மகளை அழைக்கச் சென்று வீடு திரும்பிய மனைவியின் முகம் பேயறைந்தந்தது போல இருந்தது. பள்ளியில் ஏதோ பிரச்சினை போலும் என்று நினைத்துக் கொண்டே விசாரித்தேன். பிரச்சினை பள்ளியிலோ அல்லது குழந்தைகளாலோ அல்ல.
மகளுடன் படிக்கும் தோழியை அழைக்க பாட்டி ஒருவரும் மனைவியுடன் செல்வாராம். நேற்றைக்கு கோவையில் லேசாக தூறல் விழுந்து கொண்டிருந்தது. ஆகவே குடை எடுத்துக் கொண்டுதான் பள்ளிக்குச் சென்றார்கள்.
பள்ளி விட்டதும் பாட்டி தன் பேத்தியையும், மனைவி என் மகளையும் அழைத்துக் கொண்டு கேட் தாண்டி நான்கு அடி தூரம் வந்திருப்பார்களாம். பாட்டியின் மகன் காரில் வந்திருக்கிறார். காரில் அவருடன் மனைவி மட்டும் இருந்தாராம். காரை நிறுத்தி தன் மகளை மட்டும் ஏற்றிக் கொண்டவர், பாட்டியை நடந்து வா என்றுச் சொல்லி விட்டுச் சென்று விட்டாராம். பாட்டிக்கு கண்ணில் கண்ணீர் துளிர்த்து நின்றதாம்.
“ஐந்து வயதில் கணவர் இறந்து போய் விட்டார். இவனை படித்து ஆளாக்குவதற்கு இருந்த சொத்தையெல்லாம் விற்று படாத பாடு பட்டு படிக்க வைத்து வேலையையும் வாங்கிக் கொடுத்தேன். என்னதான் சொல்லுங்க, கணவன் இருந்தால் என்னை இப்படி விட்டு விட்டுப் போவாரா? ஏதோ உசிர் இருக்கும் வரை அப்படியே இருந்துவிட்டு போக வேண்டியதுதான்” என்று சொல்லி அழுதிருக்கின்றார்.
என் மனைவி ஏதோதோ சொல்லி சமாளித்து அவரை ஆறுதல் படுத்தி இருக்கிறார்.
ஆசை ஆசையாய் பெற்று வளர்த்து கண்ணுக்குள் வைத்து காப்பாற்றி படிக்க வைத்து, நேரத்திற்கு உணவு கொடுத்து, வேண்டியது எல்லாம் வாங்கிக் கொடுத்து வளர்த்து வரும் பிள்ளைகளில் நூற்றுக்கு 99 சதவீதம் மேலே கண்ட மகனைப் போலத்தான் இருக்கின்றார்கள்.
ஏன்?
எல்லாவற்றுக்கும் ஒரு பெண் தான் காரணம்.
ஆவதும் பெண்ணாலே அழிவதும் பெண்ணாலே.
எனது குடும்பத்தில் என் சின்னம்மா பசங்க மூவர். என்னுடன் சேர்த்து நால்வர். நால்வரும் ஒன்று சேர்ந்தால் அன்றைக்கு ஒரே கொண்டாட்டம் தான். மட்டன், சிக்கன், முட்டை என்று கூத்தும் கும்மாளமுமாய்த் தான் இருக்கும்.
முதல் குழந்தையின் போது மனைவி வாமிட் எடுத்துக் கொண்டே இருப்பாள். அதை வாங்கிக் கொண்டு போய் வெளியில் கொட்டி தண்ணீர் கொடுத்து, அவளை மருத்துவமனைக்கு அழைத்து சென்று வருவது நடுத்தம்பி.
மூத்த தம்பி பிரவசத்தின் போது மருத்துவமனையிலேயே என் அம்மாவுக்குத் துணையாகவும், வீட்டிலிருந்து சாப்பாடு கொண்டு செல்வது என்று இருப்பான்.
இப்படி இருந்தவர்கள் இன்றைக்கு வருடத்திற்கு ஒரு முறை என்னுடன் பேசுவது அரிது. காரணம் அவர்களின் திருமணம்.
சரியாகச் சொன்னால் பெண்கள். மூவரும் மூன்று திசைகள். மெட்டீரியல்ஸ் வாழ்க்கைக்கு அடிமைப்பட்டுப் போன நுகர்வுப் பெண்களாய் வாழ்க்கையில் ஆசைக்கும், நிதர்சனத்திற்கும் இடையில் போராடிக் கொண்டிருக்கும் அற்பங்களாய் இருக்கின்றார்கள்.
வாழ்க்கையின் நிதர்சனம் புரிவது ஐம்பது வயதுக்கும் மேல். அப்போது எவராலும் ஏதும் செய்ய இயலாது. இயலாமையால் வெந்து வெந்து வேதனைப்படத்தான் முடியும்.
பாட்டியின் மகனுக்கும் இதே சூழல் வரத்தான் செய்யும். அப்போது வருந்தி என்ன ஆகப் போகின்றது. சாகின்ற வரையில் தன் மகனைப் பற்றி நினைத்து நினைத்து வேதனையில் அல்லவா அப்பாட்டி இறந்து போகும்?
கணவன் இல்லையென்றால் மனைவியும், மனைவி இல்லையென்றால் கணவனும் கேட்பாரற்றுப் போவார்கள் என்பதுதான் நிதர்சனம். எத்தனை அன்பாக பிள்ளைகள் இருந்தாலும் அது எதற்குமுதவாது.
- ப்ரியங்களுடன்
கோவை எம் தங்கவேல்