குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, December 24, 2020

மத்திய அரசின் ஸ்காலர்ஷிப் பற்றிய விபரங்கள்

மத்திய அரசின் நேரடி ஸ்காலர்ஷிப் உதவித் தொகை பற்றிய விபரங்கள் கீழே இருக்கின்றன. அனைவரும் தெரிந்து கொள்ள வேண்டிய விஷயம் இது. தெரியாதவர்களுக்கு தெரியப்படுத்துங்கள்.


இனிமை இதோ இதோ இதோ


காஞ்சி மரத்தின் காஞ்சிப் பூ


நீருக்குள் மீனுக்காகக் காத்திருந்து நீரினைக் கிழித்துக் கொண்டு பாயும் நீல நிற மீன் கொத்திப் பறவை

அரசியல் அக்கப்போர்களையும், பொடிக்கும் உதவாத சினிமா பற்றியும் எழுதியும் படித்தும் என்ன கண்டோம். ஒன்றுமில்லை. பொழுதினைப் போக்கவா நாட்கள் பிறப்பெடுக்கின்றன. ஒவ்வொரு நாளுமினி மீண்டும் வருமா? வராத நாட்களை இனி வரும் நாள்களில் அர்த்தமுள்ளதாக மாற்றுவது ஒன்றே இனிது.

விடிகாலையில் மயில்கள் அகவ, மார்கழிக் குளிரில் சொற்களை உதிர்க்கும் பற்கள் குளிரில் தந்தியென மாற, வாசலில் வெண்மையாக படரும் அழகிய கோலம் கண்டு உள்ளம் மலர இன்றைய நாளும் துவங்கியது அர்த்தத்துடன். கிழக்கே இளங்காலைச் சுடர் மெதுவாக வெளித்தெரிய சூரியன் தன் கடமையைச் செய்ய ஆரம்பித்து விட்டான்.

இனிமை என்றால் என்ன? அதனை நுகர்ந்திருக்கின்றோமா? அனுபவித்திருக்கின்றோமா என்று ஒரு நொடியேனும் சிந்தித்து இருக்கின்றோமா நாம்?

திடீரென எனக்குள் இந்த வார்த்தையின் அர்த்தம் தான் என்னவாக இருக்கும் எனத் தோன்றியது புலர் காலையில். இனிமை, இனிமை, இனிமை இதன் அர்த்தத்தை மனசு உணர்ந்திருக்கிறதா என்று பார்த்தால் இல்லை எனத் தோன்றிற்று.

இனிமை என்றால் இனிப்பு என்று கூட அர்த்தம் கொள்ளலாம் என்றாலும், இனிப்பு சுவை உணர்வு கொண்டது. இனிப்புச் சுவையும் இனிமையும் ஒன்றா? இருக்காது. இனிமை என்ற சொல்லின் அர்த்தத்தை மனசு உணர்ந்திருக்கிறதா என்று எனக்குள் கேட்டுக் கொண்டேன். நிச்சயம் என்னால் அதை அறுதியிட்டுக் கூற முடியவில்லை. தேடலும் துவங்கியது.


நறும் பூ கோதை தொடுத்த நாள் சினை

குறும் கால் காஞ்சி கொம்பர் ஏறி

நிலை அரும் குட்டம் நோக்கி நெடிது இருந்து

புலவு கயல் எடுத்த பொன் வாய் மணி சிரல்

வள் உகிர் கிழித்த வடு ஆழ் பாசடை

முள் அரை தாமரை முகிழ் விரி நாள் போது

கொங்கு கவர் நீல செம் கண் சேவல்

மதி சேர் அரவின் மான தோன்றும்

மருதம் சான்ற மருத தண் பணை –  சிறுபாணாற்றுபடை பாடல் 178 – 186

 

இந்தப் பாடலை எழுதியவர் இடைக்கழி நாட்டு நல்லூர் நத்தத்தனார் எனும் புலவர். ஓய்மா நாட்டு நல்லியக்கோடனின் நாட்டில் வசித்து வந்த புலவர், நாட்டில் நீர் நிறைந்த வயல் வெளிகளைத் தன் பாடலிலே பாடி இருக்கிறார்.

இந்தப் பாடலின் அர்த்தத்தைக் கீழே படியுங்கள்.


நறு மலர்களின் மாலை போல நாள் தோறும் பூக்கும் கிளைகளைக் கொண்ட

குட்டையான அடி மரத்தை உடைய காஞ்சிமரத்தின் கொம்பில் ஏறி,

நிலையான நீர் இல்லாத குளத்தைக் கூர்ந்து பார்த்து, நெடும் பொழுதிருந்து

புலால் நாறும் கயலை எடுத்த பொன்னிற வாயுள்ள நீல நிற மீன்கொத்தியின்

பெரிய நகம் கிழித்த வடு அழுந்தின பச்சை இலையுடன்

முள் தண்டு உடைய தாமரையின் அரும்பு விரிந்த அன்றைய பூவின்

தேனை நுகர்கின்ற நீல நிற, சிவந்த கண்ணுடைய வண்டுக்கூட்டம்

திங்களைச் சேர்கின்ற கரும்பாம்பு போலத் தோன்றும்,

மருத ஒழுக்கம் நிறைந்த மருதநிலத்தின் குளிர்ந்த வயல்வெளிகள்


இப்பாடல் மூலப் பாடலின் வரிக்கு வரி பெயர்த்தவை. பாடலையும் அப்பாடலின் வரியினையும் ஒப்பிட்டுப் படித்துப் பார்க்கவும்.

இப்பாடலின் எனக்குத் தெரிந்த விரிவாக்கம் கீழே.

