குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, December 18, 2012

ரசம்



தமிழர்களின் வாழ்க்கையில் இன்றியமையாத உணவு என்றால் முதலிடம் பிடிப்பது ரசம். தமிழர் உணவு முறை மருந்து சார் உணவாக, உடலுக்கு எந்த வித தீங்கும் தராத இருந்து வந்தது. இதுகாறும் பல கிராமங்களில், பண்டைய வாழ்க்கைமுறையை கடைபிடித்து வாழும் குடும்பங்களில் உணவுகள் என்றும் மாறாமல் ஒரே வகையானதாக சமைக்கப்பட்டு வருகின்றன.

நவீன கலாசாரத்தின் பின்விளைவுகள் ஏற்படுத்திய பல தாக்கங்கள் தமிழர் உணவுகளுக்கும் நுழைந்து விட்ட காரணத்தால் தமிழர்கள் சர்க்கரை நோய் போன்ற நோய்களின் பிடியில் சிக்கியுள்ளார்கள். இந்தச் சர்க்கரை நோய் உடம்பிலிருந்து முழுவதுமாய் விரட்டி அடிக்க கை வைத்திய முறை இருக்கிறது. உடனடி நிவாரணம் மட்டுமே இக்கால மனிதர்கள் விரும்புகின்றார்கள். ஜலதோஷம், சளி, இருமல், நாட்பட்ட காச நோய்க்கு வீட்டிலேயே செய்யும் அருமையான பல வைத்திய முறைகள் இருக்கின்றன. அதுமட்டுமா என் அம்மா குழந்தை பிறக்காத பெண்களுக்கு ஒரே ஒரு முறை மருந்து கொடுப்பார். உடனடியாக கரு உண்டாகி விடும். இதெல்லாம் கை வைத்திய முறையில் செய்வது. குழந்தை உண்டாக இப்போதெல்லாம் எத்தனையோ லட்சங்களைச் செலவழிக்கின்றார்கள். 

படித்து முடித்து வேலை செய்ய கற்றுக் கொடுக்கப்படுகிறது, உடம்பையும் மனதையும் பாதுகாத்திட எந்த  கல்வியும் தமிழரிடையே இல்லை. அக்காலத்தில் குருகுலவாசத்தில் இறை வணக்கம், தியானம், யோகா, உடலுழைப்புச் சார்ந்த வாழ்வியல் கல்வி முறைகளை பிரதிபலன் பாராது ஆசிரியர்கள் கற்றுக் கொடுத்து வந்தார்கள். பணம் சார்ந்த வாழ்வியல் நவீன கலாச்சாரத்தின் தாக்கத்தில் ஆசிரியர்களும் மாறி விட்டார்கள். கல்வி முறையும் மனிதனை எந்திர மயமாக்கி விட்டது. ஓயாமல் உழைத்துக் கொண்டிருக்கும் இயந்திர பாகங்கள் தேய்வடைந்து ஒரு நாள் தொழிற்சாலையை விட்டு குப்பைக்கு அனுப்பப்படுவதைப் போல இன்றைய மக்கள் பணியிடங்களில் இருந்து குப்பையைப் போல வெளித்தள்ளப்படுகின்றார்கள். இதையெல்லாம் அவர்கள் உணர்ந்து கொள்வதே இல்லை. இது தான் பணத்தின் மீதான மாயை எனப்படுவது.

இப்படிப்பட்டவர்களிடமிருக்கும் மிச்ச சொச்ச பணத்தையும் கார்பொரேட் சாமியார்கள் பயிற்சிகள் கொடுக்கிறேன் பேர்வழி என்று உறிஞ்சிக் கொள்கின்றார்கள். சில முதியவர்கள் தங்கள் பிள்ளைகளை தொழிற்சாலையில் பணிசெய்யும் எந்திரங்களாக மாற்றி அவர்கள் மூலம் பெறும் பணத்தின் வசதியின் காரணமாய் தனிமைப்படுத்தப் பட்டு முடிவில் எந்திரமாகவே மாறிப் போன பிள்ளைகளின் ஆதரவு இன்றி இது போன்ற சாமியார்களின் வசீகரப் பிடியில் சிக்கி இருக்கும் சொத்துக்களையும் அவர்களின் பெயரில் எழுதி வைத்துச் சென்று விடுகின்றார்கள்.

சில தனியார் சாமியார்களின் ட்ரஸ்டுகள் எப்படிக் கோடிகளைக் குவிக்கின்றார்கள் தெரியுமா? தொண்டு என்றுச் சொல்லி சில பல அடிமுட்டாள்களை சிஷ்யர்களாக்கி சம்பளமே கொடுக்காமல் சோறு மட்டும் போட்டு தங்கள் நிறுவன வேலைகளை செய்து கொள்வதால் அப்படிச் சேரும் பணமே பெரும் கோடிகளைக் குவித்து விடுகின்றன. நானும் ஒரு காலத்தில் இப்படியான ஒரு சூழலில் நான்காண்டுகள் எனது காலத்தைச் செலவழித்திருக்கிறேன். 

சரி அது அவர்களின் பாடு !

ரசத்திற்கு வந்து விடுகிறேன். கடுகு, சீரகம், மிளகு, புளி, பெருங்காயம், பூண்டு, உப்பு ஆகிய ஏழு பொருட்களின் மிகச் சிறப்பான கூட்டுக் கலவையே ரசம்.  இந்த ரசத்தின் வேலை ஜீரணத்திற்கு உதவுவது. இப்போதைய அவசர உலகத்தில் எவரும் உணவை மென்று தின்பதே இல்லை. உமிழ் நீரில் இருக்கும் என்சைம்கள் உணவை பற்களால் நன்கு மெல்லும் போது குழம்பாய் மாற்றி ஜீரணிக்க உதவுகிறது. வயிற்றுக்குள் செல்லும் உணவின் சத்தை எளிதில் பிரித்து சேர வேண்டிய இடங்களுக்குள் வயிறு செலுத்தி விடுகிறது. ஆனால் இப்போதைய மக்கள் பற்கள் செய்யும் வேலையை வயிற்றினைச் செய்ய வைத்து விடுகிறார்கள். இவர்களுக்கு இந்த ரசம் பெரும் உதவிகரமாய் இருக்கிறது. மென்று தின்னாமல் கடித்து விழுங்குகின்றார்கள். அதன் காரணமாய் வயிறு படாதபாடு படுகின்றது. 

எந்த நாட்டிலும் உணவே மருந்தாய் உட்கொள்வது கிடையவே கிடையாது. ஆனால் பாரம்பரியமும், பழைமையும் மிக்க தமிழர்களின் வாழ்க்கை முறையே உணவே மருந்து என்று காயத்தை நன்கு பாதுகாத்து வந்தது. கிராமத்தில் வாழ்க்கை நடத்தும் ஒரு பெண் நகரத்திற்குச் சென்றால் தன்னையே ஒரு மாதிரியாக மாற்றிக் கொண்டு அவ்வாழ்க்கையை கிராமத்திற்குள் வந்து காட்டி பெருமையடைவது எப்படி ஒரு நகைச்சுவைக் காட்சியாய் இருக்குமோ அந்தளவுக்கு தமிழர்களின் உணவும் இப்போது மாறிப் போய் விட்டது. அது காலத்தின் கொடுமை அல்ல. மனிதர்களின் மடைமை என்றுதான் சொல்ல வேண்டும்.

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.