குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, May 1, 2012

யமுனாவின் மீதான மோகம் தீரவில்லை



கிட்டத்தட்ட 20 வருடங்கள் ஆகி விட்டன. இப்போது சந்தர்ப்பவசமாய் யமுனா என்னிடம் சிக்கிக் கொண்டாள்.

எங்களூர் பட்டிக்காட்டு கிராமம். படிப்பறிவு கொஞ்சம் கம்மியாக இருந்த கால கட்டத்தில் பிறந்த காரணத்தால் புத்தக வாசனை பள்ளிக்கூடத்தின் மூலமாகவே கிடைத்தது. மூன்றாவது படிக்கும் போது என்று நம்புகிறேன், ராணி காமிக்ஸ் அறிமுகமாகி அன்றிலிருந்து காமிக்ஸ்ஸின் ரகசிய ரசிகனானேன். மாமாவோ பாடப்புத்தகத்தை தவிர வேறு புத்தகத்தைக் கையில் பார்த்து விட்டார் என்றால் மண்டையில் அழுந்த ஒரு குட்டுப் போடுவார்.  மாமாவின் குட்டுக்குப் பயந்து மர பீரோவின் அடியில் ஒளிந்து கொண்டிருக்கும் சில கிழிந்து போன, கசங்கிப் போன காமிக்ஸ் புத்தகங்கள். எல்லாம் தெரிந்த மாமா இதுவரையிலும் மரபீரோவின் அடியில் எதையும் தேடுவதே இல்லை. ஏன் என்று எனக்கு இன்றைக்கும் புரியவில்லை.

இப்படியான ஹிட்லர் வீட்டில், அக்கா மூலம் என்றோ ஒரு நாள் அறிமுகமானது மாலைமதி. அந்தக் கதை இன்றைக்கும் என் மனதை விட்டு அகலவில்லை. ஏன் என்று தெரியவில்லை. பழைய புத்தக கடைகளைப் பார்க்கும் போதெல்லாம் அந்த மாலைமதி கிடைத்து விடுமா என்ற நப்பாசையில் தேடிப் பார்ப்பேன். கிடைக்காது. செல்லம்மாவின் சமையல் குறிப்புகளாவது கிடைக்குமா என்று கூட பக்கங்களில் படருவேன். செல்லம்மா கால ஓட்டத்தில் காணாமல் போகும் குழந்தைப் பருவ நினைவுகள் போல காணாமல் போய்விட்டார்.

தொடர்ந்து எழுத்தாளர் சுபாவின் நாவல்களும், அட்டைப்படத்தின் மூலம் கேவி ஆனந்த்தும் எனக்கு தெரிய வந்தனர். சுபாவின் நாவல்களின் அட்டைப்படங்கள் ஒவ்வொன்றும் படு அசத்தலாய் இருக்கும். ஆரம்ப கட்டம் அல்லவா? பார்க்கும் புத்தகங்கள் எல்லாம் திகிலைக் கிளப்பிக் கொண்டிருந்தன. சுபாவின் தூண்டில் முள் நாவல் என்னை கலவரப்படுத்திய ஒன்று. அவரிடமிருந்து என் கடிதத்திற்கு ஒரு பதில் கடிதம் கூட வந்தது. அதன் பிறகு அவர் எழுத்தின் மீதான வாசிப்பு எனக்கு திகட்ட ஆரம்பித்தது. நரேன், வைஜெயந்தியின் உரையாடல்கள் அலுப்பினைத் தர ஆரம்பித்தது. நரேனின் சாகசங்கள் வயதானது போல தோன்றின. பிகேபியின் பரத், சுசீலா கூட அப்படித்தான் ஆகிப் போனார்கள்.

தொடர்ந்த என் வாசிப்பு, கல்லூரிப் படிப்பின் போது, ஜானகி ராமனின் மோகமுள் புத்தகத்தில் வந்து நின்றது. பூண்டிக் கல்லூரியின் நூலகருக்கு எனக்கு பதில் சொல்லிச் சொல்லியே சலித்து இருக்கும். மூன்று வருடப் படிப்பின் போது ஜானகிராமனின் மோகமுள் என்னிடம் சிக்கவே இல்லை. ஆனால் மோகமுள்ளின் மீதான பிறரின் பார்வைகள் மிகப் பெரும் ரகசிய ஆர்வத்தை அதன் மீது ஏற்படுத்திக் கொண்டே இருந்தன. குமுதத்தில் வெளி வந்த மோகமுள் திரைப்படத்தின் கதா நாயகி அர்ச்சனா ஜோக்லேகர் எனது டைரியின் பக்கத்தில் நிரந்தரமாய் படமாக ஒட்டிக் கொண்டாள். அவளைப் பார்க்காது டைரியில் ஒரு எழுத்துக் கூட எழுத மாட்டேன்.

