திரைப்படங்கள் மன மகிழ்ச்சிக்காக, கொண்டாட்டத்துக்காக, நல்ல படிப்பினைகளைக் கற்றுத் தருவதாக, நெகிழ வைப்பதாக இருந்தால் தான் அப்படம் மக்களின் மனதில் பதிந்து விடும்.
விசாரணை, அசுரன் ஆகிய படங்களை நான் பார்க்கவே இல்லை. அதே போல கமலின் மகா நதியை இன்றும் பார்க்கவில்லை. காசி படத்தில் பாதியில் எழுந்து வந்து விட்டேன்.
மன நிலையைப் பாதிக்கும் எந்த வித பதிவினையும் மனதுக்குள் பதிந்து விடக்கூடாது என்பதில் எனக்கு கொஞ்சம் பிரக்ஞை உண்டு.
என்னைப் பொறுத்தவரை பக்கத்து வீட்டுக்காரர்கள், உறவினர்கள், நண்பர்கள் என்று நடித்துக் கொண்டிருப்பவர்கள் செய்யும் சக மனித குற்றங்கள் தான் கொடிதிலும் கொடிது என்பேன். பொறாமையால், ஆற்றாமையால் அவர்கள் செய்யும் செயல்கள் பாதிப்பதை விட வேறு எதுவும் பெரிய துன்பத்தைத் தந்து விடாது.
எனக்கு நடந்த ஒரு விஷயத்தை, இங்கு உங்களுக்கு புரிவதற்காக எழுதுகிறேன். எல்.பி.ஏ அதிகாரிகள் மனை அப்ரூவலுக்காக இடத்தினை பார்வையிட வந்திருந்தார்கள். நானும் நின்றிருந்தேன். இடத்தினை சுத்தம் செய்து, அளந்து அறுதியிட்டு நான்கெல்லை கற்களைப் பதித்து வைத்திருந்தேன். அவர்கள் அளந்து பார்த்தார்கள். 500 மீட்டர் ரேடியேஸ் வரை சுற்றிப் பார்த்தார்கள். இந்த இடத்திற்கு வரும் தார்ச்சாலைகள் பஞ்சாயத்தால் நிர்வகிக்கப்படுகிறதா, அதற்கான ஆவணங்கள் இருக்கிறதா என ஆய்வு செய்து விட்டு கிளம்பினார்கள். அப்போது பூமியை விற்றவரின் உறவினர் டிவிஎஸ்ஸில் வந்து ஜீப்பை மறித்தார். அதிகாரிகள் என்னவென்று விசாரித்தார்கள்.
”இது என் பூமி, எனக்கு உரிமை இருக்கிறது. இதற்குள் நீங்கள் எப்படி உள்ளே வரலாம்?” எனக் கேள்வி கேட்டார். உண்மையில் அப்படி ஏதும் இல்லை.
அதிகாரிகள் அவரிடம் ”எங்களிடம் அவர் சமர்பித்த ஆவணங்களின் உரிமை இந்தச் சொத்து அவருடையது என்பதற்கான ஆதாரங்கள் இருக்கின்றன. உங்களுக்கு சொத்தில் உரிமை இருந்தால் கோர்ட் மூலம் நிவாரணம் தேடிக் கொள்ளுங்கள்” என்றுச் சொல்லி விட்டு சென்று விட்டனர்.
இதே கொஞ்சம் எடக்கு முடக்கான அதிகாரியாக இருந்தால், ”என்ன சார்? பிரச்சினை இருக்கும் போலவே?” என அதற்கு தனியாக பிட் போட்டிருப்பார்கள்.
இதைத்தான் பொறாமையினால், ஆற்றாமையினால் செய்யும் செயல் என்பேன். அது நாள் வரை என்னிடம் பேசிக் கொண்டிருந்தவர், அதிகாரிகளிடம் அவ்வாறு பேசிய பிறகு என்னிடம் பேசுவதை நிறுத்தி விட்டார். அவர் அவ்வாறு பேசுவார் என்று எனக்கு அது நாள் வரை தெரியாது. அப்போதுதான் தெரிந்தது அவர் எவ்வளவு பொறாமையால் பீடிக்கப்பட்டு என் மீது வன்மம் கொண்டிருந்தார் என்பது.
புரிகிறதா எந்தக் குற்றம் பெரிய குற்றம் என்று.
மண்டேலா திரைப்படத்துக்கு வருகிறேன்.
