குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Monday, July 23, 2012

அம்மாவின் சமையல் எப்படி இருக்கும்?

கோவையின் பிரதான இடத்தில் அமைந்திருக்கும் ஹோட்டல் ஒன்றின் முதலாளி எனது நண்பர். எப்போதாவது அவரைச் சந்திக்கும் நேரத்தில் சுவாரசியமான பல விஷயங்களைச் சொல்வார்.

கோவையில் சனி அல்லது ஞாயிறுகளில் ஹோட்டல்களில் காசு வாங்கிப் போடவும், பில் போடவும் நேரமிருக்காது என்றார். பெரும்பாலான குடும்பங்கள் ஞாயிறுகளில் ஹோட்டல்களில் தான் சாப்பிடுகின்றன என்றார். மூலைக்கு மூலை ஹோட்டல்களாகவே இருப்பதன் மர்மம் எனக்கு அப்போதுதான் பிடிபட்டது.

கோவையின் திருச்சி ரோட்டில் இருக்கும் சாந்தி சோஷியல் சர்வீஸ் கேண்டீனில் ஒரு நாள் சாப்பிடுவோர் எண்ணிக்கை 7000 என்று எழுதி இருந்தது. சுமாராக 10,000 பேருக்கும் மேல் இருப்பார்கள் என்று நினைக்கிறேன். இந்தக் கேண்டீனுக்கு எதிரே இருக்கும் மருந்துக் கடையில் பில் போடுவதற்கு சுமார் ஒரு மணி நேரம் நிற்க வேண்டும். எந்த மருத்துவரிடமும் டோக்கன் இல்லாமல் செல்ல முடியாது. ஹோட்டல்களில் கூட்டம் கூடக் கூட மருத்துவர்களுக்கு வருமானம் கொட்டிக் கொண்டிருக்கும்.

பெற்றோரின் அரவணைப்பும், அன்பும் இல்லாமல் குழந்தைகள் வளர்வது எதிர்கால சமூகத்திற்கு மிகப் பெரும் தீங்கினைத் தரப் போகின்றது. நேற்றைய தினத்தந்தியில் “உஷாரையா உஷாரு” பத்தியில் பணக்கார குடும்பத்தில் பிறந்த பெண் மாணவிகள் சிலர் வகுப்பறையில் தண்ணீருடன் வோட்கா கலந்து குடித்திருக்கின்றார்கள் என்றும், வீட்டில் அப்பா தன் நண்பர்களோடு மது அருந்துவதையும், அவ்வப்போது அம்மாவும் மது அருந்துவதையும் பார்த்துப் பார்த்து, அந்த மாணவிகள் மதுவிற்கு அடிமையாக மாறி குடித்து வந்திருக்கின்றார்கள் என்று எழுதி இருக்கிறது.

சென்னையில் இருந்து போனில் அழைத்த பதிவர் ஒருவர், பெண்கள் அழகாய், மினுமினுக்க, தக்காளியாய் பளபளக்க வொயின் குடிக்கின்றார்கள் என்றுச் சொல்லி விட்டு, முடிவாய் இப்போதைக்கெல்லாம் திருமணம் செய்து கொள்வதை நினைத்தாலே பயமாய் இருக்கிறது என்றார்.

குறவைமீனும், சின்னஞ்சிறிய கெழுத்தி மீனையும் வைத்து, மாங்காய் போட்டு, அம்மியில் அரைத்த மிளகாயுடன், புளிப்பும் சேர எனது அம்மா வைத்த மீன் குழம்பின் சுவையை இதுகாறும் வேறு எந்த ஹோட்டல்களிலும் நான் சாப்பிட்டதே இல்லை. அம்மாவின் அன்போடு தயார் செய்யப்பட்ட உணவின் சுவையை எந்த ஒரு ஹோட்டலும் எப்போதும் தந்து விட முடியாது. 

