அழைக்க ஆரம்பித்தனர். இப்போது கொஞ்சம் அழைப்புகள் குறைந்திருக்கின்றன.

வெளி நாட்டிலிருந்து 60 வயது பெரியவர் ஒருவர் வசியமை கேட்டு அழைத்திருந்தார். பேச ஆரம்பித்தவுடன் அவரிடம் விஷயத்தைக் கறந்து விட வேண்டுமென்ற ஆவலில் விசாரித்தேன். ஏண்டா கேட்டோம் என்று ஆகி விட்டது. அவருடன் பள்ளிப்படிப்பின் போது கூடப்படித்த பெண் மீது காதல் கொண்டாராம். ஆனால் அக்காதல் நிறைவேறவில்லையாம். இப்போது அப்பெண் அவரின் வீட்டருகில் இருக்கின்றாராம். மேட்டர் செய்ய வேண்டுமாம். இப்படித்தான் சொன்னார் ஆள். எனக்கு எப்படியெல்லாம் பிரச்சினை வருகிறது பார்த்தீர்களா? 

இவரைப் போலவே ஒரு பெண் உங்கள் ப்ளாக் அருமையாக இருக்கிறது என்று பாராட்டி எழுதினார். போனில் பேசினார். இது என்னடா வம்பாப்போச்சு என்று நினைத்துக் கொண்டு பேச ஆரம்பித்தேன். கடைசியில் வசிய மை கிடைக்குமா என்று கேட்க ஆரம்பித்தார். மாமா பையனை வசியம் செய்ய வேண்டுமாம். அவன் இந்தப் பெண்ணைக் காதலித்து மேட்டர் முடித்து விட்டு எஸ்கேப்பாகி விட்டானாம். இப்போது வேறு பெண்ணைக் காதலிக்கின்றானாம். பெரிய மனது வைத்து உதவி செய்ய வேண்டுமென்று கேட்க ஆரம்பித்தார். 

கோவையில் மாந்திரீகர் ஒருவர் சினிமா பிரபலங்களுக்கு வசிய மை விற்றே கோடிக்கணக்கில் சம்பாதித்தார் என்று ஏதோ ஒரு பிளாக்கில் எழுதி இருந்தார்கள். அது போல நாமும் ஆரம்பித்து விடலாமா என்று கூட யோசித்தேன். மாதம் குறைந்த பட்சம் ஒரு லட்சம் கல்லா கட்டி விடலாமென்று கூட நினைத்தேன். மனசு ஒப்பவில்லை. இது ஒரு பக்கம் இருக்கட்டும்.

வசிய மை உண்மைதானா? என்று கண்டுபிடிக்க ஆர்வம் ஏற்பட்டது. பல புத்தகங்களை வாங்கிப் படித்தேன். பல வசிய மை ஆட்களைச் சந்தித்து பேசினேன். மதி முக்கால் மந்திரம் கால் என்று தான் அனைவரும் சொன்னார்கள். ஃபேஸ்புக்கில் கூட அந்த மூலிகையை வைத்தால் வசியம், அதை இப்படிச் செய்தால் வசியம் என்று எழுதி வருகின்றார்கள். இதெல்லாம் உண்மையா என்று அறிய முயற்சித்தேன். ஒரு கண்றாவியும் இல்லை. எல்லாம் ஏமாற்று வேலை என்று கண்டு கொண்டேன். 

தேடினால் கிடைக்கும் என்பார்களே அதைப் போல ஒரு மந்திரவாதி எனக்கு அந்த வித்தையைக் கற்றுக் கொடுத்தார். மருந்தும் தேவையில்லை. மண்ணாங்கட்டியும் தேவையில்லை. சிறிய விஷயம் தான். யார் கற்றுக் கொடுத்தாரோ அவரே என்னிடம் பரீட்சித்துக் காட்டினார். அசந்து தான் போனேன். மூன்றாவது நாளில் எவரை வசியம் செய்ய விரும்புகிறோமோ அவரே வந்து காதலைச் சொல்லி விடுவார். அந்தளவுக்கு அந்த வசிய வித்தை களேபரமானது. கற்ற பிறகு பரீட்சித்துப் பார்க்க எனக்கு ஆர்வமில்லை. நம்மைப் போன்றே ஆசா பாசங்கள் ஆசைகள் கொண்டு ஜீவனை ஆசைக்காக அழிப்பது எவ்வளவு கொடூரமானது என்று நினைக்கையில் இது போன்ற வித்தைகளின் மீது எரிச்சல்தான் வந்தது. சக மனிதனை அழித்துதான் சந்தோஷம் பெற வேண்டுமா? தேவையே இல்லை அல்லவா? ஆகையால் அந்த விஷயம் அத்தோடு முற்றிற்று.

நிலம் பற்றிய தொடர் பல பேருக்கு உபயோகப்படுகிறது என்று நினைக்கிறேன். பலரும் அணுகி தங்கள் சொத்துப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்கின்றார்கள். பட்டா மாறுதல், சொத்துக்களின் ஆவணம், காணாமல் போன சொத்துக்களை மீட்பது போன்றவைகளுக்காக அணுகுகின்றார்கள். முடிந்தவரை செய்துகொடுக்கிறேன். அமெரிக்காவில் இருக்கும் ஒரு வாசகர் கம்பெனி ஆரம்பித்து விடுங்கள். நான் இன்வெஸ்ட் செய்கிறேன் என்று தொடர்ந்து பேசி வருகிறார். பணம் பல விஷயங்களைக் கொன்று போடும் தன்மை மிக்கது. செய்யலாமா? செய்யக்கூடாதா? என்று யோசனையில் இருக்கிறேன். நம்பி வருகின்றவர்களுக்கு ஏதும் தவறு நடந்து விட்டால் அதை என்னால் தாங்கிக் கொள்ளவே முடியாது. 

வாசகராய் வந்து இப்போது எனது தோழராக மாறிய ஒருவர் வாழ்க்கையில் எனது பிளாக் மாறுதலை ஏற்படுத்தி உள்ளது என்று அடிக்கடி சொல்லிக் கொண்டிருப்பார். மகிழ்ச்சியாக இருந்தது.

இந்த பிளாக் எழுதுவதன் பலன் இப்படித்தான் இருக்கின்றன. படிப்பவர்களுக்கு ஏதாவது உருப்படியாக தகவலோ அல்லது மன நெகிழ்வோ, சந்தோஷமோ ஏற்பட வேண்டுமென்பது தான் எனது நோக்கம். அந்த வகையில் உங்கள் கடிதம் அதைக் கட்டியம் கூறுகிறது. மிக்க மகிழ்ச்சி.

தொடர்ந்து படியுங்கள். சந்தோஷமாக வாழுங்கள். அது ஒன்றே எனக்குப் போதுமானது.

Wednesday, January 11, 2017

திருவாதிரை விரதம்

அம்மு பிறந்த பிறகு தான் திருவாதிரை விரதம் பற்றித் தெரிய வந்தது. தஞ்சை வடிகால் பகுதியிலிருக்கும் எங்களூரில் திருவாதிரை விரதத்தை செட்டியார்கள் தான் பிடிப்பார்கள் என்று அம்மா சொல்லிக் கொண்டிருந்தார். எங்களூரில் திருவாதிரை என்றால் என்ன என்று கேட்பார்கள். முதன் முதலாக மாமியார் வீட்டிலிருந்து ஏழு கறி கூட்டும் திருவாதிரைக் களியும் வந்தது. புத்தம் புதிய சுவையில் முதன் முதலாக சுவைப்பதால் வெகு அருமை என்றுச் சொல்லி விட்டேன். மெதுவாகப் பேசும் வழக்கமே இல்லையாதலால் சற்றே உரக்கச் சொல்லி அது மாமியார் காதிலும் விழுந்து விட்டது. மனையாள் முறைத்துக் கொண்டிருந்தார். அவரவருக்கு சில பிரச்சினைகள் இப்படி உண்டாகி விடுகின்றன. உண்மையைக்கூட உரத்துச் சொல்லி விட முடியாத ஒரு சில தருணங்களில் இதுவும் ஒன்று.

