குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Showing posts with label வரி. Show all posts
Showing posts with label வரி. Show all posts

Thursday, August 27, 2026

இறைவன் சிரிக்கும் நேரம்


நான் யார் என்று அறிதலே ஆன்மீகம் என்பார்கள். பல சுவாமிஜிக்கள் அதைத்தான் பக்தர்களிடம் சொற்பொழிவு ஆத்திக் கொண்டிருப்பார்கள். பக்தர்களும் புளகாங்கிதம் அடைந்து, தீவிரமாக நான் யார் என்று அறிவதிலே ஆராய்ச்சிகள் செய்து கொண்டிருப்பார்கள். 

பக்தர்களில் பல வகை முயற்சிகள் செய்து நான் யார் என்று தெரிந்துகொள்ள முயல்வார்கள். அவர்களால் முடியவே முடியாது. ஏனென்றால் அப்படி ஒன்று இருப்பதாகச் சொல்வார்கள். ஆனால் கண்டவர் விண்டிலர். 

வேதங்களிலும் உபநிடதங்களிலும் "நான் யார்?" என்ற கேள்விக்கு, நாம் வெளிப்புறமாக நம்மைப் பார்த்துக்கொள்ளும் உடல், மனம் அல்லது பெயர் ஆகியவை "நான்" அல்ல, எல்லாவற்றிற்கும் மேலாக இருக்கும் 'ஆத்மா' தான் உண்மையான "நான்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது

உபநிடதங்களில் உள்ள மகா வாக்கியங்கள் என்ன சொல்கிறது என்றால், அஹம் பிரம்மாஸ்மி (நான் பிரம்மமாக இருக்கிறேன்) அதாவது, பிரபஞ்சம் முழுவதிலும் நிறைந்திருக்கும் பேரறிவு அல்லது இறைத்தன்மையின் ஒரு பகுதியே நீ என்றும்,

தத் வம் அஸி (அதுவாக நீ இருக்கிறாய்) நீ தேடிக்கொண்டிருக்கும் பரம்பொருள் வேறு எங்கோ இல்லை, அது நீயேதான் என்றும்,

அயம் ஆத்மா பிரம்மா (இந்த ஆத்மாவே பிரம்மம்) என்றும்,

பிரஞ்ஞானம் பிரம்மா (தூய அறிவே பிரம்மம்) என்றும் சொல்லப்பட்டிருக்கின்றன.

வேதங்களின்படி "நான்" என்பது அழிவில்லாதது என்றும், உடல் பிறக்கும், வளரும், அழியும். ஆனால் "நான்" எனப்படும் ஆத்மாவிற்கு பிறப்பும் இல்லை, இறப்பும் இல்லை எனவும் எழுதப்பட்டிருக்கிறது.

சச்சிதானந்தம் என்றால் உண்மையான "நான்" என்பது சத் (நிலையான உண்மை), சித் (தூய அறிவு), ஆனந்தம் (எல்லையற்ற பேரின்பம்) வடிவமானது என்கிறது.

வேதங்களின்படி நீங்கள் வெறும் ரத்தமும் சதையுமாலான உடலோ அல்லது எண்ணங்களின் தொகுப்பான மனதோ அல்ல; நீங்கள் எல்லையற்ற, அழிவில்லாத, பேரறிவு மயமான பிரம்மம் அதாவது ஆத்மா ஆவீர்கள்.

படித்து விட்டீர்களா? பின்னே ஏன் இன்னொரு பிரம்மத்திடம் சென்று சரணடைகின்றீர்கள்? என்று உங்களுக்குள்ளே கேள்வி கேட்டுக் கொள்ளுங்கள்.

அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

வெள்ளிங்கிரி சுவாமிகள் ஜீவசமாதிக்கு சென்றிருந்த போது, ஜீவசமாதிக்கு வெளியில் அழுகிய தோல் உடைய ஒரு நாய்க்கு வேப்ப எண்ணெய் தடவிக் கொண்டிருந்தார். சரியான நாற்றம். குமட்டிக் கொண்டு வந்தது.

