குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, July 26, 2012

தமிழ்நாட்டில் நிலநடுக்கம் வருமா?


காமெடியில் பல வகை உண்டு. அதில் ஒரு காமெடி சாமியார்கள் என்போர் செய்வது. ஆன்மீகத்தில் பற்றும், தினமும் தியானம் செய்வதையே வாழ்க்கையாக வைத்திருக்கும் சாமியார் ஒருவரிடம் பேசிக் கொண்டிருந்தேன். எனக்கு மயக்கம் வராத குறைதான். 

இப்போதெல்லாம் டிவிடி, பென் டிரைவ், சிடி, நெட் என்றாலே அலறி அடித்து ஓடும் பல சாமியார்களை நாம் பார்த்துக் கொண்டிருக்கிறோம். அந்த அளவுக்கு சில சாமியார்கள் ஆன்மீகத் தொண்டுகளை செய்து கொண்டிருக்கின்றார்கள்.

அதுமட்டுமல்ல ஆன்மீகத்தையே வியாபாரமாய் செய்து வரும் பல நிறுவன சாமியார்களையும் பார்த்து வருகிறோம். சாமியார் ஒருவரின் கோவில் கும்பாபிஷேகத்தில் கலந்து கொள்ள, சாமியாரின் அன்பர் ஒருவர் 10,000 கேட்டார். எதற்கெடுத்தாலும் கட்டணம், எதையெடுத்தாலும் காசு என்று இன்றைக்கு கோவில்கள் எல்லாம் காசு வசூல் செய்யும் கணக்கப்பிள்ளை மடமாக மாறிக் கொண்டிருக்கின்றன. பத்தாயிரம் கொடுத்து கும்பாபிஷேகத்தில் கலந்து கொண்டால் தான் கடவுள் அனுக்கிரகம் கிடைக்கும் என்றுச் சொல்கின்றார்கள். 

காசு கொடுத்தால் தான் கடவுளையே தரிசிக்க முடியும் என்கிற கலிகாலத்தில் வசித்துக் கொண்டிருக்கும் போது,  நம் சாமியாரையெல்லாம் நம்பி விட மனது இடம் கொடுக்கவில்லை.

இருப்பினும் அவர் சொன்ன ஒரு விஷயம் தான் மனதை போட்டு அறுக்கிறது. விரைவில் தமிழகத்தில் நில நடுக்கம் வரப்போகிறது என்றார். கேட்ட எனக்கு திக்கென்றது. என்ன சாமி கெட்டதாய்ச் சொல்லிக் கொண்டிருக்கின்றீர்களே என்று எரிந்து விழுந்தேன். அதற்கு அவர் ஒரு மோனப் புன்னகையை பரிசாய் அளித்தார்.

அவனவன் கோடி கோடியாய் கொட்டி மாடி மாடியாய் கட்டி வைத்திருக்கின்றார்களே, அப்படி நில நடுக்கம் வந்தால் அய்யோ நினைத்தாலே திகீரென்றது. சாமியாரை எரிச்சலுடன் பார்த்து விட்டு கொடூரமாய் முறைத்து விட்டு வந்து விட்டேன். போதாதற்கு இத்தனை நாளுக்குள் என்று வேறுச் சொல்லி டெரரைக் கிளப்பினார்.

இப்படி ஒரு அனுபவம் எனக்கு. பார்ப்போம் சாமியார் சொன்னது நடக்குமா என்பதை. ஆனால் மனசோ அது நடக்கவே கூடாது என்று வேண்டுகிறது.

திருட்டுச் சம்பவம் நடந்த பிறகு போலீஸ் பிடித்து உள்ளே போட்ட பிறகு தான் திருடர்களை, ஊழல்வாதிகளை, கொலைகாரர்களைப் பற்றித் தெரிந்து கொள்வோம். ஆனால் உண்மையில் கொலைகாரர்களாய் சிலர் பவனி வருகின்றார்கள். அவர்கள் யார் என்று தானே கேட்கின்றீர்கள்?

