தனக்குத் துன்பம் ஏன் வருகிறது? என்று யாரும் சிந்திப்பதே இல்லை. இறைவா, என்னை மட்டும் ஏன் இப்படிச் சோதிக்கிறாய் என்று இறைவனைப் பார்த்துக் கேட்கும் கேள்விகளைத் தன்னை நோக்கி ஒருவன் கேட்டுக் கொண்டான் என்றால் துன்பத்தின் ஆரம்ப விதைகள் என்ன என்று கண்டுகொள்ளலாம். ஆனால் எவரும் அவ்வாறு செய்வதே இல்லை.
ஏதோ இறைவன் வேறு வேலையே இல்லாமல் இவனுக்கு மட்டும் துன்பங்களை கொடுத்துக் கொண்டே இருப்பதாக ஒவ்வொருவருக்கும் நினைப்பு. அவர் என்னதான் செய்வார் ? பாவம் மனிதனை விட படாதபாடு பட்டுக் கொண்டிருக்கிறார் அவர்.
தன் குழந்தைகள் தான் செய்யும் செயல்களாலே துன்பங்களை வரவழைத்துக் கொண்டு அவஸ்தைப்படுவதைக் கண்டு கண்ணீர் உகுத்துக் கொண்டிருப்பவர் அவர்தான்.
ரேஸ்கோர்ஸில் இருக்கும் மசானிக் குழந்தைகள் மருத்துவமனை அருகில் ஒரு வேன் நின்றிருந்தது. வேன் உள்ளே கருப்பாய் காக்கிச் சட்டை போட்ட மனிதர் ஒருவர் அழகான குழந்தை ஒன்றினை வைத்துக் கொண்டிருந்தார். மனதில் சந்தேகம் எழ அவர் அருகில் சென்று யார், என்ன என்ற கேள்விகளைக் கேட்டேன்.
குறைப்பிரவசமாய் பிறந்த அக்குழந்தையை யாரோ ஒரு பெண் குப்பைத்தொட்டியில் வீசி எறிந்து விட்டுச் சென்று விட்டாராம். யாரோ ஒரு நபர் அக்குழந்தையைக் கண்டுபிடித்துப் பார்த்த போது, உயிர் மட்டும் இருந்ததாம். யார் யாரிடமோ சென்று தாய்ப்பால் வாங்கி வந்து அதற்கு ஊட்டி விட்டு ஒரு தனியார் நிறுவனம் நடத்தும் விடுதியில் கொண்டு வந்து விட்டு விட்டாராம். அக்குழந்தையை கண்ணும் கருத்துமாய் பார்த்து வளர்த்து வருகின்றார்கள். இப்படியும் சில பெண்கள் இருக்கின்றார்கள். இதை விட கொடுமையான மனம் கொண்ட பெண்களும் இருக்கத்தான் செய்கின்றார்கள்.
அந்த நிறுவனம் மேலும் மேலும் வளர்ந்து இது போன்ற மக்கட் சேவையை ஆற்றிட வேண்டும் என்று எல்லாம் வல்ல இறைவனிடம் பிரார்த்திக்கிறேன்.
தாய் என்பவளுக்கு ஏன் இப்படிப்பட்ட முடிவு எடுக்கத் தோன்றுகிறது என்று ஆராய்ந்து பார்த்தோம் என்றால் சமூகக்கட்டுப்பாடுகள் நீங்கிய ஒரு சூழலில் அவர் வாழ்ந்து வருவது என்ற ஒரு காரணத்தைத் தவிர வேறு எதையும் என்னால் யோசித்துப் பார்க்க முடியவில்லை.
ஒவ்வொரு மனிதனுக்கும் சுயகட்டுப்பாடு அத்துடன் சமூகக் கட்டுப்பாடு வேண்டும் என்பது எனது முடிவு. சமூகத்திலிருந்து பிரிந்து தனியாய் வாழும் மனிதர்களால் தான் இப்படிப்பட்ட கொடூர முடிவுகளை எடுக்க நேரிடும்.
மேல்தட்டு மக்களிடம் மட்டுமே காணப்படும் இவ்வகையான கொடூர மனப்பான்மை கீழ்த்தட்டு மக்களிடமும் மிகுந்து வருவது வேதனை தருகிறது. சமூகம் சிதைக்கப்பட்டு விட்டது என்பதையே மேலே இருக்கும் தாராவின் வாழ்க்கை நமக்குக் காட்டுகிறது.
சமூகம் என்பது உறவு, உற்றார் என்று கொள்க.