குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Monday, September 5, 2016

ஏர் கலப்பை நினைவிருக்கிறதா உங்களுக்கு?

எங்க ஊர் பக்கம் இப்படித்தான் சொல்வார்கள். உழுவும் ஏர் இதற்கு இன்னொரு பெயர் கலப்பை. கொழு என்றொரு வஸ்து இருக்கும். அது கலப்பை மரத்தின் நுனியில் இரண்டு போல்டு போட்டு இணைத்திருப்பார்கள். மொத்தமாக நான்கு மரத்துண்டுகள் தான். நுகத்தடி தணி. 


இதோ இப்படித்தான் இருக்கும் ஏர் கலப்பை. நுகத்தடியில் மாடுகளைக் கட்டி கைப்பிடியை அழுத்திட மாடுகள் முன்னே செல்ல, கொழு மண்ணைக் கீறி இரண்டு பக்கமும் மண்ணைத் தள்ளும். வடம் பிடித்தல் என்றுச் சொல்வார்கள். அதாவது மாடு திருப்புவதற்கு வசதியாக நீண்ட அகலமான செவ்வக வடிவத்தில் முதலில் ஏரோட்டி பின்னர் நான்கு ஐந்து வரிசைகள் உழுத பிறகு அடுத்த இணைச் செவ்வகத்தினை உருவாக்கி உழுவார்கள். வெற்று வயலில் உழுவது இப்படித்தான். சேறடிக்கும் போது வேறு மாதிரி உழுவார்கள்.

குறுவைச் சாகுபடி வருவதற்கு முன்பே போஸ் ஆசாரியைக் கூட்டி வருவான். அப்போதெல்லாம் வீட்டுக்கு வீடு குடி ஆசாரிகள் என தனியாக இருப்பார்கள். ஒவ்வொரு பொங்கலின் போது அவர்கள் கொண்டு வந்து கொடுக்கும் புத்தம் புதிய அகப்பையைத் தான் பயன்படுத்துவோம். எங்கள் குடும்பத்திற்கு நெடுவாசல் கருப்பன் ஆசாரி தான் வருவார். புதுக் கொழு வாங்கி வந்து இணைப்பார்கள். இரண்டு ஏர் கலப்பை இருக்கும். ஏதாவது உடைந்து விட்டால் அடுத்த ஏர் கலப்பையை எடுத்துக் கொள்ளலாம் அல்லவா?


பெரிய வண்டிமாடு ஜோடி ஒன்று, கட்டை மாடுகள் ஜோடி ஒன்று என இரண்டு ஜோடிகள் இருக்கும். மாட்டு வண்டியில் சக்கரத்தில் பழைய ஆயிலுடன் காட்டன் துணியை ஊற வைத்து சக்கரத்துக்குள் நுழைத்து, வண்டிச் சக்கரங்கள் எளிதாக சுழல ஏற்பாடு செய்வான் போஸ். 

இப்படித்தான் ஏற்பாடுகள் நடக்கும். உழவு செய்வதற்கு முன்பு வீட்டில் சேரும் குப்பையை வண்டியில் கொண்டு போய் வயலில் கொட்டி நிரவி விட வேண்டும். அதன் பிறகு உழவு செய்ய வேண்டும். இரண்டு முறை உழவு செய்வார்கள். பின்னர் சேற்று உழவு செய்வார்கள். 

நாற்றங்கால் உழவுக்கு கிட்டப்பிடித்து உழ வேண்டும். ஊற வைத்து முளை கட்டின நெல்மணிகளை நாற்றங்காலில் பாவ வேண்டும். அது முளைத்து பயிராகி நிற்கும் போது, அதைப் பிடுங்கி வயல்களில் நடவு செய்ய வேண்டும். பிறகு களை எடுக்க வேண்டும். உரமிட வேண்டும். பூச்சிகள் வராதவாறு மருந்து அடிக்க வேண்டும். வயலில் தண்ணீர் காயக்காய தண்ணீர் பாய்ச்ச வேண்டும். கதிர் விளைந்து நிற்கும் போது அறுவடை செய்து நெல்மணிகளை நீக்கி சுத்தம் செய்து கோணியில் இட்டு வீடு வந்து சேர்க்க வேண்டும். தக தகவென தங்கமென மின்னும் நெல்மணிகளை பத்தாயத்துக்குள் சேகரிக்க வேண்டும்.

இவ்வாறு சேகரித்த நெல்மணிகள் அடுத்த விவசாயம் செய்வதற்கு முன்பு வியாபாரிகளிடம் விலை பேசி விற்போம். கிட்டத்தட்ட முன்னூறு மூட்டைகள் விற்பனை செய்வோம். அது தவிர சாப்பாட்டுக்கு தனியாக இருக்கும். வீட்டில் இருந்த இரண்டு பத்தாயங்கள் (பாக்ஸ் வடிவ மரப்பட்டி - நூறு மூட்டைகள் நெல் மணிகள் சேகரிக்கலாம்).

சமீபத்தில் வீட்டுக்குச் சென்றிருந்தேன். கலப்பை இற்றுப் போய் கிடந்தது. கொழுவில் மாட்டி இருந்த போல்டுகள் துருப்பிடித்திருந்தன. பத்தாயங்கள் காணவில்லை. மரம் உழுத்துப் போய் விட்டதாம். நெல் அவிக்கும் வெங்கல அண்டா மட்டும் இருந்தது. அதைத் தூக்கவே நான்கு ஆட்கள் வேண்டும். அவ்வளவு கனமான அண்டா அது.

ஏர் கலப்பையோடு நடந்து நடந்து உடம்பு உரமாகி இருந்த உழவர்கள் எல்லாம் இப்போது சர்க்கரை வியாதியில் சிக்குண்டு இருக்கின்றார்கள். விடிகாலை நான்கு மணிக்கு உழ ஆரம்பித்து மதியம்  ஒரு மணிக்குள் உழவை முடித்து ஆற்றில் குளித்து வீடு வரும் உழவனை இனிக் கண்ணால் காண முடியுமா? காவிரி வறண்டு போனது. உழவு செய்ய தண்ணீரைத் தர மாட்டேன் என்கிறார்கள். மாறிப்போன மனிதர்களும் மாறவே மாறாத அரசியலும் இருக்கையில் என்ன ஆகப்போகின்றது?

அடுத்த தலைமுறைக்காக இந்தப் பதிவு எழுதுகிறேன் மன வலியுடன்.

Wednesday, August 31, 2016

நான் தாத்தாவாகப் போகின்றேன்

அண்ணன் முத்துகிருஷ்ணனின் மகள்கள் இருவருக்கும் திருமணம் ஆகி விட்டது. ஒரு பெண் வேமங்குடியில் வாழ்க்கைப்பட்டிருக்கிறது. ஆவணம் அருணாசலம் மாமா வீட்டுக்குப் பின்னால் தான் இரண்டாவது பெண் வாக்கப்பட்டிருக்கிறது. இருவரும் எனக்கு மகள்கள் அல்லவா? நான் சித்தப்பா அல்லவா?

அம்மு பள்ளியில் இருந்து வந்ததும் அண்ணன்,”அம்மு உன்னை ஒருத்தர் சித்தின்னு அழைக்கப்போகிறார்! ரித்திக் நீ மாமாவாகப் போகின்றாய்!” என்றார்.

அம்மு. ‘என்ன? என்ன?’ என்று கேட்டு விழித்தது. ரித்திக் சிரித்தான்.

”ஆமா அம்மு, உன் அக்காவிற்கு குழந்தை பிறக்கப் போகிறது, ஆகையால் நீ சித்தி தானே?” என்றார்.

ஒரே சிரிப்பு அம்முவுக்கு.

என்னைப் பார்த்தார். எனக்குத் திக்கென்றது. பக்கத்தில் கோதை உட்கார்ந்திருந்தார்.

’நீ தாத்தாவாகப் போகிறாய் தங்கம்’ என்றார் அண்ணன்.

கோதை என்னைப் பார்த்துச் சிரிக்க ஆரம்பித்தார். எனக்கு ஒரு மாதிரியாகப் போய் விட்டது.

”நீங்க யாருன்னே எனக்குத் தெரியாது, எனக்கு அண்ணணும் இல்லை, தம்பியும் இல்லை” என்றேன் படக்கென்று.