கைகழுவி விட்டு என்னிடம் வந்தார். தொற்று நோய் உண்டாகி விடும் சுவாமி என்றேன்.

என்னைப் பார்த்து சிரித்து விட்டு, அங்கிருப்பதுதானே இங்கேயும் இருக்கிறது எனச் சொன்னார்.

அதாவது அதுவும் ஒரு உயிர், நீங்களும் ஒரு உயிர் என்றார். 

அதாவது நீயே நான், நானே நீ.

அஹம் பிரம்மாஸ்மி !

இந்தச் சம்பவம் சொல்லும் கருத்து புரிந்திருக்கும் என நம்புகிறேன்.

கடந்த மாதம் ஹைதராபாத் சென்றிருந்தேன். 

நகரமெல்லாம் காங்க்ரீட் மரங்கள் முளைத்திருந்தன. பெரும் பொருளாதார வளர்ச்சியைப் பார்த்தேன். வானுயர்ந்த கட்டிடங்கள் அழகாய் வாமன கடவுள் உயர்ந்தது போல உயரமாய் நின்று கொண்டிருந்தன.

வாமன கடவுள் - கேராளா மாவலி ஓணம் பண்டிகை உண்மை கதை உங்களுக்குத் தெரியும் தானே? தெரியாது என்றால் கீழே இருக்கும் படத்தைக் கிளிக் செய்து படித்துக் கொள்ளுங்கள்.


நன்றி விடுதலை பத்திரிக்கை.

மக்கள் பரபரப்பாய் இருந்தார்கள். 

ஐடிசி ஹோட்டலில் இருந்து எலக்ட்ரானிக் சிட்டி நோக்கி காரில் சென்று கொண்டிருந்தேன். 

ஹைதராபத்தின் பாரம்பரிய வட்டவடிவ எலக்ட்ரானிக்ஸ் நிறுவனத்தின் அருகில் இருந்த ஒரு நடைபாதை சிக்னலில் கார் நின்றது.

இடது புறம் பார்த்த போது அந்த நடைபாதையில் ஆண் ஒருவர், அவரின் மனைவியுடன் ஒரு குழந்தையும் சேர்ந்து ரோஜாக்களை ஒரு வண்ண காகிதத்தில் மலர்ச் செண்டு போல கட்டிக் கொண்டிருந்தார்கள்.

அந்தப் பெண் குழந்தையின் உடை கிழிந்து இருந்தது. தலைமுடிகள் எண்ணை இல்லாமல் வறண்டு கிடந்தன. அவளின் முகம் அழுக்கடைந்து இருந்தது. அவளின் பெற்றோர்களின் உடைகள் துவைக்கப்படவில்லை. அவர்களின் தோற்றமே அழுக்கடைந்து இருந்தன. ஆயிரக்கணக்கான வாகனங்களின் புகையில் பொலிவிழந்து கிடந்தார்கள். அவர்களின் நுரையீரல்களின் நிலை?

அந்த மலர்ச் செண்டை - சிக்னலில் காத்திருக்கும் கார்களில் செல்வோரிடம் விற்பனை செய்து, அதில் வரும் வருமானத்தில் அவர்கள் உணவு உண்டு பிழைத்திருக்க வேண்டும். அந்த மலர்ச் செண்டில் கட்டப்பட்டிருக்கும் பிளாஸ்டிக் பேப்பருக்கு ஜி.எஸ்.டி வரி கொடுத்துதான் வாங்கி இருப்பார்கள். அந்த வரி இந்திய ஒன்றிய அரசுக்குச் சென்றிருக்கும்.

அந்த வரியில் தான் மக்களவை உறுப்பினர்களும், மாநிலங்களவை உறுப்பினர்களும், ஜனாதிபதியும் ஊதியம் பெறுவார்கள்.

ஒன்றிய அரசுக்கு இந்தக் குடும்பத்தின் வாயிலாக வரி கிடைத்திருக்கும். ஆனால் அரசுக்கு இவர்கள் யாரோ? 

