எந்த வருடமும் இல்லாத வெப்பம். குளிரான பூமி கொதிக்க ஆரம்பித்திருக்கிறது. திடீரென இரவில் மட்டும் கொட்டும் மழை. காலச் சூழலும் கூட மாறிக் கொண்டிருக்கிறது. விளாங்குறிச்சியில் எப்போதும் குளிர் இருக்கும். கோடையில் கூட குளிராக இருக்கும். ஆனால் இந்த வருடம் சூரியன் நேரடியாகச் சுடுகிறான். இந்திய அரசியலும், தமிழக அரசியலும் இணைந்து செய்யும் மக்கள் தொண்டு கண்டு கொதித்துப் போயிருக்கின்றானோ என்னவோ தெரியவில்லை. எதுவாக இருந்தாலும் பாதிப்படைவது மக்கள் தான்.
அதெப்படி ஒரு குச்சியால் ஒரு அரசாங்கத்தைச் சிதறடிக்க முடியும்? என்று நீங்கள் கேட்பது நியாயம் தான். இந்தத் தேர்தலில் எப்படி வெற்றி பெறுவது என திட்டமிடும் கார்ப்பொரேட் கம்பெனிகளின் கைங்கர்யம் இல்லாமல், அரசியல் செய்ய கார்ப்பரேட்டின் உதவி இல்லாமல், ஆட்சியைக் கவிழ்க்க அவர்களின் உதவி இல்லாமல் இது சாத்தியமா? என்று அறிவார்ந்த வகையில் நீங்கள் யோசிக்கின்றீர்கள் என்பது நல்ல விஷயம்தான். ஆனால் பாருங்கள் அறிவுக்கும், உண்மைக்கும் தூரம் அதிகம்.
இரண்டு நாட்களுக்கு முன்பு டிவி சானலை திருப்பிக் கொண்டிருந்த போது முன்னாள் நீதியரசர் (!!!!!) சந்துருவை மன்னார்குடி புகழ் பாண்டே பேட்டி கண்டு கொண்டிருந்தார். நீதியரசர் சட்டம் வேறு, நடைமுறை வேறு என்றும், நடைமுறைக்குத் தகுந்தவாறு தான் நீதிமன்ற தீர்ப்புகள் வரும் என போட்டுக் கொடுத்துக் கொண்டிருந்தார். பாண்டே என்னென்னவோ கேட்டார், அவர் எதுக்கும் பதில் கூறாமல் பேட்டி கொடுத்துக் கொண்டிருந்தார். வயதானால் வரும் ஞாபக மறதி போல தெரிந்தாலும் அந்தப் பேட்டி அறிவுபூர்வமானதாகவும், அரிதான விசயங்களை அவர் தெரிவித்தார் என்றும் எழுதினால் நீங்கள் நம்பி விடுவீர்கள் என்று நினைக்கிறேன். ஆகவே நம்பி விடுங்கள். இதை எதுக்கு இங்கே எழுதுகிறேன் என்றால் அறிவும் உண்மையும் தூரத்தூர என்றெழுதி இருக்கிறேன் அல்லவா? அதை நிரூபிக்கத்தான்.
சரி குச்சி விஷயத்துக்கு வருவோம். குச்சி என்றதும் இருட்டு அறையில் முரட்டுக்குத்து படம் நினைவுக்கு வந்தால் அதற்கு நான் பொறுப்பல்ல. தமிழ் சினிமாக்காரர்களின் கலைத்தாகத்தை தெரிவிக்கும் மேற்படி படம் ஒரு மைல்கல் என்றே சொல்ல வேண்டும்.
ஒரு மாபெரும் அரசு. மன்னன் மிகவும் நல்லவன், மக்களுக்கு நன்மை செய்வதில் அவனுக்கு நிகர் வேறு எவரும் இல்லை. 30 பர்சண்ட் அரசாங்கத்தினை அவன் நடத்தவில்லை. உண்மையான மன்னன். மக்களின் நன்மைக்காக வாழ்ந்து வந்தான். அவனின் புகழ் உலகெங்கும் பரவியது. மக்களிடையே அவன் கடவுளாக விளங்க ஆரம்பித்தான்.
