தஞ்சாவூர் மாவட்டத்தின் மேற்கு ஆரம்ப எல்லையிலும், புதுக்கோட்டை மாவட்டத்தின் கிழக்கு எல்லையின் ஆரம்பத்திலும் இருக்கும் ஊர்தான் ஆவணம் கைகாட்டி. அம்மாவின் பிறந்தகம். குழந்தைப் பருவத்திலிருந்து கல்லூரி வயது வரை ஆவணத்தில் தாய் மாமன் வீட்டில் தான் வளர்ந்து வந்தேன். தாய்மாமா அருணாசலத்தின் மீசையைப் பார்த்தாலே ஒன்றுக்கு போய் விடும். தேவர்மகன் கமலஹாசன் மீசை வைத்திருப்பார். ஆவணத்துப் பன்னண்டாக்குளத்தில் மாமா குளிக்கச் சென்றார் என்றால் குளக்கரையே சோப்பு நுரையால் அதகளப்படும். மாமா தலையில் ஷாம்பூவாய் போட்டு தலைமுடி கொட்டிப் போனதுதான் மிச்சம். ஆனால் மீசை மட்டும் எமகிங்கரர் போல வைத்திருப்பார். மீசைக்கென்று தனியாக சீப்பு வேறு. காவிரி ஆற்றின் கிழக்குப் புறமாய் அகண்டு போய் கிடக்கும் இந்தக் குளம். ஏன் பண்ணண்டாக்குளம் என்று பெயர் வந்தது என்று தெரியவில்லை. விசாரிக்கணும். குளத்தின் மேற்குப் புரத்தில் பலவகை மரங்களும், கிழக்குப் புறமாய் வயல்வெளிகளும், தெற்குப் பக்கமாய் மாயன்பெருமாள் கோவிலுமாய் வடிவமற்று இந்தக் குளம் இருக்கும். தண்ணீர் நிரம்பி இருக்கையில் கடல் போல காட்சியளிக்கும்.
இன்றைக்கும் நினைவில் இருக்கிறது. ஏதோ ஒரு தினத்தில் சைக்கிளில் குளிக்க அழைத்து சென்றிருந்தார். தேய்த்து தேய்த்து அரை மணி நேரம் எனது கைகால்கள் எல்லாம் சிவந்து போயின. குளிக்க வந்த குத்தூசு ராவுத்தர், "அருணாலம் விடுடா பய பயந்துறப்போறான்" என்றுச் சொல்ல அதன் பிறகு அரைகுறை மனதோடு விட்டார். அதுதான் அவர் கூட கடைசியாகக் குளிக்க போனது. சொரியும் சொரியில் உடம்பே புண்ணாய்ப் போய் விடும்.
போன வாரம் மாமா போன் செய்திருந்தார். ’பேரன் பேரன்னு தூக்கத்தில் புலம்பிக் கொண்டிருக்கிறது அக்கா, பேரன் நாட்டுக் கோழி வேணும்னு கேட்டானாம், பத்து பதினைந்து கோழிகள் வீடு முழுக்க திரிந்து கொண்டிருக்கிறது. அதைப் பார்த்து, பேரன் வந்துட்டானா உன் கழுத்தைப் பிடிச்சு திருகிறுவேன்’ என்று தானா பேசிக் கொண்டிருக்கிறது என்றார். ’உடம்புக்கு வேற முடியவில்லை’ என்றுச் சொன்னார். ’உடனே பையனை அனுப்பி வை’ என்று கேட்டுக்கொண்டார். மறுநாள் மாலையில் அப்பத்தாவிடம் சென்று விட்டான் பையன். அவ்வளவுதான். உடம்பு முடியாமல் படுத்துக் கிடந்த அம்மா எழுந்து கொண்டாராம்.
கோழிகளின் கழுத்து திருகப்பட்டு குழம்பு, வறுவல்கள் ஆனது. மீன், நண்டு, இறால் என்று ஒரே அதகளம். தோட்டத்தில் மாம்பழம், நொங்கு, இளநீர், பலாப்பழம் என்று அடுத்தடுத்த மேட்டர்கள். செம்மறி ஆட்டு ஈரல் கறிக்குழம்பானது. ஆட்டுக்கால் பாயாவானது. கறி வறுவல் ஆனது. பையனும் பெண்ணும் ஆட்டம் பாட்டம் கொண்டாட்டமாய் ஆனந்தப்பட்டார்கள். அடிக்கடி போன் செய்யும் எனது பெண்ணிடமிருந்து ஒரு அழைப்பும் வரவில்லை. பெண் பிள்ளைகள் அப்படித்தான் இருப்பார்கள் போல. இருபது வருடம் பெத்து வளர்த்த பெற்றோர்களை விட்டு விட்டு ஒரு வருடமோ இரண்டு வருடமோ பழகும் பையனோடு திருமணம் செய்துகொண்டு போய் விடுகின்றார்கள் சில பெண்கள்(அடியேனின் கதை). எதிர் காலத்தில் அரேஞ்ச்டு மேரேஜ் இருக்காது என்றே நினைக்கிறேன். இது பற்றி எனது நண்பரின் அனுபவம் ஒன்று இருக்கிறது. அதை வேறு இடத்தில் சொல்கிறேன்.