குட்டையான அடி மரத்தினைக் கொண்ட காஞ்சி மரத்தின் பூக்கள் பூமாலை போல இருக்கும். தினமும் பூக்கும் காஞ்சி மரத்தின் கிளையில், எப்போதும் நிறைந்தே இருக்காத நீரினைக் கொண்ட குளத்தினை கூர்ந்து பார்த்துக் கொண்டே நீண்ட நேரம் அமர்ந்திருக்கும் ஒரு நீல நிற மீன் கொத்திப் பறவையானது, மீனைக் கண்டதும் தண்ணீருக்குள் ஈட்டி போலப் பாய்ந்து மீனைக் கொத்திப் பிடிக்கிறது. அப்போது நீருக்குள் பாய்ந்த மீன் கொத்திப் பறவையின் கால் நகங்கள் விரிந்த பச்சை இலையுடன் விரிந்தும் விரியாமலிருக்கும் தாமரையின் இலைகளைக் கிழித்து விடுகின்றன. அப்போது அன்றலர்ந்த தாமரையின் மீது தேனைக் குடிக்க அமர்ந்திருந்த நீல நிற, சிவந்த கண்களை உடைய தேனிக்கள், சூரிய கிரகணத்தின் போது பூமி மீது படரும் சந்திரனின் பாம்பு போன்ற இருளைப் போல கூட்டமாய் பூவிலிருந்து வெளி வருகின்றன என்று மருத நிலத்தின் வயலும் வயல் சார்ந்த பகுதிகளும் நீர் நிரம்பிக் கிடக்கும் காட்சியினைப் பாடலாய் எழுதி இருக்கிறார் அப்புலவர்.

இப்போது சிறுபாணாற்றுப்படைப் பாடலைப் படித்துப் பாருங்கள். அர்த்தம் அழகாக மனதுக்குள் விரியும்.

இனிமை என்றால் என்ன என இப்போது தெரிந்திருக்கும். இனிமை என்ற சொல்லின அர்த்தம் இப்பாடலைப் படிக்கும் போது நம் மனதுக்குள் கிளரச் செய்யும் உணர்வினை நீங்களும் உணர்ந்திருந்தால் அதுதான் இனிமை.

தமிழைப் போல ஒரு மொழியும் இவ்வுலகினில் உண்டோ?

தமிழைப் போல இனிமையும் வேறு உண்டோ?

ஒரு மலர் மலர்ந்து பின் உலர்வதினை கீழே படியுங்கள்.

அரும்பு என முகிழ்த்து, நனையென துளிர்த்து, முகையென வளர்ந்து, மொக்குள்ளாகி, முகிழ் என முகிழ்ந்து, மொட்டு என உருவாகி, போதுவென மலர்ந்து, மலர் என பூத்து, பூவாகி வீயாகியது அதுமட்டுமா பொதும்பராகி, பின்பு பொம்மலாகி இப்போது செம்மலாகிப் போனது – வாழ்க்கை.

மலரின் ஒவ்வொரு நிலைக்கும் தமிழ் வார்த்தைகளைப் படித்தீர்களா? இனிமை என்பது இதுதானே?

தமிழ் என்றால் இனிமை….!

இனிமை இதோ இதோ இதோ – தமிழ்

Wednesday, December 16, 2020

நிலம் (74) - உபரி நிலங்கள் - ஜாக்கிரதை

விரைவில் தமிழகத்தில் போர் தொடங்கப் போகிறது. 

முன்னெடுப்பாக பத்திரப்பதிவுத் துறையில் அதிகமான பத்திரங்கள் பதியப்படுகின்றன. பொங்கலுக்குள் உச்சத்தைத் தொடும். தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட பிறகு மூன்று மாதங்கள் பதிவுத் துறையில் ஒன்றும் பதிவாகாது.

இந்தப் போர் அரசியல்வாதிகள் அனேகரின் வாழ்க்கையை முடித்து வைக்கும் என நினைக்கிறேன்.

வரவு செலவு கணக்கு வழக்குகள் இந்தப் போரில் சரி பார்க்கப்படும். விதியின் விளையாட்டில் சிக்கி சின்னாபின்னமாகப் போவது யாரோ தெரியவில்லை. பள்ளம் மேடாவதும், மேடு காணாமல் போவதும் விதியின் கையில் உள்ளது.

தேர்தலைப் போர் என்றுதான் சொல்ல வேண்டும்.

அதிகாரத்துக்கு வரப் போர் நடக்கிறது. இது மகாபாரதப் போரை விட கொடிதானதாக இருக்கும். துரியோதன சேனை மிகப் பெரிது. வலிமையானது. 

அதற்குத் தேர்தல் என்று பெயர். 

இந்தியாவில் சமீபத்தில் நடப்பது தேர்தல் இல்லை என்பது மனச்சாட்சி உள்ளவர்களுக்குத் தெரியும். எல்லாமும் விற்பனைக்கு மனச்சாட்சியும் கூடத்தான். சட்டம் எப்போதோ விற்பனைக்கு வந்து விட்டது.

சரி இந்த அக்கப் போர் எப்போதைக்கும் நடந்து கொண்டே தானிருக்கும். மக்களும் ஆட்டு மந்தைக் கூட்டம் போலத்தான்.

சமீபத்தில் கோவையின் மேற்கு மலைச்சாரல் பக்கம் ஒரு பிசினஸ் விஷயமாகச் சென்றிருந்த போது ஒரு விஷயம் கேள்விப்பட்டேன்.

அதற்கு முன்பாக ஒரு இடைச்செருகல்.

டேன் இந்தியா என்றொரு கம்பெனியைப் பற்றிக் கேள்விப்பட்டிருப்பீர்கள் என நினைக்கிறேன்.

