குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Friday, June 17, 2016

நிலம் (19) - பஞ்சமி நிலங்களை வாங்கலாமா?

இன்றைக்கு வெகு முக்கியமான ஒரு விஷயத்தைப் பற்றி விரிவாகப் பார்க்கலாம். சொத்துக்கள் வாங்கும் முன்பு கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் இது. பலரும் இதைக் கவனிப்பதில்லை. ஏனென்றால் இதைப் பற்றிய புரிதலும் விஷயமும் யாருக்கும் தெரிவதில்லை. 

சமீபத்தில் என்னுடைய நண்பர் தன்னுடன் ஒருவரை அழைத்து வந்து அறிமுகப்படுத்தினார். விஷயம் என்னவென்று கேட்டேன். கண்ணீர் விட்டு அழ ஆரம்பித்து விட்டார். சிறிது நேரம் அழட்டும் என்று விட்டு விட்டேன். பின்னர் விஷயத்தைக் கேட்டேன்.

தன் வாழ் நாள் சம்பாத்தியத்தில் அவர் சுமார் 4 ஏக்கர் நிலத்தினை கிரையம் பெற்றிருப்பதாகவும், கிரையம் பெற்று சுவாதீனத்தில் இருந்து வந்த சொத்தின் மீது தற்போது வழக்கு ஏற்பட்டுள்ளதாகவும் சொன்னார். 

“என்ன காரணம்?” என்றேன். 

”என்னவோ பஞ்சமி நிலங்கள் என்கிறார்கள்” என்றார். 

“நான் கிரையம் பெற்ற போது லீகல் ஒப்பீனியன் பார்த்துதான் தான் வாங்கினேன் என்றார்”. 

”வக்கீல் பஞ்சமி நிலங்களை தாழ்த்தப்பட்ட வகுப்பினர் மட்டுமே அனுபவிக்க முடியும் என்றும் வேறு எந்த வகுப்பினரும் பயன்படுத்த முடியாது என்றும் சொல்கிறார்” என்றார். ”என்ன செய்வதென்றே தெரியவில்லை” என்று மீண்டும் கண்ணீர் விட ஆரம்பித்தார்.

அவரிடம் கவலைப்பட வேண்டாம், உங்கள் பணத்தை முழுவதுமாகப் பெற்று விடலாம் எனவும், அதற்கு பல வழிகள் இருக்கின்றன எனவும் சொல்லி சமாதானப்படுத்தினேன். 

”பஞ்சமி நிலங்கள் என்றால் என்ன சார்? விளக்கம் தர முடியுமா?” என்றார்.

”கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம் செய்து என்ன புண்ணியம்?  அது அவர் தவறல்ல, ஏதோ  மாட்டிக் கொண்டார் சரி செய்து கொடுத்து விடலாம்” என்று நினைத்துக் கொண்டேன்.

இனி பஞ்சமி நிலங்கள் என்றால் என்ன என்பது பற்றிப் பார்க்கலாம்.

1981 ஆம் வருடம் செங்கல்பட்டு மாவட்ட கலெக்ட்ராக இருந்த டெரமென் ஹீர் என்பவர் தலித் தாழ்த்தப்பட்ட மக்களின் வெகு மோசமான வாழ்க்கைத் தரத்தினையும், நிலச் சுவான் தார்களால் அவர்கள் கொத்தடிமையாக வாழும் கொடுமையும், தலித் வகுப்பினரை முன்னேறச் செய்வதற்கு ஒரு திட்ட அறிக்கையைத் தயாரித்து பிரிட்டிஷ் அரசுக்கு அனுப்பி வைத்தார். பெரும் நிலக்கிழார்களால் கொத்தடிமையாக்கப்பட்டு பல்வேறு கொடுமைகளை அனுபவித்து வந்த தலித் மக்களின் வாழ்வாதாரத்தினையும், சமூகத்தில் அவர்களுக்கு தகுந்த மரியாதை கிடைப்பதற்காகவும் 1892ம் வருடம் பிரிட்டிஷ் அரசு தாழ்த்தப்பட்ட மக்களுக்கு தமிழகத்தில் சுமார் 12,00,000 ஏக்கர் நிலத்தினை வழங்குவதற்காக டிப்பரஸ்டு கிளாஸ் லேண்ட் ஆக்ட் 1892 (Depressed Class Land Act 1892) பிரிட்டிஷ் பார்லிமெண்டில் சட்டம் கொண்டு வந்தது. இந்த நிலத்தினைத்தான் பஞ்சமி நிலங்கள் என்று  சொல்கிறோம்.

இந்த பஞ்சமி நிலங்களை பத்து ஆண்டுகளுக்கு யாருக்கும் விற்கவோ, லீசுக்கு விடவோ, மாற்றம் செய்யவோ கூடாது. பத்து ஆண்டுகள் கழித்து தலித் வகுப்பினருக்கு மட்டுமே மாற்றம் செய்து கொடுக்கலாம். எந்தக் காரணத்தைக் கொண்டும் வேற்று வகுப்பினருக்கு விற்கவோ, லீசுக்கோ, குத்தகைக்கோ முடியாது. அவ்வாறு செய்தால் அந்த ஒதுக்கீடு ரத்துச் செய்யப்பட்டு அரசு கையகப்படுத்தி விடும் என்று சில கண்டிஷன்கள் அந்தச் சட்டத்தில் இருந்தன. அவ்வாறு திரும்பப் பெறப்படும் நிலத்திற்கு அரசு எந்த வித இழப்பீடும் கொடுக்காது என்பது மேலும் ஒரு முக்கியமான விஷயம்.

இந்த நிலத்தினை வேறு எவரும் வாங்கவோ விற்கவோ முடியாது. ஆனால் என்ன நடக்கிறது? இது பற்றிய விபரங்கள் தெரியாதவர்களைப் பயன்படுத்திப் பத்திரங்களை உருவாக்கி கிரையம் செய்து கொடுத்து விடுகின்றனர். ஒரு சிலர் தெரிந்தே இந்த வேலையில் ஈடுபடுகின்றனர். பெரும்பான்மையான மக்களுக்கு பஞ்சமி நிலங்கள் என்றால் என்னவென்றே தெரியாது. தெரியாத காரணத்தால் பிரச்சினைகளில் மாட்டிக் கொள்கின்றார்கள்.

அதுமட்டுமல்ல ஒரு சில விஷமிகள் போலிப் பத்திரங்களை உருவாக்கி விடுகின்றார்கள். அவ்வளவு எளிதில் கண்டுபிடித்து விட முடியாதவாறு பல்வேறு ஆவணங்களை உருவாக்கி விடுகின்றனர். விளைவு பிரச்சினை வந்து விடுகின்றது.

ஆகவே நண்பர்களே சொத்துக்கள் வாங்கும் முன்பு வெகு கவனமாக ஆராய்ந்து பார்த்து வாங்க வேண்டும் என்பதைக் கவனத்தில் கொள்க.


3 comments:

Unknown said...

பஞ்சமி நிலத்தை முஸ்லிம்கள் வாங்கலாமா? ப்ளீஸ் ஹெல்ப் பண்ணுங்க சார்.

Unknown said...

பஞ்சமி நிலத்தை முஸ்லிம்கள் வாங்கிருந்தால் செல்லுமா?

Unknown said...

Old help me sir, panjami nilaththai en appa 1968 l theriyamal vaangi vittar.ipoluthu antha nilam en peyaril ullathu .naan kalappu thirumanam seithukonden.naan BC Hindu.en manaivi Muslim mathathai sernthaval. Ipoluthu nan ena seivathu. Pls help pannunga sir pls

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.