நானும் என் நண்பனும் மாதம் பத்து தடவை தண்ணி அடிக்க கிளம்பி விடுவோம். ரமனா வோட்காவில் ( அல்சர் பிராப்ளத்துக்கு இப்படி குடித்தால் பிரச்சினை வராது என்று காலையில் இருந்து மாலை வரை தண்ணியில் மிதக்கும் குடிகார பெருமகன் சொன்ன தகவல். ஆனால் அதன் பின்னர் தான் அல்சர் அதிகமானது என்பது தனிக் கதை) லெமன் சேர்த்து குடிப்போம். சைடிஸ்ஸாக முட்டையுடன் பிரானைச் சேர்த்து அதனுடன் மிளகு பொடியும், மிளகாயும் எண்ணெயில் வதக்கி நன்றாக வறுத்து காரில் கொண்டு வந்து தருவார் சர்வர். அடுத்து வஞ்சிரம் மீனுடன் காரம் சேர்த்து நெய்யை அதன் மீது விட்டு தோசைக்கல்லில் தங்கக் கலரில் வறுத்து ஒரு சிப் சிக்னேச்சர் ஒரு வாய் மீன்.. காரில் உட்கார்ந்தபடியே சிக்னேச்சரோ அல்லது ரமனா வோட்காவையோ சிப் சிப்பாக உறிஞ்சினால் தொண்டையில் நெருப்பு எரியும். சிறிது நேரத்தில் நரம்புகள் தளர நினைவில் ஒரு மந்த நிலை வந்து தொக்கி நிற்கும். அந்த நிலையில் பார்க்கும் எந்தப் பெண்ணும் அழகாக தெரிவாள். சுவையில்லாத உணவும் சுவைக்கும். மதுவை ருசித்தால் மனசு மந்தமாகி விடும். அது தான் போதை... போதை... போதை... தண்ணி போதை... இன்னும் என்னென்னவோ போதைகள் இருக்கின்றன. அதெல்லாம் வரும் நாட்களில் எழுதுகிறேன்.
அப்படி ஒரு நாள் வரும்போது (நிதானத்துடன் தான்) கார் விறுக்கென இடதுபுறமும் வலது புறமும் சென்று பின்னர் நிலை பெற்றது. என் கண் முன்னே எமராஜாவும் சித்திரகுப்தனும் வந்து சென்றார்கள். ஆனால் பாருங்கள் அதில் ஒரு நிம்மதி இருந்தது. கார் வெட்டி வெட்டி இழுக்க இடதும் வலதுமாய் சரக் சரக்கென சென்று வர சீட்டில் அமைதியாய் உட்கார்ந்து இருந்தேன். என் மனதில் ஒரு நினைவும் இல்லை. மனம் செத்துப் போய் இருந்தது. கார் ஒரு நிலைக்கு வர, பட படவென வியர்த்துக் கொட்டியது. ஏசியிலும் வியர்வையில் குளித்தேன். மனசுக்குள் நடுக்கம் வர மயக்கம் வரும்போல இருந்தது.
சாவு நெருங்கிய போது எனக்குள் உணரப்பட்ட மனசு செத்துப்போன அதிசயம் மரணத்தின் மீது அபரிமிதமான காதலை உருவாக்கி விட்டது. ரமணாவும் தேவையில்லை. சிக்னேட்சரும் தேவையில்லை. ப்ளூ லேபிலும் தேவையில்லை என்ற நினைப்பு எனக்குள் அழுத்தமாக விழுந்து விட்டது.
மரணம் எப்படி இருக்கும்? அது எப்படி மனிதனை தழுவுகிறது. அழகான ஆழமான கடல் போல இருக்குமா? அந்த நிலையில் மனிதனின் மனசு என்ன நினைக்கும் என்றெல்லாம் எண்ணங்கள் எனக்குள் புயலடிக்கின்றன.
விரும்பினாலோ அல்லது விரும்பாவிட்டாலோ மனிதனைத் தழுவுவது மரணம். அதைக் காதலிப்பதில் தவறேதும் இல்லை அல்லவா ?