வாழ்க்கைச் சூழலின் மாறுபாட்டினால் கல்லூரிப் படிப்பு முடிந்து கல்யாணம் முடிந்து ஓடிக் கொண்டிருந்த போது, மோகமுள் மனதின் அடியாளத்தில் புதைந்து போய்க் கிடந்தது.

பவர் கட்டின் பிரதிபலனாக பல நூல்களைப் படிக்க வேண்டிய சூழலுக்கு ஆட்பட்டேன். வீட்டுக்கு அருகில் இருந்த நூலகத்தில் உறுப்பினராய்ச் சேர்ந்து புத்தக அலமாரியை அணுகிய போது மனதுக்குள் ஒளிந்து கிடந்த “மோகமுள்” மெதுவாக வெளிவந்தது. நூலகரிடம் விசாரித்த போது இல்லையென்ற பதில் மோகமுள்ளின் மீதான ஆவலை மேலும் அதிகப்படுத்தியது.

இப்படியான தேடலில் போன சனிக்கிழமை அன்று ஓரிடத்தில் பிடித்தே விட்டேன் மோகமுள்ளை. யமுனாவின் உள்ளம் கொஞ்சம் கொஞ்சமாய் என்னை தழுவிக் கொள்ள, திரைப்பட மோகமுள் யமுனாவிற்கும் ஜானகிராமனின் மோகமுள் யமுனாவிற்கும் எந்த வித தொடர்பும் இன்றி இருப்பதைக் கண்டு மனது அதிர்ந்தது.

ஜானகி ராமனின் யமுனா ஒரு முழு நிலவு(?). அவளைத் தரிசித்துக் கொண்டிருக்கிறேன். 20 வருட ரகசியப் போராட்டம் ஒரு வழியாக முடிவுக்கு வந்து விட்டது.

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்


குறிப்பு : மோகமுள் திரைப்பட கதா நாயகி அர்ச்சனா ஜோக்லேகர் ஒரு கதக் நடன மாது. அவரின் வெப்சைட்டை சமீபத்தில் பார்க்க நேர்ந்தது. இதோ அவரின் வெப்சைட் முகவரி.







5 comments:

துளசி கோபால் said...

மோகமுள் எனக்கு இதுவரை கைவரலை:(

ஜானகிராமனின் படைப்புகள் முழுவதும் என்று வாங்கிவந்த ரெண்டு தொகுதிகளில் முள் இல்லவே இல்லை:(

நேரம் வரலைன்னுதான் நினைச்சுக்கணும்.

Thangavel Manickam said...

யமுனாவின் பாத்திரப்படைப்பு வெகு அற்புதமாய் இருக்கிறது தோழி. நீங்கள் அவசியம் படித்துப் பாருங்கள் !

VELAN said...

மோகமுள் ஒரு மகா அனுபவம்.

அனுபவித்தவற்கே அது தெரியும்.

VELAN said...

நேற்று மோகமுள்ளை பற்றி சிலாகித்து பேசி கொண்டிருந்தேன் சக அலுவலர்களிடம். இன்று உங்கள் பதிவு பார்த்தேன்.

உங்களை போன்றே எனக்கும் மோகமுள் நூலகத்தில் கிடைக்கவில்லை .

பல பொய் சொல்லி., கடன் வாங்கி ரூ. 130 தேற்றி மதுரை இலக்கிய பண்ணை போய் (1 to 4 lunch break )நான்கு மணிநேரம் காத்திருந்து வாங்கி....



மோகமுள் ஒரு மகா அனுபவம்.

அனுபவித்தவற்கே அது தெரியும்.

Unknown said...

மோகமுள் ஒரு மகா அனுபவம்.
அனுபவித்தவர்க்கே அது தெரியும்.
அனுபவித்தவர்களில் நானும் ஒருவன்!

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.