குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Monday, December 29, 2008

கோடீஸ்வரனும், குடியானவனும்

கடந்த வாரம் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்ட மகனின் உடல் நிலைக்கு சற்று ஹாட்டான இடம் தேவை என்று டாக்டர் நண்பர் அறிவுறுத்தியதால், என் நண்பர் சஹாரா என்று சொல்லும் சென்னையில் பில்டர்ஸ் தொழில் பார்க்கும் தம்பியின் வீட்டுக்கு செல்ல வேண்டிய கட்டாயச் சூழ்நிலை. வேறு வழியின்றி ட்ரெயினில் பயணம். ஏசி சேர்கார் ஒத்து வருமா என்று விடிகாலையில் டாக்டரிடம் கன்சல்ட் செய்த பின்னர் ட்ரெயின் ஏறினோம். காலை ஆறு முப்பதுக்கு கிளம்ப வேண்டிய ட்ரெயின் ஏழு பத்துக்குத்தான் கிளம்பியது. இரண்டரை மணிக்குச் சென்னை சென்று சேர்ந்தாகி விட்டது. தம்பி காருடன் காத்திருந்தான்.
இரண்டு நாட்கள் மகனின் உடல் நிலையின் மீது கவனம் கொண்டேன். சரியாகி விட்டான்.

இதற்கிடையில் நண்பர் ஒருவர் அழைப்பின் பேரில் அவரின் வீட்டுக்கு டின்னர் சென்றோம். வண்டி அனுப்பி இருந்தார்கள். குடும்பத்தோடு பயணம். துரைப்பாக்கத்திலிருந்து ஆறு மணிக்கு கிளம்பினோம். முகப்பேருக்கு எட்டரை மணிக்கு சென்று சேர்ந்தோம். இரண்டரை மணி நேரம். டிராபிக்கில் கிட்டத்தட்ட ஒன்றரை மணி நேரம்.

இரண்டு கோடி செலவழித்து வாங்கிய பென்ஸ் காரில் அமர்ந்திருக்கும் கோடீஸ்வரனும், வெறும் ஆயிரம் ரூபாயில் வாங்கிய சைக்கிளில் அமர்ந்திருக்கும் குடியானவனுக்கும் ஒரே தீர்ப்பை வழங்கிய சென்னையின் சிக்னல்கள் தான் உண்மையான நீதியரசர்களாய் தெரிந்தார்கள்.

சைக்கிள்காரர் நின்றிருந்தார். ஆட்டோ, ஷேர் ஆட்டோ, பென்ஸ் கார் முதல் அனைவரும் சிக்னலில் காத்து கிடந்ததைப் பார்த்த போது உலகில் உண்மையான சமத்துவம் நிலவும் இடமாக சென்னை ட்ராபிக் சிக்னல்கள் தெரிந்தது. உடனே அமைச்சர்கள், உயரதிகாரிகள் என்று விதண்டாவாதம் பேச ஆரம்பிக்க கூடாது.

வாழ்க்கையினூடே சில இடங்களில் சில தவிர்க்க இயலாத சம்பவங்களில் நாமும் மாட்டிக் கொள்வோம் என்பது உண்மை என்று அறிந்து கொண்டேன்.

Friday, December 19, 2008

சாரு நிவேதிதா - பிறந்த நாள் வாழ்த்துக்கள்

அன்பு நண்பர் சாரு நிவேதிதாவிற்கு இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள்.


Monday, December 15, 2008

பெண் சமத்துவம்




பெண்கள் விடுதலை பற்றிப் பேசிவரும் பெண்ணுரிமையாளரும், பெரியாரிஸ்டுமான ஓவியா அவர்களின் பொன்மொழி :

”குடும்ப அமைப்பில் இருந்து கொண்டு எந்த பாலின சமத்துவத்தையும் கொண்டு வர முடியாது. அதே நேரத்தில் பெண் விடுதலை என்ற பாதையின் வழியாக போராடும் போது இந்தக் குடும்பம் என்ற அமைப்பு சிதைந்து விடும் என்பது என் கருத்து. அப்படி சிதைவதுகூட இருபாலாருக்கும் நன்மைதான் ”


மிஸ் வோர்ல்ட் 2008 இல் முதல் ரன்னர்அப்பாக வந்த பார்வதி, இரண்டாவது ரன்னரப் Gabrielle Walcott, மிஸ் வோர்ல்ட் 2008 பட்டத்தை வென்ற Ksenia Sukhinova இவர்களுக்கு வாழ்த்துக்களை தெரிவிப்போம். வாழ்க பெண்கள் விடுதலை. வாழ்க பெண் சுதந்திரம்.