இப்படித்தான் நான் குடும்பத்தோடு உறவினர் ஒருவர் வீட்டிற்கு விருந்தாளியாகச் சென்றிருந்தேன். மட்டன் குழம்பும், ஆம்லேட்டும் மனையாள் செய்திருப்பார் போல. மதியம் அனைவரும் சாப்பிட்டுக் கொண்டிருந்த போது உறவினர் மட்டன் குழம்பு அருமை அதை விட ஆம்லேட் சூப்பர் என்று ஐஸ் வைத்துக் கொண்டிருந்தார். ஆண்கள் எப்போதும் மாறுவதே இல்லை. 

இரவு உணவின் போது  மட்டன் குழம்பை தொட்டு இட்லியோடு நாக்கில் வைத்தேன். நம்பவே மாட்டீர்கள். தீக்கங்குவை எடுத்து நாக்கில் வைத்தது மாதிரி இருந்தது. அவ்வளவு மிளகாய்ப்பொடி. உறவினர் கண்களில் கங்கை கொட்டிக் கொண்டிருந்தது. மதியம் நன்றாக இருக்கிறது என்றுச் சொன்ன மட்டன் குழம்பு இரவில் சரியில்லை என்று எப்படிச் சொல்வது? மாட்டிக் கொண்டார். எனக்கல்லவோ தெரியும் விஷயம்? உறவினரின் மனைவி ’சப்புக்கொட்டிக்கிட்டா சாப்பிடுகிறாய்’ என்று மிளகாயைக் கொட்டி குழப்பி வைத்து விட்டார். 

எதை எங்கு எப்படிச் சொல்கிறோம் என்பதில் தான் வித்தையே இருக்கிறது. மனையாளின் உறவினர் வீட்டில் சாப்பிடப் போய் சப்பாத்தியும் குருமாவும் நன்றாக இருக்கிறது என்று பாராட்டி விட்டேன். பைக்கில் வீடு வந்து சேரும் வரை இடுப்புச் சதை கன்னிப் போய்க் கிடந்தது. வீட்டுக்கு வந்து எரிச்சல் தீர களிம்பை எடுத்து தடவலாம் என்று நினைத்து மகளிடம் வெகு நிதானமாக ’களிம்பை எடுத்து வா’ என்றுச் சொன்னேன். பய மக, விக்ஸை எடுத்து வந்து தர நானோ ஏதோ நினைப்பில் எடுத்து எரிச்சல் வந்த இடத்தில் தடவ உடம்பெங்கும் எரிச்சலுடன் வலியும் சேர்ந்து பரவ சப்பாத்தியும் குருமாவும் போன இடம் தெரியவில்லை. அத்தோடு முடிந்த அந்த உறவினர் வீட்டுக்குச் செல்வது. ஆனால் மனையாள் சென்று வருவார். அங்கு செல்லும் சந்தர்ப்பம் கிடைத்தாலும் தவிர்த்து விடுவேன். எதற்கு வம்பு? என் மகள் இருக்கிறதே சரியான வம்புப் பேர்வழி. நான் அங்கு ஏதாவது சொல்லி இடுப்புக் கிள்ளப்பட அம்மு ஆசிட்டைக் கொண்டு வந்து ஊற்றி விடும். திட்டவா முடியும்? வேதனை எனக்கல்லவோ?

இப்படியான ஒரு சில அனுபவங்களின் காரணமாக இப்போதெல்லாம் சைகை காட்டி விடுவதுண்டு. இருந்தும் ஒரு இடத்தில் கையும் களவுமாக மாட்டிக் கொண்டேன். அதை எழுதினால் வேறு ’ரசப்பார்வை’ வந்து விடும் என்பதால் விட்டு விடுகிறேன். நானென்ன சாருவா? மதனகாமராஜா கதை எழுத?

இன்றைக்கு விடிகாலை மூன்று மணிக்கே துயிலெழுந்து விட்டேன். துயிலெழும்போதே சரகலைப்படி மூச்சு எந்தப் பக்கம் ஓடுகிறது என்று கவனித்து அது சரியில்லை எனில் சரி செய்துதான் எழுவேன். இல்லையென்றால் எனக்கு அன்றைய நாள் சரியான ரகளையான நாளாக போய் விடும். சரகலையை ஓரளவு தெரிந்திருப்பதால் இப்போதெல்லாம் கொஞ்சம் ஃப்ரீயாக இருக்க முடிகிறது.

நேற்றே எனது அய்யர் நண்பரை அழைத்து திருவாதிரை எப்போது ஆரம்பிக்கிறது எத்தனை மணிக்குள் சாமி கும்பிட வேண்டுமென்று விசாரித்துக் கொண்டிருந்தார் மனையாள். 

காய்கறிகள், முட்டைக்கோஸ் மற்றும் உருளை பட்டாணி கூட்டு, தக்காளி, வெங்காயம், இஞ்சி, மிளகாய் எல்லாம் சுத்தம் செய்து தேங்காய் திருகி எடுத்துக் கொடுத்து விட்டு காலைக் கடன்களை முடிந்து வெளி வந்தால் அடுப்பில் சட்டியேற்றி சமைப்பது என்ற பெரிய வேலையை நிரம்பவும் துன்பப்பட்டு துயரப்பட்டு வியர்க்க விறுவிறுக்க சமைத்துக் கொண்டிருந்தார் மனையாள். ஏழு மணிக்குள் எல்லாம் தயார்.

பூஜை அறைப்பக்கம் போகவே இல்லை. தீபத்தட்டு வெளியில் வர தொட்டு கண்ணில் ஒற்றிக் கொண்டேன். கையில் மஞ்சள் கயிறு கட்டப்பட்டது. நாம் கழுத்தில் கட்டுவோம். திருவாதிரை அன்றைக்கு நம் கையில் கட்டுவார்கள். 

சாப்பிட உட்கார்ந்தோம். உப்பு, ஊறுகாய், அப்பளம், முட்டைக்கோஸ் பொறியல், உருளை பட்டாணிக்கூட்டு, திருவாதிரைக் களி, ஏழு கறிக் கூட்டு பரிமாறப்பட்டது. 

”அப்பா, களி எப்படி இருக்கிறது?” என்று அம்மு கேட்க நானோ எப்போதும் போல வேறு எங்கோ இருக்கிறோம் என்ற நினைப்பில் “சூப்பரா இருக்கு அம்மு!” என்றுச் சொல்லி விட்டேன். 

“அம்மு! இதே வாய் தான் சொல்லுச்சு எங்க அம்மா செய்யுற களிதான் சூப்பரா இருக்குன்னு” என்றார் மனையாள்.

மனதுக்குள் திகீர் என்றது. இதைத்தான் திருடனுக்கு தேள் கொட்டுவது என்பார்களோ என நினைத்துக் கொண்டேன். எத்தனை ஆண்டுகளானாலும் ’வெச்சு செய்யுறதுன்னு’ இதைத்தான் சொல்வார்கள் போல. பதினோறு வருஷமாச்சு நான் அந்த வார்த்தைகளைச் சொல்லி. எத்தனை வருடம் ஆனாலும் தான் என்ன? வாயிலிருந்து வெளியேறின வார்த்தைக்கு ஒரு வலிமை எப்போதும் உண்டல்லவா? 