தாய், தகப்பன் அற்ற ஒருவன் அந்த ஊரின் ஆலமரத்தடியில் சலூன் கடை வைத்திருப்பார். அவருக்கு ஒரு அனாதைச் சிறுவன் உதவியாள். அவர்களின் வேலை ஊருக்கு வேலை செய்வது. தீண்டத்தகாதவன். ஒவ்வொரு வீட்டுக்கும் ரேசன் வாங்கிக் கொடுப்பது, பாத்திரங்கள் கழுவி கொடுப்பது, அதற்கான சம்பளமாக கஞ்சி கிடைக்கும். ஒரு சிலர் காசு கொடுப்பார்கள். அவனின் ஒரே குறிக்கோள் அவனது அப்பா சாகும் போது ஒரு சலூன் கடை கட்டி விடு என்று சொன்ன வார்த்தைகள் தான். அதற்காக அவன் குருவி கூடு கட்ட தூசி தும்பைகள் சேர்ப்பது போல காசு சேர்த்துக் கொண்டிருப்பான். அவனுக்கு ஊரார் வைத்திருக்கும் பெயர் இளிச்சவாயன்.
எப்படி ஐடியில் வேலைச் செய்பவர்கள் அடிமையை விட கேவலமாக எப்போது எச்.ஆரால் வேலை பறிக்கப்படுமோ என்று தெரியாமல், பணிப்பாதுகாப்பின்றி எப்போதும் பதட்டத்திலேயே வேலை செய்கிறார்களோ அதைப் போலத்தான் இளிச்சவாயனும்.
என்ன ஒன்று இளிச்சவாயனுக்கு வேலை செய்து முடித்ததும் காசு கிடைக்குமா என்று தெரியாது. ஆனால் வேலை மட்டும் செய்ய வேண்டும்.
இப்படியான சூழலில் அந்த ஊரில் இருக்கும் பஞ்சாயத்து போர்டு பிரசிடெண்ட் சங்கிலி முருகனுக்கு இரண்டு மனைவிகள். ஆளுக்கு ஒரு மகன். இருவரும் பக்கத்து பக்கத்து ஊர்களில் இருந்து கொண்டு அடிதடி அரசியலை இருவரும் தங்களுக்குள் ஊர் பெயரைக் காரணம் காட்டி செய்து வருபவர்கள்.
அண்ணன் அவன் ஊரின் தண்ணீர் தொட்டியினை செயல்படாமல் முடக்கி விட்டு, ஊருக்கு நல்ல தண்ணீர் எனச் சொல்லி போர் தண்ணீரை விற்றுக் கொண்டிருக்கிறான். தம்பி அவன் ஊரில் டாஸ்மார்க் பாரை ஏலம் எடுத்து சம்பாதித்துக் கொண்டிருக்கிறான்.
அந்த ஊரின் பள்ளிக்கூடம் சண்டையால் மூடிக் கிடக்கிறது. நீர் தொட்டியும் மூடிக் கிடக்கிறது. நல்ல சாலை இல்லை. தெரு விளக்கு இல்லை. இப்படி எதுவுமே இல்லாத பட்டிக்காட்டு ஊரில் இளிச்சவாயனும், கிருதாவும் வசிக்கிறார்கள்.
தேர்தல் வருகிறது. அண்ணன் தம்பி இருவரும் போட்டி போடுகிறார்கள். அவரவர் ஊர்காரர்களில் வாக்கு சீட்டின் படி இருவருக்கும் சம பலம். ஒரே ஒரு ஓட்டுதான் வேண்டும்.
இதற்கிடையில் அந்த ஊருக்கு வரும் போஸ்ட்வுமன் இளிச்சவாயனுக்கு பெயர் வைத்து ஆதார், வோட்டர் ஐடி பெற்று போஸ்ட் ஆபீசில் அக்கவுண்ட் ஓப்பன் செய்து கொடுக்கிறாள். இளிச்சவாயன் மண்டேலா ஆம் நெல்சன் மண்டேலா ஆகிறான். வோட்டர் லிஸ்டில் மண்டேலாவுக்கு ஓட்டு போட வாய்ப்பு வருகிறது.
முப்பது கோடி பணம் கிடைப்பதற்காக வெறியுடன் இருவரும் மண்டேலாவை மிரட்டி யாருக்கு ஓட்டுப் போடுவாய் என அடாது செய்கிறார்கள். ஒரு வழியாக ஓட்டினை ஏலம் விடுகிறார்கள். ஒரு கோடிக்கு ஏலம் போகிறது.
