வாசலின் வடமேற்கு மூலையில் மண்வெட்டி இருந்தது. அதை எடுக்கச் சென்ற போது அதன் கீழே சுருண்டு கொண்டு படுத்திருந்தது அது. கட்டம் கட்டமாக நல்ல தடியாக இருந்தது. அலறிய அலறலில் அந்தப் பாம்பு பரலோகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. பத்து வயதில் முதன் முதலாக தனியாக பாம்பு பார்த்த அனுபவம் மனதுக்குள் பயத்தினை எழுப்பி விட்டு விட்டது. பாம்பின் மீது அன்றிலிருந்து பயம் தொடர ஆரம்பித்தது.
வீட்டுக்கு மேல்புறம் செடி கொடிகள் மண்டிய நிலம் இருந்தது. அதன் வடமேற்கு மூலையில் பாம்புப் புற்றொன்று இருந்தது. அந்தப் பக்கம் எட்டிக்கூட பார்க்கமாட்டேன். பாம்புப் புற்று இருந்த இடத்திற்கு வடபுறம் என் வகுப்புத் தோழன் பழனிவேலின் தென்னந்தோப்பு இருந்தது. யாரும் அந்தப் பக்கம் வரமாட்டார்கள் ஏனென்றால் அந்தப் பாம்பு புற்றுக்குள் நாகங்கள் இருக்கின்றன என்று சொல்லக் கேள்வி.
ஒரு முறை வீட்டின் பின்புறத்தில் மாடுகள் கட்டி இருக்கும் வேப்பமரத்தடியைத் தாண்டி இருக்கும் முருங்கைமரத்தின் அருகில் காரப்பழம் மரம் இருந்தது. அதில் பழம் பறிக்கச் சென்றேன். அந்த இடத்தில் சிறிய எலுமிச்சை செடி ஒன்றிருந்தது. அதன் அருகில் ஏதோ அசைவது போலத் தெரிந்தது. தூர இருந்தபடி கல்லைத் தூக்கி அந்தப் பகுதியில் வீசினேன். திடீரென்று தலையைத் தூக்கி படமெடுத்து மிரட்டியது நாகப்பாம்பு. அவ்விடத்தில் இருந்த அடியேனை அடுத்த நொடி காணவில்லை. வீட்டுக்குள் வியர்க்க விறுவிறுக்க உட்கார்ந்திருந்தவனுக்கு, ”உனக்கு மட்டும் ஏண்டா இப்படியெல்லாம் நடக்குது” என்ற திட்டு கிடைத்தது. நானா அதுகளைத் தேடிப்போய் வம்பிழுக்கிறேன். அதுகள் அல்லவா என்னுடன் வம்பிழுக்க வருகின்றன?
நல்ல மழை பெய்து வீட்டின் வடபுறமுள்ள கிணற்றின் வாய் வரைக்கும் தண்ணீர் நிரம்பி இருந்தது. அந்த தண்ணீர் பால் போல இருக்கும். குளிப்பதற்கு தண்ணீர் இறைக்கச் சென்ற போது அதற்குள் நல்ல நீளமான அது குளியல் போட்டுக் கொண்டிருந்தது. பூட்டைக்கயிற்றில் தட்டுக்கூடையை வைத்து அதன் மீது வைக்கோல் போட்டு உள்ளே விட்டபோது நீச்சல் அடித்தது போதும் என்று கருதி தட்டுகூடையில் ஓய்வெடுக்க வந்து விட்டது. மெல்ல கயிற்றை மேலே கொண்டு வந்தார்கள். அது நான் எங்கிருக்கிறேன் என்று பார்த்ததோ என்னவோ தலையைத் தூக்கி ஒரு படத்தை எடுத்து ஒரே குதி, தூரமே இருந்த என்னருகில் வந்து விழுந்தது அந்தப் பாம்பு. முடிகள் சில்லிட்டன எனக்கு. இப்போது நினைத்தாலும் அதே கதைதான். படத்தின் வியூபாயிண்டில் ஏதோ கோளாறு ஏற்பட வேறுபக்கமாய் வேகவேகமாகச் சென்றது. அதற்குள் ஒரே போடு. தோலை மட்டும் தனியாக உரித்துக் கொண்டு சென்று விட்டார் பாம்பு பிடிக்க வந்தவர்.
கோவை வீட்டின் முன்புறம் வேப்பமரம். முன்னாலே இரண்டு தென்னைமரங்கள், பின்புறம் இரண்டு தென்னை மரங்கள், கொய்யாமரம், கருவேப்பிலை, மருதாணிச் செடிகள் என்ற தோட்ட எஃபெக்டில் இருக்கும் வீட்டைச் சுற்றிலும் அதுகள் ராஜ்ஜியம் தான் அதிகம்.
நானும் மனையாளும் வெளியில் சென்று வீடு திரும்பினோம். வாயில் கம்பிகளில் ஒருவர் தொங்கி கொண்டிருந்தார். எதிர்த்த வீட்டுப்பையன் அதை பரலோக பிதாவிடம் அனுப்பி வைத்தான்.