நேற்றைக்கு முதல் நாள் இரவு எட்டு மணியளவில் நானும், மனையாளும் ஒரு வேலை நிமித்தமாய் டவுன்கால் சென்று விட்டு திரும்பிக் கொண்டிருந்தோம். மரக்கடை பக்கமாய் வந்து கொண்டிருக்கும் போது எதிரே அரசு பஸ் ஒன்று வந்தது. டிரைவர் லைட்டை டிம் செய்து பலமுறை போட்டு சிக்னெல் காட்டிக் கொண்டே வர, அந்த டவுன் பஸ் டிரைவர் லைட்டைப் போட்டா எனக்கென்ன ஆச்சு என்பது போல, பஸ்ஸைக் கொண்டு வந்து கோவில் முனையில் நிறுத்திக் கொண்டு விட்டார். 

எனது கார் டிரைவர் குதி குதியென்று குதித்தார். அந்த பஸ் டிரைவரோ எனக்கென்ன ஆச்சு என்பது போல நின்றிருந்தார். பஸ்ஸுக்குப் பின்னே இருபது  கார்கள், பைக் என்று டிராபிக் ஜாம் ஆகி விட்டது. பத்து நிமிடம் ஆகிவிட்டது காரை பின்னால் எடுத்து பாதை விட்டு வெளியில் வர.

திமிர் தனம் என்றால் அரசு டிரைவர்களில் சிலருக்கு ஓவராக இருக்கிறது. இப்படிப்பட்ட ஆசாமிகளால் பைக்கில் செல்லும் பலர் பரலோக பிராப்தியை அடைந்து விடுகின்றார்கள். எதிர்பாராத ஆக்சிடென்ட் என்றுச் சொல்லி இப்படியான கொலைகார கம்மனாட்டிகள் தப்பி விடுகின்றார்கள். 

அதுமட்டுமா, ஆக்சிடெண்ட் கிளைம் என்கிற விஷயத்தில் ஒவ்வொரு மாவடத்திலும் சில குறிப்பிட்ட வக்கீல்கள் செய்யும் செயல்களை இந்தியன் எக்ஸ்பிரஸ் கட்டம் கட்டி இருக்கிறது. செத்துப் போன பிணத்தினையும் வைத்துக் காசு சம்பாதிக்கு ஜெகஜ்ஜாலக் கில்லாடிகள் இந்த வக்கீல்கள். இன்ஸூரன்ஸ் கிளைமிற்கு டாக்டருக்கு காசு, வக்கீலுக்கு காசு, ஏஜென்சியை சரிக்கட்ட காசு என்று அனைத்தையும் வக்கீலே செய்து கொண்டு உண்மையில் கிடைக்க வேண்டிய இன்ஸூரன்ஸ் அமவுண்டில் பாதியைக் கொடுத்து விட்டு, மீதியை ஆட்டயப்போடும் அகில உலக கில்லாடி வக்கீல்கள் இந்தியாவெங்கும் இருந்து கொண்டுதானிருக்கின்றார்கள். கரூரில் ஒரு வக்கீல் மாட்டினார். அதன்பிறகு என்ன ஆனதோ தெரியவில்லை.

மனிதனுக்கு மனிதனே எதிரியாய் நிற்கின்றார்கள். மனிதனை வழி நடத்த வேண்டிய ஆன்மீகமோ “காசைக் கொடு காசைக் கொடு” என்று கொள்ளை அடிக்கிறது. 

இது கலிகாலம் என்பதைத் தான் இது போன்ற சம்பவங்கள் காட்டுகின்றனவோ தெரியவில்லை.

- கோவை எம் தங்கவேல்





1 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

கலி காலம் தான் நண்பரே...
எது வேண்டுமென்றாலும் நடக்கலாம் - ஏமாறுபவர்கள் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் இருப்பார்கள்.

நன்றி...

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.