இப்படியான சூழலில் மண்டேலா இருவரிடமும் பள்ளிக்கூடம், தெருவிளக்கு, நீர் தொட்டி, சாலைகள் என அனைத்தையும் ஒரே ஒரு ஓட்டினைக் காட்டி செய்ய வைக்கிறான். ஊர்ப் பிள்ளைகள் கல்விச் சாலைக்குச் செல்கிறார்கள். வீட்டு வாசலில் நீர் கிடைக்கிறது. உடைத்து எறியப்பட்ட பொதுக் கழிவறை செயல்படுகிறது. சாலை வசதியின்மையால் ஊருக்குள் வராத மினிபஸ் ஊருக்குள் வந்து செல்கிறது. தெரு விளக்குகள் எரிகின்றது.
ஊர் மக்கள் ஓட்டுப் போட டோக்கன் பெறுகிறார்கள். ஓட்டுக்கு இரண்டாயிரம் பெறுகின்றார்கள்.
மண்டேலா தன் ஓட்டுக்காக இருவரையும் செய்ய வைக்கிறான். வாக்கு அளிக்கும் நாளும் வருகிறது.
தேர்தலின் போது ஓட்டுப் போட போகிறான் மண்டேலா. அவன் திரும்பி வந்ததும் அவனைக் கொன்று விட அண்ணனும் தம்பியும் ஆட்களை அனுப்பி வைக்கிறார்கள்.
மண்டேலா ஓட்டினைப் போட்டு விட்டு ஆலமரத்தடியில் வந்து நின்று கொண்டிருக்கிறான். அவன் மீது அன்பு காட்டும் போஸ்ட்வுமன் அவனைக் கொல்லப்போகின்றார்கள் என்று தெரிந்து கொண்டு தப்புவிக்க சொல்கிறாள். மண்டேலா கேட்கவில்லை.
அதன் பிறகு ஒரு டிவிஸ்ட். கதை சுமூகமாக முடிகிறது. முடிவு மகிழ்ச்சியானது.
மனிதனுக்கு ஆறறிவு இருப்பதன் காரணம் அவனிடம் மிளிரும் மனிதாபிமானம்.
மனிதாபிமானம் ஒவ்வொரு மனிதனுக்குள்ளும் ஒளிந்து கிடக்கும் கடவுள் தன்மை கொண்டது. அதன் பரிணாமம் கொரானா காலத்தில் பசியால் வாடிக்கிடந்த மக்களுக்கு தெருவெங்கும் உணவு சமைத்துக் கொடுத்தது. அதை நாம் இணையதளங்களில் பார்த்தோம். ஆண்களும் பெண்களும் போட்டி போட்டுக் கொண்டு தெருத் தெருவாய் உணவின்றி தவித்தவர்களுக்கு உணவு கொடுத்தார்கள்.
அப்போதெல்லாம் மக்கள் செத்தால் தான் என்ன இருந்தால் தான் என்ன என சொகுசாக இருந்து விட்டு, கோடி கோடியாய் கொள்ளையும் அடித்து விட்டு பவனி வந்தவர்கள் இன்று தெருத்தெருவாய் ஓட்டுப் போடுங்கள் என பல பொய்களை அவிழ்த்து விட்டுக் கொண்டிருக்கின்றார்கள்.
ஒவ்வொரு பத்திரிக்கையும் குறைந்த பட்ச நேர்மை இல்லாமல் ஒரு சார்பு நிலை எடுக்கிறார்கள். எந்தக் கட்சியும் சாராதவர்களும் நாளிதழ்கள் வாங்கிப் படிக்கின்றார்கள் என்ற எண்ணமும் இல்லாமல் தாங்கள் பெற்ற கோடிக்கணக்கான பணத்திற்காக எல்லோரையும் மூளைச் சலவை செய்ய முயற்சிக்கின்றார்கள். இவர்கள் அழிக்கப்பட வேண்டும். அல்லது ஒழிக்கப்படல் தமிழர் சமுதாயத்துக்கு அவசியம். இவர்கள் வெகு வெகு தீங்கானவர்கள். பணத்துக்கு தங்கள் வேலையை அடகு வைத்தவர்கள். தீவிரவாதிகளை விட மிகவும் மோசமானவர்கள் இந்தப் பத்திரிக்கைகள் என்னைப் பொறுத்தவரை. நடுநிலை இல்லாதவர்கள் நாட்டு மக்களை மோசம் செய்வார்கள். இவர்கள் செய்திருக்கிறார்கள். அரசியல் டிசைன் வேறு. அதற்காக தாங்கள் வெளியிடும் செய்திகளை விற்கலாமா? அக்கிரமம் இது. அயோக்கியத்தனம் இது. தர்மத்தின் வாசலில் அவர்கள் ஒவ்வொருவரும் தண்டிக்கப்படும் நாட்கள் விரைவில் வரும்.