கோவையில் அடியேனோ காலையில் முட்டைக்கோஸ் பொறியல், சாம்பார், மணத்தக்காளி வற்றல் குழம்பு, சாதம், கீரை என்று வியர்த்து விறுவிறுத்து சமையலறையில் கிடந்தேன். இரவில் தோசையும் ஏதாவதொரு சட்னியும். காலையில் வைக்கும் குழம்பு, பொறியல்களை மதியம் சூடு செய்து கொள்ள வேண்டும். இடையில் க்ரீன் டீ வேறு போட்டுக் கொள்ள வேண்டும். வீடு துடைத்து, போட்டிருக்கும் துணிகளைத் துவைத்துக் கொண்டு மேல் மூச்சு கீழ் மூச்சு வாங்கிக் கொண்டிருந்தேன்.
சமைக்கும் போது ஒரு ஸ்பெஷல் துவையல் செய்தேன். மிக நன்றாக இருந்தது. ஸீரோ பெர்சண்டேஜ் ஆயில் துவையல் அது. பேச்சிலர்ஸ்ஸுக்கு ஏற்றது. தனியாக இருக்கும் கணவன்களுக்கும் ஏற்றது. முயற்சித்துப் பாருங்களேன்.
கொஞ்சம் தேங்காய் துறுவல்
இரண்டு மேஜைக்கரண்டி துவரம் பருப்பு
இரண்டு மேஜைக்கரண்டி கடலைப் பருப்பு
ஒரு ஸ்பூன் பொட்டுக்கடலை
ஆறேழு புதினா தழைகள்
கொஞ்சூண்டு மல்லித்தழை
கொஞ்சூண்டு கருவேப்பிலை
ஒரே ஒரு பூண்டு
துளியூண்டு பெருங்காயம்
கொஞ்சூண்டு உப்பு
எடுத்துக்கொண்டு துவரம் பருப்பு, கடலைப்பருப்பு, பெருங்காயத்தை (கட்டிப் பெருங்காயம் நல்லது) எண்ணெய் விடாமல் சிவக்க வறுத்தேன். மிக்ஸியில் அனைத்தையும் சேர்த்து கொரகொரப்பாய் அல்லாது கொஞ்சம் நைஸாக அரைத்தேன். வழித்தெடுக்கும் போது கமகமவென மணம் வீசியது. தேவையான உப்பைச் சேர்த்துக் கொண்டேன்.
சுடுசாதத்தில் மோர் விட்டு, சைடிஸ்ஸிற்கு இந்தத் துவையல். சாப்பிட்டுப் பாருங்கள். அமிர்தம்.
சுடுசாதத்தில் பசு மோர் விட்டால் கமகமவென மணக்கும். சிறுவயதில் அம்மா கொத்தரவங்காய் வற்றல், சோற்று வடகம், மோர் மிளகாய் வற்றல், ஆதண்டங்காய் வற்றல் பொறித்து தருவார்கள். ஒரு தட்டுச் சோறு சாப்பிடுவேன்.
ஆமாம், ஆதண்டங்காய் வற்றல் சாப்பிட்டு இருக்கின்றீர்கள் தானே? கோவையில் ஏதோ ஒரு பழமுதிர் நிலையத்தில் கிடைக்கிறது என்றார்கள். எங்கே என்று தெரியவில்லை. செலரி வாங்கலாம் என்று பார்க்கிறேன். இதுவரை அகப்படவில்லை. கோவையில் செலரி கிடைக்கும் இடம் என்று தெரிந்தவர்கள் முடிந்தால் சொல்லுங்கள்.
பையனும் பெண்ணும் சந்தோஷமாய் இருக்கின்றார்கள், அம்மா சந்தோஷமாய் இருக்கிறார் என்று அறிந்து கொண்டேன். மனதுக்கு இதமாய் இருந்தது.
இதற்கிடையில் அங்கு பையனால் பிரச்சினை ஆரம்பித்து விட்டது. போன் வந்தது. ”யார் சொன்னாலும் கேட்க மாட்டேன்” என்கிறான் என்றார் மனையாள். ”அவனிடம் போனைக் கொடு” என்றேன்.
“அப்பா, நான் இப்போதே கோயமுத்தூர் வரணும்” என்றான் பையன்.
- விரைவில் தொடரும்
ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்
1 comments:
அனுபவங்கள் தொடரட்டும் !
Post a Comment
கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.