இதை எழுதக்கூடாது என்றுதான் நினைத்திருந்தேன். ஆனாலும் மனதுக்குள் ஒரு உறுத்தல் இருந்து கொண்டே இருந்தது. கொஞ்ச காலத்துக்கு முன்னால் எனக்குத் தெரிந்த ஒருவர் பிரபலமான ஒரு பள்ளியில் தன் பையனைச் சேர்த்தார். பையன் இரண்டாவது மாதமே ஊருக்கு ஓடி வந்து விட்டான். டெபாசிட் பணம் மற்றும் இதர கட்டணங்கள் எதையும் அந்தப் பள்ளி திரும்பத் தரவே இல்லை. மறுத்து விட்டார்கள். நண்பருக்கு லட்சங்கள் இழப்பானது. நண்பரும் அதை அத்துடன் விட்டு விட்டார். பள்ளிக்கு பல லட்சங்கள் லாபம். அதையெல்லாம் எந்தக் கணக்கில் எழுதுவார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.
சமீபத்தில் எனக்கு நெருக்கமான நண்பரின் பையனுக்கு, நானே முயற்சித்து, அதற்கு பெரிய ஆட்களின் இலவச சிபாரிசுகளைப் பிடித்து தமிழகத்தின் பிரபலமான பள்ளியில் பதினொன்றாம் வகுப்புக்கு அட்மிஷன் பெற்றேன். பையன் படு ஷார்ப். இதுவரை அவன் படித்த பள்ளியில், வகுப்பில் எப்போதும் முதல் மாணவன். அட்வான்ஸ் படிப்பு. ஐஐடியில் படிக்க வேண்டுமென்று அவனது விருப்பம். அந்தப் பள்ளியில் படித்தால் அவனது நோக்கத்துக்கு அது உதவும் என்ற நண்பரின் விருப்பமும், எனது விருப்பமும் இருந்தது.
அட்மிஷன் பெற்ற அன்று வெறும் வெள்ளைத்தாளில் பள்ளியின் சீல் வைத்து கையெழுத்து இட்டு, பணம் பெற்றுக் கொண்டதற்காக ஒரு ஒப்புகை சீட்டும், நன்கொடை என ஒரு டிரஸ்டின் ரசீதும் கொடுத்தார்கள். அடியேன் எனது வாகனத்தில் அமர்ந்து அம்மணிக்காக காத்துக் கொண்டிருந்தேன். மனையாள் பணத்தைக் கட்டி விட்டு, ரசீதுகளை என்னிடம் கொண்டு வந்து காட்டினார். சிரித்து வைத்தேன். ”ஏன் சிரிக்கின்றீர்கள்?” என்று கேள்வி கேட்க, ஒன்றும் சொல்லவில்லை. சில விஷயங்களை சில நேரங்களில் பேசாமல் இருப்பது நல்லது.”உங்களுக்கு இதே வேலையாப் போச்சு, எதற்குச் சிரிக்கின்றீர்கள்? எனப் புரியவேயில்லை” என்றார்.
பையன் பள்ளிக்குச் செல்ல ஆரம்பித்தான். இரண்டு நாட்களில் பள்ளியின் ஆசிரியர்களின் தரமும், பாடம் எடுக்கும் விதமும் அவனுக்குப் புரிந்து போனது. இனி இந்தப் பள்ளியில் தொடர்ந்தால் தன் தலையில் தானே மண் அள்ளிப் போட்டுக் கொள்வது போல ஆகி விடும் என நினைத்து பள்ளிக்குச் செல்ல முடியாது எனவும், அதற்கான காரணங்களையும் சொன்னான். ஆறு ஆண்டுகள் ஆசிரியராகப் பணியாற்றிய அனுபவத்தில் பள்ளியில் என்னென்ன கூத்துக்கள் நடக்கும் என்று தெரிந்ததினால் அவன் சொன்ன காரணங்கள் அனைத்தும் உண்மை என்று புரிந்தது.
பள்ளியில் இருந்து நின்று விட்டான். முன்பு படித்த பள்ளியில் மீண்டும் சேர்ந்து படிக்க ஆரம்பித்தான். இனி நாம் கொடுத்த பணத்தைத் திரும்பப் பெற வேண்டுமே என நினைத்து நானும் மனையாளும் பள்ளிக்குச் சென்றோம். மனையாள் பேசிப்பார்த்தார். வெளியில் வந்து உதட்டைப் பிதுக்கினார்.
அட்மினை (நினைவுக்கு வருகிறதா?) ”என்னவர் முடியாதவர், சற்று வெளியில் வந்து சந்திக்க முடியுமா? என்று கேட்டு வெளியில் வரச்சொல்லும்படி செய்யும்படி” மனையாளைக் கேட்டுக் கொண்டேன்.
