குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, August 18, 2011

சொத்து சம்பந்தமான வழக்குகள் - உயில் பிரச்சினை

சமீபத்தில் எங்களிடம் வந்த கிளையண்ட்டுக்கு ஒரு பிரச்சினை. தனது தங்கை என் மீது சொத்தில் பங்கு இருப்பதாக வழக்குப் போட்டிருக்கிறார் என்றார். வழக்கு விபரங்கள் அனைத்தும் கொண்டு வரும்படி பணித்தோம்.

இவரோடு பிறந்தது மூவர். இருவர் பெண்கள். ஒருவர் ஆண். இவரின் அப்பா இறக்கும் முன்பே இவருக்கும், இவரின் சகோதரருக்கும் உயில் எழுதி வைத்திருக்கிறார். அப்போது இவரின் சகோதரிகள் இருவருக்கும் திருமணமாகி குழந்தைகள் வேறு இருப்பதையும், அக்குழந்தைகளுக்கு செய்ய வேண்டிய தாய் மாமன் சீரை சகோதரர்கள் இருவரும் இணைந்து செய்ய வேண்டியது என்றும், பெண்கள் இருவருக்கும் சொத்தில் பங்கு இல்லை என்றும் உயில் எழுதி வைத்து இறந்து விட்டார். அதன் பிறகு சகோதரர்கள் இருவரும் அந்த உயிலை ரெஜிஸ்டர் செய்து, அதன்படி பாகப்பிரிவினை செய்து கொண்டனர். கிளையண்ட்டின் அண்ணன் தன் பாகத்தை பத்து வருடங்களுக்கு முன்பு விற்பனை செய்து விட்டார். கிளையண்ட் தற்போது விற்க முனையும் போது இளைய சகோதரி சொத்தில் பங்கு இருக்கின்றது என்று கேஸ் போட்டு விட்டார்.

கிளையண்ட்டிடம் 100% சேலஞ்ச் செய்து சொத்தினை விற்குமாறு சொன்னோம். அதன்பிறகு சந்தோஷத்துடன் சென்றார்.

அதே போல பட்டாவினால் மிகப் பெரிய சொத்து ஒன்று இதுகாறும் விற்பனை செய்ய இயலாமல் போனது. அதுமட்டுமல்ல சென்னையின் பிரதான இடம் கிட்டத்தட்ட ஒரு கிராமமே ஒருவருக்குச் சொந்தமானது. ஆனால் அந்தக் கிராமத்தின் இன்றைய நிலையோ எண்ணிப் பார்க்க முடியாத மதிப்பு உள்ளது. எங்கே என்பதை அடுத்த பதிவில் பார்க்கலாம்.

Friday, August 5, 2011

உத்திரமும் பிள்ளைப் பேறும் - அந்தக்காலமும் இந்தக் காலமும்

வீட்டின் கதவுகள் அடிக்கடி காற்றில் வந்து சாத்திக் கொண்டு, பெரும் அவஸ்தையை உண்டு செய்து வந்தது. அதைச் சரி செய்ய நாகராஜ் என்ற ஆசாரி ஒருவரை வரவழைத்தேன்.

வயதானவர். ஆரம்பத்தில் முகம் கொடுத்தே பேச வில்லை. போகப் போக கொஞ்சம் கொஞ்சமாக பேச ஆரம்பித்தார். ”கதவில் மேக்னெட் பொருத்தி விட்டால் சரியாகி விடும்” என்று சொல்லி, அதைப் பொருத்த ஆரம்பித்தார்.

”அந்தக் காலத்தில் என் அப்பா கூலியே வாங்காமல் வேலை செய்தார். மோதிரம், செயின் செய்யச் சொல்லுபவர்கள் அதற்கு செய்கூலியாக நெற்மணிகளையோ, பருப்பு வகைகளையோ இன்ன பிற தானியங்களையோ தந்து விடுவார்கள். அப்பா கை நீட்டி யாரிடமும் காசு வாங்கி நான் பார்த்ததில்லை” என்றார்.

சீனிக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, தட்டப்பயறு எல்லாம் அம்மா அவித்துக் கொடுப்பார்கள். நாகர்கோவிலில் (ஏதோ ஒரு பெருமாள் கோவில் என்றுச் சொன்னார்) தரும் சுண்டல் வகைகளைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். ”மலையேறி அதை வாங்கி வருவதற்குள் பெரும் பாடு பட வேண்டியிருக்கும். ஆனால் சுண்டலின் சுவையோ வார்த்தையால் சொல்ல முடியாது” என்று அந்தக் காலத்திற்கே சென்று வந்தார்.

”தம்பி, உங்களிடம் ஒரு விஷயம் சொல்கிறேன் கேளுங்கள்” என்றார். நானும் ஆவலுடன் அவரின் முகத்தையே கவனித்துக் கொண்டிருந்தேன்.

”அந்தக் காலங்களில் வீடுகளில் மூன்று உத்திரங்கள் வைத்து வீடு கட்டுவார்கள். ஏன் அப்படி என்று எனக்கு நீண்ட நாட்களாக தெரியவில்லை தம்பி. நீண்ட நாள் கழித்துதான் எனக்கு காரணம் புரிந்தது. முதல் இரண்டு உத்திரங்களும் வீட்டின் பாதுகாப்பிற்கும், நடு உத்திரம் பிள்ளைப் பேறுக்கும் ” என்றார்.

”பிள்ளைப் பேறா? ”

“ஆமாம் தம்பி, பெண்கள் குழந்தைகள் பெற அந்த உத்திரத்தைத் தான் பயன்படுத்துவார்களாம். கீழே வைக்கோல் போட்டு மெத்தை போல செய்து, உத்திரத்தில் கயிறொன்றினைக் கட்டி தொங்க விடுவார்களாம். பிரசவ வலி வந்ததும் அந்தக் கயிற்றினைப் பிடித்து உந்தச் செய்வார்களாம். எளிதில் குழந்தை பிறந்து விடுமாம்” என்றார்.

ஒரு நிமிடம் இன்றைய காலப் பெண்களின் பிரசவத்தை நினைத்துப் பாருங்கள். கரு உருவானதில் இருந்து, குழந்தையின் வயது ஐந்து ஆகும் வரையிலும் மருத்துவரிடம் சென்று கொண்டிருக்கிறார்கள். அந்தக் காலக் குழந்தைகளுக்கு அவ்வளவு எளிதில் காய்ச்சலோ, சளியோ பிடிக்காது. என் மகன் பிறந்த போது என் அம்மா தான் மனைவியைக் கவனித்துக் கொண்டார். ஒரு வருடம் மகனுக்கு காய்ச்சலோ சளியோ பிடிக்கவில்லை.

கருவில் இருக்கும் போது, இரவில் தூங்க விடமாட்டாள். வாந்தி வாந்தி வாந்தி. தட்டில் மண் போட்டு தனியாக வைத்திருப்பேன். சாப்பிடுவாள். வாந்தி எடுப்பாள். சத்து போதாது. தம்பி வண்டியை எடுத்துக் கொண்டு வந்து, மனைவியை ஏற்றி ஆஸ்பிட்டலுக்குச் சென்று குளுக்கோஸ் ஏற்றி வருவான். செல்லும் வழியில் பல இடங்களில் வாந்தி எடுப்பாராம் மனைவி. 