சிரி சிரியென சிரித்து விட்டு எங்கள் குடும்ப வரலாற்றினைச் சொல்ல ஆரம்பித்தார். அது தனி பதிவில் (குடும்ப வரலாறு பகுதி 1)

இனி என்ன ஆகப்போகின்றது? நான் தாத்தாவாகப் போகின்றேன். வேறு வழியே இல்லை. நான் தாத்தா தான்.

குடும்ப வரலாறு பகுதி 1

தாத்தாவின் தாத்தா பெயர் என்ன? என்று கேட்டால் கிட்டத்தட்ட அனைவரும் விழி பிதுங்கி விடுவார்கள். அந்தக் காலத்து ராஜாக்கள் பற்றியெல்லாம் தெரிந்து வைத்திருக்கும் நாம், நமது குடும்ப முன்னாள்களை பற்றி தெரிந்து கொள்வதில் ஆர்வம் கொள்வதில்லை. வயதாகி விட்டாலே போதும், ஓரமாய் ஒதுக்கி விடுவோம். இறந்து போனால் நினைவில் வைத்துக் கொள்ளவா போகிறோம்?

அண்ணன் முத்துகிருஷ்ணன் களத்தூரிலிருந்து வந்திருந்தார். முள்ளங்கி சாம்பார், சுண்டல்காய் புளிக்குழம்பு, தக்காளி ரசம், வாழைக்காய் வறுவல், பாகற்காய் இனிப்பு பொறியல், ஆதண்டங்காய் வற்றல், எலுமிச்சை  ஊறுகாய், தயிர் என அவருக்கு உணவு அளித்தோம். திருப்தியாக உண்டு விட்டு அரை மயக்கத் தூக்கத்திலிருந்தார். மூன்று மணி வாக்கில் எழுந்து இருவரும் பேசிக் கொண்டிருந்தோம். ஊர்க்கதை தான். அப்போது தான் எங்கள் குடும்பம் பற்றி பேச்சு வந்தது. ’அண்ணே, நீ எப்படி எனக்குச் சொந்தம்?’ என்று ஆரம்பித்தேன். 

புதுக்கோட்டை மாவட்டத்தின் கிழக்கு எல்லை, தஞ்சாவூர் மாவட்டத்தின் மேற்கு எல்லை இவற்றில் இருப்பது ஆவணம் கிராமமும், நெடுவாசல் கிராமமும். நெடுவாசல் எனது ஊர். ஆவணம் அண்ணன் ஊர். இனி எங்க குடும்ப உறுப்பினர்கள் விவரம்.

ஆப்புநாததேவர், ஏயி என்கிற ஏகாத்தாள், அலமேலு, ஆவா நால்வரும் சகோதர சகோதரிகள். ஆவணத்தில் பிறந்தவர்கள். இவர்களின் அப்பா அம்மா பெயர் தெரியவில்லை. விசாரிக்க வேண்டும்.

ஆப்புநாததேவருக்கு இரண்டு பையன்கள் அவர்கள் பெயர் சம்மள மாணிக்கதேவர் மற்றும் சுப்பையா தேவர் என இரு பையன்கள்.

ஏயி என்கிற ஏகாத்தாளை கட்டிக் கொடுத்தது நெடுவாசல் கிராமத்தில் இவரின் கணவர் பெயர் அருணாசலதேவர். இவர்களுக்கு நாடி மாணிக்கதேவர், ராமசாமி தேவர், ராமாயி, சின்னப்பிள்ளை மற்றும் வள்ளி என ஐந்து குழந்தைகள். ராமசாமி தேவர் சிறு வயதில் காலரா வந்து இறந்து போய் விட்டார். ராமாயியை நெடுவாசல் தெற்குத் தெருவில் கட்டிக் கொடுத்தார்கள். புருஷனுக்கும் பொண்டாட்டிக்கும் ஏதோ சண்டை வந்து காஞ்சிராத்தி இலையை அரைச்சுக் குடிச்சிட்டு செத்துப் போச்சாம்.

அலமேலுவை ஆவணத்தில் கட்டிக் கொடுத்தார்கள். புருஷன் பேரு முத்துக்கருப்பண்ணதேவர். இவர்களுக்கு ஆவுடைத்தேவர் மற்றும் சிவந்தி மாணிக்கதேவர் என்று இரு பையன்கள். 

ஆவாவை வேமங்குடியில் கட்டிக் கொடுத்தார்கள். புருஷன் பேர் என்னன்னு தெரியவில்லை, விசாரிக்கணும். இவருக்கு ராமதேவர், விசாலாட்சி மற்றும் மன்னார்குடியில் செட்டிலான ஒரு டாக்டர் (இவரின் பெயரும் தெரியவில்லை) ஆக மூன்று குழந்தைகள்.

ஆப்புநாததேவர் பையன் சம்மள மாணிக்கத்தேவருக்கு நெடுவாசல் ஏகத்தாளுக்குப் பிறந்த சின்னப்பிள்ளையை திருமணம் செய்து வைத்தார்கள். இவர்களுக்கு குழந்தைவேலு, குட்டியம்மாள், அருணாசலம் மற்றும் ருக்குமணி என நான்கு குழந்தைகள்.

ஆப்பு நாததேவர் அடுத்த பையன் சுப்பையாதேவருக்கு வேமங்குடியில் கட்டிக் கொடுத்த ஆவாவின் மகள் விசாலாட்சியை திருமணம் செய்தார்கள். இவர்களுக்கு ஒரே ஒரு பையன் அவர் பெயர் சிங்காரவேல்.

நெடுவாசலில் கட்டிக் கொடுத்த ஏயி என்கிற ஏகாத்தாளின் மகன் நாடி வீட்டு மாணிக்கதேவருக்கு ஆவணம் சம்மள மாணிக்கதேவருக்கும் சின்னப்பிள்ளைக்கும் பிறந்த குட்டியம்மாளை இரண்டாவது திருமணம் செய்து கொடுத்தார்கள். சொத்து ஆள வாரிசு இல்லையென்பதால் தனது தங்கை மகளான குட்டியம்மாளை திருமணம் செய்து கொண்டார். அவருக்கு ஞானேஸ்வரி, ஜானகி, தங்கவேல், டிம்பிள்கபாடியா என நான்கு வாரிசுகள். நாடி மாணிக்கதேவரின் முதல் சம்சாரத்துக்கு இரண்டு பெண் குழந்தைகள். மூத்த பெண்ணை ஆவணம் சம்மள மாணிக்கதேவரின் மூத்த பையன் குழந்தைவேலுக்குத் திருமணம் செய்து வைத்தார்கள். குழந்தைகள் ஏதுமின்றி இறந்து போனார். இரண்டாவது மகள் காளியம்மாளை நெடுவாசலில் இருந்தவருக்குத் திருமணம் செய்து வைத்தார்கள். இவர்களுக்கு பழனிவேலு, அலமேலு இரண்டு வாரிசுகள்.

அடுத்து ஏகாத்தாளின் மகள் வள்ளியம்மையை வீரியன்கோட்டையில் கட்டிக் கொடுத்தார்கள். இவரின் வீட்டுக்காரர் பெயர் தெரியவில்லை. விசாரிக்க வேண்டும். இவர்களுக்கு வீராயி, செவையாள், வீரப்பன், குட்டியப்பன், பாப்பாத்தி, அபூர்வம் மற்றும் நாகம்மாள் என்று ஏழு வாரிசுகள்.

ஆவணத்தில் கட்டிக் கொடுத்த அலமேலு மகன் ஆவுடைத்தேவருக்கு முத்துலட்சுமி (நெடுவாசல்), ராஜேஸ்வரி (பைங்கால்), முத்துகிருஷ்ணன் (ஆவணம்), செல்வராணி (பூக்கொல்லை), மஞ்சுளா (துறையூர்), இந்துமதி (ஆண்டாகோட்டை) ஆகிய ஆறு வாரிசுகள்.

ஆவணத்தில் கட்டிக் கொடுத்த அலமேலுவின் இரண்டாவது மகன் சிவந்தி மாணிக்கதேவருக்கு செண்பகவல்லி(சென்னை), ராஜ்குமார் (மலேசியா மிலிட்டரியில் வேலை திருமணமில்லை), காந்திமதி (சென்னை), குணசுந்தரி (மலேசியா), ஜெயபாரதி (மலேசியா), சரவணன் (மலேசியா) என ஆறு வாரிசுகள் இருக்கின்றனர். இதில் சமீபத்தில் தான் செண்பகவல்லி சென்னையில் காலமானார்.