”ஓடி ஓடி உழைக்கணும், என் வீட்டுக்கு மட்டுமே கொடுக்கணும்” என்று அவன் நினைக்கவில்லை. உண்மையான மன்னனாக இருந்தான். அவன் புகழ் கண்டு மனம் வெறுத்தான் ஒருவன். சமயம் பார்த்துக் கொண்டிருந்தான் அவன். மன்னனின் பிறந்த நாளும் வந்தது. அந்த வருடம் மக்கள் மன்னனின் மீது கொண்ட அபிமானத்தால் பரிசளிக்க விரும்பினார்கள். மன்னனும் ஏற்றுக் கொண்டு அரசவையிலே மக்களின் பரிசுகளை பெற்று அவர்களின் வாழ்த்தையும் பெற்றுக் கொண்டிருந்தான். பொறாமை கொண்டவன் ஒரு அழகான சிங்க உருவம் பதித்த வழ வழப்பான செங்கோல் போன்ற உருவமுடைய ஒரு தடியைக் கொண்டு வந்து மன்னனிடம் கொடுத்து விட்டு, ‘மன்னா! எனக்கு ஒரு வேண்டுகோள், இந்தப் பரிசினை நீங்கள் எப்போதும் உங்களுடன் வைத்துக் கொள்ள வேண்டும்’ என கேட்டான். மன்னனும் அவன் தன் மீது மிக்க அன்பாய் இருக்கின்றானே என மகிழ்ந்து, ‘ஆகட்டும்’ என்று உறுதி அளித்தான்.
அன்றிலிருந்து அந்த தடியை மன்னன் எங்கே சென்றாலும் கூடவே கொண்டு சென்றான். நாட்கள் நகர நகர மன்னன் ஒவ்வொன்றாய் இழக்க ஆரம்பித்தான். முடிவில் நாட்டையும் இழந்து போனான். நாடோடியாய் காட்டுக்குள் திரிந்தான். அப்படி அவன் திரிந்து கொண்டிருக்கும் ஒரு நாள் ஒரு மரத்தடியில் சோர்வாய் அமர்ந்திருக்கையில் மரத்தின் மேலிருந்த ஒரு பட்சி மன்னனைப் பார்த்து,’மன்னா’ என்று அழைத்தது. அதைக் கேட்ட மன்னன், நான் மன்னன் என்று அந்தப் பறவைக்கு எப்படி தெரியும் என யோசித்துக் கொண்டே அதனுடன் உரையாட ஆரம்பித்தான்.
அப்பறவை ”மன்னா, உன் கையில் வைத்திருக்கும் குச்சியால் தான் உன் வாழ்க்கை வீழ்ந்தது, அதைக் கொடுத்தது ஒரு ஆசாரி. அவன் உன் புகழ் மீது கொண்ட பொறாமையினால் இந்தக் குச்சியை உன்னிடம் கொடுத்து, சமயோஜிதமாக அதை உன்னுடனே வைத்திருக்கும் படி செய்ததால் நீ இவ்வளவு துன்பத்தையும் அடைந்தாய்” என்றது. அதிர்ந்தான் மன்னன். ஆனாலும் அவனால் இந்தக் குச்சியா நம்மை இத்தனை துன்பத்துக்கும் ஆளாக்கியது என்று நம்ப முடியவில்லை. அவன் யோசிப்பதைக் கண்ட அந்தப் பட்சி (பஜ்ஜி அல்ல பட்சி - பறவை என அர்த்தம்), “மன்னா, நீ யோசிப்பதைப் பார்த்தால் நான் ஏதோ உன்னிடம் பொய் உரைப்பது போல நினைக்கிறாய். அது இயல்புதான். இதோ இங்கிருந்து கொஞ்ச தூரம் சென்றாயானால் அங்கே ஒருவன் படுக்கையில் உழன்று கொண்டிருப்பான். அவன் வீட்டு முன்னாலிருக்கும் நிலமெல்லாம் காய்ந்து வெடித்துப் போயிருக்கும். அங்கு போய் அவனை எழுப்பு. பின்னர் அவன் வீட்டில் இருக்கும் ஏரின் நுகத்தடியை எடுத்து ஒடித்து நெருப்பு வைத்து எரி. அதன் சாம்பலை கொண்டு போய் கண்காணாத இடத்தில் போட்டு விட்டு வா, அதன் பிறகு என்ன நடக்கிறது என்று பார்த்து விட்டு, இதே இடத்திற்கு வா” என்றுச் சொல்லி விட்டு பறந்து போனது.
