தினமலரில் தினமும் சசிகலா பற்றிய கட்டம் கட்டிய செய்திகள். தினமணியில் அதிகமாய் ஒன்றையும் காணவில்லை. ஜூனியர் விகடனில் சசிகலா பிரச்சினை, நக்கீரனில் இன்னும் பிளாக்குகளில் எல்லாம் சசிகலா போயஸ் தோட்டத்தில் இருந்து விரட்டப்பட்டார். சசிகலா கும்பல் களையெடுக்கப்படுகின்றன என்றெல்லாம் செய்திகள் பரபரப்பாய் வெளியாகிக் கொண்டிருக்கின்றன.டீக்கடைகள், கட்சிகள், பத்திரிக்கைகள் என்று மனிதர்கள் இருக்கும் இடமெல்லாம் பரபரப்பான செய்தி “சசிகலா பெயர்ச்சி”.
இத்தனை பரபரப்பாய் பேசப்படும் செய்தியில் ஏதாவது உண்மை இருக்கிறதா என்று கேட்டால், யாருக்குமே தெரியாது. உண்மைப் பிரச்சினை தான் என்ன?
ஜெயலலிதா அவர்களுக்கும், சசிகலா அவர்களுக்கு மட்டுமே தெரிந்த உண்மையை ஏதோ இவர்கள் தினமலர், தினமணி, ஜூனியர் விகடன், நக்கீரன் பத்திரிக்கை முதலாளிகளை அழைத்து வந்து விலாவரியாகச் சொன்னது போல எழுதுகின்றார்கள்.
இருவருக்கும் மட்டுமே தெரிந்த உண்மையை, எதுவும் தெரியாத இவர்களை கலந்து கட்டி எழுதுவது தான் “பத்திரிக்கைச் சுதந்திரம்” என்கிறார்கள்.
என்ன பிரச்சினை என்பதை இருவரும் யாரிடமும் சொல்லப் போவதுமில்லை, அது பிரச்சினையாய் உருவெடுத்து தமிழ் நாட்டை அழிக்கப்போவதும் இல்லை. எதுவுமே நடக்கப் போவதில்லை. ஆனால் ஏதேதோ நடக்கப் போவதாக எழுதுகின்றார்கள். நடந்து கொண்டிருப்பதாய் எழுதுகின்றார்கள்.
ஏன் இப்படி என்று ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். பெரும்பான்மையான பத்திரிக்கைகளுக்கு முதலாளியாய் இருப்பவர்கள் ஹேஸ்யங்களை உண்மைகளாய் உருவகப்படுத்துகின்றார்கள். அதன்மூலம் தன் இருப்பை பிறருக்கு கவனப்படுத்துகின்றார்கள். அந்த இருப்பின் மூலம் தன் அதிகாரத்தை பிறரிடம் திணிக்க முற்படுகின்றார்கள். மீடியாக்கள் இதைத்தான் செய்கின்றன. இதற்குப் பெயர் பிழைப்புவாதம். மற்றொரு பெயர் “ பத்திரிக்கை தீவிரவாதம்”.
இத்தகைய முதலாளிகள் தான் உண்மையான ”தீவிரவாதிகள்”. மக்களிடம் பீதியைக் கிளப்புவது, உண்மையற்ற செய்திகளை உண்மை என்பது போல எழுதுவது, மக்களிடம் குழப்பத்தை உருவாக்குவது, நடக்காத ஒன்றை நடந்தது போல எழுதுவது போன்ற இழிசெயல்களை பத்திரிக்கைச் சுதந்திரம் என்கிற பெயரில் எழுதுகின்றார்கள். இவ்வகை தீவிரவாதிகளிடமிருந்து மக்கள் வெகு ஜாக்கிரதையாய் இருக்க வேண்டும்.
தினசரிகளைப் படிப்போரும், இதழ்களை படிக்கும் போதும் சுயசிந்தனை கொஞ்சம் தேவை.
ஜெயலலிதா, சசிகலா பிரண்டாக இருந்தபோதும், இருவரிடமும் பிரச்சினை என்கிறபோதும் யாருக்கும் பணமோ வேறு ஏதோ வரப்போவதில்லை. இந்தச் செய்தியால் தமிழக மக்களுக்கு எள்ளளவு பிரயோசனமும் இல்லை.
உழைக்க வேண்டும். அதனால் வாழ வேண்டும். இதை விடுத்து அவர்களுக்குள் இருக்கும் பிரச்சினை பற்றி பேசினால் நமக்கு என்ன நன்மை கிடைக்கும்? தீமைதான் பரிசாய் கிடைக்கும்.
- அன்புடன்
கோவை எம் தங்கவேல்