ஆவணம் ஆப்பு நாததேவரின் மகன்களில் சுப்பையாதேவரின் மகன் சிங்காரவேலுவிற்கு வேமங்குடியிலிருந்து பெண் எடுத்தார்கள். மனைவி பெயர் பானு. இறந்து விட்டார். இவர்களுக்கு ஜெயம் என்கிற ஃபேமஸ் ஸ்டார்னி, சின்னப்பொன்னு என்கிற செஸ்மின் வாணி, ஃப்ரான்சிஸ்காசன் மற்றும் சிஸ்பான் விசாலம் என்கிற நான்கு வாரிசுகள். தலையைச் சுற்றுகிறதா? மாமா குசும்பு பிடித்தவர். பிள்ளைகளின் பெயர்களைப் பார்த்தீர்களா? 

இது முதல் வாரிசு குடும்ப விவரம் அடுத்த தலைமுறை வாரிசுகளை எல்லாம் விசாரித்து அடுத்த பதிவில் எழுதுவேன். எங்கள் குடும்பத்தினைச் சேர்ந்தவர்கள் எங்கிருந்தாலும் தொடர்பு கொள்ளவும்.

Thursday, August 25, 2016

அழகன்

பனிரெண்டாம் வகுப்பு முடிந்தது. அடுத்துப் படிக்க வேண்டும். எல்லோரும் டி.பார்ம் படித்து விட்டு மெடிக்கல் வைத்துக் கொள்ளலாம் என்றார்கள். அக்கா தஞ்சை அதிமுக மாவட்ட பிரதிநிதி. சேவல் சின்னத்தில் போட்டியிட்ட குழ.செல்லையா மாமாவுக்கு நெருக்கம். ரெகமெண்டேசன் கடிதம் பெற்று தஞ்சாவூர் மெடிக்கல் கல்லூரியில் டி.பார்ம் சேர முயற்சித்தேன் கிடைக்கவில்லை. 

வீட்டுக்கு பின்னால் ரங்கசாமி அண்ணன் இருந்தார். அவரைச் சந்திக்கச் செல்வதுண்டு. அப்போதே வேதாந்தமாகப் பேசுவார். அவர் என்னிடம் கண்ணதாசன் எழுதிய அர்த்தமுள்ள இந்து மதம் என்ற புத்தகத்தையும், பகவத் கீதையையும் கொடுத்துப் படிக்கச் சொன்னார்.

அதுவரை மாலைமதி, ராணிமுத்து, ராஜேஷ்குமார், சுபா (எனக்குப் பிடித்த நாவல் தங்கக் கொலுசு மற்றும் தூண்டில் முள்), குமுதம் வகையறாக்களே எனக்குத் தெரியும். ஒரு புது உலகத்தை எனக்கு அறிமுகப்படுத்திய ரங்கசாமி அண்ணனுக்கு நன்றி.


உள்ளே இழுத்துக் கொண்டார் கண்ணதாசன். கண்ணனைப் பற்றிய அவரது புலம்பல் கண்ணன் மீது மாறாப்பற்றுக் கொள்ள வைத்தது. கண்ணனைத் தேடினேன். அப்போதெல்லாம் இணையம் ஏது?  காணும் புத்தகத்திலெல்லாம் கண்ணன் படம் கிடைத்தால் கட் செய்து வைத்துக் கொள்வேன். தூண்டிக்காரன் பத்ரகாளி, வீரபத்திரர் என்று தேவர் இனத்தின் அடையாளங்களை விட்டு விட்டு என் மனம் கண்ணனைத் தேடியது. ஜெயதேவரின் அஷ்டபதியில் ராதே கண்ணன் பற்றி கண்ணதாசனின் எழுத்துக்கள் மோகப்படுத்தியது. விடாது தேடினேன் கண்ணனை.

ஒரு வழியாக கரூர் ராமகிருஷ்ண மடத்தின் கட்டுப்பாட்டில் இருந்த பள்ளியில் ஆசிரியராகச் சேர்ந்த பொழுது கண்ணன் பற்றிய அத்தனைப் புத்தகங்களையும், பாடல்களையும் விடாது கேட்க ஆரம்பித்தேன். சென்னை ராமகிருஷ்ண மடத்தின் தலைவர் கெளதமானந்தரையும் விடவில்லை. எனக்கு ராமகிருஷ்ண கோவிலில் மந்திர தீட்சை கொடுத்த பேலூர் மத்தின் தலைவர் எனது குரு காலம் சென்ற ரங்கநாதனந்தரையும் விடவில்லை. ஆஸ்ரம தலைவர் ஆத்மானந்தா அவர்கள், ’ஏனப்பா கண்ணன் மீது இவ்வளவு பற்று?’ என்று கேட்டு விட்டு அவனைப் பற்றிய புத்தகங்கள், பாடல்கள் எங்கு கிடைத்தாலும் கொண்டு வந்து கொடுப்பார்.

கண்ணனில் மூழ்கி கிடந்தேன். இப்போதெல்லாம் எனக்கு கடவுள் பற்றிய ஒரு தெளிவான முடிவிற்கு வந்து விட்டேன். ஆனால் இந்தக் கண்ணன் மீதான ஈர்ப்பு மட்டும் இன்றைக்கும் என்னை விடாது துரத்திக் கொண்டே இருக்கிறது. இன்றைக்கு அவனைப் பற்றி எழுத வேண்டுமென நினைத்தேன். கண்ணனின் வாழ்க்கை சொல்வது வேறு ஏதோ. அது என்னவென்று உணர வேண்டும் . ஓஷோவின் பகவத் கீதை ஒரு தரிசனம் மற்றும் அஷ்டவக்ர மகா கீதை புத்தகங்களை வாங்கிப் படிக்க வேண்டும் என நினைத்திருக்கிறேன். காலம் வரட்டும்.

இன்றைக்கு கிருஷ்ண ஜெயந்தி விழா நாடெங்கும் கொண்டாடப்படுகிறது. உங்களுக்காக இரண்டு பாடல்களை இங்கு இணைப்புக் கொடுக்கிறேன். கேட்டுப்பாருங்கள். மனதை அள்ளி விடுவான் கிருஷ்ணன்.





ராகுல், சிந்துஜா மற்றும் மிருளாளினியின் குரல்களின் வழியே கண்ணனின் அன்புக் கரங்களின் தழுவலில் மனது ஒடுங்கி நிற்கும் அற்புதத்தை அவசியம் அனைவரும் உணருங்கள். இசை வழியே உள்ளத்துக்குள் ஊடுறுவும் அற்புத தரிசனத்தை ஒரு நொடி உணருங்கள். மாயவன் அழகனாய் மனக்கண்ணுக்குள் வெளிப்படும் ஆனந்த தரிசனத்தை உணருங்கள்.

- கோவை எம் தங்கவேல்.



Monday, August 22, 2016

சட்டசபை சொல்லும் கதை

தேர்தல் முடிந்து 2016ம் ஆண்டின் முதல் சட்டசபைக்கூட்டம் நடந்து வருகிறது. சபையில் பல்வேறு சம்பவங்கள் நடந்து வருகின்றன. விவாதங்களும், செய்திகளும் என மீடியாக்கள் வெகு பரபரப்பு. ஒவ்வொருவருக்கும் தகுந்தவாறு கணிப்புகள், வேதனைகள், கண்டிப்புகள், போராட்டங்கள் என்று தர்க்க நியாயங்களை அடுக்கிக் கொண்டிருக்கின்றார்கள். இப்போது ஒரு கதை சொல்லப்போகின்றேன்.

ஒரு ஜென் குரு தன் மடாலயத்தில் இருக்கும் சீடர்களுக்கு கல்வி கற்றுக் கொடுத்துக் கொண்டிருந்தார். 

தினமும் பள்ளிக்கு வருவார். சீடர்கள் பெஞ்சுகளில் அமர்ந்திருப்பர். அனைவரையும் பார்ப்பார். ’அனைவரும் புத்தகங்களை எடுத்து வைத்துப் படியுங்கள். யாரும் ஒருவரோடு ஒருவர் பேசிக் கொள்ளக்கூடாது’ என்பார். சீடர்கள் அனைவரும் புத்தகங்களை எடுத்து வைத்துக் கொண்டு படிப்பர். 

