குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Tuesday, February 14, 2012

மயிலிறகுகள் - நாராயணசாமி வாத்தியார்

ஆவணம் கிராமத்தின் வடக்கே இருக்கும் ஆவிகுளத்தின் வடக்குப்புறமாய் இருக்கும் அரசு துவக்கப்பள்ளியில் படித்துக் கொண்டிருந்த போது, பழைய சைக்கிள் ஒன்றில் குட்டையாய், முறுக்கிய வெள்ளி மீசையுடன் வாயில் ஒரு அங்குலம் குறுகலும், ஐந்து அங்குலம் நீளம் இருக்கும் சுருட்டை வாயில் வைத்து புது வித சைக்கிள் புகை வண்டியாய், குனிந்த வளைந்த முதுகுடன் ஒரு உருவம் செல்வதை அடிக்கடிப் பார்த்திருக்கிறேன். ஐந்தாம் வகுப்பு படித்த போது செட்டியாரின் பொட்டிக் கடையில் அடிக்கடி அந்த உருவம் எதிரில் தென்படும். அவர் யார் என்பது எனக்குத் தெரியாது.

தேர்வு முடிவு எப்பவும் எதிர்பார்த்தது போலத்தான் வரும். ஆகவே அடுத்த வருடம் மேல்நிலைப்பள்ளிக்குச் செல்ல வேண்டும். அக்கா “விக்டோரியா டீச்சரு மாசமா இருக்காரு, அவரு பிள்ளைய தொட்டில் ஆட்டலாம்” என்பார். விக்டோரியா டீச்சரு கைத்தொழில் கற்றுத்தரும் டீச்சர்.  முஸ்லிம் தெருவில் குடியிருந்தார். நான் ஆறாம் வகுப்பில் சேர்ந்த போது அவருக்கு “செந்தில்” என்றொரு மகன் பிறந்திருந்தான். நம்பவே மாட்டீர்கள். அக்கா சொல்லியது போல “பையனை” நான் பார்த்துக் கொண்டேன்.

ஆறாம் வகுப்பு “ஏ” கிளாஸ் ஆஸ்பெட்டாஸ் கூரை வேய்ந்த அறையில்தான் நடந்தது. மண்ணில் தான் உட்கார வேண்டும். சுவற்றில் போர்டு இருக்கும். அதற்கு கரி,ஊமத்தம் இலைக் கலவையைக் கொண்டு கருப்பு வண்ணம் ஏற்றுவோம். போர்டுக்குப் பின்னால் சமையல்கட்டு. மதியம் நேரம் சாம்பார் வாசம் தூக்கும். ஆனால் என்னால் சாப்பிட முடியாது. சாப்பிட்டது தெரிந்தால் மாமாவால் முதுகு தோல் உரிக்கப்பட்டு உப்பு தடவப்படும். அந்தப் பயத்திலேயே பத்தாம் வகுப்பு வரை அந்தச் சாப்பாட்டினை “திருட்டுத் தனமாய்” சாப்பிட்டுக்கின்றேனே தவிர சந்தோஷமாய் சாப்பிட்டது கிடையாது. மாமாவிடம் போட்டுக் கொடுக்க பக்கத்து வீட்டு கடுகுத்தேவரின் பையன் பாலு ரெடியாக இருப்பான். அவனுக்குத் தெரியாமல் சாப்பிட நாகராஜன் என்ற நண்பன் தான் உதவி செய்வான்.

ஆறாம் வகுப்பில் சேர்ந்த புதிதில் தான் அந்த சுருட்டு வாத்தியாரை பிரேயரின் போது பார்த்தேன். அவரின் மீசை என்னைப் பயமுறுத்தியது. மாமாவின் மீசைக்கு முன்னால் சாரின் மீசை பிச்சை வாங்கனும். இருப்பினும் அதன் கத்தி போன்ற அமைப்பு என்னைப் பயமுறுத்தி விடும். அவரைப் பார்த்தாலே அடிவயிற்றில் புளி சுரக்கும். அவர் எங்களுக்கு வரலாறு பாடம் எடுக்க வந்தார். அடிக்கடி இருமிக் கொண்டு, அந்தச் சுருட்டினை விடாமல் புகைத்துக் கொண்டிருப்பார். கர கர குரலில் பாடம் சொல்லிக் கொடுப்பார். கல்லூரி படிப்பு முடித்து விட்டு ஒரு முறை வீட்டிற்குச் செல்லும் போது அவரை பார்க்க நேர்ந்த போது, அதே பய உணர்வு என்னிடத்தில் தோன்றி மறைந்தது. அதே பழைய சைக்கிளில் வாயில் சுருட்டைக் கவ்வி புகை விட்ட படியே சைக்கிள் புகை வண்டியியை மெதுவாக நடத்திக் கொண்டு சென்றார் “நாராயணசாமி வாத்தியார்”.

குளிரும், வெக்கையும் கலந்த இந்த கோவையின் காலைப் பொழுதின் நேரத்தில் அவரைப் பற்றி நான் யோசிக்க காரணம் சென்னையில் நடந்த படுகொலை. அது கொலை அல்ல, திட்டமிட்ட படுகொலை. அதைச் செய்தது அந்தப் பையன் அல்ல. இந்தச் சமூகம்.

- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

1 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நல்ல பதிவு ! தொடருங்கள் ! வாழ்த்துக்கள் !

Post a Comment

கருத்தினைப் பதிவு செய்தமைக்கு மிக்க நன்றி.