குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Saturday, May 12, 2018

நிலம் (43) - அன் அப்ரூவ்ட் சைட்களை ஏன் வாங்கக்கூடாது?

பேசினாலே பிரச்சினையை ஆரம்பித்து விடுகின்றார்கள். ஒவ்வொருக்குத் தகுந்தமாதிரி பேச வேண்டும். எழுத வேண்டும் என சமீபத்திய சமூகம் எதிர்பார்க்கிறது. எதிலும் அவசரம், ஆத்திரம் என பொங்கிக் கொண்டிருக்கின்றார்கள். அதுமட்டுமல்ல போலிகள் புனைபெயர்களில் பல்வேறு அக்கப்போர்களை நிகழ்த்திக் கொண்டிருக்கின்றார்கள். உண்மை எது, பொய் எது என்று எவராலும் கண்டுபிடிக்க முடிவதில்லை. எந்தச் செய்தி உண்மையானது? எந்தச் செய்தி போலியானது என்று உணர்வதற்குள் அடுத்தச் செய்தி வந்து விடுகிறது. பத்திரிக்கைகள் தங்கள் சுயதர்மத்தை இழந்து சார்பு நிலைகள் எடுத்து விட்டன. ஒவ்வொரு கட்சிக்கும் டிவி, பத்திரிக்கை இருக்கின்றன. எதிரானவர்களை கர்ணகடூரமாக விமர்சிக்கின்றார்கள். மொத்தத்தில் நிம்மதியற்றுப் போய் கிடக்கின்றார்கள். வயதாகையில் வாய்தா இல்லாமலே சேருமிடம் சேர்கின்றார்கள். அது அவர்கள் பாடு.

எதைக் கொடுக்கின்றோமோ அதைத் திரும்பப் பெறுதல் வேண்டும். எதைப் பெறுகின்றோமோ அதை கொடுத்தல் வேண்டும். இதுதான் இயற்கையின் விதி. எந்தக் கொம்பராலும் இதை மாற்ற முடியாது. 

சமீபத்தில் அன் அப்ரூவ்ட் மனைகளை அப்ரூவல் செய்வதற்கான கால அவகாசம் முடிவடையப் போகிறது என்பதால் மக்கள் அல்லோலகல்லப்பட்டுக் கொண்டிருந்தார்கள். அரசும் ஆங்காங்கே கேம்ப்களை நடத்திக் கொண்டிருந்தார்கள். இருந்தும் இனியும் 8 லட்சம் மனைகள் அப்ரூவல் செய்ய வேண்டி உள்ளதால் கால அவகாசம் நீட்டிக்கப்பட்டிருக்கின்றது.

என்னால் முடிந்த வரைக்கும் தெரிந்தவர்களுக்கு, ஆன்லைனில் அன் அப்ரூவ்டு மனைகளை பதிவு செய்து கொடுத்தேன். அன் அப்ரூவ்ட் லேயவுட்களையும் அப்ரூவ்ட் செய்து கொடுக்க தேவையான உதவிகளையும் செய்து வருகிறேன். அப்போது பல்வேறு விஷயங்களைக் கவனிக்க நேர்ந்தது. அதை உங்களிடம் பகிரத்தான் இந்தப் பதிவு.

அன் அப்ரூவ்ட் மனைகள் என்பது டிடிசிபி அல்லது எல்.பி.ஏ அமைப்புகளால் அங்கீகரிக்கப்படாத வீட்டு மனைகள் என்று அர்த்தம். வீட்டு மனைகளை அங்கீகரிக்க மேற்கண்ட இரண்டு அமைப்புகளுக்குத்தான் அதிகாரம் உள்ளது. வேறு எவருக்கும் அந்த அதிகாரம் வழங்கப்படவில்லை. பஞ்சாயத்து போர்டுகளுக்கு  அங்கீகாரம் வழங்கப்பட்ட வீட்டு மனைகளில் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ப வீடு கட்ட அனுமதி வழங்க இடமுண்டு. ஏனென்றால் பஞ்சாயத்து போர்டுகளுக்கு வீட்டு வரி வசூலிக்க அனுமதி உண்டு. கவனிக்க மனை அப்ரூவல் வழங்க அனுமதி இல்லை. வரி வசூலிக்க அனுமதி இருப்பதால் ஒவ்வொரு பகுதிக்கும் ஏற்ற அளவில் ஒரு குறிப்பிட்ட சதுரடிகள் வீடு கட்ட மட்டும் அனுமதி தரலாம்.

பஞ்சாயத்து போர்டு அப்ரூவ்டு மனைகள் என்றுச் சொல்லி மனைகளை விற்றார்களே என்று நீங்கள் கேட்பது புரிகிறது. அது உங்களின் அறியாமையே தவிர வேறொன்றும் இல்லை. 

அன் அப்ரூவ்ட் மனைகள் பதிவு செய்திருக்கக் கூடாது அல்லவா? அது அரசின் தவறுதானே என்று கேட்பீர்கள். ஒரு துணைப் பதிவாளர் என்பவர் எந்த ஆவணங்களைக் கொண்டு வந்து கொடுத்தாலும் பதிவு செய்து கொடுப்பார். குறைந்தபட்ச உரிமைகளை அவர் பரிசீலனை செய்து பதிவு செய்ய எடுத்துக் கொள்ளலாம். அவருக்கு சொத்து பற்றிய வில்லங்கங்கள் பார்க்க அனுமதில்லை. அது அவரின் வேலையும் இல்லை. ஆகவே பதிவாளர்கள் மீது குற்றம் சொல்வது என்பதும் ஏற்புடையதல்ல.

அன் அப்ரூவ்ட் மனைகளை வாங்குவதில் உள்ள பிரச்சினைகளில் முக்கியமான பிரச்சினை என்னவென்றால் மனை விற்பனையாளர் குறிப்பிட்ட லேயவுட்டில் உருவாக்கி இருக்கும் மொத்த மனைகளையும் மனைகளாக விற்றிருந்தால் பிரச்சினை வராது. ஆனால் ஒரு சில மனை விற்பனையாளர்கள் லேயவுட்டில் இருக்கும் விற்காத மனைகளை நிலங்களாக மாற்றி விற்று விடுவார்கள். இப்போது புரிகிறதா பிரச்சினை? ஒரு சிலர் சாலைகளை பஞ்சாயத்துக்கு தானம் கொடுக்காமல் சாலைகளையும் சேர்த்து விற்று விடுவார்கள். அந்த மனைகள் நீர்வழிப்பாதையாக இருக்கலாம், விரிவாக்கத்துக்கு உட்பட்ட நிலமாக இருக்கலாம். தொழிற்சாலைப்பகுதியாக இருக்கலாம். கோவிலுக்குப் பாத்தியப்பட்டதாக இருக்கலாம். நில உச்சவரம்பு சட்டத்திற்கு உட்பட்ட நிலமாக இருக்கலாம். இப்படி பல்வேறு ’இருக்கலாம்களில்’ ஏதாவது ஒரு ’இருக்கலாமுக்குள்’ வந்து விட்டால் மனையும் போச்சு, மன அமைதியும் போய் விடும்.

அப்ரூவ்டு மனைகள் இதையெல்லாம் கவனத்தில் கொண்டு இருக்கலாம்களுக்குள் இல்லாத நிலமாக இருப்பின் மட்டுமே அனுமதி பெறுகின்றன. அதுமட்டுமல்ல எந்த ஒரு விரிவாக்கத்தின் போதும் மனைகளை அரசு பயன்படுத்தவும் சட்டத்தில் இடமில்லை.

இது பற்றி ஏற்கனவே எழுதி இருக்கிறேன். இருந்தாலும் மீண்டும் ஓர் நினைவூட்டல்.

இனி மேலும் ஒரு பிரச்சினை வர உள்ளது. அன் அப்ரூவ்ட் லேயவுட்களில் அப்ரூவ்ட் செய்யப்பட்ட மனைகளை வாங்கும் போது பல விஷயங்களைக் கவனத்தில் கொள்ளுதல் அவசியம். அது என்ன பல விஷயங்கள் என்கின்றீர்களா? அது ஒவ்வொரு மனைக்கும் வேறுபடும் என்பதால் பொதுவாகக் குறிப்பிட முடியாது. அவ்வாறு எழுதினால் படிப்பவர்கள் குழம்பி விடுவார்கள். நல்ல பிராப்பர்ட்டி கன்சல்டண்ட்டிடம் விவாதித்த பிறகு மனைகளை கிரையம் பெறுங்கள்.

வாழ்க வளமுடன் !!!

Wednesday, May 9, 2018

சிறிய குச்சி - சிதறிய அரசாங்கம்

எந்த வருடமும் இல்லாத வெப்பம். குளிரான பூமி கொதிக்க ஆரம்பித்திருக்கிறது. திடீரென இரவில் மட்டும் கொட்டும் மழை. காலச் சூழலும் கூட மாறிக் கொண்டிருக்கிறது. விளாங்குறிச்சியில் எப்போதும் குளிர் இருக்கும். கோடையில் கூட குளிராக இருக்கும். ஆனால் இந்த வருடம் சூரியன் நேரடியாகச் சுடுகிறான். இந்திய அரசியலும், தமிழக அரசியலும் இணைந்து செய்யும் மக்கள் தொண்டு கண்டு கொதித்துப் போயிருக்கின்றானோ என்னவோ தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் பாதிப்படைவது மக்கள் தான். 

அதெப்படி ஒரு குச்சியால் ஒரு அரசாங்கத்தைச் சிதறடிக்க முடியும்? என்று நீங்கள் கேட்பது நியாயம் தான். இந்தத் தேர்தலில் எப்படி வெற்றி பெறுவது என திட்டமிடும் கார்ப்பொரேட் கம்பெனிகளின் கைங்கர்யம் இல்லாமல், அரசியல் செய்ய கார்ப்பரேட்டின் உதவி இல்லாமல், ஆட்சியைக் கவிழ்க்க அவர்களின் உதவி இல்லாமல் இது சாத்தியமா? என்று அறிவார்ந்த வகையில் நீங்கள் யோசிக்கின்றீர்கள் என்பது நல்ல விஷயம்தான். ஆனால் பாருங்கள் அறிவுக்கும், உண்மைக்கும் தூரம் அதிகம்.

இரண்டு நாட்களுக்கு முன்பு டிவி சானலை திருப்பிக் கொண்டிருந்த போது முன்னாள் நீதியரசர் (!!!!!) சந்துருவை மன்னார்குடி புகழ் பாண்டே பேட்டி கண்டு கொண்டிருந்தார். நீதியரசர் சட்டம் வேறு, நடைமுறை வேறு என்றும், நடைமுறைக்குத் தகுந்தவாறு தான் நீதிமன்ற தீர்ப்புகள் வரும் என போட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார். பாண்டே என்னென்னவோ கேட்டார், அவர் எதுக்கும் பதில் கூறாமல் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார். வயதானால் வரும் ஞாபக மறதி போல தெரிந்தாலும் அந்தப் பேட்டி அறிவுபூர்வமானதாகவும், அரிதான விசயங்களை அவர் தெரிவித்தார் என்றும் எழுதினால் நீங்கள் நம்பி விடுவீர்கள் என்று நினைக்கிறேன். ஆகவே நம்பி விடுங்கள். இதை எதுக்கு இங்கே எழுதுகிறேன் என்றால் அறிவும் உண்மையும் தூரத்தூர என்றெழுதி இருக்கிறேன் அல்லவா? அதை நிரூபிக்கத்தான்.

சரி குச்சி விஷயத்துக்கு வருவோம். குச்சி என்றதும் இருட்டு அறையில் முரட்டுக்குத்து படம் நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. தமிழ் சினிமாக்காரர்களின் கலைத்தாகத்தை தெரிவிக்கும் மேற்படி படம் ஒரு மைல்கல் என்றே சொல்ல வேண்டும். 

ஒரு மாபெரும் அரசு. மன்னன் மிகவும் நல்லவன், மக்களுக்கு நன்மை செய்வதில் அவனுக்கு நிகர் வேறு எவரும் இல்லை. 30 பர்சண்ட் அரசாங்கத்தினை அவன் நடத்தவில்லை. உண்மையான மன்னன். மக்களின் நன்மைக்காக வாழ்ந்து வந்தான். அவனின் புகழ் உலகெங்கும் பரவியது. மக்களிடையே அவன் கடவுளாக விளங்க ஆரம்பித்தான். 

”ஓடி ஓடி உழைக்கணும், என் வீட்டுக்கு மட்டுமே கொடுக்கணும்” என்று அவன் நினைக்கவில்லை. உண்மையான மன்னனாக இருந்தான். அவன் புகழ் கண்டு மனம் வெறுத்தான் ஒருவன். சமயம் பார்த்துக் கொண்டிருந்தான் அவன். மன்னனின் பிறந்த நாளும் வந்தது. அந்த வருடம் மக்கள் மன்னனின் மீது கொண்ட அபிமானத்தால் பரிசளிக்க விரும்பினார்கள். மன்னனும் ஏற்றுக் கொண்டு அரசவையிலே மக்களின் பரிசுகளை பெற்று அவர்களின் வாழ்த்தையும் பெற்றுக் கொண்டிருந்தான். பொறாமை கொண்டவன் ஒரு அழகான சிங்க உருவம் பதித்த வழ வழப்பான செங்கோல் போன்ற உருவமுடைய ஒரு தடியைக் கொண்டு வந்து மன்னனிடம் கொடுத்து விட்டு, ‘மன்னா! எனக்கு ஒரு வேண்டுகோள், இந்தப் பரிசினை நீங்கள் எப்போதும் உங்களுடன் வைத்துக் கொள்ள வேண்டும்’ என கேட்டான். மன்னனும் அவன் தன் மீது மிக்க அன்பாய் இருக்கின்றானே என மகிழ்ந்து, ‘ஆகட்டும்’ என்று உறுதி அளித்தான்.

