குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Monday, November 26, 2012

இயல்பாய் இருங்களேன்

மனித சமூகம் ஈகோவினால் வாழ்ந்து கொண்டிருக்கிறது. எது நல்லது, எது கெட்டது என்பதை எந்த வித முன் யோசனையின்றி தற்போதைய மனித குலம் முடிவெடுக்கிறது. பிறகு அவஸ்தைப் படுகின்றார்கள்.

சாலைகளில் பாருங்கள். வேடிக்கையாக இருக்கும். புதுச் சட்டை போட்டாலோ, ஹேர் ஸ்டைல், செல்போன், கார், பைக் வாங்கினால் என்னவோ உலகே அவர்களையே உற்று உற்றுப் பார்ப்பதாய் நினைத்துக் கொண்டு சேஷ்டைகள் செய்து கொண்டுச் செல்வார்கள். அவரவருக்கு அவரவர் வேலை. நிற்காமல் ஓடிக்கொண்டே இருக்கின்றார்கள். அவர்களாவது இவர்களைப் பார்ப்பதாவது? இதாவது பரவாயில்லை.

ஒரு கோடி கொடுத்து கார் வாங்குபவன் எதற்கு வாங்குகிறான் என்று நினைக்கின்றீர்கள்? அவனைச் சுற்றி இருப்போர் அவனைப் பார்த்து பொறாமைப் பட வேண்டும் என்பதற்காகத்தான் அவன் அந்தக் காரை வாங்குகிறான். பிறர் தன்னை உயர்த்திப் பார்க்க வேண்டும் என்பதற்காகத்தான் பெரும்பான்மையான மனிதர்கள் ஓடி ஓடி உழைத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த் ஈகோவினால் தான் பிராண்டட் கம்பெனிக்காரர்கள் கோடிகளைக் குவிக்கிறார்கள்.

உங்கள் வீட்டில் என்ன டிவி இருக்கிறது? எங்கள் வீட்டில் எல் ஈ டி டிவி இருக்கிறது என்று பெருமையடித்துக் கொள்வார்கள். அந்த எல் ஈ டி கொஞ்ச நாள் கழித்து குப்பையாகி வேறு ஒரு டிவி மார்க்கெட்டில் வந்து விடும். டிவி கம்பெனிக்காரர்கள் புதிய புதிய பொருட்களாய் விற்று சம்பாதிப்பார்கள். வாங்குபவர்களுக்கு காசும் போய்  எல்லாம் போய் விடும்.

நேற்றைய நீயா நானாவில் எதிர்கால சந்ததிகளுடன் பாக்கெட் மணி பற்றிப் பேசினார்கள். அதில் பேசிய எந்த ஒரு இளைஞனும், இளைஞியும் படிப்பைப் பற்றி ஒரு வார்த்தை பேசவில்லை. நண்பர்கள் என்பதைத் தவிர அவர்கள் பெரிதாய் வேறு எதையும் சொல்லவில்லை.

எப்படிப்பட்ட இளைஞர்கள் தமிழ் நாட்டில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்பதைப் பார்த்த போது வேதனையாக இருக்கிறது.

நோக்கியா ஹெட் போன் வாங்கினால் அதைக் காதில் மாட்டிக் கொண்டு அலப்பறை செய்வது என்று பிறர் தன்னைப் பார்க்க வேண்டும் என்பதற்காக இயல்பு மாறி விடுகின்றார்கள்.

இயல்பாய் இருந்தால் என்ன? குடியா முழுகிப் போய் விடும்?

பெரும்பான்மையான மக்கள் தனக்கென வாழாமல் பிறர் பார்க்க வேண்டுமென்பதற்காக வாழ்கிறார்கள். இப்படியான வாழ்க்கை முடிவில் வெற்று வாழ்க்கையைத்தான் தரும்.

பத்தாயிரம் ரூபாய் ஷூ போட்டால் தான் சமூகம் உங்களை மதிக்கும் என்று எவராவது நம்பினால் அதை விடக் கேனத்தனமானது எதுவும் இல்லை.

கீழே இருக்கும் இரண்டு படங்களில் உலகம் இன்றும் யாரை நினைவில் வைத்து வணங்கி வருகிறது என்று ஒரு நிமிடம் நினைத்துப் பாருங்கள். நிதர்சனம் புரியும். பகவான் ரமணரிடம் ஒரு கோவணம் தான் இருக்கிறது. ஆனால் பாகவதரிடம்?

( ரமண மகரிஷி )


(தியாகராஜ பாகவதர்)


Wednesday, November 7, 2012

பாலத்தின் மீது வீடு கட்டாதே


“என்னுடனே இருக்கும்படி தேவரீர் தந்த ஸ்திரீயானவள் அவ்விருட்சத்தின் கனியை எனக்குக் கொடுத்தாள். நான் புசித்தேன். ஸ்திரீயானவள், சர்ப்பம் என்னை வஞ்சித்தது, நான் புசித்தேன் என்றாள்” - ஆதியாகமம் 3-12-13 பைபிள்




பாவம் செய்தோரே பரலோகப்பிதாவின் முன்னே மண்டியிட்டு பிரார்த்தியுங்கள். அவர் உங்களை ஆசீர்வதிப்பார். ஆதாம் ஏவாள் செய்த பாவத்தின் பலனாய் துன்ப உலகில் துயருரும் அனைவரையும் அவர் விடுவிப்பார். 

விடுதிகளின் அறைகளூடே தங்கிச் செல்லும் யாத்ரீகர்கள் போலே பிரசங்கங்களின் முடிவில் காசு மழை கொட்டும். கொட்டும். கொட்டும்.

பாவங்களை மன்னிப்பாரா பரிசுத்த ஆவியானவர்? சிலுவை பதில் சொல்கிறது. ஏனப்பா இயேசு சிலுவையில் அறையப்பட்டார்?

ஆதாம் - விவேகம், ஏவாள் - உணர்ச்சி. 

முதுகுத்தண்டை திருப்பி போட்டுப் பார்! 

மரத்தின் இலைகள் முதுகுத்தண்டின் பாதி வரை தொங்குகின்றது. கனியைப் பார். அதைப் புசிக்க விடாமல் செய்தது யார்? 

உணர்ச்சியின் பிடியிலே சிக்கிய ஏவாளா?

முள்ளம் தண்டினூடே ஓடும் ஆற்றல் அணுவை விட உச்சமானது. அக்கனியைப் புசித்தார்கள் புத்தரும் ஏசு நாதரும்.

ஏதன் தோட்டத்தின் வாயிலை அடைத்தது யார்? பாம்பு ! 

நெளியும் பாம்பின் பிடியிலே மனிதர்கள். பாம்பு தன் உடம்பால் சுற்றிக் கொண்டிருக்கிறது. மனிதர்கள் இறுக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மாயா உலகின் மாயையின் காலடியிலே கனியைப் பற்றிய புரிதல் இன்றி ஆப்பிளை வெட்டி வெட்டி முழுங்கிக் கொண்டிருக்கின்றார்கள். கனி தொங்கிக் கொண்டே இருக்கிறது. தோட்டம் பராமரிப்பின்றி கிடக்கிறது.

அவன் காத்துக் கொண்டே இருக்கிறான். ஆனால் எவரும் அவரிடம் எதுவும் கேட்பதும் இல்லை. அவரைப் பற்றிச் சிந்திப்பதும் இல்லை.

பாலத்தின் மீது வீடு கட்டிக் கொண்டே இருக்கின்றார்கள். பாலம் என்பது கடக்கத்தானே ஒழிய தங்கி விடும் இடம் அல்ல.

