( எனது நண்பர் இயக்குனர் கதிரின் ரீமிக்ஸ்- சொய் சொய் பாடல்)
என் மகளின் பத்து நாள் போராட்டம், நேற்று வெற்றியடைந்தது. வழக்கம் போல அரசாங்கம் (அடியேன்)தோல்வியுற்றது. யானைப் படம் போச்சு, போச்சுன்னுச் சொல்லிச் சொல்லி நச்சரிப்பு தாங்காமல் அழைத்துச் சென்றேன்.
கும்கி படத்தில் யானையை போஸ்டரிலும், விளம்பரத்திலும் இடம்பெற வைத்து, தேர்வு விடுமுறையில் இருக்கும் மாணவர்களைக் கவர்ந்தார் ஞானவேல்ராஜா. இவர் தொட்டதெல்லாம் பொன்னாக மாறுகிறது. வெறும் இரண்டு கோடி ரூபாயில் வாங்கப்பட்ட அட்டக்கத்தி பதினாறு கோடியைத் தந்தது என்றால் அவரின் சுக்ரதிசையை என்னவென்றுச் சொல்வது? அப்பா, அண்ணன், தம்பி, மாமா என்று ஒரு குடும்பமே “சுக்ரதிசையில்” சூறாவளியாய்ச் சுழன்று சுழன்று கோடிகளைக் குவிக்கின்றார்கள். அது அவர்கள் முன்பிறப்பில் செய்த பலன். அனுபவிக்கின்றார்கள். சுக்ரதிசை வந்தால் ரோட்டில் போகிறவன் கூட வீட்டுக்கு வந்து காசைக் கொடுத்து விட்டுப் போவான் என்பார்கள். அப்படித்தான் ஆகிவிட்டது எனக்கும்.
’நானும் செத்துருவேன்’ என்றுச் சொல்லும் அல்லியினால், பொம்மன் இழப்பது அவனுக்கு நடையாய் நடந்து சம்பாதித்துப் போட்ட யானை, மாமா, எடுபிடி உண்டியல் ஆகியோரை. எப்போதுமே பெண்களுக்கு இழப்பு அதிகமில்லை. பெரும்பாலும் ஆண்கள் தான் இழக்கின்றார்கள். பெண்களின் சில சொற்கள் ஒருவனை வாழவைக்கும், சிலரை அழித்து விடும்.ஹஸ்தினாபுரத்திலே பாஞ்சாலி தண்ணீர் என்று நினைத்து ஏமாந்து நின்ற துரியோதனனைப் பார்த்து சிரித்த சிரிப்பு, துரியோதனால் பலபேரின் முன்னிலையில் பாஞ்சாலியின் துகிலுரிய வைத்தது. அன்று அவள் அவிழ்த்து விட்ட கூந்தல் துரியோதனா வகையறாவையே அழித்தது. பெண்கள் எப்போதும் நல்லவர்களும் இல்லை, கெட்டவர்களும் இல்லை. ஒன்றே ஒன்றுதான். பெண்கள் ஆயுதம் போன்றவர்கள். சரியாகப் பயன்படுத்தவில்லை என்றால் குறுக்கே திரும்பி குத்திக் குதறி விடும். ஜாக்கிரதை நண்பர்களே !
என் மனையாள் படம் பார்த்து விட்டு திரும்பும் போது, ”ஏங்க, ஓங் பேக் என்ற படத்தில் சிறுவன் ஒருவன் யானையுடன் விளையாடுவதை அப்படியே வைத்திருக்கிறார்கள். அப்படத்தைப் பார்த்திருப்பார் போல, உடனே ஒரு ‘ நாட்’ கிடைத்து படத்தை எடுத்து விட்டார்” என்று கூறினாள். அப்படியும் இருக்கலாம். எப்போதுமே நம்மவர்களுக்கு சுயச் சிந்தனை வருவது குறைந்து வருகிறது. கூக்கிள் சிண்ட்ரோமினால் மூளை இறப்பு நோய் வரும் என்று மருத்துவர்கள் எச்சரித்து இருக்கின்றார்கள் என்பது உங்களுக்கு இவ்விடத்தில் ஒரு கூடுதல் தகவல். ஆகவே நெட்டில் உலவும் நண்பர்கள் ஜாக்கிரதை.இதற்கென்று தனி வைத்தியம் வந்தாலும் ஆச்சரியப்பட வேண்டியதில்லை.
