குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Wednesday, September 18, 2024

நிலம் (116) - 1929ம் வருடச் சொத்துக்கு இப்போது வழக்கு

சமீப காலமாக மக்களின் மன நிலை வேகம் வேகம். எதற்கெடுத்தாலும் வேகம். பொறுமை என்பது இல்லவே இல்லை. உடனடியாக முடிவெடுக்கிறார்கள். உணர்ச்சி வசப்படுகிறார்கள். எது சரி? எது தவறு என்று புரிந்து கொள்ளாமல் ஃபேஸ்புக், டிவிட்டர், வாட்சப்செய்திகளை உடனே நம்பி விடுகின்றனர். 

இப்படி ஃபேஸ்புக், டிவிட்டர், வாட்சப்செய்திகளை  நம்பித்தான் இந்தியர்களாகிய நாம் நாசகாரர்களின் வலையில் சிக்கி, சம்பாதிக்கும் பணத்தை எல்லாம் வரி வரி என கொடுத்துக் கொண்டிருக்கிறோம். விடிவு காலம் எப்போது வருமோ?

என்னிடம் லீகல் பார்க்க வரும் நபர்களிடம் நான் 1900 ஆண்டிலிருந்து வில்லங்கம் பார்ப்பேன் என்றவுடன் தலை தெறிக்க ஓடி விடுகிறார்கள். 

“சார், வங்கியில் பதினைந்து ஆண்டுகளுக்கு மட்டும்தான் லீகல் பார்க்கிறார்கள்’ என்கிறார்கள்.

வங்கியில் நீங்கள் அடகு வைக்கும் சொத்தின் ஆவணங்களில் ஏதேனும் முறைகேடு இருந்தால் உடனடி கைது, ஜெயில் தான். சிபிஐ வரும். அவ்வளவுதான் காலம் முடிந்து போகும்.

தனியார் சொத்து வாங்கும் போதோ அல்லது கடன் பத்திரம் எழுதும் போது - அந்தச் சொத்தில் வில்லங்கம் ஏற்பட்டால் - வழக்கு அதுவும் சிவில் வழக்கு போட்டு, வக்கீல்களுக்கு ஃபீஸ் கொடுத்து, கோர்ட்டுக்கு நாயாய் பேயாய் அலைந்து, அலைந்து நொந்து நூடுல்ஸ் ஆகி விடுவார்கள்.

இதெல்லாம் தவிர்க்க என்னைப் போன்ற ஆட்கள் வேலை செய்வதாகச் சொன்னாலும் எகிறி விடுகிறார்கள். எதில் வேகம் வேண்டுமோ அதில் வேகமாக இருப்பதில்லை.

சமீபத்தில் ஒரு பிளாக் வாசகர் அவருக்கு வந்த கோர்ட் அழைப்பாணை பற்றி பேசினார். அவருக்கு நிகழ்ந்திருப்பது கொடுமை, கொடுமையிலும் கொடுமை.

இனி என்ன ஆகும்? 

சாமானியனுக்கு வழக்கில் வெற்றி பெற எத்தனை ஆண்டுகள் பிடிக்கும் என நினைக்கிறீர்கள். பத்து வருடத்துக்கு குறையாமல் சிவில் வழக்கு நடக்கும். அதுவரையிலும் செலவு, அலைச்சல், மன உழைச்சல் இத்யாதிகள். நிம்மதி பறி போகும். உடல் நிலை குலையும். 

இதுவெல்லாம் வேண்டாம் என்றால் யார் கேட்பது. ஆப்பில் தானே உட்கார்ந்து கொள்ள அவ்வளவு ஆர்வமாக துடிப்பார்கள். 

“சார், நீங்கள் சொல்வதைப் பார்த்தால் வில்லங்கச் சொத்துக்கள் ஏதுமில்லையா?” என்று கேட்க தோன்றும். 

உங்கள் உழைப்பு, எதுவாக இருந்தாலும் அது சரியாகத்தான் இருக்கிறது என்று பார்த்து விட்டால் நிம்மதியாக இருக்கலாம் அல்லவா? நல்ல சொத்துகள் நிறைய இருக்கின்றன இல்லையென்று சொல்லவில்லை. அதையும் சரியாக ஆராய்ந்து பார்த்தால் என்ன கெட்டுப் போகப் போகிறது?

