குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, September 24, 2008

ஆத்துக்குள்ளே...

பத்தாவது படித்துக் கொண்டிருந்த போது ஒரு நாள். நானும் என் சின்னம்மாவின் பையனும் மாலையில் ஆற்றுக்கு குளிக்கச் சென்றோம்.
அன்று பார்த்து, ஆற்றில் தண்ணீரை நிறுத்தி விட்டிருந்தார்கள்.

சரின்னு குளத்தில குளிக்கலாம்டான்னு சொல்லிகிட்டு ஆற்றின் படியில் உட்கார்ந்தேன். ஆற்றில் அங்கங்கே தண்ணீர் குளம்போல கிடந்தது. தண்ணிக்குள் எதுவோ கிடப்பதுபோல தோன்ற டேய் அங்கே பாருடா தண்ணிக்குள்ளே என்னமோ கிடக்குன்னு தம்பிக்கிட்டே சொல்ல,
அண்ணே பாம்பா இருக்கப்போவுதுன்னு சொன்னான். பாம்பு தண்ணிக்குள்ளே என்னடா பன்னும். வேற என்னமோடான்னு சொல்ல, இருவரும் ஆற்றுக்குள் இறங்கினோம்.

சற்றுத் தொலைவிலேயே நின்று கொண்டு உத்து உத்துப் பாத்துக்கிட்டு இருக்கும்போது மீனு ஒன்னு துள்ளி விழுந்துச்சு. பாலு(தம்பி பெயர்) என்னன்னு பாத்துடனும்டான்னு சொல்லிக்கிட்டே யோசிச்சோம். மெதுவாக அந்தப் பள்ளத்துக்குப் பக்கத்துல இன்னுமொரு பள்ளத்தைத் தோண்டி வாய்க்கால கையால வெட்டி தண்ணிய வடிய விட்டா அங்கே ஒரு மீன் புதையலே இருந்தது.

அள்ளுடா அள்ளுடான்னு குளிச்சிட்டு துவட்ட வச்சிருந்த துண்டில மீனை அள்ளிக் கட்டினோம். இரண்டு துண்டுகளும் நிறைஞ்சிடுச்சி. குளிக்கிறதாவது ஒன்னாவது. நேரா சைக்கிளை விட்டோம் வீட்டுக்கும்.

அம்மாட்டே கொடுத்தோம். எங்கேடா புடிச்சிட்டு வந்தீங்கன்னு அம்மா கேக்க விபரத்தை சொல்லிட்டு மீண்டும் ஆத்துக்குப் பக்கத்தில இருந்த குளத்தில குளிக்க வந்தோம். பார்த்தா ஆத்துக்குள்ளே ஒரே கூட்டம். மக்கள் எல்லாம் மீன் பிடிச்சிக்கிட்டு இருந்தாங்க.

குளத்தில கண்ணு செவக்க செவக்க ஆட்டம் போட்டு விட்டு வீட்டுக்கு வந்தால் சுடுசோறு, மீன் குளம்பும் தயரா இருந்துச்சு.

குடத்தடியில இருந்த மாமரத்து மாங்காயும், மாங்காய் கொட்டையும் குளம்புக்குல மிதக்க, காரமும், புளிப்புமாய் இரண்டு தட்டு சோத்தை வயித்துக்குள்ளே தள்ளினோம்.

அன்று சாப்பிட்ட மீன் குழம்பை நெனச்சு நெனச்சு நெஞ்சு கனக்கிறது.

0 comments:

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.