மன்னனும் அவ்வாறு சென்ற போது தூரத்தில் பாழடைந்த ஒரு வீட்டினைப் பார்த்தான். அங்கு ஒருவன் நோய்வாய்ப்பட்டு உழறிக் கொண்டே புரண்டு கொண்டிருந்தான். மன்னன் ஏர் எங்கே இருக்கிறது என்று தேடிக் கண்டடைந்து அதை ஒடித்தான். கற்களை உரசி நெருப்புண்டாக்கி அதை எரித்தான். சாம்பலைக் கொண்டு போய் தூரத்தில் போட்டு விட்டு வரும் போது மழை தூரியது. படுக்கையில் படுத்து இருந்தவன் எழுந்து அமர்ந்தான். மன்னனும் அவனுக்கு உதவ அவன் எழுந்து நடமாட ஆரம்பித்தான். வயலில் இருந்த பொய்கை மழையால் நிரம்ப அவன் மகிழ்ச்சியுடன் எழுந்து நடக்க ஆரம்பித்தான். மன்னனும் அவனுடன் சேர்ந்து வேலை செய்ய மாடுகளை வைத்து உழவு செய்தனர். மன்னனுக்குள் பட்சியின் பேச்சு குறுகுறுப்பை உண்டாக்கியது.
அவனை அழைத்துக் கொண்டு பட்சி அமர்ந்திருந்த இடத்தில் அருகில், குச்சி இருந்த இடத்தை நோக்கிச் சென்றான். அதே பட்சி அங்கு அவனுக்காக காத்திருந்தது. இருவரையும் பார்த்ததும், “மன்னா, என்ன கண்டாய் அவ்விடம்?” என்று கேட்க மன்னனிடம் பதில் இல்லை.
மரத்தடியில் இருந்த குச்சியையே பார்த்துக் கொண்டிருந்தான்.
அந்தப் பட்சி, “மன்னா, இந்தக் குச்சியை எரித்துச் சாம்பாலாக்கு” என்றது. மன்னனும் அதைச் செய்தான்.
”இனி உனக்கு நல்ல காலம் தான்” என்றது அந்தப் பட்சி.
அந்த நேரத்தில் மன்னனைத் தேடி அமைச்சர் வர, இழந்த ஆட்சி அவனுக்கு மீண்டும் கிடைக்க விருப்பதாகவும், மக்கள் அவனை தேடிக் கொண்டிருப்பதாகவும் அவர் சொன்னார்.
அவனால் இதை நம்பவே முடியவில்லை. நம்பாமல் இருக்கவும் முடியவில்லை. அவன் முன்னே நடப்பவை எல்லாம் சாட்சியாக இருக்கிறது. முடிவில் மன்னன் அந்தப் பட்சியிடம் சென்று, “இது என்ன குச்சி என்று சொல்வாயா?” எனக் கேட்டான். அந்தப் பட்சியும் சொன்னது. அதிர்ந்தான் மன்னன்.
அது என்ன குச்சி? அது என்ன மரம் என்று எனக்கும் சொல்ல ஆசைதான். ஆனால் கலிகாலத்தில் ஒருவனை ஒழிக்க எனது இந்தப் பதிவு பயன்பட்டு விட்டால் அதை விடக் கொடுமை வேறு எதுவும் இருக்க முடியாது என்பதால் அந்த விபரத்தை எழுத முடியவில்லை.