மனைவிக்கு ஆறுமாதம் முடிந்ததும் எங்கோ சென்று “செண்பகக்குருவிகளை” பிடித்துக் கொண்டு வந்து கொடுத்து, குழம்பு வைத்துச் சாப்பிடக் கொடுத்தான் எனது நண்பன் ஒருவன். அதன் கண்கள் சிவப்பாய் இருக்கும். மகன் பிறந்து, எனது நர்ஸ் தோழி பையனைக் கையில் கொண்டு வந்து கொடுத்த போது, பையன் விழித்துக் கொண்டே என்னைப் பார்த்தான். 

அந்தக் காலத்தில் உணவுக்கட்டுப்பாடு கடுமையானதாக இருக்கும். குழந்தை பிறந்த முதல் இரண்டு நாளைக்கு காலையில் அரை இட்லி மட்டுமே.   இந்த அரை இட்லிக்கு அரை வெங்காயமும், அரை தக்காளிப் பழத்தையும், நான்கு வெள்ளை உளுந்தையும் துளி எண்ணெய் விட்டு வதக்கி, அம்மியில் அரைத்து சட்னியாய் கொடுப்பார்கள். இரவும் அதே. 

இடையில் குடிக்க பால் கொடுப்பார்கள். சீரகமும், ஒரே ஒரு பூண்டு பல்லும், தக்காளியும் சேர்த்து ரசம் செய்து குழந்தை பிறந்த பிறகு ஒரு வாரத்திற்கு மதியச் சாப்பாடு கொடுப்பார்கள். துளியூண்டு எண்ணெய் சேர்த்து, கருவேப்பிலை சேர்ப்பார்களாம்.

பால் சுரக்க பால் சுறா வாங்கி வந்து கொடுப்பார்கள். சித்தப்பா பால் சுராவை நாகப்பட்டினம் மார்க்கெட்டில் இருந்து வாங்கி, மஞ்சள் பையில் பிளாஸ்டிக்  கவர் போட்டு கிட்டத்தட்ட 300 கிலோ மீட்டர் பஸ்ஸில் பயணம் செய்து, வந்து கொடுப்பார்.கருவாடு தீர்ந்து விட்டது என்றுச் சொன்னால் தம்பியிடம் கொடுத்து அனுப்புவார் சித்தப்பா. இன்றைக்கு இவரைப் போன்ற சித்தப்பாவைப் பார்க்க முடியுமா? மாமா பச்சைத்தட்டக்காரா வாங்கி வந்து ஸ்டாக் வைத்திருப்பார். யாராவது ஊருக்கு வரும் போது பார்சல் வீடு வந்து சேரும். தங்கை வீட்டிலிருந்து உளுந்து, மல்லி, மிளகாய் வந்து சேரும். பொறுக்கி எடுத்த தேங்காய் காய வைத்து, ஆட்டி கமகமவென எண்ணெய் வரும்.  வயலில் உளுந்து எடுத்து அடிக்கும் போதே, “தங்கத்து நாலு மரக்கா எடுத்து வைத்து விடு” என்று மாமா சொல்ல தனியாய் சாக்கிற்குள் உளுந்து கிடக்கும். ஊருக்கு போய் வரும் போது காரில் இடமில்லாமல் மூட்டையும் முடிச்சுமாய் கிடக்கும்.

ஒரு முறை வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, ”மண் சட்டியில் குழம்பு வைத்தால் சுவையாக இருக்கும் போல இருக்கே”ன்னு சொன்ன ஒரு வார்த்தைக்கு, காரில் மண் சட்டிகளை புதிதாய் வாங்கி பேப்பர் வைத்து, டிரைவரிடம் ”இதைப் பத்திரமாய் ஊருக்குக் கொண்டு போய் சேர்த்து விடு” என்று அம்மா சொல்லிக் கொண்டிருந்தார்.

“தம்பி ஊருக்கு கிளம்பிட்டியாமே, இந்தா வீட்டில் சோளமும், கடலையும் போட்டோம். கொஞ்சம் இருக்கு எடுத்துக் கொண்டு போ” என்று அப்பாவின் நண்பர் கொண்டு வந்து கொடுப்பார்.

சொல்லிக் கொண்டு போகலாம் என்று சித்தி வீட்டிற்குச் சென்றால் வரும் போது பல வித முடிச்சுகளில் பல் வேறு பொருட்கள் கொடுத்து அனுப்பி இருப்பார் சித்தி. நண்பர்கள் வீட்டிலிருந்து என்னென்ன பொருட்கள் எல்லாம் வந்து சேரும்.

இன்றைக்கு இவர்கள் எல்லாரிடமிருந்தும் அன்பும், பாசமும் எனக்கு கிடைத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் அவை என் பிள்ளைகளுக்கு கிடைக்குமா என்பதை நினைக்கையில் நவீன காலத்தின் மீதான வெறுப்பு மனதிற்குள் குமிழ்கிறது.

எங்கோ வந்து விட்டேன் பாருங்கள். பிள்ளைப் பேற்றுக்கு வருவோம்.

அரை வீட்டில் உரித்த பச்சை தட்டக்காரா கருவாட்டினையும், முருங்கைக்காயையும் சேர்த்து மிளகாய் கூட சேர்க்காமல் குழம்பு என்ற பேரில் சாதத்தில் ரசம் போல ஊற்றிக் கொடுப்பார்.

பதினைந்து நாட்கள் கழித்து காய்கறிகள், பருப்பு என்று கால் வயிறு நிரம்பும் படி தான் சாப்பாடு கொடுப்பார்கள். அதற்கடுத்த மாதங்களில் அரை வயிறு நிரம்பும் படி சாப்பாடு கொடுப்பார்கள். எங்கள் கிராமத்து பழக்க வழக்கங்கள் வேறு. நகரப் பழக்க வழக்கங்கள் வேறு என்பதை மகள் பிறந்த பிறகு கண்டு கொண்டேன்.

குழந்தைக்கு மாந்தம் வந்து விடும் என்று வேறு எந்த உணவும் கொடுக்கமாட்டார்கள். காதல் திருமணம் என்பதால் மனைவின் அம்மா வரவில்லை.

மகள் மனைவியின் வயிற்றில் இருக்கும் போதே, மனைவின் அம்மாவின் அரவணைப்பிற்குள் வந்து விட்டார். மகள் பிறந்த உடனே சிக்கன், ஈரல் கொடுத்துச் சாப்பிடச் சொன்னார்கள். அரண்டு போய் விட்டேன். ஒன்றும் ஆகவில்லை. மகள் நன்றாகத்தான் வளர்ந்தார்.

கிராமப் பழக்கங்களும், வழக்கங்களும் இனி எந்தப் பெண்ணாலும் தொடர்ந்து பயன்படுத்தப்டாது. இப்படியே தமிழர்களின் எண்ணற்ற அற்புதமான பல வழக்கங்கள் ஒழிந்து போய் விட்டன.