பசும்பால் தயிரைக் கடைந்து கொண்டிருக்கும் போது பொங்கி வரும் வெண்ணெய் திரளை வழித்து எடுத்து நடு நாக்கில் வைத்து விடும் அம்மாக்கள் அந்தக் கால அம்மாக்கள் எல்லாம் நினைவுகளோடு நினைவுகளாய் பதிந்து  போய் கிடக்கின்றார்கள். இன்றைய அம்மாக்கள் டிவி பெட்டியில் சமையல் நிகழ்ச்சிகளை பார்த்துக் கொண்டு “டோர் டெலிவரி” ஹோட்டல்களில் உணவுகளை ஆர்டர் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

காலங்களுக்கு ஏற்ற உணவு எது, காலையில் என்ன உணவு சிறந்தது, மாலையில் என்ன உணவு நல்லது, எந்தெந்தப் பொருளை எந்தெந்த உணவுடன் சேர்த்துச் சமைக்க வேண்டுமென்பதெல்லாம் இன்றைய அம்மாக்களுக்கு நிச்சயம் தெரிந்திருக்கவே முடியாது. காரணம் உடம்பின் மீதும், உணவின் மீது அக்கறை இன்றி கண்டதைத் தின்று விதி வந்த அன்றைக்குச் சாவோம் என்று பொறுப்பற்று வாழும் வாழ்க்கையை “ நாகரீகம்” என்று நினைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

நாகரீகம் என்பதை உடையிலும், ஒப்புக்கும் பெறாத பாவணைகளிலும், உணவுகளிலும் இருக்கிறது என்று நம்புகிறார்கள் இன்றைய மாந்தர்கள்.

மெக்டொனால்டின் ஒரு வருட வருமானம் 23 பில்லியன் டாலர்கள். உலகிலேயே அதிக அளவு இறைச்சியை பதப்படுத்தி, பிராண்டட் பெயரில் விற்கும் இந்த உணவகத்தின் உணவுகள் எதுவும் உடலுக்கு நல்லதைச் செய்வதில்லை என்று பல இணையதளங்களில் குறிப்புகள் கொட்டிக் கிடக்கின்றன. ஆனால் இன்றைக்கும் இந்த மெக்டொனால்டின் விற்பனை உயர்ந்து கொண்டேதான் இருக்கின்றதே ஒழிய குறையவில்லை.

அம்மாவின் சமையல் எப்படி இருக்கும் என்று இனி வரும் குழந்தைகளுக்குத் தெரியப்போவதில்லை. வளரும் சந்ததிகளுக்கு மெக்டொனால்ட், சரவணபவன்கள் தான் அம்மாக்களாகத் தெரியும். அன்பினைக் கூட நாகரீகத்தின் பெயரால் மாற்றமடைய வைத்த இன்றைய அம்மாக்களின் செயல் மிகவும் வேதனைப்பட வேண்டிய ஒன்றாகும்.

- கோவை எம் தங்கவேல்

4 comments:

கோவை நேரம் said...

கண்டிப்பா...நீங்க சொல்வது சரிதான்..அம்மாவின் கைமணம் எப்போதும் எங்கும் கிடைக்காது...

திண்டுக்கல் தனபாலன் said...

ஒரு நாள் சாப்பிடுவோர் எண்ணிக்கை 10,000 பேருக்கும் மேலேயா ?

நீங்கள் சொல்வது அனைத்தும் உண்மை தான்...
மெகா தொடர்கள் பல அம்மாக்களின் வாழ்க்கையே கெடுக்கிறது... நன்றி...

Avargal Unmaigal said...

நல்லவேளை நாங்கள் இந்தியாவில் வசிக்கவில்லை இப்படி கண்ட கண்ட ஹோட்டல்களில் சாப்பிட்டு உடம்பை கெடுத்துகொள்ள. எங்க வீட்டில் பாரம்பரிய தமிழக சமையல்தான்...

உங்கள் பதிவு மிகவும் அருமை...பாராட்டுக்கள்

Thangavel Manickadevar said...

தளத்திற்கு வந்தமைக்கும், கருத்துக்கும் நன்றி நட்புக்களே

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.