”புரோக்கர் சொன்னார் , அட்வான்ஸ் போட்ட சொத்துக்கு யாரோ ஒருவர் அதிக விலை தருவதாகப் பேசிக் கொண்டிருக்கிறார். கையை விட்டுப் போய் விடும். சீக்கிரமாக லீகல் பார்த்துக் கொண்டு வாருங்கள்” என்பார்கள்.

அது அவருக்கு விரிக்கும் வலை என்று அப்போது தெரியாது.

”நல்ல சொத்துங்க, இந்தச் சொத்தை வாங்கியவுடன், அவருக்கு பெரிய வளர்ச்சிங்க, அவருக்கு யாரையும் ஏமாற்றி பிழைக்க வேண்டுமென்ற அவசியமே இல்லைங்க” என்பார்கள்.

ஒருவரை நம்புவது அவரவரைப் பொறுத்தது. ஆனால் சொத்துக்களுக்கான ஆவணங்கள் சரியாக இருக்க வேண்டும். இன்றைக்கு நம்பிக்கைத் துரோகம் தானே உலகெங்கும் நடக்கிறது. இல்லையென்று சொல்ல முடியுமா?

நான் வில்லங்கச் சான்றினையே நான்கு தடவை போட்டுப் பார்ப்பேன். பைமாஷ் நம்பரில் இருந்து கொரலேசன் நம்பர் வரை சரியாக இருக்கிறதா எனப் பார்ப்பேன். ஒவ்வொரு பத்திரத்தையும் படிப்பது மட்டுமின்றி, பக்கத்து காலைகளின் பத்திரங்களை நகல் எடுத்துப் பார்ப்பேன். எல்லாம் சரியாக இருக்க வேண்டும். புல வரைபடம் சரியாக இருக்க வேண்டும். நிலத்தின் தன்மை தெரிய வேண்டும். அதன் கந்தாயங்கள் தெரிய வேண்டும். அதன் வரி விதிப்புகள் பற்றிய தகவல்கள் தெரிய வேண்டும். பக்கத்து நிலத்தின் வில்லங்கங்கள் பார்ப்பேன். இப்படி இன்னும் பலப்பல ஆய்வுகளை பார்ப்பேன். இதெல்லாம் இரண்டு நொடிக்குள் முடியுமா? நிதானத்துடன் ஆய்வு செய்தல் அவசியம். இத்தனை வேலைகளைச் செய்துதான் அச்சொத்து சரியான முறையில் பதிவு செய்யப்பட்டிருக்கிறதா என முடிவுக்கு வர முடியும்.

நான் குறிப்பிட்ட பிளாக் வாசகருக்கு அதெல்லாம் நேராது. இந்த வழக்கை எப்படிக் கையாண்டால் வெற்றி பெற முடியும் என்று முடிவெடுத்திருக்கிறேன். என்ன ஒன்று, காலம் தான் ஆகும். நம் விருப்பத்துக்கு கோர்ட்டை செயல்படுத்த வைக்க முடியாது. அது தன் விருப்பத்துக்கு தான் இயங்கும். 

கோர்ட்டின் செயல்பாடுகள் பற்றி நன்கு தெரிந்து கொண்டிருப்பவர்களால் தான் சில உயரங்களை அடைய முடியும். அத்துடன் காவல்துறையினரை ஹேண்டில் செய்யும் அறிவும் தேவை.

எனது வக்கீல் நண்பர்களுடன் தினமும் பல வழக்குகள் பற்றி அதன் தீர்ப்புகளைப் பற்றி விவாதிக்கிறோம். பல விஷயங்களை எழுத முடியாது நண்பர்களே. கோர்ட்டுகள் எல்லாம் சினிமாவில் பார்ப்பது போல இருக்காது. வக்கீல்கள் எல்லாம் விதி படத்தின் கதாநாயகி சுஜாதா போலவோ, நேர் கொண்ட பார்வை அஜித்குமார் போலவெல்லாம் இருக்கமாட்டார்கள். 