Saturday, December 13, 2008

சகோதரியும் குழந்தைப்பேறும்

எனது தூரத்து உறவுக்காரச் சகோதரிக்கு திருமணமாகி நீண்ட நாட்களாகியும் குழந்தை இல்லை. போகாத கோவில் இல்லை. வேண்டாத தெய்வமில்லை. பார்க்காத டாக்டருமில்லை என்றும் சொல்லும் அளவுக்கு ட்ரீட்மெண்டுகள் எடுத்தாலும் ஒன்பது வருடமாக பயனில்லாமல் இருந்திருக்கிறது. மனது வெறுத்துப் போய், என் அக்கா, வருத்தத்தில் இருந்தபோது ஒரு நாள் மருத்துவரிடம் கறாராக எனக்கு குழந்தை பிறக்குமா பிறக்காதா என்று வேதனையில் கேட்டார். டாக்டர் யோசித்து விட்டு ஜெனரல் ஜெக்கப் எழுதி கொடுத்தார். அப்போது தான் தெரியவந்தது தைராய்டு சுரப்பியில் சற்றுப் பிரச்சினை என்று. இதன் காரணமாகத் தான் அவருக்கு குழந்தை பிறக்கவில்லை என்று கண்டு பிடித்தார்கள். 50 மாத்திரைகள் கொண்ட மருந்து புட்டிதான் என் சகோதரியின் குழந்தையின்மைப் பிரச்சினையைத் தீர்த்தது. தைராய்டில் ஹைபோ தைராய்டு, ஹைப்பர் தைராய்டு என்று இரு பிரச்சினைகள் இருக்கின்றனவாம். குழந்தையின்மைக்கு இதுவும் ஒரு காரணமென்று சொன்னார் என் சகோதரி.

சரியான நேரத்தில் சரியான ட்ரீட்மெண்ட் கிடைக்கவில்லை என்பதால் என் சகோதரி பட்ட துன்பம் கொஞ்ச நஞ்சமல்ல. இந்தச் சம்பவத்தை இங்கு பகிர்ந்து கொள்ளக் காரணம் இருக்கிறது. மக்களில் அதிக பேர், தலைவலி வந்தால் தலைவலி போக மட்டும் தான் மருந்தெடுத்துக் கொள்கின்றனர். ஆனால் அந்த தலைவலிக்குக் காரணமென்ன என்று அறிந்து கொள்வதில்லை. இதைப் போன்றே வாழ்விலும் சில பிரச்சினைகள் வரும் போது பிரச்சினைக்குக் காரணம் என்ன்வென்று கண்டுபிடித்து தீர்க்க வேண்டும். இல்லையெனில் அது நீருபூத்த நெருப்பாகவே இருக்கும்.

Thursday, December 11, 2008

மந்திரம் கால் மதி முக்கால்

இந்தக் கதையில் வசிய மை பற்றி வந்திருப்பதால் வசிய மை என்ற தலைப்பில் ஒரு பதிவினை தனியாக எழுதி இருக்கிறேன். அந்தப் பதிவினை படித்தால் இந்தக் கதை சற்று சுவாரசியமாய் இருக்கும்.

இந்தக் கதையோடு தர்மத்தின் தீர்ப்புக் கதைகள் நிறைவு பெறுகிறது. காரணம் மனிதர்களின் தவறுகளினால் தான் வாழ்க்கை சுழன்று கொண்டிருக்கிறது எனவும், எல்லோரும் தர்ம சீலர்கள் ஆகி விட்டால் வாழ்க்கையில் சுவாரசியமே இருக்காது எனவும் எனது இங்கிலாந்தில் வசிக்கும் பெண் தோழி ஒருவர் மொபைலினார். அவரின் கருத்துக்காக, இந்தத்தலைப்பில் வரும் கதைகள் இத்தோடு நிறைவு பெறுகிறது. தொடர்ந்து படித்து வாருங்கள்.