கும்கி ஒன்றுமே இல்லாத வெறுமையான, முழுமையற்ற, விட்டேத்தியான கதை. காட்டுவாசிகளின் வீடுகள் அனைத்தும் செட்டிங்குகள். பச்சைப் பசேலைக் காட்டினால் ரசிகர்கள் ஏமாந்து விடுவார்கள் என்ற பிரபு சாலமனின் நினைப்பு பலித்தே விட்டது. கோவில் யானை, காட்டு யானையை விரட்டி அடிப்பதுதான் கதை. அதாவது சொங்கி ஒருவன் வீரனை வெல்வது. கதைக்களமும், காட்சிப்படுத்தியதும் வித்தியாசமானது என்பதால் படம் போரடிக்கவில்லை என்பதுதான் உண்மை. மற்றபடி எரிச்சல் தரும் கிளைமேக்ஸ். முழுமையைத் தராத படமாக்கம்.
அதென்னவோ தெரியவில்லை, பிறரை அடிப்பதும், கேவலப்படுத்துவதும் தான் நகைச்சுவை என்பதாய் அனைத்து சினிமாப்படங்களும் வருகின்றன. கவுண்டர் மேனியா போய் அரை நூற்றாண்டு காலம் ஆகி விட்டது. இன்றைக்கும் இயக்குனர்கள் இப்படிப்பட்ட லூசுத்தனமான நகைச்சுவைக் காட்சிகளை படமாக்குவது எரிச்சலோ எரிச்சல்.
ஹீரோ யானைமீது வருகிறார். காதல் வந்தால் பைத்தியம் போல குதிக்கிறார். தலையை ஆட்டுகிறார். கையை விரித்து விரித்து காதலை வானத்தைப் பார்த்துச் சொல்கிறார். காதல் வேதனையில் முள்ளில் கையை வைத்து அழுத்தி ரத்தம் வர வைக்கிறார். (அதென்னவோ தெரியவில்லை, சினிமா காதலர்கள் கையை மட்டும் அறுத்துக் கொள்கிறார்கள்).
அல்லிக்கு பின்புறம் அழகாவே இல்லை. சப்பைக் குண்டி ஹீரோயின். மூக்கு புடைத்து, உதடு புடைத்து இருக்கிறது. நடந்து கொண்டே இருக்கிறார். எத்தனையோ படங்களில் பார்த்திருக்கும் ஹீரோயின் போலவே தண்ணீரில் மூழ்குகிறார். பாடுகிறார். சிரிக்கிறார். சிணுங்குகிறார்.கொடுமை இன்னும் எத்தனை நாளைக்குத்தான் ஹீரோயின்கள் இப்படியே நடிப்பார்களோ தெரியவில்லை. ஹீரோயின் சுந்தரபாண்டியனில் கொஞ்சம் முற்றிப் போய் இருக்கிறார். காதல் வருவதும், அதைச் சொல்வதும், பின்னர் அதை மறுப்பதும் எரிச்சலைத் தரும் படமாக்கம். பொம்மனின் மாமாவாக வரும் தம்பி ராமையா மைண்ட் வாய்சிலேயே பேசிக் கொண்டு படம் நகர உதவி செய்கிறார்.
சிவாஜியின் பையனுக்கு முதல் படம் சூப்பர் ஹிட். பாடல்கள் அனைத்தும் படத்தில் ஒட்டாமல் தனியே நிற்கின்றன. படத்தின் களத்திற்கும் பாட்டுக்கும் இசைக்கும் எந்த வித சம்பந்தமும் இல்லை. சிந்து பைரவி படத்தில் சிவகுமார் கர் நாடக சங்கீத மேடையில் வெஸ்டர்ன் மியூசிக் பாடினால் எப்படி இருக்கும் என்று ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். அப்போது புரியும் நானென்ன சொல்ல வருகிறேன் என்று.
ஒன்றுமே இல்லாத கதை. எல்லாம் இருக்கிறது என்பதாய் காட்டும் செப்பிடு வித்தையைத்தான் பிரபு சாலமன் கும்கியில் செய்திருக்கிறார். இன்னும் 100 ஆண்டுகள் ஆக வேண்டும் தமிழர்களின் ரசனை மாற.