குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label ராஜேஷ்குமார். Show all posts
Showing posts with label ராஜேஷ்குமார். Show all posts

Friday, April 30, 2021

இயக்குனர் கேவி ஆனந்த் - ஒரு முற்றுப் பெறாத நாவல்

எட்டாம் வகுப்பு படிக்கும் போது எனக்கு மாலைமதி, ராணிமுத்து, குமுதம் ஆகிய புத்தகங்கள் அறிமுகம் ஆனது. ஐந்தாம் வகுப்பின் போது ராணிகாமிக்ஸ் படிக்க ஆரம்பித்து இருந்தேன்.

அடுத்த அடுத்த தொடர் நாட்களில் சுபா, ராஜேஸ்குமார், ராஜேந்திரகுமார், பட்டுக்கோட்டை பிரபாகர், பி.டி.சாமி போன்ற நாவல் ஆசிரியர்களின் நாவல்கள் படிக்க கிடைத்தன. குமுதத்தில் தொடராக வரும் சாண்டில்யன் நாவல்களின் தொகுப்புகள் கிடைத்தன.

கசாலி என்ற நண்பன் மூலமாக அம்புலிமாமா போன்ற பல காமிக்ஸ் புத்தகங்கள் படிக்க கிடைத்தன. இறந்து போன எனது நண்பன் ஜகாங்கீர் ஆலம் மூலமாக பலப்பல புத்தகங்கள் கிடைத்தன. 

பாடப்புத்தகங்கள் அதனுடன் இம்மாதிரியான புத்தகங்களுடன் பள்ளிகளில் இயங்கும் நூலகப் புத்தகங்களையும் அவ்வப்போது படிப்பதுண்டு.

இப்படியான நாட்களில் என்னை மிகவும் கவர்ந்த எழுத்தாளர்களான சுபா (சுரேஷ் - பாலகிருஷ்ணன்) எழுதும் சுபா நாவல், சூப்பர் நாவல் ஆகிய நாவல்களில் வரக்கூடிய அட்டைப்படங்கள் படு டெரராக இருக்கும். அப்போதெல்லாம் இண்டெர்னெட் கிடையாது.

அந்த நாவல்களில் வரும் புகைப்படங்கள் நாவலில் வரக்கூடிய ஒரு சிறு சம்பவத்தைக் காட்டும். ஒவ்வொரு புகைப்படமும் அந்த வயதில் எனக்கு மிகுந்த ஆர்வத்தைத் தரும்.




இப்படித்தான் எனக்கு கே.வி.ஆனந்த் புகைப்படக்கலைஞராக அறிமுகம் ஆனார். சுபாவுக்கு கடிதம் எழுதி பதில் கடிதம் கூட வந்தது. அப்போது கே.வி.ஆனந்த் பற்றியான முழு ஈடுபாடு எனக்கு இல்லை.

அவரின் முதல் படமான கனா கண்டேன் திரைப்படத்தினை இதுவரை பார்க்கவில்லை. ஏனோ அது என்னை ஈர்க்கவே இல்லை. அடுத்து அவர் இயக்கி வெளியான அயன், கோ, மாற்றான், அனேகன், கவன் மற்றும் காப்பான் ஆகிய படங்களை பார்த்திருக்கிறேன்.

ஃபேண்டசி படங்கள் அவரின் தேர்வாக இருந்தது. சுபாவின் உளவாளி நரேந்திரன் வைஜெயந்தியின் ஃபேண்டசி நாவல்களைப் போல படமும் அப்படியே வந்தன. அயன் மற்றும் கோ விறுவிறுப்பினை கூட்டும் பாலிவுட் படங்கள் போல இருந்தன. அனேகன் வேறு வகையானது. கவன் மற்றும் காப்பான் இரண்டும் புனைவுகளின் உச்சம். ரசிக்கலாம். ஆனால் அது பார்வையாளனுக்கு எந்த வித உணர்ச்சியையும் தரவில்லை. காப்பான் போன்ற ஒரு மொக்கைப்படத்தினை கே.வி.ஆனந்த் எப்படி இயக்கினார் என்று புரியவே இல்லை.

ஒரு மனிதன் தன் வாழ்நாளில் பெறும் அனுபவங்களின் சாரம் அவனை கூர்மையாக்கும். பலருக்கு அது என்றைக்குமே தெரியாமலே போய் விடும். 

தமிழ் சினிமாவின் கேடுகெட்ட ரசனை உலகத்தில் அவர் தன் பெயர் சொல்லக்கூடிய ஒரு நல்ல படத்தையாவது இயக்கி விடுவார் என்ற நம்பிக்கை இருந்தது.

பல்வேறு குடும்ப நாவல்களை எழுதிய சுபாவின் நண்பரான கே.வி.ஆனந்த் ஏன் குடும்பதளத்தில் படைப்புகளை உருவாக்க தவறினார் என்பதற்கு ஒரே ஒரு காரணமாய் தெரிவது, அவர் தன்னை இன்னொரு ஷங்கராக நினைத்து விட்டார் என்பதாக இருக்கலாம்.

இயக்குனர் ஷங்கரின் கதைகள் காப்பி அடிப்படையிலானவை. காட்சி பிரம்மாண்டங்களையும், நடிகர்களின் புகழையும் வைத்து அவர் தன்னைக் காப்பாற்றிக் கொண்டிருந்தார். இன்றைக்கு அவரின் படைப்புகள் ரசிகர்களின் பல்வேறு கேலிக்கும் கிண்டலுக்கு உள்ளாகிக் கிடக்கின்றன. விற்பனை அளவிலும் கூட அவை தயாரிப்பாளர்களுக்கு லாபத்தை தருவதில்லை. நடிகருக்கும், இயக்குனருக்கும் சம்பளம் கிடைத்து விடுவதுதான் தான் இவ்வகை இயக்குனர்களின் முதல் நோக்கமாகும். அவர்கள் தங்களை நம்பி பணம் செலவழிப்பவர்களை நட்டாற்றில் விட்டு விடுவார்கள். அதுமட்டுமின்றி நல்ல படங்களைத் தர வேண்டுமென்ற ஆவல் இல்லாதவர்கள்.  இயக்குனர் கே.வி.ஆனந்த் தன் படங்களை இவரைப் போல உருவாக்கியதால் இவ்வாறு எண்ணத் தோன்றிற்று.

கே.வி.ஆனந்த் கொரானாவால் தன் இன்னுயிரை இழந்து விட்டார். அது ஃபேண்டசி கதை விரும்பிகளுக்கு மாபெரும் இழப்பு. அவரின் சூப்பர் நாவல் புகைப்படங்கள் இன்றைக்கும் என் கருத்தை விட்டு அகலா வண்ணம் என்னை அச்சமூட்டிக் கொண்டிருக்கிறது. அவரின் மறைவு நம்பக்கூடியதாக இல்லை. 

அவர் சுபா அவர்களின் தொடரும் நாவல்களின் வரிசைகள் போல வரலாற்றில் தொடரும் என்று போட்டு விட்டுச் சென்று விட்டார்.  அவர் முற்றும் போடாத ஒரு நாவலாகிப் போனார்.

அவரின் ஆத்மா சாந்தியடையட்டும்.