மனையாளும், குழந்தைகளும் பொங்கல் விழாவிற்காக சொந்த ஊருக்குச் சென்று விட்டார்கள். எனக்குப் இது போன்ற பாவனை விழாக்கள், சடங்குகள் இவற்றில் எல்லாம் நம்பிக்கைகள் இல்லாது போய் விட்டது. அனுபவம் தந்த பாடம் இது. இதைப் பெறுவதற்கு நான் கொடுத்தது அனேகம்.
கலாச்சாரத்தின் மீது நான் கொண்டிருக்கும் பிடிப்பானது அதிகம். அது மனிதனுக்கு நல் வாழ்க்கைக்கு உதவுகிறது என்பதால்.அதன் காரணமாய் மனிதர்கள் சமூகத்தின் மீது பற்று வைக்கும் இவ்வகை விழாக்கள் பல்லாண்டுகளாய் தொடர்ந்து வர, குழந்தைகள் மனதில் அவை பதிய வைக்கப்பட வேண்டும் என்று விரும்பினேன். அதன் காரணமாய் இவ்வகை விழாக்களை விமரிசையாக கொண்டாடும் கிராமத்தை நோக்கி குழந்தைகளை அனுப்பி வைத்தேன்.
தனிமை என்பது எப்போதும் மனிதனுக்கு உள்ளுணர்வைத் தூண்டி விடும் அற்புதத்தின் தருணம். நான்கு நாட்களின் தனிமை தந்த உற்சாகம் இன்னும் ஒரு வருஷத்திற்கு இருக்கும். அப்படியான தனிமையின் ஊடே கோவையின் ரேஸ்கோர்ஸில் அமர்ந்திருந்தேன்.
அழகான நடைபாதை. அழகிய யுவன்களும், யுவதிகளும், வாழ்க்கையில் பெரும்பகுதியைக் கடந்து விட்டவர்களும் நடந்து கொண்டிருந்தார்கள்.
அப்போது கிட்டத்தட்ட அறுபது வயது மிக்க முதியவர் ஒருவர் என் அருகில் வந்து அமர்ந்தார். வந்ததும் என்னிடம் பேச ஆரம்பித்தார்.
“ மனிதனுக்கு எப்போதும் ஒரு கூட்டம் துணையாக இருக்க வேண்டும். அது நண்பர்களாகவோ அல்லது உறவினர்களாகவோ இருப்பின் நலம். கோபத்தை விடுத்து இப்படிப்பட்ட நல்ல நண்பர்களை யார் யாரை எந்தெந்த வட்டத்தில் வைக்க வேண்டும் என்று அறிந்து கொண்டு அதன் படி அவர்களை வரிசைப்படுத்தி உங்கள் வாழ்வைச் செம்மைப்படுத்துங்கள்” என்றார்.
அவர் சொல்லிய கருத்து என்னைக் கவர்ந்தது. சிரித்துக் கொண்டே தலையாட்டினேன்.
அடுத்த நொடி அவர் அங்கிருந்து சென்று விட்டார். யார் அவர் ? தெரியாது. எதற்காக என்னிடம் அவர் பேசினார்? தெரியாது. விடை தெரியாத எத்த்னையோ கேள்விகளுடன் இவரும் ஒரு கேள்வியாய் மனதில் பதிந்து விட ரேஸ்கோர்ஸ் குளிர ஆரம்பித்தது.
நடைபாதையில் மேலும் பலர் நடந்து கொண்டிருந்தனர். ரேஸ் கோர்ஸ் சாலை வட்டவடிமாய் இருந்தது. சுற்றிலும் மரங்களும் இருந்தன.
* * *