வாசலில் உட்கார்ந்து பேப்பர் படித்துக் கொண்டிருந்தேன். பத்து பனிரெண்டு அடி இருக்கும். ஊர்ந்து வந்து அப்படியே வீட்டைச் சுற்றிக் கொண்டு பின்புறமாகப் போனது. நான் உட்கார்ந்திருக்கிறேன் என்ற பயமெல்லாம் அதுக்கு இருந்ததா என்று தெரியவில்லை. பெட்ரூம் சன்னலைத் திறந்து வைத்துக் கொண்டு மயில்கள் ஆட்டம் போடுவதைப் பார்த்துக் கொண்டிருந்த போது அந்த பனிரெண்டடி ஜீவன் வேலியோரம் இருந்த இண்டு இடுக்குகளில் தலையை நீட்டி எதையோ தேடிக் கொண்டிருந்தது. பசங்களை அழைத்துக் காட்டினேன். நாங்கள் பார்ப்பதை கொஞ்சம் கூட சட்டை செய்வதாகத் தெரியவில்லை.
மனையாள் மேல் நிலைத்தொட்டிக்கு தண்ணீர் ஏற்ற மோட்டார் போடச் செல்லும் போது அருகிலிருக்கும் சின்னக் குச்சியின் மீது ஏறி தலையை நீட்டி அம்மணியைப் பார்த்துக் கொண்டிருந்து விட்டு பின்னர் எங்கோ சென்று விட்டது. பயத்தில் முகமெல்லாம் வெளிறிப் போய் வெடவெடத்துக் கொண்டிருந்தார்.
இரவு பால்காரர் பால் ஊற்ற வரும் போது சின்னஞ் சிறிய அதுவை அம்மணி தெரியாமல் மிதித்தே முக்தி அடைய வைத்து விட்டார். அது என்ன பாம்பு? மிதித்ததால் விஷம் ஏதும் பட்டிருக்குமோ என்ற பயத்திலே இருந்தார். நானோ தூங்குவதாக பாவனை செய்து கொண்டு இரவுகளில் அவரைப் பார்த்துக் கொண்டிருந்தேன். நல்லவேளை ஒன்றும் ஆகவில்லை.
சமீபத்தில் மனையாளுக்கு கையில் பிராக்சர் ஏற்பட்டதால் பூச்சியூர் வைத்தியரிடம் வாரா வாரம் சென்று வந்து கொண்டிருந்தோம். வைத்தியரைப் பார்த்து விட்டு வெள்ளிங்கிரி சுவாமி ஜீவசமாதிக்குச் சென்று வருவது வாடிக்கை. ஆசிரமத்திற்குச் செல்லும் போது அங்கு வரும் மெய்யன்பர்களுக்கு உணவு சமைக்க கொஞ்சம் காய்கறிகளை வாங்கிச் செல்வேன். கடந்த மாதம் கையை நீவி விடுவதற்காக பூச்சியூர் சென்றோம். ஆசிரமத்திற்காக வடவள்ளி உழவர் சந்தையில் கொஞ்சம் காய்கறிகளை வாங்கிக் கொண்டு பூச்சியூர் சென்றோம்.
பூச்சியூர் பஸ் ஸ்டாண்டில் அமர்ந்து கொண்டு ஹோண்டா ஆக்டிவாவின் பின் சீட்டைத் திறந்து காய்கறிகளை சீட்டின் அடியில் வைக்கலாம் என்று நினைத்து திறந்தபோது சீட்டின் லாக் செய்யுமிடத்தில் சுருண்டு படுத்திருந்தது அது. வீட்டிலிருந்து சுமார் 30 கிலோ மீட்டர் தூரம். அந்தப் பாம்பு என்னுடன் கூடவே வந்திருந்திருக்கிறது. ஆடவில்லை அசையவில்லை. நிஷ்டையில் இருந்தது அது. கொஞ்சம் அதிர்வு ஏற்பட்டாலும் பாம்புகள் வெளியில் சென்று விடும். ஆனால் இந்தப் பாம்போ யோகத்தில் இருந்தது. மனதுக்குள் சிலீர் என்றது.
அங்கிருந்த சலூன்காரர் கம்பினைத் தூக்கிக் கொண்டு வந்தார். அதைப் பார்த்ததும், ”அய்யோ அது சுருட்டை” என்றுச் சொல்லி தூரப்போய் விட்டார். பின்னர் வயதான போலீஸ்காரர் அதன் நிஷ்டையைக் கலைத்து வெளியில் தூக்கிப் போட்டு மோட்சத்துக்கு அனுப்பி வைத்தார். மனையாள் பதறிக் கொண்டிருந்தார். அந்த சிலீர் ஏற்பட்ட பிறகு நடுக்கமாக இருந்தது. அந்தச் சுருட்டை இருக்கிறதே தலையைத் தூக்கி ஒரு சீறு சீறி விட்டு செல்லமாய் கடித்து வைப்பாராம். கடுமையான விஷம் கொண்டவராம் அந்தச் சுருட்டை.
ஆக்டிவாவை சர்வீஸ் செய்து பாலீஸ் போட்டுக் கொண்டு வந்து விட்டேன். ஆனாலும் தினமும் வண்டியை எடுக்கும் போது சுருட்டையின் நினைவு வருவதும் பின் சீட்டினை திறந்து பார்ப்பதுமாய் இருக்கிறேன்.
காதலி மட்டும் தான் எப்போதும் நினைவிலிருப்பாள் என்று சொல்வது எவ்வளவு முட்டாள்தனம்? என்று தினமும் நினைத்துக் கொள்வதுண்டு. பாம்பென்றால் படையே நடுங்குமாம். நானென்ன சுண்டைக்காய்!