இந்தியனாகப் பிறந்தால் அரசுக்கு வரி கட்டியே ஆக வேண்டும். வரி கட்டாமல் பிச்சைக்காரன் கூட இங்கு வாழ முடியாது. அந்தளவுக்கு மக்களிடம் வரி வாங்கும் வலைப்பின்னலை இந்திய அரசு உருவாக்கி வைத்திருக்கிறது.

வரி கொடுக்கும் மக்களின் நல்வாழ்வுக்கு இந்திய அரசு என்ன செய்கிறது? யோசித்துக் கொள்ளுங்கள்.

ஒன்பதாயிரம் கோடிக்கு வரிப்பணத்தில் விமானமும், இருநூறு கோடிக்கு ஒருவர் வசிக்கும் வீட்டையும் கட்டும் ஒன்றிய அரசு - வரி கொடுக்கும் மக்களுக்கும் என்ன செய்து கொண்டிருக்கிறது? என யோசித்துப் பாருங்கள். 

இந்த ஏழைக்குடும்பத்துக்கு தெரியுமா வாக்குரிமை பதிவு பற்றி?

இந்த ஏழைகளுக்குத் தெரியுமா மக்கள் தொகை பதிவு பற்றி?

அன்றாடப் பசி தீர்க்கப்போராடும் இந்தக் குடும்பத்திற்கு, இதெல்லாம் என்னவென்று தெரியுமா?

அவர்களைப் பார்த்த போது, எனக்குள் உண்டாகிய கேள்விகள் இவையெல்லாம்.

அந்தச் சிறுமியை அழைத்தேன். சிரித்துக் கொண்டே ஓடி வந்தது. அவளிடம் ஐநூறு ரூபாயை நீட்டினேன். அவள் வாங்கவில்லை.

திரும்பி அவளின் பெற்றோர்களிடம் ஓடினாள். ஒருவேளை அனுமதி கேட்பாளோ என்று நினைத்தேன்.

ஒரு அழுக்குத் துணிக்குள் இருந்த, உடலில் உடையில்லாத ஒரு சிறு பெண் குழந்தையை தூக்கி இடுப்பில் வைத்துக் கொண்டு ஓடி வந்தாள் என்னிடம்.

ஒரு நிமிடம் நெஞ்சு பதைபதைத்தது. 

அந்தப் பெண் குழந்தை இடது கையை நீட்டி பணத்தை வாங்கியது. நடைபாதையில் ஏறினார்கள் இருவரும்.

இருவரும் திரும்பி நின்றார்கள். அந்தச் சிறுமியின் இடுப்பில் இருந்த குழந்தை என்னைப் பார்த்து அப்படி ஒரு சிரிப்பு சிரித்தது. சிரித்துக் கொண்டே கையாட்டிக் கொன்டே இருந்தார்கள் இருவரும்.

அருகில் இருந்த நண்பர் என்ன சார் இப்படிச் சிரிக்கிறார்கள் என்று கேட்டார்.

அந்த இரு குழந்தைகளின் முகம் மட்டும் சிரிக்கவில்லை. கண்கள் ஒளி வீசி சிரித்தன.

அந்தக் கண்களின் ஒளியில் இறைவனைக் கண்டேன்.

கிரீன் சிக்னல் விழுந்தது. கார் நகர்ந்தது. அவர்கள் காரை நோக்கிச் சிரித்துகொண்டே இருந்தார்கள்.

வளமுடன் வாழ்க.

குறிப்பு: மேலே இருக்கும் புகைப்படத்தின் ஒரிஜினல் என்னிடம் இருக்கிறது. அதை இங்குப் பதிவிடவில்லை. ஏ.ஐ புகைப்படத்தைப் பதிவேற்றி இருக்கிறேன்.

* * * 

இப்போது சொல்லுங்கள், நீங்கள் யார், நான் யார் என்று உங்களுக்குப் புரிந்து விட்டதா?

