குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, October 22, 2008

ஊட்டி சென்று வந்த கதை - 2

எனக்கு மக்களைப் பற்றியும் அவர்களின் பார்வைகள் பற்றியும் கொஞ்சம் கூட கவலை இல்லை. காசே இல்லை என்றால் பிச்சை எடுக்கிறான் என்பார்கள். காசு பணம் வந்தால் கொள்ளை அடிக்கிறான் என்பார்கள். இவர்களின் பார்வை குருட்டுப் பூனை விட்டத்தில் பாய்ந்த கதை போல இருக்கும். இந்த மக்களால் நான் பட்ட வேதனை கொஞ்சம் நஞ்சம் அல்ல. பள்ளியில் படித்த போது முதல் மார்க் வாங்குவேன். எனக்கும் என் மச்சானுக்கும் தான் போட்டி. மாலையில் டியூசன் முடித்து மூன்று சக்கர வண்டியில் முக்கி முனகியபடி வருவேன். அந்த நேரம் பார்த்து கடையில் வெறும் வாய் மெல்ல வருபவர்கள், ”ஏண்டா, உன் மாமனை கடை கன்னி வச்சுத் தரச்சொல்லி சம்பாதிக்கலாம்ல. எதுக்குடா, எங்க பையனுவ படிப்பையும் சேர்த்துக் கெடுக்கிறே” என்பார்கள். இவர்கள் எல்லாம் என்மீது கோபம் கொண்டவர்கள். இவர்களின் பையன்கள் முதல் மார்க் வாங்க முடியவில்லை என்று தனக்குள் கருவிக் கொண்டு சொல்லால் குளவியாய் கொட்டும் உன்மத்தர்கள். மாமனும், மச்சானுமே முதல் மார்க்கும் இரண்டாம் மார்க்கும் எடுத்தா நம்ம பயலுக எப்படி முதல் மார்க்கு எடுக்கிறது என்ற ஏக்கம். இவர்களின் கிண்டல் பேச்சைக் கேட்டதும் எனக்குள் வன்மம் எழும். முறைத்து விட்டு இன்னும் வேகமாக சைக்கிளைச் சுற்றுவேன்.




கல்லூரியில் படித்த போது நடந்த நிகழ்ச்சி. எங்கள் ஊரிலிருந்து கல்லூரிக்குச் செல்ல மூன்று பஸ் மாற வேண்டும். பட்டுக்கோட்டை பஸ் ஸ்டாண்டில் தஞ்சாவூர் செல்லும் பஸ், பஸ் ஸ்டாண்டின் ஆரம்பத்தில் நிற்கும். பஸ்ஸிலிருந்து இறங்கி எச்சிலும், கோழையும் துப்பி காய்ந்து கிடக்கும் தரையில் கைகளை ஊன்றிக் கொண்டு கால்களை இழுத்துக் கொண்டு வேர்த்து விறுவிறுத்து பஸ்ஸில் ஏறினேன். கண்டக்டர் என்னைப் பார்த்ததும், ”டேய் உனக்கு அறிவில்லை. இதே எழவா போச்சு. வேற பஸ்ஸைப் பாரு” என்றார். கண்டக்டரை கர்ண கடூரமாக முறைத்தேன். அதே சமயத்தில் ஒரு முக்காடு போட்ட முஸ்லிம் பெண்மணி ஒருவர் 25 பைசா காசை கையில் வைத்தார். அவர்களை என்னதான் செய்வது ? அவர்களைப் பொறுத்த வரை அது உதவி. ஆனால் அது எனக்கு என் தன்மானத்துக்கு விடப்படும் சவால். அந்த அம்மாவிடமே காசை திரும்பக் கொடுத்து வேண்டாம் என்று மறுத்தேன். அது என் முகத்தையே உற்று உற்றுப் பார்த்தபடி வந்தது. கண்டக்டர் அருகில் வந்து மன்னிக்கவும் என்றார். மன்னிப்பாம் மன்னிப்பு. என்னாங்கடா ஒருத்தனை கேலி பண்ணி அவனிதயத்தை குத்தி கிழித்து விட்டு மன்னிப்பாம். புண்ணாக்கு. இவனுகளை நிக்க வச்சு பழுக்க காய்ச்சிய கடப்பாரையை குண்டியில சொருகனும் போல வன்மம் வரும். ஒரு நிமிடம் நிதானித்திருந்தால் வித்தியாசம் தெரிந்திருக்கும். ஆனால் அதைச் செய்யக்கூட திராணியில்லாதவர்கள். கொலை செஞ்சா அந்த நிமிடத்தோடு வலியும் போகும் உயிரும் போகும். ஆனால் இதயத்தைக் கிழித்தால் சாகும் வரை அல்லவா அந்த வலி இருக்கும்.