அவருக்கு இரண்டு பெண் மகவுகள். இருவரும் பேரழகிகள். ஊரிலிருப்போரின் பிள்ளைகளுக்கு காய்ச்சல் வந்தாலும், வாந்தி பேதி எடுத்தாலும் அந்த வீட்டில் ஆஜராகிவிடுவார். மற்றும் இன்னபிற சொல்ல இயலா பிரச்சினைகளுக்கும் இவர் தான் நிவர்த்தி செய்ய வருவார். பிரச்சினை தீருமா என்றால் ”மோ”. (”மோ” என்றால் என்ன என்பதற்கு விரைவில் கட்டுரை ஒன்றினை மேற்கோள் காட்டுவேன். அதுவரை பொறுத்தருள்க)

இதுவுமின்றி இவருக்கு மற்றொரு தொழிலும் இருந்திருக்கிறது. வசிய மை தயாரித்துக் கொடுப்பது. கொடுத்தால் மட்டும் போதுமா ? பலன் கிடைத்ததா என்றால் கிடைத்தது என்று தான் சொல்ல வேண்டும். இவருக்கு சாகும் வரையில் மவுசு இருந்தது.

ஆண்களுக்கு பெண் வசிய மை கொடுப்பார். பெண்களுக்கு ஆண் வசிய மை கொடுப்பார். இதை விடுத்து இன்னுமொரு காரியமும் செய்து வந்திருக்கிறார். இவரின் மகளை ஊரின் பெரிய பணக்காரி ஒருத்தி விளக்குமாற்றால் அடி பின்னி எடுத்து விட்டார். தடுக்க வந்த இவருக்கும் சேர்த்து அடிகள் கிடைத்திருக்கின்றது. பக்கத்து வீட்டுக்காரர்களெல்லாம் வேடிக்கை மட்டும் பார்த்துக் கொண்டிருந்தார்களாம். பணம் ஏழையோடு மோதுகிறது என்ற பயம் காரணமாக இருந்திருக்கலாம். இவர் அப்போது ஒரு சபதமிட்டார். உன்னை ஒரு வாரத்திற்குள் பூமியிலில்லாதவாறு செய்து விடுகிறேன் என்று.

சொல்லி ஒரு வாரம்கூட முடியவில்லை. காலையில் நன்றாக இருந்த பணக்காரி சிறிது நேரத்தில் தூக்கில் தொங்கினாள். ஊரே பேசியது. இவர் தான் அவளைக் கொன்று விட்டார் என்று. ஆனால் யாரும் அவரிடம் கேட்கவில்லை. பயம்.. பயம்.
இவர் செய்து வந்த காரியம் என்னவென்று இப்போது புரிந்து விட்டதா?

நாட்கள் சென்றன. இவரின் இளைய மகள் தூக்கில் தொங்கினாள். மூத்த மகளுக்கு பைத்தியம் பிடித்தது. மனைவி இறந்தாள். பேரன் ஒருவன் கிறுக்குப் பிடித்து அலைந்தான். இவருக்குச் சாப்பாடு கிடைக்கவில்லை. இருக்க இடமும் இல்லை. பட்டினியாய் திரிந்தார். தொழிலும் நசிந்தது. படுக்கையில் கிடந்து இறந்தார்.

நான் தான் கொன்றேன்.. நான் தான் கொன்றேன்.... என்று அடிக்கடி முனகிக் கொண்டிருப்பாராம்.

தர்மம் சூட்சுமமானது தானே ?

பின்குறிப்பு : ஆண் வசிய மை தயாரிப்பு பற்றி எழுதவில்லையே என்று படிப்பவர்கள் நினைக்கலாம். பெண்ணை மயக்குவது தான் பெரிய பாடாய் இருப்பதால் பெண்ணைப் (அதாவது ஆணை மயக்கும் வித்தை) பற்றிய கவலை இன்றி இருந்து விட்டனர் போலும். எல்லா ஆண்களும் நடிகர்கள் போலவா இருக்கின்றார்கள் ? இல்லை ஆர்பி ராஜநாயஹம் போல அழகானவராகவா இருக்கின்றார்கள்?

அவர்பொருட்டு எல்லாருக்கும்

பெங்களூரில் இருக்கும் நண்பர் சரவண கார்த்திகேயன் ஓவரா உணர்ச்சி வசப்பட்டு எழுதிய பதிவை படித்து பாருங்கள்.