அன்றிலிருந்து அந்த தடியை மன்னன் எங்கே சென்றாலும் கூடவே கொண்டு சென்றான். நாட்கள் நகர நகர மன்னன் ஒவ்வொன்றாய் இழக்க ஆரம்பித்தான். முடிவில் நாட்டையும் இழந்து போனான். நாடோடியாய் காட்டுக்குள் திரிந்தான். அப்படி அவன் திரிந்து கொண்டிருக்கும் ஒரு நாள் ஒரு மரத்தடியில் சோர்வாய் அமர்ந்திருக்கையில் மரத்தின் மேலிருந்த ஒரு பட்சி மன்னனைப் பார்த்து,’மன்னா’ என்று அழைத்தது. அதைக் கேட்ட மன்னன், நான் மன்னன் என்று அந்தப் பறவைக்கு எப்படி தெரியும் என யோசித்துக் கொண்டே அதனுடன் உரையாட ஆரம்பித்தான்.

அப்பறவை ”மன்னா, உன் கையில் வைத்திருக்கும் குச்சியால் தான் உன் வாழ்க்கை வீழ்ந்தது, அதைக் கொடுத்தது ஒரு ஆசாரி. அவன் உன் புகழ் மீது கொண்ட பொறாமையினால் இந்தக் குச்சியை உன்னிடம் கொடுத்து, சமயோஜிதமாக அதை உன்னுடனே வைத்திருக்கும் படி செய்ததால் நீ இவ்வளவு துன்பத்தையும் அடைந்தாய்” என்றது. அதிர்ந்தான் மன்னன். ஆனாலும் அவனால் இந்தக் குச்சியா நம்மை இத்தனை துன்பத்துக்கும் ஆளாக்கியது என்று நம்ப முடியவில்லை. அவன் யோசிப்பதைக் கண்ட அந்தப் பட்சி (பஜ்ஜி அல்ல பட்சி - பறவை என அர்த்தம்), “மன்னா, நீ யோசிப்பதைப் பார்த்தால் நான் ஏதோ உன்னிடம் பொய் உரைப்பது போல நினைக்கிறாய். அது இயல்புதான். இதோ இங்கிருந்து கொஞ்ச தூரம் சென்றாயானால் அங்கே ஒருவன் படுக்கையில் உழன்று கொண்டிருப்பான். அவன் வீட்டு முன்னாலிருக்கும் நிலமெல்லாம் காய்ந்து வெடித்துப் போயிருக்கும். அங்கு போய் அவனை எழுப்பு. பின்னர் அவன் வீட்டில் இருக்கும் ஏரின் நுகத்தடியை எடுத்து ஒடித்து நெருப்பு வைத்து எரி. அதன் சாம்பலை கொண்டு போய் கண்காணாத இடத்தில் போட்டு விட்டு வா, அதன் பிறகு என்ன நடக்கிறது என்று பார்த்து விட்டு, இதே இடத்திற்கு வா” என்றுச் சொல்லி விட்டு பறந்து போனது.

மன்னனும் அவ்வாறு சென்ற போது தூரத்தில் பாழடைந்த ஒரு வீட்டினைப் பார்த்தான். அங்கு ஒருவன் நோய்வாய்ப்பட்டு உழறிக் கொண்டே புரண்டு கொண்டிருந்தான். மன்னன் ஏர் எங்கே இருக்கிறது என்று தேடிக் கண்டடைந்து அதை ஒடித்தான். கற்களை உரசி நெருப்புண்டாக்கி அதை எரித்தான். சாம்பலைக் கொண்டு போய் தூரத்தில் போட்டு விட்டு வரும் போது மழை தூரியது. படுக்கையில் படுத்து இருந்தவன் எழுந்து அமர்ந்தான். மன்னனும் அவனுக்கு உதவ அவன் எழுந்து நடமாட ஆரம்பித்தான். வயலில் இருந்த பொய்கை மழையால் நிரம்ப அவன் மகிழ்ச்சியுடன் எழுந்து நடக்க ஆரம்பித்தான். மன்னனும் அவனுடன் சேர்ந்து வேலை செய்ய மாடுகளை வைத்து உழவு செய்தனர். மன்னனுக்குள் பட்சியின் பேச்சு குறுகுறுப்பை உண்டாக்கியது.

அவனை அழைத்துக் கொண்டு  பட்சி அமர்ந்திருந்த இடத்தில் அருகில், குச்சி இருந்த இடத்தை நோக்கிச் சென்றான். அதே பட்சி அங்கு அவனுக்காக காத்திருந்தது. இருவரையும் பார்த்ததும், “மன்னா, என்ன கண்டாய் அவ்விடம்?” என்று கேட்க மன்னனிடம் பதில் இல்லை. 

மரத்தடியில் இருந்த குச்சியையே பார்த்துக் கொண்டிருந்தான். 

அந்தப் பட்சி, “மன்னா, இந்தக் குச்சியை எரித்துச் சாம்பாலாக்கு” என்றது. மன்னனும் அதைச் செய்தான். 

”இனி உனக்கு நல்ல காலம் தான்” என்றது அந்தப் பட்சி.

அந்த நேரத்தில் மன்னனைத் தேடி அமைச்சர் வர, இழந்த ஆட்சி அவனுக்கு மீண்டும் கிடைக்க விருப்பதாகவும், மக்கள் அவனை தேடிக் கொண்டிருப்பதாகவும் அவர் சொன்னார்.

அவனால் இதை நம்பவே முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. அவன் முன்னே நடப்பவை எல்லாம் சாட்சியாக இருக்கிறது. முடிவில் மன்னன் அந்தப் பட்சியிடம் சென்று, “இது என்ன குச்சி என்று சொல்வாயா?” எனக் கேட்டான். அந்தப் பட்சியும் சொன்னது. அதிர்ந்தான் மன்னன்.

அது என்ன குச்சி? அது என்ன மரம் என்று எனக்கும் சொல்ல ஆசைதான். ஆனால் கலிகாலத்தில் ஒருவனை ஒழிக்க எனது இந்தப் பதிவு பயன்பட்டு விட்டால் அதை விடக் கொடுமை வேறு எதுவும் இருக்க முடியாது என்பதால் அந்த விபரத்தை எழுத முடியவில்லை.

Monday, April 16, 2018

குருசாமிகவுண்டருக்காக கருப்பசாமியின் கண்ணீர்

கடந்த வாரம் கோவையில் வெயில் உயிரினங்களை வறுத்தெடுத்தது. சூடு தாங்க முடியவில்லை. உடலெல்லாம் புசுக் புசுக்கென கட்டிகள் தோன்றின. லிட்டர் லிட்டராய் தண்ணீரைக் குடிக்க வேண்டியதாகி விட்டது. முன்பெல்லாம் இப்படி கோவை இருந்தது கிடையாது. வெயில் அடிக்கும், ஆனால் சுடாது. வர வர கோவை கொதிக்கிறது. காவிரியாலா அல்லது வெப்பச்சூடாலா என்று இனம் பிரித்துப் பார்க்க முடியவில்லை.

ஒவ்வொரு மனிதனின் வாழ்க்கையிலும் அவனுக்குத் தீர்க்கவே முடியாத இடியாப்பச் சிக்கல்களை உருவாக்குவது உறவினர்கள் தான். வாழ்ந்தாலும் ஏசுவார்கள், தாழ்ந்தாலும் ஏசுவார்கள். ஆக அவர்களுக்கு குறை சொல்லித்தான் வழக்கம். தங்கத்தட்டில் வைத்து சாப்பாடு பரிமாறினாலும் தட்டு நெளிந்திருக்கிறதே என்றும் குறை சொல்லும் அளவுக்கு உள்ளுக்குள் வெம்மையில் வெம்பிக் கிடப்பதால் வாயில் வரும் வார்த்தைகள் வன்மத்துடன் வெளிவரும். இப்படியானவர்களால் தான் பல குடும்பங்களுக்குள் குத்து வெட்டு என்று கூட நடக்கிறது. பைசாவுக்கும் பிரயோஜனமல்லாத பிரச்சினைகள் கோர்ட்டு வரை வந்து நின்று கொண்டிருக்கும். ஒவ்வொருவரும் வாழ்ந்து கொண்டிருக்கும் போது அவரவர்களுக்கு மறந்து போன விஷயம் அவர்களின் மரணம். அது எப்போது வரும்? எப்படி வரும்? என்று தெரிந்து கொள்ளாமல் ஏதோ ஆயிரமாயிரம் ஆண்டுகாலம் வாழ்வது போல செம கெத்துக் காட்டிக் கொண்டிருப்பார்கள்.

விளாங்குறிச்சியில் எனக்குத் தெரிந்த, பழக்கமான ஒரு கவுண்டர் இருந்தார். அவர் ஒரு விவசாயி. எதார்த்தவாதி. தன் அப்பாவுடன் பிறந்த பெண்களுக்கு சொத்துக்களை பாகம் பிரித்துக் கொடுத்தவர். அந்தளவுக்கு தன்மையானவர். அதிர்ந்து பேசத் தெரியாதவர். சத்தம் போட்டுப் பேசிப் பார்த்ததில்லை. எப்போதும் ஏதாவது வேலை செய்து கொண்டே இருப்பார். பெரும்பாலும் தென்னைத் தோப்பில் களைகளுக்கு மருந்து அடித்துக் கொண்டும், தென்னை மட்டைகளை வெட்டிக் கொண்டும், தண்ணீர் பாய்ச்சிக் கொண்டும் இருப்பார். அவர் வீட்டுக்குச் சென்றால் வரவேற்று எளிமையாகப் பேசிக் கொண்டிருப்பார். அவர் மீது எனக்கு கொஞ்சம் பிரியம் சாஸ்தி. இறந்து போன எனது சித்தப்பா குருசாமி போலவே இருப்பார் அவர். அவரிடம் இதைச் சொல்லி இருக்கிறேன். எப்போது பார்த்தாலும் சிரித்து நலம் விசாரிப்பார்.

அவருக்கு ஆஞ்சியோ செய்திருப்பதாக செய்தி கிடைத்திட அவரைச் சந்திக்க வீட்டுக்குச் சென்றேன். என்னைப் பார்த்ததும் அருகில் நாற்காலியைத் தூக்கிப் போட்டு அமர்ந்து கொண்டு,”டாக்டர் இரண்டு மாசம் ரெஸ்ட் எடுக்கச் சொல்லி இருக்கிறார். அதுக்கப்புறம் வேலை செய்வேன்” என்றுச் சொல்லிச் சிரித்தார்.  அவரின் முகம் களையிழந்து கிடந்தது. மருத்துவமனையின் வாசமும், மருந்துகளின் தாக்கமும் அவரின் பொலிவைக் குறைந்திருந்தன. முகத்தில் அந்த வசீகரப் புன்னகை ஒளிந்து கொண்டது. அதற்குள் உறவினர்கள் வரிசைக் கட்டி நிற்க, அவரிடமிருந்து விடை பெற்றேன். நோயுடன் போராடுவது ஒரு பிரச்சினை என்றால், உறவினர்களுக்குப் பதில் சொல்வது மற்றொரு பிரச்சினை.

மூன்று நாட்களுக்கு முன்பு அவர் மரணமடைந்து விட்டார் என்ற செய்தி கேட்டவுடன் மனது இருப்புக் கொள்ளாமல் வீட்டுக்குச் சென்றேன். உறவுகளின் கூட்டமும், அக்கம் பக்கத்தார், பழக்க வழக்கங்கள் உள்ளோர், நண்பர்கள், வேலைக்காரர்கள் என கூட்டம் வர ஆரம்பித்தன. உறவுகள் அழுது கொண்டிருந்தனர். ஒரு சிலர் கைகளில் மாலைகளோடு வந்தார்கள். அவரின் மீது போட்டு, கும்பிட்டு விட்டு வந்து அமைதியாக உட்கார்ந்து கொண்டார்கள். சொல்லி வைத்தாற்போல அங்கு வந்திருந்த அனைவரின் முகங்களும் வீங்கி இருப்பதைப் போல தெரிந்தது. எனக்குள் வருத்தம் மண்டிக் கிடந்தது. அயர்ச்சி அடைந்தது உள்ளம். அழுகுரல்களின் ஒலி அவ்வப்போது மனதைக் கனக்கச் செய்து கொண்டிருந்தன. 

இந்த பூமி எத்தனையோ உயிர்களைத் தாங்கி இருக்கிறது. இன்னும் தாங்கிக் கொண்டிருக்கிறது. ஐம்பூதங்களின் கூட்டுக் கலவையான உடல் காற்றுப் போனவுடன் அழுகி விட ஆரம்பிக்கிறது. உடல் நாற்றம் வீசுவதற்குள் பூமிக்குள்ளோ அல்லது நெருப்பிலோ எரிக்கப்படுகிறது. அத்தனை ஆசைகளும், கோப தாபங்களும் காற்றுப் போன அடுத்த நொடியில் காணாமல் போய் விடுகின்றன. 

ஒரு சிலரைப் பார்த்திருக்கிறேன். படுக்கையில் உயிரோடும் உடம்போடும் போராடிக் கொண்டிருப்பார்கள். எழுந்து நடமாட முடியாது. கடைசிக் கட்டத்தில் இருப்பார்கள். ஆனாலும் உயிரை இழுத்துக் கொண்டு கிடப்பார்கள். உயிரின் மகிமை அது. உடம்பின் சுகம் அது. அவ்வளவு எளிதில் உயிர் உடம்பை விட்டு விட்டுப் போகாது. ஒரு சிலருக்கு மரணம் என்பது நொடியில் வலியின்றி, என்ன நடக்கிறது என்று தெரிவதற்குள் வந்து விடும். இப்படியான மரணங்களை நல்ல சாவு என்பார்கள். கவுண்டருக்கும் நல்ல சாவுதான் வந்திருக்கிறது என்று பேசிக் கொண்டார்கள்.

அப்போது வயதான ஒருவர் வாயில் துண்டைப் பொத்தியபடி கண்களில் கண்ணீர் வழிய என்னருகில் வந்து நின்று கொண்டு குலுங்கிக் கொண்டிருந்தார். அவரின் கண்ணீர் என்னைப் படுத்தியது. அவரின் தோளைத்தொட்டு அருகில் அழைத்தேன். 

“என்னைத் தொடாதீர்கள்” என்றார் அவர்.

“ஏனய்யா?” என்றேன்.