- கோவை எம் தங்கவேல்

Thursday, October 11, 2012

காய்கறிகளில் விஷத்தன்மையை நீக்குவது எப்படி?

கறிவேப்பிலை, மிளகாய், பசலைக்கீரை, கத்தரி, வெண்டை, புடலை போன்றவற்றின் மீது பூச்சிக்கொல்லி மருந்துகள் படிந்திருக்கின்றன. இம்மருந்துகளை நீக்கி விட்டு உணவாகச் சமைத்தால் தான் பூச்சிக்கொல்லி மருந்துகளால் வரக்கூடிய எழுதவே முடியாத பல்வேறு வகை நோய்களில் இருந்து தப்பிக்கலாம்.

சாதாரண தண்ணீரில் கழுவி விட்டு காய்கறிகளைச் சமைப்பது சொந்தச் செலவில் சூனியம் வைத்துக் கொள்வதுக்கு ஒப்பாகும்.

பூச்சுக் கொல்லி விஷத்தன்மையை எப்படி நீக்குவது?

மஞ்சள் தண்ணீர் அல்லது வினிகரை எடுத்துக் கொள்ளுங்கள். அதில் காய்கறிகளை நன்கு அமிழ்த்தி ஊற விட்டு பின்னர் கழுவிக் கொள்ளவும். இவ்வாறு செய்யும் போது காய்கறிகளின் மீது படிந்திருக்கும் 95 சதவீத மருந்து நீக்கப்படும் என்று கேரளாவைச் சேர்ந்த தனியார் அமைப்பின் ஆய்வறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது. (ஆதாரம் டைம்ஸ் ஆஃப் இந்தியா)

பணக்காரர்களின் அரிசியான பாசுமதியில் மிக அதிகமான பூச்சிக் கொல்லி மருந்து இருக்கிறது என்கிறது அவ்வறிக்கை.

சுகாதாரத் துறையின் அலுவலர்கள் லஞ்சம் வாங்குவதில் மட்டுமே வாழ்க்கை என்பதாய் வாழ்வதால், இது போன்ற மக்களைக் கொல்லும் நஞ்சுகளில் இருந்து தப்பிப்பது என்பது முடியாத ஒன்று.

கேஎஃப்சி சிக்கனில் புழு இருந்தது என்று திருவனந்தபுரத்தின் செய்தி. உலகெங்கும் கடை விரித்திருக்கும் கேஎஃப்சி இது போல அமெரிக்காவில் புழு சிக்கனை விற்றிருந்தால் இந்த நேரம் கடை என்னவாகி இருக்கும் என்று ஒரு நிமிடம் யோசித்துப் பாருங்கள். கடையை சோதனை செய்யக்கூட கடைச் சிப்பந்திகள் அனுமதிக்கவில்லையாம்.

நேற்று திரு.குருமூர்த்தியின் கட்டுரை ஒன்றினை வாசித்தேன். சேமிக்கும் வழக்கமுடைய நம் இந்திய மக்களை திரு மன்மோகன் சிங் அவர்கள் பங்குச் சந்தையில் முதலீடு செய்யச் சொல்கிறார், இதைத்தான் புது பொருளாதார வளர்ச்சி என்கிறார் என்று குருமூர்த்தி சொல்கிறார். காலம் காலமாய் ஒரே வழக்கமுடைய மக்களை திசை திருப்பி அமெரிக்கர்களைப் போல பங்குச் சந்தையில் முதலீடு செய்ய வைத்து மக்களை கடன்காரர்களாக்கி, குடும்பங்களை தனிமைப்படுத்தி, சமூக கட்டமைப்பையே உடைத்துப் போடும் அளவுக்கு திரு மன்மோகன் சிங்கின் பொருளாதார சிந்தனை இருக்கிறது என்கிறார் அவர்.

அதுமட்டுமல்ல அமெரிக்காவில் திவாலான மிகப் பெரிய வங்கிகளைப் போல இந்தியாவிலும் உருவாக்கி விட வேண்டுமென்ற திரு.ப.சிதம்பரத்தின் கொள்கையை இப்பொருளாதார சித்தாந்தம் ஊக்குவிக்கின்றது என்றும், இதை நோக்கித்தான் திரு.ப.சி அவர்கள் சென்று கொண்டிருக்கின்றார் என்கிறார் அவர்.

கோவையில் பெரிய பணக்காரர்கள் எல்லோரும் பல சிலிண்டர் கனெக்‌ஷன்களை வைத்துக் கொண்டு, தங்கள் கார்களுக்கு மானியச் சிலிண்டர்களை பயன்படுத்தி உல்லாச வாழ்க்கை வாழ்வது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. இதைப் போல அமைச்சர்களும் பயனடைகின்றார்கள் என்பதும் நமக்குத் தெரிந்த ஒன்றே. இதைக் காரணமாய் வைத்துக் கொண்டு ஏழை எளிய மக்களுக்கு வழங்கிய சிலிண்டர்களைக் குறைப்பது பெரிய திருடர்களை ஒழிக்க வீடுகளே இல்லாமல் ஆக்குவது போன்றது. இது  என்னவிதமான பொருளாதார வளர்ச்சியோ தெரியவில்லை.

இன்றைக்கு இருக்கும் டெக்னாலஜியின் அசுர வளர்ச்சியில் போலி அடையாள அட்டை, ரேஷன் அட்டைகளை களைவது வெகு எளிதானது. அதைச் செய்து போலிகளைக் களைந்து விடாமல் இப்படி மக்களை துன்பத்தில் ஆழ்த்துவது மக்கள் விரோத சிந்தனை என்றுதான் சொல்ல வேண்டி இருக்கிறது.

கோவையில் மின்சாரம் வரும் நேரங்கள் மாற்றப்பட்டு இருக்கின்றன. காலையில் 6-8, மதியம் 12-2, இரவு 6-7, 9-10, 11-12, 1-2, 4-5. இப்படி ஒரு மின்சார சப்ளையை உலகத்தில் வேறு எங்கும் மக்கள் அனுபவித்தே இருக்க மாட்டார்கள். அதிமுக ஆட்சிக்கு வந்து ஒன்றரை வருடங்கள் ஆகி விட்டன. இன்னும் மின்வெட்டு சரிசெய்யப்படவில்லை. அல்லது ஒழுங்கு படுத்தக்கூட இல்லை. இப்படியே சென்றால் தமிழர்கள் பீகாரிகள் போல அகதிகளாய் மாறி விடும் சூழ் நிலை வந்தே தீரும். அதற்குள் ஆட்சியாளர்கள் மின்வெட்டினை ஒழுங்குபடுத்தி விட வேண்டும். ஆனால் நிச்சயம் செய்ய மாட்டார்கள்.

ஓட்டுப்போடும் போது வாங்கிய காசுக்கு பலனை அனுபவித்துத்தானே தீர வேண்டும்? தமிழகம் அனுபவிக்கின்றது.




Saturday, September 29, 2012

கோவிலும் மனித உடலும்


தமிழர்கள் வாழ்ந்த புண்ணிய பூமியை, குமரிக் கண்டத்தினை கீழே இருக்கும் படத்தில் பாருங்கள். இப்படி இருந்த தமிழர் வாழ்விடம் இப்போது இருக்கும் அவலத்தையும் பாரீர். இருக்க இடம் இல்லாமல் தவிப்பதைப் பாரீர். பரிசோதனைக் கூடங்களில் கொல்லப்படும் எலி போல தமிழர்கள் கொல்லப்படுவதைப் பாரீர். ஏன் என்று கேட்க நாதியற்றுப் போனதைப் பாரீர். உலகின் மூத்த குடியான தமிழர்கள் தண்ணீருக்கும், மின்சாரத்திற்கும் கையேந்தி நிற்கும் அவலத்தைப் பாரீர். 