1200 சதுர அடி வீட்டிற்குள், உலகத்தையே கொண்டு வந்து, வெறும் சிமெண்டினால் கட்டப்பட்ட அலங்கார சந்தைகளுக்குள், விஷத்தைக் காசு கொடுத்து சாப்பிட்டுக் கொண்டு மனிதர்கள் என்ற போர்வையில் இயந்திரமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் இக்கால மனிதர்களுக்கு நான் மேலே எழுதி இருப்பது ஏதோ ஒரு கதை போல தோன்றும். அதுதான் நாகரீகம் என்பார்கள் இக்காலத்தில். உறவுகளை இழந்து, உறக்கமும் இழந்து அனாதையாய் நின்று கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள் இக்காலத்தில்.

சுருக்கமாய்ச் சொன்னால் ”நவீன காலம் என்பது நரகத்தின் காலம்”


* * *


Thursday, August 4, 2011

டிரேடிங் வெப்சைட்கள் - ஏமாற்றும் வித்தைக்காரர்கள்

டிரேடிங் பிசினஸ் ஆரம்பித்த புதிதில் இறக்குமதி, ஏற்றுமதிக்கான சில பிரத்யேக வெப்சைட்டுகளை அறிய நேர்ந்தது. அதில் உறுப்பினராய்ச் சேர்ந்தால் எளிதில் இறக்குமதியாளர்களின் தேவைகளை அறிந்து கொண்டு, கொட்டேஷன் கொடுத்தால் ஆர்டர் கிடைக்கும் என்று அந்த வெப்சைட்டுகளில் சொல்லி இருந்தார்கள். அதன்படி நானும் ஒரு வெப்சைட்டிற்கு பணம் கட்டி மெம்பர் ஆனேன். இறக்குமதியாளர்களின் முகவரியுடன், அவர்களின் தேவைகளும் வரிசையாய் பட்டியலிட, நானும் அசராமல் கொட்டேஷன் அனுப்பி வைத்துக் கொண்டிருந்தேன். எவரும் பதில் தரவே இல்லை. போன் பேசினால் சொத்தை விற்றுத்தான் போன் பில் கட்ட வேண்டி வரும் என்பதால் மெயில் மூலமே அனுப்பி வந்தேன். சரி நம்மைப் போல பலரும் மெம்பராகி இருப்பார்கள் அல்லவா? ஆகவே வேறு யாருக்கும் ஆர்டர் கிடைத்திருக்கும் என்று நினைத்திருந்தேன்.

இந்தச் சூழலில் எனது நண்பர் ஒருவர் அமெரிக்காவில் இருந்தார். எதேச்சையாக அவரின் தொடர்பு கிடைக்க, இருவரும் பல விஷயங்களைப் பேசிக் கொண்டிருப்போம். அந்த நேரம் பார்த்து நண்பர் வசித்த இடத்திலிருந்து ஒரு இறக்குமதியாளரின் பையிங் லீட்ஸ் வர, நண்பரிடம் அந்த லீடைக் கொடுத்து, இறக்குமதியாளரை நேரில் சந்திக்கும் படியும், அவருக்குத் தேவையான பொருளை தயார் செய்து கொடுக்க நமது கம்பெனியைப் பற்றியும் எடுத்துச் சொல்லி ஆர்டர் கிடைக்க உதவி செய்யும் படி கேட்க, நண்பருக்கு ஆர்வம் பிறந்து சில சாம்பிள்களைப் பெற்றுக் கொண்டு, கம்பெனி புரபைலுடன் நேரில் அப்பாயிண்ட்மெண்ட் பெற்றுச் சென்றிருக்கிறார்.

சந்திப்பின் போது, அந்தக் கம்பெனியின் பையின் லீடை எடுத்துக் காட்டி இருக்கிறார். அது ஒரு வருடத்திற்கு முன்பு அந்தக் குறிப்பிட்ட வெப்சைட்டில் போடப்பட்டதாகவும், போட்ட ஒரு நாளுக்குள் ஏற்றுமதியாளரை அந்தக் கம்பெனியே ஏற்பாடு செய்து விட்டதாகவும்,  தற்போது அவர்களிடமிருந்துதான் இறக்குமதி செய்து கொண்டிருப்பதாகவும் சொல்லி இருக்கிறார். ஆனால் அந்த வெப்சைட்டில் அந்தக் குறிப்பிட்ட கம்பெனி, இப்போதுதான் அவர்களின் தேவையை போஸ்ட்டிங் செய்திருந்தது. அதை அந்தக் கம்பெனி முதலாளியிடம் காட்டி விட்டு வந்திருக்கிறார் நண்பர்.

இது போன்ற டிரேடிங் வெப்சைட்டுகள் முதலிலேயே பிசினஸ்ஸை முடித்து விட்டு, முடிந்து போன ஒரு விஷயத்தை பதிவாக்கி, அதை வைத்து காசு பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்று அறிந்தேன். அதன் பிறகு எங்களூர் ஏற்றுமதியாளர் சங்கத்தில் அந்தக் கம்பெனியின் தில்லுமுல்லுகளை ஆதாரத்துடன் காட்டிய போது, அதிர்ந்தனர் மற்ற ஏற்றுமதியாளர்கள். இது ஒரு பக்கா திருட்டு.

அதுமட்டுமல்ல, கடந்த வருடத்தில் நிலக்கரி தேவை என்று ஒரு டிரேடிங் வெப்சைட்டில் போஸ்ட்டிங் போட்ட உடனே, அந்த டிரேடிங் வெப்சைட் கம்பெனியிலிருந்தே போனில் அழைத்து அவர்களே நிலக்கரியைச் சப்ளை செய்கிறோம் என்று கேட்டார்கள். எப்படி இருக்கிறது பாருங்கள்? இது போன்ற டிரேடிங் வெப்சைட்காரர்கள் செய்யும் அயோக்கியத்தனம் !

இந்தியாவில் மட்டுமல்ல, உலகெங்கும் இருக்கும் டிரேடிங் இணையதளங்கள் அனைத்தும் ஃப்ராடு வேலை செய்து வருகின்றன. அதுமட்டுமல்ல, உங்களுக்கென்று தனி வெப்சைட், கீ வேர்ட் என்று ஆரம்பிப்பார்கள். ஏமாந்தீர்கள் என்றால் அது அவர்களுக்கு லாபம். நமக்கு ஒரு பைசா லாபம் கிடைக்காது. ஏமாற்றும் இது போன்ற இணையதளங்களை நீங்கள் நம்பி காசை கரியாக்க வேண்டாம் என்று கேட்டுக் கொள்கிறேன்.

* * *

Wednesday, August 3, 2011

பவர் செல்லுமா செல்லாதா?

சொத்து வாங்கும் போது பத்திரம் என்பதைத் தாண்டி பவர் பத்திரம் என்பதைப் பலரும் கேள்விப்பட்டிருப்பீர்கள். அதைப் பற்றிய ஒரு பதிவுதான் இது. இப்போது ஒரு சம்பவத்தைப் பார்க்கலாம்.