”அரிஜன்!” என்றார்.

எனக்குள் எரிச்சல் மண்டியது. அவரின் வயது அவரின் எண்ண ஓட்டத்தைக் காட்டியது. அந்தக் காலத்து ஆட்கள் இப்படித்தான் இருப்பார்கள். அது அவரின் குற்றமல்ல, அவரின் பழக்கம். 

அவரை அருகில் அழைத்து, “அப்படியெல்லாம் சொல்லக்கூடாது, ஏன் இப்படி அழுகின்றீர்கள்? கவுண்டரை உங்களுக்குத் தெரியுமா?” என்று கேட்டேன்.

“பதினைந்து வயதிலிருந்து எனக்குத் தெரியும். அவர் வீட்டின் வேலைக்காரன் நான். வயதாகியதால் தான் என்னால் வர முடியவில்லை. அவர் எனக்குக் கொடுக்கும் மரியாதையும், அவரால் நான் வாழ்ந்து கொண்டிருக்கும் வாழ்க்கையையும் நினைத்தேன் அழாமல் இருக்க முடியவில்லை” என்றுச் சொல்லி மீண்டும் அழுதார்.

அவரை அருகில் அழைத்து தட்டிக் கொடுத்து, “இதோ என் வீடு இருக்கிறது. கவுண்டர் இல்லைன்னா என்னா? நீங்கள் என் வீட்டுக்கு வாருங்கள், உங்களுக்கு என்னால் முடிந்ததைச் செய்கிறேன்” என்றுச் சொல்லி ஆற்றுதல் படுத்தினேன். கொஞ்சம் சரியானார். 

இறந்து போன குருசாமிக் கவுண்டருக்காக அவரின் வேலைக்காரர் விட்ட அந்தக் கண்ணீர்த்துளிகளில் மறைந்து கிடக்கிறது அவர் வாழ்ந்து சென்ற வாழ்க்கை.

* * *
16/04/2018

Monday, April 9, 2018

காவிரி ஆறும் கலைந்து போன தமிழர்கள் வாழ்வும்

எனக்கு நினைவு தெரிந்த நாளிலிருந்து எங்கள் வீட்டுக் கிணற்றில் பதினைந்தாவது அடியில் நீர் கிடக்கும். அக்கம் பக்கத்து வீட்டு ஆட்கள் குடிக்க கிணற்று நீருக்குத்தான் வருவார்கள். பூட்டைக்கயிறு அடிக்கடி அறுந்து போகும். ரப்பரில் வாங்கிப் போட்டோம். அது பூட்டையில் சிக்கிக் கொண்டு இழுக்க முடியாது. கயிறுதான் நீர் இறைக்க வசதியாக இருக்கும். மழைக்காலங்களில் கிணறு நிரம்பி வழியும். கிணற்று வாய்ப்புறமாக புற்கள் சேர்ந்த மண்ணை சேந்தி எடுத்து வரப்பிட்டு வைப்பார்கள்.

கோவை சிறுவாணி தண்ணீரெல்லாம் அந்தச் சுவைக்கு ஈடாகாது. ஒரே ஒரு கொதியில் சி.ஆர். அரிசி வெந்து சோற்று மணம் வீட்டை நிறைக்கும். ஆறுகளில் வற்றாது நீர் சென்று கொண்டிருக்கும். குளங்கள் நிரம்பி வழியும். இரண்டு போக சாகுபடி. குறுவையும், பெரும்போகமும் நடக்கும். எட்டு மாதங்கள் வேலை இருந்து கொண்டே இருக்கும். குருவை நெல் பெரும்போக சாகுபடி செலவுக்கு கை கொடுக்கும். மாடுகளுக்கு குருவை வைக்கோல் பஞ்சுபோல இருப்பதால் சீக்கிரமாக மென்று தின்று கொழுக்கும்.

இப்படியான நாட்களில் ஊரில் தண்ணீருக்காக அரசு ஆழ்துளைக்கிணறு தோண்டினார்கள். கிணறு வற்றிப்போனது. குடி தண்ணீருக்காக பைப்படிக்குச் செல்ல வேண்டிய சூழல். இது காலத்தின் கட்டாயம் என்றாலும் அந்தப் பைப்படி பல்வேறு சிக்கல்களை அக்கம் பக்கத்தாருடன் உருவாக்கியது. குடிக்க, குளிக்க, துவைக்க தண்ணீர் போதாமல் நல்ல உறவுகளாகத் தெரிந்தவர்களுடன் சண்டை சச்சரவுகள் உருவாகின. ஒரு குடம் அதிகம் பிடித்தால் எண்ணிக்கை பிரச்சினை வந்து விட உறவுகள் தண்ணீருக்காக சங்கடப்படத்தொடங்கின.

ஆழ்துளைக்கிணறுகளால் மரம், செடிகள் பட்டுப்போயின. மழை வளம் குறைய ஆரம்பித்தது. குருவைச் சாகுபடி தானாகவே நின்று போனது. ஆனால் பெரும் சாகுபடி ஒழுங்காக நடந்து கொண்டிருந்தது. காவிரியும் கை விரிக்கத் தொடங்கியது. பக்கத்து வீட்டுக்காரர்கள் ஒரு குடம் தண்ணீர் அதிகம் பிடித்தாலே சண்டைக்குச் சென்றோம். பக்கத்து மாநிலத்துக்காரர்கள் டி.எம்.சிக்கணக்கில் தண்ணீர் திறந்து விட மறுத்தார்கள். அவர்கள் என்ன வானத்தில் இருந்து குதித்தவர்களா? சாதாரண மனிதர்கள் தானே? வானத்துத்  தேவர்களுக்குள் கூட சண்டையும் சச்சரவுகளும் உண்டு என்கின்றன மதங்கள்.

நாடெங்கும் தண்ணீருக்கான பிரச்சினைகள் துவங்கின. இது வரலாறு. கடந்து வந்த நிகழ்வுகளைச் எந்த வெட்கமும், சங்கடமும், வருத்தமும் இல்லாமல் வரலாறு சொல்லும். ஆனால் வரலாற்றினை உருவாக்கும் காரணகர்த்தாக்கள் வரலாற்றில் தென்படுவதில்லை. அவர்கள் தான் வரலாற்றினை உருவாக்குகின்றார்கள். அவர்கள் என்ன செய்து கொண்டிருக்கின்றார்கள் என்று அறியாது அறியாமையில் சிக்கிக் கிடக்கிறோம். இதோ அவர்களின் நயவஞ்சக சூழ்ச்சிகள்.

விவசாயம் பொய்த்தது, தேவைகள் அதிகரித்தன. அப்போது இஞ்சினியர் படிப்புகள் மக்களின் முன்னே வைக்கப்பட்டது. படித்தவர்களுக்கு பல லகரங்கள் சம்பளங்கள் என்று காட்சிகள் அரங்கேற்றப்பட்டன. சாதாரண விவசாயி பொய்த்துப் போன நிலத்தை வைத்து என்ன செய்வது? வாரிசுகள் படிக்கவாவது பயன்படட்டுமே என நிலத்தை விற்க ஆரம்பித்தான். படித்த இரண்டாம் தலைமுறை வாரிசுகள் இப்போது வேலையின்றி நிர்கதியாக நிற்கின்றனர். சொத்துக்களை விற்று படித்தவர்கள் வாங்கும் சம்பளத்தில் இரண்டு செண்ட் பூமியை வாங்க முடியவில்லை. ஏக்கர் கணக்கில் வைத்திருந்தவர்களுக்கு வீட்டு மனையாக இரண்டு செண்ட் கிடைக்காமல் மூன்றாவது மாடியிலோ நான்காவது மாடியிலோ தொங்கிக் கொண்டிருக்கும் ஆகாய வீடுகளை தவணை முறையில் வாங்கி புளகாங்கிதமடைகின்றார்கள். அதை நாகரீகம் என்றுச் சொல்லி மனதை ஆற்றுப்படுத்துகின்றார்கள். அதுதான் சிறந்த வாழ்க்கை என்று அறம் பேசும் பத்திரிக்காக்கள் கூவுகின்றன.

இது மட்டுமா? இன்னொன்றும் இருக்கிறது.

ஆங்கிலேயன் நாட்டை பிடித்துக் கொண்ட போது, விவரமாக ஆங்கிலம் கற்றுக் கொண்ட ஜாதியொன்று அட்டையாக அவர்களிடம் ஒட்டிக் கொண்டது. எங்கு பணம் இருக்கோ அங்கு சென்று ஈசிக் கொண்டு உறிஞ்சுவதை வாடிக்கையாகக் கொண்ட கூட்டம் அது. கோவில்களை பிடித்துக் கொண்டது.  இந்தியாவெங்கும் அதிகாரத்தில் நீக்கமற நிறைத்தன அக்கூட்டம். அதில் ஒரு சிலரை வைத்துப் பக்தியை பரப்பியது. கோவிலுக்குள் கூட்டத்தை வர வைத்து வசூலித்துக் கொண்டது. 

குலதெய்வ வழிபாட்டினை விட்டு விட்டு, காசு கொடுக்கும் தெய்வமென்ற கோவிலுக்கு படையெடுத்து இருக்கும் கொஞ்ச நஞ்ச பொருளையும் இழக்க ஆரம்பித்தார்கள். குல தெய்வங்கள் காணாமல் போயின. ஊரெங்கும் கோவில்கள் முளைக்கத்துவங்கின. வசூலிக்க ஆரம்பித்தன. இதற்கிடையில் வேற்று மதங்கள் வேறு நுழைய மக்களுக்கு எதைத்தின்றால் பித்தம் தெளியும் எனப் புரியாது எல்லாவற்றையும் தின்னத் தொடங்கினார்கள்.

இது மட்டும் போதாது என கூத்தாடிகள் வேறு கூத்தாடினார்கள். கூத்தாடிப் பெண்களின் தொடைகளிலும், குண்டிகளிலும், முலைகளிலும் கலைகளை வளர்த்து தலைவர்கள் உருவாகினர். பெண்களின் ஆடை அவிழ்ப்புகளை கலை என்றார்கள். மறை பொருள் வெளிவரும் திகைப்பில் தேணுண்ட நரியாய் மக்கள் மாறிப்போயினர். மக்கள் திரைகளின் முன்னே கை நீட்டி, முறுக்கி, வாய்கோணி, தொண்டை வறண்ட காட்டுக்கத்தல் வசனங்களில் மூழ்கிக் கிடந்தனர். அரசியல் காமத்தோடு இயைந்து மக்களை மனமயக்கி ஆட்சித்தலைமையில் உட்கார்ந்தார்கள் தலைவர்கள்.  தங்கள் கோவணத்தைக் கூட அறியாமல் பிடுங்கிக் கொண்டிருக்கும் தலைவர்களின் வசீகரத்தில் மூழ்கிக் கிடந்தனர்.

காசிருந்தால் போதும், கடைத்தேறி விடலாமென்ற ஆவலில் படித்தார்கள் கிராமத்தார்களின் வாரிசுகள். அங்கேயும் தங்கள் கைவரிசையைக் காட்டி அட்டை போல உட்கார்ந்தார்கள் அந்த உறிஞ்சு கூட்டம். இப்போது ஒரு கூத்தாடி கிறிஸ்துவர்களையும், முஸ்லிம்களையும் எங்கள் ஜாதி என்கிறது. கொஞ்சமே கொஞ்சமாய் விழித்துக் கொண்டார்கள் என்பதால் உடம்பு முழுவதும் அக்னியாய் எரியும் அந்தக் கூட்டத்தாருக்கு பித்தம் அதிகமானதால் பல்வேறு சூழ்ச்சிகளை அரங்கேற்றுகின்றார்கள். 

காலத்தின் கோலம் மட்டுமல்ல ஒரு சில மனித குல நாசக்காரர்களின் வஞ்சக எண்ணித்திலே காசு பண்ணும் ஆசையினாலே இந்தியா அழிபடத்தொடங்கியது. இமயம் முதல் குமரி வரை குளிர் நீராலே குளிர்ந்திருந்த இந்தியாவும், அதன் மக்களும் ஒரு சில உயர் ஜாதி நாசக்காரர்களின் பண ஆசையினாலே பிரிபடத் தொடங்கினார்கள். அரசியலில் அவர்கள் போய் உட்கார்ந்தார்கள். பணமிருந்தால் மட்டுமே அதிகாரம் என்ற நிலைக்கு அரசியலைக் கொண்டு வந்தார்கள். ஏழைகள் அதிகாரத்தினருக்குச் செருப்புத் தொடைத்துப் போடும் வேலையைச் செய்ய வைத்தார்கள். அரசாங்கத்தில் ஊழல் பெருத்துப் போக வைத்தார்கள். நீதித்துறையிலும் கூட ஊழலைப் புகுத்தினார்கள். நீதிபதிகளை கேள்வி கேட்கக் கூடாது என்றார்கள். எல்லையற்ற அதிகாரம் அழிவுகளைச் செய்ய ஆரம்பித்து விட்டதை, ‘சட்டப்படி தான் எல்லாமும் நடக்கும்’ என்று வாய்ச்சொல்லில் சட்டம் படித்தார்கள். எதிர்த்தால் ஆண்டி இந்தியன் என்றார்கள். போராட்டங்களை தேசத்துரோகங்கள் என்றார்கள். 

இளைஞர்களை உடல் வலிமை தரும் விளையாட்டுக்களில் இருந்து பிரித்து ஏமாற்றினார்கள். அதுதான் வீரம் என்றார்கள். அதுதான் விளையாட்டு என்றார்கள். உடல் வலி குறைந்து போய் வெம்பிப்போன பிஞ்சுகளாய் மாறினர் இளைஞர்கள். 