உங்களுக்கு ஒரு படத்தைப் பற்றிய செய்தி கீழே. இப்படத்தினைப் பாருங்கள். வக்கீல் தொழிலும், நீதிமன்றங்களும் இயங்கும் லட்சணம் தெரியும்.

எதார்த்தம் வேறு, சினிமா வேறு. காவல்துறையின் செயல்பாடுகள் பற்றி நன்கு தெரிந்து கொண்டவர்கள் வாழ்க்கையில் வெற்றி பெறலாம். சாமானியனுக்கு கோர்ட்டோ, காவல்துறையோ தேவையே இல்லை. ஆனால் ஏதோ ஒரு சூழலில் சிக்கி விட்டால் - ஹேண்ட்லிங்க் தெரிய வேண்டும்.

முக்கியமாக ஒன்று - வக்கீல்கள், நீதிபதிகள், காவல்துறையினர், அரசியல்வாதிகள் எல்லோரும் நம்மைப் போலத்தான். அவர்களுக்கும் நம்மைப் போல எல்லாப் பிரச்சினைகளும் உண்டு.

ஆகவே எதுவாக இருந்தாலும் நல்ல நண்பர்களையும், நல்ல ஆலோசகர்களையும் கூட வைத்துக் கொள்ளுங்கள்.

எனது லிங்க்டு இன் இணைப்பில் பாருங்கள். பல பதிவுகளைப் பதிவு செய்து வருகிறேன். தினமும் நடக்கும் பொருளாதார மற்றும் அதன் தாக்கங்கள் பற்றி ஆங்கிலத்தில் எழுதி வருகிறேன். அதிர வைக்கும் உண்மைகளை நீங்கள் தெரிந்து கொள்ளலாம்.

எந்த வழக்கானாலும் சரி, எந்த லீகல் பிரச்சினையானாலும் சரி - தைரியமாக இருங்கள். மிகச் சரியான வழி உங்களுக்கு கிடைக்கும். 

சொத்துக்கள் வாங்கும் போது கொஞ்சமே கொஞ்சமே கவனமாக இருங்கள். அவ்வளவுதான்.

நலமுடன் வாழ்க...!


Sunday, September 15, 2024

ஒடுக்கப்படும் மக்களின் குரல் - ஆணவத்தில் நிர்மலா சீதாராமன்

ஒன்றிய நிதி அமைச்சருடன், கோவையைச் சேர்ந்த தொழில் துறையினர் கலந்துரையாடும் நிகழ்ச்சி கோவையில் செப்டம்பர் 11, 2024ல் நடந்தது. இக்கூட்டத்தில் தமிழ்நாடு ஓட்டல் உரிமையாளர்கள் சங்கத்தின் கவுரவத் தலைவரும், கோவை ஓட்டல் உரிமையாளருமான சீனிவாசன் ஜிஎஸ்டி வரிவிதிப்பு தொடர்பாக, ”பன்னுக்கு ஜிஎஸ்டி இல்லை, ஆனால் பன்னுக்குள் வைக்கும் கிரீம் ஜாமுக்கு 18 சதவீதம் ஜிஎஸ்டி விதிக்கப்படுகிறது. இதனால் பில் போடும் போது கம்ப்யூட்டரே திணறுகிறது. கிச்சனுக்கு வரும் இன்புட் அதிகாரிகளும் திணறுகிறார்கள். ஒரே மாதிரி ஜிஎஸ்டி வரியை  விதியுங்கள், வரியை ஏற்றிவிட்டாலும் பரவாயில்லை” என கொங்கு தமிழில் பேசினார்.

நிர்மலா சீதாராமன் உடனடியாக, “இது போன்ற விமர்சனங்களுக்கு எல்லாம் நான் கவலைப்படுவதில்லை” எனத் தெரிவித்தார். அவர் விமர்சனமே வைக்கவில்லை. ஜி எஸ் டி வரிவிதிப்பில் இருக்கும் குழப்பங்களை எடுத்துச் சொன்னார். 