இதையாவது ஒரு வழியா மன்னிக்கலாம். ஆனால் இரண்டு வருடத்திற்கு முன்பு நடந்த நிகழ்ச்சி ஒன்று இருக்கிறதே ரத்தம் கொதிக்கும். மிகப் பெரிய ஹோட்டலில் மூன்று நாள் வாசம். நானும் நண்பரும் ஒரு பெரிய பிசினஸ் சம்பந்தமாக வந்து பேச்சு வார்த்தையெல்லாம் முடித்து விட்டு ஊருக்கு கிளம்ப பஸ் ஸ்டாண்டில் பத்து லட்சரூபாய் காரில் வந்து இறங்கினோம். என்னை இறக்கி விட்டவர் மிகப் பெரிய கோடீஸ்வரர். பஸ்ஸில் ஏற இரண்டு ஸ்டெப் எடுத்து வைக்க வேண்டும். அதற்குள்ளாக காரில் வந்த ஒரு மகாத்மா ஒரு ரூபாய் காசை என் மீது விட்டெறிந்தார். எனக்கு அது சகஜமான நிகழ்ச்சி. என் நண்பருக்கோ கோபம். காசை கையில் எடுத்துக் கொண்டு ஸ்டாப் என்று கத்தினார். கார்காரர் என்னவோ ஏதோவென்று நிறுத்த அவரிடம் சென்ற என் நண்பர், “ஏன்யா அவர் உன்னிடம் காசா கேட்டார்” என்று சொல்லி முறைத்து விட்டு வந்தார். கார்காரர் ”சாரி” கேட்டார். என் நண்பருக்கு படபடப்பு அடங்க வெகு நேரமானது.

இப்படிப்பட்ட மனிதர்களால் சில நேரங்களில் தன்மானம் கிழித்தெறியப்படும் போது உள்ளுக்குள் சமூகத்தின் மீது வன்மம் பற்றி எரியும். அது தவறு என்று இப்போதைய மனநிலை சொல்கிறது. ஆனால் அந்த நேரத்தில் எழும் மனநிலை அதை உணருமா ? கொதிக்கும். இப்போது நான் எவரின் மீதும் வன்மம் கொள்வதில்லை. காரணம் வாழ்க்கை. எனக்குள் இருக்கும் வன்மம் இன்று ஆக்கபூர்வமாக செயல்படுகிறது. வாழ்க்கை என்பது கொடுத்துப் பெறுவது. மகிழ்ச்சியைக் கொடுத்தால் மகிழ்ச்சியைப் பெறலாம். துன்பத்தைக் கொடுத்தால் துன்பத்தைப் பெறலாம். இது தான் மனித வாழ்வின் அடி நாதம். ஆனால் யாரும் அதை உணருவதாய் இல்லை. அதைப் பற்றி எனக்கும் கவலையும் இல்லை.

கதை எங்கேயோ சென்று விட்டது. என்ன செய்வது சில நேரங்களில் இப்படியும் ஆகிவிடும். சாலை ரிப்பேர் செய்யப்படுகிறது மாற்று வழியில் செல்லுங்கள் என்ற போர்டினைப் பார்த்து மாற்று வழி மூலமாக சேருமிடம் போவோமில்லையா அதைப் போல இதை எடுத்துக் கொள்ளுங்கள்.

வெகு ஆழமான பகுதி. ஓரத்தில் மீன்கள் துள்ளிக் குதித்தன. பார்க்கும் போது பரவசமாய் இருந்தது. என் இதயமே துள்ளிக் குதித்ததாய் கற்பனை கரைபுரண்டோடியது. தம்பி “அண்ணே, மான் பாரு “ என்றான். பார்த்தேன். சிறையில் மான். வாழ்க்கைக்குள் மனிதன். இரண்டும் பொறுந்தி வருவதாய் தோன்றியது.




இயற்கையைச் சுற்றிப் பார்க்க வந்து விட்டு, புகைப்படமாய் எடுத்துக் கொண்டிருந்தார்கள்.

தொடரும்..................

1 comments:

Ramesh said...

This is the post that influenced me to write this கவிதை!

பதிவுகளும் பாதைகளும்

Thank you Thangavel.

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.