அவர் யார்? இவர் யார்? அது யார்? இது யார்? இப்படியெல்லாம் சிந்தித்துப் பாருங்கள். 

உங்கள் அறிவு உங்களுக்கு காட்டுவது எதுவோ அதுவே நான் யார்?




Saturday, May 9, 2020

இந்தியாவிற்கு வெளிநாட்டினரின் முதலீடு வரப்போகிறது உண்மை என்ன?


நண்பர்களே,

தினக்கூலிகள் பற்றி நமக்குத் தெரியும். சாலைகளின் ஓரமாய் மேஸ்திரிக்காகவும், அவர் ஒதுக்கும் வேலைக்காகவும் காத்துக்கிடப்போரை நாமெல்லாம் பார்த்திருக்கிறோம். தினமும் வேலை செய்து கிடைக்கும் கூலியில் டாஸ்மாக் பறித்துக் கொண்டது போக, மீதி உள்ள காசில் சாப்பிடுபவர்கள் 130 கோடியில் 110 கோடிப் பேர் இருக்கிறார்கள் என்ற புள்ளி விபரங்களை நாமெல்லாம் படித்திருக்கிறோம். மீதி இருக்கும் 20 கோடியில் நாமும் ஒருவர் என்று மகிழ்ச்சி கொண்டிருப்போம்.

இந்தியாவின் கடன் தொகை 85 லட்சம் கோடி, தமிழகத்தின் கடன் தொகை 3.5 லட்சம் கோடி. ஒரே மாதம், வரி வருமானம் போதவில்லை என்ற உடனே இந்தியாவின் பிரதமர் டிவியில் உரை ஆத்த வரவில்லை. தமிழ்நாட்டிலோ சம்பளம் கட். இன்னும் ஒரு மாதம் வரி வருவாய் இல்லையென்றால் நாடு மூழ்கிப் போய் விடும். அரசு அதிகாரிகளுக்கு, பணியாளர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியாது. ராணுவ வீரர்களுக்கும் கொடுக்க முடியாது. என்ன ஆகும் அதன் பின்னால்? நாடு ஸ்தம்பித்துப் போய் விடும். ஆக தினமும் வரி வசூல் என்பது நாட்டின் மூச்சு. அதாவது ஒரு தினக்கூலி கதை.

இப்போது சொல்லுங்கள்.

யார் அன்றாடம் காய்ச்சி?

இதற்கிடையில் ஒரு விஷயம். இந்திய மக்கள் தொகையில் சுமார் பத்து லட்சம் பேரிடம் நமது பணமெல்லாம் முடங்கிக் கிடக்கிறது. கொங்குப்பக்கம் ஒரு சிலரிடம் ஐம்பத்தாயிரம் கோடிக்கும் மேல் புதைக்கப்பட்டிருப்பதாக மக்கள் பேசிக் கொள்கிறார்கள்.

இந்தப் பணத்தைத் தோண்டி எடுத்தால் ஐந்து வருடங்கள் வரி வசூலிக்காமலே இந்தியாவை ஆளலாம். மக்கள் எல்லோரும் மகிழ்வாக இருப்பார்கள். அந்த பத்து லட்சம் பேர் யார் யார் என எல்லோருக்கும் தெரியும். வசூலிப்பதும் எளிதுதான்.

யார் செய்வது? செய்வார்களா? செய்யமாட்டார்கள்.

மக்களுக்கு வருமானமே இல்லை. ஆனால் அரசு விலையேற்றிக் கொண்டே இருக்கின்றார்கள்? இது எரியும் வீட்டில், ஆக்சிடெண்டில் பிடுங்கும் திருட்டு புத்தி அல்லவா? மக்கள் நலம் பற்றி நல்ல சிந்தனை உள்ளவர்கள் ஆட்சிக்கு வர வேண்டும்.

இந்த அக்கப்போர் ஒரு பக்கம் இருக்கட்டும். இனி முதலீட்டுக்கு வருவோம்.