மறுநாள் அவரை வற்புறுத்தி மன்னிப்பு கேட்க வைக்கப்பட்டதாக தகவல்கள் பரவின. இது தொடர்பான ஒரு வீடியோவை பாஜகவைச் சேர்ந்த ஒருவர் வெளியிட்டார்.

இணையத்தில் பரவிய இச்செய்தியினால் இணையதளவாசிகள் மட்டுமல்ல, பல்வேறு அரசியல் கட்சித்தலைவர்களும் கடுமையான கண்டனத்தைத் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி இணையதள உபயோகிப்பாளர்களிடையே மிகக் கடுமையான தொனியில் நிர்மலா சீதாராமனை பதவி விலக்க வேண்டுமெனவும் கருத்துகள் பதிவு செய்யப்பட்டன.

ஜி.எஸ்.டி வரி செலுத்துவது பொதுமக்கள். அன்னபூர்ணா ஹோட்டல் அல்ல. ஜி.எஸ்.டி வரியை விதிப்பது அரசு. அதனால் ஸ்ரீனிவாசன் ஒரே மாதிரியான வரியை விதியுங்கள் என்றார். அதற்காகத்தான் இந்தக் கூட்டமே கூட்டப்பட்டது. 

மக்களின் குரலை ஒரு தொழிலதிபர் எடுத்துச் சொன்னால் மன்னிப்புக் கேட்க வைப்பது, அது தொடர்பான வீடியோவை, வேண்டுமென்றே பிஜேபி கட்சியினர் வெளியிட்டு அவரை அசிங்கப்படுத்துவதாக நினைத்து, உலகளவில் நிதியமைச்சரை அசிங்கப்படுத்தியது எல்லாம் நடந்தது. இந்த நிகழ்வு அதிகார ஆணவத்துக்கு கிடைத்த அடி.

இந்தியாவின் நிதியமைச்சரிடம் கோரிக்கை வைக்க அத்தனை உரிமையும் ஸ்ரீனிவாசனுக்கு உண்டு. அதைக் கேட்கவும், அதற்கான பதிலைச் சொல்லவும், சரி செய்யவும் தான் நிதியமைச்சருக்கு சம்பளம் தருகிறார்கள்  குப்பனிலிருந்து திவாரி வரை தன் வரிப்பணத்தின் மூலமாக. பொறுப்பில் இருப்பவரிடம் கேள்வி கேட்காமல், நிர்மலா வீட்டு வேலைக்காரியிடமா கேள்வி கேட்க முடியும்?

இந்தியா ஒன்றும் நிர்மலா சீதாராமன் அவர்களின் குடும்பச் சொத்து அல்ல. கேள்வி கேட்டால் பதில் சொல்லுங்கள், கேள்வி கேட்டவரை மன்னிப்புக் கேட்கச் சொல்லியது ஆணவத்திலும் திமிரிலும் இருக்கும் ஒருவரால் தான் முடியும்.

நிர்மலா சீதாராமன் மக்களுடன் மக்களாக தேர்தலில் போட்டியிட்டு நிதியமைச்சர் ஆகவில்லை. அவருக்கு மக்களின் துன்பமும் துயரமும் தெரியாது. அவர் நிதியமைச்சராக இருப்பதற்கு ஒரே காரணம் பூநூல் தவிர வேறொன்றும் இல்லை என்று இந்தியர்களுக்கு தெரியும். இவரின் கணவரே இவரைப் பொதுவெளியில் கடுமையான முறையில் விமர்சிக்கிறார்.

வானதி சீனிவாசனுக்கு ஏதும் உள்குத்து இருந்திருக்குமோ என்னவோ தெரியவில்லை. இந்தம்மாவே நிதியமைச்சராக இருக்கும் போது, நான் இருக்க கூடாதா என்ற ஆவல் கூட இந்தச் சம்பவத்துக்கு காரணமாக இருக்கலாம்.  இல்லாமலும் இருக்கலாம். 

நிதியமைச்சரின் பதவி என்பது இந்தியர்களின் வாழ்க்கையில் பாதிப்புகளை - நல்லதாகவோ அல்லது எதுவாகவோ இருந்தாலும் - உண்டாக்கக் கூடியது. பொதுமக்களின் அன்றாட வரவு செலவுகளைப் பாதிக்கும் துறையில் அமைச்சராக இருக்கிறார். பொறுப்புணர்வு அதிகமாக இருக்க வேண்டிய பதவி.