ஆகவே நண்பர்களே! சொல்வதைச் சொல்லி விட்டேன். எங்கு எதை எப்படிப் பேசுகிறோம் என்பதை என்றைக்கும் மறந்து விடாதீர்கள்.

திருவாதிரைக் கொண்டாடி விட்டீர்கள் தானே??? சிவனுக்கு உகந்த நாளாம் இது. மாலையில் சிவன் கோவிலுக்குச் சென்று வாருங்கள்.

Tuesday, January 10, 2017

தொலைக்காட்சியின் கொடூரம்

வீட்டிற்குள் இருக்கும் பொருட்களை ஒவ்வொன்றாக கவனித்தால் அப்பொருள் ஏதோ ஒரு தொலைக்காட்சி வழியாக நமக்குள் புகுந்து வீட்டுக்குள் வந்து இருக்கும். துணி துவைக்கும் சோப்பிலிருந்து சானிட்டரி நாப்கின் வரை ஒவ்வொரு பொருளும் டிவி மூலமாகத்தான் விற்கின்றார்கள். டிவி என்பது பொழுதுபோக்கு என நீங்கள் நினைத்துக் கொண்டிருப்பது தவறு. அது ஒரு மார்க்கெட்டிங்க் சாதனம். அதுமட்டுமா அந்த மார்க்கெட்டிங்க் செய்யும் டிவியை நாமே விலைகொடுத்து வாங்கி மாதா மாதம் அதற்கு சம்பளம் வேறு கொடுத்துக் கொண்டிருக்கிறோம். யாரோ ஒருவரின் பொருளை விற்பதற்கு நாம் செலவு செய்து ஏமாந்து கொண்டிருக்கிறோம். வீட்டிலுள்ள பொருட்களின் அவசியத்தினை யோசித்துப் பார்த்தால் தேவையில்லாத பொருட்கள் தான் வீடு நிறைய கிடக்கும். வாங்கிய நொடியிலிருந்து அப்பொருளின் மதிப்பு என்னவாக இருக்கும் என்று யோசித்துப் பாருங்கள். 

ஆறு இலட்ச ரூபாய் போட்டு வாங்கும் காரின் விலை, வாங்கிய அடுத்த நொடியில் குறைந்து விடுமா இல்லையா? கார் பயன்படுத்தத்தான் வாங்குகிறோம் ஆனால் அதன் மதிப்பு? அதுமட்டுமா காரைத் தொடர்ந்து அதற்கு பொண்டாட்டிக்குச் செய்யும் செலவை விட அதிகமல்லவா செலவழிக்கின்றோம். யோசித்துப் பாருங்கள். காருக்கு ஆகும் செலவு கொஞ்சமா நஞ்சமா? 

ஒரு ரூபாய் செலவு செய்தால் அதன் பயன் என்ன என்று யோசித்துப் பாருங்கள். அந்த ஒரு ரூபாயைச் சம்பாதிக்க நாம் படும் பாடு என்ன என்று நினைத்துப் பாருங்கள். கையில் காசு இல்லாமல் இருக்கும் போது தான் காசு சம்பாதிக்க நாம் என்னவெல்லாம் இழந்திருக்கிறோம் என்று புரியவரும். 

எனக்கொரு தோழி இருக்கிறார். வாரம் தோறும் நகைக்கடை செல்பவர். டிசைனர் சாரி தான் உடுத்துவார். ஒரு நாள் அவரைச் சந்தித்தபோது காட்டன் சேலையில் எளிமையாக இருந்தார். கண்கள் விரிய அவரை நோக்கிய போது புரிந்து கொண்டு, ”தங்கம், ஒரு நாள் இருப்பந்தையாயிரம் ரூபாய்க்கு சேலை எடுத்து அணிந்து கொண்டு திருமண விழாவிற்குச் சென்றேன், பெருமையாக இருந்தது. எல்லோரும் என்னைப் பார்க்கின்றார்கள் என்று தற்பெருமை தாங்க முடியவில்லை. படியில் ஏறிக் கொண்டிருந்த போது கால் வழுக்கி விழுந்தேன். அந்தச் சேலை நார் நாராகக் கிழிந்து விட்டது. அத்தோடு அனைவரும் வேடிக்கைப் பார்க்கும்படி கேவலமாகப் போய் விட்டது. அங்கு வந்திருந்த ஒரு பாட்டி 250 ரூபாய்க்கு ஒரு காட்டன் சேலை வாங்கிக் கட்டிக் கொண்டிருந்தால் இந்த அசிங்கம் தேவையா? ஊர் முழுக்க உன் உடம்பைப் பார்த்து விட்டார்களே, இந்தச் சேலையை புத்திசாலிப் பெண் எவராவது வாங்குவாரா? என்று கேட்டார். எனக்கு அந்த நொடியில் யாரோ சம்மட்டியால் அடித்தது போல இருந்தது. என்னதான் தேய்த்து தேய்த்துக் குளித்தாலும் குளித்து முடித்த அடுத்த நொடியிலிருந்து நம் உடம்பு நாற ஆரம்பித்து விடுகிறது தங்கம். வீட்டுக்கு வந்து பீரோவைத் திறந்து கணக்கெடுத்துப் பார்க்கிறேன் கிட்டத்தட்ட அரை கோடி ரூபாய்க்கு புடவைகள். எல்லாம் இன்னும் கொஞ்ச நாளில் நாராய் கிழிந்து போய் விடும். நிலம் வாங்கிப் போட்டிருந்தாலும் விலை ஏறி இருக்கும். ஏதோ உபயோகமாக இருக்கும். ஆனால் இந்தப் புடவைகளால் எனக்கு என்ன பயன்? யோசித்தேன், இதோ இப்போது நீங்கள் பார்க்கும் நான், அனுபவம் தான் கற்றுக் கொடுக்கிறதுப்பா!” என்றார்.

இந்த டிவியைப் பற்றி எனது அனுபவத்தைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.

சிறிய வயதில் டியூசன் சென்று விட்டு வரும் போது வி.எஸ்.எம். ராவுத்தர் வீட்டில் பாசமலர் படம் ஓடிக் கொண்டிருந்தது. கருப்பு வெள்ளை டிவியில் டெக் போட்டு தீன் மியூசிக் கடையில் கேசட் எடுத்து வந்து அந்த வீட்டிலிருந்தோர் படம் பார்த்துக் கொண்டிருந்தனர். நான் வேண்டா விருந்தாளியாகச் சென்று படம் பார்க்க உட்கார்ந்து கொண்டேன். ஆயிற்று மணி ஒன்பது. ஏழு மணிக்குள் வீட்டுக்கு திரும்பி வரும் பையனைக் காணவில்லை என்று ஊர் முழுக்க வலை வீசி தேடி இருக்கின்றார்கள். டியூசன் வாத்தியார் ஜோசப் வீட்டுக்கு ஆள் சென்று விசாரித்து வந்திருக்கின்றார்கள். வீட்டில் பெரிய ரகளை நடந்து கொண்டிருப்பது தெரியாமல் நான் படம் முடிந்து வந்து சேர்ந்தேன். அருகிலிருந்து பூவரசு மரத்துக் குச்சியை பிடுங்கி எடுத்து விளாசு விளாசுன்னு விளாசிவிட்டார் மாமா. 

அடுத்த ஒரு வாரத்தில் டயனோரா டிவி வந்து விட்டது. பெரிய ஆண்டனாவிலிருந்து வயர் போட்டு கருப்பு நிறத்தில் கதவுகள் கொண்ட டயனோரா டிவிக்கு புதிய மேஜை ஒன்று அடித்து அதில் வைத்து விட்டார்கள். அடியேன் தான் டிவி ஆபரேட்டர். 

