கிராமத்தானுக்கு துண்டு என்பது நண்பன். வெயிலில் உழும் போது தலைக்கு பாதுகாப்பாகவும், வியர்வையைத் துடைக்கும் போதும், குளிக்கும் போதும் இப்படி துண்டு என்பது அவனுடன் ஒட்டிப் பிறந்த உறுப்பாகவே இருக்கும். இதே துண்டு விழாக்காலங்களிலும், உறவுகளின் வீடுகளிலும் அவனுக்கு மரியாதையை அளிக்கும். இப்படிப்பட்ட துண்டுக்கு வேறொரு முகமும் உண்டு.
இந்த ஆண்டு இந்தியாவின் பட்ஜெட்டில் விழுந்த துண்டு 5.13 லட்சம் கோடி. மேலும் மேலும் துண்டு அதிகமாகிக் கொண்டே போகிறது.
கிராமத்தானுக்கு உதவியாய் இருந்த துண்டு, மரியாதையை அளித்த துண்டு இந்தியாவிற்கு மாபெரும் அச்சுறுத்தலாய் மாறிய அவலம் இருக்கிறதே அதற்கு காரணம் யார் தெரியுமா ?அனைவரின் விரலும் சுட்டும் ஒரே ஒரு நபர் “ பாரதப் பிரதமர்”.
வரவை விட செலவு அதிகமாகும் போது விழும் எக்ஸ்ட்ராவைத் தான் துண்டு என்கிறோம். இந்தியாவிற்கு துண்டு எப்படி விழுகிறது என்பதை திரு க்ருமூர்த்தி அவர்கள் துக்ளக்கில் பதிவு செய்திருக்கிறார்.
அரசின் வரவை விட செலவு அதிகமாகும் போது விழும் துண்டு நம்பர் ஒன்.
ஏற்றுமதி செய்யும் மதிப்பை விட இறக்குமதி செய்யும் மதிப்பு அதிகமானால் வர்த்தகத்தில் துண்டு விழுகிறது. இது நம்பர் டூ.
நம்பர் ஒன்னுக்கு பல காரணங்கள் இருக்கின்றன.
அதில் நம்பர் ஒன் - மானியம். மானியம் கொடுப்பதினால் அரசின் வரவில் இருந்து செலவழிக்க வேண்டி இருக்கிறது. துண்டு விழுகிறது.
நம்பர் டூ - வரி விலக்கு. அரசுக்கு கிடைக்கக் கூடிய வரவில் பெரும் வெடியை வைப்பது இந்த வரிவிலக்குகள். இதனாலும் துண்டு விழுகிறது.
நம்பர் த்ரீ - இலவசம். மக்களுக்கு இலவசம் கொடுப்பது அக்மார்க் அயோக்கியத்தனம். இதனாலும் பெரிய துண்டு விழுகிறது.
வரி வசூலில் காட்டப்படும் மந்தம், அரசுக்கு வருவாய் இழப்பை ஏற்படுத்துவதால் அதிலும் ஒரு துண்டு விழுகிறது.
ஆகவே நான்கு துண்டுகளும் ஒன்று சேர்ந்து இந்தியாவின் பொருளாதாரக் கழுத்தை நெரிக்கிறது. மக்கள் மூச்சுத் திணற ஆரம்பிக்கின்றார்கள். விலைவாசி உயர ஆரம்பிக்கிறது. மக்கள் துன்பத்தில் உழல ஆரம்பிக்கின்றார்கள்.
நம்பர் டூ துண்டுக்கு காரணம் என்ன தெரியுமா?
ஏற்றுமதி இறக்குமதியில் வித்தியாசம் ஏற்படும் போது, உலக அளவில் இந்திய ரூபாய்க்கு இருக்கும் மதிப்புக் குறைகிறது. ரூபாய் மதிப்பு உயர்ந்தால் நாம் குறைவான ரூபாய் கொடுத்தால் போதுமானது. ரூபாய் மதிப்பு உயர்ந்தால் அதிக ரூபாய் கொடுக்க வேண்டி இருக்கும். இந்த அதிக ரூபாயும் துண்டாய் மாறி விடுகிறது.
இப்படி விழுந்து கொண்டே செல்லும் துண்டினைச் சமாளிக்க கடன் வாங்குகிறது அரசு. கடனுக்கு கொடுக்கும் வட்டியும் ஒரு துண்டு. இப்படியே எல்லாத் துண்டுகளும் ஒன்று சேர்ந்து தான் இந்தியாவின் நடப்பாண்டு பற்றாக்குறை 5.13 லட்சம் கோடி ரூபாய் ஆகி விட்டது.
இந்த துண்டு விழாமல் தடுக்க எஸ்.க்ருமூர்த்தி சில கருத்துக்களை எழுதி இருக்கிறார்.
1. வரியை உயர்த்த வேண்டும்.
2. வரிச்சலுகைகளை நீக்கிட வேண்டும்.
3. ஓட்டுக்காக வழங்கப்படும் இலவசங்களை ஒழித்திட வேண்டும்.
4. மானியங்களை முற்றிலுமாக ஒழித்து விட வேண்டும்.
இப்படிப்பட்ட நடவடிக்கைகளால் தான் இந்தியாவின் கழுத்தை நெறிக்கும் துண்டினை எடுக்க முடியும் என்கிறார் அவர்.
துண்டு எப்பேர்பட்ட வேலைகளைச் செய்கிறது என்று பாருங்கள். நாம் என்னவோ துண்டினை வெகு சாதாரணமான ஒன்று என்று நினைத்துக் கொண்டிருக்கிறோம்.
நன்றி : துக்ளக் மற்றும் எஸ்.க்ருமூர்த்தி அவர்கள். (க்ருவிற்கு காரணம் இருக்கிறது)
திரு சுப்புவிற்கு ஒரு கேள்வி விரைவில்