ஆனால் உங்களுக்கு ஒரு உண்மையை நான் சொல்லித்தான் ஆக வேண்டும். காலத்தின் சூழலில் மனம் மயங்கி கிடக்கும் தமிழர்கள் தான் இன்றைக்கும் என்றைக்கும் அசைக்கவே முடியாத உலக கோடீஸ்வரர்களுக்கெல்லாம் கோடீஸ்வரர்கள். ஏன் இப்படிச் சொல்கிறேன் என்பது ஒரு ரகசியம். அதையெல்லாம் பட்டவர்த்தனமாக வெளியில் சொல்ல முடியாது. காலம் வரும் போது தெரிந்து கொள்ளுங்கள். அது சுனாமியைப் போல தன்னை வெளிப்படுத்திக் கொள்ளும்.

நம் தமிழர்களின் அறிவிற்கு எந்த மனிதனாலும் ஈடே கொடுக்க முடியாது. ஒவ்வொரு தமிழனின் வாழ்வியல் கோட்பாட்டிலும் அசைக்க முடியாத பங்கீட்டாய் இருப்பவை கோவில்கள். “கடவுள் நம்மைக் காப்பாற்றுவாரா?” பதிவில் ஒரு பாடல் இருக்கிறது. அப்பாடலையும் கீழே வரும் விபரங்களையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

கோவிலின் அமைப்பும் மனித உடலின் பாகங்களும்

முன்கோபுரம் - பாதங்கள்
முன்மண்டலம் - முழங்கால்
நிருத்தமண்டபம் - தொடை
பலிபீடம் - தொப்புள்
மகாமண்டபம் - மார்பு
அர்த்தமண்டபம் - கழுத்து
கர்ப்பகிரகம் - சிரம்
தட்சிணாமூர்த்தி - வலது செவி
சண்டிகேஸ்வரர் - இடது செவி
ஸ்தபனமண்டபம் - மூக்கு
ஸ்தபனமண்டலவாசல் - வாய்
லிங்கம் - புருவத்தின் மத்திய பகுதி
விமானம் -தலையின் உச்சி
சரீரப்ப்ரஸ்தாரம் ஷேத்திரம் (தலம், கோவில் இருப்பிடம்)

அன்ன மயம், பிராண மயம், மனோ மயம், விஞ்ஞான மயம், ஆனந்த மயம் என்கிற ஐந்து பிரகாரங்களையும் ஐந்து வித கோஷங்கள் என்று குறிப்பிடுவார்கள்.  இதனைப் பின்பற்றித்தான் சாமியை வழிபடல் வேண்டும். 

கோவில்களுக்குச் சென்று வழிபடுவது எப்படி  என்பதைப் பற்றித் தெரிந்து கொள்ளுவோம்.

மன ஒருமை செய்து, வேற்று சிந்தனை களைந்து, இறையுடன் ஒன்றி கோவிலுக்குள் நுழைய வேண்டும். பலிபீடத்தின் அருகில் வீழ்ந்து தீய எண்ணங்களை பலிகொடுத்து, சுத்தமான உணர்வுடன் எழுந்து கொடிமரத்தின் அருகில் சென்று விழுந்து வணங்க வேண்டும்.

ஆண்கள் - தலை, இரண்டு கைகள், இரண்டு காதுகள், இரு முழங்கால்கள், மார்பு போன்றவை மண்ணில் பட வணங்க வேண்டும்.

பெண்கள் - இரண்டு கைகள், இரண்டு முழங்கால்கள், தலை பூமியில் படும்படி வணங்க வேண்டும்.

சன்னதி கிழக்கு என்றால் பலிபீடத்தின் அக்னி மூலைக்கு எதிரில் தலைவைத்து வணங்க வேண்டும். தெற்கு, மேற்கு நோக்கிய சன்னதி என்றால் பலிபீடத்தின் நிருதி மூலையியில் தலைவைத்து வணங்க வேண்டும். வடக்கு நோக்கிய சன்னிதியானால் பலிபீடத்தின் வாயு மூலையில் தலைவைத்து வணங்க வேண்டும்.

கொடிமரத்தைத் தாண்டி மண்டபத்தில் நுழைந்த பிறகு வேறு எந்தச் சன்னிதியிலும் வணங்கக்கூடாது. எவருக்கும் வணக்கம் செலுத்துதல் கூடாது. நந்தியை வணங்கி, அவரிடம் சிவ பெருமானை வணங்க உத்தரவு கேட்ட பிறகுத்தான் சிவனை வழிபட செல்ல வேண்டும்.

இதன் பின்னர் கருவறை வாசலில் இருக்கும் துவாரபாலகரை தரிசித்து விட்டு அதன் பின்னர் கருவறை சென்று சிவனை வழிபடல் வேண்டும். அதன்பிறகு பிற சன்னிதிகளை வணங்கலாம்.
-
நேற்று நண்பர் ஒருவர், உலகில் மாபெரும் கலவரங்கள் நடக்கப்போவதாகச் சொன்னார். இப்போதுள்ள காலத்தின் வெளிப்பாடு மிகக் கொடூரமாய் இருக்கிறது. அரசியல்வாதிகள் செய்யும் அக்கிரமங்கள் எல்லாம் அக்கிரமங்களே அல்ல. அது ஒன்றுமே இல்லாதவை. ஆனால் அரசியல்வாதிகளை முன்னிருத்திக் கொண்டு சில சுய நலவாதிகள் செய்யும் அக்கிரமங்கள் அளவுகடந்து செல்கின்றன. அரசியல்வாதி 0.000001 பர்செண்டேஜ் தின்கிறான். ஆனால் இவனை துணையாக்கும் சுய நலவாதிகள் தின்பது 9.99999 பர்செண்டேஜ். இச்சுய நலவாதிகளுக்கெதிரான மக்கள் கலவரங்கள் நடக்கப் போகின்றது என்பதைக் குறிகள் சுட்டிக் காட்டுகின்றன. விதிப் பலனை அனுபவிக்க வேண்டிய கட்டாயத்தில் அவர்கள் இருக்கின்றார்கள். மீண்டும் ஒரு உலகப் போர் நிகழப்போகின்றது. அதிலே கவுரவர்கள் என்கிற சுய நலவாதிகள் அழிக்கப்படப்போகின்றார்கள். இப்போது ஊழல்வாதிகளாய் வெளிப்படுவது அரசியலாதிகள் அல்ல. கார்பொரேட் கம்பெனிகள் என்ற சுயநலவாதிகள். இவர்களுக்கு எதிரான மக்கள் போராட்டம் உலகெங்கிலும் ஆரம்பமாகி விட்டது. அது பரவும் ! சுய நலசக்திகளை, மக்கள் விரோத சக்திகளை அழிக்கும். அந்தப் போரில் மக்களும் தங்கள் இன்னுயிரை இழப்பர். இழப்பினும் உலகம் சுத்தமடையும்.

* * * * * * *

கட்டுரை ஆக்க உதவியும் நன்றியும் : கழுகூர் வரலாற்றுத் தழும்புகள் - கவிஞர் கழுகூர் பழனியப்பன்

Monday, September 24, 2012

கடவுள் நம்மைக் காப்பாற்றுவாரா?