ஜென் குரு மேஜை மீது தலையை வைத்துக் கொண்டு தூங்கி விடுவார். குருவிடமிருந்து மெலிதான குறட்டைச்சத்தம் வந்ததும் சீடர்கள் அனைவரும் சத்தமின்றி தங்களுக்குள் பேசிக் கொள்வார்கள். சத்தம் அதிகமானதும் ஜென் குருவின் கைகள் அருகிலிருக்கும் பிரம்பை எடுத்து டேபிளில் ஒரு அடி அடிப்பார். சீடர்கள் அமைதியாக இருப்பார்கள். மீண்டும் மெலிதான குறட்டைச் சத்தம் வரும். சத்தம் அதிகமாகும். மீண்டும் பிரம்படி. 

சீடர்களுக்கு இவர் என்ன செய்து கொண்டிருக்கிறார் என்று புரியவில்லை. ஜென்னை அல்லவா கற்றுக் கொள்ள வந்தோம். ஆனால் இங்கு நடப்பதோ வேறாக அல்லவா இருக்கிறது என்று நினைத்தார்கள். அதை குருவிடமும் கேட்டார்கள்.

’நீங்கள் ஜென்னைத் தான் கற்றுக் கொண்டிருக்கின்றீர்கள்’ என்றார் குரு.

சீடர்களுக்குப் புரியவில்லை.

‘மனம் பலவாறாகச் சிதறிக் கொண்டிருக்கும். அதைத் தட்டித் தட்டி ஒழுங்குப்படுத்திக் கொண்டே இருக்க வேண்டும். அதைத்தான் நான் செய்து வருகிறேன்’ என்றார்.

இந்தக் கதை சொல்லும் பாடம் என்னவென்று புரியவில்லை என்றால் தொடருங்கள்.

அரசியல்வாதிகளை மக்கள் மறக்காமல் இருக்க வேண்டும். ஒவ்வொரு கட்சியும் தன்னை நிலை நிறுத்திக் கொள்ள, மக்கள் மனதில் தங்களை இருப்பு வைத்துக் கொண்டே இருப்பதற்காக சம்பவங்களை உருவாக்கிக் கொண்டே இருக்க வேண்டும். 

ஒரே மாதிரியான அரசியல் நிகழ்வுகள் நடந்தால் மக்கள் நாட்டுப்பிரச்சினைகளை பற்றிப் பேச ஆரம்பித்து விடுவார்கள். அது மக்கள் எழுச்சியாக வந்து விடும் ஆபத்து இருக்கிறது. அதையெல்லாம் மக்கள் யோசித்து விடவே கூடாது. டீக்கடையிலும், தினசரிகளிலும், டிவிக்களிலும் ஒவ்வொரு நாளும் இது போன்ற பிரச்சினைகள் பேசிக் கொண்டிருக்க வேண்டும். எழுதப்பட வேண்டும். 

அரசு நலத்திட்டங்கள் எல்லாம் செய்கிறதே என்று கேட்கத் தோன்றும். அமைச்சர் வீட்டிற்கு வரும் சாலைகள் போடப்படும் போது அருகிலிருக்கும் சாலைகளும் செப்பனிடப்படுவது தான் நலத்திட்டங்கள்.

அரசியல் என்பது சாதரண விஷயமில்லை. அதற்கென அரிச்சுவடிகள் தனியானவை. அவை புத்திசாலிகளுக்கு மட்டுமே புரிந்தவை. அந்தப் புத்திசாலிகள் தலைவராகின்றார்கள். கொஞ்சம் புத்திசாலிகள் அமைச்சராகின்றார்கள். பிறர் தொண்டராகவே இருக்கின்றார்கள்.

ஒரு ஜென் குரு தட்டுவதால் சீடருக்கு ஜென்னை போதிப்பது போலவே அரசியல்வாதிகள் கிளப்பும் பிரச்சினைகளால் அரசியல் செய்கின்றார்கள். புரிந்து கொள்ள முயலுங்கள்.


2016 கோவை புத்தக திருவிழாவில் ஒரு நாள்

பொழுது புலரும் முன்பு எழுந்து கொள்வேன். ஒரு கிளாஸ் வெது வெதுப்பான நீர். கொழுப்பைக் குறைக்கும், நாள் முழுவதும் சுறுசுறுப்பாய் இருக்கும் என நண்பர் சொல்லி இருந்தார். டீ, காபி, சுக்கு மல்லிக்காஃபி எல்லாம் போயிடுச்சு. வழக்கம் போல உழவர் சந்தைக்குச் செல்லாமல் புத்தகம் படித்துக் கொண்டிருந்தேன். மனையாள் சந்தைக்குச் சென்று விட்டார்.

வீட்டில் சுத்த சைவம். இலை தழைகள் தான். உறவினரும், நண்பர்களும் வீட்டுப்பக்கம் எட்டிக்கூட பார்ப்பது இல்லை. அப்படி வந்தாலும் ஒரு நாள் அதிகபட்சம் இரண்டு நாட்கள். விட்டால் போதும் என ஓட்டம் பிடிப்பார்கள். காரம், புளி இல்லாமல் அரை உப்புச் சாப்பாடு என்றால் எவர் தான் இருப்பார்கள்?



தினமலரில் கோவை கொடீசியா வளாகத்தில் புத்தக திருவிழா என்று போட்டிருந்தார்கள். பசங்க ஞாயிறுகளில் பதினோரு மணிவாக்கில் டிவியில் உட்கார்ந்து விடுவார்கள். ஒரு பிரயோஜனமும் இல்லாத பொழுது போக்கு டிவி. கொடீசியா கிளம்பினேன். 

வீல் சேர் கொண்டு வந்து கொடுத்தார்கள். முன்புறம் பெரிய பந்தல் போட்டு பெரிய பெரிய புத்தக கம்பெனிகள் ஸ்டால் போட்டிருந்தார்கள். கூட்டமும் அதிகம் தான். எனக்குத் தேவையான ஓஷோ புத்தகங்களை கவிதா பப்ளிகேசனில் வாங்கிக் கொண்டு உள்ளே சென்றால் ராம்ப் இல்லை. படிக்கட்டுகள் எதிரே இளித்தன. இரண்டு பக்கமும் இருந்த ராம்பை அடைத்து வைத்திருந்தார்கள். புத்திசாலிகள்.

ஒரு வழியாக இறங்கி பின் வீல் சேரினை தூக்கி வைத்து உள்ளே சென்றேன். பையன் வீல் சேரினைத் தள்ளிக் கொண்டு சென்றான். நிவேதிதா ஒவ்வொரு ஸ்டாலாக சென்று உள்ளே இருக்கும் புத்தகங்கள் ஒவ்வொன்றினையும் எடுத்து எடுத்துப் பார்ப்பதும் பின்னர் விலையைப் பார்ப்பதுமாய் இருந்தது. பையனும் இருக்கும் ஆங்கில சிறுவர் இதழ்களை எல்லாம் அலசி ஆராய்ந்து புத்தகங்களைத் தேர்வு செய்தான். நானும் மனையாளும் ஸ்டாலின் வாசலில் உட்கார்ந்திருந்தோம். மூன்று மணி ஆயிற்று. இன்னும் அவர்களுக்கு புத்தகங்கள் வாங்கி முடியவில்லை.

பசி கிள்ளல் போட்டது. கேண்டீன் சென்றோம். பசங்க வெஜ் பிரியாணியும், நானும் மனையாளும் இரண்டு சப்பாத்திகளும் சாப்பிட்டோம். அங்கு டேபிள் துடைத்துக் கொண்டிருந்த பெண்மணி மிகவும் களைத்துப் போயிருந்தார். சாப்பிட்டாயாம்மா எனக் கேட்டேன். இன்னும் சாப்பிடவில்லை சார் என்றது அது. மனையாள் கொஞ்சம் காசு கொடுத்துப் போய் சாப்பிடும்மா என்றார்.

மீண்டும் புத்தகத்தேடல் ஆரம்பித்தது. ஆயிற்று ஐந்து மணி. ஒரு வழியாக எல்லா ஸ்டால்களையும் பார்த்து புத்தகங்களைப் புரட்டி தேவைக்கு ஏற்ப புத்தகங்களை வாங்கி வீடு வந்து சேர்ந்தோம்.