கபடி விளையாடுவது, பம்பரம் விடுவது, பல்லாங்குழி ஆடுவது, தாயக்கட்டை உருட்டுவது,  பட்டம் விடுவது, மீன் பிடிக்கச் செல்வது, நவாப்பழம் பறிக்கச் செல்வது, தட்டான் பிடிப்பது, பொன் வண்டு பிடிப்பது, ஒளிந்து விளையாடுவது இப்படி அனைத்து விளையாட்டுக்களையும் டிவி தனக்குள் இழுத்துக் கொண்டது. பள்ளி, டியூசன் விட்டு வீடு வந்ததும் டிவி. 1991 வாக்கில் மதியம் போல சன் டிவி ஆரம்பிப்பார்கள். பதினோறு மணி வரை டிவி பார்ப்பேன். படிப்பதில்லை, தட்டைப் பார்த்துச் சாப்பிடுவதில்லை. இப்படி பல வேலைகள் அனைத்தும் டிவியின் முன்னாலே முடங்கிப் போயின. கிணற்றடியில் நானே தயார் செய்திருந்த தோட்டம் தண்ணீர் ஊற்றாமல் காய்ந்து போய் கருகிப் போயின. அந்தளவுக்கு டிவி என்னை ஆக்ரமித்திருந்தது. இது நாள் வரை யோசித்துப் பார்க்கிறேன் டிவியால் நான் பெற்றது என்ன என்று ஒரு எழவும் புரியமாட்டேன் என்கிறது. டிவியால் எனக்கு என்ன நன்மை கிடைத்தது என்று யோசித்தால் என் மீதே எனக்கு எரிச்சல் வருகிறது. எவ்வளவு முட்டாளாய் இருந்து விட்டோம் இத்தனை நாளாக என்று மீண்டும் மீண்டும் எரிச்சல் வருகிறது. 

எல்லா வீட்டிலும் முக்கிய அங்கத்தினராக டிவி மாறிப் போய் விட்டது. எங்களூர் பக்கம் சித்தி சீரியலில் ஒரு பெண் இறந்து போனதற்காக பெண்கள் ஒப்பாரி வைத்து அழுது குளத்தில் குளித்து விட்டு வந்தார்கள் என்றுப் பேசிக் கொண்டார்கள். புருஷன்கள் எவரும் ஒன்பது மணி வரை வீட்டுப்பக்கம் செல்வதில்லையாம். ஊரெல்லாம் கருப்பு வயர்கள் தொங்கின. வீடெல்லாம் டிவிக்கள். மாலை நேரங்களில் பெண்கள் எவரும் வீட்டை விட்டு வெளியில் வருவதே இல்லை. நகரங்களில் சொல்லவே வேண்டாம்.

பிள்ளைகள் கார்ட்டூன் சானல்களில் உட்கார்ந்து விட்டார்கள். பெண்டுகள் நாடகம் பார்க்கின்றன. இளசுகள் கிரிக்கெட் பார்க்க உட்கார்ந்து விடுகின்றார்கள். வயதானவர்கள் காலையிலிருந்து இயற்கை மருத்துவத்திலிருந்து பழைய சினிமா பாடல்கள் வரை பார்க்க ஆரம்பித்து டிவியின் முன்னால் தங்கள் உடல் நலத்தையும், வாழ்க்கையையும் முடக்கி விட்டார்கள். இனி டிவி இல்லாமல் எவரும் வாழவே முடியாது என்கிற நிலைக்குச் சென்று விட்டார்கள். இறைவனைக் கூட டிவியில் பார்த்து விடுகின்றார்கள். கோவில்களுக்குச் செல்லும் வழக்கங்கள் கொஞ்சம் கொஞ்சமாக குறைந்து வருகின்றன.

அமைதியாக உட்கார்ந்து யோசித்துப் பாருங்கள். டிவியினால் நாம் பெறுவது என்ன? பொழுது போக வேண்டுமா? ரேடியோவை ஆன் செய்து திருச்சி ரேடியோ கேளுங்கள். மறந்தும் எஃப்.எம்மைக் கேட்டு விடாதீர்கள். காதுக்குள் பூகம்பத்தை ஏற்படுத்தி நாளடைவில் உங்கள் காது ஜவ்வினைக் கிழித்து மருத்துவமனைக்கு அனுப்பி விடுவார்கள். ரேடியோ மிர்ச்சி செந்தில் தன் முதல் மனைவியை விவாகரத்து செய்து தன்னுடன் நடித்த பெண்ணைக் காதலித்து இப்போது அந்தப் பெண்ணை டிவியில் நடிக்க வைத்து பணம் சம்பாதிக்கிறார். எஃப். எம்மைக் கேட்ட நீங்கள் கேனயர்களாக இருப்பது மட்டுமல்ல நேரத்தையும் இழந்து இருக்கின்றீர்கள். எனக்கு எப்போது எஃப். எம் ரேடியோ கேட்டுப் பழக்கமே இல்லை. 

டிவியில் விவாதம் ஆரம்பித்த காலத்தில் பார்ப்பதுண்டு. இப்போது செய்தி சானல்கள் பக்கம் திரும்புவதே இல்லை. தினசரி படிப்பதுண்டு, வாரப்பத்திரிக்கைகள் படிப்பதுண்டு. அத்துடன் நிறுத்தி விடுகிறேன். அவ்வப்போது டிஸ்கவரி சானல், ஆங்கில மொழி படங்கள் (அதுவும் சப்டைட்டில் இருந்தால் தான்) பார்க்கிறேன். குழந்தைகளும் அப்படியே. வீட்டில் நாடகம் பார்க்க மாட்டார்கள். புத்தகம் படிப்பதுண்டு, பசங்களுக்கு நூலகத்திலிருந்து புத்தகம் எடுத்துப் படிக்கவும், பம்பரம் விடுவது, தாயம் விளையாடுவது, தோட்ட பராமரிப்பு என்று பழக்கப்படுத்தி உள்ளேன். 

பெண்களுக்கு முக்கியமாக ஒன்றைச் சொல்ல வேண்டும். டிவியில் ஒளிபரப்பாகும் சமையல் நிகழ்ச்சிகளை முற்றிலுமாக தவிர்த்து விடுங்கள். சுத்த பைத்தியக்காரத்தனமான நிகழ்ச்சி என்று ஒன்று இருந்தால் அது சமையல் நிகழ்ச்சியைத் தவிர வேறு எதுவும் இல்லை. செஃப் தாமோதரன் சமையல் குறிப்புகளைப் பின்பற்றினால் விரைவில் எமலோகத்திலிருந்து உங்களுக்கு ஓலைதான் வரும். செஃப் வெங்கடேஷ் பட்டின் குறிப்புகளைப் பின்பற்றி சமைத்தீர்கல் என்றால் மருத்துவமனைகள் உங்களை வா வா என வரவேற்க ஆரம்பிக்கும். வீட்டில் நம் காலத்தில் எப்படி சமைத்து உண்டார்களோ அதைப் போல சமைத்துக் கொடுங்கள்.

தொலைக்காட்சி பெட்டி எனும் கொலைக்காட்சிப் பெட்டியை அவ்வப்போது திறப்பதோடு நிறுத்திக் கொள்ளுங்கள். இல்லையென்றால் அது உங்கள் குடும்பத்தின் நலத்தையும் குடும்பத்தையும் கொன்றொழித்து விடும் என்பதை மறவாதீர்கள்.