இப்பதவிக்கு கண்ணியமும், பொறுமையும், அனுபவமும், பொதுமக்களுடன் தொடர்பும் கொண்டிருக்க வேண்டும். நாட்டின் ஆட்சிப் பொறுப்புக்கு வருபவர்கள் தங்கள் செயல்பாடுகளால் மக்களுக்கு நன்மை செய்திடத்தான் வருகின்றனர். 

ஆனால் இந்த நிதியமைச்சர் செய்யும் செயலும், பொதுவெளியில் நடந்து கொள்ளும் போக்கும், பிறரிடம் பேசும் தன்மையும் முற்றிலும் ஆணவத்தாலும், அகங்காரத்தாலும் பீடிக்கப்பட்டிருக்கிறது என பலச் செய்திகளை செய்திதாள்களிலும், இணையதளங்களிலும் காண நேரிடுகிறது.

பூமியை தாய் என்கிறோம். அந்த தாய்மைப் பண்பு, நிதியமைச்சரான நிர்மலா சீதாராமனுக்கு மக்களின் மீது இருக்ககூடாதா?  மக்களின் வரிப்பணத்தில் தானே சுகபோகமாக வாழ்கிறார். பதவியில் உட்கார்ந்து கொண்டு, அதிகாரத்தின் அத்தனை சுகங்களை அனுபவித்து மகிழ்கிறார். 

ராம கதையில் வரும் சீதாவின் பொறுமையில் ஒரு துளி கூட இருக்க கூடாதா? தனக்கு  சம்பளம் தரும் ஸ்ரீனிவாசன் போன்ற மக்களின் கோரிக்கையை ஏற்காமல், கோரிக்கை விடுத்ததற்காக மன்னிப்பு கேள் என்று மிரட்டுவது என்ன விதமான பண்பு?

வரலாறு எத்தனையோ ஆணவத்தில் ஆடியவர்களையும், அகங்காரம் கொண்டலைந்தவர்களின் அழிவையும் பதிவு செய்து வைத்திருக்கிறது. காலம் எல்லாவற்றுக்குமான விடையைத் தரும்.

வானதி சீனிவாசனுக்கும், நிர்மலா சீதாராமனுக்கும் காலம் தன் பதிலைச் சொல்லியே தீரும். அப்போது அகங்காரமும், ஆணவமும் கூட வந்து உதவி செய்யாது. சாமானியர்கள் தான் கூட நிற்பார்கள்.

மனிதாபிமானம் இல்லாதவர்கள் பதவியில் இருந்தால், மக்கள் அவர்களை நிராகரிக்க வேண்டும். அதைச் செய்யாமல் பல்லை இளித்துக் கொண்டு, பின்னால் நின்றால் அவமானம் தான் பரிசாக கிடைக்கும்.







கொசுறு செய்தி கீழே..!






Monday, September 9, 2024

நிலம் (115) - வழக்குச் சொத்துக்களைப் பதிவு செய்யலாம் பதிவுதுறை உத்தரவு

09.09.2024 செய்தி தாள்களில், நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் இருப்பதை சுட்டிக்காட்டி, சொத்து விற்பனையை பதிவு செய்ய மறுக்கக்கூடாது எனப் பத்திரப்பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது செய்தி வெளியாகி இருக்கிறது. 

சொத்து தொடர்பான வழக்கு நிலுவையில் இருந்தால், அதை விற்பது தொடர்பான பத்திரங்களை, சார் பதிவாளர்கள் பதிவு செய்யமாட்டார்கள். இதற்கிடையில் நீதிமன்றம் எவ்வித உத்தரவும் பிறப்பிக்காத நிலையில், சொத்து விற்பனையை நிறுத்தக்கூடாது என ஒரு சில வழக்குகளில்  தீர்ப்பு  அளித்திருக்கிறார்கள் நீதிபதிகள். தடை ஆணை இல்லாத நிலையில் வழக்கு நிலுவையில் இருந்தாலும் சொத்து விற்பனையைப் பதிவு செய்யலாம் என பதிவுத்துறை உத்தரவிட்டுள்ளது.