ஒரு வித்தியாசமான வழக்கு நடந்தது. 

டேன் இந்தியாவிற்குச் சொந்தமான சொத்துக்களை விற்று, முதலீட்டாளர்களுக்கு பங்கிட்டுக் கொடுக்கும்படி கோர்ட் மூலம் சொத்து கைப்பற்றப்பட்டு விற்பனைக்கு கொண்டு வந்தார்கள்.

அந்த நேரத்தில் டேன் இந்தியா வைத்திருந்த நிலங்கள், நில உச்சவரம்பு மற்றும் சீர்திருத்தச் சட்டத்தின்படி, அனுமதி பெறாமல் இருந்த நிலமானது அரசின் சொத்து என வாதிடப்பட்டது.

அதாவது டேன் இந்தியா வாங்கிய நிலங்கள், இன்ன காரணத்துக்காக வாங்கப்படுகிறது, ஆகவே அனுமதி தாருங்கள் என நில உச்சவரம்பு ஆணையத்திடம் அனுமதி பெறாத காரணத்தால், ஒரு நிறுவனத்துக்கு ஒதுக்கப்பட்ட சீலிங் லிமிட் நிலத்தை விட, அதிகமாயுள்ள நிலமானது அரசுக்கு சொந்தமானது என்று வாதிடப்பட்டது.

இது சட்டப்படி சரியானதுதான். பின்னர் அரசுக்குச் சொந்தமான சொத்தினை எப்படி விற்று, முதலீட்டாளர்களுக்கு பங்கு பிரித்துக் கொடுக்க இயலும்? முடியாது. இடியாப்பச் சிக்கலுக்கு உள்ளானது அப்பிரச்சினை.

கோவை மேற்கு தொடர்ச்சி மலைப்பக்கம் இருக்கும் ஒரு சில கிராமங்களில் சுமார் 1800 ஏக்கர் நிலங்கள் உபரி நிலங்கள் என அறிவிக்கப்பட்டவை. அந்த நிலங்களைக் கிரையம் பெறுவது கூடாது. ஒரு சில பேராசை பிடித்தவர்களால் அந்த நிலங்களுக்குப் பட்டாக்கள் பெறப்பட்டு விற்பனை செய்ய முற்படுகிறார்கள்.

ஒரு சிலர் இன்னும் வியாக்கினமாக, வங்கியில் அடகு வைத்து பணம் பெற்று விடுகின்றார்கள். பத்திரப்பதிவு அலுவலகங்களில் இப்படியான நிலங்களின் தரவுகள் இருப்பதில்லை. ஆகவே பதிவு அலுவலகங்கள் பத்திரங்களைப் பதிவு செய்து விடுகின்றன.

கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சி, ஆனைமலை, தாராபுரம் போன்ற தாலுக்காக்களில் பெரும்பாலான நிலங்கள் உபரி நிலங்கள். அது பற்றிய நோட்டீஸ் நில உரிமையாளர்களுக்கு அனுப்பப்பட்டு வருகின்றன. பலரும் இதை மறைத்து விடுகின்றார்கள். 

இது பற்றிய விவரம் எவருக்கும் தெரிந்தபாடில்லை. 25 ஏக்கருக்கும் மேல் என்றாலோ, பிரித்து விற்பனை செய்கிறார்கள் என்றாலோ ஜாக்கிரதையாக இருந்து கொள்ளுங்கள். அதை எப்படிக் கண்டுபிடிப்பது என்றால் மிக நல்ல விஷயம் தெரிந்த லீகல் ஒப்பீனியன் வழங்குபவரிடம் ஆலோசனை பெறுங்கள்.

அதுமட்டுமல்ல மேட்டுப்பாளையம், காரமடை பகுதியில் பஞ்சமி பூமிகள் அதிகமுள்ளன. பெரும்பாலான கம்பெனிகள் இந்தப் பஞ்சமி பூமிகளில் தான் கட்டப்பட்டுள்ளன எனத் தெரிய வருகிறது.

கடும் உழைப்பில் கிடைக்கும் பணத்தினை சரியான நிலத்தில் முதலீடு செய்வது முக்கியம் என்பதை மறந்து விடாதீர்கள்.

உபரி நிலங்கள் மற்றும் சீலிங்க் லிமிட் பற்றித் தெரிந்து கொள்ள என்னை அணுகலாம். நிச்சயம் கட்டணம் உண்டு என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

நிலம் வாங்கும் முன்பு கவனிக்க வேண்டியவற்றை கவனித்து வாங்குங்கள்.

வாழ்க வளமுடன்...!




2020ம் வருட மார்கழி மாதம் ஒன்றாம் தேதி

ஐப்பசி மாதம் மழை பெய்து கொண்டே இருக்கும். குளிர் எலும்பினை ஊடுறுவிச் செல்லும். தாத்தாவின் ஐ.என்.ஏ யூனிபார்ம் சட்டை ஒன்று இருக்கும். அதை எடுத்துப் போட்டுக் கொள்வேன். ஓட்டு வீடாகையால் குளிர் வீட்டுக்குள்ளே இறங்கும். விடிகாலைப் பொழுதில் தாதன் வாசலில் சிகண்டி அடித்து சங்கு ஊதிச் செல்வான். சிகண்டி கண்டு விழித்து விடுவேன். சரியாக பள்ளி வாசலில் இருந்து தொழுகைக்கு பாங்கு சொல்லி அழைப்பார்கள்.