கையிலிருக்கும் காசைக்கூட செல்லாது என்றார்கள். வங்கியில் போட்டால்  கைது செய்ய மாட்டோம் என்றார்கள். வங்கியில் பணத்தைப் போட்டால் மொத்தமாக திருடும் கூட்டத்தை வைத்து திருட வைத்து வெளி நாடுகளுக்கு அனுப்பி வைக்கின்றார்கள். வங்கிகள் மூழ்கிப் போகப்போகின்றன என்கிறார்கள். அதற்கு வரி, இதற்கு பிடித்தம் என்கிறார்கள். இனி என்ன ஆகுமோ தெரியாது எனக் கலங்கி நிற்கிறது பரிதாபகரமான இந்தியமக்கள் கூட்டம். இருக்கும் பணத்தை எல்லாமும், சொத்துக்களையும் பறிமுதல் செய். இந்தியனை ஏழையாக்கு, அதன் பின் அடிமையாக்கு என்கிற மந்திரம் ஜெயிக்க பல்வேறு சித்துக்களை செயல்படுத்துகிறது அந்தக் கூட்டம்.

இது ஒரு பக்கமிருந்தாலும் இன்னொரு கூட்டம் மொத்தமாகப் பறித்துக் கொண்டு விடுகிறது.

எல்லாவற்றுக்கும் ஆசைப்படு, ஆசைப்பட்டதை எல்லாம் என்னிடம் கொடுத்து விட்டு என்னுடன் அமர் என்கிறது ஒரு கூட்டம்.  அது யோகக்கலையினைக் கற்றுக் கொடுத்து உடல் வலிமை பெற வைக்கும் என்று கூறுகிறது. உடல் வலி இழந்து, நிர்கதியாய் நிற்போரை, மனமகிழ் கொள் என மொட்டை அடித்து புண்ணிய மாக்களாக ஆக்குகின்றார்கள். 

இதோ உங்களைக் காப்பாற்ற வந்து விட்டார் மகிமைமிக்கவர்கள் என்றார்கள். வங்கிக் கணக்குகளில் லட்சங்களை போடுவோம் என்றனர். நல்லாட்சி தருவோம் என்றார்கள். இதோ அவர்கள் தரும் நல்லாட்சிக்கு நற்சாட்சி கீழே

*We were taxed for earning money.*
*We are taxed for spending money.*
*We were taxed for hoarding money.*
*We are taxed for withdrawing money.*
*We are taxed for depositing money.*
*We are taxed for service money*
*We are taxed (cess)for education*
*We are taxed for Swatch Bharat*
*We are taxed for purchase*
*We are taxed for sales*
*We are taxed for manufacturing*
*We are taxed for public Utility*

_*Earning is a crime.*_

_*Saving is a crime.*_

_*Spending is a crime.*_

_*Donating to Political Parties is the only good act.*_


இதுதான் நல்லாட்சி. இருக்கும் பணத்தை எல்லாம் நாட்டுக்குக் கொடு என்கிறது அந்த நல்லாட்சி. நாடு நன்றாக இருக்க வேண்டுமானால் நீ நாசமாகப் போ என்கிறது அந்த ஆட்சி. நீ இருந்து என்ன புண்ணியம்? நாடு நன்றாக இருக்க வேண்டும் என்கிறது அந்த நல்லாட்சி. மக்கள் நன்றாக இருந்தால் நாடு நலம் பெறும் என்பதை தங்களுக்கு வசதியாக மாற்றிக் கொண்டு மூளைச்சலவை செய்தார்கள். புத்தி தெளிந்தோருக்கு பித்தனென்று பட்டமிட்டார்கள். அவர்களை தேசத்துரோகிகள் என்றார்கள்.

உடல் வலி இழந்து, உணவு விஷமாகிப் போனது. மருத்துவத்திற்குச் சென்றால் பணக்காரர்களுக்கு உடல் உறுப்புகளைத்தானம் கொடுக்க புதிதாக மூளைச்சாவு என்றுச் சொல்லி உறுப்பையும் அறுத்தெடுக்கும் அற்புதமான வைத்தியத்தை தர வைத்தார்கள்.

வடக்கே சாமி சிலைக்கே நாமே அர்ச்சிக்கலாம். தெற்கே என்றால் சம்பிரதாயம் குலைந்து போகும் என்று கூப்பாட்டுக் குரல் கேட்டு நீதிமன்றங்கள் தீர்ப்புகளை வழங்குகின்றன. தீண்டாமை குற்றம் என்ற சட்டம் கோவிலுக்குள் செல்வது தீண்டாமை என்கிற போது கை பொத்தி மெய் மூடி நிற்கிற அதிசயத்தைப் பார்க்க வைத்தார்கள். கேள்வி கேட்போருக்கு மூளை இல்லை என்றார்கள். சாமி குத்தம் என்றார்கள். இந்த வரலாற்று சூழ்ச்சிக்காரர்களின் சூழ்ச்சிக்கு இரையாகியது மொத்த இந்தியாவும். அதில் முன்னணியில் இருப்போர் தமிழர்.

பொங்கிய புனல்கள் எல்லாம் வற்றிப் போயின. வற்றாத புனல்களை வற்ற வைத்துக் கொண்டிருக்கிறார்கள். பூமிக்குள் இருக்கும் தண்ணீரையும் உறிஞ்சி எடுத்து பாலைவனமாக்க பல்வேறு வசனங்களைப் பேசுகின்றார்கள். காவிரி ஆற்று நீரை அளவு குறைத்தார்கள். இருக்கும் நிலத்தடி நீருக்கும் நாட்டின் வளர்ச்சி என்கிற பெயரில் வேட்டு வைத்தார்கள். சுடுகாடாக்கி ஒரு சமூகத்தை அழித்துவிடும் அற்புத திட்டம் இதென்று காசுக்கு அடங்கும் கூட்டத்தாரை வைத்து நாட்டை வளமாக்கும் அற்புதங்கள் நிகழப்போகிறது எனக் கூப்பாடு போடுகின்றார்கள். பதவியில் இருப்போரின் பலவீனங்களால் பறிபோகிறது தமிழர் பூமி வளம். 

ஸ்ரீலங்காவில் மண்ணுக்குள் புதைந்து போன தமிழர்களின் கனவுகள் போல இற்றுப் போன பிணங்கள் நடமாடும் இடமாக மாறப்போகின்றன தமிழர்கள் வாழ்க்கை.

தமிழர்களும் தமிழும் எதிர்கால சந்ததியினருக்கு ஒரு புதைக்கப்பட்ட வரலாறாகப் போகும் நிகழ்வுகள் நடந்து கொண்டேஇருக்கின்றன. தமிழர்கள் நடிகர்கள் தடவும் நடிகைகளின் தொடைகளின் வனப்பில் கனவுகளைக் கண்டுகொண்டு கிடக்கின்றார்கள். இன்று கிடைக்கும் காசில் டாசுமாக்கில் போதையேற்றி நடுச்சாலையில் உரண்டு கொண்டிருக்கிறது தமிழர் சாதி. 

மாடு பிடிக்கப் பொங்கிய கூட்டம் இன்று தண்ணீர் வளம் பொங்க போராடாது சோம்பிக் கிடக்கிறது. இருக்கும் காலம் வரை குடிக்க ரம் உண்டு என்கிறது ஒரு கூட்டம். கை தட்டி மகிழ்ந்து, ஆடும் முலைகளோடு சேர்ந்தாட கிரிக்கெட் எனும் விளையாட்டு இருக்கிறது என்று இளிக்கிறது ஒரு கூட்டம். கூட்டம் கூட்டமாக பிரிந்து கிடக்கும் தமிழர் சாதி சேர்ந்து விடக்கூடாது என்று கொக்கரிக்கிறது மற்றொரு கூட்டம். 

திரிந்த மனம் தெளிந்து நீர் எது கானல் எது என்ற விபரம் தெரிவதற்குள் காணாமல் போய் விடும் தமிழர் சாதி தற்போது காணாமல் போய்க் கொண்டிருக்கும் காவிரி போல. 

Wednesday, April 4, 2018

இப்படியும் சில ஜென்மங்கள்

திருவான்மியூரில் இருக்கும் திருமதி.ஜோதி அவர்கள் தெரு நாய்களுக்காக 12 வருடங்களாக உணவு கொடுத்து வருகிறார் என்ற செய்தியை விகடனில் ஆன்லைனில் படித்தேன். மனதுக்கு இதமாக இருந்தது. அந்தப் பெண்மணி நீண்ட ஆரோக்கியத்துடன் இருக்க வேண்டுமென மனசு நெகிழ வேண்டிக் கொண்டேன். ஆனால் அதற்கு ஒரு ஆத்மா இப்படி ஒரு பின்னூட்டம் போட்டிருக்கிறது. 


( நன்றி : விகடன் )

நாய்களை விட மனிதர்கள் எவ்வளவோ அக்கிரமங்களைச் செய்கின்றார்கள். அவர்களை எல்லாம் உணவிடாமல் கொன்று விடலாமா என்று இந்த அக்கப்போர் சொல்லுமா? எனத் தெரியவில்லை. இது ஆணா பெண்ணா என்று கூடத் தெரியவில்லை. மனிதப்பண்பு அற்ற இந்த கமெண்டுகளை எப்படித்தான் எழுதுகின்றார்களோ தெரியவில்லை. இப்படியும் ஒரு சில ஜீவன்கள் இந்தப் பூமியில் வாழ்கின்றன. என்ன செய்வது? 

அடுத்த நொடியில் மனித வாழ்க்கை எப்படி இருக்கும் என்று நினைத்தே பார்க்க முடிவதில்லை. நம்ம முன்னாள் முதலமைச்சர் அதற்கொரு உதாரணம். இப்படி பல்வேறு சம்பங்களை நாம் கடந்து வந்திருக்கும் வாழ்க்கையில் கண்டிருப்போம். இப்படியான நிலையில் நிரந்தரமில்லா வாழ்க்கையில் எதுதான் சாசுவதம் என்று புரிந்து கொள்வதற்குள் ஆயுளே முடிந்து போகின்றது. எல்லாம் புரிந்த பிறகு செய்ய முடியாது போய் விடுகிறது.

கோவையில் எனக்குத் தெரிந்த ஒரு நபர், நல்ல மனிதர் அவர். விவசாயி. படிக்கவில்லை. ஏகப்பட்ட சொத்துக்கள். மாதம் தோறும் கொட்டும் வாடகைப் பணம். பிரஷர் இல்லை, சர்க்கரை இல்லை. தினமும் எட்டு மணி நேரம் உழைப்பு. இன்று கே.எம்.சி.ஹெச்சில் ஆஞ்சியோ செய்யப்பட்டுக் கிடக்கிறார். நேற்றுக்கு முதல் நாள் பேசிக் கொண்டிருந்தார். இன்றைக்கு மருத்துவமனையில் கிடக்கிறார்.

எனக்கு உடம்பில் சில நோய்க்கான அறிகுறிகள் தென்பட்டன. இவ்வளவுக்கு அடியேன் சுத்த சைவம்.  முட்டை கூட எடுத்துக் கொள்வதில்லை. எண்ணைப் பலகாரங்கள், பால் பொருட்கள், கொழுப்பு சார்ந்த உணவுகளைத் தவிர்த்து விடுவேன். கால் வயிறுதான் உணவு எடுத்துக் கொள்வேன். இருப்பினும் அவ்வப்போது நோயின் பிடியில் சிக்கி விடுவேன். அடிக்கடி சளி பிடிக்கும். இந்த முறை மட்டும் தான் மருந்தே இல்லாமல் சரியானது. எளிமையான மருத்துவம் தான். ஆனால் இன்ஸ்டண்ட் உணவுகளை உண்ணும் இந்த உலகம் அதை ஏற்பதில்லை. இப்படியெல்லாம் வாழ்ந்து கடைசியில் உடம்பு என்ன இரும்பாகவா இருக்கப் போகின்றது? அழியத்தான் போகிறது. ஆனால் மருத்துவமனையில் சென்று படுக்கக் கூடாது என்று மனது ஆசைப்படுகிறது.

இதற்காக அக்குபிரஷரில் டாக்டர் பட்டம் பெற்ற ஒரு மருத்துவரிடம் சிகிச்சை எடுத்துக் கொண்டு வருகிறேன். கொஞ்சம் உடல் பருமனைக் குறைக்க, உணவு பழக்கத்தை சீராக்கவும் தொடர்ந்து சென்று வருகிறேன். அங்கு ஐ.டியில் பணிபுரியும் பல்வேறு பெண்களைச் சந்திக்கிறேன். ஒவ்வொரு பெண்களும் காரில் வருகின்றனர். லட்சங்களில் சம்பளம். வரும் போதே போனும் கையுமாகத்தான் வருகின்றனர். அடிக்கடி வரும் அழைப்புகளில், ‘சரி ஹெட், காலையில் வந்து விடுகிறேன்’ என்ற வார்த்தைகள் கேட்கும். ஐடிக்கணவர்கள் போனுடன் வாழ்க்கை நடத்துகின்றார்கள். அவர்களின் உடைகள் பல ஆயிரங்கள் இருக்கும். செம மாடர்ன் பெண்கள். அவர்களின் பின்னே அப்பெண்களின் அம்மாக்கள் கையில் குழந்தைகளுடன் சில நேரங்களில் வருவர். ஒரு சில பெண்கள் தங்கள் குழந்தைகளை (எக்ஸ்ட்ரா லக்கேஜ்கள்) அம்மாக்களிடம் கொடுத்து விட்டு பால் கவுச்சி அடிக்காமல் இருக்க டியோடரண்டுகளை அடித்துக் கொண்டு பால் கொடுப்பது அழகுக்கு ஆபத்து என்று பேசிக் கொண்டிருந்தார்கள்.

லட்சங்களில் கார், ஆயிரங்களில் உடைகள் ஆனால் இளமை முழுவதும் சாஃப்ட்வேர் கம்பெனிக்கு அர்ப்பணிக்கின்றார்கள். அவர்கள் கொடுக்கும் லட்சங்களை முன்னே பின்னே பார்த்தறியாதவர்களுக்கு எது வாழ்க்கை என்று புரிபடவே இல்லை. பெரும்பாலான ஐடியில் வேலை செய்யும் பெண்களின் குழந்தைகள் நோயுடனே பிறக்கின்றன. அவர்களின்  நோயுக்கான சிகிச்சையை அவர்கள் செய்கின்றார்கள். நோஞ்சான் பிள்ளைகளை அழைத்துக் கொண்டு அவர்களின் அம்மாக்கள் சிகிச்சைக்கு வருகின்றார்கள். இந்தக் கொடுமைகளை என்னால் சகித்துக் கொள்ளவே முடியவில்லை. பிள்ளைகளின் அழுகுரல்கள் கேட்கும் போது அது எனக்கு நரகத்தை விடக் கொடுமையானவையாகத் தோன்றுகிறது.