கே என்பவர் தனது 10 ஏக்கர் சொத்தினை ஜே என்பவருக்கு பவர் எழுதிக் கொடுத்திருக்கிறார். இந்த ஜே என்பவர் பத்து ஏக்கரில் ஒரு ஏக்கரை வேறு ஒருவருக்கு விற்று விட்டார். மீதமுள்ள 9 ஏக்கரில் அரசாங்கம் 5 ஏக்கரை சாலைக்காக எடுத்துக் கொள்கிறது. அரசு எடுத்துக்கொண்ட விபரங்களை பவர் வைத்திருக்கும் ஜே என்பவரிடம் தான் தெரிவிக்கிறது. அதற்குண்டான பலன்களையும் ஜே என்பவர் தான் பெற்றுக் கொள்கிறார். இதற்கிடையில் ‘ஜே' என்பவர் 4 ஏக்கரை விற்கும் பொருட்டு, வேறொருவரிடம் பத்து லட்ச ரூபாய் அட்வான்ஸ் பெற்றுக் கொண்டு, அக்ரீமெண்ட் போட்டு விடுகிறார். இதற்கிடையில் பவர் எழுதிக் கொடுத்த ‘கே' என்பவர் இறந்து விடுகிறார்.

எங்களது கம்பெனி சென்னை ஏஜெண்ட் மேற்படி விபரத்தைச் சொல்லி, மேற்படி எழுதப்பட்ட பவர் இப்போதைக்குச் செல்லுமா இல்லை காலாவதியாகி விட்டதா என்று கேட்டார்.

எங்களிடம் வரும் முன்பே அவர் பலரிடமும் கேட்டிருக்கிறார். அவர்கள் பவர் எழுதிக் கொடுத்தவர் உயிருடன் இருந்தால் தான் பவர் செல்லுபடியாகும். அவர் இறந்து விட்ட படியால் பவர் செல்லாது என்றும், இனி அந்தச் சொத்து பவர் எழுதிக் கொடுத்தவரின் வாரிசுகளுக்குச் சென்று விடும் என்றும் சொல்லி இருக்கின்றனர். சொத்தினைக் கிரயம் வாங்க வேண்டுமென்றால் வாரிசுகளிடம் என் ஓ சி வாங்க வேண்டுமென்றும் சொல்லி இருக்கின்றார்கள்.

மேற்படிப் பிரச்சினைக்கு மேலே சொல்லப்பட்டிருப்பதுதான் சொல்யூசனா என்றால் கிடையவே கிடையாது. மிக முக்கியமான ஒரு பாயிண்டை விட்டு விட்டார்கள். அது என்ன?

இது போன்ற சொத்து சம்பந்தமான பிரச்சினைகளுக்கு ஃபார்ச்சூன் பிரிக்ஸ் நிறுவனம் தீர்வு கொடுக்கிறது. இவ்வசதியைப் பெற எங்கள் நிறுவனத்திற்கு கட்டணம் செலுத்தப்பட வேண்டும். சொத்து சம்பந்தப்பட்ட டாக்குமென்ட் காப்பிகளுடன், கட்டணத்தையும் செலுத்தினால் லீகல் ஒப்பீனியன் கொடுக்கப்படும். சொத்து இந்தியாவில் எந்த மூலையில் இருந்தாலும் ஃபார்ச்சூன் பிரிக்ஸ் லீகல் ஒப்பினியன் பெற்றுத்தரும்.

சரி மேலே இருக்கும் பிரச்சினையில் மறந்து போன பாயிண்ட் என்னவென்றால், சொத்து விற்கும் பொருட்டு அக்ரீமெண்ட் போடும் போது, பவர் எழுதிக் கொடுத்தவர் உயிருடன் இருந்திருந்தால் அந்த அக்ரீமெண்ட் செல்லுபடியாகும் என்பதுதான் அது. ஆக இந்தச் சொத்தினை வாங்க அக்ரீமெண்ட் போட்டவருக்கு மேற்படிச் சொத்தினை வாங்க முழு உரிமையும் உண்டு.

* * *

Monday, August 1, 2011

மிகக் குறைந்த விலையில் வீட்டு மனை

கோவை அவிநாசி சாலையில், ஏர்போர்ட்டிலிருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில் நல்ல சாலை வசதியுடன், லீ மெரிடியன் ஹோட்டலின் அருகில் இரண்டு வீட்டு மனைகள், டிடிசிபி அப்ரூவலுடன் விற்பனைக்கு எங்கள் நிறுவனத்திடம் வந்திருக்கிறது.

இரண்டு கிரவுண்டுகள் நிலம். சாலை வசதி. அவினாசி சாலை ஆறு வழிச்சாலையான பிறகு இந்த நிலத்தின் விலை மூன்று மடங்கு அதிகரிக்கும் வாய்ப்பு இருக்கிறது. இந்த நிலத்தின் அருகில் கல்லூரி இருப்பதால் பத்து அறைகள் கட்டி விட்டாலே நல்ல வாடகை வரும். டாக்குமெண்டுகள் அனைத்தும் கிளியர்.

இந்த நிலத்தினைப் பார்வையிட விரும்புவோர் தனிமெயிலில், தொலைபேசி எண்ணுடன் தொடர்பு கொள்ளவும். விபரங்களை அனுப்பி வைக்கிறேன்.

எங்களது இமெயில் முகவரி : info@fortunebricks.net / covaimthangavel@gmail.com

இரும்புத்தாது தொழிலில் அடியேன் - பகுதி 2

சனிக்கிழமை காலையில் போன் வந்தது. கன்னியாகுமரி மாவட்டத்திலிருந்து ஒருவர் அழைத்திருந்தார். நீங்கள் எழுதி வரும் ரியல் எஸ்டேட் சம்பந்தமான பதிவுகள் எனக்கு மிகவும் உபயோகமாக இருந்தது என்றார். தெரிந்ததை எழுதுவதில் எனக்கொன்றும் சிரமம் இருந்ததில்லை. ஆனால் நேரம் தான் பிரச்சினை. வேறு ஏதேனும் உதவி தேவையென்றாலும் எனக்குத் தெரியப்படுத்தலாம். இயன்றவரை உதவ முயற்சிக்கிறேன்.

இப்படியும் சில மனிதர்கள் பதிவினைப் படித்து விட்டு சம்பந்தப்பட்ட அனாதை இல்லத்திற்கு உதவும் பொருட்டு சிலர் மெயில் அனுப்பி இருந்தனர். எனக்கு மிகுந்த வேலைப் பளு இருந்த காரணத்தால் மேலதிக விபரங்களை அனுப்ப இயலவில்லை. இந்த வாரத்திற்குள் அனாதை இல்லத்தின் முழு விபரத்தையும் பதிவில் போட்டு வைக்கிறேன். செய்யும் உதவி எதற்குச் செய்கின்றோமோ அதற்குச் சென்று சேர்ந்ததா என்பதை அறிய ஆர்வமிருக்கும். ஆகையால் அனாதை இல்லத்தின் சின்னச் சின்னத் தேவைகளைத் தெரிந்து கொண்டு பதிவாய் எழுதி வைக்கிறேன்.அதற்கு உதவினால் அவர்களுக்கு பெரும் உதவிகரமாய் இருக்கும். நண்பர்கள் செய்வார்கள் என்று நினைக்கிறேன்.