வந்ததும் பசங்க இருவரும் பேனாவை எடுத்து ஒவ்வொரு புத்தகங்களிலும் பெயரும் தேதியும் எழுதினார்கள். மனையாளுக்கு அடியேன் சலுகை விலை பொன்னியின் செல்வன் பதிப்பினை வாங்கிக் கொடுத்திருந்தேன். இருக்கும் வேலைப்பளுவில் அவர் ஐந்து பாகங்களையும் படிப்பதற்கு ஐந்து வருடம் ஆகும் என நினைக்கிறேன்.

உயிர்மையில் கூட்டம் இல்லை. அதே போல கிழக்குப் பதிப்பகத்திலும் அதிகம் இல்லை. காலச்சுவடு சொல்லவே வேண்டாம். புத்தகத்தை எடுத்தாலே திகீர் என்கிறது. ஒவ்வொன்றும் 200, 300, 500, 1000 என்று இருக்கிறது. 

குழந்தைகள் அதிகம் வந்திருந்தார்கள். குழந்தைகள்  புத்தகங்கள் அதிகம் விற்பனையாகின்றன. லயன் காமிக்ஸ் ஸ்டாலில் கூட்டம் அதிகம். ஆனால் அவர்களும் அதிக விலை வைத்து விற்கின்றார்கள். 50 ரூபாய்க்கும் 100 ரூபாய்க்கும் ஆங்கில நாவல்கள் கலர் கலரான புத்தகங்கள் விற்பனை செய்தார்கள். பையன் அங்கு சென்று கொஞ்சம் புத்தகங்களை கொண்டு வந்து என்னிடம் காட்டினான். ஒரு புத்தகத்தினை பிரித்தேன். கண்ணில் பட்ட வார்த்தை அய்யோ என கதறவிட்டது. அவனுக்கு இன்னும் கொஞ்சம் வயது வரட்டும் என்று நினைத்து மறுத்து விட்டேன். 

மனையாள் வெளிநாட்டு இலக்கிய புத்தகங்களைக் கொண்டு வந்து கொடுத்தார். ’உள்நாட்டு இலக்கியத்தைப் படிக்கவே முடியவில்லை. இதில் அயல் நாடு வேறா தூக்கித்தூரப்போடு’ என்றேன். பின்னே எரிச்சலாக இருக்காதா? கதாபாத்திரங்களின் பெயர்களை நினைவில் வைத்துக் கொள்ளவே முடியாது. அந்தக் கலாச்சாரத்தைப் படித்து என்ன கிழிக்கப்போகின்றோம்? நமக்கெல்லாம் ஜானகிராமன் வகையறாக்கள் தான் சரிப்படும். பிகேபி, சுபா, ராஜேஷ்குமார் எல்லாம் படித்து ஏமாந்ததுதான் மிச்சம். பொட்டுப் பிரயோஜனம் இல்லை. இந்த நாசமாப்போகும் சினிமா, டிவிக்கு இந்தப் புத்தகங்கள் எவ்வளவோ பரவாயில்லை. 

கொட்டகையில் இருந்த புத்தக ஸ்டால்களில் கூட்டம் புத்தகங்களை அள்ளியது. வியாபாரம் சூப்பர் சார் என்றார் பில் போடுபவர். ஸ்டாலுக்கு பத்து நாளைக்கு 36000 ரூபாய் கட்டணமாம். ‘பின்னர் ஆள் கூலி, சாப்பாடு, ஹோட்டல் பில், போக்குவரத்துச் செலவு என்று அதற்குப் பிறகுதான் லாபம்’ என்றார். ’அதெல்லாம் தாண்டியாச்சு சார்’ என்றார் அவர் தொடர்ந்து. வளரும் பதிப்பாளர்கள் என்றொரு பகுதியில் ஒரு டேபிளில் கொஞ்சம் புத்தகங்களை வைத்திருந்தார்கள். ஒரு பெரிய புக் ஸ்டாலில் வாசலில் ஒரு பையன் நின்று கொண்டு உள்ளே வாருங்கள் என்று அழைத்துக் கொண்டிருந்தார். இதில் அயர்னி என்னவென்றால் கிண்டில் வேறு விற்றுக் கொண்டிருந்தார்கள். புத்தகத்துக்கும் கிண்டிலுக்கும் சரிப்பட்டு வருமா?

பசங்க இருவரும் புத்தகங்களை எடுத்துப் பிரித்து வைத்துக் கொண்டு சீரியசாகப் படித்துக் கொண்டிருந்தார்கள். அடியேனும் தான். மனையாள் சமையல் செய்யச் சென்று விட்டார். அந்தப் பொன்னியின் செல்வன் புத்தகங்கள் கிச்சனையே பார்த்துக் கொண்டிருந்தன. 

Saturday, August 20, 2016

கேடிஎம் பைக்

பாம்பே நண்பரும் நானும் வெள்ளிங்கிரி மலைக்குச் சென்று வர ஏற்பாடு. ரெட் டாக்சியில் மணியகாரம்பாளையம் வழியாக, வடவள்ளி, தொண்டாமுத்தூர் தாண்டி செம்மேடு வழியாகப் பயணித்தோம். அனேக இடங்களில் வெங்காயம் விளைந்திருந்தது. படல்களில் வெங்காயத்தை சேகரித்துக் கொண்டிருந்தார்கள். மழை பெய்திருந்ததால் காற்று சில்லென்று இருந்தது. சுற்றிலும் பசுமை படர்ந்திருந்த பகுதிகளின் ஊடே செல்லும் சாலையில் கார் சென்று கொண்டிருந்தது.

முட்டம் முத்துவாளி உடனமர் நாகேஸ்வரர் கோவிலில் இறங்கினோம். முத்துவாளியம்மனுக்கு அன்று அபிஷேகம் நடந்தது. மதுரை மீனாட்சி, குமரி அம்மன் மற்றும் முத்துவாளியம்மன் மூவரும் ஒருவரே என்று முன்பு ஒரு முறை கோவிலில் பூஜை செய்பவர் சொல்லி இருந்தார். அழகி என்றால் அழகி. பார்க்கும் போது சொக்கி விடும். மூப்பே இல்லாத அழகி. அருளை அள்ளித்தரும் பேரழகி முத்துவாளியம்மன். அபிஷேகம் முடிந்து காருக்கு திரும்பிய போது ஒரு பெண், ‘அண்ணா, சாப்பிட்டு விட்டுச் செல்லுங்கள்’ என்று முகம் பார்த்துச் சொன்னது. 

பாக்குமட்டைத் தட்டில் நெய், பஞ்சாமிர்தம், பொங்கல், புளிசாதம், தயிர்சாதம், பச்சைப்பயறு சுண்டல் வைத்துக் கொடுத்தது. பத்து உருண்டை சாதம் கொஞ்சம் காய்கறிகளோடு எனது உணவு. ஆனால் இதுவோ மிரள வைத்தது. மனையாளோ தியானம் செய்யாமல் உணவெடுக்க மாட்டார். அக்கா பையன் பிரவீனிடம் நீட்டினேன். ’என்னவோ தெரியவில்லை மாமா, இன்றைக்குப் பார்த்து பயங்கரமாக பசிக்கிறது’ என்றான். பிரச்சினை தீர்ந்தது.

ஆசிரமத்திற்குத் திரும்பினோம். மீண்டும் பள்ளத்தை தோண்டி விட்டார்கள். லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து செல்லும் சுவாமி வெள்ளிங்கிரி ஜீவசமாதிக்குச் செல்லும் பாதையை ஏன் தடுத்து வைத்துக் கொண்டிருக்கின்றார்கள் என்பதே புரியவில்லை. பெரிய பள்ளமாய் தோண்டி வைத்திருந்தார்கள். பள்ளத்துக்குள் இறங்கி பின்னர் நடந்து செல்ல வேண்டும். யாருக்கு என்ன கோபமோ தெரியவில்லை. அங்கிருக்கும் மலைவாழ் மக்கள் குளிப்பதற்கு அந்தப் பாதையைத்தான் பயன்படுத்துகிறார்கள். அதையும் தடுக்கிறார்கள். விரைவில் அவர்களே தானாகவே அமைதியாகி விடுவார்கள் என நினைக்கிறேன்.

சுவாமியின் ஜீவசமாதியில் தியானம் முடித்து உணவருந்தி விட்டு வீடு திரும்பினோம். வீட்டுக்கு நுழையவே இல்லை, பணிக்காக மீண்டும் பயணம் ஆரம்பித்தது.