ஒரு நக்கல் சிரிப்புடன் சென்று வரும்போது யாரோ ஒரு செம கிக்காக உடை உடுத்திய பெண்ணுடன் வந்தார். மனையாளின் கண்கள் என் கண்களையே உற்று நோக்கியபடி இருந்ததைக் கவனித்தேன். அது விதி. அனுபவித்துத்தான் ஆக வேண்டும். எவ்வளவு உத்தமனாக இருந்தாலும், எதிர்பாலின இயல்பு மறைந்து போகாது.
உங்களுக்குப் புரியவில்லை என நினைக்கிறேன். பாம்பின் இயல்பு கொத்துவது, பாலை ஊற்றி வளர்த்தாலும் அதற்குப் பிடிக்காத மாதிரி நடந்து கொண்டால் ஒரே போடு, பரலோகம்தான் கதியாகும். புரிந்து விட்டதா?
இப்படித்தான் மச்சினிச்சிகள் வாழ்க என்ற பதிவு எழுத, அதை தினமலர்காரன் தன் பத்திரிக்கையில் வெளியிட்டு இருந்த கொஞ்ச நஞ்ச குஷிக்கும் குழியினைப் பறித்தார்கள்.
அதுதான் அட்மினென்று தெரிந்தாலும், அருகில் வந்தவுடன், “கோதை, அட்மின் என்றுச் சொன்னாயே அவங்க எங்கே? யாரோ ஸ்கூல் பெண்ணுடன் வருகின்றாயே?” என்றேன். மனையாளுக்கு கடுகு உள்ளுக்குள் பொரிய ஆரம்பித்து விட்டது. பாம்பின் கால் பாம்பறியும். போட்ட பிட் வேலை செய்து அட்மின், “சார், நான் தான் அட்மின்” என்று கூவியது. கவனிக்க(!!!) சுத்தம் செய்த பற்கள் பளீரிட ஒரு நிமிடம் கண்ணை மூடித் திறந்தேன். பாடலாசிரியர்கள் இதைத்தான் மின்னல் என்றார்களோ???? தெரியவில்லை.
”மேடம், பையன் ஒரு மாதம் கூட படிக்கவில்லையே, அந்த டொனேஷன் பணத்தையாவது திரும்பித் தர முடியாதா?” என்று கேட்டேன்.
“எங்கள் பள்ளியில் அது வழக்கம் அல்ல, கொடுக்கவும் முடியாது” என்றது அது.
“நீங்கள் பணம் தரவில்லை என்றால், கோர்ட்டில் வழக்குத் தொடுக்கச் சொல்கிறார் பையனின் அப்பா, கோர்ட் வழக்கு என்றால் பள்ளியின் பெயர் கெட்டு விடும், சமாதானமாகப் போகலாமே? நீங்கள் உங்கள் சேர்மனிடம் பேசக்கூடாதா?” என்றேன்.
“சார், நீங்கள் எந்த கோர்ட்டுக்கும் போனாலும் பிரச்சினையில்லை, ஜட்சுகளின் பையன்களே எங்களது பள்ளியில் தான் படிக்கின்றார்கள், முடிந்தால் பார்த்துக் கொள்ளுங்கள்” என்றது அட்மின்.
அத்துடன் நிறுத்தி இருந்தால் பரவாயில்லை. ஒரு இகழ்ச்சியான பார்வையோடு என்னை அட்மின் அகங்காரமாக கடந்து சென்றது. கன்னியரின் கடைக்கண் பார்வை பதிந்து விட்டால் மாமலையும் மடுகாகும் என்றார்கள் முன்னோர்கள்.
அடியேனால் அதை மட்டும் மறக்க முடியவில்லை.
மனையாள் ”பெரிய இடம், மோத இயலாது, உங்கள் நண்பரிடம் சொல்லி விடுங்கள், எதுக்கு வம்பு?” என்றார்.
நானென்ன ரஜினியா, கமலா, விஜயா, அஜித்தா? டைரக்டருகளை வைத்து வசனமெழுதி வெற்றிடத்தைப் பார்த்து வீர வசனம் பேசி, காற்றில் கையை வீசி மிரட்டுவதற்கு. இது எதார்த்தம். ஒரு அட்மின் குயில் என்னை என் வீட்டுக்கார அம்மணியின் முன்னால் இளக்காரமாகப் பார்த்த அவமதிப்பு என்னைக் குடைந்து கொண்டிருந்தது.
