குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Monday, May 27, 2013

குல்மொஹர் மரங்களில் பூக்கள் மலர்ந்திருக்கின்றன

விடிகாலைப் பொழுதில் தினம்தோறும் வீட்டின் அருகில் மயில்கள் அகவிக் கொண்டிருக்கும். அச்சத்தம் எனக்கொரு ஆர்வத்தைக் கொடுக்கும். கிட்டத்தட்ட இருபது மயில்களுக்கு மேல் இருக்குமென்று எண்ணுகிறேன். அதில் இரண்டு மயில்கள் எனது மருத்துவ நண்பரின் வீட்டின் மீது நின்று வெடுக் வெடுக்கென்று தலையை அங்குமிங்குமாய் திருப்பிக் கொண்டிருக்கும். மிக வேடிக்கையாக இருப்பினும் அவற்றின் அழகு என்னை குதூகலத்தில் கொண்டு போய் தள்ளி விடும். பூக்கள் விரிந்தாற் போல ஒரு மகிழ்ச்சி எனக்குள்ளே பரவும். பூக்களை நாமெப்போதும் ரசிப்பதில்லை. பூக்கள் என்றவுடன் பெண்கள் நினைவுக்கு வந்து விடுகிறார்கள். ஆகையால் உண்மையான பூக்களை நாம் ரசிப்பது இல்லை. எனினும் அது யாருக்காகவோ பூத்துக் கொண்டே இருக்கின்றன.

வாழ்க்கையும் அவ்வாறுதான். ஆனால் அதை வாழத்தான் எவருக்கும் நேரமில்லை. அல்லது தெரியவில்லை. எல்லோரும் அதை வெகு சிக்கல்களுக்குள்ளாக்கி பின் துயரத்தில் வீழ்கிறோம்.

வசியம் என்பதைப் படித்து விட்டு, என்னை அழைக்கும் நபர்கள் எவரும் தன் வாழ்வினைப் பற்றிய படிதல் இல்லாமலிருப்பதுதான் வேடிக்கையாக இருக்கிறது. ஏன் பிறந்தோம், ஏன் வாழ்கிறோம் என்று தெரியவில்லை என்றால் அவர்களின் வாழ்க்கை எவ்வாறு இருக்கும் தெரியுமா? 

பாதை ஒன்று தெரிகிறது. அதில் நடக்க ஆரம்பிக்கிறோம். தொடர்ந்து நடந்து கொண்டே இருக்கிறோம். ஏன் நடக்கிறோம், எதற்காக நடக்கிறோம் என்பதெல்லாம் தெரியாது. நமக்கு முன்னே இருப்பவர் நடக்கிறார். நானும்  நடக்கிறேன் என்பார்கள். இப்படித்தான் இருக்கும் அவர்களின் வாழ்க்கை.

நான் என்ன சொல்ல வருகிறேன் என்பது புரிகிறது அல்லவா? புரியாதவர்களுக்கு ஒன்றும் சொல்வதிற்கில்லை.

குல்மொஹர் மரங்களில் பூக்கள் அழகாய் பூத்திருக்கின்றன. ஒரு இலைகளைக் கூட காணமுடியவில்லை. வெறும் பூக்கள் தான் பூத்துக் குலுங்கிக் கொண்டிருக்கின்றன. அவை அழகாய் உங்களுக்கு ஒன்றினைச் சொல்ல விரும்புகின்றன. 

அதைப் புரிந்து கொள்ள முயலுங்கள். வாழ்க்கை அழகானது. அதை அர்த்தமுடன் வாழ முயலுங்கள்.

அன்பைத் தவிர வேறெதுவும் வளர்வதில்லை. அது கொடுத்தால் கூடிக் கொண்டே செல்லும். இன்னும் பெருகி வழிந்து கொண்டே இருக்கும். எவரெல்லாம் அன்பில் நனைகிறார்களோ அவர்களுடன் இறைவன் இருப்பான் என்கிறார் எனது மாஸ்டர். அன்பினைக் கைக்கொள்ளுங்கள். இறைவன் உங்களின் சொற்களில் வந்து நிற்பான்.

வாழ்க வளமுடன்

1 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

/// அன்பினைக் கைக்கொள்ளுங்கள். இறைவன் உங்களின் சொற்களில் வந்து நிற்பான். ///

என்னவொரு சத்திய வரிகள்... 100% உண்மை...

பாராட்டுக்கள்... வாழ்த்துக்கள்... நன்றி...

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.