கல் வேய்ந்த வாசல். கிராமத்திலேயே எங்கள் வீட்டில் தான் இருந்தது. வாசலைச் சுற்றி சிமெண்ட் பூசி, தண்ணீர் செல்ல வழி வைத்த சமமான கல்வாசல். நெல் காய வைப்பது, ஊறுகாய்கள், வத்தல், வடாம், உளுந்து இன்னும் என்னவெல்லாமோ வாசலில் தான் காய வைப்போம். மாலையில் சூடு கொப்பளிக்கும். நான்கைந்து வாளி தண்ணீர் தெளித்து சூட்டைக் குறைத்து, இரவில் வாசலில் அமர்ந்து சாப்பிட்டு விட்டு பாயைப் போட்டு தூங்குவதும் உண்டு. ஆகாயத்தில் நட்சத்திரங்கள் ஜொலித்துக் கொண்டிருக்கும். அதை எண்ணிக் கொண்டே இருக்குங்கால் தூக்க தேவதை அழகாய் தழுவி விடுவாள்.

வீட்டின் இடது புறம் நீண்ட ஆண் பனைமரம் இருக்கும். தென் கிழக்கு மூலையில் நாவல் மரம் பெரியது. வாசலை ஒட்டி வண்டி செல்லும் வண்டிப்பாதை. வீட்டு வாசலின் நேராக ஒரு பூவரசு மரம். அம்மாச்சி செத்துப் போனப்போது அதற்கு பயன்படுத்திய பூவரசம் குச்சியை அம்மா வாசலின் நேராக ஊன்றி வைத்தார்கள். அது பிழைத்துக் கொண்டது. அம்மாச்சியைப் பார்ப்பது போல தினமும் அந்தப் பூவரச மரத்தை அம்மா வாஞ்சையோடு பார்ப்பார்கள்.

பூவரசு மரம் அதன் இலைகளைத் தைத்து சோறு போட்டுச் சாப்பிடுவார்கள் திடீரெனெ வீட்டுக்கு வரும் வேலைக்காரர்கள்.

தீபாவளி சமயங்களில் மழை கொட்டோ கொட்டென்று கொட்டும். ஒரு மழை நாளில், தீபாவளி அன்று என் தோழியை முத்தமிட்ட சம்பவம் என் ஊடே மின்னல் என வந்துச் சென்று விட்டது. ஹா…

எனக்கு நிறைய மாமா பெண்கள் இருந்தார்கள். எனக்குப் பிடித்த சில மாமா பெண்களும், தோழிகளும் உண்டு. அது உள்ளூர இருக்கும் அன்புணர்வு. தீபாவளி நாட்களில் பலகாரங்களைக் கொடுத்து அன்பினை வெளிப்படுத்துவார்கள். அதெல்லாம் ஒரு காலம். எனக்கு நிரம்பவும் பிடித்த என்னை விட மூத்த வயது மாமா பெண் ஜெயம் மட்டுமே. மீதமுள்ளவர்களைக் கொஞ்சம் கொஞ்சம் பிடிக்கும்.

சமீபத்தில் தான் எனது நெருங்கிய நண்பன் மாரிமுத்துவுடன் பேசும் சந்தர்ப்பம் கிடைத்தது. ஊரில் அவன் வீடுதான் மிகவும் பெரியது. வேலைப்பாடுகள் நிறைந்த அற்புதமான வீடு. வீடு என்றுச் சொல்வதை விட குட்டி அரண்மனை என்றுச் சொல்லலாம். அவனின் தாத்தா ஊரில் பெரிய வீட்டுக்காரர். ஆறாம் வகுப்பு படிக்கும் போது அவனுடன் நெருக்கம் அதிகமானது. வீட்டுக்கு அடிக்கடிச் செல்வேன். அவனின் அக்காக்கள், அவனின் அண்ணன் எல்லோரும் பார்ப்பதற்கு ராஜா வீட்டுப் பிள்ளைகள் போல இருப்பார்கள். நானோ சொங்கிப் போய் இருப்பேன். படிப்பதில் கொஞ்சம் கெட்டிக்காரத்தனமுண்டு என்னிடம். நானும் அவனும் கணக்குப் பாடங்களை எழுதுவது போன்ற படிப்புத் தொடர்பாக பழகினோம். அவன் வீட்டில் சாப்பிடுவதுண்டு.

பழைய நண்பனுடன் பேசும் போது மனக்கண்ணில் அந்தக் காலத்துக்கே சென்று விடுவோம் அல்லவா? அதைப் போல எனக்கும் நேர்ந்தது. கடந்த காலம் இனி வராது. என்னதான் செய்தாலும் அந்த நேரமும் பொழுதும் இனி கிடைக்காது. ஆனால் அதன் நினைவுகள் தரும் சுகமானது மகிழ்ச்சியை விட வேதனையைத் தந்து விடும் எல்லோருக்கும் அல்லவா? அன்றைக்கு டிவி இல்லை, மொபைல் இல்லை. தினசரிகள், மாதப் பத்திரிக்கைகள் தவிர வேறொன்றும் இல்லை. மனிதர்களைப் பார்ப்பதும், பேசுவதும், விளையாடுவதும் ஆன பொழுதுகள் இன்றைக்கு நம் பிள்ளைகளுக்கு கிடைப்பதில்லை.

மார்கழி மாதம் என்பது சாதாரணமானது அல்ல. இறைவனை நினைத்து போற்றக்கூடிய காலம் இது. காலம் காலமாக ஆண்டாளின் பாசுரங்களைப் பாடிக் கொண்டிருக்கிறோம். கண்ணன் மட்டுமா துயில் களைய வேண்டும்?

தமிழர்களும் துயில் களைய வேண்டும். இன்னும் சினிமாக்கனவுகளில் மூழ்கி தூங்கிக் கொண்டிருக்காமல் விழித்து எழ வேண்டிய நாள் இது. விழித்துக் கொள்ளுங்கள்.