பணத்தின் முன்னே சலாமிடும் உலக மாந்தர்கள் இருக்கும் வரை இப்படியான அழுகுரல்கள் கேட்டுக் கொண்டே இருக்கும் போல. இரக்கத்துடன் நாய்களுக்கு உணவிடுபவரைக் கூட கிண்டல் செய்து, அதில் ஒரு கெட்ட எண்ணத்தைப் பதிவிடும் மாந்தர்கள் இந்த உலகில் இருக்கும் வரை தீமைகள் இருக்கத்தான் செய்யும். அந்தப் பின்னூட்டம் என்ன ஒரு அரக்கத்தனமான எண்ணம் என்பதைக் கவனியுங்கள். இவர்களும் நம்முடன் தான் வாழ்கின்றார்கள்.

Monday, April 2, 2018

பெண்மையின் தத்துவம் தியாகம்

அத்தினி, சித்தினி பதிவு என் மனைவிக்கு விருப்பம் இல்லாத காரணத்தாலும், ஆண்கள் கெட்டுப்போய் விடக்கூடாது என்பதாலும், சில பெண்களின் வாழ்க்கையில் சில பல பிரச்சினைகள் எழும் என்பதாலும் எழுதப்படவில்லை என்பதை மிகுந்த பணிவுடன் தெரிவித்துக் கொள்கிறேன். ஆகவே மன்னித்தருள்க. அவங்களுக்கு பிடிக்கவில்லை எனில் அடியேன் மூச்சு கூட விடுவதில்லை. உண்மையாகத் தான் சொல்கிறேன். மூச்சுக்கூட விடமாட்டேன்.

என்னிடம் சொத்து இருக்கிறதா? உறவினர்கள் உள்ளனரா? பணம் சம்பாதிப்பாரா? என்றெல்லாம் அவர் யோசிக்கவே இல்லை. வருகிறாயா? என்றேன் வந்து விட்டார். எதிர்கால வாழ்க்கையின் போக்கு எனக்குப் புரியாதகாலம் அப்பருவம். மனித மனங்களில் மண்டிக்கிடக்கும் இருட்பகுதிகளை உணர்ந்து கொள்ளும் பக்குவம் இல்லாத பருவத்தில் இருந்தேன். சினிமா தான் வாழ்க்கை போலும் என நினைத்துக் கொண்டிருந்தேன். ஆனால் அது எதார்த்தம் அல்ல என்று இருவரும் வாழ்க்கையில் இணைந்த பிறகு, என் முன்னே வந்து நின்றது என் வாழ்க்கையும் என் சூழலும்.

ஒரு உறவினர் வீட்டில் தங்கி இருந்த போது, ‘உங்கள் இருவருக்கும் சமைத்துப் போட காய்கறி இல்லை’ என்றார்கள். மறு நாள் அங்கிருந்து சென்று விட்டோம். மற்றொரு உறவினர் வீட்டில் இருந்த போது ’எப்போது நீங்கள் ஊருக்குப் போகப்போகின்றீர்கள்?’ என்று கேட்டார்கள். அழைத்துக் கொண்டு வந்து விட்டேன். இவ்வளவுக்கும் ஊரில் பெரும் சொத்துக்காரன் என்ற பெயர் எனக்குண்டு. அது என் அப்பன் வழி வந்த பெயர். அந்தச் சொத்துக்குச் சொந்தக்காரர் என் அப்பன்.

அவருக்கு நான் எந்த வித பிரதி பிரயோஜனும் செய்யவில்லை. என் சிறிய வயதில் மறைந்து போனார். அவர் என்னைப் பெற்றது முதல் ஒரு நாள் கூட ஒரு மிட்டாய் கூட வாங்கித் தரவில்லை. அதற்கு அவரும் நானும் காரணம் அல்ல. விதிதான் காரணம். இன்னுமொன்றைச் சொல்ல வேண்டும். நான் என் அப்பாவை, ‘அப்பா!” என்று அழைத்தது கூட இல்லை. எனக்கும் என் தகப்பனுக்குமான உறவு என்பது அவரின் இனிஷியல் என் பெயரின் முன்னால் இருக்கிறது என்பது மட்டும்தான். அவருக்கு பிள்ளையாகையால் கொள்ளி மட்டும் போட்டேன். முடி எடுத்து காரியங்கள் செய்தேன். ராமேஸ்வரம் சென்று பித்ரு கடன் செய்தும் வருகிறேன்.

எனக்கு எல்லாமுமாக இருந்தது என் அம்மாவும், அக்காக்களும், மாமாவும், தாத்தாவும் தான். எனக்கு அப்பன் நினைவு வரும்படி என்னை அவர்கள் வளர்க்கவே இல்லை. அம்மா, அக்காக்கள் இவர்களைத் தவிர வேறு எந்த உறவும் எனக்குத் தெரியாதபடி உள்ளங்கைக்குள் வைத்து வளர்த்தார்கள். என் அப்பன் இடத்தில் என் தாய் மாமா இருந்தார். என்னை அவர் மிகச்சரியானவனாக வளர்த்தார். எல்லாவற்றிலும் ஒரு ஒழுங்கினை அவர் கற்றுக் கொடுத்தார். அதன் பிரதிபலன் நான் இப்போது செய்யும் செயல்களில் மிளிரும். எனது எந்தச் செயல்களானாலும் சரி என் சிந்தனையும், செயலும் அவரைப் போன்றே இருக்கும். 

அது மட்டுமல்ல அவர் எனக்கு கொடுத்தது அவரின் ஹை பிளட் பிரஷரையும் கூடத்தான். பத்து வருடங்களுக்கு முன்பு பி.எஸ்.ஜி ஹாஸ்பிட்டலில் பிரஷர் அதிகமாகி பெட்டில் இருந்த போது டாக்டர் என்னிடம், ”உங்கள் தாய்மாமாவுக்கு  பிரஷர் இருக்கிறதா?” என்று கேட்ட போதுதான் எனக்கு இது மாமன் வழியே  டி.என்.ஏ கொண்டு வரும் சீர் எனப் புரிந்தது.

என்னைப் பொறுத்தவரை என் வாழ்க்கை என்பது யாராலோ ஒழுங்குச் செய்யப்பட்டு நடத்தப்படுகிறதோ என்று எனக்கு அடிக்கடித் தோன்றும். அதற்கு பல காரணங்களும் உண்டு. 

கரூரில் ஒரு ஜோசியக்காரர் ”இன்னும் பத்தே நாளில் நீ யாரோ ஒரு பெண்ணுக்குத் தாலி கட்டியிருப்பாய்” என்றார். “போய்யா, நீயும் உன் ஜோசியமும்” என்றுச் சொல்லி விட்டு வந்தேன். பத்தாம் நாளில் நான் கணவனானேன். 

இப்படித்தான் கடந்த வாரம் சிங்காநல்லூர் காய்கறி மார்க்கெட்டுக்குச் சென்று திரும்பிய போது ”ஏன் இன்னும் ஆஞ்சநேயர் கோவிலுக்கு வரவில்லை என்று யாரோ காதில் சொன்னது போலத் தோன்றியது. அவங்களும் திடீரென பீளமேடு  கோவிலுக்குப் போய் வரலாமா?” என்று கேட்க திடுக்கிட்டது. 

கோவிலுக்குச் சென்று அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தேன். கூட்டமாக பீளமேடு ஆஞ்சநேயரைத் தரிசித்துக் கொண்டிருந்தார்கள். எனக்கு அவரின் தலை மட்டுமே தெரிந்தது. முழுமையுமாக பார்க்கணுமே என நினைத்தேன். அங்கிருந்த அர்ச்சகர் மைக்கை எடுத்து, “பகவானின் காலடியில் அமர்ந்து பிரார்த்திப்பதுதான் ஆகச் சரி” எனச் சொல்ல அனைவரும் அமர, ஆஞ்சனேயர் முழு உருவமாக நின்று கொண்டிருந்தார். அசந்தே போனேன்.

இப்படியான வாழ்க்கையில் ஒரு அர்த்தத்தை தந்தவர் எனது மனைவி. ஒன்றுமற்ற வாழ்வில் வாழ ஒரு காரணமானவராய் அவரிருக்கிறார்.  தேதி பார்க்கவில்லை, ஊரை அழைக்கவில்லை, உற்றாரும் இல்லை, உறவினரும் இல்லை. சடங்குகள் செய்யவில்லை, எந்தச் சம்பிரதாயமும் நடக்கவில்லை. திருமணம் செய்தோம். வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த வாழ்க்கைக்கு ஒரே ஒரு காரணம் அவரே!

இப்பதிவு எழுத வேறொரு காரணம் உண்டு.

எனது உறவினர்களில் ஒருவரின் வாழ்க்கைச் சம்பவம் இது. நல்ல தொழில், நாகரீகம் கலந்த டவுன் வாழ்க்கை. ஒரே பையன் அவர். வீடு, வாசல், செல்வம் அனைத்தும் உண்டு. அவர் உரக்கப் பேசி எவரும் பார்த்ததில்லை. நாசூக்கானவர். இவருக்கு என் உறவுப் பெண்ணைத் திருமணம் செய்து வைத்தனர். அப்பெண் அக்மார்க் கிராமத்துப் பெண். சொத்து பத்துக்கள் நிறைய இருந்தாலும் அது பற்றிய திமிர்த்தனம் இல்லாதவர். இருவரின் வாழ்க்கையும் சுகமாகச் சென்றது. குழந்தைகள் இருவர். தாலாட்டி, சீராட்டி வளர்த்தனர். இதற்கிடையில் அவர் தன் ஃபாக்டரியில் வேலை செய்த ஒரு பெண்ணுடன் காதல் கொண்டார். அரசல் புரசலாக அனைவருக்கும் தெரிய வர, பெண்ணின் தகப்பனாரும், தாயாரும் பெண்ணை அழைத்துச் சென்று விடலாம் என எண்ணிக் கொண்டிருந்தனர். 

இந்த நேரத்தில் அந்தப் பெண் தன் கணவர் காதல் கொண்ட ஏழைப்பெண்ணுடன் தன் கணவரைத் திருமணம் செய்து வைத்து தன் வீட்டுக்கே அழைத்து வந்து விட்டார். அதிர்ந்தனர் உறவினர்கள். ஆனால் அந்தக் கிராமத்துப் பெண் எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை. ’அவர் விரும்பினார், கல்யாணம் கட்டி வைத்து விட்டேன்’ என்பதோடு சரி. இரண்டு பெண்களும் ஒரே வீட்டில் தான் வாழ்கின்றனர். இருவருக்கும் குழந்தைகள் இருக்கின்றனர். சண்டை, சச்சரவுகள் இல்லாத வாழ்க்கை. அக்கம்பக்கத்தார்கள் அசந்து போய் கிடக்கின்றனர்.

ஒரு சாதாரண படித்த பெண்ணால் இதை அவ்வளவு எளிதாக எடுத்துக் கொள்ள முடியாது. உடனடி டைவோர்ஸ்தான். விவாகரத்துக்குப் பிறகு முடிவு என்ன? குழந்தைகளுடன் அப்பெண் தனியாளாக நிற்க வேண்டி வரும். அதுமட்டுமா? ஊரார் பேசும் இழிச்சொற்கள் வேறு. எப்படி இருந்தாலும் ஒரு நாள் குழந்தைகள் அப்பனைத் தேடிச் செல்லத்தான் செய்யும். கடைசி வரை தனியாக வாழ்ந்து சீரழிவதை விட சகித்துக் கொள்வதே சரி என்ற அப்பெண் எடுத்து முடிவு குறைந்த காலம் உள்ள வாழ்க்கைக்கு சரியானது.

எல்லாப் பெண்களுக்கும் தன் கணவன் உத்தமன் என்ற நினைப்பிலும், எல்லா ஆண்களுக்கு தன் மனைவி உத்தமி என்ற நினைப்பிலும் தான் இந்த வாழ்க்கையே சென்று கொண்டிருக்கிறது. தற்போதுதான் கிரஸ் என்று பெண்கள் தங்களின் காதல்களை வெளிப்படுத்துகின்றார்கள். ஒரு காலத்தில் பெண்கள் ஆதிக்கம் கொண்ட குடும்பமாக இருந்த வாழ்க்கை, ஆணாதிக்கம் நிறைந்த குடும்பமாக மாறி உள்ளது. காலம் மாற மாற இப்போது மீண்டும் பெண்களின் ஆதிக்கம் நிறைந்த குடும்பமாக மாறிக் கொண்டிருக்கிறது. அது எதிர்காலத்தில் என்னென்ன வெடிகுண்டுகளை வீச இருக்கின்றனவோ தெரியவில்லை.

பெண்மையின் தத்துவம் எப்போதும் தியாகம் கொண்டதாகவே இருக்கின்றது. அவர்கள் எப்போது தியாகத்தன்மையை விட ஆரம்பிக்கின்றார்களோ அப்போது சமூகமும், உலகமும் சீரழிய ஆரம்பித்து விடும்.