உலகம் உள்ளங்கைக்குள் வந்து விட்டது. ஒவ்வொரு நாட்டிலும் நடக்கும் சம்பவங்கள் அனைத்தும் விரல் நுனியில். கட்டுப்பாடுகளற்ற இணையவெளியில் கிடைக்காத விஷயங்களே இல்லை. ஒவ்வொரு நாட்டின் அத்தனை விபரங்களும் உட்கார்ந்த இடத்திலிருந்து பெற்று அதை ஒப்பீடு செய்து விடலாம்.

இந்தக் காலத்திலும் பொய்யாகப் பேசியே மக்களை ஏமாற்றும் ஏமாளிக்கூட்டம் திரிந்து கொண்டுதான் இருக்கின்றது. கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்பார்கள். எட்டு நாள் தேவையில்லை. எட்டு நொடி போதும் பொய்யா உண்மையா என தெரிந்து கொள்ள.

உலக நாடுகளில் பெரும்பான்மையாக இருப்பவை முஸ்லிம் நாடுகளும், கிறிஸ்துவ நாடுகளும். மற்றபடி இரண்டே இரண்டு இந்து(??) நாடுகள் மற்றும் மதம் சாரா ஒரு சில நாடுகள்.

இந்தியாவை ஆளும் பாஜக கொண்டு வந்திருக்கும் சமீபத்திய சட்டமான சிட்டிசன் சிப் அமெண்ட்மெண்ட் படி இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பும், இந்தியர்கள் கணக்கெடுப்பும் பல இடங்களில் பல வித சர்ச்சைகளையும், தொடர்ந்து போராட்டங்களையும் உருவாக்கியது. கொரானாவினால் இப்போதைக்கு அந்த இரு விஷயங்களுக்காக போராட்டங்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.

போராட்டம் என்றாலே பிரிட்டிஷ்காரர்கள் இந்திய சுதந்திரபோராட்டத்தினை வெறி கொண்டு அடக்கியது போல ஜன நாயக அரசும் நடந்து கொண்டதை நாமெல்லாம் பல்வேறு டிவி செய்திகள் மூலம் ஏற்கனவே தெரிந்து இருக்கிறோம்.

என்னைப் பொறுத்தவரை இந்தியர்கள் கணக்கெடுப்பு வெகு முக்கியமானது என்று தான் சொல்ல வேண்டும். இந்தியர்கள், வெளிநாட்டினர், அகதிகள், தஞ்சமடைந்தவர்கள் எனும் துல்லிய கணக்கு விபரங்கள் தேவை. இந்த தரவுகள் இனி வரும் காலத்தில் அவசியம் தேவைப்படும், அதே நேரத்தில் அரசு கட்சி சார்பற்ற, அரசின் கட்டுப்பாடுகளற்ற சுதந்திர அமைப்பின் வழியாக இவற்றைப் பாதுகாத்திட சட்ட வரையறைகள் செய்தல் அவசியம். இல்லையெனில் அரசியல் பழிவாங்கல்களும், அரசியல் கொலைகளுக்கும் இத்தரவுகள் இடமளித்து விடும் அபாயம் நிச்சயம் உருவாகும். ஆட்சி அதிகாரத்தில் இருப்பவர்கள் சுய நலமற்றர்களாக இருப்பார்கள் என்று மனிதகுலம என்றைக்கும் நம்பி விட கூடவே கூடாது.

இத்தரவுகள் தேர்ந்தெடுக்கப்படும் அரசியல் கட்சி வசம் இருந்தால், அவர்கள் நினைத்தால் ஒரு நொடியில் எதிர்கட்சி ஆட்களையோ அல்லது விமர்சனங்கள் செய்பவர்களையோ இல்லாமல் மாற்றி விடலாம். நான் இந்தியன் தான் என்பதை நிரூபிக்க வேண்டிய அவசியம் தனிமனிதனிடம் வந்தால், அதை ஏற்கவோ நிராகரிக்கவோ அரசுக்கு அதிகாரம் இருந்தால் என்ன ஆகும்? அவன் அழிக்கப்படுவான் என்பதில் சந்தேகம் இல்லை. இப்படியான நிகழ்வுகள் இந்தியாவில் நடக்கும் என்பது 100 சதவீதம் உண்மை.