இப்போது இரும்புத்தாது பிசினஸ்ஸுக்கு வருகிறேன். இரும்புத்தாது பிசினஸ்ஸில் எனது நண்பரொருவர் கர்நாடகத்தில் அரசுப் பதவியில் உயர்ந்த இடத்தில் இருந்த ஒருவரின் மகனுடன் இணைந்து 67 ஏக்கர் இரும்புத்தாது டெபாசிட் இருந்த இடத்தினை லீசுக்கு எடுத்து நிலத்தின் உரிமையாளருடன் ஒப்பந்தம் ஒன்றினைப் போட்டார். அதற்குண்டான பணம் கொடுக்கப்பட்டது. பின்னர் லாரிகள், டிப்பர்கள், எக்ஸ்புளோர் செய்யும் மெஷின்கள் அனைத்துக்கும் ஒப்பந்தம் போடப்பட்டு அனைத்தும் சம்பந்தப்பட்ட இடத்திற்குச் சென்று விட்டன. ஆர்டரையும் சைனாவிலிருந்து பெற்று விட்டோம். போர்ட்டில் யார்ட் வாடகைக்கு எடுத்து சரக்கினை கொண்டு போய் டம்ப் செய்து கொண்டிருந்த நேரத்தில் சில விஷமிகள் ஒன்று சேர்ந்து (போட்டிக் கம்பெனிகளின் சப்போர்ட்டில்) லாரிகள் அவர்களின் ஊர் வழியாகச் செல்ல முடியாதவாறு தடுத்தனர். அனைத்து வித பர்மிட்டுகளைக் காட்டினாலும் விடவில்லை. அதுமட்டுமா லாரிகளை எரிக்கவும் முற்பட்டனர். எங்கெங்கோ சென்றார். யாரையெல்லாமோ பார்த்தார். கையில் இருந்த பணமெல்லாம் தண்ணீராய்க் கரைந்தது. எதுவும் நடக்கவில்லை. பெரும் திமிங்கிலங்களை எதிர்த்து சிறு மீன் போராட முடியுமா? முடியவில்லை. கையில் இருந்த மொத்தமும் போக நடு ரோட்டிற்கு வந்தார் அவர். 

எவராவது புதிதாக பீல்டிற்கு வந்தால் விடுவார்களா பண முதலைகள். மொத்தமாய் முடித்துக் கட்டி விட்டார்கள். வேறு யாரும் சம்பாதிக்க விட மாட்டார்கள். இப்படிப்பட்டவர்கள்தான் ஏற்றுமதித் தொழிலில் இன்றைக்கும் கோலோச்சுகின்றார்கள்.

பழைய இரும்புத் தொழிலில் சேலத்தைச் சேர்ந்த ஒருவர் புதிதாய் இறங்கினார். சென்னையில் இருக்கும் மிகப் பெரிய இறக்குமதியாளருக்கு இவர் கண்ணை உறுத்தினார். சேலத்துக்காரர் பழைய இரும்பினை இறக்குமதி செய்தார் மிக அதிக விலை கொடுத்து. சரக்கு கிளியர் ஆகி கோடவுனில் சேரும் வரை மார்க்கெட் விலை உயர்ந்திருந்தது. அடுத்த ஒரு மணி நேரத்தில் கிலோவிற்கு 10 ரூபாய் மார்க்கெட்டில் விலை குறைத்து அந்தப் பெரிய இறக்குமதியாளர் விற்பனை செய்தார். அங்கங்கே கடன் வாங்கி இறக்குமதி செய்த சேலத்துக்காரர் என்ன செய்வதென்றே தெரியாமல் விழித்தார். நஷ்டம் நஷ்டம் நஷ்டம். தூக்கில் தொங்கினார். பெரிய இறக்குமதியாளரின் ஆசை நிறைவேறியது. போட்டியாளர்களை வரவே விடாமல் இன்றைக்கும் அந்த இறக்குமதியாளர் சென்னையில் கொடி கட்டிப் பறந்து கொண்டிருக்கிறார். யாரால் என்ன செய்ய முடியும் சொல்லுங்கள் பார்ப்போம்? இன்றைக்கு பணம் கொழிக்கும் பல துறைகள் இப்படிப்பட்ட பண முதலைகளிடம் சிக்கிக் கிடக்கின்றன. வேறு யாரும் அந்தத் தொழிலைச் செய்யவே முடியாது. விடமாட்டார்கள். மொத்தமாய் அழித்து விடுவார்கள். சாமானியர்கள் வேறு வழியின்றி வேலைக்குச் சென்று கொண்டிருக்கிறார்கள். அரசுக்கு இதெல்லாம் தெரியாது என்றா நினைக்கின்றீர்கள். அனைத்தும் தெரியும். ஆனால் ஒன்றும் செய்யமாட்டார்கள்.

இன்றைக்கு இரும்புத்தாது ஏற்றுமதியில் ஏகப்பட்ட குளறுபடிகள் நடந்திருக்கின்றன என்று பத்திரிக்கைகள் எழுதிக் கொண்டிருக்கிறார்கள். இந்த விஷயமெல்லாம் அன்றைக்கு இவர்களுக்குத் தெரியாதா? ஏன் எழுதவில்லை? இரும்புத்தாது ஏற்றுமதியை சரி செய்ய எவராலும் முடியாது என்கிற ஒரு மாயையை பத்திரிக்கைகள் ஏற்படுத்துகின்றன. ஆனால் அது உண்மை இல்லை.

ஏற்றுமதியான இரும்புத்தாது எத்தனை டன்? அனுமதி கொடுத்தது எத்தனை டன் என்று பார்த்தால் மேட்டர் ஓவர். இதை ஏன் அரசு பார்க்கவில்லை? எல்லாம் பணம்? கோடி கோடியாய் லஞ்சம். யார் எந்தத் தவறு செய்தாலும் எதுவும் செய்ய முடியாதவாறு மிரட்டல்கள். அரசு ஊழியர்கள் என்னதான் செய்வார்கள்? டைம்ஸ் ஆஃப் இந்தியா 12,20,000 கோடி ரூபாய்க்கு ஊழல் நடந்திருக்கிறது என்று பத்திரிக்கையில் செய்தி வெளியிட்டிருக்கிறது. 

10,000 டன் சரக்கிற்கு மூன்று பேரிடம் விலை பேசுவார்கள் ஏற்றுமதியாளர்கள்.எவன் அதிகம் தருகின்றானோ அவனுக்குச் சரக்கு. கொஞ்சம் ஏமாந்தவனாக இருந்தால் ப்ளூ மெட்டலைக் கலந்து கேடுகெட்ட குவாலிட்டியை யார்டில் கொட்டி விடுவார்கள். அதுமட்டுமா வாங்கிய காசை திருப்பிக் கொடுக்கவும் மாட்டார்கள். எத்தனை அடியாட்கள். எத்தனை ஆபத்துக்களை உருவாக்குவார்கள் தெரியுமா?  