அன்பானவர்களே, இதையெல்லாம் நம்பி சொத்துக்களை வாங்கி விடாதீர்கள். நீங்கள் நினைப்பது போல நீதிமன்றங்கள் இல்லை. இந்திய நீதிமன்றங்கள் சிவில் வழக்குகளின் தீர்ப்பினை வாதியின் இறப்புக்குப் பின்பும் வழங்கும் வழக்கம் கொண்டவை.

ஒரு சொத்துத் தொடர்பான வழக்கின் இறுதி தீர்ப்பு இல்லை எனில் அந்தப் பக்கம் திரும்பியே பார்க்காதீர்கள்.

விலை குறைவாக கிடைக்கிறது என ரிஸ்க் எடுக்கிறேன் பேர்வழி என வாங்குகின்றீர்கள் என்றால், உங்களுக்கு நீதிமன்றத்தை கையாளுவதற்கான தகுதி இருக்க வேண்டும். இல்லையென்றால் உங்கள் வாழ்க்கை சுண்ணாம்புக் கால்வாயில் வைத்த செங்கல் போலாகும். 

கவனமாய் இருங்கள்.

நீதித்துறை இப்போதெல்லாம் முற்றிலும் மாறி விட்டது. வழக்குகளை தாமதிக்க பல்வேறு உபாயங்கள் இருக்கின்றன. வாதியைப் பார்த்தவுடனே உங்களைப் பற்றி முடிவு செய்து விடுகிறார்கள். 

நீதித்துறையின் ஈரல் அழுகி விட்டது. இந்தியாவில் பிழைக்க வேண்டுமெனில் நீங்கள் விக்டிமாக(Victim) இருக்க வேண்டும். ஜூடிசியல் விக்டிம் குற்றவாளியாக இருந்தாலும் அவர்களுக்குத்தான் ஆதரவாய் இருக்கும்.  எழுத சங்கடமாகத்தான் இருக்கிறது. ஆனாலும் அப்பாவிகள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக இதை எழுதுகிறேன்.

அரசாங்கம் வருவாய் வருவதற்காக சில விதிகளை உருவாக்கும். அதனால் பாதிக்கப்படுவது மக்கள் தான்.  உதாரணமாக மதுக்கடைகளை அரசு நடத்தக்கூடாது எனப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். மதுக்குடிப்பது ஒரு தனிமனிதனின் உரிமை என்கிறது சட்டம்.

அரசு மதுக்கடைகளை நடத்தவில்லை என்றால் யார் நடத்துவார்கள்? 

தனியார்தானே....?

தனியாரிடம் மது வாங்கிக் குடித்தால் மக்களுக்கு நோய் வராதா? செத்துப் போக மாட்டார்களா? இதெல்லாம் நடக்கும் தானே?

ஆனாலும் ஏன் ஒரு சில அரசியல்வியாதிகள் மதுக்கடையை அரசு நடத்தக்கூடாது என்று அலறிக் கொண்டிருக்கிறது தெரியுமா? அந்த வியாதிகள் கடைகளை நடத்திக் கொள்ளை லாபம் எடுக்க வேண்டுமென வாயில் ஒழுகும் ரத்தத்துடன் கூப்பாடு போட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

மதுக்குடிப்பவர்களை குடிக்கக் கூடாது என அரசு கையைப் பிடித்து கட்டியா போடமுடியும்? உடனே வியாதிகள் கத்திக் கூப்பாடு போடுவார்களே...!

அரசின் மதுக்கூடங்கள் வழியாக வரும் மானம் (குடிமக்களின்) - வருவாயாக ஏதோ திட்டங்களுக்கு செலவழிக்கப்படுகிறது என்றொரு பயனாவது கிடைக்கிறது.

அரசு தனி மனிதனுக்காக எதுவும் எப்போதும் செய்யாது. நாம் தான் அரசுடன் இயைந்து இருக்க வேண்டும். அதுவும் தாமரை இலைத் தண்ணீர் போல.

