வீட்டின் கதவுகள் அடிக்கடி காற்றில் வந்து சாத்திக் கொண்டு, பெரும் அவஸ்தையை உண்டு செய்து வந்தது. அதைச் சரி செய்ய நாகராஜ் என்ற ஆசாரி ஒருவரை வரவழைத்தேன்.
வயதானவர். ஆரம்பத்தில் முகம் கொடுத்தே பேச வில்லை. போகப் போக கொஞ்சம் கொஞ்சமாக பேச ஆரம்பித்தார். ”கதவில் மேக்னெட் பொருத்தி விட்டால் சரியாகி விடும்” என்று சொல்லி, அதைப் பொருத்த ஆரம்பித்தார்.
”அந்தக் காலத்தில் என் அப்பா கூலியே வாங்காமல் வேலை செய்தார். மோதிரம், செயின் செய்யச் சொல்லுபவர்கள் அதற்கு செய்கூலியாக நெற்மணிகளையோ, பருப்பு வகைகளையோ இன்ன பிற தானியங்களையோ தந்து விடுவார்கள். அப்பா கை நீட்டி யாரிடமும் காசு வாங்கி நான் பார்த்ததில்லை” என்றார்.
சீனிக்கிழங்கு, சர்க்கரை வள்ளிக் கிழங்கு, தட்டப்பயறு எல்லாம் அம்மா அவித்துக் கொடுப்பார்கள். நாகர்கோவிலில் (ஏதோ ஒரு பெருமாள் கோவில் என்றுச் சொன்னார்) தரும் சுண்டல் வகைகளைப் பற்றிச் சொல்லிக் கொண்டிருந்தார். ”மலையேறி அதை வாங்கி வருவதற்குள் பெரும் பாடு பட வேண்டியிருக்கும். ஆனால் சுண்டலின் சுவையோ வார்த்தையால் சொல்ல முடியாது” என்று அந்தக் காலத்திற்கே சென்று வந்தார்.
”தம்பி, உங்களிடம் ஒரு விஷயம் சொல்கிறேன் கேளுங்கள்” என்றார். நானும் ஆவலுடன் அவரின் முகத்தையே கவனித்துக் கொண்டிருந்தேன்.
”அந்தக் காலங்களில் வீடுகளில் மூன்று உத்திரங்கள் வைத்து வீடு கட்டுவார்கள். ஏன் அப்படி என்று எனக்கு நீண்ட நாட்களாக தெரியவில்லை தம்பி. நீண்ட நாள் கழித்துதான் எனக்கு காரணம் புரிந்தது. முதல் இரண்டு உத்திரங்களும் வீட்டின் பாதுகாப்பிற்கும், நடு உத்திரம் பிள்ளைப் பேறுக்கும் ” என்றார்.
”பிள்ளைப் பேறா? ”
“ஆமாம் தம்பி, பெண்கள் குழந்தைகள் பெற அந்த உத்திரத்தைத் தான் பயன்படுத்துவார்களாம். கீழே வைக்கோல் போட்டு மெத்தை போல செய்து, உத்திரத்தில் கயிறொன்றினைக் கட்டி தொங்க விடுவார்களாம். பிரசவ வலி வந்ததும் அந்தக் கயிற்றினைப் பிடித்து உந்தச் செய்வார்களாம். எளிதில் குழந்தை பிறந்து விடுமாம்” என்றார்.
ஒரு நிமிடம் இன்றைய காலப் பெண்களின் பிரசவத்தை நினைத்துப் பாருங்கள். கரு உருவானதில் இருந்து, குழந்தையின் வயது ஐந்து ஆகும் வரையிலும் மருத்துவரிடம் சென்று கொண்டிருக்கிறார்கள். அந்தக் காலக் குழந்தைகளுக்கு அவ்வளவு எளிதில் காய்ச்சலோ, சளியோ பிடிக்காது. என் மகன் பிறந்த போது என் அம்மா தான் மனைவியைக் கவனித்துக் கொண்டார். ஒரு வருடம் மகனுக்கு காய்ச்சலோ சளியோ பிடிக்கவில்லை.