Saturday, March 31, 2018

ராமசாமி அய்யா - ஒண்டிப்புதூர்

ஒண்டிப்புதூரில் வசித்து வந்த போது விடிகாலையில் குளித்து விட்டு வாசலில் அமர்ந்திருப்பேன். நெடு நெடுவென உயரம். வலது தோளில் வெண்மையான துண்டு, வேஷ்டி அணிந்து, இடது கையில் ஒரு தூக்கு வாளியுடன் வெண் தாடியுடன் ஒருவர் தினமும் கிழக்கிலிருந்து மேற்காக நடந்து செல்வார்.  தினமும் பார்ப்பதுண்டு. ஒரு சில நாட்களில் வண்டியில் வரும் போது எதிரில் வருவார். யாரோ ஓய்வு பெற்ற வாத்தியார் போல என நினைத்துக் கொள்வேன். 
(குஸ்தி வாத்தியார் தண்டபாணி மற்றும் ராமசாமி அய்யா)

நான்கு வருடங்களுக்கு முன்பு ஜோதி ஸ்வாமி ’குருநாதரின் நினைவு தினம் ஒண்டிப்புதூரில் நடக்கிறது’ எனச் சொன்னார். நான் மட்டும் விசாரித்துக் கொண்டு சென்றால் அங்கே வெண்தாடிப் பெரியவரின் புகைப்படம் இருந்தது. சாமியிடம் கேட்டால் ”அவர் தான் எனக்கு பயிற்சி அருளிய குருநாதர்” என்றார். எனக்குள் பச்சாதாபம் மண்டிக்கொண்டது. கண் எதிரில் நடமாடியவருடன் ஒரு வார்த்தை கூட பேசவில்லையே என்ற ஏக்கமும் எனக்குள் நிறைந்தது. வருடம் தோறும் குருபூஜை நடக்கும், நானும் செல்வதுண்டு. அங்கு பலரும் வருவார்கள். அது பற்றி நான் ஏதும் விசாரித்துக் கொள்வதில்லை. நான் எதற்குச் சென்றோனோ அந்தக் காரியத்தை மட்டும் பார்த்து விட்டு திரும்பி விடுவேன்.

இந்த வருடம் வெள்ளிங்கிரி சுவாமியின் ஜீவசமாதியில் ராமசாமி அய்யாவின் குருபூஜை நடந்தேறியது. நானும் மனையாளும் காலையில் ஆறு மணிக்கே கிளம்பி விட்டோம். கூட்டு தியானம் முடிந்து, அன்னதானம் நடந்து. உணவு அருந்திய பிறகு அங்கு வந்த அன்பர்களுக்கு ஒருவர் தன் பிள்ளையுடன் ஓடியாடி உணவு பரிமாறிக் கொண்டிருந்தார். 

வீட்டுக்குத் திரும்பினேன். அந்த உணவு பரிமாறியவர் பற்றியும் ராமசாமி அய்யா பற்றியும் தெரிந்து கொள்ளலாம் என நினைத்து ஜோதி சுவாமிக்கு அழைத்தேன்.

முதலில் உணவு பரிமாறியவர் பற்றிச் சொல்லி விடுகிறேன். அவரின் பெயர் மூர்த்தி, ஒண்டிப்புதூரில் முடி திருத்தும் கடை வைத்திருக்கிறாராம். ஒவ்வொரு வெள்ளியன்றும் கடையை மூடி விடுவாராம். கோவையில் இருக்கும் ஒவ்வொரு அனாதை ஆசிரமத்திற்கும் சென்று இலவசமாக அங்கு இருக்கும் அனாதைக் குழந்தைகளுக்கு முடி திருத்தி விடுவாராம். திருவண்ணாமலை வரைக்கும் அன்னதானம், உப்பு, உணவு பொருட்கள் என கொண்டு போய் கொடுத்து வருவாராம். ராமசாமி அய்யாவிடம் பயிற்சி எடுத்துக் கொண்டாராம். ஒவ்வொரு குருபூஜை அன்றும் அவரை நான் சந்திப்பேன். வணக்கம் பரிமாறிக் கொள்வோம். அவ்வளவுதான். ஆர்ப்பாட்டமில்லாத மனசு. நானெல்லாம் அவரின் முன்னே தூசுக்கும் சமமானவன் இல்லை. 

இனி ராமசாமி அய்யாவின் வாழ்க்கையைப் பற்றிச் சுருங்கப் பார்க்கலாம். ராமசாமி அய்யாவின் தந்தையாருக்கு நான்கு மனைவிகள். முதல் மனைவியின் மூத்த குமாரன் ராமசாமி அய்யா. இவருடன் சேர்ந்து மொத்தம் 16 பேர் வாரிசுகள். பதினைந்து பேருக்கும் உணவிட்டு, படிக்க வைத்து, திருமணம் செய்து வைத்த பிறகு பார்த்தால் உலகில் இருக்கும் நோயெல்லாம் இவரிடம் வந்து விட்டது. மருத்துவர்கள் இன்னும் ஒரு மாதமே உன் ஆயுள் என்றுச் சொல்லி விட, சொத்து பத்துக்களை அனைவருக்கும் பகிர்ந்து கொடுத்து விட்டு திருச்சி பக்கம் சென்று விட்டார். அங்கு யாரோ ஒரு பெரியவர் இவருக்கு வாசியோகப்பயிற்சியை பயிற்றுவித்து தொடர்ந்து பயிற்சியைச் செய்து வரும்படி சொல்லி இருக்கிறார்.

ராமசாமி அய்யாவும் பயிற்சியினைத் தொடர்ந்து செய்து வர நோயின் தாக்கம் அதிகரித்திருக்கிறது. விடாமல் பயிற்சியினைத் தொடர்ந்திருக்கிறார். கொஞ்சம் கொஞ்சமாக அவருடம்பிலிருந்த நோய்கள் விடுபடத்தொடங்கின. பயிற்சியின் போது அவருக்குள் பல்வேறு விடயங்கள் தெளிவாகத் தொடங்கின. அதுவரையில் பல இடங்களுக்குச் சென்று வருவதும், தியானம் மேற்கொள்வதுமாக இருந்தவர், மறைபொருள் மூடியிருந்த திரை விலக விலக தன்னை ஒண்டிப்புதூரில் ஒரே இடத்தில் இருத்திக் கொண்டார்.

தன்னைத் தேடி வருபவருக்குப் பயிற்சியினைக் கொடுத்து வழி நடத்தி வந்திருக்கிறார். காலையில் ஜெயேந்திர சரஸ்வதி பள்ளி அருகில் சென்று பசும்பால் வாங்கிக் கொண்டு வருவாராம். உடைத்த கோதுமை ரவையை வேக வைத்து, அதனுடன் பாலைச் சேர்த்து கொதிக்க வைத்து கஞ்சியாக்கி, உப்பின்றி, இனிப்பின்றி உணவு எடுத்துக் கொள்வாராம். அவரிடம் வரும் சீடர்களுக்கும் இதே உணவுதான். விரும்பினால் கொஞ்சம் நாட்டுச் சர்க்கரை சேர்த்துக் கொள்ளச் சொல்வாராம்.

பதினாறு பேரில் முதல்வராகப் பிறந்து குடும்பப்பாரத்தைச் சுமந்த அனுபவத்தால் அவர் திருமணமே செய்து கொள்ளவில்லை. அவருக்கு என இருந்த ஒரே ஒரு சொத்தையும் அவர் ஜீவனை உடம்பிலிருந்து உகுத்த அன்றே விலை பேசி விற்று விட்டார்களாம் அவரின் உறவினர்கள்.

29.03.2018ம் தேதியன்று நடந்த குருபூஜை அன்று அவரின் உறவினர்களில் ஒருவர் கூட வரவில்லை. அதில் எனக்கு எந்த ஆச்சரியமும் இல்லை. அவர்கள் தான் உறவினர்கள்.

எனக்குத் தெரிந்த வகையில் உறவுகள் கொண்டாட்டத்திற்கும், கடைசிக் காலத்தில் வந்து செல்லவும் மட்டுமே பயன்படுவார்கள். இடையில் வரும் நண்பர்களில் நல்ல நண்பர்கள் வேண்டுமெனில் அவர்கள் காலம் முடியும் வரை நினைத்துக் கொண்டிருக்கலாம்.

வாழ்க்கையே ஒரு மாயை என்பதற்கான ஒரு உதாரணமாகத்தான் இந்தப் பதிவை எழுதுகிறேன். பதினைந்து குடும்பங்களை உருவாக்கியவரின் நினைவு நாள் அன்று கூட, அவரால் வாழ்க்கை பெற்றவர்களால், அவரை நினைத்துப் பார்க்காத தன்மை விந்தையானது இல்லை.  அவ்வாறு நடந்திருந்தால் அது மெச்சத்தக்க வேண்டிய நிகழ்வாகி விடும். மனிதர்கள் என்றுமே மனிதர்கள் தான். எப்போதும் அவர்கள் மாறப்போவதும் இல்லை, துன்பங்களில் இருந்து விடுபடப்போவதும் இல்லை.



Thursday, March 22, 2018

புண்ணியம் நல்லதா? கெட்டதா?

அடியேன் ஓஷோவைப் படித்துக் கொண்டிருக்கிறேன். அவர் எதுவும் புதிதாகச் சொல்லவில்லை. இங்கிருப்பதை அவர் மொழியில் சொல்லி இருக்கிறார். அதையே அப்படியே தன்மை மாறாமல் வெள்ளிங்கிரி மலையைக் கபளீகரம் செய்து கொண்டிருக்கும் ஒருவரும் தன் பிளாக்கில் எழுதி வைத்திருக்கிறார் இப்படி.

பாவங்கள் செய்பவன் வேதனையை அனுபவித்துத்தான் தீரவேண்டும் என்று சொல்கிறார்கள். எது பாவம்? எது புண்ணியம்? 

அவரின் பதில்: பாவம் புண்ணியம், நல்லது கெட்டது என்பதெல்லாம் மற்றவர் உங்களைக் கட்டுப்படுத்த பயன்படுத்தும் ஆயுதங்கள்.

யார் அந்த மற்றவர்கள் என்று விளக்கம் கொடுக்கவில்லை இவர். என்னுடன் மஹாசிவராத்திரி அன்று அமர்ந்திருந்தால் ஈஷனையே அடையலாம் என்றுச் சொன்னவர் அதற்கான சாட்சியைக் காட்டி இருக்க வேண்டும். 

சிவராத்திரி அன்று தான் என்னை அடையலாம் என்று என்றைக்கு ஈஷன் வந்து யாரிடம் சொன்னான் என்று எனக்குக் கொஞ்சம் சாட்சியாய் காட்டுங்களேன் என்று கேட்டால் ஆன்மீகத்தைப் பற்றிப் பேசுபவர்கள் எவரிடத்திலும் பதில் இருக்காது. அந்தப் பாடலில் சொல்லி இருக்கிறது, இந்த புத்தகத்தில் சொல்லி இருக்கிறது, வேத(னை)த்தில் சொல்லி இருக்கிறது என்றெல்லாம் குப்பைகளை அவிழ்த்து விடுவார்கள்.

பாவம், புண்ணியம், நல்லது, கெட்டது என்று எதுவும் இல்லை என்றால் உலகம் ஏன் இவ்வளவு துயரத்தில் ஆழ்ந்து கிடக்கிறது என்று அவர் சொல்வாரா? 

விருப்பத்துடனே உறவு வைத்துக் கொள்கிறேன் என்று நீதிமன்றத்தில் பிரமானப்பத்திரம் தாக்கல் செய்கிறார் ஒரு சாமியார். நான் பிரமச்சாரி என்று அடிக்கொரு தடவை முழங்கிக் கொண்டிருந்தவர் இப்போது உறவு கொள்கிறேன் என்கிறார். இவர்கள் தான் ஆன்மீகத்தை வளர்க்கின்றார்கள். இவர்களைப் பின்பற்றிச் செல்லும் உபதேசம் பெறுபவர்களின் புத்தி என்னவாக இருக்கும் என்று சிந்தித்தால் அவர்களின் முட்டாள் தனம் தான் வெளிப்படுகிறது.

எது சரியான வழி என்று கண்டுபிடிப்பதற்குள் மனிதனுக்கு ஆயுள் முடிந்து விடுகிறது. கடைசிக் காலத்தில் கண்டுபிடித்து என்ன ஆகப்போகிறது. காடு வா, வா என்று அழைத்துக் கொண்டிருக்கும். 

இந்த அக்கப்போரெல்லாம் ஒரு பக்கம் இருக்கட்டும். இப்போது விஷயத்துக்கு வருவோம்.

புண்ணியம் சேர்த்து வைத்து விட்டுச் செல்லுங்கள் என்று பெரியோர்கள் சொல்வார்கள். தர்மம் செய்தால் புண்ணியம் சேரும் என்பார்கள். தெருவுக்குத் தெரு, கோவிலுக்குக் கோவில் அன்னதானம், உதவி என்றெல்லாம் மக்கள் தர்மம் செய்து, அவரவர் கணக்கில் புண்ணியங்களை வரவு வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஒரு சிலர் திருப்பதி வெங்கடாஜலபதி, பழனி முருகன் ஆகியோர்களுக்கு உண்டியல் போட்டு புண்ணியங்களை வரவு வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இன்னும் சிலர் ஐயப்பன் கோவிலுக்கு விரதமிருந்து (ஒரு நாள் விரதம்) ஐயப்பனை தினமும் நெய்யில் குளிக்க வைத்து அவரின் கொலெஸ்ட்ரால் லெவலை அதிகமாக்கி, தங்கள் புண்ணியக்கணக்கில் வரவுகளை வைத்துக் கொள்கிறார்கள்.

ஒரு சிலர் வானத்திலிருந்து இறங்கிக் கொண்டிருக்கிறார் வகையறாக்களுக்கு மாதம் தோறும் பணம் செலுத்தி பாவங்களைக் கரைத்து புண்ணியாத் மாக்களாகி வருகின்றார்கள்.

ஒரு சிலர் பிறரிடம் டொனேஷன் வாங்கி பிறரைப் படிக்க வைத்து தங்கள் கணக்கில் புண்ணியங்களை வரவு வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். ஒரு சிலர் சாமியார்களாகி பல சிஷ்யைகளுடன் உறவு கொண்டு, சிஷ்யைகளின் புண்ணியக்கணக்கில் புண்ணியங்களை வரவு வைத்து சிஷ்யைகளுக்கு உதவுகின்றார்கள். 

