கோவை கிக்கானி பள்ளியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை கண்ணதாசன் கழகம் மரபின் மைந்தர் முத்தையா மற்றும் ஸ்ரீ கிருஷ்ணா ஸ்வீட்ஸ் நடத்திய விருது விழா நடைபெற்றது. நிகழ்ச்சி ஆரம்பித்து சிறிது நேரமாகி விட்டிருந்தது. நானும் ரித்திக் நந்தாவும் சென்றிருந்தோம்.
அரங்கம் நிரம்பி வழிந்தது. வெகு அமைதியாக இருந்தது. அரங்கத்திலிருந்து ஒருவர் கூட வெளியில் செல்லவில்லை. சினிமா பிரபலங்களை காணத்தான் இவ்வளவு கூட்டம் கூடும். ஆனால் இந்த நிகழ்வு என்னை வெகுவாய் ஆச்சரியப்படுத்தியது. இலக்கியத்திற்காகவும் சிறு கூட்டம் இருக்கிறதே என்று சந்தோசம். சாரு நிவேதிதா, ஜெயமோகன், ராமகிருஷ்ணன் போன்றவர்கள் புத்தக வெளியீட்டு விழாவினை கோவையில் வைக்கலாம். நிச்சயம் வாசகர்கள் கூடுவார்கள்.
நண்பர் திரு பாரதி கிருஷ்ணகுமாரும், எங்களால் முதலாளி சார் என்றழைக்கப்படும் முதலாளியும் என்னை அழைத்திருந்த காரணத்தால் முதன் முதலாய் இப்படிப்பட்ட விழாவிற்குச் செல்ல எனக்கொரு சந்தர்ப்பம் கிடைத்தது.
முதலாளி சார் எனக்கு கோவையின் பிரதான கிளப்பில் வைத்து திரு. பாரதி கிருஷ்ணகுமாரை அறிமுகப்படுத்திய போது அவருடனான உரையாடலில் ஒவ்வொரு பத்து நிமிடங்களுக்கும் மனதை நெகிழச் செய்து கொண்டே வந்தார். சில நாட்கள் சென்ற பிறகு அவரிடமிருந்து “அப்பத்தா”, “அருந்தவப்பன்றி பாரதியார்” என்ற நூல்களும் அவர் இயக்கிய ஆவணப்படங்களும் வந்திருந்தன. அப்பத்தா சிறுகதைத் தொகுப்பில் ஒவ்வொரு கதையும் ஒவ்வொரு விதம். மனதை கீறிச் செல்லும் கதைகள் அவை. அருந்தவப்பன்றி பாரதியார் நூல் பாரதியார் வாழ்க்கையில் இதுவரை எவரும் சொல்லாத வரலாற்று சம்பவங்களை பதிவாகியிருக்கிறது. இதற்காக பெரும் உழைப்பினை அவர் கொடுத்திருக்கிறார். இந்த நூல் இனி பாரதியாரின் வரலாற்றில் ஒரு தனி இடம் பிடித்தே தீரும்.
வாச்சாத்தி தீர்ப்பு என்பது உலகளவில் மிகப் பெரிய வரலாற்று நிகழ்வு. அதிமுக ஆட்சியில் செங்கோட்டையன் அமைச்சராக இருந்த போது வாச்சாத்தி என்ற கிராமத்தில் நடைபெற்ற வனக்காவலர்கள், காவல்துறை அதிகாரிகளின் பாலியல் வன்கொடுமை பற்றிய கொடூரத்தை விளக்கிய ஆவணப் படைப்பினை திரு பாரதி கிருஷ்ணகுமார் எடுத்திருக்கிறார்.
இவ்வழக்கினை சிபிஐ கையிலெடுத்து கிட்டத்தட்ட 269 அரசு அதிகாரிகளுக்கு தண்டனை வாங்கிக் கொடுத்த “உண்மை” வெற்றி பெற்ற சம்பவம் அது. அதை அவர் ஆவணப்படுத்தியிருந்த விதம் நெகிழச் செய்தது. இந்த தீர்ப்பினைக் எழுதிய நீதிபதி பிரபல கட்சியின் மாநில அமைப்பாளரும் எனது நெருங்கிய நண்பரின் உறவுக்காரர். நாங்கள் இருவரும் இத்தீர்ப்பினைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்த போது “மனச்சாட்சி” மற்றும் “சட்டத்தின்” படி தீர்ப்பு வழங்கப்பட்டதாக அவர் சொன்னார்.