அட்மின் குயிலுக்கு ”யார்ரா இவன்? எழுந்து ஓடக்கூட முடியாது, இவனெல்லாம் நமக்கு ஒரு ஆளா?” என நினைத்திருப்பார் போல.
சி.பி.எஸ்.சி கட்டுப்பாட்டில் இயங்கும் பள்ளி அது. அமைதியாக சிந்திக்க ஆரம்பித்தேன். ஒரு சில ஆவணங்களை இணையத்தில் இருந்து எடுத்து படிக்க ஆரம்பித்தேன். இரண்டு முழு நாட்கள் ஆகின. எனக்குத் தேவையான ஆவணங்களும், சாட்சிகளும் கிடைத்தன. எனது வக்கீல் நண்பரிடம் சென்று ஆவணங்களைக் காட்டி, நோட்டீஸ் அனுப்பச் செய்தேன்.
வக்கீல் நண்பர் நோட்டீஸ் தயாரித்து எனுக்கு அனுப்பி வைத்தார். அதில் இரண்டொரு மாறுதல்களைச் செய்து அனுப்பி வைத்தோம். பள்ளியில் இருந்து பதில் வராது என்று நினைத்தேன். அதன்படியே பதிலில்லை. அடுத்ததாக வழக்குப் பதியச் சொன்னேன். கோர்ட்டில் வழக்குப் பதிய ஆவணங்களைத் தயார் செய்து தாக்கல் செய்தோம்.
அடுத்த பதினைந்தாவது நாள் கையெழுத்து சரியில்லை என்றுச் சொல்லி வழக்காவணங்கள் திரும்பின. அத்துடன் பள்ளியில் இருந்து ஒரு டிடியும் வந்தது. இந்த ஆவணம் திரும்புதலில் பல்வேறு விஷயங்கள் இருக்கின்றன. நான் கேட்டது நன்கொடை மட்டுமே. ஆனால் பள்ளி கட்டிய பணம் அனைத்தையும் செலவு போக திருப்பித் தந்தது. டிடியை வாங்கிப் பார்த்தேன். மீண்டும் சிரிப்பு வந்தது.
“நீங்க எதுக்குத்தான் இப்படி லூசுத்தனமாகச் சிரிக்கின்றீர்களோ தெரியவில்லை” என்று மனையாள் அலுத்துக் கொண்டார்.
நண்பரிடம் விஷயத்தைச் சொல்லி, பணத்தை அவரின் அக்கவுண்டில் வரவு வைத்தேன்.
பணம் அக்கவுண்டில் வந்த பிறகு நண்பரை அழைத்தேன்.
”இந்த டிடியை வைத்துக் கொண்டு மீண்டும் ஒரு வழக்குப் போடலாம். ஒரு கோடி வாங்கட்டுமா? இல்லை பத்துக் கோடி வாங்கட்டுமா?” என்று கேட்டேன்.
அதிர்ந்தார் நண்பர்.
விபரத்தைச் சொன்னேன். நண்பர் நல்லவர். ”நான் செலவு செய்த தொகை வந்து விட்டது. ஆகவே இதை இத்துடன் விட்டு விடுங்கள்” என்றார். அவர் அதை மட்டும் சொல்லாமலிருந்தால் இந்தப் பதிவு எழுதி இருக்க மாட்டேன்.
”பள்ளிக்குச் சென்று இப்படியெல்லாம் செய்யக்கூடாது என்று விபரமாகச் சொல்லி விட்டு வாருங்கள்” என்றுச் சொன்னார்.
நேரமிருக்கும் போது அட்மின் குயிலைப் பார்த்து கொஞ்சம் பேசி விட்டு வர வேண்டும். அழகான அந்த முகம் அஷ்டகோணலாக மாறுவதை என்னால் சகித்துக் கொள்ளவே முடியாது. ஆகவே இன்னும் செல்லவில்லை.
மனையாள், ”உங்களுக்கு கடவுள் மண்டை முழுவதும் மூளையாக வைத்து விட்டார் போல” என்று பாராட்டினார். மண்டை முழுவதும் மூளை இருந்தால் அது வேற ஆள் மாதிரி.
பாராட்டினாங்கன்னு மகிழ்ந்து போக நானென்ன ரஜினியா? இல்லை கமலா?
ஆள் எவ்வளவு பெரியவனாக இருந்தாலும் சரி, நீதிமன்றத்தை கையாளத் தெரிந்து கொண்டால் கண்ணுக்குள் விரலை விட்டு ஆட்டு ஆட்டுன்னு ஆட்டி விடலாம். தேவை கொஞ்சம் நிதானமும், கொஞ்சமே கொஞ்சம் புத்திசாலித்தனமும்.