அறம், பொருள், இன்பம் என்று வரிசைப்படுத்தி உலகப் பொதுமறையை எழுதினார் திருவள்ளுவர். முதலில் அறம், அதன் படி பொருள், பின்னர் காதலின்பம் என்று வாழ்வியலை வரிசைப்படுத்தினார். ஆனால் இன்றோ முதலில் காதல், பின்னர் கொடுஞ்செயல் செய்து பொருள் என்று வாழ்வியல் முறை தவறிக் கிடக்கிறது.
”ஒரு பெண்ணிடத்தில் நீக்க முடியாத காதல் கொண்டு, அவள் காதலைத் தான் பெறாது போய் விட்ட போது, அவன் பனையின் கருக்குமட்டைகளை எடுத்து அவற்றைக் கொண்டு குதிரை உருவம் ஒன்று செய்வான். அதில் மணிகளும் மயிலிறகுகளும் வைத்து ஒப்பனை செய்து, கடிவாளம் போல ஒரு கயிற்றை அதன் மீது மாட்டிக் கொண்டு, தெருவழியாக அதன் மீது ஊர்வான். ஊரும் போது தன் காதலி மீது காதற்பாட்டுக்களைப் பாடிக் கொண்டே செல்வான்.
இக்காட்சி கண்டு சில சமயம் காதலியே இரங்கி மனமாறுவதுண்டு. அல்லது அவள் உறவினர் அவனை மணம் செய்யும்படி அவளைத் தூண்டுவர். ஆனால் காதலை இந்த அளவு வெளிப்படுத்தியும் காதலி அவனிடம் கனிவு காட்டவில்லையானால், அவன் செங்குத்தான குன்றிலிருந்து வீழ்ந்து தன் உயிரை மாய்த்துக் கொள்வான்.”
( நன்றி : ஆயிரத்தெண்ணூறு ஆண்டுகளுக்கு முற்பட்ட தமிழகம் - திரு வி.கனகசபை (1962) )
பாரதி சொன்னான் “காதல் காதல் காதல், காதல் இல்லையென்றால் சாதல் சாதல் சாதல்”. இப்படியான கலாச்சாரத்தில் பிரேக் அப் என்கிற காதலைப் பற்றி சொல்கிறது. காதல் மணம் முறிந்து சென்றால் அடுத்த பெண்ணை ஏறெடுத்தும் பார்க்காமல் உயர்ந்த குன்றிலேறி தற்கொலை செய்து கொண்ட ஆணின் அறம் எங்கே, இப்படத்தில் அடுத்தவனைத் திருமணம் செய்து கொள்ள விழையும் பெண்ணின் அறம் எங்கே?
அடுத்து காதலைச் சொல்லும் வழி பற்றியது.
பார்வையிலே காதலை சொல்லுவது (காட்டுவது) பற்றி திருவள்ளுவர் காமத்துப்பாலில் விரிவாக எழுதி இருக்கிறார். மயிலாள் விழிகளை கொல்லும் கூற்றுவன் அம்புகளுக்கு இணையானது என்கிறார் அவர்.
பண்டறியேன் கூற்றென் பதனை இனியறிந்தேன்
பெண்டகையால் பேரமர்க் கட்டு. - திருக்குறள் காமத்துப்பால் (1083)
கூற்றுவன் எனப்படும் பொல்லாத எமனை, எனக்கு முன்பெல்லாம் தெரியாது; இப்போது தெரிந்து கொண்டேன். அந்த எமன் என்பவன் பெண்ணுருவத்தில் வந்து போர் தொடுக்கக்கூடிய விழியம்புகளை உடையவன் என்ற உண்மையை. - கலைஞர் உரை
முதற்பகுதியில் கன்னியொருத்தி காளையொறுவன் தன் மீது கொண்ட காதலை எப்படி நயத்தகு முறையில் உறுதிப் படுத்துகிறாள் என்பதைப் படித்தீர்கள். ஆனால் இன்றைய சினிமாவில் காதல் வயப்படுவது எப்படிக் காட்டப்படுகிறது?
ஒரு பெண்ணை நிர்வாணமாகப் பார்த்தால் காதல் வந்து விடும் என்கிறார் ரஜினி. பெண்ணே தேடித் தேடித்தேடிப் போய் அலைந்து திரிய வேண்டுமென்கிறார்கள். போனால் போவுது உன்னைக் காதலிக்கிறேன் என்கிறார் அஜீத் குமார். பெரும்பான்மையான தமிழ் சினிமாக்காதல் காட்சிகளை ஒரு நிமிடம் மனதுக்குள் ஓட்டிப் பாருங்கள். அபத்தங்கள் புரியும்.