Saturday, January 7, 2017

வாழைதோட்ட அய்யன் கோவில்

பூச்சியூரில் சுருட்டையை பரலோகத்திற்கு அனுப்பிய வயதான போலீஸ்காரர் ”வாழைத்தோட்டத்து அய்யன் கோவிலுக்குச் சென்று விட்டு வாருங்கள்” என்றுச் சொன்னார். ”அது எங்கே இருக்கிறது? என்ன விஷயம்?” என்று கேட்ட போது ”பாம்புகள் வந்தால் அய்யன் கோவிலுக்குச் சென்று வந்தால் பாம்புகள் மீண்டும் வராது” என்றார். 

தினமும் பாம்பு இருக்கிறதா என்று பார்த்து விட்டுத்தான் வண்டியை வெளியில் எடுப்பது. பையன் பூண்டை நசுக்கி உள்ளே வைத்திருந்தான். வண்டியைச் சுற்றிலும் உப்பினைப் போட்டு வைத்திருந்தான். ஆனாலும் அந்த சிலீர் பயம் இருந்து கொண்டே தானிருக்கிறது. 

வீட்டின் இடது பக்கமும் மேற்கு பக்கமும் திறந்த வெளி. அதுமட்டுமில்லாமல் முயல்கள், மயில்கள், கிளிகள், பல்வேறு பறவைகள், குயில்கள் போன்ற பறவைகள் தங்கி இருக்கின்றன. இதன் கூட அணில்கள், ஓணான்களும் வேப்பமரத்தில் குடியிருக்கின்றன. வாசலில் தண்ணீர் தெளித்தால் ஆங்காங்கு தேங்கிக் கிடக்கும் தண்ணீரில் அலகுகளை விட்டு தண்ணீரைச் சிதறியடித்து அந்தத் தண்ணீரில் குளிக்கும் பறவைகள் கூட்டமொன்றினை வாசற்படியிலிருந்து வேடிக்கைப் பார்ப்பதுண்டு. அனைத்துப் பறவைகளுக்கும் அரிசியும் தண்ணீரும் எப்போதும் வைப்பதுண்டு. 

வெள்ளை வெளேர் நாயொன்று வீட்டு வாசலில் படுத்திருக்கும். சமீப காலமாக அதற்கு இரவில் மட்டும் சாப்பாடு வைக்கிறார். நாங்கள் வீட்டில் இல்லையென்றால் அது வாசலில் படுத்து இருக்கும். பின் எங்கே போகிறது எப்போது திரும்ப வருகிறது என்றெல்லாம் தெரியாது. இப்படியான சூழல் கொண்ட வீட்டில் பாம்புகளுக்கு மட்டும் தடை விதிப்பது ஏன் என்ற கேள்வியுடன் இருந்தேன்.

நான்கைந்து நண்பர்கள் வாழைத்தோட்டத்து அய்யனைச் சந்தித்து விட்டு வாருங்கள் என்றுச் சொல்லிக் கொண்டே இருந்தார்கள். விளாங்குறிச்சியிலிருந்து சிங்கா நல்லூர் வழியாக திருச்சி சாலையைப் பிடித்து, வீரபாண்டி பிரிவு தாண்டி சூலூர் வழியாக சோமனூர் நான்கு முக்கு சாலையிலிருந்து சாமளாபுரம் செல்லும் சாலையில் வண்டியைத் திருப்பி, அங்கிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரம் சென்று வலது புறம் திரும்பி அங்கிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரம் சென்றால் வாழைத்தோட்டத்து அய்யன் கோவில் இருக்கிறது.

(வாழைதோட்ட அய்யன் கோவில் கருவறை)

நல்லவேளை வீல் சேர் இருந்தது. உள்ளே சென்று அய்யன் அருகில் அமர்ந்து தரிசனம் செய்து விட்டு புற்று நீர் எடுத்துக் கொண்டு வந்து சேர்ந்தோம். அய்யன் அந்தப் பகுதியில் மிகவும் பிரபலம். பாம்பு கடி, தேள்கடி போன்றவற்றிற்கு அய்யனின் புற்று நீர் அருமருந்து. இணையத்தில் தேடியபோது அய்யனின் வரலாறு தினமலர் டாட் காமில் கிடைத்தது. 

இணைப்பினைக் கிளிக் செய்து படித்துக் கொள்ளுங்கள். படம் உதவி தினமலர்.

வீடு வந்து சேர்ந்து புற்று நீரை வீட்டைச் சுற்றிலும் தெளித்து வைத்தார் மனையாள். 

“பாம்புகளே கொஞ்சம் விலகியே இருங்கள். பார்த்தாலே நடுக்கம் எடுக்கிறது” என்று மனதுக்குள் சொல்லிக் கொண்டேன்.

வாழைத்தோட்டத்து அய்யன் ஆசீர்வதிப்பார் என்ற நம்பிக்கையுடன் !

Thursday, January 5, 2017

பாம்பு உடன் பயணம்

வாசலின் வடமேற்கு மூலையில் மண்வெட்டி இருந்தது. அதை எடுக்கச் சென்ற போது அதன் கீழே சுருண்டு கொண்டு படுத்திருந்தது அது. கட்டம் கட்டமாக நல்ல தடியாக இருந்தது. அலறிய அலறலில் அந்தப் பாம்பு பரலோகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பத்து வயதில் முதன் முதலாக தனியாக பாம்பு பார்த்த அனுபவம் மனதுக்குள் பயத்தினை எழுப்பி விட்டு விட்டது. பாம்பின் மீது அன்றிலிருந்து பயம் தொடர ஆரம்பித்தது.

வீட்டுக்கு மேல்புறம் செடி கொடிகள் மண்டிய நிலம் இருந்தது. அதன் வடமேற்கு மூலையில் பாம்புப் புற்றொன்று இருந்தது. அந்தப் பக்கம் எட்டிக்கூட பார்க்கமாட்டேன். பாம்புப் புற்று இருந்த இடத்திற்கு வடபுறம் என் வகுப்புத் தோழன் பழனிவேலின் தென்னந்தோப்பு இருந்தது. யாரும் அந்தப் பக்கம் வரமாட்டார்கள் ஏனென்றால் அந்தப் பாம்பு புற்றுக்குள் நாகங்கள் இருக்கின்றன என்று சொல்லக் கேள்வி.

ஒரு முறை வீட்டின் பின்புறத்தில் மாடுகள் கட்டி இருக்கும் வேப்பமரத்தடியைத் தாண்டி இருக்கும் முருங்கைமரத்தின் அருகில் காரப்பழம் மரம் இருந்தது. அதில் பழம் பறிக்கச் சென்றேன். அந்த இடத்தில் சிறிய எலுமிச்சை செடி ஒன்றிருந்தது. அதன் அருகில் ஏதோ அசைவது போலத் தெரிந்தது. தூர இருந்தபடி கல்லைத் தூக்கி அந்தப் பகுதியில் வீசினேன். திடீரென்று தலையைத் தூக்கி படமெடுத்து மிரட்டியது நாகப்பாம்பு. அவ்விடத்தில் இருந்த அடியேனை அடுத்த நொடி காணவில்லை. வீட்டுக்குள் வியர்க்க விறுவிறுக்க உட்கார்ந்திருந்தவனுக்கு, ”உனக்கு மட்டும் ஏண்டா இப்படியெல்லாம் நடக்குது” என்ற திட்டு கிடைத்தது. நானா அதுகளைத் தேடிப்போய் வம்பிழுக்கிறேன். அதுகள் அல்லவா என்னுடன் வம்பிழுக்க வருகின்றன? 