கார் சென்று கொண்டிருந்த போது திடீரென்று காரின் முன்னால் பைக் ஒன்று வலது பக்கமிருந்து கட் செய்து முன்னால் செல்ல டிரைவர் பிரேக்கை அழுத்த நமக்கு திகீர் என்றது. கண்ணிமைக்கும் நேரத்தில் பைக்காரன் பறந்து விட்டான். 

இப்படித்தான் ஒரு முறை சென்னை வடபழனியிலிருந்து ஏர்போர்ட்டுக்கு அவசரமாகச் சென்று கொண்டிருந்த போது ஒரு பைக் ஓட்டி வந்தவன் காரின் பின்னால் தட்டென்று மோதினான். காரை நிறுத்தி டிரைவர் இறங்குவதற்குள் பறந்து விட்டான். அந்தப் பைக்கும் இந்த பைக்கும் ஆரஞ்சுக் கலர்.

’கேடிஎம் பைக் சார் இது,  சிசி அதிகம்ச. பறக்குறானுவ. டக்டக்குன்னு கட் செய்றானுவ சார். காரில வர்ரவங்க தப்பிச்சுக்குவாங்க. பைக்குல வர்றவங்க தடுமாறி விழுந்தா பின்னாடி வரும் காரோ லாரியோ ஏத்திடுவானுங்க சார். கேட்டா சட்டுனு பிரேக் பிடிக்கலன்னு சொல்லிடுவாங்க. அக்கிரமம் செய்றானுங்க சார். இந்தப் பயலுகள ரோட்டுக்குப் பெத்து விட்டுருக்கானுவ சார் இந்த அப்பனுங்க’ என்றார் கார் டிரைவர்.

அந்த கேடிஎம் பைக் காரின் முன்னால் வந்து சென்ற போது சில்லென்று திகில் பரவி பின்னர் அடங்கியது. படபடப்புத் தீர ஐந்து நிமிடம் ஆனது. எங்காவது ஒரு கல்லோ பள்ளமோ இருந்தால் அந்தப் பையனின் நிலை?

புண்ணியவான்களே, நீங்கள் பைக் ஓட்டுங்கள். அது உங்கள் உரிமை. ஆனால் பாவப்பட்ட சில மனிதர்கள் ஏதோ ஒரு இருசக்கர வாகனத்தில் வருவார்கள். அவர்களுக்கு குடும்பம் உண்டு என்பதை மட்டும் மறந்து விடாதீர்கள். உங்களின் அதீத சந்தோஷம் பிறருக்கு ஆபத்தாகி விட வேண்டாம் என்பதே எனது வேண்டுகோள்.

Saturday, August 13, 2016

துறவு என்பது என்ன? காவி உடுத்தினால் துறவறம் ஆகுமா?

மனதை அழுத்தும் துன்பங்களில் இருந்து விடுபட கோவில்களை நாடுகிறேன். சில சமயம் சாமியார்களை நாடுகிறேன். சில சமயம் அவர்கள் சொல்லித்தரும் பயிற்சிகளைச் செய்கிறேன். எல்லாவற்றையும் துற என்கின்றன நூல்கள். ஒரு சிலர் அத்தனைக்கும் ஆசைப்படு என்கிறார்கள். என்னதான் செய்வது? புரியவில்லை. யாரிடம் கேட்பது என்று புரியவில்லை. என்ன செய்வது என்று புரியவில்லை. எனக்குப் புரியும் படி ஏதாவது சொல்ல முடியுமா? - மாலதி(யூயெஸ்ஸே)

உங்களுக்கான பதிலை ஒரு புத்தகத்திலிருந்து தருகிறேன். அது பலருக்கும் நிச்சயம் உதவும். பலரும் பல மாதிரிச் சொல்லியதுதான். புரியும் படிச் சொல்ல இந்த புத்தகத்தை எடுத்துக் கொள்கிறேன்.

முதலில் மதம், அமைப்புகள் பற்றிய குறிப்பு:-

அன்பே,
மனிதன் அடிமையாகிப் போனான்
ஏனெனில், தனிமைக்குப் பயந்து.

அந்தப் பயத்தால் ஒரு கூட்டம், சமூகம், சங்கம்
அவனுக்குத் தேவைப்பட்டதால்

பயமே அத்தனை அமைப்புகளுக்கும் அடிப்படை
எப்படி இந்த பயந்த மனதால்
சத்தியத்தை அறிய முடியும்?

சத்தியத்தை அறிய துணிவு வேண்டும்
துணிவு தவத்தினால் வருகிறது
எந்தக் கூட்டத்திலிருந்தும் அல்ல.

ஆகவே தான்

எல்லா மதங்களும்
சங்கங்களும் அமைப்புகளும்
சத்தியத்தைத் தேடும் பாதையை
மறைக்கின்றன
மூடுகின்றன
தடை செய்கின்றன. 

(குறிப்பு : சத்தியம் என்பதை உண்மை என்று கருதவும்)

* * *

அடுத்து துறவு பற்றியது.

துறவு பொருள்கள் சம்பந்தப்பட்டதல்ல
எண்ணங்கள் சம்பந்தப்பட்டது
துறவு வெளியே சம்பந்தப்பட்டதல்ல
உள்ளே சம்பந்தப்பட்டது
துறவு உலகம் சம்பந்தப்பட்டதல்ல
ஒருவன் சம்பந்தப்பட்டது

உலகத்தில் இருப்பது பற்று இல்லை
உன் மனதில் உலகம் இருப்பது தான் பற்று
உன் மனதிலிருந்து உலகம் மறைந்து விட்டால் - அது தான் துறவு.

* * *

மனிதன் யதார்த்தத்தில் வாழ்வதில்லை
கனவுகளிலேயே வாழ்கிறான்
ஒவ்வொரு மனமும் தனக்கென ஒரு உலகத்தை
எங்கும் காணக்கிடைக்காத உலகத்தை
உருவாக்கிக் கொண்டுள்ளது

இரவும் பகலும் மனம் கனவுகளிலேயே இருக்கிறது
இந்தக் கனவுகள் கணக்கில்லாமல்
கட்டுக்கடங்காமல் போகும் போது
மனிதன் பைத்தியமாகிப் போகிறான்

ஆரோக்கியமாகவும், தெளிவாகவும் இருத்தல் என்பது
கனவுகளற்று இருப்பதே.

* * * 

ஓஷோவின் இந்தக் கவிதை சொல்லும் அர்த்தங்கள் ஆயிரமாயிரம். அப்துல்கலாம் கனவு காணச் சொன்னாரே என்று ஆரம்பித்து விடாதீர்கள். அது உலக வாழ்க்கை. உலக வாழ்க்கை என்பது வேறு ஒரு மனிதன் துறவு கொள்வது என்பது வேறு. 

இது உங்களுக்கான கனவு. நீங்கள் தெளிவாயிருத்தலே துறவு என்கிறது இந்தக் கவிதை.

அந்தக் காலத்தில் துறவு பூண்டவர்கள் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்தார்கள். நபிகள் திருமணம் செய்து கொண்டவர். கண்ணன் பல திருமணங்களைச் செய்து கொண்டவன். திருக்குரான், கீதைகள் எல்லாம் அருளப்பட்டது திருமணம் ஆனவர்களாலே. திருமணம் ஆகாமல் பிரம்மச்சரியம் ஏற்பதை துறவு என்றுச் சொல்வது அபத்தம். அமைப்பினைப் பாதுகாக்க அல்லது உருவாக்கப் பயன்படுபவை இது போன்ற வேஷங்கள். ஆனால் துறவு என்பது உடலுக்கு அல்ல உள்ளத்துக்கு.

எண்ணங்களில் நான் இல்லாமல் நிகழ்வில் வாழ்வதுதான் உண்மையான துறவு. நிகழ்வில் வாழ ஆரம்பித்தால் உலக வாழ்க்கையை எவ்வாறு வாழ வேண்டும் என புரிந்து கொள்ள முடியும். பிறகென்ன துக்கமும் இல்லை மகிழ்ச்சியும் இல்லை. எல்லாம் ஒன்று தான்.

மனிதன் ஒரு ஆற்றினைப் போல வாழ வேண்டும். குளத்தைப் போல அல்ல.

குறிப்பு : மேற்கண்ட எழுத்து அனைத்தும் ஓஷோவின் ஒரு கோப்பைத் தே நீரில் என்ற புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டவை. நன்றி ஓஷோ மற்றும் கம்யூன்.