அவர்பொருட்டு எல்லாருக்கும்


நேரம் இருக்கும் போதெல்லாம் இந்த இணைய தளத்துக்கு சென்று வரவும். வெகு அருமையாக எழுதுகிறார்.

சரவணகார்த்திகேயன் - www.writercsk.com


நன்றி : ரைட்டர் சிஎஸ்கே இணையதளம்.

Wednesday, December 10, 2008

கண்ணதாசனின் சப்பைக்கட்டு

தர்மத்தின் தீர்ப்புக் கதைகள் நான்காவது பகுதியில் தெய்வம் அன்றே கொல்லும் என்ற கதையினைப் பார்த்தோம். சும்மா கதை விடுகிறானென்று படிப்பவர்கள் நினைப்பார்கள். இங்கு, எனக்கு துணையாய் வருபவர் கண்ணதாசன். அவரின் அர்த்தமுள்ள இந்து மதத்தில் ஒரு சம்பவத்தை குறிப்பிடுகிறார். இந்தச் சம்பவம் தெய்வம் அன்றே கொடுக்குமென்பதற்கு உதாரணமாய் மிளிர்கிறது.

திரையுலகின் ஜாம்பவான் சின்னப்பாதேவர் (பஹ்ரைன் செந்தில் நினைவுக்கு வருவதை தடுக்க முடியவில்லை) முப்பத்தைந்து வயது வரையில் வறுமையிலும், ஏழ்மையிலும் உழன்ற போதிலும் நேர்மையினைக் கடைப்பிடித்தார். வெற்றிலைப்பாக்கு கடையில் வாங்கிய ஆறு ரூபாய்க் கடனுக்காக கழுத்தில் துண்டைப் போட்டு இறுக்கினான் கடைக்காரன். நிதித் துன்பம் தாங்காமல் மருதமலை கோவிலுக்குச் சென்று முருகனிடம் அழுது புலம்பி விட்டு திரும்பிய போது காலில் இடறிய சிகரெட் பாக்கெட்டினை எத்தியவாறே வந்தவர் ஏதோ நினைத்தபடி பாக்கெட்டை எடுத்து பிரிக்க, உள்ளே இரு சிகரெட்டுகளும், பத்து ரூபாயும் இருந்ததாம். கடன் ஆறு ரூபாய். தெய்வம் கொடுத்தது பத்து ரூபாய். அழுத அன்றே கொடுத்தது தெய்வம்.
தொடர்ந்து கண்ணதாசனே எனது கதைகளுக்கு உதவியாய் வருகிறார். அவரது அந்தக் கட்டுரையில் இருந்து சிலவற்றை இங்கு பட்டியலிடுகிறேன்.

" பாவமாம் புண்ணியமாம் எந்த மடையன் சொன்னான், சொர்க்கமாம் நரகமாம் எங்கே இருக்கின்றன அவை?, பாவமும் புண்ணியமும் பரலோகத்தில்தானே? பார்த்துக் கொள்வோம் பின்னாலே " இவையெல்லாம் நமது பகுத்தறிவு உதிர்க்கும் பொன் மொழிகள். நரம்பு தளர்ந்து போன கிழவர்கள் மரண பயத்தில் உளறிய வார்த்தைகள் அவை என்று நினைக்கிறார்கள். எப்படி தீர்க்க நினைக்கிறீர்களோ அப்படியே தீர்க்கப்படுவீர்கள் என்கிறது கிறிஸ்தவம். மேலும் பாவத்தின் சம்பளம் மரணம் என்றும் சொல்கிறது.

இப்படி எழுதி வரும் கண்ணதாசன் தர்மத்தின் தீர்ப்பு சூட்சுமமானது என்று சொல்லிவருமெனக்கு உதவியாய் கதை ஒன்றினையும் எழுதியிருக்கிறார். அவரின் வார்த்தைகளிலேயே சற்று சுருக்கமாய்ச் சொல்கிறேன்.