நல்ல மழை பெய்து வீட்டின் வடபுறமுள்ள கிணற்றின் வாய் வரைக்கும் தண்ணீர் நிரம்பி இருந்தது. அந்த தண்ணீர் பால் போல இருக்கும். குளிப்பதற்கு தண்ணீர் இறைக்கச் சென்ற போது அதற்குள் நல்ல நீளமான அது குளியல் போட்டுக் கொண்டிருந்தது. பூட்டைக்கயிற்றில் தட்டுக்கூடையை வைத்து அதன் மீது வைக்கோல் போட்டு உள்ளே விட்டபோது நீச்சல் அடித்தது போதும் என்று கருதி தட்டுகூடையில் ஓய்வெடுக்க வந்து விட்டது. மெல்ல கயிற்றை மேலே கொண்டு வந்தார்கள். அது நான் எங்கிருக்கிறேன் என்று பார்த்ததோ என்னவோ தலையைத் தூக்கி ஒரு படத்தை எடுத்து ஒரே குதி, தூரமே இருந்த என்னருகில் வந்து விழுந்தது அந்தப் பாம்பு. முடிகள் சில்லிட்டன எனக்கு. இப்போது நினைத்தாலும் அதே கதைதான். படத்தின் வியூபாயிண்டில் ஏதோ கோளாறு ஏற்பட வேறுபக்கமாய் வேகவேகமாகச் சென்றது. அதற்குள் ஒரே போடு. தோலை மட்டும் தனியாக உரித்துக் கொண்டு சென்று விட்டார் பாம்பு பிடிக்க வந்தவர். 

கோவை வீட்டின் முன்புறம் வேப்பமரம். முன்னாலே இரண்டு தென்னைமரங்கள், பின்புறம் இரண்டு தென்னை மரங்கள், கொய்யாமரம், கருவேப்பிலை, மருதாணிச் செடிகள் என்ற தோட்ட எஃபெக்டில் இருக்கும் வீட்டைச் சுற்றிலும் அதுகள் ராஜ்ஜியம் தான் அதிகம்.

நானும் மனையாளும் வெளியில் சென்று வீடு திரும்பினோம். வாயில் கம்பிகளில் ஒருவர் தொங்கி கொண்டிருந்தார். எதிர்த்த வீட்டுப்பையன் அதை பரலோக பிதாவிடம் அனுப்பி வைத்தான்.

வாசலில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தேன். பத்து பனிரெண்டு அடி இருக்கும். ஊர்ந்து வந்து அப்படியே வீட்டைச் சுற்றிக் கொண்டு பின்புறமாகப் போனது. நான் உட்கார்ந்திருக்கிறேன் என்ற பயமெல்லாம் அதுக்கு இருந்ததா என்று தெரியவில்லை. பெட்ரூம் சன்னலைத் திறந்து வைத்துக் கொண்டு மயில்கள் ஆட்டம் போடுவதைப் பார்த்துக் கொண்டிருந்த போது அந்த பனிரெண்டடி ஜீவன் வேலியோரம் இருந்த இண்டு இடுக்குகளில் தலையை நீட்டி எதையோ தேடிக் கொண்டிருந்தது. பசங்களை அழைத்துக் காட்டினேன். நாங்கள் பார்ப்பதை கொஞ்சம் கூட சட்டை செய்வதாகத் தெரியவில்லை.

மனையாள் மேல் நிலைத்தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற மோட்டார் போடச் செல்லும் போது அருகிலிருக்கும் சின்னக் குச்சியின் மீது ஏறி தலையை நீட்டி அம்மணியைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு பின்னர் எங்கோ சென்று விட்டது. பயத்தில் முகமெல்லாம் வெளிறிப் போய் வெடவெடத்துக் கொண்டிருந்தார்.

இரவு பால்காரர் பால் ஊற்ற வரும் போது சின்னஞ் சிறிய அதுவை அம்மணி தெரியாமல் மிதித்தே முக்தி அடைய வைத்து விட்டார். அது என்ன பாம்பு? மிதித்ததால் விஷம் ஏதும் பட்டிருக்குமோ என்ற பயத்திலே இருந்தார். நானோ தூங்குவதாக பாவனை செய்து கொண்டு இரவுகளில் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன். நல்லவேளை ஒன்றும் ஆகவில்லை.

சமீபத்தில் மனையாளுக்கு கையில் பிராக்சர் ஏற்பட்டதால் பூச்சியூர் வைத்தியரிடம் வாரா வாரம் சென்று வந்து கொண்டிருந்தோம். வைத்தியரைப் பார்த்து விட்டு வெள்ளிங்கிரி சுவாமி ஜீவசமாதிக்குச் சென்று வருவது வாடிக்கை. ஆசிரமத்திற்குச் செல்லும் போது அங்கு வரும் மெய்யன்பர்களுக்கு உணவு சமைக்க கொஞ்சம் காய்கறிகளை வாங்கிச் செல்வேன். கடந்த மாதம் கையை நீவி விடுவதற்காக பூச்சியூர் சென்றோம். ஆசிரமத்திற்காக வடவள்ளி உழவர் சந்தையில் கொஞ்சம் காய்கறிகளை வாங்கிக் கொண்டு பூச்சியூர் சென்றோம். 

பூச்சியூர் பஸ் ஸ்டாண்டில் அமர்ந்து கொண்டு ஹோண்டா ஆக்டிவாவின் பின் சீட்டைத் திறந்து காய்கறிகளை சீட்டின் அடியில் வைக்கலாம் என்று நினைத்து திறந்தபோது சீட்டின் லாக் செய்யுமிடத்தில் சுருண்டு படுத்திருந்தது அது. வீட்டிலிருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தூரம். அந்தப் பாம்பு என்னுடன் கூடவே வந்திருந்திருக்கிறது. ஆடவில்லை அசையவில்லை. நிஷ்டையில் இருந்தது அது. கொஞ்சம் அதிர்வு ஏற்பட்டாலும் பாம்புகள் வெளியில் சென்று விடும். ஆனால் இந்தப் பாம்போ யோகத்தில் இருந்தது. மனதுக்குள் சிலீர் என்றது.  

அங்கிருந்த சலூன்காரர் கம்பினைத் தூக்கிக் கொண்டு வந்தார். அதைப் பார்த்ததும், ”அய்யோ அது சுருட்டை” என்றுச் சொல்லி தூரப்போய் விட்டார். பின்னர் வயதான போலீஸ்காரர் அதன் நிஷ்டையைக் கலைத்து வெளியில் தூக்கிப் போட்டு மோட்சத்துக்கு அனுப்பி வைத்தார். மனையாள் பதறிக் கொண்டிருந்தார். அந்த சிலீர் ஏற்பட்ட பிறகு நடுக்கமாக இருந்தது. அந்தச் சுருட்டை இருக்கிறதே தலையைத் தூக்கி ஒரு சீறு சீறி விட்டு செல்லமாய் கடித்து வைப்பாராம். கடுமையான விஷம் கொண்டவராம் அந்தச் சுருட்டை. 

ஆக்டிவாவை சர்வீஸ் செய்து பாலீஸ் போட்டுக் கொண்டு வந்து விட்டேன். ஆனாலும் தினமும் வண்டியை எடுக்கும் போது சுருட்டையின் நினைவு வருவதும் பின் சீட்டினை திறந்து பார்ப்பதுமாய் இருக்கிறேன். 

காதலி மட்டும் தான் எப்போதும் நினைவிலிருப்பாள் என்று சொல்வது எவ்வளவு முட்டாள்தனம்? என்று தினமும் நினைத்துக் கொள்வதுண்டு. பாம்பென்றால் படையே நடுங்குமாம். நானென்ன சுண்டைக்காய்!