Friday, August 12, 2016

குளங்கள்

புதுக்கோட்டை மாவட்டமும் தஞ்சாவூர் மாவட்டமும் இணையும் பார்டரில் தான் எனது ஊர் நெடுவாசலும், அம்மா பிறந்த ஊர் ஆவணமும் இருக்கின்றன. விவரம் தெரிந்த நாளில் இருந்து மாமா ஊரில் தான் அம்மாவுடன் வசித்து வந்தேன். ஊரில் காவிரி ஆற்று விவசாயம் மற்றும் குளத்துப் பாசனமும் உண்டு. ஊரின் கிழக்கே தான் வயற்காடுகள் இருக்கும். ஆறு, குளங்கள் நிறைந்த பகுதி. பச்சைப்பசேல் என்று பசும்பட்டாடை போர்த்திக் கொண்டிருக்கும். இப்போதும் அப்படித்தான் இருக்கின்றன. எதுவும் மாறவில்லை. வெளி நாடு சென்று வந்தவர்களும், ஒரு சிலரும் வீடுகள் கட்டி இருக்கின்றனர். சாலைகள் போடப்பட்டிருக்கின்றன. பதினெட்டு நாட்டு அகமுடையார் ஊரில் தலைக்கிராமம் ஆவணம். அடுத்து நெடுவாசல் கிராமம். 

ஒவ்வொரு ஊரின் நீர் வளத்துக்கு காரணம் அந்த ஊர் குளங்கள்தான். அந்தக் காலத்தில் மோட்டார் எல்லாம் இல்லை. குளிப்பதற்கு குளங்கள் தான் ஒரே வழி. இல்லையென்றால் மண்குடத்தில் தண்ணீர் பிடித்து பொக்கைகளில் நிரப்பி வீட்டில் குளித்துக் கொள்ள வேண்டும். கிணற்றிலிருந்து தான் குடி தண்ணீர் கிடைக்கும். போரெல்லாம் கிடையாது.

ஊரின் மேற்கே சின்னக்குளம் இருக்கும். அது பள்ளிவாசலின் அருகில் இருக்கும். மூன்று நான்கு இடங்களில் படிக்கட்டுகள் இருக்கும். மாலைகளில் பெண்கள் வீட்டுத்துணிகளைக் கொண்டு போய் துவைத்து குளித்து விட்டு வருவார்கள். ஆண்கள் படித்துறை தனியாக இருக்கும். மழைக்காலங்களில் வெள்ளை வெளேரென்று இருக்கும் தண்ணீர் நாளடைவில் ஆரஞ்சு வண்ணத்தில் மாறி விடும். அதிக மழை பெய்யும் போது சின்னக்குளம் நிரம்பி எங்கள் வீட்டு நாவல்மரத்தின் வழியாக வழிந்து சென்று ஆவிகுளம் சென்று சேரும். ஆவிகுளம் நிரம்பினால் தூண்டிக்காரன் கோவில் குளத்தை சேரும். இந்தக் குளமும் நிரம்பினால் ஆவணத்தான் குளத்துக்குச் சென்று சேரும் படி நீர் வழிப்பாதைகள் இருந்தன.

சின்னக்குளத்திற்கு அம்மா என்னைத் தூக்கிச் சென்று குளிக்க வைப்பார்கள். கால்களுக்கு இடையில் இருத்திக் கொண்டு தலைகீழாக தலைமுடியில் சீவக்காய்தூள் போட்டு அலசி விடுவார்கள். குளிப்பதற்கு ஆனந்தமாக இருக்கும். விவரம் தெரிந்த நாட்களில் இருந்து நான் தனியாக குளிக்க கிளம்பி விடுவேன் நண்பர்களுடன்.

ஐந்தாம் வகுப்பு முடிந்து ஆறாம் வகுப்புச் செல்ல வேண்டிய நேரம். தஞ்சாவூர் கலெக்டர் அலுவலகத்திலிருந்து கடிதம் வந்திருந்தது. மூன்று சக்கர சைக்கிள் வேண்டுமென்று விண்ணப்பித்திருந்தோம். அதற்காக உடல் தேர்ச்சிக்காக தஞ்சாவூர் சென்றோம். அங்கு மூன்று மருத்துவர்கள் அமர்ந்திருந்தனர். மாமா என்னிடம் சொன்னார். டாக்டர் கை கொடுப்பார். நன்றாக வலிக்கும்படி அழுத்தினால் தான் உனக்கு வண்டி கிடைக்கும் என்றார். விட்டேனா பார் என்று டாக்டரின் கையை அழுத்திய அழுத்தில் போதுமப்பா என்று அலறினார் மருத்துவர். ஏதோ மெலட்டூரோ என்னவோ நினைவுக்கு வரவில்லை. எம்.ஜி.ஆர் அப்போது சி.எம்.ஆக இருந்தார். அந்த ஊர் திரையரங்கத்தில் விழா. ஏதோ ஒரு மினிஸ்டர்தான் எனக்கு சைக்கிளை வழங்கினார். ஒரு வழியாக வீட்டுக்கு வந்து சேர்ந்தது சைக்கிள்.

அதன் பிறகு வீட்டில் என்ன வேலை? எனது பள்ளி நண்பர்கள் சேகரும், சேதுராமனும் வந்து விடுவார்கள். மூவரும் குளிக்கச் செல்வதென்ன? ஊர் சுற்றச் செல்வதென்ன? கிளம்பினால் மாலைதான் வீட்டுக்கு வருவேன். இவர்கள் எல்லோருக்கும் டியூசன் எடுக்க வேண்டும். நான் பள்ளியில் லீடர். இவர்கள் சுமாராகத்தான் படிப்பார்கள். சொல்லிக் கொடுக்க வேண்டும். டியூசன் தனியாக நடக்கும், ஊர் சுற்றலும் தனியாக நடக்கும்.

சின்னக்குளத்துக்கு அதிகமாகச் செல்ல மாட்டேன். அங்கு சமாதிகள் இருக்கும். அதைப் பார்த்தாலே எனக்குப் பயம். பிச்சநரிக்குளத்துக்குத்தான் அதிகம் குளிக்கச் செல்வதுண்டு. போகும் வழியில் மாரியம்மன் கோவில் குளம் இருக்கும். அதில்  நான் குளிப்பதில்லை. பிச்ச நரிக்குளத்தில் தண்ணீர் வறண்டால் ஆவணத்தான் குளத்துக்கு செல்வதுண்டு. அது புதுக்கோட்டை பட்டுக்கோட்டை வழிச்சாலையில் நான் படித்த அரசு மேல் நிலைப்பள்ளி தாண்டி இருக்கும். காக்கா நீச்சல், தண்ணிக்குள்ளேயே நீச்சல் என்று எல்லா நீச்சலும் அடித்துப் பார்ப்பதுண்டு. ஆற்றில் தண்ணீர் வந்தால் அதில் ஆட்டம்.

பண்ணண்டா குளம் ஒன்று இருக்கிறது. எங்கள் வயலுக்கு அந்தக் குளத்திலிருந்துதான் தண்ணீர் மடை வழியாக வரும். இந்தகுளமும் ஆவணத்தான் குளமும் ஆற்றினை ஒட்டியவாறு கிழக்குப்பகுதியில் இருக்கும். இந்த இரண்டு குளங்களில் இருந்து பாசனம் நடைபெறும். கோடைக்காலத்தில் இந்தக் குளத்து நீரினை வைத்து குளத்தருகில் இருக்கும் வயல்களில் விவசாயம் நடக்கும். அந்த நேரத்தில் அங்கு குளிக்கச் செல்வதுண்டு. இந்தக் குளத்தின் அருகில் தான் மாயன்பெருமாள் கோவில் இருக்கும். சுத்துப்பட்டு ஊரில் இருந்து கோடையில் இந்தக் கோவிலில் பொங்கல் வைத்து வழிபடுவார்கள். மாட்டு வண்டியில் தான் செல்வோம். பெரிய பானையில் சர்க்கரைப்பொங்கலும், வெண்பொங்கலும் வைப்பார்கள். 