கிழட்டு நரிகள் அழகிய இளம் பெண்களுடன் ஆடிப் பாடிக் களித்து அதைக் காட்டி கிளர்ச்சியுறச் செய்து ஓட்டு வாங்கி அதிகாரம் செய்ய, நரித்தனங்களைச் செய்து கொண்டிருக்கிறார்கள். அரசு அதிகாரிகள் சம்பளம் பெற்றுக் கொள்வது பணிக்காக. ஆனால் மக்களுக்கு வேலை செய்ய கையூட்டுப் பெற்றால் மட்டுமே வேலை செய்யும் போக்கினை மாற்ற வேண்டும். அதற்குக் காரணமான ஆட்சியை மண்ணுக்குள் தள்ளி மூட வேண்டும்.

பசியாற்றும் விவசாயிகள் டெல்லிச் சாலையிலே பனி மூட்டத்தின் ஊடே போராடிக் கொண்டிருக்கிறார்கள். வயிற்றுப் பசி தீர்த்தவர்களின் கோரிக்கையை கண்டு கொள்ளாமல் கார்ப்பொரேட் கூலியாக நின்று விதண்டாவாதம் பேசிக் கொண்டிருக்கிறது மத்திய அரசு. விவசாயத்தைப் பிடுங்கி தன் அரசியல் நண்பர்களிடம் கொடுத்து விடத் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்தியாவே விழித்துக் கொள்ள வேண்டிய தருணம் இது.

எழுந்திருங்கள் தமிழர்களே…! எழுந்திருங்கள்…!!

சொந்தம் உற்றார், உறவினர், ஜாதி, இனம், மதம், மொழி, கட்சி என எதுவும் பார்க்க வேண்டாம். நம்மை வழி நடத்த, நாட்டை நல் வழியில் ஆள நல்லவர்களைத் தேர்ந்தெடுக்க வேண்டும். நல்லவர்கள் யார் என்று தெரிந்து கொள்ள வேண்டும்.  

மார்கழித் திங்களில், இந்த நன்னாளில் நீராடும் போது, எண்ணங்களில் இருக்கும் இன, மத, மொழி, கட்சி விரோதங்களை அழுக்கோடு கழுவி விடுங்கள்.

உலகம் நம்மை வாழ வைத்தது. நாம் நம் சந்ததியினருக்கு அவ்வாறே விட்டுச் செல்ல வேண்டிய கடமை உண்டு என்பதை மறந்து விடாதீர்கள்.

கோவையில் குளிர் இல்லை. சில்லடிக்கும் குளிர் சுத்தமாக இல்லை. விடிகாலைப் பொழுதில் எழுந்து குளித்து விட்டு, நெற்றியில் விபூதியும், குங்குமமும் இட்டு வாசலில் வந்து அமர்ந்தேன். வாசல் தெளித்து, கூட்டிப் பெருக்கி விட்டு, கோலம் போட்டுக் கொண்டிருந்தார் மனையாள். தெருவில் எந்த வீட்டிலும் விளக்குப் போடவும் இல்லை, கோலம் போடவும் இல்லை. எங்கோ தூரமாக சாமிப் பாட்டு ஒலித்தது. மனையாளும் நானும் ஏதோ தனித்து விடப்பட்டவர்களாக தெரிந்தோம். மக்களின் மனோபாவம் மாறிப் போனது. ஒழுங்கும், நியதியும், சமூக வழக்கங்களும் மாறிப் போனதன் விளைவினை பூமி அனுபவிக்கிறது. பூமியை ஆதாரமாகக் கொண்ட மனிதனும் அதன் தொடர்ச்சியாக அனுபவிக்கிறான். 

ஊரில் இந்த நேரத்தில் மழையூர் சதாசிவம் சிவன் கோவிலில் திருவாசகத்தையும், அகவலையும் உருகி உருகிப் பாடிக் கொண்டிருப்பார். குழந்தைகள் கோவிலுக்குச் சென்று கொண்டிருப்பார்கள். அவர்களுக்கு இன்றைக்கு சர்க்கரைப் பொங்கல் கிடைக்கும்.

காலம் வசதி வாய்ப்புகளை மட்டும் தான் தந்தது. மனிதர்கள் அதற்காக தங்கள் வாழ்வியலை மாற்றி விட்டார்கள். ஆனால் பசியும் கோபமும் தாபமும் காமமும் இன்னும் அப்படியே தான் இருக்கின்றன என்பதை எல்லோரும் மறந்து போனார்கள்.

இந்த மார்கழி அன்று நாம் தமிழகத்தில் இருவரை முடக்க வேண்டுமென சபதம் கொள்வோம். எந்தத் தகுதியும் இல்லாமல் நம்மை ஆளத்துடிக்கும் அற்ப எண்ணமுள்ள நரிகளான, தமிழினத்துக்கு ஒரு கேடாக இருக்கும் கமலஹாசனையும், ரஜினி காந்தையும் முடக்கி அவரவர் வேலையச் செய்ய வைக்க வேண்டும்.  

கொரானா, பொருளாதாரச் சீரழிவு, துரோகிகளின் தமிழ் இன அழிப்பு சம்பவங்கள் எல்லாவற்றையும் கடந்து இனி தெளிவடைவது மட்டுமே முக்கியம். கடந்து போனவை போனதுதான், இனி அது திரும்பப் போவதில்லை. ஆனால் வரும் காலம் நமக்கானது. அதை நமக்கேற்றபடி எழுத வேண்டிய கட்டாயம் இருக்கிறது என்பதை எவரும் மறந்து விடாதீர்கள்.