Wednesday, January 4, 2017

மருத்துவக் கொள்ளைகள்

மலைகள் டாட் காம் இணையத்தின் 113 இதழில் அடியேனின் ’மருத்துவக் கொள்ளைகள்’ கட்டுரை வெளியாகி உள்ளது. கீழே இருக்கும் இணைப்பினை கிளிக் செய்து படித்துக் கொள்ளவும்.


தொடர்ந்து எனது ஆக்கங்களை வெளியிடும் மலைகள் இணைய இதழுக்கும், ஆசிரியர் சிபிச் செல்வனுக்கும் மிக்க நன்றி.

தட்டான்களும் வண்ணத்துப்பூச்சிகளும்

வீட்டின் எதிரில் பெரிய ஓட்டு வீடு. யாரோ ஒரு தேவரின் வீடு. அதை முஸ்லிம் ஒருவரிடம் விற்று விட்டு தெற்கே குடி போய் விட்டார். வீட்டு வாசலின் இடது பக்கமாக மூன்று நாவல் மரங்கள் இருந்தன. ஒன்று முஸ்லீம் வீட்டாருக்கு பாகம். இன்னொன்று வீட்டின் இடது பக்கமாய் இருக்கும் மாமாவுக்கு பாகம். மேற்கு பக்கத்தில் இருக்கும் மரம் என் தாத்தாவுக்கு பாகம்.
எதிர் வீடு பெரிய கட்டு வீடு. கிழக்குப் புறத்தில் ஒருவர் குடியிருந்தார். மேல்புறத்தில் ஆசாரி குடியிருந்தார். அவருக்கு மூன்று ஆண் பசங்க. அதில் ஒருவன் என்னோடு படித்தான். எங்கே படித்தான்? படிக்கிறேன் பேர்வழி என புத்தகமட்டையைத் தூக்கிக் கொண்டு திரிந்தான். ஆசாரி வீட்டின் எதிரே பெரிய மாமரம் ஒன்று அகல விரிந்து கொண்டிருந்தது. அதன் நிழலில் தான் ஆசாரி மர வேலைகளைச் செய்து கொண்டிருப்பார்.
எதிர் வீட்டுக்கு தென்புறமாக சலுவாவின் வீடு. கிழக்குப் பார்த்த வீடு. அங்கு அதிகம் பேர் வாழ்ந்தார்கள். சலுவா தான் எதிர் வீட்டையும் வாங்கினார். சல்வா வீட்டுக்காரர் மலேசியாவில் வேலை பார்த்தார். அவருக்கு நிறைய பெண்களும், ஆண்களும் இருந்தனர்.
நாவல் மரத்தில் பழங்கள் கொத்துக் கொத்தாய் பழுத்து தொங்கும். குருவிகளும் இன்னபிற பறவைகளும் விடாது சத்தம் எழுப்பியபடி பழங்களை ருசிக்க வந்து விடும். கல் வாசலில் நாவல் பழங்கள் வந்து விழும். மண் ஒட்டாது இருப்பதால் அடிக்கடி நான் அவைகளை எடுத்து தின்பதுண்டு. மண்ணில் விழுந்தால் அதை நாசூக்காக எடுத்து விட்டு சாப்பிடுவதுண்டு. இருந்தாலும் மண்ணும் வயிற்றுக்குள் சென்று விடும். அதையெல்லாம் நாக்கு கண்டு கொள்வதே இல்லை.
ருசி என்று வந்து விட்டால் மண்ணாவது ஒன்னாவது? இரவுகளில் வவ்வால்கள் வந்து நாவல் பழங்களைக் கொத்துக் கொத்தாகச் சப்பி போட்டு விட்டு சென்று விடும். ஒரு முறை வடக்கித் தெருவில் இருக்கும் ஒருவரைக் கொண்டு வந்து மரத்தைச் சுற்றி வலைகளைக் கட்டி வைத்து விட்டோம். மூன்று வவ்வால்கள் மாட்டின. அதை வறுவல் செய்ய அறுக்கும் போது தான் அருகில் இருந்து பார்த்தேன். அதன் கலரும் மூஞ்சியும் சகிக்காது.
அன்றிலிருந்து எனக்கு வவ்வால்களைக் கண்டாலே ஆகாது. நான் ஆவலுடன் சாப்பிடும் நாவல் பழங்களை அவைகள் தின்று விடுவது ஒரு காரணம். மரத்தில் இருந்து பழங்களை உலுப்பி எடுத்து தண்ணீரில் அலசி கொஞ்சம் உப்புத்தூள் தூவி குலுக்கி வைத்து விட்டு அரை மணி நேரம் சென்று எடுத்துச் சாப்பிட்டால் அமிர்தமாக இருக்கும். சட்டி சட்டியாகச் சாப்பிட்டிருக்கிறேன்.
ஆசாரி வீட்டில் விசேசம் போல. வாசலில் பந்தல் போட்டார்கள். பந்தலில் அழகான ஓலைகள் தொங்க விடப்பட்டன. ஒலிப்பெருக்கியை வைத்துப் பாடல் போட ஆரம்பித்தார்கள். பெரும் சத்தத்துடன் பாடல்கள் ஒலிக்க ஆரம்பித்தன. இன்னும் இரண்டு நாட்களுக்கு ஒலிபெருக்கிகள் விடாது பாடல்களை ஒலித்துக் கொண்டிருக்கும். தீன் சவுண்ட் சர்வீஸ்காரர்கள் தான் வருவார்கள். கருப்பு கலரில் இருக்கும் தட்டுகளிலிருந்துதான் பாடல்கள் ஒலிக்கும். நான் சென்று பார்த்து வருவதுண்டு.
ஆச்சரியத்தில் விழிகள் பிதுங்கியபடி தட்டையான கலர் படங்கள் பதிந்த கவருக்குள் இருக்கும் தட்டுகளை எடுத்து எடுத்துப் பார்ப்பதுண்டு. மைக் செட்டுக்காரர் பக்கத்தில் உட்கார்ந்து இருஎன்றுச் சொல்லி விட்டு பீடி குடிக்கப் போய் விடுவார். கிராம போன் பாடி முடித்ததும் மீண்டும் ஒரு தட்டை எடுத்து மாட்டி நானே பாட விடுவேன். நான் சரியாகச் செய்கிறேனா என்று மைக் செட்டுக்காரர் மேற்பார்வை பார்ப்பார். குஷியாக இருக்கும். அம்மாவிடம் வந்து, ”அம்மா, இது நான் போட்ட பாட்டு எப்படி இருக்கு?” என்று பெருமிதமாகக் கேட்டுக் கொண்டிருப்பேன்.
ஆசாரி வீட்டு விசேசத்தில் இரவுகளில் பளீரென்று வெளிச்சம் அடிக்கும் ஒரு வஸ்துவை நான் பார்த்தேன். அதுதான் பெட்ரோமாக்ஸ் லைட். விஸ் என்ற சத்தத்துடன் ஒளி வீசிக் கொண்டிருக்கும். பார்க்கப் பார்க்கப் பரவசமாய் இருக்கும். அதில் ஒளி வீசும் பகுதி ஒன்றிருக்கும். அதன் பெயர் மேன்டில். வலை போன்றிருக்கும். மண்ணெண்ணெய் தான் எரிபொருள். ஒரு லிட்டர் பிடிக்கும். ஆனால் இரவு முழுவதும் எரிந்து கொண்டிருக்கும். விசேசங்கள் என்று வந்து விட்டால் கடைத்தெருவில் இருந்து வாடகைக்கு கொண்டு வந்து இரவுகளில் வைத்து விடுவார்கள்.