கற்பு என்பது பெண்ணுறுப்பை சிதைப்பதால் சீரழிந்து விடுவது அல்ல. ஆணுக்கும் பெண்ணுக்குமான அறத்தின் பெயர்தான் கற்பு. இயற்கை எப்படி ஒரு கட்டுக்குள் இயங்குகிறதோ மனிதனின் அக்கட்டுக்குள் இயங்கினால் அவன் வாழ்க்கை சீராக்கி அமைதியாய் வாழ்வான். அதில் சில கொடுமைகள் இருக்கின்றன. வாய் வழிச் சொல் எப்படி ஒரு மூலச் சொல்லை பாழ் படுத்தி விடுகிறதோ அது போல அந்தக் கொடுமைகள் தொடர்ந்து வந்து விடுகின்றன. அதையெல்லாம் பொருட்டாய் எடுத்துக் கொள்ள வேண்டியதில்லை.
இன்றைய திரைப்படங்களில் காட்டப்படுவதைப் போல கேவலமான முறையில் காதல் பரிமாறிக் கொள்ளப்படுவதில்லை. நாங்கள் நடப்பதைத்தான் காட்டுகிறோம் என்பார்கள். அயோக்கியத்தனம் செய்வதற்கு தயரானவர்களுக்கு சமூகத்தின் மீதான பிடிப்பு இருப்பதில்லை. அமைதியான வாழ்க்கைத் தந்து கொண்டிருக்கும் சமூகத்திற்கு ஏதாவது செய்து விட்டுப் போவோம் என்ற அக்கறையின்று இன்றைக்கு என்ன கிடைக்கிறது என்பதை மட்டுமே கவனத்தில் கொள்கின்றார்கள்.
பெரும்பாலானோர் இப்படத்தை ஒரு நல்ல படம் என்கிறார்கள். கல்லூரிகள் காதற்களமாய் உருவகப்படுத்தி காட்டப்படுகின்றன. கோயிலாய் காட்ட வேண்டிய இடம் கேவலமானதாய், வாழ்க்கைச் சீரழிக்கும் இடமாய் காட்டப்படுகிறது. படிக்கின்ற வயதில் காதல் கொண்டால் வாழ்க்கை என்ன ஆகும் என்பதை எல்லாம் சினிமா காட்டுவதில்லை. ஆரம்பத்தில் பதிவில் படித்த காதற் காட்சிகளையும் இப்படத்தினையும் ஒரு நிமிடம் படம் பார்த்தவர்கள் ஒப்பிட்டுப்பாருங்கள். உலகத்திற்கே உதாரணமாய் திகழ்ந்த நம் தமிழ்க் கலாச்சாரத்தை இப்படம் எந்தளவுக்கு தரம் தாழ்த்தி இருக்கிறது என்பது புரிய வரும். இதை ஒரு சிறந்த படம் என்று எப்படிக் கூற முடியும்?
மிட்டாய் கடையில் விற்கப்படும் பலப்பல பலப்பங்கள் போலத் தான் தற்போதையை திரைப்படங்கள் வெளியாகின்றன. அவைகளில் தமிழர்களும் தமிழ் கலாச்சாரமும் உருவகப் படுத்துவது இல்லை. இப்பேர்ப்பட்ட கலாச்சார மேன்மையுடை சமூகத்தில் பிறந்திருக்கிறோம் என்பதை எவரும் எண்ணிப் பார்ப்பது கூட இல்லை. அதைப் பற்றிய பிரக்ஞை கூட இல்லை.
யூதர்களை கொன்று குவித்துக் கொண்டிருந்த கால கட்டத்தில் தங்களின் கலாச்சாரத்தையும், மொழியையும் காப்பாற்ற புலவர்களையும், கல்வியாளர்களையும் பெரும் துன்பத்திலும் கூட பிறர் அறியாவண்ணம் காப்பாற்றி தங்களின் வாழ்க்கையை, முறையை எழுத்தில் வடித்தும், ஆவணமாக்கியும் பாதுகாத்து வந்தார்களாம். அவர்கள் எங்கே, நாம் எங்கே?
- ப்ரியங்களுடன் கோவை எம் தங்கவேல்