ஒரு சிலர், ஒரு சிலருடன் கூட அமர்ந்து கொள்ள பணம் கொடுத்து அந்த கடவுளையே தரிசித்து பெரும் புண்ணியங்களைத் தங்கள் கணக்கில் வரவு வைத்துக் கொண்டிருக்கின்றார்கள். இப்படி மதம், இனம், மொழி வேறுபாடில்லாமல் பணத்தின் மூலமாக பலரும், தங்கள் புண்ணியக்கணக்கில் வரவு வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

ஆன்மீகம் புண்ணியம் செய்ய வேண்டுமென்றுதான் சொல்லிக் கொடுக்கிறது. புண்ணியம் சேர்க்க பொருள் கொடுக்கச் சொல்கிறது. அல்லது உழைப்பைக் கொடுக்கச் சொல்கிறது. எல்லாமும் கொடுத்தும், இருப்பதையும் கொடுத்தும், போதாமல் ஒரு சிலர் தன் பொண்டாட்டி மற்றும் மகள், மகன்களையும் கொடுத்தும் புண்ணியங்களை தங்கள் வரவில் வைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

உலகமே தங்களின் புண்ணியக்கணக்கின் வரவுக்காக உழைத்துக் கொண்டிருக்கிறது.

நிற்க....!

நேற்று காலையில் நானும் என் குருவும் பேசிக் கொண்டிருந்தோம். ”பலனை எதிர்பார்த்துச் செய்யும் தர்மம் புண்ணியங்களைத் தராது” ஆண்டவனே என்றார்.

”சாமி கம்பரின் மகாபாரதத்தில் வருகின்றானே ஒருவன்” 

இடைமறித்து, “ஆண்டவனே கம்பனின் மகாபாரதமா? “ என்றார்.

ஒரு நிமிடம் திடுக்கிட்டு

“சாமி, சேக்கிழார் தோஷம் என்னையும் பிடித்துக் கொண்டது போல, தலை எப்படியோ அதுபோலத்தானே?”

“ஓ.... “ என்றார்.

”மகாபாரதத்தில் கர்ணனிடம் தர்மம் கேட்டு ஒருவர் வரும் போது, அவன் குளிப்பதற்கு எண்ணை தேய்த்துக் கொண்டிருப்பான், தர்மம் கேட்ட அடுத்த நொடியில் இடது கை அருகில் இருந்த தங்கக் கிண்ணத்தைத் தூக்கிக் கொடுத்தான் என்பார்கள். அதன் அர்த்தம் இப்போது புரிகிறது சாமி” என்றேன்.

உங்களுக்குப் புரிகிறதா என்று எனக்குத் தெரியவில்லை. புரிந்தாலும் புரியவில்லை என்றாலும் அது உங்களின் பாடு.


அடுத்து புண்ணியத்துக்கு வருவோமா?

கர்ணன் திரைப்படத்தினைப் பார்த்திருப்பீர்கள் என நினைக்கிறேன். கர்ணன் அர்ஜூனன் விட்ட அம்புகள் நெஞ்சில் ஊடுருவி இதயத்தைத் துளைக்க , குருதி கொப்பளித்து வழிந்தோட, உயிரை விட்டு விட இயலாமல் துன்புற்றுக் கொண்டிருப்பான். அப்போது நம்ம கிருஷ்ணர் வயதானவர் வேடம் போட்டு கர்ணனிடம் தானம் கேட்டு வருவார். உயிர் ஊசலாடிக் கொண்டிருக்கையில் அவனிடம் தர்மம் செய்ய ஒன்றுமே இருக்காது. ஆகவே கண்ணன் கர்ணனிடம் அவன் இதுவரை செய்த தான தர்மங்களின் புண்ணியங்களை (பலனை) தமக்குத் தானம் செய்து தரும்படி கேட்பார். அவனும் நெஞ்சில் பதிந்து கிடக்கும் ஒரு அம்பை உருவி, வழிந்தோடும் குருதியினை கையில் பிடித்து கண்ணனுக்கு தானம் செய்வான். தானம் பெற்ற கண்ணன், அர்ஜுனனிடம் செல்வான். வந்த வேலை முடிந்து விட்டது அல்லவா?

அர்ஜுனனைப் பார்த்து ”செத்த பாம்பு கர்ணன், விடு அம்பை, முடி அவன் கணக்கை” என்பார் கண்ணன்.

அர்ஜுனனும் விடுவான் அம்பை. கண்ணனும் விடுவான் உயிரை. 

இது படத்தில் வரும் வசனமும் காட்சியும்.

இனி என்ன எழுதப் போகிறேன் என்று புரியாதவர்கள் கீழே தொடருங்கள்...!

கர்ணனின் தர்மம் அவன் தலைகாத்து அவன் சாவின் பிடியில் கிடக்கும் போதும் உயிரை விட்டு விடாமல் பிடித்துக் கொண்டு அவனை வேதனைக்குள் தள்ளிக் கொண்டிருந்தது அல்லவா? புண்ணியம் நல்ல சாவை அல்லவா கொடுக்க வேண்டும்? ஏன் அவனைச் சாக விடாமல் நோகடித்துக் கொண்டிருந்தது?

ஆகவே புண்ணியங்கள் நல்லதா? கெட்டதா? என நீங்களே யோசித்து ஒரு முடிவுக்கு வாருங்கள்...

Monday, March 19, 2018

பெரிய முதலையுடன் போராடி ஜெயித்த உண்மைச் சம்பவம்

இதை எழுதக்கூடாது என்றுதான் நினைத்திருந்தேன். ஆனாலும் மனதுக்குள் ஒரு உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது. கொஞ்ச காலத்துக்கு முன்னால் எனக்குத் தெரிந்த ஒருவர் பிரபலமான ஒரு பள்ளியில் தன் பையனைச் சேர்த்தார். பையன் இரண்டாவது மாதமே ஊருக்கு ஓடி வந்து விட்டான். டெபாசிட் பணம் மற்றும் இதர கட்டணங்கள் எதையும் அந்தப் பள்ளி திரும்பத் தரவே இல்லை. மறுத்து விட்டார்கள். நண்பருக்கு லட்சங்கள் இழப்பானது. நண்பரும் அதை அத்துடன் விட்டு விட்டார். பள்ளிக்கு பல லட்சங்கள் லாபம். அதையெல்லாம் எந்தக் கணக்கில் எழுதுவார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. 

சமீபத்தில் எனக்கு நெருக்கமான நண்பரின் பையனுக்கு, நானே முயற்சித்து, அதற்கு பெரிய ஆட்களின் இலவச சிபாரிசுகளைப் பிடித்து தமிழகத்தின் பிரபலமான பள்ளியில் பதினொன்றாம் வகுப்புக்கு அட்மிஷன் பெற்றேன். பையன் படு ஷார்ப். இதுவரை அவன் படித்த பள்ளியில், வகுப்பில் எப்போதும் முதல் மாணவன். அட்வான்ஸ் படிப்பு. ஐஐடியில் படிக்க வேண்டுமென்று அவனது விருப்பம். அந்தப் பள்ளியில் படித்தால் அவனது நோக்கத்துக்கு அது உதவும் என்ற நண்பரின் விருப்பமும், எனது விருப்பமும் இருந்தது.

அட்மிஷன் பெற்ற அன்று வெறும் வெள்ளைத்தாளில் பள்ளியின் சீல் வைத்து கையெழுத்து இட்டு, பணம் பெற்றுக் கொண்டதற்காக ஒரு ஒப்புகை சீட்டும், நன்கொடை என ஒரு டிரஸ்டின் ரசீதும் கொடுத்தார்கள். அடியேன் எனது வாகனத்தில் அமர்ந்து அம்மணிக்காக காத்துக் கொண்டிருந்தேன். மனையாள் பணத்தைக் கட்டி விட்டு, ரசீதுகளை என்னிடம் கொண்டு வந்து காட்டினார். சிரித்து வைத்தேன். ”ஏன் சிரிக்கின்றீர்கள்?” என்று கேள்வி கேட்க, ஒன்றும் சொல்லவில்லை. சில விஷயங்களை சில நேரங்களில் பேசாமல் இருப்பது நல்லது.”உங்களுக்கு இதே வேலையாப் போச்சு, எதற்குச் சிரிக்கின்றீர்கள்? எனப் புரியவேயில்லை” என்றார்.

பையன் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தான். இரண்டு நாட்களில் பள்ளியின் ஆசிரியர்களின் தரமும், பாடம் எடுக்கும் விதமும் அவனுக்குப் புரிந்து போனது. இனி இந்தப் பள்ளியில் தொடர்ந்தால் தன் தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொள்வது போல ஆகி விடும் என நினைத்து பள்ளிக்குச் செல்ல முடியாது எனவும், அதற்கான காரணங்களையும் சொன்னான். ஆறு ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவத்தில் பள்ளியில் என்னென்ன கூத்துக்கள் நடக்கும் என்று தெரிந்ததினால் அவன் சொன்ன காரணங்கள் அனைத்தும் உண்மை என்று புரிந்தது.

பள்ளியில் இருந்து நின்று விட்டான். முன்பு படித்த பள்ளியில் மீண்டும் சேர்ந்து படிக்க ஆரம்பித்தான். இனி நாம் கொடுத்த பணத்தைத் திரும்பப் பெற வேண்டுமே என நினைத்து நானும் மனையாளும் பள்ளிக்குச் சென்றோம். மனையாள் பேசிப்பார்த்தார். வெளியில் வந்து உதட்டைப் பிதுக்கினார். 

அட்மினை (நினைவுக்கு வருகிறதா?) ”என்னவர் முடியாதவர், சற்று வெளியில் வந்து சந்திக்க முடியுமா? என்று கேட்டு வெளியில் வரச்சொல்லும்படி செய்யும்படி” மனையாளைக் கேட்டுக் கொண்டேன். 

ஒரு நக்கல் சிரிப்புடன் சென்று வரும்போது யாரோ ஒரு செம கிக்காக உடை உடுத்திய பெண்ணுடன் வந்தார். மனையாளின் கண்கள் என் கண்களையே உற்று நோக்கியபடி இருந்ததைக் கவனித்தேன். அது விதி. அனுபவித்துத்தான் ஆக வேண்டும். எவ்வளவு உத்தமனாக இருந்தாலும், எதிர்பாலின இயல்பு மறைந்து போகாது.

உங்களுக்குப் புரியவில்லை என நினைக்கிறேன். பாம்பின் இயல்பு கொத்துவது, பாலை ஊற்றி வளர்த்தாலும் அதற்குப் பிடிக்காத மாதிரி நடந்து கொண்டால் ஒரே போடு, பரலோகம்தான் கதியாகும். புரிந்து விட்டதா?

இப்படித்தான் மச்சினிச்சிகள் வாழ்க என்ற பதிவு எழுத, அதை தினமலர்காரன் தன் பத்திரிக்கையில் வெளியிட்டு இருந்த கொஞ்ச நஞ்ச குஷிக்கும் குழியினைப் பறித்தார்கள்.

அதுதான் அட்மினென்று தெரிந்தாலும், அருகில் வந்தவுடன், “கோதை, அட்மின் என்றுச் சொன்னாயே அவங்க எங்கே? யாரோ ஸ்கூல் பெண்ணுடன் வருகின்றாயே?” என்றேன். மனையாளுக்கு கடுகு உள்ளுக்குள் பொரிய ஆரம்பித்து விட்டது. பாம்பின் கால் பாம்பறியும். போட்ட பிட் வேலை செய்து அட்மின், “சார், நான் தான் அட்மின்” என்று கூவியது. கவனிக்க(!!!) சுத்தம் செய்த பற்கள் பளீரிட ஒரு நிமிடம் கண்ணை மூடித் திறந்தேன். பாடலாசிரியர்கள் இதைத்தான் மின்னல் என்றார்களோ???? தெரியவில்லை.

”மேடம், பையன் ஒரு மாதம் கூட படிக்கவில்லையே, அந்த டொனேஷன் பணத்தையாவது திரும்பித் தர முடியாதா?” என்று கேட்டேன்.

“எங்கள் பள்ளியில் அது வழக்கம் அல்ல, கொடுக்கவும் முடியாது” என்றது அது.

“நீங்கள் பணம் தரவில்லை என்றால், கோர்ட்டில் வழக்குத் தொடுக்கச் சொல்கிறார் பையனின் அப்பா, கோர்ட் வழக்கு என்றால் பள்ளியின் பெயர் கெட்டு விடும், சமாதானமாகப் போகலாமே? நீங்கள் உங்கள் சேர்மனிடம் பேசக்கூடாதா?” என்றேன்.

“சார், நீங்கள் எந்த கோர்ட்டுக்கும் போனாலும் பிரச்சினையில்லை, ஜட்சுகளின் பையன்களே எங்களது பள்ளியில் தான் படிக்கின்றார்கள், முடிந்தால் பார்த்துக் கொள்ளுங்கள்” என்றது அட்மின்.

அத்துடன் நிறுத்தி இருந்தால் பரவாயில்லை. ஒரு இகழ்ச்சியான பார்வையோடு என்னை அட்மின் அகங்காரமாக கடந்து சென்றது. கன்னியரின் கடைக்கண் பார்வை பதிந்து விட்டால் மாமலையும் மடுகாகும் என்றார்கள் முன்னோர்கள். 

அடியேனால் அதை மட்டும் மறக்க முடியவில்லை. 

மனையாள் ”பெரிய இடம், மோத இயலாது, உங்கள் நண்பரிடம் சொல்லி விடுங்கள், எதுக்கு வம்பு?” என்றார்.

நானென்ன ரஜினியா, கமலா, விஜயா, அஜித்தா? டைரக்டருகளை வைத்து வசனமெழுதி வெற்றிடத்தைப் பார்த்து வீர வசனம் பேசி, காற்றில் கையை வீசி மிரட்டுவதற்கு. இது எதார்த்தம். ஒரு அட்மின் குயில் என்னை என் வீட்டுக்கார அம்மணியின் முன்னால் இளக்காரமாகப் பார்த்த அவமதிப்பு என்னைக் குடைந்து கொண்டிருந்தது. 

அட்மின் குயிலுக்கு ”யார்ரா இவன்? எழுந்து ஓடக்கூட முடியாது, இவனெல்லாம் நமக்கு ஒரு ஆளா?” என நினைத்திருப்பார் போல.