கோவில்களுக்குச் செல்வது, பூஜைகள் செய்வது, அபிஷேகம் செய்வது, கோவில் பணிகள் செய்வது, தளம் போடுவது, விளக்குகள் வாங்கிக் கொடுப்பது, பூக்கள் வாங்கிக் கொடுப்பது போன்ற இறைப்பணிகளைச்  செய்பவர்களைக் கடவுள் காப்பாற்றுவாரா? 

அவ்வாறு திருப்பணி செய்பவர்கள் எல்லாம் கோடிகளில் அல்லவா மிதக்க வேண்டும்? அப்படி யாரும் இருப்பதாகத் தெரியவில்லையே?. நோய் நொடி இல்லாமல் அல்லவா வாழ வேண்டும். ஆனால் அப்படி யாருக்கு கடவுள் ஆசி வழங்குவதில்லையே? 

அதுமட்டுமா? கடவுளுக்கு நாள்தோறும் பூஜை,புனஸ்காரங்களைச் செய்து வரும் பூஜாரிகளும், ஐயர்களும் கோடீஸ்வரராய் அல்லவா மாறி இருக்க வேண்டும்? இன்றைக்கும் ஐந்து, பத்து தட்டுகளில் விழுகிறதா என்றல்லவா பார்த்துக் கொண்டிருக்கின்றார்கள் இவர்கள்?  இவர்களுக்கு நோய் நொடி வந்தால் மருத்துவரிடம் அல்லவா செல்கின்றார்கள்? கடவுளுக்கு நாள்தோறும் தொண்டு செய்பவர்களுக்கே இந்த நிலை என்றால் அவ்வப்போது கோவில்களுக்குச் சென்று வருபவர்களின் நிலை பற்றி கேட்கவே வேண்டாம்.

ஏன் கடவுள் வேண்டி நிற்போருக்கு உடனுக்குடன் எதுவும் செய்வதில்லை? கல் மனதாய் இருக்கின்றானே ஏன்? இந்தக் கடவுள் நம்மைக் காப்பாற்றுவானா? இது போல இன்னும் என்னென்னவோ கேள்விகள் இருக்கின்றன. இக் கேள்விகளுக்குப் பதில் தான் என்ன?

மேற்கத்திய கலாச்சாரத்தில் வாழ்பவர்களில் சில நாடுகளில் இருப்போர் மாயா உலகின் உச்சபட்ட இன்ப வாழ்வினை வாழ்கின்றார்கள். அவர்கள் என்றைக்கும் கோவில்களுக்கோ, சர்ச்சுகளுக்கோ செல்வதில்லை. அழகான வீடு, கார், மனைவி, வற்றவே வற்றாத பொருளாதாரம், ஆரோக்கிய வாழ்க்கையை வாழ்கின்றார்கள். கடவுளை தினம் தோறும் வணங்குபவனை விட, கடவுளைப் பற்றி சிந்தித்தே பாராதவர்கள் இன்ப வாழ்வில் திளைக்கின்றார்களே எப்படி?

நமக்கு முன்பு வாழ்ந்து சென்றவர்கள் சில அனுபவங்களைப் பாடல்களாய் பாடி வைத்திருக்கின்றார்கள். அப்பாடலில் இரண்டு பாடலை முதலில் படியுங்கள்.

கோயிலாவது ஏதடா? குளங்க ளாவது ஏதடா? 
கோயிலும் குளங்களும் கும்பிடும் குலாமரே
கோயிலும் மனத்துளே குளங்களும் மனத்துளே
ஆவதும் அழிவதும் இல்லைஇல்லை இல்லையே - சிவவாக்கியர்

மனமது செம்மையானால் மந்திரஞ் செபிக்க வேண்டா
மனமது செம்மையானால் வாயுவை உயர்த்த வேண்டா
மனமது செம்மையானால் வாசியைக் கட்ட வேண்டா
மனமது செம்மையானால் மந்திரஞ் செம்மையாமே – அகத்தியர்

மேலே இருக்கும் இரண்டு பாடல்களை ஊன்றி கவனித்துப் படித்துப் பாருங்கள். கடவுளின் தந்திரம் புரியும். 

நியூமராலஜி உண்மையா?


நேற்று மாலை நண்பர்களுடன் சந்திப்பு. எனது நண்பரொருவரால் எனக்கு அறிமுகமான நண்பரோடு எந்த வித தயக்கமோ, முதன் முதலில் பேசுகிறோம் என்கிற எண்ணமோ இன்றி வெகு சகஜமாகப் பேசினேன். அடிக்கடி பேசிக் கொள்வோம்.  

இப்படியான நாட்கள் கழிந்து கொண்டிருந்த போது நேற்றைக்கு திரு கண்ணன் அவர்களுடன் பேசிக் கொண்டிருந்தோம். எந்தக் காரணத்தை வைத்து நாம் நண்பர்கள் ஆனோம் என்று கண்ணன் அவர்களிடம் கேட்ட போது நிமித்த பிரசன்னத்தில் நாங்கள் போன ஜன்மத்தில் ஒரே இடத்தில் பணி புரிந்தவர்களாக இருந்தோம் என்றார். அதனால் தான் அந்த முன் ஜென்ம தொடர்பின் காரணமாய் நாங்கள் முன்பே பழகியவர்கள் போல பேசிக் கொண்டிருக்கிறோம் என்றார்.முன் பின் பழக்கமில்லை. நேருக்கு நேராய் பார்த்தது இல்லை. முகம் எப்படி இருக்கும் தெரியாது. இப்படியான பல இல்லைகளுக்கும் தாண்டிய ஒரு அன்பு, நெருக்கம், வியப்புத்தான். அதற்கொரு காரணம் இருக்கிறது. 

திரு கண்ணன் அவர்களிடம் பேசினால் எனக்கு பயம் வந்து விடும். காலையில் யாரிடம் பேசினீர்கள், யாரைச் சந்தித்தீர்கள் என்றெலாம் சொல்ல ஆரம்பித்து விடுகிறார். சினிமாக்காரர்களுடன் தொடர்பில் இருப்பதால் அவரிடம் பேசினாலே எனக்கு திக் திக் என்றிருக்கும். என்னைப் போல ஆட்களுக்கு, ரொம்ப டேஞ்சரான “ஜோதிட திலகம்” அவர். இருப்பினும் நேற்று நடந்தைதையும், ஒரு மணிக்கு முன் நடந்ததையும் சொல்ல ஒரு “தில்” வேண்டுமல்லவா? அலட்டிக் கொள்ளாமல் எதிரில் உட்கார்ந்திருப்பவரை அலற அடிக்கும் ரகளையானவர். எதிர்கால, கடந்தகால, நிகழ்காலத்தினைப் பற்றிய விஷயங்களை தெரிந்து கொள்ள விரும்புவர்கள் அவரைத் தொடர்பு கொள்ளுங்கள். ஒரு மாற்றத்தின் அறிகுறி உங்களுக்கு நிச்சயம் கிடைக்கும். வாழ்க்கைப் பாதையின் போக்கு நேராகலாம் அல்லது சரி செய்யப்படலாம். 

ஒரு சுவாரசியமான சம்பவம் ஒன்று.