ஏற்றுமதி முனையத்தில் ஏற்றுமதியாளர்களின் இன்வாய்ஸ்களை வெறும் பத்துரூபாய்க்கு வாட்ச்மேன் விற்றுக் கொண்டிருந்தார். இதை நான் நேரில் பார்த்து அதிர்ந்தேன். அந்த இன்வாய்ஸ்ஸில் இறக்குமதியாளரின் முகவரி, போன், என்னவிலைக்கு பொருள் ஏற்றுமதி செய்யப்படுகிறது போன்ற விபரமெல்லாம் தெளிவாய் இருக்கும். பெரும் முதலைகள் சின்னஞ் சிறு ஏற்றுமதியாளர்களின் வாடிக்கையாளர்களை இப்படித்தான் கவர்கின்றார்கள்.

இது போன்ற இன்னும் எண்ணற்ற பிரச்சினைகளை இரும்புத்தாது தொழிலில் சந்தித்தேன். அதிகாரம், பதவி, பணபலம் இருந்தால் மட்டுமே இது போன்ற பணம் கொழிக்கும் தொழில்களில் ஜெயிக்க முடியும் என்பதை நான் கண்கூடாக கண்டுகொண்டேன்.

* * *

Sunday, July 31, 2011

சொத்துக்கள் வாங்க, விற்க, வாடகைக்கு 100% இலவசமான வெப்சைட்


சொத்துக்கள் வாங்க வேண்டுமா, விற்க வேண்டுமா, வாடகைக்கு கொடுக்க வேண்டுமா? வாடகைக்கு வேண்டுமா? அனைத்தும் இலவசமாய் கொடுக்கிறது ஃபார்ச்சூன் பிரிக்ஸ். ஒரு அக்கவுண்ட் கிரியேட் செய்தால் உங்களுக்கான தனிப் பேனல் கிடைத்து விடும். அதன் பிறகு இலவசமாய் தேவைகளை பதிவிடலாம். வாங்குபவர்கள், விற்பவர்கள் அனைவரின் விபரமும் இலவசமாய் கிடைக்கும்.மேலதிக விபரத்திற்கு


*  *  *

ஜிமெயில் ஹேக்கிங் தடுத்தது எப்படி?

மூன்று நாட்களுக்கு முன்பு, அவுட்லுக் எக்ஸ்பிரஸ்ஸில் மெயில் செக் செய்து கொண்டிருந்த போது, எனது மிக முக்கிய பெர்சனல் ஜிமெயில் ஐடி  ராலோ ஹேக்கிங் செய்யப்பட முயற்சிக்கப்பட்டதைக் கண்டு பிடித்தேன். ஏற்கனவே எனது மொபைல் எண்ணை ஜிமெயில் அக்கவுண்ட்டுடன் இணைத்திருப்பதால் வெரிபிகேஷன் கோடு எனக்கு வர, அலர்ட் ஆனேன். தொடர்ந்து ஸ்டெப் 2 வெரிபிகேஷன் ஆக்டிவேட் செய்து, ஒவ்வொரு தடவை ஜிமெயில் அக்கவுன்ட் உள்ளே செல்லும் போது, வெரிபிகேஷன் கோடு வந்த பிறகுதான் ஆக்சஸ் கிடைத்தது. கேள்விகள் அனைத்தையும் மாற்றி ஓரளவிற்கு பாதுகாப்புக் கொடுத்திருக்கிறேன்.

பெரும்பாலும் எனக்கு வரக்கூடிய மெயில்களை அவுட்லுக்கின் மூலம் கணிணிக்கு இறக்கி விடுவேன். அக்கவுண்ட் ஹேக்கிங் செய்யப்பட்டாலும் கவலைப்பட வேண்டியதில்லை அல்லவா? ஜிமெயில் அக்கவுண்டுகளை நான் ஒரு கேட்வே ஆகத்தான் பயன்படுத்தி வருகிறேன். அதையும் ஹேக்கிங் செய்ய முயற்சிக்கின்றார்கள். ஜிமெயில் அக்கவுண்ட் வைத்திருப்பவர்கள் உடனடியாக தங்களது மொபைலை அக்கவுண்டுடன் இணைத்து விடுங்கள். 

ஸ்டெப் 2 வெரிபிகேசன் ஆப்சனை ஆக்டிவேட் செய்வது எப்படி என்பதை கீழே இருக்கும் இணைப்பில் கண்டுகொள்ளுங்கள்.


Friday, July 29, 2011

இரும்புத்தாது தொழிலில் அடியேன் - பகுதி 1


எல்லாத் தொழிலையும் எல்லோராலும் செய்து விட முடியாது என்பதை நான் என் அனுபவத்தில் உணர்ந்து கொண்ட சம்பவம்தான் கீழே நாம் பார்க்க இருப்பது. எவ்வளவுதான் புத்திசாலியாக, திறமைசாலியாக இருந்தாலும், இந்தியாவில் சிலரின் துணையில்லாமல் எந்த ஒரு பெரும் தொழிலையும் அவ்வளவு எளிதில் நடத்தி விட முடியவே முடியாது என்பதை கண் கூடாக கண்டு கொண்டேன்.  பிசினஸ்ஸில் மாரல் எதிக்ஸ் எதுவும் கிடையவே கிடையாது. உடனடி லாபம் என்ன? என்பதுதான் பிசினஸ்ஸின் தாரக மந்திரமாய் சிலர் வைத்திருக்கின்றார்கள்.

உலகம் முழுவதும் எனக்கு கிட்டத்தட்ட 10,000க்கும் மேலான டிரேடிங் ஏஜெண்டுகள் தொடர்பில் இருந்தார்கள். தற்போதும் இருக்கின்றார்கள். கிட்டத்தட்ட ஐந்து வருடங்களுக்கு முன்பு, இந்திய இரும்புத்தாது சரியான பீக்கில் விலை போனது. அப்போது சில டிரேடிங் ஏஜெண்டுகள் மூலம் சைனாவில் பெரிய கம்பெனியிடமிருந்து 1 லட்சம் டன் மாதம் சப்ளைக்கு ஆர்டர் எடுத்து, அதைப் பெரிய கம்பெனிக்கு விலை பேசி, கமிஷன் பேசி, அக்ரீமென்ட் போட்டு, வங்கி மூலம் எண்டார்ஸ்டு செய்து லெட்டர் ஆஃப் கிரடிட்டும் வாங்கிக் கொடுத்து விட்டேன். இரண்டு பர்செண்டேஜ்ஜுக்கு சப்ளையரிடமிருந்து கேரண்டியும் வாங்கிக் கொடுத்து விட்டேன். இது ஏன் என்றால் இறக்குமதியாளர், ஏற்றுமதியாளரின் விலைக்கு வங்கியிலிருந்து பணவோலைக் கொடுத்து விட்டார். ஏற்றுமதியாளர் சொன்னபடி, சொன்ன தேதியில், சரியான பொருளை அனுப்பவில்லை என்றால் சரக்கின் மொத்த விலைக்கு இரண்டு பர்சண்டேஜ் பெனால்டியை ஏற்றுமதியாளர் வங்கி, இறக்குமதியாளரின் வங்கிக்கு அனுப்பி வைத்து விடும்.இது இருவருக்கும் தொழில் பாதுகாப்புக்காக உருவாக்கப்பட்ட ஒரு அக்ரீமெண்ட்.



