குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, October 11, 2012

காய்கறிகளில் விஷத்தன்மையை நீக்குவது எப்படி?

கறிவேப்பிலை, மிளகாய், பசலைக்கீரை, கத்தரி, வெண்டை, புடலை போன்றவற்றின் மீது பூச்சிக்கொல்லி மருந்துகள் படிந்திருக்கின்றன. இம்மருந்துகளை நீக்கி விட்டு உணவாகச் சமைத்தால் தான் பூச்சிக்கொல்லி மருந்துகளால் வரக்கூடிய எழுதவே முடியாத பல்வேறு வகை நோய்களில் இருந்து தப்பிக்கலாம்.

சாதாரண தண்ணீரில் கழுவி விட்டு காய்கறிகளைச் சமைப்பது சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொள்வதுக்கு ஒப்பாகும்.

பூச்சுக் கொல்லி விஷத்தன்மையை எப்படி நீக்குவது?

மஞ்சள் தண்ணீர் அல்லது வினிகரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் காய்கறிகளை நன்கு அமிழ்த்தி ஊற விட்டு பின்னர் கழுவிக் கொள்ளவும். இவ்வாறு செய்யும் போது காய்கறிகளின் மீது படிந்திருக்கும் 95 சதவீத மருந்து நீக்கப்படும் என்று கேரளாவைச் சேர்ந்த தனியார் அமைப்பின் ஆய்வறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது. (ஆதாரம் டைம்ஸ் ஆஃப் இந்தியா)

பணக்காரர்களின் அரிசியான பாசுமதியில் மிக அதிகமான பூச்சிக் கொல்லி மருந்து இருக்கிறது என்கிறது அவ்வறிக்கை.

சுகாதாரத் துறையின் அலுவலர்கள் லஞ்சம் வாங்குவதில் மட்டுமே வாழ்க்கை என்பதாய் வாழ்வதால், இது போன்ற மக்களைக் கொல்லும் நஞ்சுகளில் இருந்து தப்பிப்பது என்பது முடியாத ஒன்று.

கேஎஃப்சி சிக்கனில் புழு இருந்தது என்று திருவனந்தபுரத்தின் செய்தி. உலகெங்கும் கடை விரித்திருக்கும் கேஎஃப்சி இது போல அமெரிக்காவில் புழு சிக்கனை விற்றிருந்தால் இந்த நேரம் கடை என்னவாகி இருக்கும் என்று ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். கடையை சோதனை செய்யக்கூட கடைச் சிப்பந்திகள் அனுமதிக்கவில்லையாம்.

நேற்று திரு.குருமூர்த்தியின் கட்டுரை ஒன்றினை வாசித்தேன். சேமிக்கும் வழக்கமுடைய நம் இந்திய மக்களை திரு மன்மோகன் சிங் அவர்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்யச் சொல்கிறார், இதைத்தான் புது பொருளாதார வளர்ச்சி என்கிறார் என்று குருமூர்த்தி சொல்கிறார். காலம் காலமாய் ஒரே வழக்கமுடைய மக்களை திசை திருப்பி அமெரிக்கர்களைப் போல பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வைத்து மக்களை கடன்காரர்களாக்கி, குடும்பங்களை தனிமைப்படுத்தி, சமூக கட்டமைப்பையே உடைத்துப் போடும் அளவுக்கு திரு மன்மோகன் சிங்கின் பொருளாதார சிந்தனை இருக்கிறது என்கிறார் அவர்.

அதுமட்டுமல்ல அமெரிக்காவில் திவாலான மிகப் பெரிய வங்கிகளைப் போல இந்தியாவிலும் உருவாக்கி விட வேண்டுமென்ற திரு.ப.சிதம்பரத்தின் கொள்கையை இப்பொருளாதார சித்தாந்தம் ஊக்குவிக்கின்றது என்றும், இதை நோக்கித்தான் திரு.ப.சி அவர்கள் சென்று கொண்டிருக்கின்றார் என்கிறார் அவர்.

கோவையில் பெரிய பணக்காரர்கள் எல்லோரும் பல சிலிண்டர் கனெக்‌ஷன்களை வைத்துக் கொண்டு, தங்கள் கார்களுக்கு மானியச் சிலிண்டர்களை பயன்படுத்தி உல்லாச வாழ்க்கை வாழ்வது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இதைப் போல அமைச்சர்களும் பயனடைகின்றார்கள் என்பதும் நமக்குத் தெரிந்த ஒன்றே. இதைக் காரணமாய் வைத்துக் கொண்டு ஏழை எளிய மக்களுக்கு வழங்கிய சிலிண்டர்களைக் குறைப்பது பெரிய திருடர்களை ஒழிக்க வீடுகளே இல்லாமல் ஆக்குவது போன்றது. இது  என்னவிதமான பொருளாதார வளர்ச்சியோ தெரியவில்லை.

இன்றைக்கு இருக்கும் டெக்னாலஜியின் அசுர வளர்ச்சியில் போலி அடையாள அட்டை, ரேஷன் அட்டைகளை களைவது வெகு எளிதானது. அதைச் செய்து போலிகளைக் களைந்து விடாமல் இப்படி மக்களை துன்பத்தில் ஆழ்த்துவது மக்கள் விரோத சிந்தனை என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது.

கோவையில் மின்சாரம் வரும் நேரங்கள் மாற்றப்பட்டு இருக்கின்றன. காலையில் 6-8, மதியம் 12-2, இரவு 6-7, 9-10, 11-12, 1-2, 4-5. இப்படி ஒரு மின்சார சப்ளையை உலகத்தில் வேறு எங்கும் மக்கள் அனுபவித்தே இருக்க மாட்டார்கள். அதிமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடங்கள் ஆகி விட்டன. இன்னும் மின்வெட்டு சரிசெய்யப்படவில்லை. அல்லது ஒழுங்கு படுத்தக்கூட இல்லை. இப்படியே சென்றால் தமிழர்கள் பீகாரிகள் போல அகதிகளாய் மாறி விடும் சூழ் நிலை வந்தே தீரும். அதற்குள் ஆட்சியாளர்கள் மின்வெட்டினை ஒழுங்குபடுத்தி விட வேண்டும். ஆனால் நிச்சயம் செய்ய மாட்டார்கள்.

ஓட்டுப்போடும் போது வாங்கிய காசுக்கு பலனை அனுபவித்துத்தானே தீர வேண்டும்? தமிழகம் அனுபவிக்கின்றது.




2 comments:

Anonymous said...

//கோவையில் மின்சாரம் வரும் நேரங்கள் மாற்றப்பட்டு இருக்கின்றன. காலையில் 6-8, மதியம் 12-2, இரவு 6-7, 9-10, 11-12, 1-2, 4-5
உங்களுக்காவது மின்சாரம் வரும் நேரம் தெரியுது. எங்க ஊர் பக்கம் எல்லாம் எப்போதாவதுதான் இருக்கு. ஒரு 16-17 மணி நேரமாவது இருக்கிறது இல்லை. அதுவும் தினமும் வேற வேற நேரம் தான். இதுக்கு மேல மோசமா போகவே முடியாது :((((( இந்த விஷயத்துல தாத்தாவே பரவாலேன்னு ஆய்டுச்சு.

திண்டுக்கல் தனபாலன் said...

நல்லதொரு பகிர்வுக்கு நன்றிங்க...

இங்கும் 16 Hours power CUT...

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.