மாயவரத்திலே வாழ்ந்து வந்த விதவையினை ஐந்து பேர் சேர்ந்து கற்பழித்தனர். மூச்சுத் திணறி இறந்த பிறகும் பிணத்தையும் ஒருவன் கற்பழித்தான். நகைகளையும் கொள்ளையடித்துச் சென்றனர். பிடிபட்டவர்கள் ஏழு பேர். ஏழு பேருக்கும் மறுநாள் தூக்கு. ஆறுபேர் அழுது துடித்துக் கொண்டிருந்தனர். ஆனால் ஒருவன் மட்டும் சலனமேயில்லாமல் அமைதியாக இருந்தான். நானும் அன்பில் தர்மலிங்கமும் அதிகாரிகளிடம் அனுமதி பெற்று அமைதியாக இருந்த மனிதனிடம் பேச்சுக் கொடுத்தோம். அவன் சொன்னான்.

"ஐயா, இந்தக் கொலைக்கும் எனக்கும் சம்பந்தமே இல்லை. ஏற்கனவே நான் மூன்று கொலைகள் செய்திருக்கிறேன். ஒவ்வொரு கொலை செய்யும்போதும் நான் ஊரில் இல்லாதவாறு அலிபி தயார் செய்துவிட்டு அந்தக் கொலையைச் செய்வேன். மூன்று கொலைகளிலும் நான் விடுதலையானேன். இந்தக் கொலை நடந்த அன்று, நான் மாயவரத்திலேயே இருந்தேன். ஆண்டவன் தான் என்னை அங்கே இருக்க வைத்திருக்கிறான். பல நாட்களாக எனக்கு வலைவீசிய போலீசார், சரியான சாட்சியங்களோடு என்னைக் கைது செய்து விட்டார்கள். காரணம், கொலை செய்தவர்களிலே மூன்றுபேர் என் சொந்தக்காரர்கள். சாட்சியம் சரியாக இருந்ததினால், எனக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுவிட்டது. ஐயா! இந்தக் கொலைக்காக நான் சாகவில்லை. ஏற்கனவே செய்த கொலைக்களுக்காக சாகப் போகிறேன். "

அவன் சொல்லி முடித்த போது "அரசன் அன்று கொல்வான், தெய்வம் நின்று கொல்லும்" என்ற பழமொழியே என் நினைவுக்கு வருகிறது.

தர்மு தன்னையும் மறந்து சொன்னார். " என்னதான் சொல்லையா, செய்யற பாவம் என்றைக்கும் விடாதய்யா! " ஆமாம் பாவம் கொடுத்த "போனஸ்" தான் செய்யாத கொலைக்குத் தண்டனை.

"என்ன விலை நிர்ணயிக்கிறாயோ, என்ன விலை கொடுக்கிறாயோ, அதே விலை திரும்ப வரும்" என்று எழுதி இருக்கிறார்.

இந்தக் கதையில் தர்மம் சற்று சூட்சுமமாகத்தான் தன்னை நிலை நாட்டி இருக்கிறது என்பதும் படிப்போராகிய உங்களுக்கு புரிகிறதா.

ஆதலால் தான் சொல்கிறேன் " தர்மம் சூட்சுமமானது தானே? "

நன்றி : கண்ணதாசன், வானதி பதிப்பகம்.

தர்மத்தின் தீர்ப்புக் கதைகள் நான்கு

இருப்பதுபொய் போவதுமெய் என்றெண்ணி நெஞ்சே
ஒருத்தருக்கும் தீங்கினை யுன்னாதே - பருத்த தொந்தி
நம்மதென்று நாமிருப்ப நாய்நரிகள் பேய்க்கழுகு
தம்மதென்று தாமிருக்கும் தான் : பட்டினத்தார்.

பட்டினத்தாரைப் போல வாழ்ந்தாரும் இல்லை. வாழப்போவாரும் இல்லை. லெளகீக வாழ்க்கையின் உச்சத்தையும் தொட்டார். ஆன்மீக வாழ்வின் உச்சத்தையும் அடைந்தார். வாழ்க்கையின் விளக்கம் அவரது வாழ்க்கையிலே கிடைக்கும். ஆரியக்கூத்தாடினாலும் தாண்டவக்கோனே செய்யும் காரியத்தில் கண் வையடா தாண்டவக்கோனே என்ற படி பிறருக்கு துன்பமிழைப்பதையே வாழ்வின் நோக்கமாக கொண்டுள்ளனர் மாந்தர்கள்.