குறைந்த பட்ச மனிதாபிமானத்தைக் கூட அரசு மக்கள் மீது காட்டவில்லை என்பதை பல பத்திரிக்கைச் செய்திகள் மூலமும், இணையதளங்கள் மூலமும் நாமெல்லாம் கண்டோம்.
ஏன் திடீரென மண்டேலாவுக்கு விமர்சனம் எழுதுகிறேன் என்று உங்களுக்குப் புரியாமல் இருக்கலாம்.
மண்டேலாவில் வரும் இரு காட்சிகள் தான் காரணம்.’
முதல் காட்சி : அந்த ஊரில் ஒரு டாய்லெட் கட்டி இருப்பார்கள். அதற்குள் நாயொன்று சென்று வந்து விடும். அதைச் சுத்தம் செய்ய மண்டேலாவை அழைத்து வரச் செல்வான் ஒருவன் காரில். மண்டேலாவும், கிருதாவும் காரில் உட்கார்ந்து விடுவார்கள். அவர்களை விரட்டி அடித்து காரின் பின்னால் ஓடி வரும்படி சொல்வான் கார் ஓட்டி வந்தவன்.
காரின் பின்னாலே ஓடி வரும் போது, கிருதா, “ஏண்ணே, கார் சும்மாதானே போகுது, நம்மைக் கூட்டிப் போனா என்ன?” என்று கேட்பான்.
அதற்கு மண்டேலா,”அவருக்கு காரில் டபுள்ஸ் அடிக்கத் தெரியாது போலடா” என்பான்.
இந்த வசனமானது நம் வாழ்க்கை மீது காறி உமிழ்கிறது. நாம் இப்படித்தான் சமரசம் செய்து கொள்கிறோம் எல்லாவற்றுக்கும்.
அடுத்த காட்சி: மண்டேலாவுக்கு அவனின் உண்மையான பேர் என்னவென்று தெரியாது. அதை அந்த ஊரில் இருக்கும் வயதான பெரியவர்களிடம் விசாரிக்கலாம் என்று விசாரிக்கின்றான். அப்படி ஒரு பெரியவரிடம் கேட்கும் போது, ”இதை என்னிடம் தானே விசாரிக்க வேண்டும் எனச் சொல்லி தொண்டைக்குள் இருக்கிறது. வெளிய வரமாட்டேன் என்கிறது, சுருட்டுக் கிடைக்குமா?” என்று கேட்பார். மண்டேலாவும் பல சுருட்டுகளை வாங்கிக் கொடுப்பான். பல சுருட்டுகளைப் புகைத்த பின்பும் பெயர் வெளியில் வராது.
இதைத்தான் சக மனிதன் நம்மிடம் செய்யும் பாதகச் செயல். இதுதான் மிக மோசமான குற்றம்.
இந்த இரண்டு காட்சிகளும் காட்டும் வாழ்வியல் அபத்தங்கள் தான் இப்படத்தினை நீங்களும் பார்க்க வேண்டுமென பரிந்துரைக்கிறேன். நீங்களும் நானும் ஒரு வகையில் மண்டேலா வாழ்க்கைதான் வாழ்கிறோம். கொஞ்சம் கொஞ்சம் வித்தியாசம். அவ்வளவுதான்.
விஜய் டிவியில் டெலிகாஸ்ட் ஆகிறது. காசு செலவின்றி பாருங்கள்.
அடுத்து கீழே இருக்கும் செய்திகளைப் படித்து விடுங்கள். நாம் இப்போது வாழும் வாழ்க்கையிலிருந்து கீழ் நிலைக்குச் சென்று விடக்கூடாது என்பதை மறந்து விடாதீர்கள். தமிழ் நாட்டில் இருக்கும் 365 ஜாதிகளில் ஒரு ஜாதியை விட அனைத்து ஜாதியினருக்கும் இது ஒன்றே போதுமானது.
நாம் இனிமேல் எப்படி வாழ வேண்டுமென்பதைச் சுட்டிக்காட்டும் அற்புதமான வரலாறு. வரலாறு நமக்கான பாடங்களைச் சொல்லும். மண்டேலா நமக்கான வழியினைக் காட்டும்.
வாழ்க வளமுடன்...!
நன்றி : காக்கைச் சிறகினிலே இதழ் மற்றும் கட்டுரை ஆசிரியர் ஜோசப் குமார்.