ஆனால் அகதிகள் விஷயத்தில் அரசு இன்னும் சில கவனமான ஊள்ளீடுகளை சேர்த்து, மதம், இனம், மொழி இல்லாதவாறு பார்த்துக் கொள்ள வேண்டுமென நினைக்கிறேன்.

சிறுபான்மையினராக குறிப்பிடப்படும் முஸ்லிம்கள், கிறிஸ்துவர்கள் இச்சட்டத்தினை ஆதரரிக்கவில்லை என்பது உண்மை. அதற்கான போராட்டங்களை அவர்கள் இந்தியாவிலும் வெளி நாடுகளிலும் நடத்தி இருக்கிறார்கள்.

இப்படியான நிலை இருக்கையில் பெரும்பான்மை நாடுகளைக் கொண்ட முஸ்லிம் மதத்தைச் சார்ந்த தொழிலதிபர்களும், கிறிஸ்து மதத்தைச் சார்ந்த தொழிலதிபர்களும் எப்படி இந்தியாவில் முதலீடு செய்ய முன் வருவார்கள் என்று நம்ப முடியும்? முதலீட்டாளர்கள் பெருத்த லாபம் கருதி முதலீடுகள் செய்வார்கள். இருப்பினும் முதலீட்டாளர் தங்கள் முதலீடுகளைச் செய்யும் முன்பு பல்வேறு தரவுகளை ஆராய்வார்கள்.

ஒவ்வொரு மனிதனும் பிறப்பின் போது, அவனின் மதம் நிர்ணயிக்கப்பட்டு அதன் வழி வளர்க்கப்படுகிறான். மதச்சார்பு கொண்ட மனிதன், தன் மதத்தினருக்கு இந்தியாவில் வாழ அனுமதிப்பார்களா என்ற சூழல் இருக்கிறது என்று தெரிந்தபடியால், இந்தியாவில் எப்படி முதலீடுகள் செய்ய முன்வருவார்கள் என்று நினைக்க முடியும்? இந்தியாவை ஆளும் அரசுக்கு இனம், மொழி, மதம் முக்கியம் என்பது போல முதலீட்டாளர்களுக்கும் இருக்குமல்லவா?

அதற்கான சாத்தியக்கூறுகளை சிட்டிஷன்சிப் அமெண்ட்மெண்ட் சட்டம் குறைத்திருக்கும் வாய்ப்புகள் அதிகம் உண்டல்லவா?

பணக்காரனுக்கு அப்படியெல்லாம் மதம் சார்ந்த சிந்தனைகள் இல்லை என்று நம்மை நாமே ஏமாற்றிக் கொள்ளலாம். பெரும்பான்மையான நிறுவனங்களின் தலைவர்கள் என்ன இனமோ அந்த இனத்தினருக்கு வேலையில் முன்னுரிமை கொடுத்திருப்பது உலகிற்கே தெரிந்த விஷயம். சப்பைக்கட்டு கட்ட இப்படியெல்லாம் பேசுவார்கள். ஆனால் நிதர்சன உண்மை மதம், மொழி, இனம் சார்ந்த பணியாளர்கள் என்பது.

சைனாவில் முதலீடு செய்ய விரும்பாதவர்கள் இந்தியாவிற்கு எப்படி வருவார்கள் என்று எவராலும் அறுதியிட்டுச் சொல்ல முடியுமா? இந்தியாவில் முதலீடு செய்தால் தான் கொள்ளை லாபம் அடிக்கலாம் என்று நினைத்து வருவார்கள் என்றும் சொல்வார்கள். அதெல்லாம் சாத்தியமில்லாத வெற்றுக் கூச்சல்.

இரண்டு ரூபாய் பதிவாளர்களின் பதிவுகள்  இனி முதலீட்டாளர்களுக்கு இந்தியாதான் ஒரேஅ வழி என்று சொல்கின்றன?  