தெய்வம் நின்று கொல்லுமென்பார்கள். ஆனால் தெய்வம் அன்றே கொன்ற கதை ஒன்றும் உண்டு.

அவன் அந்த ஊரில் எவருக்கும் அடங்கா காளை. இரண்டு பெண்மக்கள் அவனுக்கு. இருப்பினும் பிறர்த்தியாருக்கு அவன் செய்யும் அடாவடி, கொடுஞ்செயலைக் கண்டு துளியும் கவலைப்பட்டானில்லை. ஆண்டவனும் அவனுக்குப் பாடம் புகட்டாமல் விடுவதில்லை என்று முடிவுகொண்டான்.

தன் வீட்டுக்குப் போகும் வழியில் இருந்த நிலத்தின் மீது கண் கொண்டான் கயவன். அந்த நிலம் கைம்பெண்ணின் ஒருத்திக்குச் சொந்தமானது. அதில் சிறு வீடு கட்டினாள். வேலை பார்த்த கொத்தனாரையும், சித்தாளையும் நையப்புடைத்தான் கயவன். எனக்கு இந்தச் சொத்தில் பங்கிருக்கிறது என்றான். கைம்பெண்ணோ அழுதாள். புலம்பினாள். விட்டானில்லை கயவன். தடுத்திட்டான் வீட்டு வேலையினை. ஊரும் பார்த்தது. ஒடுங்கிக் கிடந்தது. கேட்டால் ஊரே என்னது என்பான் இந்தக் கொலைக்கும் அஞ்சாத கயவன் என்று ஒதுங்கிக் கொண்டது.

என்ன செய்வது? சட்டத்தின் கதவினைத் தட்டினாள் கைம்பெண். சட்டம் அவனைக் கேள்வி கேட்கவுமில்லை. கைம்பெண்ணினுதவிக்கும் வரவில்லை.

யாருமெனக்குத் தேவையில்லை என்று சென்றாள் கோவிலை நோக்கி. அழுதாள். வீட்டுக்குத் திரும்பிச் சென்றாள்.

மறு நாள் காலையில் கயவனின் மகள் ஒருத்தி தாலி அறுத்தாள். மருமகன் மண்டையைப் போட்டான். அடுத்த நான்காவது நாளில் கையும் காலும் இழுத்துக் கொண்டது. வாயில் இருந்து எச்சில் ஒழுகியது கயவனுக்கு. கைம்பெண்ணின் வீட்டு வேலை ஜரூராக நடந்தது.

தெய்வம் நின்று கொல்லுமென்பது தெய்வத்திடம் அடைக்கலமாவோரின் வேண்டுதலைப் பொறுத்தது.

தர்மம் சூட்சுமமானது தானே....

Tuesday, December 9, 2008

பிண்டோற்பத்தி ...

சினிமா, டெக்னாலஜி, தர்மம் என்றெழுதி படித்த உங்களுக்கு சற்று வெறுப்புத் தட்டியிருக்கும். ஆகையால் இன்று வேறு பக்கம் சென்று வரலாமென்றுதான் இப்பதிவு. இப்பதிவும் கூட அறிவியல் கண்டுபிடிப்புத்தான். பிள்ளைகள் உருவாவது எப்படி என்று இன்றைய அறிவியல் கண்டுபிடிக்கும் முன்பே தமிழில் பாடி வைத்திருக்கிறார்கள். ஆண் குழந்தை அல்லது பெண் குழந்தை பெறுவது எப்படி என்ற விளக்கமுமிப்பாடலிலே சொல்லப்பட்டிருக்கிறது. இப்பாடலில் காரிய சித்திக்கான நேரமும், மூச்சுப் பயிற்ச்சியினைப் பற்றிய விளக்கமும் கூட இருக்கிறது.