உங்கள் அனைவருக்கும் மார்கழி முதல் நாளன்று இனிய வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

Monday, December 14, 2020

நிலம் (73) - பதிவுத்துறை மோசடி - பத்திரங்களின் நிலை என்ன?

இரண்டு நாட்களாக பத்திரப்பதிவுத் துறை அல்லோலகலப் பட்டுக் கொண்டிருக்கிறது. காரணம் யார்?

வேறு யார்? துணைப்பதிவாளரைத் தவிர. அங்கிருக்கும் காண்ட்ராக்ட் பணியாளர்களின் உதவியுடன் இந்த அக்மார்க் அயோக்கியத்தனத்தை அரங்கேற்றி இருக்கிறார்கள் துணைப்பதிவாளர் மற்றும் அவரைச் சேர்ந்தவர்கள்.

இதுவரை எவரும் வாய் திறக்கவில்லை. எந்தெந்தப்பத்திரத்திற்கு போலி ரசீது காட்டி பதிவு செய்தார்களோ தெரியவில்லை. திருப்பூர் துணைப்பதிவு அலுவலகத்தில் நடத்தப்பட்ட அயோக்கியத்தனத்தை இத்தனை காலம் வேடிக்கைப் பார்த்துக் கொண்டிருந்திருக்கின்றார்கள்.

பாதிக்கப்படுவது மக்கள். 

வாயைக்கட்டி, வயித்தைக் கட்டி, நல்லது கெட்டதுக்கும் போகாமல், உழைத்து உழைத்து ஓடாய்த் தேய்ந்து ஒரு இடத்தை வாங்க படாத அவஸ்தைப் பட்டு, அதைக் கிரையம் செய்யச் செல்லும் இடத்திலும் இப்படியான ஊழல், அயோக்கியத்தனத்தைச் செய்தால் என்னதான் செய்ய முடியும் மக்களால்?

வங்கியில் பணம் போட்டால், அது எப்போது திவாலாகுமோ தெரியாமல் விழி பிதுங்கி, அதை நிலத்தில் போட்டாலாவது கிடக்குமே என்று அவரவர்கள் எங்கெங்கோ அலைந்து திரிந்து ஒரு இடத்தைப் பார்த்து விலை பேசி கிரையத்துக்கு வந்தால் பதிந்த பத்திரமும் போலியாகப் பதிந்திருக்கின்றார்கள் என்றால் இப்படிப்பட்ட அக்கிரமம் செய்தவர்களை உடனடியாக பதவி நீக்கமோ பணி விடுப்போ செய்யாமல், அங்கேயே வைத்திருக்கும் அரசின் லாவணிக்கு அளவே இல்லை.

மக்களிடம் ஜி.எஸ்.டி எனச் சுரண்டி சுரண்டி கொழுத்துக் கொண்டிருக்கும் மத்திய அரசு ஒரு பக்கம். காணும் இடமெல்லாம் ஊழல் செய்து கொண்டிருக்கும் தமிழக அரசு அதிகாரிகள் ஒரு பக்கம்.

இதற்கிடையில் மக்கள் இரயில் தண்டவாளத்தின் இடையில் மாட்டிய கதையாக கதி கலங்கிப் போய் கிடக்கின்றார்கள்.

பத்திரத்திரத்தைப் பதிவு செய்யவே மோசடி வேலை செய்திருக்கும் அந்தப் பதிவாளர் என்ன விதமானவர் என்று யோசிக்க கூட முடியவில்லை. இப்படியுமா ஒரு அதிகாரி இருப்பார் என்று யோசிக்கத் தோன்றுகிறது. கணிணி அலுவலக நடைமுறையின் இன்னொரு கோர முகம் இது. 

பட்டா மாற்றத்தில் நடத்தப்பட்ட பல்வேறு முறைகேடுகள் இன்னும் சரி செய்யவில்லை.  நத்தம் பட்டாவில் நடத்தப்பட்ட பெரும் முறைகேடுகள் இன்னும் சரி செய்யப்படவில்லை.

இதற்கிடையில் பத்திரப்பதிவு செய்யவே முறைகேடு. 

ஏன் இப்படி ஆகிப்போனது தமிழக அரசு? காரணம் மக்கள். மக்களைத் தவிர வேறு யாரும் காரணம் இல்லை. 

இது பற்றி நிறைய பேசியாகி விட்டது. ஆனாலும் எவரும் திருந்தப் போவதில்லை. 

ரஜினிக்கு ஓட்டுப் போடுவோம் என்று சொல்லுபவர்கள் எந்த மாதிரியான ஆட்கள் என்று எனக்குப் புரியவே இல்லை. 

தமிழருவி மணியன் அவர் அருகில் நிற்கிறார் வெட்கமில்லாமல். கோவையைச் சேர்ந்த ஒருவர் வேறு. அதிகாரத்தின் போதையில் இப்படியும் கீழ் மன நிலையில் மனிதர்கள் இருப்பார்களா என அதிர்ச்சியாக இருக்கிறது.

சீமான் சொன்ன மாதிரி, ஸ்ரெயிட்டா கல்யாணத்தில் தாலி கட்டத்தான் ரஜினி வருவார். 

அரசியல் என்பது இன்றைக்கு இவ்வளவு கீழ் தரத்திற்கு தமிழகத்தில் போய் விட்டது. ஆனால் பாருங்கள் அவர்களை உலகம் தலைவர்கள் என்கிறது. இதுதான் வேதனையிலும் வேதனை.

அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

இனி போலி பத்திரப்பதிவினை எப்படித் தடுப்பது என்று பார்க்கலாம்.