கருவில் இருக்கும் போது, இரவில் தூங்க விடமாட்டாள். வாந்தி வாந்தி வாந்தி. தட்டில் மண் போட்டு தனியாக வைத்திருப்பேன். சாப்பிடுவாள். வாந்தி எடுப்பாள். சத்து போதாது. தம்பி வண்டியை எடுத்துக் கொண்டு வந்து, மனைவியை ஏற்றி ஆஸ்பிட்டலுக்குச் சென்று குளுக்கோஸ் ஏற்றி வருவான். செல்லும் வழியில் பல இடங்களில் வாந்தி எடுப்பாராம் மனைவி.
மனைவிக்கு ஆறுமாதம் முடிந்ததும் எங்கோ சென்று “செண்பகக்குருவிகளை” பிடித்துக் கொண்டு வந்து கொடுத்து, குழம்பு வைத்துச் சாப்பிடக் கொடுத்தான் எனது நண்பன் ஒருவன். அதன் கண்கள் சிவப்பாய் இருக்கும். மகன் பிறந்து, எனது நர்ஸ் தோழி பையனைக் கையில் கொண்டு வந்து கொடுத்த போது, பையன் விழித்துக் கொண்டே என்னைப் பார்த்தான்.
அந்தக் காலத்தில் உணவுக்கட்டுப்பாடு கடுமையானதாக இருக்கும். குழந்தை பிறந்த முதல் இரண்டு நாளைக்கு காலையில் அரை இட்லி மட்டுமே. இந்த அரை இட்லிக்கு அரை வெங்காயமும், அரை தக்காளிப் பழத்தையும், நான்கு வெள்ளை உளுந்தையும் துளி எண்ணெய் விட்டு வதக்கி, அம்மியில் அரைத்து சட்னியாய் கொடுப்பார்கள். இரவும் அதே.
இடையில் குடிக்க பால் கொடுப்பார்கள். சீரகமும், ஒரே ஒரு பூண்டு பல்லும், தக்காளியும் சேர்த்து ரசம் செய்து குழந்தை பிறந்த பிறகு ஒரு வாரத்திற்கு மதியச் சாப்பாடு கொடுப்பார்கள். துளியூண்டு எண்ணெய் சேர்த்து, கருவேப்பிலை சேர்ப்பார்களாம்.
பால் சுரக்க பால் சுறா வாங்கி வந்து கொடுப்பார்கள். சித்தப்பா பால் சுராவை நாகப்பட்டினம் மார்க்கெட்டில் இருந்து வாங்கி, மஞ்சள் பையில் பிளாஸ்டிக் கவர் போட்டு கிட்டத்தட்ட 300 கிலோ மீட்டர் பஸ்ஸில் பயணம் செய்து, வந்து கொடுப்பார்.கருவாடு தீர்ந்து விட்டது என்றுச் சொன்னால் தம்பியிடம் கொடுத்து அனுப்புவார் சித்தப்பா. இன்றைக்கு இவரைப் போன்ற சித்தப்பாவைப் பார்க்க முடியுமா? மாமா பச்சைத்தட்டக்காரா வாங்கி வந்து ஸ்டாக் வைத்திருப்பார். யாராவது ஊருக்கு வரும் போது பார்சல் வீடு வந்து சேரும். தங்கை வீட்டிலிருந்து உளுந்து, மல்லி, மிளகாய் வந்து சேரும். பொறுக்கி எடுத்த தேங்காய் காய வைத்து, ஆட்டி கமகமவென எண்ணெய் வரும். வயலில் உளுந்து எடுத்து அடிக்கும் போதே, “தங்கத்து நாலு மரக்கா எடுத்து வைத்து விடு” என்று மாமா சொல்ல தனியாய் சாக்கிற்குள் உளுந்து கிடக்கும். ஊருக்கு போய் வரும் போது காரில் இடமில்லாமல் மூட்டையும் முடிச்சுமாய் கிடக்கும்.
ஒரு முறை வீட்டில் சாப்பிட்டுக் கொண்டிருக்கும் போது, ”மண் சட்டியில் குழம்பு வைத்தால் சுவையாக இருக்கும் போல இருக்கே”ன்னு சொன்ன ஒரு வார்த்தைக்கு, காரில் மண் சட்டிகளை புதிதாய் வாங்கி பேப்பர் வைத்து, டிரைவரிடம் ”இதைப் பத்திரமாய் ஊருக்குக் கொண்டு போய் சேர்த்து விடு” என்று அம்மா சொல்லிக் கொண்டிருந்தார்.