மாதா மாதம் எனக்கு கமிஷனாக 45 லட்சம் வங்கியிலிருந்து எனது அக்கவுண்டிற்கு வரும்படியான ஒரு வருட அக்ரீமெண்டினையும் போட்டு ஒரிஜினலும் வந்து சேர்ந்து விட்டது. அதை எனது வங்கியில் கொண்டு போய் கொடுத்ததும் வங்கி மேனேஜர் ஆச்சரியத்தில் வாயடைத்துப் போய் விட்டார். மாதம் 45 லட்சம் என்று ஒரு வருடத்திற்கு கமிஷன் தர இறக்குமதியாளரும், ஏற்றுமதியாளரும் ஒப்புக்கொண்டு, அதை அவர்களின் வங்கி மூலம் சான்றும் பெற்று என்னிடம் கொடுத்திருக்கிறார்கள். மேனேஜருக்கு இதயம் வெடிக்காமல் இருந்ததே பெரிய சம்பவம்.

எல்லாம் சரியாகச் சென்று கொண்டிருந்தது. கப்பல்துறைமுகத்தில் இருக்கும் யார்டில் சரக்கு சேர்ந்து கொண்டிருந்தது. தினம் தோறும் எனக்கு ஃபாக்ஸ் வரும். அதை நான் சைனாவிற்கு அனுப்பி வைத்துக் கொண்டிருந்தேன். லேப்பில் இருந்து ரேண்டம் டெஸ்ட் ரிப்போர்ட்டும் வந்து கொண்டிருந்தது. எல்லாம் மிகச் சரியாக போய்க் கொண்டிருந்தது. மொத்தச் சரக்கும் யார்ட்டில் சேர்ந்து விட கப்பல் பெர்த்திங் ஆகும் முன்னே இறக்குமதியாளரிடமிருந்து ஒரு ஃபேக்ஸ் வந்தது.

என்னவென்று பார்த்தால் ஏற்றுமதியாளர் ஆர்டரை கேன்சல் செய்து, இரண்டு பர்சண்டேஜ் பெர்மான்ஸ் பாண்டைக் கிளியர் செய்து விட வங்கிக்கு அறிவுறுத்தியிருக்கிறார். இறக்குமதியாளர் என்ன நடந்தது என்று தெரியாமல் அலறினார்.

அடித்துப் பிடித்துக் கொண்டு, மும்பைக்குச் சென்றேன். சப்ளையரிடம் விசாரித்தேன். அவர் கூலாக என்னிடம் சொன்னது “ அக்ரீமென்ட் விலையோடு பதினைந்து டாலர் அதிகம் கொடுத்து வேறு ஒருவர் சரக்கினை அப்படியே வாங்கிக் கொண்டார். ஆகையால் 2% பிபிஐக் கிளியர் செய்து விட்டேன். சரக்கு அனுப்பமுடியாது. உங்களுக்கும் கமிஷன் தர இயலாது” என்று மறுத்து விட்டார். மேட்டர் ஓவர். இந்தச் சப்ளையர் மீது எங்கும் ஏதும் நடவடிக்கை கூட எடுக்க இயலாது. ஏனென்றால் அக்ரீமென்ட் படி சரக்கினை அனுப்பவில்லை என்றால் 2% பிபி கிளியர் ஆகி விடும். அதையும் சப்ளையர் செய்து விட்டார். கிட்டத்தட்ட 15 டாலரில் இரண்டு டாலரை பெனால்டியாக கட்டி விட்டு,  டன் ஒன்றிற்கு 13 டாலரை குவித்து விட்டார்.

மும்பையிலிருக்கும் இறக்குமதியாளரின் அலுவலகத்தில் தனியொருவனாக அந்த நிறுவனத்தின் முதலாளியிடம் பேசிக் கொண்டிருந்தேன். ” தங்கம், இது பிசினஸ். காசுதான் இங்கே பேசும். மாரல் எதிக்ஸ் பார்த்துக் கொண்டிருந்தால் நான் பிழைக்க முடியாது. எவனோ ஒருவன் கோடி கோடியாய் சம்பாதிக்க, நான் ஏன் எனக்கு வரும் லாபத்தை இழக்க வேண்டும்? சைனாக்காரன் சம்பாதித்தால் எனக்கா கொடுத்து விடப்போகிறான். அக்ரிமெண்ட் படி நான் தான் 2% பெனால்டி கட்டி விட்டேனே? வேண்டுமென்றால் உங்களுக்கு  செலவு தொகையாக பத்தாயிரம் தருகிறேன். பெற்றுக் கொள்ளுங்கள்” என்றுச் சொன்னார்.

அவரிடம் நான் என்ன பேச முடியும்? சொல்லுங்கள் பார்ப்போம். எனது வாழ்வில் நடந்த மிகப் பெரும் அதிர்ச்சியான சம்பவம் இது.

அன்றைக்கு நான் பிசினஸ் என்றால் என்ன என்பதை ஓரளவு கற்றுக் கொண்டேன். இந்தக் கம்பெனி மூன்று வருடங்களுக்கு முன்பு மஞ்சள் நோட்டீஸ் விட்டது. இன்றைக்கு காணாமலே போய் விட்டது அந்தக் கம்பெனி.

அடுத்ததாக ஒரு இரும்புத்தாது சுரங்கத்தையே மூட வேண்டி வந்த கதையைச் சொல்கிறேன்.அதற்கடுத்து தமிழகத்தில் மிகப் பெரிய நிறுவனத்திற்கு எதிராய் ஏலத்தில் ஜெயித்தும், உயிர் பயத்தால் ஏலத்திலிருந்து வாலண்டிரியாக வெளியேறிய சம்பவம் ஒன்றினையும் எழுத இருக்கிறேன்.

* * *

Wednesday, July 27, 2011

தர்மம் தலை காத்தது


தர்மம் தலை காக்கும் என்பார்கள். அது எந்தளவுக்கு உண்மை என்பதை உணரக்கூடிய வாய்ப்புகள் குறைவு. உயிர் எங்கே இருக்கிறது காட்டு பார்க்கலாம் என்பதைப் போலத்தான் தர்மமும் எங்கே இருக்கிறது என்று கேட்பார்கள். என் வாழ்வில் நடந்த ஒரு சம்பவம் தர்மம் தலை காக்கும் என்பதை நிரூபித்தது. அது என்ன என்பதை தொடர்ந்து பார்க்கலாம்.

கரூரில் இருக்கும் ராமகிருஷ்ண ஆஸ்ரமத்தின் கண்ட்ரோலில் இருக்கும் மெட்ரிக் பள்ளிகள், பெண்கள் கல்லூரிகளில் அடியேன் தான் கணிப்பொறித் துறைக்கு சிஸ்டம் இஞ்சினியர். புதுக் கணிணி வாங்குவது, அசெம்பிள் செய்வது, டீச்சிங் என்று பல வேலைகளைச் செய்து வந்தேன். ஆசிரமத்தலைவரான திரு ஆத்மானந்தா அவர்களுடன் நேரடித்தொடர்பில் இருந்தேன். இந்தத் தொடர்பால் ஆசிரமத்தில் எனக்கு மிகப் பெரும் தொல்லைகள் எல்லாம் ஏற்பட்டன. அதை சமயம் வாய்க்கும் போதெல்லாம் எழுதுகிறேன். இப்போது வேண்டாம்.