ஒருவர் ஜாதகம் பார்க்க வந்திருக்கிறார். அவரின் பையன் பனிரெண்டாவது வகுப்பு எக்ஸாம் எழுதப் போகின்றான். கண்ணன் ”அவன் அடுத்த வருடம் வெளி நாட்டுக்குச் செல்வான்” என்கிறார். அட, இன்னும் எக்ஸாமே எழுதவில்லை, அவன் எப்படி வெளி நாடு செல்வான் என்று கேள்வியைக் கேட்டு விட்டு அவர் சென்று விட்டார். பையன் எக்ஸாம் எழுதி முடித்து சிங்கப்பூரில் இருக்கும் ஒரு நிறுவனத்தில் படிக்க அப்ளை செய்திருக்கிறான். தமிழ் நாட்டிலும் மேற்படிப்பிற்கு அப்ளை செய்திருக்கிறான். இரண்டுக்கும் அனுமதி கிடைத்து விட்டது. ஜாதகம் பார்க்க வந்தவர் போனில் “சார்” என்று அலறி இருக்கிறார். இப்படியான ஒரு சம்பவம் பற்றிச் சொல்லியவர், வாழ்க்கை நொடிக்கு நொடி மாற்றத்துக்கு உரியது என்றார். உண்மைதானே ?

நியூமராலஜி உண்மையா என்று விஷயத்திற்கு வருவோம். மெட்ரிக் அளவுகள் என்பது மனிதனால் கண்டுபிடிக்கப்பட்டது, அந்த மெட்ரிக் அளவுகள் உலகையும் மனித வாழ்வினையும் சூட்சுமாய் சூழ்ந்திருக்கும் கிரகங்களை எந்த விதத்திலும் பாதிக்கவே பாதிக்காது. பெயரில் ஒரு எழுத்தை கூட்டினாலோ அல்லது குறைத்தாலோ வெற்றி கிட்டும் என்றால் அப்படி மாற்றிக் காட்டுபவர் முதலில் கோடீஸ்வரனாக மாறி இருப்பார். அப்படி அவர் மாறாத பட்சத்தில் நியூமராலஜியை எப்படி உண்மை என்று ஏற்றுக் கொள்ள இயலும். கையெழுத்தே போடத்தெரியாத ஒருவனுக்கு நியூமராலஜியால் பயன் இல்லை என்கிறபோது நியூமராலஜி ஒரு வெற்று தத்துவம்.

மெய்யறிவியலில் ஒரு ரகசியம்: 

மனித மனத்தை ஊடுறுவ முடியுமா என்ற கேள்விக்கு என்ன பதில்? 
குருடன் முத்தை துளைத்தான்
விரலில்லாதவன் அதை நூலில் கோர்த்தான்
கழுத்தில்லாதவன் அதை அணிந்தான்
நாவில்லாதவன் அதைப் புகழ்ந்தான்
- தைத்தீரிய ஆரண்யம்

தன் எதிரே அமர்ந்திருக்கும் ஒருவனிம் மனதுக்குள் அவன் நினைக்கும் எண்ணத்தில் ஊடுறுவி அறிந்து கொள்ளும் திறமை ஒவ்வொரு மனிதனுக்கும் உண்டு. இயற்கை மனிதனுக்கு எண்ண ரகசியங்களை மறைத்து வைக்கும் திறமையை அருளினாலும் அதையும் உடைத்து விடும் வழியையும் மனிதனுக்கு தந்து இருக்கிறது.

* * *

Saturday, September 22, 2012

சாட்டை என்கிற சினிமாவும் ஹீரோயிசத்தின் கொடூரமும்



நேற்றைக்கு முதல் நாள் தேனியிலிருந்து ஒரு அழைப்பு. பேசியவர் ஒரு ஆசிரியர். ”பத்துக் கோடி ரூபாய் கடன் வேண்டும்” என்றார். தொடர்ந்து புதிதாக பள்ளிக்கூடம் கட்டப்போவதாகவும், ஐந்து வருடத்தில் திருப்பிக் கொடுத்து விடுவதாகவும் சொன்னார். ”ஐந்து வருடத்தில் வட்டியுடன் பத்து கோடி ரூபாயைத் திருப்பிக் கொடுக்கும் அளவுக்கா பள்ளிகள் சம்பாதித்துக் கொடுக்கின்றன?” என்று கேட்டேன். ”நாமக்கல் பகுதிகளில் டொனேஷனைக் கொண்டு போய் கொட்டுகின்றார்கள் சார், நான் அதை விட மிகச் சிறந்த பள்ளியை உருவாக்குவேன்” என்றார்.

ஊட்டியில் இருக்கும் பிரபல தனியார் பள்ளியில் டொனேஷன் அதாவது கேப்பிடேஷன் ஃபீஸ் 5,00,000 லட்சம் வசூலிக்கின்றார்கள். யூனிஃபார்முக்கு 50,000  ரூபாய் கட்டணம். இப்படி அவர் சொன்ன விபரங்களைக் கேட்டதும் மயக்கம் தான் ஏற்பட்டது.

”அரசு இலவசமாய் கல்வி வழங்கினால் என்ன செய்வீர்கள்?” என்றேன். ”எந்த அரசாலும் சரி, எவராலும் சரி அப்படி செய்யவே முடியாது என்றார். கல்வி பிசினஸ் செய்யும் பணமுதலைகளும், ஒத்து ஊதும் திருடர்கள் கூட்டத்தாரும் ஒன்று சேர்ந்து பல தனியார் அமைப்புகளை வைத்து இருக்கிறார்கள். அவர்கள் அரசையே தூக்கி எறிந்து விடுவார்கள். பணத்திற்கு முன்பு அரசு சலாம் போடுமே தவிர வேறொன்றினையும் செய்யாது சார்” என்றார் அவர். 

”பூடானில் ஆசிரியப் பணியில் இருந்த போது, சாலையில் நடந்து சென்றால் எதிரே வரும் மக்கள் ஆசிரியர்களுக்கு வணக்கம் செலுத்தி வழி விட்டு ஒதுங்கி நிற்பார்கள். இந்தப் பாழாய் போன மனித உரிமைகள் கமிஷனால் தான் ஒவ்வொரு மாணவனும் இன்றைக்கு சீரழிந்து போய் விடுகிறான்கள். ஒடித்து வளர்க்காத முருங்கை பலன் தராது சார். பூடானில் அரசாங்கம் ஆசிரியர்களுக்குச் சம்பளம் கொடுக்கின்றது. ஒவ்வொரு ஊரும் பள்ளியை நிர்வகிக்கின்றார்கள். அங்கு தனியார் அமைப்புகள் கிடையாது” என்றார் அவர்.

ஒரு வழியாக தனியார் கல்வி என்கிற மாஃபியாக்கூட்டத்தின் செயல்பாடுகளை அவரிடமிருந்து அறிந்து கொண்டேன். ஒருவன் வாழ பலர் உழைத்துக் கொடுக்கின்றார்கள். இது பற்றிய ஒரு கட்டுரை வருகின்ற மாதம் “பரபரப்புச் செய்தி” பத்திரிக்கையில் வெளிவரும். படித்துப் பாருங்கள்.

ஒரு குடும்பத்தின் தலைவன் சரியில்லை என்றால் குடும்பம் என்ன ஆகும்? சீரழிந்து போகும். தலைமை ஆசிரியரிடம் தொலை நோக்குப் பார்வையும், கண்டிப்பும் இல்லையென்றால் அப்பள்ளி என்ன ஆகும்? அப்படித்தான் இன்றைய அரசுப் பள்ளிகள் அனைத்தும் இருக்கின்றன. ஆசிரியர்களின் செயல்பாடுகளுக்கு உகந்த கிரேடு, டிகிரேடு சிஸ்டம் கொண்டு வந்தால் அரசுப் பள்ளிகளின் செயல்பாடுகள் நிச்சயம் ஓரளவிற்கு முன்னேறும். பள்ளிகள் இருக்கும் ஊரின் மக்களிடமிருந்து பெறப்படும் தகவல்கள் மற்றும் பள்ளியின் செயல்பாடுகள் மூலம் இந்த டிகிரேடு சிஸ்டம் செயல்படுத்தப்பட்டாலே போதும். அதுமட்டுமல்லாமல் அரசில் பணிபுரியும் அரசு அலுவலர்களின் குழந்தைகள் அரசுப் பள்ளியில்தான் படிக்க வேண்டும் என்ற உத்தரவு பெரும் நன்மையைத் தரும். அதை ஏன் அரசுகள் செய்ய மறுக்கின்றன என்றால், தனியார் கல்வி மாஃபியாக்களிடமிருந்து வரும் பெட்டி டொனேஷன்கள் தான் காரணம் என்கிறார்கள்.

