குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, May 15, 2013

நேர்மைக்கு முன்னால்


சமீபத்தில் சவுக்கு இணையதளத்தில் நேர்மையே உன் விலை என்ன?என்று ஒரு கட்டுரை வெளியாகி இருந்தது. அக்கட்டுரை இந்தியாவின் தற்போதைய நிலையை சரியாகச் சுட்டிக்காட்டி இருந்தது.

இந்தியாவில் மட்டுமல்ல உலகமெங்கும் இருக்கும் கார்ப்பொரேட் கம்பெனிகாரர்களின் மன அசைவுக்கு ஏற்பத்தான் அரசியலும், நாடும் அசையும். இதைத் தெரிந்து கொண்டவர்கள் பிசினஸ் புள்ளிகளாக மாறுகிறார்கள். தெரியாதவர்கள் நேர்மை பேசி விரக்தியில் விழுவார்கள். எல்லாவற்றிற்கும் ஒரு விலையுண்டு என்பவர்கள் ஜெயிக்கின்றார்கள். அதைத் தெரிந்து கொள்ளாதவர்கள் தோல்வியைத் தழுவுகின்றார்கள். இது கார்ப்பொரேட் தத்துவம். வாழ்வியல் தத்துவம் வேறு. எந்த ஒரு கார்ப்பொரேட்டும் ஒரு காலத்தில் வீழ்ச்சியைத் தான் சந்திக்கும். உயர உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி கழுகாகி விட முடியாது அல்லவா? இது பற்றி வேறொரு பதிவில் பார்ப்போம். இப்போது விஷயத்திற்கு வரலாம்.

கலிகாலம் வந்து விட்டதே, உன் பொருள் என் பொருள், என் பொருள் உன் பொருள் என்று சண்டை சச்சரவுகள் இல்லாமால் வாழ்ந்து வரும் மனிதர்களிடையே எப்படிப் பிரச்சினையை உருவாக்குவது என்று கவலைப்பட்டார்களாம். பளபளவென மின்னும் தங்கக் கட்டிகளை தெருவில் இறைக்க அன்றிலிருந்து மனிதனுக்குள் தனக்கு என்ற ஆசை வேர்விட்டு பிரச்சினை துளிர் விட்டு இன்றைக்கு அடுத்தவன் எக்கேடு கெட்டால் என்ன என்று நினைக்கும் வரை வந்து விட்டது.

இப்படியான காலகட்டத்திலும் தர்ம தேவதையின் தவப்புதல்வர்கள் இப்பூமியில் வாழ்ந்து கொண்டுதான் இருக்கின்றார்கள். அப்படிப்பட்ட ஒரு தர்ம தேவையின் தவப்புதல்வனின் கதை தான் இது.

திருச்சியில் மிகப் பெரிய கார்ப்பொரேட் கம்பெனி ஒன்று இருக்கிறது. அக்கம்பெனியின் முதலாளி பெரும் தனக்காரர். எவரையும் மதிப்பது கூட இல்லை. பணமிருந்தால் போதும் எவனையும் விலைக்கு வாங்கி விடலாம் என்ற எள்ளல் கொண்டவர் அவர். இப்படிப்பட்ட தடித்தனம் மிக்க அவர் திருச்சியின் பிரதான சாலையில் இடமொன்றினை வாங்கினார். வாங்கியவுடன் இரண்டடுக்கு மாடிக் கட்டிடம் கட்ட அனுமதி வாங்கி விட்டு, நான்கு மாடிகளைக் கட்டி விட்டார். 

கார்ப்பொரேஷன் அதிகாரி ஒருவர் இந்த சட்டமீறலைக் கண்டுபிடித்து நோட்டீஸ் கொடுக்கச் சென்ற போது, அவரை அலுவலகத்திற்குள் விடவே இல்லை. கேட்டிற்கு வெளியில் இருக்கும் செடியின் மீது உன் நோட்டீஸை ஒட்டி விட்டுப் போ என்று எகத்தாளமாய் எக்காளாமிட்டிருக்கிறார் முதலாளி. அதிகாரி நேர்மைக்கு பெயர் போனவர். தர்ம தேவதையின் வாரிசு. என்ன அவமானப்படுத்தினாலும் தன் கடமையைச் சரிவரச் செய்யும் தன்னம்பிக்கைக்காரர். அடுத்த சில நாட்களில் பொக்லினைக் கொண்டு வந்து அத்துமீறிக் கட்டப்பட்டிருந்த இரண்டு மாடிகளை இடித்து தள்ளி விட்டுச் சென்று விட்டார்.

பணமிருந்தும், புகழ் இருந்து, அதிகாரவர்க்கத்தினரின் துணை இருந்தும் கட்டிட இடிப்பினை அவரால் தடுக்க முடியவில்லை. அவரால் செய்ய முடிந்தது என்ன தெரியுமா? அந்த கார்ப்பொரேஷன் அதிகாரிக்கு மாற்றல் வாங்கிக் கொடுத்தது மட்டும் தான். இதை அவர் தனது வெற்றி என நினைத்துக் கொண்டிருந்தார். ஆனால் அதற்கும் சேர்ந்து மிகப் பெரிய ஆப்பினைச் சொருகினார் அந்த அதிகாரி.

மாற்றலாகிப் போன இடத்தில் அவருக்கு நெருக்கமான ஒரு ஐ ஏ எஸ் அதிகாரியைச் சந்தித்து இருக்கிறார். ஐயேயெஸுக்கு ஆச்சரியம். திருச்சியில் இருந்தவர் திடீரென இங்கு வந்து விட்டாரே என்ன காரணம் என்று கேள்வி கேட்க, அவர் விவரத்தைச் சொல்லி இருக்கிறார். அந்த ஐ ஏ எஸ் தன் நண்பரை மாற்றம் செய்த அந்த கார்ப்பொரேட் முதலாளிக்கு பாடம் கற்பிக்க விரும்பினார். 

அடுத்த ஒரு வாரத்தில் அந்த நிறுவனத்தில் இன்கம்டாக்ஸ் ரெய்டு நடந்து. அத்தனை அக்கவுண்டுகளும் லாக் செய்யப்பட்டது. அவரால் ஒன்றும் செய்யமுடியவில்லை. திக்பிரமை பிடித்தவர் போலாகி விட்டார். முதலாளிக்குத் திகில் பிடித்து விட்டது. கிலி பிடித்தாட்ட ஆள் பீதியில் உறைந்து போனார். கோடிக்கணக்கான ரூபாய்க்கு கணக்குக் காட்ட வேண்டுமே? என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டிருக்கிறார். தர்மம் நின்று கொல்லும் என்பதை அவர் நிச்சயம் உணர்ந்திருக்க வேண்டும்.

எந்த ஒரு போலியும் நேர்மைக்கு முன்னே தூசிக்குச் சமமானது என்பதை அனுபவத்தில் அந்த முதலாளி நிச்சயம் உணர்ந்திருப்பார் என்று நம்புவோம்.


1 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

எப்படியோ மாறினால் சரி...

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.