எங்கள் வீட்டிலும் சலுவா வீட்டிலும் தான் கரண்ட் இருக்கும். நான்கு பல்புகள் அவ்வளவுதான் வீடு முழுமைக்கும். டியூப் லைட் ஒன்று இருந்தது. அது நீண்ட நாட்களாக எரிவதில்லை. அம்மா வீடு கூட்டிப் பெருக்கும் போது கரண்ட் மீட்டரில் ஒரு அடி வைப்பார். அது ஏன் என்று ரொம்ப நாட்களுக்கு முன்பு வரை தெரியாது. பின்னர் தெரிந்த பிறகு அம்மாவின் சிக்கனத்தை நினைத்துச் சிரித்துக் கொள்வேன். அதை தொட்டுக்கிட்டு விடாதேடா, புடிச்சுக் கொன்னுடும்என்று என்னிடம் சொல்லி வைப்பார். அது எனக்கு எட்டாது. அதனால் அதைத் தொட்டுப்பார்ப்பது பார்ப்பதோ அல்லது அது என்னைப் புடிச்சுக்கொல்வதோ ஆகாத காரியம்.
நான் தான் தட்டான்கள், வண்ணாத்துப்பூச்சிகள், பொன்வண்டுகளைப் பிடித்துக் கொண்டு வந்து கொன்று கொண்டிருந்தேனே? அவ்வப்போது கரட்டான்களை வேறு கொலைகள் செய்து கொண்டிருந்தேன்.
வீட்டின் இடது புறமிருந்த கொல்லையில் தும்பைச் செடிகள் அதிகம் இருக்கும். கடுகு போன்ற ஒரு செடியும் இருக்கும். அது பெயர் என்னவென்றுதான் தெரியவில்லை. தும்பைப்பூவில் தேன்குடிக்க வரும் வண்ணாத்துப்பூச்சிகளை சத்தமே காட்டாமல் உட்கார்ந்து அமுக்கிப் பிடித்து விடுவேன். மூன்று தும்பைச் செடிகளைப் பிடித்து கையில் வைத்துக் கொள்ள வேண்டும்.
வண்ணாத்துப் பூச்சி வந்து அமரும் போது ஒரே அமுக்கு. அது செத்தே போய் விட்டோம் என்று மயக்கத்தில் இருக்கும். பிடித்து விடுவேன். அதைக் கொண்டு வந்து அதன் பின்புறம் நூலைக் கட்டிப் பறக்க விடுவேன். சிலதுக்கு பின்புறம் நூலோடு வந்து விடும். வெறும் தலையோடு பறந்து போய் விடும். எனக்குத்தான் எரிச்சலாக இருக்கும். மீண்டும் பிடிக்க வேண்டும். தட்டான்களில் நூல் கட்டுவது என்பது பெரும்பாடு.
வீட்டு வாசலில் பறக்கும் தட்டான்களைப் பிடிப்பதே பெரும் கலையம்சம் பொருந்தியது. பெரிய துண்டாக வைத்துக் கொண்டு சத்தமே காட்டாமல் உட்கார்ந்து கொள்ள வேண்டும். அருகில் பறக்கும் போது ஒரே அடி. துண்டுக்குள் சிக்கி விடும். சில தட்டான்கள் செடிகளில் உட்காரும் போது சத்தமே காட்டாமல் அதன் வாலைப் பிடித்து அமுக்கி விடுவேன்.
மாமா பையன் விட்டியன் தான் பொன்வண்டுகளையும் அதுகள் சாப்பிடும் இலைகளையும் கொண்டு வந்து தருவான். அதன் கழுத்தில் நூலைக் கட்டி ஒரு சுற்றுச் சுற்றினால் சும்மா விர்ரென்று சுற்றும். ஆனால் அதன் கழுத்தில் மட்டும் விரலை வைத்து விடக்கூடாது. ஒரே கடி என்று விட்டியன் என்னை பயமுறுத்தி வைத்தான். நானா அடங்குவேன். கையில் துணியைச் சுற்றிக் கொண்டு விரலை வைப்பதுண்டு. பொன்வண்டு மஞ்சள் கலரில் முட்டைபோடும். இதெல்லாம் விளையாட்டு எனக்கு.
எங்களூரில் ஆட்டக்குதிரைகளை வியெஸெம் ராவுத்தர் வளர்த்து வந்தார். அந்தக் குதிரை எம்.ஜி.ஆர் படத்தில் கூட நடித்திருக்கிறது என்றார்கள். நான் டியூசன் சென்று விட்டு வீட்டுக்குத் திரும்பும் போது வியெஸெம் ராவுத்தர் வெள்ளைகலரில் இருக்கும் குதிரைக்கு ஆடச் சொல்லிக் கொடுத்துக் கொண்டிருப்பார். வேடிக்கைப் பார்ப்பதுண்டு. ஒரு தாம்பாளத்தட்டில் கால்களை வைத்து ஆடிக் கொண்டிருக்கும் அந்தக் குதிரை. ராவுத்தர் கையில் சாட்டை ஒன்று இருக்கும். சாட்டையால் ஒரு விளாசு விளாசுவார்.
குதிரை கனைத்துக் கொண்டே கால்களை மாற்றி மாற்றி வைத்துக் கொண்டு ஆடிக் கொண்டிருக்கும். முஸ்லிம் வீட்டு விசேசங்களில் மாப்பிள்ளை முகம் முழுவதும் சரம் சரமாய் தொங்கும் பூக்களை அணிந்து கொண்டு குதிரை மீது வருவார். குதிரையின் முன்னே பெட்ரோமாக்ஸ் லைட்டுகளை தலை மீது வைத்துக் கொண்டு ஆட்கள் செல்ல பாண்டு வாத்தியங்களுடன் ஊர்வலம் சலுவா வீடு வரைக்கும் வந்து திரும்பிச் செல்லும்.
அம்மா என்னைத் திட்டி விட்டால் அருவாளைத் தூக்கிக் கொண்டு வீட்டின் இடது புறம் இருந்த நீண்டு வளர்ந்த பனை மரத்தின் அடியில் இருந்த மஞ்சமினா மரத்தினை வெட்டிச் சாய்த்து விடுவேன். அது வளரும் வரை எனக்கு கோபம் வராது. மீண்டும் கோபம் வந்தால் மீண்டும் வெட்டிக் குதறிவிடுவேன். அந்த மரமும் விடாது துளிர்ப்பதும் நான் கோபம் வந்தால் வெட்டுவதுமாய் எனக்கு விபரம் தெரிந்த நாள் வரைக்கும் தொடர்ந்தது. கல்லூரிக்குச் சென்ற பிறகு அந்த மஞ்சமினா மரம் வளர்ந்து படர்ந்து நின்றது. மாமா ஒரு நாள் அதையும் வெட்டி விட்டார். வீட்டைச் சூழ்ந்த கொடத்தடி மாமரம், காசாலட்டு, பெரிய மாமரம், பாவக்காய் மாமரம், தேத்தாமரம், வேப்பமரங்கள் எல்லாம் கவர்மெண்டு போட்ட ஆழ்துளைகுழாயினால் பட்டுப் போயின. இப்போதும் ஊருக்கு அந்தக் ஆழ்துளைக் கிணற்றிலிருந்துதான் தண்ணீர் கிடைக்கிறது. ஆனால் ஊரெங்கும் இருந்த பச்சை காணாமல் போய் விட்டது அத்துடன் தட்டான்களும், வண்ணத்துப்பூச்சிகளும், பொன்வண்டுகளும், பெட்ரோமாக்ஸ் லைட், கிராம போன் மற்றும் ஆட்டக்குதிரையும் தான்.
மலைகள்.காமில் 112 வது இதழில் வெளியான கட்டுரை. அடுத்த இதழ் வெளிவந்து விட்டதால் பிளாக்கில் வெளியிடுகிறேன். நன்றி சிபிச்செல்வன்.