இரண்டு ரூபாய் கொடுக்கும் முதலாளி மதிகெட்டவர் என்று தான் சொல்ல வேண்டும். இந்த சிட்டிசன்ஷிப் அமெண்ட்மெண்ட் இப்போதைக்கு தேவையில்லாத ஆணி. இந்த ஆணியைப் பிடுங்கி விட்டு வேறொரு மேட்டரைச் செய்தால் போதும். நினைத்த காரியம் செவ்வனே நடந்திருக்கும்.

உங்களுக்கு என்ன சிறுபான்மையினர் பெரும்பான்மையினராக மாறி விடுகிறார்கள் என்பதுதானே பிரச்சினை? அதற்கு ஒரே ஒரு வழி இருக்கிறது.

ஒரே ஒரு குழந்தை மட்டுமே பெற்றுக் கொள்ள அனுமதி, இரண்டு குழந்தை பெற்றால் குழந்தைக்கு வரி கொடுக்க வேண்டுமென்று உத்தரவு போடுங்களேன். மேட்டர் ஓவர். சிறுபான்மையினர் எப்போதும் சிறுபான்மையினர் தான், பெரும்பான்மையினர் எப்போதும் பெரும்பான்மையினர்தானே?

மக்கள் தொகையைக் கட்டுப்படுத்துகிறோம் பேர்வழி என சட்டம் ஒன்றினை போட்டால் மேட்டர் ஓவர். (எனக்கு எவ்வளவு கொடூர சிந்தனை என்று பாருங்கள். இதற்கு நான் பொறுப்பல்ல, வெறும் ஐடியாதான்)

கண்ணை மூடிக் கொண்டு நம்பி விட இன்னும் நாமெல்லாம் மூளையைக் கழற்றி வீசி விட்டு திரியவில்லை என்று நம்புகிறேன்.

இந்திய அரசின் இந்தச் சட்டங்கள், வெளிநாடு முதலீட்டாளர்களுக்கு மகிழ்ச்சியைத் தந்திருக்காது என நம்பலாம். ஏனெனில் உலகில் இந்தியா ஒரு சிறுபான்மை நாடு என்பது உள்ளங்கை நெல்லிக்கனி.

மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்றவர்களுக்கு இரத்தம் ஏற்றப்பட்டிருந்தால், அந்த இரத்தத்தில் முஸ்லிம், கிறிஸ்து, கீழ்சாதி இரத்தம் இல்லையென சொல்ல முடியுமா?

உலகம் ஒரே கொடைக்குள் வந்து விட்டது. இனம், மொழி, மதம் சார்ந்து அரசுகள் இயங்க முடியாது ஆளும் அரசுகள் உணர்ந்து கொள்ள வேண்டியது காலத்தின் கட்டாய உத்தரவு.

இல்லை நாங்கள் இப்படித்தான் என்றால் காலுக்குதான் செருப்பே தவிர செருப்புக்கு கால் இல்லை என உலகம் நம்மை உதறி தள்ளிவிடும் அபாயம் உண்டு.

கொரானாவினால் பல நாடுகளிலும் வேலை இழப்புகள் ஏற்பட்டிருக்கின்றன. இனி வேலைகள் அந்தந்த நாட்டின் பிரஜைகளுக்கே கிடைக்கும் என நம்பித்தான் ஆக வேண்டும். வெளி நாட்டில் வேலை எனும் கனவு கனவாகவே முடிந்து போகும்.

ஒவ்வொரு இந்தியருக்கும் மாதம் பத்தாயிரம் ரூபாய் சாத்தியமா? என்றால் சாத்தியம்தான். பைசா செலவில்லாமல் எல்லோருக்கும் பணம் கொடுக்கலாம். யாருக்கும் எந்த நட்டமும் வராது. நாட்டின் வருமானத்துக்கும் பிரச்சினை இருக்காது. அது எப்படி என்கின்றீர்களா? அது ரகசியம். எவன் கண்டுபிடிக்கின்றான் என பார்க்கலாம்.