அரசு ஆரம்பபள்ளியின் அருகில் ஆவிகுளமும், தூண்டிக்காரன் கோவில் குளம் என்கிற புதுக்குளமும் இருக்கும். மழைக்காலத்தில் தூண்டிக்காரன் கோவில் குளத்தில் தான் குளிக்கச் செல்வது உண்டு. ஆவிகுளத்தில் அவ்வளவாக குளித்தது இல்லை.

காலம் செல்லச் செல்ல வடக்கித்தெரு சுப்பையாதேவர் தன் தோப்பில் போர் போட்டு விட்டார். அகலமான குளியல் தொட்டி போன்று கட்டி இருந்தார். பூமியிலிருந்து கொட்டும் தண்ணீர் குளியல் ஆரம்பித்து விட்டது. இந்தக் குளியல்கள் எல்லாம் விடுமுறை நாட்களில் தான் நடக்கும். பள்ளி நாட்களில் எங்கள் வீட்டுக் கிணற்றுத் தண்ணீரை வாளியில் இறைத்து பொக்கையில் நிரப்பிக் குளிப்பதுண்டு. எனது அப்போதைய சோப்பு என்ன தெரியுமா? மைசூர் ஜாஸ்மின் சோப். இப்போது அந்தச் சோப்பைக் காணமுடியவில்லை.

குளத்தில் குளிப்பது என்பது அவ்வளவு சந்தோஷத்தைத் தரக்கூடிய அற்புதமான தருணம். கொண்டு செல்லும் அழுக்குதுணிகளைத் துவைத்து அலசி வைத்து விட்டு பின்னர் படிக்கட்டில் அமர்ந்து கொண்டு சில்லிட்ட தண்ணீரைக் கையால் எடுக்கும் போது உடல் சிலிர்க்கும். உள்ளே இறங்க கொஞ்சம் தயக்கமாக இருக்கும். குளித்து விட்டு வெளியில் வருபவர் தண்ணீரை அள்ளி மேலே தெளித்து விடுவார். பின் என்ன? ஒரே குதியல். மூச்சு முட்ட தண்ணீருக்குள் அமிழ்ந்து வெளியில் வந்து கண்கள் சிவக்கச் சிவக்க ஆட்டம் போட்டு விட்டு கரைக்கு வந்து சோப்பு போட்டு உடலை நன்கு தேய்க்க வேண்டும். மீண்டும் குளத்திற்குள் தஞ்சம். உடல் சூடு எல்லாம் காணாமல் போய் விடும்.

இப்போது குழாயில் வடியும் தண்ணீரைப் பிடித்து தலையில் ஊற்றிக் கொண்டு ஷாம்பூ, சோப்பு போட்டு உடலைக் கழுவி காய வைத்து குளியலை முடித்து விடுகிறேன். காரில் செல்லும் போது வழியில் தென்படும் குளங்களைப் பார்க்கையில் மனது அசைபோட ஆரம்பித்து விடுகின்றன.

நாகரீகம் இயற்கையோடு இயைந்து வாழ்ந்த மனிதனை வெகுதூரம் தள்ளிக் கொண்டு போய் விட்டது. இயற்கையும் மனிதனின் வாழ்வும் தனிதனியாக இருக்கிறது. ஒவ்வொருவரும் தனிமையில் வாழ்வது போன்று ஆகி விட்டது. பூமிக்கும் நமக்குமான தொடர்பு அற்றுப் போய் விட்டது போல தெரிகிறது.

இனி அந்தகாலம் வரவா போகிறது?

Thursday, August 11, 2016

தூரத்தில் ஏதோ லட்சியம்

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு சூழல், அந்தச் சூழலுக்கு ஏற்ப சிந்தனைகள், செயல்கள், லட்சியங்கள் அதன் விளைவுகள். தினமும் எழுகிறோம் ஓடுகிறோம் தூங்குகிறோம் பின்பு எழுகிறோம். ஒவ்வொரு நாளும் ஒவ்வொருவரும் ஓடிக்கொண்டே இருக்கிறோம். அனைவருக்கும் ஒரே குறிக்கோள் - பணம். இதைத்தான் தேடுகிறோம், ஓடுகிறோம், ஓடிக்கொண்டே இருக்கின்றோம். குதிரையின் கண்ணுக்கு முன்னால் கட்டித் தொங்க விடப்படும் கொள்ளுப்பை போல லட்சியத்தை முன்னால் வைத்துக் கொண்டு ஓடுகிறோம்.

வீடு கட்ட வேண்டும். லட்சியம். வீடு கட்டி முடித்தாகி விட்டது அடுத்து? மீண்டும் தேடல் ஓடல். இந்த ஓட்டம் உடல் நோயில் விழும்போது முடிந்து விடுகிறது. பின்னர் ஆறுதல் தேடுகிறது, அடைக்கலம் தேடுகிறது. அன்பினைத் தேடுகிறது. கொடுப்பதற்கு எவருமில்லை. ஏனென்றால் ஆறுதல் தருபவரும், அடைக்கலம் தருபவரும், அன்பு தருபவரும் ஓடிக் கொண்டிருக்கின்றார்கள்.

லட்சியங்கள் நிறைவேற நிறைவேற எதிரில் வெற்றிடம் நின்று கொண்டிருப்பதை அதன் பிறகுதான் உணர முடியும். வெற்றி என்பது வெற்றிடத்தைத்தான் தரும். வெற்றி என்றாலும் தோல்வி என்றாலும் ஒரே மாதிரியாக இரு என்பதன் அர்த்தம் என்னவென்று புரிந்து விடும்.

எனது நண்பரொருவன் சவுதியில் ஒட்டகம் மேய்த்து வீட்டுக்குப் பணம் அனுப்பிக் கொண்டிருந்தான். அவனின் அம்மா தன் மகள்களுக்கு அந்தப் பணத்தை முழுவதும் செலவு செய்திருக்கிறார். இது அவனுக்குத் தெரியவில்லை. பணம் மொத்தமும் அப்படியே இருக்குமென்று நினைத்துக் கொண்டு இந்தியா வந்திருக்கிறான். ஒரு தொழிலைத் தொடங்கலாம் என்று முடிவு செய்து அம்மாவிடம் பணம் கேட்க அம்மா கையை விரித்து விட்டார். எங்கே போனது பணமெல்லாம் என்று கேட்டபோது மகள்களுக்குச் செய்து விட்டேன் என்றாராம். தன் அக்காள்களிடம் உதவி கேட்டபோது அவர்கள் கை விரித்து விட்டார்கள். வீட்டுக்கு வந்திருந்தான். பிழியப்பிழிய அழுதான். எனது இந்தத் தியாகத்தை எனது சகோதரிகள் கூட மறந்து விட்டார்கள். என் பத்து வருட வாழ்க்கையை இழந்து சம்பாதித்த பொருளை வைத்து அவர்கள் வசதியானவர்களாக இருக்கின்றார்கள். ஆனால் நானோ? அருவியாய் கொட்டியது கண்கள். அழுது முடித்தான்.

தியாகம் என்பது ஒரு சில புத்திசாலி அயோக்கியர்களுக்காக ஒருவரோ அல்லது பலரோ ஏமாற்றப்படுவது. அது உறவாக இருந்தாலும் சரி மதமாக இருந்தாலும் சரி. தியாகம் என்பது முற்றிலும் மனிதனை ஏமாற்றப்பயன்படும் ஒரு வார்த்தை அவ்வளவுதான். ஒரு அரசியல்வாதி தன்னை வளப்படுத்திக் கொள்வதற்காக தன் தொண்டனை தியாகி ஆக்குவான். மன்னன் தன்னைப் பாதுகாத்துக் கொள்வதற்காக போர் வீரனை தியாகி ஆக்குவான். யோசித்தால் எல்லாமும் ஒரு வகை சுய நலமாகத்தான் இருக்கும். ஒருவன் வாழ இன்னொருவன் தன்னை இழப்பதுதான் தியாகம் என்றால் அது ஒரு கொடுமை அல்லவா? கொலை என்றச் சொல்லை விட தியாகம் என்றச் சொல் படுபயங்கரமானது.

’போடா முட்டாப்பயலே, போய் வேற வேலை இருந்தாப்பாருடா’ என்றுச் சொல்லி முடித்ததும் அவனுக்கு சற்றே சந்தோஷம். ஏதோ கடை வைத்திருக்கின்றானாம். நன்றாக வியாபாரம் ஆகிறது தங்கவேலு என்கிறான். காசு வந்ததும் தியாகப் பிரச்சினை மறந்து விட்டது.