பள்ளியில் தலைமை ஆசிரியர் மட்டும் ஒழுங்காக இருந்தால் போதுமா? பிற ஆசிரியர்களும் இருக்க வேண்டாமா? சாட்டை ஒரே ஒரு ஆசிரியர் ஒழுங்காக இருந்தாலே போதும் என்று ஹீரோயிசம் பேசுகிறது. பள்ளியில் இருக்கும் ஆசிரியர்களையும், மாணவர்களையும் திருத்தி விட்டு வேறு பள்ளிக்குச் செல்கிறார் தயாளன் என்கிற சமுத்திரக் கனி. மாயாஜால வினோதக் கதை போல தமிழ் சினிமாக்களில் ஒரே ஒரு பாடலில் ஏழை ஹீரோ பெரிய கோடீஸ்வரனாக மாறுவதை காட்டுவார்களே அதே போலத்தான் சாட்டைப் படமும்.

யாரோ ஒரு இயக்குனர் ஏதோ ஒரு பேட்டியில் தம்பி ராமையா என்கிற நடிகரின் நடிப்பைப் பார்த்த போது எம்.ஆர்.ராதாவை பார்த்தது போல இருந்தது என்றார். எம்.ஆர்.ராதா எங்கே இந்த ராமையா எங்கே? இப்படிப்பட்ட இயக்குனர்கள் தான் இன்றைக்கு தமிழ் சினிமாவை இயக்கிக் கொண்டிருக்கின்றார்கள். மூளை வறட்சியில் சிக்கித் தவிக்கும் தமிழ் சினிமாக்கள். நடிப்பு என்றால் என்ன என்று தெரியாமலே நடிக்கும் கலைஞர்கள், இயக்கும் இயக்குனர்கள் என்று ஒரு கூட்டம் சினிமாவைக் கேவலபடுத்தி வருகின்றார்கள். இதற்கு உதாரணம் மாண்புமிகு இயக்குனர் ஒருவர் இருக்கிறார். அவர் பெயரைச் சொன்னால் உங்களுக்கு இதயம் டிக்கென்றிருக்கும்.

சாட்டை என்கிற பெயரில் அக்மார்க் ஹீரோயிசப்படம். ஆசிரியர்கள் ஹீரோக்கள் அல்ல ! அவர்கள் ஞானிகள். எதையும் எதற்காகவும் எதிர்பாக்காத தியாகிகள். இக்கால ஆசிரியர்களில் எத்தனை எத்தனையோ இளம் ஆசிரியர்கள் முழுத் தியாகத்துடன் தங்கள் குழந்தைகளை நேசித்து அவர்கள் படிப்பதையும், எழுதுவதையும் நேசிக்கின்றார்கள். நேற்று என் பையன் கூடப்படிக்கும் சகமாணவன் என் மனைவியிடம் ”உங்கள் பையனுக்குச் சுத்திப் போடுங்கள், ரொம்ப அழகாக எழுதுகிறான் என்று டீச்சர் கண் வைத்து விட்டதாகவும், அதை டீச்சரே சொல்லச் சொன்னதாகவும்” சொல்லி இருக்கிறான். ஆசிரியர்கள் இப்படித்தான் இருப்பார்கள். நூற்றில் பத்து சதவீதம் பேர் சுய நலவாதிகளாய் இருப்பார்கள். அவர்கள் பற்றி நாம் யோசிக்கத் தேவையில்லை. பயிரில் களைகள் இல்லையென்றால் பயிரைப் பற்றி விவசாயி சிந்திக்க மாட்டான். களைகளும் வேண்டும், அதை களையெடுக்கும் வித்தையையும் தெரிந்து வைத்திருக்க வேண்டும். அரசுப்பள்ளிகள் மட்டுமல்ல தனியார் பள்ளிகளும் பெற்றோர் ஆசிரியர் சங்கத்தினாலே நிர்வகிக்கப்பட்டாலே போதும். இது போன்ற பிரச்சினைகள் ஓவர்.

பள்ளிப்பருவ காதல்கள் சுவாரசியமானவை. அக்காதல்கள் எதுவும் முழுமை பெறுவதில்லை. அதை ஒழுங்காக காட்டிய விதத்தில் சாட்டை நன்மை செய்திருக்கிறது. அதைக்கூட காசாக்கி அதை வைத்து தமிழ் சினிமாக்கள் ஹீரோக்களை உருவாக்கி வருகின்றன. பிரபல நடிகர் ஒருவர் இது போன்ற கவட்டிக் கிளர்ச்சிப் படங்களில் நடித்துதான் தானுமொரு ஹீரோ என்ற நிலைக்குத் தன்னை உயர்த்திக் கொண்டார். முன்னனி ஹீரோவான ஒருவர் கபடி விளையாண்டும்,  பாத்ரூமில் காதலியின் மாமியாருக்கு சோப்பு போட்டும்தாம் ஹீரோவாக உயர்ந்தார். தற்போது பிரபலமாய் இருக்கும் ஒரு தயாரிப்பாளர் மலையாள மொழிகளில் செக்ஸ் படம் எடுத்துச் சம்பாதித்தவர்தான். பல பிரபலங்களுக்கு வாழ்க்கை கொடுத்ததே பெண்கள்தான். இவர்கள் இல்லையென்றால் ஹீரோக்கள் எல்லாம் ஜீரோக்கள் ஆகி விடுவார்கள். அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

தனி மனித துதி என்பது அரசியல் மட்டுமின்றி சினிமாவிலும் தூக்கலாய் இருக்கும். எந்த ஒரு தனி மனிதனாலும் எதையும் பிடுங்கி விட முடியாது. மஹாத்மா காந்தி மட்டும் உண்ணாவிரதம் இருந்திருந்தால் எவனும் திரும்பிக் கூட பார்த்திருக்கமாட்டார்கள். காந்தியின் கொள்கைகளால் உயிரை இழந்தோரும், சிறையில் கிடந்து செத்தோரும் லட்சோப லட்ச மக்கள். அவர்கள் பற்றி யாருக்கு என்ன தெரியும்? இது போன்ற தனி மனித துதிகளும், போற்றுதல்களும் முற்றிலும் தவறானவை. அது ஒரு ஆகப் பெரிய கொடூரம் என்கிறேன்.

சாட்டைப் படத்தினை அனைவரும் பார்க்கலாம். ஏனென்றால் இப்படம் ஏதோ சொல்ல வருகிறது. பல விஷயங்களைச் சுட்டிக் காட்டுகிறது. எங்கே ஹீரோ, ஹீரோயின் காதலைச் சேர்த்து வைத்து விடுவார்களோ என்று பயந்தேன். அப்படி ஏதும் ஆக வில்லை. சமுத்திரக்கனி சொல்லும் கடைசி வாக்கியத்திற்காக சாட்டையைப் பார்க்கலாம். ஹீரோயிசம் என்கிற விஷத்தினுள்ளே ஒரு மெசேஜ்.