ஆன்லைனில் டோக்கன் பதிவு செய்த பிறகு, ஸ்டாம்பு கட்டணம், பதிவு கட்டணம் இரண்டையும் நேரடியாக ஆன்லைனில் கட்டி ரசீது பெற்றுக் கொள்ளவும். இதை தனிப்பட்ட முறையில், எவரிடமாவது கொடுத்தால் இப்படியான சிக்கலில்தான் சிக்க வேண்டி வரும்.

அவர்கள் பணத்தைப் பெற்றுக் கொண்டு போலி ரசீது காட்டி பதிவு செய்து விட்டார்கள். ஆனால் உண்மையில் அரசுக்குப் பணம் போகவில்லை. அந்தப் பத்திரத்தின் நிலை இப்போது NULL AND VOID.

ஆகவே நண்பர்களே, கொஞ்சமாவது கவனமாக இருந்து கொள்ளுங்கள்.

உழைப்பு உங்களது. பணம் உங்களது. அது உங்களிடம் இருக்க வேண்டும். ஆகவே கவனம் தேவை.

பதிவுத்துறை மோசடி இணைப்புச் செய்தி : https://www.dinamalar.com/news_detail.asp?id=2670493


மேலும் ஒரு குறிப்பு : கமல்ஹாசனுக்கோ, ரஜினிக்கோ ஓட்டுப் போட கிஞ்சித்தும் நினைத்து விடாதீர்கள். அவர்கள் இன்னும் தமிழ் நாட்டை கூறு போட முனைந்திருக்கிறார்கள். அவர்களுக்கு நன்கு தெரியும் அதிமுக, திமுக தவிர அவர்களால் பதவிக்கு வர இயலாது என. ஆனாலும் இந்த வேலையைச் செய்கிறார்கள். நோக்கம் ஒன்றுதான் செட்டில்மெண்ட். அல்லது அயோக்கியத்தனம். 

போதும் சினிமாப் பைத்தியமாகி அலைந்து திரிந்தது. சினிமாக்காரர்களுக்கு தமிழ் நாட்டை எழுதி வைத்த காலத்தை மலையேற்றுவோம். 

நல்லவர்கள் எவரோ அவர்களுக்கு ஓட்டுப் போடுவோம். 

தர்மம் ஜெயிக்க வேண்டும். அறம் ஜெயிக்க வேண்டும். அதுதான் நம்மையும், நம் சந்ததியினரையும் வாழ வைக்கும். 

இவர்கள் இரத்தம் உறிஞ்சும் கொடிய அட்டையை விட கொடியவர்கள். அட்டை பசிக்கு உறிஞ்சும். ஆனால் இவர்களோ கொடூரர்கள்.

மேலும் சில செய்திகள் - செய்தி உதவி தினமலர் - நன்றி

சும்மா படிச்சு வையுங்க. என்னைக் கவர்ந்த செய்திகள் இவை.




Wednesday, December 9, 2020

சித்ராவுக்கு ஒரு கடிதம்


(சின்னத்திரை நடிகை சித்ரா)

அவ்வளவு அவசரம் ஏனோ சித்ரா? 

உணர்வுகளின் பிடியில் சிக்கி விட்டீரோ?

உணர்வுக்கும் அறிவுக்கும் சம்பந்தமே இல்லை என நிருபித்து விட்டாயே சித்ரா.

இன்னும் கொஞ்ச நாள் வாழ்ந்து சென்றிருக்கலாமே?

உன்னிடம் விளம்பரப் படத்திற்காகப் பேசி இருக்கிறேன். உன் குரலைக் கேட்டால், எனக்கு உன் மீது காதல் கொப்பளித்து அருவி போல கொட்ட ஆரம்பித்து விடும்.

அதைத் தவிர எனக்கும் உனக்குமான நேரங்கள் ஏதும் இல்லை. 

என்னிடம் உனக்கும், உன்னிடம் எனக்கும் எந்த வித பயனும் இருந்ததில்லை.

ஆனால்,

இரண்டொரு நாள் உன் குரலின் தாக்கத்தால் பெரும் மன வலி அடைவேன். 

இருப்பதே ஒரு மனசு. 

எனக்கு கடவுளின் மீது எல்லையில்லா கோபம் உண்டு இந்த விஷயத்தில்.

ஒவ்வொருவருக்கும் ஓராயிரம் மனசைப் படைத்து இருக்கலாம்.

அதில் இன்னொரு விஷேசத்தையும் இணைத்திருக்கலாம். ஒவ்வொரு மனசுக்கும் தொடர்பில்லா வண்ணம் செய்திருக்கலாம்.

மனித உலகினை கடவுள் வஞ்சித்து விட்டார்.

அது கிடக்கட்டும் அழகு தேவதையே….. !

மனசு வலித்து வலித்து உதிரம் கொட்டுகிறதடி உன் பிரிவால்.

எல்லாமும் முடித்து வைத்து விட்டாய்.

உன் சின்னஞ்சிறு உதடுகளைச் சுழித்துச் சுழித்து நீ பேசுகையில் சின்னக் குழந்தையின் மழலைப் பேச்சை கேட்பது போல இருக்கும். குழந்தையாகத் தானே இருந்தாய். அதற்குள் என்ன அவசரமோ உனக்கு?

உன் உருவமும், அழகும் ஒரு கிராமத்து அத்தியாயத்தின் நடிகையாக வந்த மருத்துவரைப் போல உள்ளத்தை அள்ளிச் செல்லுமே? இனி எவரிடம் காண்பது அதை? உன்னோடு எல்லாமும் போனதடி.