அரசப்பயங்கரவாதம் என்றுக் கேள்விப்பட்டிருப்பீர்கள். அரசு விதிகளுக்கு உட்பட்டு இயங்குவதாய் சொல்லிக் கொள்ளும், ஆனால் விதி மீறல்களைச் செய்யும். ஏனென்றால் அரச சட்டங்களை அமல்படுத்துபவர்களும் சாதாரண ஆசா பாசாங்குகளுக்குக் கட்டுப்பட்டவர்கள் தானே.

ஆகவே, வழக்குச் சொத்துக்களை வாங்குவதைத் தவிருங்கள். அரசு மதுக்கடையை வைத்திருக்கிறது என்பதற்காக குடிமகன்கள் எல்லோரும் குடித்தே ஆக வேண்டிய அவசியம் இல்லையே...!!!

வளமுடன், நலமுடன் வாழ்க...!!!

தினமலரை ஒதுக்கிய தமிழ்நாடு

இன்றைய நாள் உங்களுக்கு நல்ல அனுபவத்தைத் தரும்படி அமையட்டும். நீண்ட நாட்களாக இணையத்தில் எழுத முயன்று கொண்டிருந்த போதெல்லாம், ஏதோ ஒரு தடை வந்து விடுகிறது.

சமீப காலமாக இரத்தத்தில் சர்க்கரை அளவு கூடுதலாக இருப்பதை அறிந்தவுடன், ஜோதி சுவாமி கொஞ்சம் பச்சிலைகளைத் தந்தார். அதை வாயில் போட்டு மென்று தின்றவுடன் நாக்கு புரண்டு விட்டது. அந்தளவுக்கு அதன் வீரியம் இருக்கிறது. தொண்டையோ ஒரு வித அழற்சியில் சிக்கியது. விடாமல் நான்கைந்து நாட்கள் சாப்பிட்டு விட்டேன்.  அதற்குப் பிறகு சாப்பிடும் முன்பு 100, சாப்பிட்ட பின்பு 160 இருக்கிறது. 

பச்சிலை சாப்பிடுவதற்கு முன்பாக,  சாப்பிடுவதற்கு முன்பு 240, சாப்பிட்ட பின்பு 350 இருந்தது. வாயைக் கட்டி விட்டேன்.

பால், டீ, காஃபி, எண்ணெய் பலகாரம் முற்றிலுமாக குறைந்து விட்டேன். சர்க்கரை ஒழுங்குக்கு வந்து விட்டது. முக்கியமாக வெளியே செல்லும் போது, உணவகங்களில் சாப்பிடும் போது தோசை மற்றும் இட்லியைத் தவிர்க்கவும். நான்கைந்து மாதங்கள் உணவகத்தில் சாப்பிட்டதன் விளைவுதான் சர்க்கரை. சாம்பாரில் சர்க்கரை, தோசையில் சர்க்கரை.  

உடல் பருமன் மற்றும் உடல் இளைக்க - அவ்வப்போது குடம்புளி ரசம் வைத்து குடித்துக் கொள்வேன். குடம் புளி  உடலில் இருக்கும் கொழுப்பைக் கரைக்கும். நடைப்பயிற்சி முடியாது என்பதால் இவ்வகையான உணவுப் பழக்கம்.

உங்களுக்கு ஒத்து வருமா என்று தெரியவில்லை. 

நீண்ட நாட்களுக்கு முன்பு ஃபேட்டி லிவர் பிரச்சினை இருந்தது. ஜம்மி ஆயுர்வேத நிறுவனத்தில் ஒரு சிரப் விற்கிறார்கள். அதை வாங்கி பயன்படுத்தினேன். கத்தரிப்பூ கலரில் இருந்த நாக்கு சாதாரண நிலைக்கு வந்து விட்டது. ஃபேட்டி லிவர் பிரச்சினை இருந்தால் நாக்கு கத்தரிப்பூ நிறத்தில் இருக்கும் என ஆயுர்வேத மருத்துவ சகோதரி எனக்கு பரிந்துரைத்தார்.