இந்த ஆவணப்படம் தமிழர்களின் வரலாற்றில் ஜனநாயக அரசுகளின் கொடுங்கோலாட்சி எப்படி இருக்கும் என்பதற்கு உதாரணமாய் இருந்தது. (சார், இன்னும் உங்களின் மூன்று படைப்புகளைப் பார்க்கவே இல்லை. மனது சரியாகட்டும் என்று காத்திருக்கிறேன்)
இனி விருதுக்கு வரலாம்.
அசோகமித்திரன் - படைப்பானது எப்போதும் இளமையாகவே இருப்பது போல அவரிடம் இளமை இருந்தது. அதிகம் பேச முடியவில்லை. ஆனால் அவரின் படைப்புகளை ஒரு வாசகியாக பாராட்டிய முனைவர் ஜெயந்தஸ்ரீ பாலகிருஷ்ணன் கண்களிலும் பேச்சிலும் அசோகமித்திரன் தெறித்தார். படுவீச்சு ! அசோகமித்திரனை நான் அதிகம் வாசித்திருக்கவில்லை. பாவாடை அகலமாயிருந்தால் பஸ்ஸில் ஏற வசதியாய் இருக்குமே என்று நினைக்கும் பெண்களின் உள்மனதைக் கூட படைப்புகளில் காட்டியிருக்கும் அசோகமித்திரன் பற்றி புகழ்ச்சி சூப்பர். இவர் கண்ணதாசனைப் பற்றிப் பேசுவார் என்று எதிர்பார்த்தேன்.
முத்துலிங்கம் - கிட்டத்தட்ட 70 வயதுக்கும் மேலான திரைக்கலையுலக படைப்பாளி. அவரின் பாடல்கள் பற்றி பேசினார். கண்ணதாசனைப் பற்றிப் பேசினார். கொடுத்திருந்த நேரத்தில் திருக்குறளைப் போலச் சுருக்கமாய் பேசினார். முதுகுவலி என்று முதுமைக்கே உரிய காரணமொன்றினைச் சொன்னார்.
இசைக்கவி ரமணன் அவர்கள் பேசினார்கள். சிலாகிக்கும் அம்சங்கள் ஒன்றுமில்லை. பாடினார் ஆனால் பாருங்கள் எனக்கு சுத்தமாய் பிடிக்கவில்லை. இந்தக் காலத்து சின்னப் பிள்ளைகள் கூட எவ்வளவு நன்றாகப் பாடுகிறார்கள். இவர் ஏன் அப்படிப்பாடினார் என்று புரியவில்லை. ஏதாவது காரணமிருக்கும். அது அவருக்கு நியாயமாய் இருக்கலாம்.
பேராசிரியர் ராமசந்திரன் - கண்ணதாசனைப் பற்றிப் பேச வந்து விட்டு, இந்தக் கால பட்டிமன்ற பேச்சினைப் பேசினார். பேராசிரியர் சார் என்னதான் சொல்லுங்கள் கண்ணதாசன் அர்த்தமுள்ள இந்து மதம் பற்றிப் பேசினால் கேட்கின்றவர்கள் ஒருவர் கூட அவ்விடத்திலிருந்து எழுந்து கொள்ள முடியாது. கட்டிப் போடும் காந்தக்குரலோன் அவர். ஆனால் கடைசியாகப் பேச வந்த பேராசிரியர் வியர்த்துக் கொண்டே கிச் கிச் மூட்டிக் கொண்டிருந்தார். வேடிக்கையாக இருந்தது.
ஆனால் கிட்டத்தட்ட மூன்று மணி நேரம் போனதே தெரியவில்லை.
அழியாத வரலாறு படைத்த கண்ணதாசன் அழகாய் போட்டோவில் சிரித்துக் கொண்டிருந்தார். ஆனால் எனக்குத்தான் இவ்விருது விழா முழுமையற்றதைப் போல தோன்றியது, பாதிவயதில் காலமுமாகிப் போன கண்ணதாசனைப் போல.