Thursday, September 13, 2012

முழுமுதற் இறைவன் யார்? ஒரு விளக்கம்



குரு வாழ்க ! குருவே துணை !!

மெய்யன்பர்களே !
பலவிதமான தெய்வ வழிபாடுடைய இந்துக்களில் பலருக்கும், எந்த மூர்த்தியை வழிபட்டால் எல்லா மூர்த்திகளையும் வழிபட்ட பலனைப் பெறலாம் என்பது தெரியாதிருக்கிறது. அதைப் பலரும் அறியும்படி தெரிவிக்கவே, சிவன் கோவல்களில் மூலஸ்தானத்தில் சிவலிங்கத்தைத் தவிர வேறு பிரதிஷ்டை ஒன்றுமின்றி அமைத்துக் காட்டி இருக்கின்றனர் நமது முன்னோர்கள்.

சிவலிங்கம் மூன்று கூறுகளுடையன. அடிப்பாகம் நாற்கோண வடிவமாய் பூமிக்கு அதிபதியான சிருஷ்டி கர்த்தாவான பிரம்ம பாகத்தை உணர்த்துவதாகும். மத்தியபாகம் எட்டுப் பட்டமுடைய அட்டகோண வடிவமாய், வாமை, சேஷ்டை, ரெளத்திரி, காளி, கலவிகரணி, பலவிகரணி, பலப் பிரதமணி, சர்வ பூத தமனி என்னும் மகாவிஷ்ணுவின் எட்டு சக்திகளும். அதனோடு பொருந்த இருக்கும் ஆவுடை எனப்படும், மனோன்மணியாகிய ஒன்பதாவது சக்தியும் சேர்ந்து மகாவிஷ்ணுவின் நவசக்திகளாகி, நீருக்கு அதிபதியான காத்தல் எனப்படும் ‘ஸ்திதி’ கர்த்தரான விஷ்ணுபாகத்தை உணர்த்துவதாகும். அரன் என்பதன் பெண்பாலே அரி என்பதாகும். அதனாலேயே ‘அரியல்லால் தேவியில்லை ஐயன் ஐயரனார்க்கே’ என்று திரு நாவுக்கரசு நாயனாரும், திருமழிசையாழ்வார் தமது இயற்பாவிலே ‘மாதாயமாலவனை மாயவனை’ என்றும் அருளிச் செய்திருக்கின்றார்கள்.

அதனால் தான்  நமது அப்பனாகிய மகா விஷ்ணுவின் பாகமாகவும், மாதொருபாகன், உமா மகேஸ்வரன், அர்த்தனாரி, சங்கர நாராயணன் என்ற ஆணும் பெண்ணும் சேர்ந்த அபூர்வ மூர்த்தங்களாகவும், அமைந்து திகழ்கின்றன. அதற்கு மேலுள்ள பாகம் நெருப்பிற்கு அதிபதியும், அழித்தல் எனப்படும் சம்ஹாரம், மறைத்தல் எனப்பரும் த்ரெளபவம், அருளல் எனப்படும் அனுக்கிரஹம் ஆகிய முத்தொழில்களுக்கும் அதிபதியான சிவபாகமாகும்.
பூமிக்கு அதிபதியான பிரம்ம பாகம் பூமிக்கும் மறைந்து ஒடுங்கி நிற்கும். நீருக்கு அதிபதியான விஷ்ணுபாகம் அபிஷேக நீரைத் தாங்கி விரிந்து நிற்கும். நெருப்புகதிபதியான சிவபாகம் மேலோங்கி ஜோதிபோன்று ஜொலித்துக் கொண்டிருக்கும். 

இம்மூன்றும் சேர்ந்த அருவமும், உருவமுமற்ற ஆதியும், அந்தமும் இல்லா அரும்பெரும் ஜோதி வடிவே சிவலிங்கம் ஆகும். ஆகவே சிவலிங்கத்தை வழிபட்டால் பிரம்மாவை வழிபட்ட பலனும், மகாவிஷ்ணுவின் பத்துத்திரு அவதாரங்களை வழிபட்ட பலனும், சிவபெருமானின் 25 மூர்த்தங்களை வழிபட்ட பலனும் ஒருங்கே கிடைக்ககூடியதாகவும் இருக்கின்றதென்பதை வேதாகமங்கள் வலியுறுத்துகின்றன.

புராண இதிகாசங்களும், அனுபூதிமான்களது அனுபவங்களும் அந்த உண்மையை உறுதிப்படுத்துகின்றன. அரசமரம் சுற்றிவரும் அன்பர்கள் சைவர்களாக இருந்தாலும், வைணவர்களாக இருந்தாலும் எல்லோரும் ஒன்று போல சொல்லி வரும்,

மூலதோ பிரஹ்மரூபாய, 
மத்தியதோ விஷ்ணுரூபிணி,
அக்ரஹ்த சிவரூபாய,
விருக்‌ஷராஜாயதே நம.

என்ற மந்திரமும் சிவலிங்க தத்துவத்தின் உண்மையை நன்றாக வலியுறுத்துகிறதல்லவா? அல்லாமலும் உலகிலுள்ள எல்லா மரங்களும் அவற்றின் விதைகளும், கனிகளும், எல்லா வகையான முட்டைகளும், ஜீவராசிகளின் தலைகளும், பிண்டங்களும், பூமியும், சந்திரனும், சூரியனும், நட்சத்திரங்களும், அண்டங்கள் பலவும், ஆகாயமும், சிவலிங்க வடிவின் மேற்பாகம் போல அமைந்திருப்பது சிந்திக்கத்தக்கது.

மேலும் பாவங்களிலெல்லாம் மிகவும் கொடியது பிரம்மஹத்தி தோஷம் எனப்படும். மனிதரைக் கொன்ற கொலைப்பாவம். அதை நீக்க வேண்டுமானால் தனியான எந்த மூர்த்தியையும் வழிபட்டு, நீக்கிக் கொள்ள முடியாது என்பது வேதாகம விதி. அதை நீக்க வேண்டுமானால் சிவலிங்க பூஜையே செய்தாக வேண்டும். 

அதனாலாயே திருவிளையாடல் புராணத்தில் பஞ்சமாபாதகம் செய்தவனுக்கும், மதுரை மீனாக்‌ஷிசுந்தரேசுவரர் அவன் பாவங்களை மன்னித்து, நற்கதி கொடுத்ததாகக் காண்கிறோம். காஞ்சிபுரத்தில் அம்மையார் சதாவும் இலிங்க பூஜை செய்து கொண்டிருப்பது யாவரும் அறிந்ததே. மகாபாரதத்தில் பஞ்சபாண்டவர்களும் சிவபூஜா துரந்தர்களாக இருக்க, அர்ஜூனன் சிவபெருமானிடமிருந்து பாசுபதம் பெறுவதற்கு விஷேசத் தவம் புரிந்தது யாவரும் அறிந்ததே. இராமாயணத்தில் இராவண சம்ஹாரத்திற்குப் பிறகு, ஸ்ரீராமபிரான் ராமேஸ்வரத்தில் இராம நாதரை சிவலிங்கத்தில் பிரதிஷ்டை செய்து வழிபாடாற்றியதும் ஹனுமார் தனியாக காசியிலிருந்து இலிங்கம் கொண்டு வந்து பிரதிஷ்டை செய்து வழிபாடாற்றியதும் காணலாம்.
கந்த புராணத்தில் சூரசம்ஹாரத்திற்குப் பிறகு ஸ்ரீசுப்ரமணியப் பெருமான் திரிச்செந்தூரில் சிவபூஜை செய்து கொண்டிருப்பதைக் காணலாம். 

