இந்தியாவில் எத்தனையோ உலகை உலுக்கிய ஊழல்கள் நடைபெற்றுக் கொண்டேதான் இருக்கின்றன. இருப்பினும் இந்தியா முடங்கிப் போய் விடவில்லை. இந்த ஊழல்களில் தமிழர்கள் பங்கு பெற்றிருக்கும் ஊழல்கள் தான் ஆகப் பெரிது. ஒவ்வொரு விஷயத்திலும் தமிழர்கள் தமக்கென்று ஒரு முத்திரைப் பதித்துக் கொண்டே வருகின்றார்கள். ஊழலிலும் அப்படித்தான் முத்திரைகளைப் பதிக்கின்றார்கள். இந்த ஊழல்கள் என்று மட்டுமில்லை மாநில அரசுகள், மாநகராட்சிகள், ஊராட்சிகள், அரசு அலுவலர்கள் என்று அது ஒரு தொடர் இருக்கிறது.
இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு ஆரம்பித்த ஊழல்கள் இதுவரையிலும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. ஜனநாயகம் என்கிற பெயரால் வாக்காளர்களை ஓட்டுப்போட அழைக்கும் அதிகாரங்கள், ஓட்டுப் பெற்று ஜெயித்த பிறகு வாக்காளர்களை வேற்று கிரக வாசிகள் போல நடத்துவதும் தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கின்றன. பொதுமக்களுக்கு சேவை செய்ய இருக்கும் அரசும், ஜனநாயகம் தொடர்பான அத்தனை அமைப்புகளும் சேவை செய்வதாக நடிக்கின்றன.
மக்களுக்கு பணி செய்ய வேண்டுமென்பதற்காக வேலைக்கு அமர்த்தப்பட்ட பணியாளர்கள் மக்கள் எஜமானர்களாக மாறி, யாரால் நம் குடும்பம் வாழ்கிறதோ அவர்களையே மிரட்டி காசு பறிக்கும் கூட்டமாக மாறிக் கொண்டிருப்பதும் நடந்து கொண்டே தான் இருக்கின்றன.
இதை மாற்றுவதற்கு மக்களால் எதுவும் செய்யமுடியாது. ஒவ்வொரு தனிமனிதனுக்கும் பல்வேறு பிரச்சினைகளை அரசியல் உருவாக்கி வைத்திருக்கிறது. அந்தப் பிரச்சினைகளை சமாளிப்பதற்குள் தனி மனிதனின் வாழ்க்கை முடிந்து விடும்.
அரசை தனி மனிதன் கேள்வி கேட்க முடியாதவாறு சட்டங்கள் உருவாக்கப்பட்டிருக்கின்றன. சட்டத்தின் பாதுகாவலர்கள் கேள்வி கேட்பவனை கேனயனாக்கி விடுவார்கள்.
இந்திய அரசியலமைப்பு என்று மட்டுமல்ல உலக அரசியலும் இப்படித்தான் இருக்கின்றன. இதை எதிர்த்துப் போராட்டங்களை நடத்துபவர்களை ஜெயிலில் தூக்கிப் போட்டு விட்டு, கொஞ்ச காலம் முடிந்தவுடன் வெளியில் விட்டு நோபல் பரிசுகளைக் கொடுத்து வீட்டில் உட்கார வைத்து விடுவார்கள்.
இது உலகம் அழியும் வரை தொடர்ந்து கொண்டே தான் இருக்கும். யாராலும் எதையும் மாற்றி விட முடியாது. மாற்றமும் அரசியலில் வரவும் முடியாது. அறுபத்தைந்து ஆண்டுகளாக ஒரு கட்சி இந்தியாவை ஆள்வதுதான் நான் மேலே சொல்வதற்கு சாட்சி. எழுதி வைத்துக் கொள்ளுங்கள், அடுத்த இந்தியப் பிரதமர் காங்கிரஸ் கட்சியிலிருந்து தான் வருவார். பிஜேபி நிச்சயமாக வெற்றி பெறவே பெறாது. இதுதான் ப்ரீ பிளான் (முன்பே திட்டமிடல்). இதற்கு பல்வேறு காரணிகள் உண்டு.
இத்தனையும் தொடர்ந்து நடந்து கொண்டிருக்க ஒரே ஒரு காரணம்தான் உண்டு. அது மக்களின் வரிப்பணம். எது நடந்தாலும் நடக்கவில்லையென்றால் மக்களிடமிருந்து அரசுகள் பெரும் வரிப்பணம் என்றைக்கும் குறைவதே இல்லை. கற்பகதருவாய் கொட்டிக் கொண்டிருக்கும் வரிப்பணத்தை முன்னிருத்தியே கட்சிகள் உருவாகின்றன. ஆட்சிகள் மாறுகின்றன. ஆனால் ஊழல் மட்டும் மாறுவதே இல்லை. அந்தக் கற்பகதருவை அள்ளிடத்தான் ஒவ்வொரு அரசியல் கட்சிகளும் அடித்துக் கொள்கின்றன.
இதை மாற்றிட முடியுமா என்றால் முடியவே முடியாது. மக்களின் வாழ்க்கை யை அவ்வாறு சிக்கலில் கொண்டு வைத்திருக்கின்றது அரசியல். உழைக்கும் மக்களின் ஒவ்வொரு துளி வியர்வையிலும் ஒரு கால் துளி அரசுக்கு வரியாய்ச் செல்கிறது. இந்த வரி எனும் அருவியினால் தான் இந்திய அரசு எந்த வித சுணக்கமும் இன்றி தொடர்ந்து நடைபோடுகிறது. எத்தனையோ ஊழல்கள் நடந்தாலும் நடையில் தளர்ச்சி இல்லை. எந்த ஒரு கட்சியாலும், அமைப்பினாலும் இந்த பிரச்சினையைச் சரி செய்யவே முடியாது. அது நிச்சயம் முடியவே முடியாது. ஆனால் ஊழலில் பங்கு கொள்ளலாம். அதற்கு அர்பணிப்பும் திறமையும் வேண்டும்.
நல்லவனாய் இரு என்கின்றன ஆன்மீகச் சந்தைகள். எண்ணற்ற நூல்கள், நன்னெறியைப் போதிக்கின்றன. ஆனால் அரசியல் தனி மனிதனை திருடனாக இரு என்கிறது. அதுதான் அரசியல் என்கிறது அது.
ஆனால் தர்மம் என்கிற ஒன்று இவ்வுலகில் உண்டு.
* * *
0 comments:
Post a Comment
கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.