“தம்பி ஊருக்கு கிளம்பிட்டியாமே, இந்தா வீட்டில் சோளமும், கடலையும் போட்டோம். கொஞ்சம் இருக்கு எடுத்துக் கொண்டு போ” என்று அப்பாவின் நண்பர் கொண்டு வந்து கொடுப்பார்.
சொல்லிக் கொண்டு போகலாம் என்று சித்தி வீட்டிற்குச் சென்றால் வரும் போது பல வித முடிச்சுகளில் பல் வேறு பொருட்கள் கொடுத்து அனுப்பி இருப்பார் சித்தி. நண்பர்கள் வீட்டிலிருந்து என்னென்ன பொருட்கள் எல்லாம் வந்து சேரும்.
இன்றைக்கு இவர்கள் எல்லாரிடமிருந்தும் அன்பும், பாசமும் எனக்கு கிடைத்துக் கொண்டிருக்கின்றன. ஆனால் அவை என் பிள்ளைகளுக்கு கிடைக்குமா என்பதை நினைக்கையில் நவீன காலத்தின் மீதான வெறுப்பு மனதிற்குள் குமிழ்கிறது.
எங்கோ வந்து விட்டேன் பாருங்கள். பிள்ளைப் பேற்றுக்கு வருவோம்.
அரை வீட்டில் உரித்த பச்சை தட்டக்காரா கருவாட்டினையும், முருங்கைக்காயையும் சேர்த்து மிளகாய் கூட சேர்க்காமல் குழம்பு என்ற பேரில் சாதத்தில் ரசம் போல ஊற்றிக் கொடுப்பார்.
பதினைந்து நாட்கள் கழித்து காய்கறிகள், பருப்பு என்று கால் வயிறு நிரம்பும் படி தான் சாப்பாடு கொடுப்பார்கள். அதற்கடுத்த மாதங்களில் அரை வயிறு நிரம்பும் படி சாப்பாடு கொடுப்பார்கள். எங்கள் கிராமத்து பழக்க வழக்கங்கள் வேறு. நகரப் பழக்க வழக்கங்கள் வேறு என்பதை மகள் பிறந்த பிறகு கண்டு கொண்டேன்.
குழந்தைக்கு மாந்தம் வந்து விடும் என்று வேறு எந்த உணவும் கொடுக்கமாட்டார்கள். காதல் திருமணம் என்பதால் மனைவின் அம்மா வரவில்லை.
மகள் மனைவியின் வயிற்றில் இருக்கும் போதே, மனைவின் அம்மாவின் அரவணைப்பிற்குள் வந்து விட்டார். மகள் பிறந்த உடனே சிக்கன், ஈரல் கொடுத்துச் சாப்பிடச் சொன்னார்கள். அரண்டு போய் விட்டேன். ஒன்றும் ஆகவில்லை. மகள் நன்றாகத்தான் வளர்ந்தார்.
கிராமப் பழக்கங்களும், வழக்கங்களும் இனி எந்தப் பெண்ணாலும் தொடர்ந்து பயன்படுத்தப்டாது. இப்படியே தமிழர்களின் எண்ணற்ற அற்புதமான பல வழக்கங்கள் ஒழிந்து போய் விட்டன.
1200 சதுர அடி வீட்டிற்குள், உலகத்தையே கொண்டு வந்து, வெறும் சிமெண்டினால் கட்டப்பட்ட அலங்கார சந்தைகளுக்குள், விஷத்தைக் காசு கொடுத்து சாப்பிட்டுக் கொண்டு மனிதர்கள் என்ற போர்வையில் இயந்திரமாய் வாழ்ந்து கொண்டிருக்கும் இக்கால மனிதர்களுக்கு நான் மேலே எழுதி இருப்பது ஏதோ ஒரு கதை போல தோன்றும். அதுதான் நாகரீகம் என்பார்கள் இக்காலத்தில். உறவுகளை இழந்து, உறக்கமும் இழந்து அனாதையாய் நின்று கொண்டிருக்கிறார்கள் மனிதர்கள் இக்காலத்தில்.
சுருக்கமாய்ச் சொன்னால் ”நவீன காலம் என்பது நரகத்தின் காலம்”