ஜல்லிக்கட்டு நடத்த அனுமதி கேட்டு மாணவர்கள் இந்தாண்டு போராட்டத்தை முன்னெடுத்தெடுக்கிறார்கள். மிக்க மகிழ்வைத் தரும் நிகழ்வு இது. ஈழப் போராட்டத்தைப் பிசுபிசுக்க வைத்தது போலவும், மதுவிலக்குப் போராட்டத்தைக் கலகலக்க வைத்தது போலவும் இந்தப் போராட்டம் ஆகி விடக்கூடாது என்பதில் போராட்டக்காரர்கள் வெகு ஜாக்கிரதையாக இருத்தல் அவசியம்.
மீடியாக்களின் கவனம் இப்போது மாணவர்களின் மீது உள்ளது. ஆனால் அந்தக் கவனம் திசை மாறி திசை திரும்பி விடுமோ என்ற எண்ணத் தோன்றுகிறது. காரணம் சினிமா நடிகர்கள். நடிகர்கள் சங்கத்தில் இப்போது ஆக்டிவாக இருக்கும் சில நூறு நடிகர்கள் சேர்ந்து கொண்டு ஜல்லிக்கட்டு ஆதரவு போராட்டம் நடத்த ஆரம்பித்தால் மீடியாக்கள் இந்த நடிகர்களின் போராட்டத்தை லைவ் ரிலேவாகவும், செய்திகளாகவும் வெளியிடுவார்கள். மாணவர்களின் போராட்டம் மீடியா மத்தியில் கவனம் இன்றிப் போய்விடும் சாத்தியங்கள் அதிகமிருப்பதை எவராலும் மறுக்க முடியாது.
தார்மீக ரீதியாக மீடியாக்கள் சில நடிகர்களின் போராட்டத்தை கண்டு கொள்ளக்கூடாது. மாணவர்கள் போராட ஆரம்பித்த பிறகு தான் நடிகர்கள் தங்கள் போராட்டத்தை அறிவித்திருக்கிறார்கள். தங்களைப் பார்க்க மாணவர்கள் கூடுவார்கள் என்ற கணக்குப் போட்டு இருக்கலாம். அதனால் இந்த ஜல்லிக்கட்டு போராட்டத்தில் பெரும் ஆதாயமெடுக்க நினைத்திருக்கலாம்.
தமிழகத்தின் ஒவ்வொரு நிகழ்விலும் சிறுபான்மையினராக இருக்கும் சினிமாக்காரர்கள், நாங்களும் போராடுகிறோம் என போராட்டத்தின் வீரியத்தை வீழ்ச்சியுறச் செய்வதும், போராட்டக்களத்தின் பலனை தங்களுக்கு ஆதரவாக பயன்படுத்திக் கொள்வதையும் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் பணம் சம்பாதிக்கட்டும் அது அவர்களின் உரிமை. நாங்களும் தமிழர்கள் தான் என்று சொல்வார்கள். எங்களுக்கும் போராட உரிமை உள்ளது என்பார்கல். யார் இல்லை என்று சொன்னார்கள். ஆனால் உண்மையான போராட்டத்தை தன் பக்கம் திருப்பி விடும்போக்கினைத்தான் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
(இதோ இந்த ஏறுதழும் வீரனைப் போல ஒரு காளையை தழுவ முடியுமா சினிமா நடிகர்களால்? நடிப்பதில் மட்டுமே வீரம் காட்டும் வீரர்கள் நடிகர்கள்)
சினிமா என்கிற மாயமோகத்தை வைத்து அறுவடை செய்யும் ஜெகஜ்ஜாலக் கில்லாடிகளின் சுய நலப்பாச்சாவைப் புரிந்து கொள்ள வேண்டும். இதுவரை ஏமாந்தது போதும். நடிகர்களுக்காக நாட்டை கொடுத்த நிகழ்வுகள் இனி வேண்டாம். நடிகர்கள் நடித்து விட்டு பணம் சம்பாதிக்கட்டும் அதுவல்ல பிரச்சினை. சினிமாவைப் பார்த்து ரசிக்கலாம். விமர்சிக்கலாம். பிடிக்கவில்லை என்றால் நிராகரிக்கலாம். அது ஒரு பொழுது போக்கு மட்டுமே.
இப்போது சினிமா நடிகர்கள் தங்கள் படத்தைப் பார்க்க வரும் இளைஞர் கூட்டத்தினரின் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவிக்க வேண்டும். அதைத்தான் அவர்கள் இந்த நேரத்தில் செய்ய வேண்டும். சினிமா என்ற லேபிள் போராட்டம் இந்த நேரத்தில் தேவையில்லாத ஒன்று. மாணவர்களின் போராட்டத்தினை பிசுபிசுத்திட வைத்திடுமோ என்ற சந்தேகம் ஏற்படுகிறது.
மீடியாக்கள் சினிமாக்காரர்களுக்கு வெளிச்சமிடுவதை கொஞ்சம் கொஞ்சமாகக் குறைத்துக் கொள்ள வேண்டும். மாணவர்களின் போராட்டத்தை ஆதரித்து தமிழனின் பாரம்பரியம் அழிக்கப்பட்டு விடாமல் பாதுகாத்திடல் வேண்டும். ஒவ்வொரு தமிழனாலும் தான் மீடியாக்கள் அசுர வளர்ச்சி அடைகின்றன என்பதை மறந்து விடக்கூடாது.
சாலையில் இறங்கிப் போராடும் தங்களின் குழந்தைகளுக்கு ஒவ்வொரு பெற்றோரும் ஆதரவு தெரிவிக்க வேண்டும். போராட்ட மாணவர்களுக்கு உணவும் உதவியும் வழங்க வேண்டும். ஒவ்வொரு தமிழனும் குடும்பம் குடும்பமாக ஆதரவினை அளித்துக் கொண்டே இருக்க வேண்டும். இறுதி ஆண்டுப் பரிட்சைகள் வரக்கூடும். அதிலும் கவனம் வைத்தல் அவசியம்.
சினிமாவாலும் அரசியலாலும் பீடிக்கப்பட்டு சீரழிந்து தமிழர் சமூகம் கிடக்கிறது. உலகிற்கே உயர்வான நாகரீக வாழ்க்கை வாழ்ந்து வந்த தமிழர் சமுதாயம் தலை நிமிரட்டும். சீறிவரும் காளைகளென எக்காளமிட்டு ஜல்லிக்கட்டு நடத்த போராட்டத்தை முன்னெடுங்கள். ஆரம்பம் இதுதான்.
தமிழர் நாடு எனும் தமிழ் நாடு தனது பாரம்பரியத்தை மீட்டெடுத்து தன் சந்ததியினருக்கு வாழையடி வாழையாக கொடுத்து மேன்மையுற வாழ வேண்டும்