05.11.2024ம் தேதியன்று முதல்வர் முக ஸ்டாலின் கோவை வந்த போது - மக்களின் தீராத்துயரை நீக்கும் அறிவிப்பை வெளியிட்டிருக்கிறார். தமிழ்நாட்டு வீட்டு வசதி வாரிய நிலம் எடுப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டவர்கள் அனேகம்.
காளப்பட்டி ஹவுசிங் போர்ட்டில் பெரும்பாலானோருக்கு நிவாரணம் கிடைக்காமல் பாதிக்கப்பட்டனர். கோவை விளாங்குறிச்சியில் ஹவுசிங் போர்ட் நோட்டிபிகேஷனில் இருந்த சைட்டுகளுக்கு என்.ஓ.சி வாங்கிக் கொடுக்க சுமார் ஒரு வருடம் அலைந்திருக்கிறேன். ஒரு வழியாக தடையின்மைச் சான்றினை அப்பகுதிக்கு நான் தான் முதன் முதலாய் வாங்கிக் கொடுத்திருக்கிறேன்.
காளப்பட்டி ஹவுசிங் போர்டு கதையே வேறு. புத்திசாலிகளான பலர் காளப்பட்டி ஹவுசிங் போர்டு நிலத்தினால் பெரும் கோடீஸ்வரர்கள் ஆனார்கள். அது ஒரு தனிக்கதை.
தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத்தால் கையகப்படுத்த அறிவிக்கை வழங்கப்பட்ட நிலங்கள், கையகப்படுத்த உத்தேசிக்கப்பட்ட நிலங்கள் ஆகியவற்றிற்கு நீண்ட காலமாக பொதுமக்கள் தடையின்மை சான்று கோரியும், நில எடுப்பிலிருந்து விலக்களிக்கக் கோரியும் பல ஆண்டுகளாக தீர்க்கப்படாமல் இருந்தது.
இவ்வாறு தமிழ்நாட்டின் பல்வேறு இடங்களில் ஹவுசிங் போர்டு நிலமெடுப்பில் பாதிக்கப்பட்டிருந்தவர்கள் முதல்வர் விடியலைத் தந்திருக்கிறார். தமிழ்நாடு முழுவதும் வீட்டுவசதி துறையினால் நிலமெடுப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்ட இனங்களில், தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் தமிழ்நாடு வீட்டுவசதி வாரியத் திட்டத்தில் பயன்படுத்தாத மதுரை, சேலம் மண்டலங்கள், திருவள்ளூர், செங்கல்பட்டு மாவட்டங்களில் வீட்டு வசதி வாரியத்தின் 2,002 ஏக்கர் நிலம் எங்கெங்கு விடுவிக்கப்பட்டது என கீழே படித்துக் கொள்ளவும்.
மதுரை மண்டலத்தில், மதுரை மாவட்டத்தில் விளாங்குடி, தத்தனேரி, பொன்மேனி, தோப்பூர், உச்சபட்டி, ஆனையூர், சிலையநேரி, மாடக்குளம், மேற்கு மதுரை பகுதிகளிலும், அரியலூர் - குரம்பன் சாவடி, தஞ்சாவூர் - நீலகிரி தெற்கு தோட்டம், மகாராஜ சமுத்திரம், விழுப்புரம் - சாலமேடு, கடலூர் - வில்வராயநத்தம், வெளி செம்மண்டலம், திண்டுக்கல் - செட்டிநாயக்கன்பட்டி, விருதுநகர் - சதிரராயடியபட்டி, திருச்சிராப்பள்ளி - வாழவந்தான்கோட்டை, நாவல்பட்டு, கரூர் - தாந்தோனி, திருநெல்வேலி - குலவாணிகபுரம், கன்னியாகுமரி - வடிவீஸ்வரம், தூத்துக்குடி - மீளவிட்டான், ராமநாதபுரம் - சூரன்கோட்டை, சக்கரகோட்டை ஆகிய பகுதிகளில் 317.75 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டுள்ளது.
சேலம் மண்டலத்தில், தருமபுரி - ஏ.ஜெட்டிஹள்ளி, கிருஷ்ணகிரி - கட்டிகனபள்ளி, சென்னாத்தூர், ஒசூர், ஈரோடு - கொல்லம்பாளையம் கிராமம், பெரியசெம்மூர், முத்தம்பாளையம், வேலூர் - சத்துவாச்சேரி, அலமேலுமங்காபுரம், திருப்பத்தூர் - ஆம்பூர் டவுன், ராணிப்பேட்டை - சீக்கராஜ்புரம், வாலாஜா டவுன், வாலாஜா டவுன் மற்றும் ஆனந்தாலை, திருவண்ணாமலை - திருவண்ணாமலை, காஞ்சிபுரம் - சிவகாஞ்சி, கொன்னேரிக்குப்பம், செவிலிமேடு, சேலம் - நரசிங்கபுரம், அய்யம்பெருமாள்பட்டி, கண்டம்பட்டி மேற்கு மற்றும் கிழக்கு, கொட்டகவுண்டம்பட்டி, அழகாபுரம்புதூர், நாமக்கல் - கடச்சநல்லூர், முத்தம்பாளையம, கொண்டிசெட்டிப்டி, வகுராம்பட்டி, புதுப்பாளையம், பள்ளிப்பாளையம், கோயம்புத்தூர் - கணபதி, விளாங்குறிச்சி, வீரகேரளம், தெலுகுபாளையம், கவுண்டம்பாளையம், வடவள்ளி, குமாரபாளையம், காலப்பட்டி, உப்பிலிபாளையம் பகுதிகளில் 1141.68 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டுள்ளது.
திருவள்ளூர் மாவட்டத்தில் குத்தம்பாக்கம், கீழ்முதலம்பேடு (பணப்பாக்கம்), பெருமாளகரம், வெள்ளவேடு, செம்பரம்பாக்கம், செங்கல்பட்டு மாவட்டத்தில் ஆலப்பாக்கம் ஆகிய பகுதிகளில் 542.79 ஏக்கர் நிலம் விடுவிக்கப்பட்டுள்ளது.
பொதுமக்கள் மேற்குறிப்பிட்ட புல எண்களுக்காக இனி வீட்டுவசதி வாரியத்திடம் இருந்து தடையின்மை சான்று பெறத்தேவையில்லை.
அரசாணை கீழே உள்ளது. படித்துப் பயன் பெறுங்கள்.
வளமுடன் வாழ்க...!