சி.பி.எஸ்.சி கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளி அது. அமைதியாக சிந்திக்க ஆரம்பித்தேன். ஒரு சில ஆவணங்களை இணையத்தில் இருந்து எடுத்து படிக்க ஆரம்பித்தேன். இரண்டு முழு நாட்கள் ஆகின. எனக்குத் தேவையான ஆவணங்களும், சாட்சிகளும் கிடைத்தன. எனது வக்கீல் நண்பரிடம் சென்று ஆவணங்களைக் காட்டி, நோட்டீஸ் அனுப்பச் செய்தேன்.

வக்கீல் நண்பர் நோட்டீஸ் தயாரித்து எனுக்கு அனுப்பி வைத்தார். அதில் இரண்டொரு மாறுதல்களைச் செய்து அனுப்பி வைத்தோம். பள்ளியில் இருந்து பதில் வராது என்று நினைத்தேன். அதன்படியே பதிலில்லை. அடுத்ததாக வழக்குப் பதியச் சொன்னேன். கோர்ட்டில் வழக்குப் பதிய ஆவணங்களைத் தயார் செய்து தாக்கல் செய்தோம்.

அடுத்த பதினைந்தாவது நாள் கையெழுத்து சரியில்லை என்றுச் சொல்லி வழக்காவணங்கள் திரும்பின. அத்துடன் பள்ளியில் இருந்து ஒரு டிடியும் வந்தது. இந்த ஆவணம் திரும்புதலில் பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன. நான் கேட்டது நன்கொடை மட்டுமே. ஆனால் பள்ளி கட்டிய பணம் அனைத்தையும் செலவு போக திருப்பித் தந்தது. டிடியை வாங்கிப் பார்த்தேன். மீண்டும் சிரிப்பு வந்தது.

“நீங்க எதுக்குத்தான் இப்படி லூசுத்தனமாகச் சிரிக்கின்றீர்களோ தெரியவில்லை” என்று மனையாள் அலுத்துக் கொண்டார்.

நண்பரிடம் விஷயத்தைச் சொல்லி, பணத்தை அவரின் அக்கவுண்டில் வரவு வைத்தேன். 

பணம் அக்கவுண்டில் வந்த பிறகு நண்பரை அழைத்தேன்.

”இந்த டிடியை வைத்துக் கொண்டு மீண்டும் ஒரு வழக்குப் போடலாம். ஒரு கோடி வாங்கட்டுமா? இல்லை பத்துக் கோடி வாங்கட்டுமா?” என்று கேட்டேன்.

அதிர்ந்தார் நண்பர்.

விபரத்தைச் சொன்னேன். நண்பர் நல்லவர். ”நான் செலவு செய்த தொகை வந்து விட்டது. ஆகவே இதை இத்துடன் விட்டு விடுங்கள்” என்றார். அவர் அதை மட்டும் சொல்லாமலிருந்தால் இந்தப் பதிவு எழுதி இருக்க மாட்டேன்.

”பள்ளிக்குச் சென்று இப்படியெல்லாம் செய்யக்கூடாது என்று விபரமாகச் சொல்லி விட்டு வாருங்கள்” என்றுச் சொன்னார்.

நேரமிருக்கும் போது அட்மின் குயிலைப் பார்த்து கொஞ்சம் பேசி விட்டு வர வேண்டும். அழகான அந்த முகம் அஷ்டகோணலாக மாறுவதை என்னால் சகித்துக் கொள்ளவே முடியாது. ஆகவே இன்னும் செல்லவில்லை. 

மனையாள், ”உங்களுக்கு கடவுள் மண்டை முழுவதும் மூளையாக வைத்து விட்டார் போல” என்று பாராட்டினார். மண்டை முழுவதும் மூளை இருந்தால் அது வேற ஆள் மாதிரி. 

பாராட்டினாங்கன்னு மகிழ்ந்து போக நானென்ன ரஜினியா? இல்லை கமலா?

ஆள் எவ்வளவு பெரியவனாக இருந்தாலும் சரி, நீதிமன்றத்தை கையாளத் தெரிந்து கொண்டால் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டு ஆட்டுன்னு ஆட்டி விடலாம். தேவை கொஞ்சம் நிதானமும், கொஞ்சமே கொஞ்சம் புத்திசாலித்தனமும்.

Wednesday, February 28, 2018

ஒரு ஆண் பதினாறு பெண்கள்

”ஏண்டி, நீ மட்டும் அவனைத் தான் கல்யாணம் கட்டிக்குவேன்னு சொல்லி, அதுவும் உங்கப்பனும், ஆத்தாளும் உன்னைக் கூட்டி விட்டு, டிவியில போய் அவனுக்கிட்டே வழிஞ்சியே அதைப் பத்தியெல்லாம் நான் கேட்டேனா? பலபேரு பார்ப்பாங்கன்னு தெரிஞ்சும் சினிமாக்காரனைத் தான் கட்டிக்கனும்னு ஒத்தக்கால்ல நின்னு பார்த்தாய். அவன் அழகா கழட்டி விட்டுட்டான். அவன் உன்னை சும்மா விட்டிருப்பான்னு நான் நம்பணுமா? நான் அப்படித்தாண்டி எவ கூட வேணுன்னாலும் சுத்துவேன், அதையெல்லாம் நீ கேக்கக் கூடாது. நான் உன்னைக் கேக்கலைல்ல, உனக்கு அந்த அருகதையெல்லாம் கிடையாதுடி நாயே!”

இப்படி ஒரு பேச்சினை வரும் காலத்தில் ஆர்யாவிடம் ஈசிக் கொண்டும், இழைந்து கொண்டும், காமம் கொப்பளிக்கப் பார்த்துக் கொண்டிருக்கும் அந்த பதினாறு பெண்களில் யாராவது ஒருவரோ அல்லது பலரோ அவர்களது எதிர்காலக் கணவர்களிடமிருந்து கேட்க நேரிடலாம்.

அதுமட்டுமல்ல, ஆர்யா திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண்ணைத்தவிர மீதமுள்ள பெண்கள் வேறு யாரோ ஒரு ஆணைத் திருமணம் செய்து கொள்ளக்கூடிய சாத்தியங்கள் உண்டு என்கிற போது, அவர்களுக்குப் பிறக்கக் கூடிய பிள்ளைகள் எதிர்காலத்தில் தன் தாயைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று அந்தப் பெண்களைப் பெற்றவர்களுக்கு தெரிந்திருக்காதா? இது எவ்வளவு பெரிய அவமானத்தையும், அனர்த்தங்களையும் உருவாக்கும்?

அந்தப் பதினாறு பெண்களும் இளம் பருவத்தில் இருக்கின்றார்கள். சொல்லிக் கேட்க கூடிய நிலையில் அவர்கள் நிச்சயம் இருக்கமாட்டார்கள். ஆனால் அனுபவசாலிகள் இருப்பார்களே அவர்களாவது சொல்லிப் புரிய வைத்திருக்கக் கூடாதா? 

இந்த நிகழ்ச்சிக்கு காம்பியர் செய்யும் சங்கீதா, தன் மகளை இப்படி அனுப்பி வைப்பாரா? இல்லை ஆர்யா தன் தங்கையையோ அல்லது அக்காவையோ, சினிமாக்காரனைக் கட்டிக்க டெஸ்ட்டில் கலந்து கொள்ள அனுப்பி வைப்பாரா? என்று அவர்கள் தான் சமூகத்திற்குச் சொல்ல வேண்டும்.

இருமணம் இணையும் நிகழ்ச்சி திருமணம். தாரம் என்பவள் தாய்க்கு நிகரனாவள். அவள் ஆலமரம். அவள் அச்சாணி. அவளின்றி உலகம் இயங்காது. அப்பேர்ப்பட்ட பெண்ணை ஆர்யா அவமானப்படுத்துகிறார். பெண்களைக் கேவலப்படுத்துகிறார். ஏழாயிரம் பேரில் பதினாறு பெண்களைத் தேர்ந்தெடுத்தார்களாம். என்ன ஒரு அவமானமான நிகழ்ச்சி இது.  பெண்களை வரிசையாக நிறுத்தி அவர்களிடம் பேசிப்பழகி அதன் பிறகு அவர்களில் ஒருவரைத் தேர்ந்தெடுத்து திருமணம் செய்து கொள்வாராம் ஆர்யா. இதே போல யாரோ ஒரு பெண் செய்தால் ஏற்றுக்கொள்ளுமா இந்தச் சமூகம்?

இந்த நிகழ்ச்சியின் இயக்குனர் பிரகாஷ் இது கலாச்சார மீறலான நிகழ்ச்சி இல்லை என விகடனில் பேட்டி கொடுத்துள்ளார். இயக்குனர் பிரகாஷ் தன்னை வளர்த்த சமூகத்திற்கு, தன் கலாச்சாரத்திற்கு செய்யும் நன்றிக்கடனா இது? காலம் மாற மாற கலாச்சாரமும் தன்னை சீர்படுத்திக் கொள்ளும் தன்மை கொண்டவை தான். ஆனால் சமூகத்தின் அடிப்படையான ஒருவனுக்கு ஒருத்தி, ஒழுக்கம், சுயகட்டுப்பாடு ஆகியவைகள் மீது பிரகாஷ் மாதிரியானவர்கள் கலை என்கிற பெயரில், நிகழ்ச்சி என்கிற பெயரில் செய்யும் தாக்குதல்கள் எதிர்கால சந்ததியினருக்கு, அவர்களின் மனதுக்குள் மிகப் பெரிய மாறுதல்களை ஏற்படுத்தி அழிவுக்கு தள்ளி விடுமே அதைப் பற்றி அவர்கள் கொஞ்சமாவது சிந்தித்தார்களா?

ஆர்யா தனக்குப் பிடிக்காத பெண்களை எலிமினேட் செய்வார் அல்லவா? சினிமாக்காரனுக்கே உன்னைப் பிடிக்கலைன்னா வேறு எவண்டி ஒன்னைக் கட்டிக்குவான்னு சமூகத்தில் பேசுவார்களே அப்போது என்ன செய்யப்போகின்றார்கள் இவர்கள்?

தன் படத்தைக் காசு கொடுத்துப் பார்க்கும் சமூகத்திற்கு ஆர்யா செய்யும் நன்றிக்கடன் இதுதானா? செய் நன்றி மறந்து தன் சுகமே பெரிது, தன் நலத்திற்காக எத்தனை பேரை வேண்டுமானாலும் அழித்து ஒழிப்பேன் என்று வாழும் இவர்களைப் போன்றவர்களின் வாழ்க்கை அவ்வளவு சுகமாக இருந்திடாது. ஆர்யா பெண்களின் மீது நடத்தும் பாலியல் அத்துமீறல்களை உடனடியாக நிறுத்த வேண்டும். நான்காவது பாகத்தில் ஒவ்வொரு பெண்களும் ஆட்டம் போடுகிறார். எவ்வளவு அசிங்கம் இது. எந்த ஒரு ஆண்மகனும் செய்யக்கூடாத அடாத செயலைச் செய்யும் ஆர்யாவுக்கு நல்ல மனது ஒன்று இருக்கிறதா என்று புரியவில்லை. கொஞ்சம் கூட சங்கடமே இல்லாமல் ஒவ்வொரு பெண்ணுடனும் அமர்ந்து கொண்டு பேசுகிறார். கட்டிப் பிடிக்கிறார். டான்ஸ் ஆடுகிறார். இது அக்மார்க் பாலியல் அத்துமீறலே. சட்டப்படி நடக்கக் கூடிய பாலியல் அத்துமீறல் இது. ஏனென்றால் அந்தப் பெண்கள் 18 வயதைத் தாண்டி இருப்பார்கள்.

இந்த உலகம் பல்வேறு வரலாற்றுப் பதிவுகளை தன்னகத்தே வைத்திருக்கிறது. பெண்களின் விஷயத்தில் எவனொருவன் ஆட்டம் போடுகின்றானோ அவன் நிம்மதியாக வாழ்ந்து செத்த வரலாறு இல்லவே இல்லை. தேடினாலும் கிடைக்காது. 

அந்தப் பதினைந்து பெண்களின் மனது படும்பாடு, அவர்களின் எதிர்கால வாழ்க்கை, சமூகத்தின் எதிர்காலம் இவைகளைக் கருத்தில் கொண்டு ஆர்யா இந்த நிகழ்ச்சியை உடனடியாக நிறுத்த வேண்டும். தன் ஒருவனின் நலனுக்காக சமூகத்தின் கலாச்சாரத்தின் மீது ஆர்யா நடத்தும் தாக்குதல் அவருக்கு நல்ல விளைவுகளைத் தந்து விடாது. 

இந்தியாவின் சமூகக்கோட்பாடுகளின் மீதும், கலாச்சாரத்திலும் தாக்குதல்களை நிகழ்த்தும் இந்த நிகழ்ச்சியை எந்தக் கட்சியும் நிறுத்துவதாகத் தெரியவில்லை. ஆபாசம் தெறிக்கும் இந்த நிகழ்ச்சி தடை செய்யபடல் அவசியம். தொடர்ந்து ஒளிபரப்புவது பல்வேறு ஆபத்துக்களை உருவாக்கி விடும். சமூகச் சிந்தனையாளர்கள், கலாச்சாரகாவலர்கள் முன்னெடுக்க வேண்டிய மிக முக்கியமான விஷயம் இது.

உண்மையில் தன் பெண் குழந்தையின் மீது அதீதப்பாசம் உள்ள எந்த ஒரு பெற்றோரும் செய்யவே கூடாத செயல் தான் இது.

யாரும் இங்கே தனித்தனியாக வாழ முடியாது. சமூகத்தின் இடையே தான் வாழ வேண்டும்.

ஏற்கனவே ஐபிஎஃப்பில் எனது ஆட்சேபனையைப் பதிவு செய்திருக்கிறேன். இன்னும் ஒரு பதிலும் இல்லை. 

நானும் ஒரு பெண்ணுக்குத் தகப்பன் என்கிற முறையில் என்னால் ஏற்றுக் கொள்ளவே முடியாத ஒரு அக்கிரமமான நிகழ்ச்சி இது. எனது கடுமையான எதிர்ப்பினை நான் இங்கு பதிவு செய்கிறேன்.

ஆர்யா இந்த நிகழ்ச்சியை நிறுத்தவில்லை எனில் காலம் அதற்கான விளைவை அவருக்கு அளிக்கும்.