இந்த ஆசிரமத்தின் கீழ் 150 சிறுவர்கள், கிட்டத்தட்ட 100 பெண் குழந்தைகள், கல்லூரிப் பெண்கள் என்று கடவுளின் குழந்தைகள் பலருக்கு உணவும், உடையும், கல்வியும் கொடுத்து பாதுகாத்து வந்தனர். அந்த வகையில் சாமி மீது எனக்கு கொள்ளை அன்பு.  கிட்டத்தட்ட ஆறு பள்ளிகள், ஒரு பெண்கள் கல்லூரி என்று மொத்தமாய் ரூபாய் 100 கோடிக்கும் மேல் மதிப்புக் கொண்ட கல்வி நிறுவனங்களை சாமி நடத்தி வந்தார். இங்கு ஒரு சின்னக் கதை ஒன்றினைச் சொல்ல வேண்டும். 

சாமி, திருச்சியிலிருந்து கரூர் செல்லும் வழியில் இருக்கும் திருப்பராய்த்துறை தபோவனத்தின் தலைமை சுவாமி சித்பவானந்தரின் சீடர். சித்பவானந்தரின் அறிவுரைப் படி கரூர் வந்தார். அதன் பிறகு இவரின் தனிப்பட்ட முயற்சியில் பல கல்வி நிலையங்களையும், கல்லூரிகளையும் ஆரம்பித்து நடத்தி வந்தார். ஆனால் அது அனைத்தையும் தபோவனத்தின் பெயரிலேயே நடத்தி வந்திருக்கிறார். குரு காணிக்கை என்று வைத்துக் கொள்ளுங்களேன். சுவாமி சித்பவானந்தரின் மறைவுக்குப் பிறகு தலைமையிடத்திற்கு வந்த மற்ற சாமியார்கள் ஆத்மானந்தாவை கரூர் நிறுவனத்திலிருந்து வெளியேற்ற முயற்சிக்க வழக்கு கோர்ட்டுக்குச் சென்றது. கிட்டத்தட்ட நாற்பது வருடங்களாக வழக்கு நடந்து வந்தது என்று அங்கிருந்த பிரதர் ஒருவர் என்னிடம் சொன்னார்.

அந்த வழக்கு கரூர் நீதிமன்றத்தில் தபோவனத்திற்குச் சார்பாக தீர்ப்பு பெற, தபோவனச் சாமியார்கள் கல்வி நிறுவனத்திற்குள் நுழைய முயற்சித்தனர்.  தடையாணை பெற்று, மேல் முறையீடு செய்வதற்குள் இந்தப் பிரச்சினை வர, பள்ளியின் கேட்டின் முன்பு பெரும் ரகளை நடைபெற்றது. காவல்துறை உதவியுடன் சாமியார்கள் சிலர் உள்ளே வந்து உட்கார்ந்து விட்டனர்.  கொலைமுயற்சித் தாக்குதல்கள் நடைபெற்றது என்றுச் சொல்லி வழக்குகள் வேறு பாய சாமியை எந்த நேரத்திலும் கைது செய்யலாம் என்று ஆசிரமத்தில் பேசிக் கொண்டார்கள்.

சாமியாருக்கு வேண்டப்பட்டவர்கள், வக்கீல்கள் என்று சாமியாரின் அறை பிசியாக இருந்தது. மதியச் சாப்பாட்டின் போது அவர் மட்டும் தனித்திருப்பார். எனக்கு மட்டும் எப்போது வேண்டுமானாலும் அவரைப் பார்க்க பர்மிஷன் இருக்கிறது என்பதால் சற்றே பதட்டத்துடன் அறைக்குள் நுழைந்தேன்.

ராமகிருஷணரின் பொன்மொழிகள் புத்தகத்தைப் படித்துக் கொண்டிருந்தார். வெளியே ஆசிரமவாசிகள், ஆசிரியர்கள்,மாணவர்கள் அனைவரும் பரபரப்பாய் இருந்தனர். ஆனால் சாமியோ சாந்த சொரூபியாக அமர்ந்திருந்தார். என்னைப் பார்த்து, “வாப்பா, கம்யூட்டர் சார் !” என்றச் சொல்ல அவரருகில் சென்று அமர்ந்தேன்.

”பயமாக இருக்கிறதா? வேறு கிளைக்குச் சென்று வருகிறாயா?” என்று கேட்க, நானோ “அதெல்லாம் ஒன்றுமில்லை சாமி, உங்களைக் கைது செய்யப்போவதாகச் சொல்லிக் கொள்கின்றார்கள், அதான் டென்சனா இருக்கிறது” என்றேன்.

”அங்கே பாரப்பா” என்றார். எதிரில் விவேகானந்தரின் ஆளுயரப் படம் ஒன்று இருந்தது. ”சாமியை ஒரு நிமிடம் உற்றுப் பாரப்பா”. உற்றுப் பார்த்தேன்.

”பயப்படாதே, ஒன்றும் ஆகாது, தர்மம் வெல்லும்” என்றார். தெளிந்த மனத்தோடு வெளியில் வந்து, பள்ளிக்குச் சென்று விட்டேன்.

அவரை யாரும் கைது செய்யவில்லை. வழக்கும் மேல் முறையீடு செய்யப்பட்டது.தற்போது இக்கல்வி நிறுவனங்கள் அனைத்தும் தபோவனத்தின் நிர்வாகத்தின் கீழ் வந்து விட்டது என்றுச் சொன்னார்கள். அது சாமிக்குப் பிரச்சினை இல்லை. ஏனென்றால் இதைப் போன்ற பல நிறுவனங்களை அவர் உருவாக்குவார். அவரின் நம்பிக்கை மீது அவருக்கு இருக்கும் நம்பிக்கை கொஞ்சம் நஞ்சமல்ல.

என்னை முதன் முதலில் சந்தித்த போது, “எண்ணமே வாழ்வு” என்ற அப்துற் ரஹீமின் புத்தகத்தைக் கொடுத்துப் படிக்கச் சொன்னார். அவரின் இளமையில் அவரது மாமா அவருக்குக் கொடுத்த புத்தகமாம் அது.அதை நான் வாங்கி இரவு முழுவதும் படித்தேன். வாழ்க்கையில் வெற்றி என்ற இன்னொரு புத்தகமும் கூட அப்துற் ரஹீம் எழுதியது இருக்கிறது.

வாழ்க்கையில் எப்போதெல்லாம் சோதனைக்கும் மேல் சோதனை வருகிறதோ அப்போதெல்லாம் அந்தப் புத்தகமே எனக்கு உற்ற நண்பனாய் இருக்கும்.

உங்களுக்கும் அப்படியே இருக்கும் என்று நினைக்கிறேன். நேரமிருந்தால் வாங்கிப் படியுங்கள்.

சாமியாரின் 'தர்மம் வெல்லும்' என்ற ஒரு வார்த்தையில் ஆயிரமாயிரம் அர்த்தங்கங்கள் இருப்பதை அன்று நான் உணர்ந்தேன்.

”தர்மம் நிச்சயம் தலை காக்கும்”