அத்தனை அழகையும், உன் அறிவையும் இரக்கமே இல்லாத நெருப்பிடமா கொண்டு போய் சேர்த்தாய்? மிச்சம் சொச்சமில்லாமல் தின்று விடுமே உன்னை.

இதற்குத்தானா இத்தனை அழகாய் ஆடினாய், பாடினாய்?

ஏனடி உனக்கு இத்தனை கோபம் வாழ்க்கை மீது?

வாழ்க்கை சிக்கலானது இல்லை சித்ரா.

நாம் தான் சிக்கலாக்கி வைத்திருக்கிறோம். நாமே பின்னிய வலைக்குள் சிக்கிக் கொண்டிருக்கிறோம் என்பது கூட தெரியவில்லையா உனக்கு?

மதியம் போல உன் செய்தி.

வேதனையில் கண்கள் குளமாயின.

இன்றைக்கு தமிழகமே தண்ணீரில் மிதக்கிறது.

உனக்காத்த்தான் மழையும் அழ ஆரம்பித்ததோ சித்ரா? இயற்கைக்கு எல்லாமும் தெரிந்திருக்குமோ?

என் பெரிய மாமன் மகள் பெயர் சித்ரா. என்னைக் கண்டு கொள்ளவே மாட்டாள். அதனாலோ என்னவோ உன் மீது எனக்குப் பிரியம் அதிகம்.

எனக்கும் சித்ராவுக்கும் எப்போதுமே ஒத்துப் போகாது போல. அதைப் போல நீயும் விட்டுப் பிரிந்து போனாயோ?

சித்ரா உனக்காக உலகக் கவிஞன் கலீல் ஜிப்ரானின் ஒரு சில வரிகளைக் கடன் வாங்கி இருக்கிறேன்.

இதோ....!


நான் எக்காலமும் இந்த கரைகளில் கடல் மணலுக்கும்

நுரைக்கும் நடுவே உலாவிக் கொண்டிருக்கிறேன்.

உயர் அலைகள் என் காலடிச்சுவடுகளை அழித்துவிடும்

அவ்வாறே காற்று நுரையினை ஊதித்தள்ளிவிடும்.

ஆனால் இந்த கடலும் அதன் கரையும் எக்காலமும் இருக்கும்.

 

ஒருமுறை பனிப்புகையை என்கைகளில் ஏந்தியிருந்தேன்.

கைகளை விரித்து பார்த்தபோது பனிப்புகை ஒரு புழுவாய் மாறி இருந்தது.

மீண்டும் கைகளை மூடி திறந்தபோது அங்கே ஒரு பறவை இருந்தது

 

இன்னொருமுறை கைகளை மூடி திறந்தபோது

அதனிடுக்கில் கவலை தோய்ந்த முகத்துடன்

மேல்நோக்கி பார்த்தபடி ஒரு மனிதன் நின்று கொண்டிருந்தான்!!

 

நான் மீண்டும் கைகளை மூடி, திறந்தபொழுது

அங்கே பனிப்புகையை தவிர ஒன்றுமில்லை.

ஆனால் இனிமையிலும் இனிமையான ஒரு பாடலை நான் கேட்டேன்.


(கலீல் ஜிப்ரானின் மணலும் நுரையும் எனும் கவிதையிலிருந்து)

ஆம் சித்ரா உலகம் இருக்கும் வரை துன்பங்களும் துயரங்களும் உண்டு மனதுக்கு மட்டும். ஆனால் உனக்கு அல்ல சித்ரா.

மனதுதான் துன்பத்தினை அனுபவிக்கிறது உன் ஆன்மா அல்ல சித்ரா.

மனதை வெல்லத் தெரிந்து கொள்ள வேண்டும் சித்ரா.

ஆனால் நீ இருந்த துறை முற்றிலும் உணர்வுகளால் பீடிக்கப்பட்ட ஒரு சாக்கடை.

ஒரு பன்றிக்கு எப்படி சாக்கடை இன்பமோ அதைப் போல பல கோடி மனிதர்களுக்கு சாக்கடை மனதே இன்பம்.

சித்தாந்தமும் தத்துவமும் பேசுவதால் பயனில்லை சித்ரா.

உனது ஆன்மா அமைதியாகட்டும்.

க்

கு

ரு

நினைவூட்டல்

நான் வாழ்ந்து வரும் இக்காலத்தில் ‘இனிமையிலும் இனிமையான ஒரு பாடலைக் கேட்டேன்’

அப்பாடல்

சித்ரா…..!

* * *

உணர்வுகளின் பிடியில் சிக்கிக் கொண்டிருக்கும் போது ஒரு வார்த்தை என்னிடம் பேசி விடுங்கள் நண்பர்களே. ஒரு சில மணித்துளிகள் நாம் பேசலாம். ஏனென்றால் நான் உங்களின் நண்பனாக, தோழனாக, தோழியாக, மகனாக, மகளாக இருக்க விரும்புகிறேன்.

உங்களின் உணர்வுகளில் சிக்கி வாழ்க்கையைத் தொலைக்க முற்பட்டால், அந்த வாழ்க்கையை எனக்குத் தந்து விடுங்கள் என மன்றாடிக் கேட்டுக் கொள்கிறேன். சித்ராவைப் போல முடிவெடுக்கும் முன்பு ஒரு சில வார்த்தைகள் என்னிடம் எனக்குக் கடனாய் தந்து விடுங்கள் எனக் கேட்டுக் கொள்கிறேன்.

எனது மொபைல் : 96005 77755 (இந்தியா)

* * *

என்றைக்குமே இனி கேட்காத ஒரு பாடலாக மாறிப் போன நடிகை சித்ராவிற்காக எழுதப்பட்டது.