கஜமுகா சூரனைச் சம்ஹாரம் செய்த பிறகு ஸ்ரீவிநாயகப் பெருமான் திருச்செங்காட்டங்குடியில் சிவலிங்கப் பூஜை செய்து கொண்டிருப்பதைக் காணலாம். மேலுலகத்தில் அதிகாரம் பெற்ற சகலருமே சிவபூஜை செய்தே அவ்வப் பதவிகளைப் பெற்றிருப்பதாக, நமது நாயன்மார்களும் மாணிக்கவாசகரும் அருளிச் செய்திருக்கிறார்கள்.

- தி.வை. சதாசிவப் பண்டாரத்தார் ஆய்வுகள் -1 இல் பக்கம் 89,90,91 ( திருப்புறம்பயத் தல வரலாறு பகுதி)

சிந்திக்கவும், சிலிர்க்கவும் ஒரு குறிப்பு :

நமது தமிழர் பாரம்பரியத்தின் கல்வி ஐந்திரம் என்பதாகும். எண்ணியம்(சாங்கியம்), ஓகம், உலகாய்தம் ஆகிய இம்மூன்று கோட்பாடுகளும் வேதங்களை விட உயர்வானதாக மதிக்கப்பட்டனவாம். அரசர்கள் கல்வியில் இம்மூன்றும் முதன்மை பெற்றிருந்தனவாம். கிமு ஆறாம் நூற்றாண்டுகளுக்கு முன்பே ஐந்திரம் கல்வியின் பிறப்பிடமாய் தமிழகம் திகழ்ந்தது. வட நாட்டிலிருந்தெல்லாம் இக்கல்வியைக் கற்றிட வந்தனராம். தொல்காப்பியர் ஐந்திரம் நிறைந்தவராம். ஐந்திரக்கல்வி அறிவு வேட்கையைத் தூண்டி, மக்களை நன்னெறிபடுத்தியதாம். உலகிலேயே இரண்டே இரண்டு ஐந்திர நூல்கள் மாத்திரமே உண்டாம். அவை தொல்காப்பியமும், திருக்குறளுமேயாம். ( க. நெடுஞ்செழியன் - தமிழரின் அடையாளங்கள் நூலில் இருந்து)

- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்

Tuesday, September 11, 2012

முழுமையான கடவுள் எது?

இந்து சமயத்தில் பல கடவுள்கள் இருப்பதை பலரும் கிண்டல் அடித்திருப்பார்கள். அதற்கான பதிலை ஒரு புத்தகத்தில் படித்தேன். எனக்கு அது ஏற்றுக் கொள்ளக் கூடியதாய் இருந்ததால் விரைவில் அப்பதிவு வெளியிடப்படும்.

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்

Monday, September 10, 2012

இயக்குனர் சுந்தர்ராஜனுடன் ஒரு மணி நேரம்


குரு வாழ்க ! குருவே துணை !!





எனது நண்பர் கோவையில் ஃபில்ம் இன்ஸ்டிடியூட் ஆரம்பிப்பதற்கான வேலைகளில் இருக்கிறார். இன்ஸ்டிடியூட் சம்பந்தமாக இருவரும் பேசிக் கொண்டிருந்த போது, வேறு யாரிடமாவது கருத்துக்களை கேட்கலாம் என்று நினைத்தோம். இயக்குனர் சுந்தர் ராஜன் அவர்களுக்கு அழைத்தேன். ”கோவையில் தான் இருக்கிறேன் தங்கம், எட்டு மணிக்குச் சந்திக்கலாமா?” என்றார்.

நானும் நண்பரும் நேரு விளையாட்டு அரங்கம் சென்று பாப்கார்ன் கொரித்து விட்டு, இயக்குனர் தங்கி இருந்த ஹோட்டலுக்குச் சென்றோம். போனில் மட்டுமே பேசிக் கொண்டிருந்த நாங்கள் அன்று முதன் முதலாய் சந்தித்தோம். 

காருக்குள் அமர்ந்து கொண்டார். 

”குங்குமச் சிமிழில் விழுந்தவன் இன்றும் எழுந்து கொள்ள முடியவில்லை சார், ரேவதி போன்ற நடிகைகளைப் பார்ப்பது அரிதாயிருக்கிறது ” என்றேன். 

அவருக்கு நிரம்பப் பிடித்த படம் “குங்குமச் சிமிழ்” என்றார்.

கிட்டத்தட்ட ஒரு மணி நேரம் பேசிக் கொண்டிருந்து விட்டு திரும்பினேன். இன்ஸ்டிடியூட்டுக்கு நிறைய ஆலோசனைகளும், கருத்துக்களும் சொன்னார்.
பத்து சில்வர் ஜூப்ளி கொடுத்த வெற்றி இயக்குனர். அவரின் ஒவ்வொரு படமும் ஒவ்வொரு விதம். இன்றைய எதிர்கட்சித் தலைவரின் சினிமா வளர்ச்சிக்கு அவரின் பல திரைப்படங்கள் எவ்வளவு உதவி இருக்கின்றன என்பது அனைவருக்கும் தெரிந்த ஒன்றே. வெகு சாதாரணமாய் இருக்கிறார். பெரியவர்கள் எப்போதும் எந்தக் காரியத்தைச் செய்தாலும் அலட்டிக் கொள்வதில்லை. பெரியாரிசத்தின் பிடிப்பில் தன்னை முழுதாய் ஈடுபடுத்தி இருக்கிறார். 

ஆன்மீகவாதியான எனக்கும் பெரியாரிசத்தில் ஈடுபாடுடைய அவருக்குமான நட்பை ஒரு நிமிடம் நினைத்துப் பார்க்கிறேன். எனக்குள் உதிக்கும் சிரிப்பின் அர்த்தம் எனக்கே புரியவில்லை. அர்த்தம் விரைவில் விளங்கும் என்றே நினைக்கிறேன்.

சில்லிட்ட காற்று வீச இனிய வருகையாய் கை குலுக்குகினார். அவரின் கை “சில்லென்று” இருந்தது.

வெகு விரைவில் கோவையில் ஃபிலிம் இன்ஸ்டிடியூட் ஆரம்பிக்கப்பட இருக்கிறது. இன்ஸ்டிடியூட்டில் படிக்கும் அனைவருக்கும் சினிமா, டிவி, மீடியாக்களில் வாய்ப்புக்கள் உருவாக்கித் தரவும், நாடகக் கலையினை வளர்த்தெடுக்கவும், கற்பனைகளோடு வாழ்ந்து கொண்டிருக்கும் இளம் இயக்குனர்களுக்கு உதவிடவும் இந்த இன்ஸ்டிடியூட் செயல்படும் விதமாய் உருவாக்க வேண்டுமென்பது ஆவல். 



எங்களது ஃபெமொ மாடலிங் கம்பெனியின் மாடல்களை முழு வார்ப்பாக வார்த்தெடுக்க முயல்வோம். திறமைசாலிகளை கண்டுபிடித்து, அவர்களுக்கு எட்டாத சினிமாக் கனவுகளை எட்ட வைக்கவும், பலருக்கு ஏணியாகவும் ஃபெமொவை விளங்கிட வைக்க விரும்புகிறோம். 

எல்லாம் வல்ல இறைவன் துணை புரிய வேண்டும்.  நண்பர்களின் ஆசீர்வாதங்களையும், அன்பினையும் எதிர் நோக்கும்

- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்