கேளப்பா மனமான வாயுகூடி
கெடியான சித்தமா காசம்பொங்கி
வேளப்பா ஆங்கார சிகாரமிஞ்சி
மேவுதற்குப் பெண்மேலே மோகமாகும்
நாளப்பா ஐந்துக்கும் மலமேதென்றால்
நலம் பெறவே சொல்லுகிறேன் நன்றாய்க்கேளு
தாளப்பா மனதோடே வியானன்கூடும்
தனியான நாதத்தில் பானன் தானே

தானென்ற விந்துவினிற் சமானன்கூடும்
தனியான சித்தத்தில் வியானன் சேரும்
கானென்ற ஆங்காரம் கர்ச்சிப்போடே
கலந்து நிற்கும் உதானனப்பா கண்டுகொள்ளு
வேனென்ற பத்துமொன்றாய் மனதுங்கூடி
மேவியவன்கலந்து வந்து விழுகும்போது
மானென்றமெளனபர வசமேயாவாள்
மருவுகின்ற பெண்ணுக்கும் முறைதான்கேளே

முறையான பெண்ணாணும் மெளனமுற்றால்
மோசமில்லைகருவங்கே தரிக்கும்பாரு
நிறையான வலத்தோடி லாணேயாகும்
நேராகயிடத்தோடிற் பெண்ணேயாகும்
உறையான கருப்பையிற் சுக்கிலமாய்ப்பாய
உத்தமனே சுரோணிதந்தா னுரைந்துகொள்ளும்
கறையாகப்பாய்ந்தவெளி தமருபோலக்
கழற்கொடிக்காய போற்றிண்டு சிரசுமாமே

ஆமப்பாசிரமோடே கையுங்காலும்
அப்பனே தத்துவங்கள் நரம்புமூளை
ஓமப்பாஅத்திமுத லுரோமத்தோடு
உத்தமனேபதினொருவா சலுமேகாணும்
காமப்பால்விழுந்த வழி சிரசினாலே
கைம்முறையாய்த் தாயுண்ட அன்னஞ்செல்லுஞ்
சேமப்பா நடுமையத் தொப்புளாலே
சென்றதெல்லாமலமாகக் கழியுந்தானே

தானென்றபதினொன்றாற் சடந்தான்முன்னே
சாதகமாயெடுத்துவரும் மடலெவ்வாறு
ஊனென்றபெண்ணுக்கு மனதுவேறாய்
உருதமுற்றுமெளனமுன்னாப் பாவத்தாலே
கானென்ற மலடாவாள் புருடனுக்குங்
கைமுறையாயிப்படிதான் கண்டுகொள்ளு
தேனென்றமொழியாட்குப் பரனார் சொன்னார்
செகமெல்லாம் இப்படித்தான் செனித்தவாறே

அது என்ன வலத்தோடி , இடத்தோடி என்று கேட்கின்றீர்களா.... அதன் விளக்கம் இந்தப் பாடலில் வருகிறது. இப்பாடலில் சில ரகஷியங்கள் மறைவாய் கிடக்கிறது. மீண்டும் மீண்டும் படித்துப் பார்த்து புரிந்து கொள்ளுங்கள்.

வெள்ளி வெண்டிங்கள் விளங்கும் புதனிடம்
தெள்ளிய ஞாயிறு செவ்வாய் சனி வலம்
வள்ளல் வியாழம் வளர்பிறைக்கோரிடம்
ஒள்ளிய தேய்பிறைக் கேவலமாகுமே
மாறிவளர் பக்கமதிற் குறையும் பக்கம்
மதி நாடி கதிர் நாடி வளர்ப்பொன்னோடிப்
பேறுமிகவுண்டாகும் பிராணனிற்கும்
பின்புரைத்த காரியங்க ளெல்லாமேலாம்
கூறுகின்ற சனி நாளிற் பகலிராவிற்
குலவுசரம் வலமிடத்தே கோணாதோடில்
நாறுமலர்பெந்திருவே சொன்னோமிந்த
ஞாலமெல்லாம் புகழ்பெறவே நடக்குமென்றே


யோகிகள் எப்போதும் சுவாசத்தைச் சூரிய கலையிலேயே நடத்திக் கொண்டிருப்பார்களாம்.. சூரியகலையில் காரிய சித்தி வேறு ஆகுமாம். முயற்சித்துப் பாருங்களேன்.

ரகசிய வன்முறை : உயிரோசை

உயிர்மையின் இணைய இதழ் உயிரோசையில் வெளிவந்திருக்கும் ரகசிய வன்முறை கட்டுரையினைப் படிக்க இங்கே சொடுக்கவும்

உயிரோசையில் ரகசிய வன்முறை : தங்கவேல்


நன்றி : உயிர்மை மற்றும் உயிரோசை


* * *