இந்தியாவின் நான்காவது பிரதமர், காங்கிரஸ் அல்லாத ஜனதா கட்சி மூலம் வந்தவர், நான்கு வருடங்களுக்கு ஒரு முறை பிறந்த நாள் கொண்டாடும் முன்னாள் பாரதப் பிரதமர் திரு மொரார்ஜி தேசாயின் பிறந்த நாள் இன்று. ஆட்சியில் இருந்த போது, முன்னாள் பாரதப் பிரதமர் இந்திரா காந்தி அமல்படுத்திய எமர்ஜென்சிக்கு பிறகான ஜன நாயக ஆட்சியை மீட்டெடுக்கும் முயற்சியில் ஈடுபட்டார். அதுமட்டுமன்றி அவர் ஆட்சிக்காலத்தில் விலைவாசி உயர்வு கட்டுக்குள் இருக்கும்படி மிகத் திறமையான ஆட்சியும் கொடுத்தார். குறிப்பிட்ட எண்ணிக்கையில் ஒவ்வொரு ஹோட்டல்களிலும், ஒரு ரூபாய்க்கு ஜனதா சாப்பாடு போடும் படி, ஹோட்டல் தொடங்கியவர்களுக்கு கண்டிஷன் போட்டு அதைச் செயல்படுத்தியும் வந்தார். அனேகர் முகம் சுளிக்கும் யூரின் தெரபி என்ற வைத்தியத்தியமும் அவரால் பிரபல்யமானது. 99 வயது வரை வாழ்ந்த பிரதமர் திரு மொரார்ஜி தேசாய் அவர்களின் பிறந்த நாளான இன்று அவரைப் பற்றி ஒரு நிமிடம் நினைத்துப் பார்ப்போம். ஏனென்றால் ஊழல் கறை அற்ற உன்னதமான பிரதமர் அவர்.
இன்று இமாலய ஊழல் செய்யும் சக அமைச்சரைக்கூட என்ன செய்கின்றீர்கள் என்று கேள்வி கேட்கக்கூட முடியாத பிரதமரை நாம் கொண்டிருக்கிறோம். செயலற்ற பிரதமரை மட்டுமல்ல அரசு அலுவலர்களைக் கூட மக்களின் ஜன நாயகத்தால் எதுவும் செய்ய முடியாது என்கிற போது, மக்களின் இந்த ஜன நாயகத்தால் என்ன பிரயோசனம் என்பது எனக்குப் புரிவதே இல்லை.
கோவை ஸ்பெஷல் சாம்பார் என்று ஒன்று இருக்கிறது. அதுபற்றி பலருக்குத் தெரியாமலே போய் விடும் என்பதால் அதை நினைவு படுத்துவதற்காக தொடர்கிறேன்.
காயலான் கடைக்குச் சென்றீர்கள் என்றால் உடைந்து போன பல சாமான்கள் கிடக்கும். துருவேறி, உடைந்து, சிதைந்து போய் கிடக்கும் காயலான் பொருட்களை வைத்து தென்னகத்தில் ஓடும் ரயில்கள் இயக்கப்படுகின்றன. சென்னைக்குச் சென்று வரும் போதெல்லாம் ஏசி கோச்சின் இருக்கைகள் பற்றி பல சிறுகதைகள் எழுத வேண்டுமென தோன்றும். ஒவ்வொன்றும் காலொடிந்து, சீட் கிழிந்து, பசை போல் ஒட்டும் தூசிகளை உப பொருளாய்க் கொண்டு இருக்கை போலத் தெரியும். இருக்கைகளுக்கிடையே அவ்வப்போது கரப்பான்கள் நம்மை வந்து வரவேற்றுச் செல்லும். கரப்பான்பூச்சிகளைப் பார்க்கும் குழந்தைகள் உச்சஸ்தானியில் அலறும் சத்தம் ரயில் போடும் சத்தத்தை விட அதிகமானாலும் ஏனென்று கேட்க நாதியின்றி போகின்ற போக்கில் ஓடிக் கொண்டிருக்கும் ரெயில்கள்.
மேற்கு வங்க முதலமைச்சர் திரு மம்தா பானர்ஜியின் கனவுத் திட்டமான துரந்தோ ரெயில் சேவை பற்றி நேற்றைய இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸில் ஒரு கட்டுரை வந்தது. 625 ரூபாய் கொடுத்து கோவையிலிருந்து சென்னைக்கு நிற்காமல் செல்லும் துரந்தோ ரயிலில் சாம்பாருடன் இலவசமாய் கரப்பான் பூச்சிகளையும் சேர்த்துக் கொடுப்பார்களாம். அதைத்தான் நான் கோவை ஸ்பெஷல் சாம்பார் என்று பெயர் வைத்து அழைக்கிறேன். சாம்பாரில் கத்தரிக்காய் மிதக்கும், முருங்கை மிதக்கும், உருளை மிதக்கும். ஆனால் கோவையிலிருந்து செல்லும் துரந்தோ ரெயிலில் வழங்கப்படும் சாம்பாரில் கரப்பான் மிதக்குமாம்.
கேரளாவிலிருந்து செல்லும் ஒவ்வொரு ரயிலும் புத்தம் புதிதாய் மின்னும். ஆனால் தமிழகத்தில் ஓடும் ஒவ்வொரு ரயிலும் காயிலான் கடையில் இருந்து வந்தது போல இருக்கும். இத்தனைக்கும் உள்துறை அமைச்சரிலிருந்து, இணையமைச்சர்கள், துணை அமைச்சர்கள் என்று தமிழகத்தில் இருந்து ஏகப்பட்ட அமைச்சர்கள் மத்திய அரசில் இருக்கின்றார்கள். இருந்து யாருக்கு என்ன புண்ணியம்? இது ஜன நாயக நாடு அல்லவா?
- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்