தீராத முட்டுவலி, தீராத கழுத்து வலி பிரச்சினை இருப்பவர்களுக்கு நிரந்தரமாய் சிகிச்சை தர ஒரு மருத்துவமனை இருக்கிறது. மெயிலில் தொடர்பு கொள்ளுங்கள். அதுபற்றிய தகவலைத் தருகிறேன். 

சமீபகாலமாக இந்து நாளிதழ், தினகரன் மற்றும் தீக்கதிர் நாளிதழ்களுடன் தினமலர் வந்து கொண்டிருக்கிறது.

எனக்கு ஒரு காலத்தில் சாரு நிவேதிதா மூலமாக அந்துமணி அவர்களுடன் தொடர்பு இருந்தது. எனக்கும் அவருக்கும் ஒரே தேதி பிறந்த நாள்.  தினமலரை நான் பெரும்பாலும் இணையத்தில் வாசிப்பதுண்டு. 

அப்போதெல்லாம் சதித்திட்டங்களின் மறை நடவடிக்கைகளை அறிந்து கொள்ள இயலாத அறிவு இருந்தது. காலம் செல்லச் செல்ல ஒருவர் பேசும் போது, அவரின் மனதுக்குள் என்ன நினைத்துக் கொண்டு பேசுகிறார் என்று புரிந்து கொள்ளும் பக்குவம் வந்தது.

தினமலரை நான் நீண்ட காலத்துக்கு முன்பு நிராகரித்து விட்டேன். படிப்பதே இல்லை. அது முற்றிலுமாக ஒரு சார்புநிலைப் பத்திரிக்கை என்பதைப் படித்தால் புரிந்து கொள்ளலாம்.

நான் சொல்லாத போது தினமலர் பத்திரிக்கையை ஏன் போடுகிறார்கள் என்று தெரிந்து கொள்வதற்காக முகவரை அழைத்தேன்.

இலவசமாய் ஒவ்வொரு வீட்டுக்கும் போடுபடி கேட்டுக் கொண்டார்களாம். அதனால் போடுகிறேன், பணமெல்லாம் கேட்க மாட்டேன் என்றார் அவர்.

எவ்வளவு குரூரமான தந்திரம் பார்த்தீர்களா? 

வேறு பத்திரிக்கைகளை வாங்க விடக்கூடாது என்பதற்காக - இவர்களின் பத்திரிக்கைகள் விற்பனையாகாத பகுதிகளில் தினமலரை வெகு தந்திரமாக ஒவ்வொரு வீட்டுக்குள்ளும் நுழைப்பதைப் பாருங்கள்.

இலவசமாய் மார்க்கெட்டிங்க். 

தினசரி முகவர்கள் இதற்காக காசு கேட்பதில்லை. தினமலர் ஒவ்வொரு வீட்டுக்கும் எந்த விதச் செலவு செய்யாமல் செல்லும். தினமலரைப் பிடிக்காதவர்களின் வீட்டுக்குள்ளும் செல்லும்.  அவர்களுக்குச் செலவுதானே என்று நினைப்பீர்கள். ஆனால் அதுவல்ல காரணம்.

பிற பத்திரிக்கைகளின் விற்பனையைத் தடுத்தது போலவும் ஆச்சு, விற்பனையை உயர்த்தியது போலவும் ஆச்சு, இத்தனை பத்திரிக்கைகள் போடுகிறோம் எனக் கணக்குக் காட்டி விளம்பரதாரர்களிடம் அதிக கட்டணம் கேட்டது போலவும் ஆச்சு. தமிழ் நாட்டிலேயே நாங்கள் தான் அதிக பத்திரிக்கைகள் விற்பனை செய்கிறோம் என்று மார்தட்டிக் கொள்ளவும் போலவும் ஆச்சு.

எப்படியான தந்திரம் பார்த்தீர்களா?

முன்பு ஒரு சில மசாலா பொடிகளை பத்திரிக்கைகள் இலவசமாய் பாக்கெட்டுகளில் தருவார்கள். அது இலவசமா? இல்லை விற்பனைத் தந்திரம்.

தினமலரை தமிழ் நாட்டு மக்கள் நிராகரிக்கிறார்கள் என்று தெரிய வருகிறது.

நல்ல செய்திகளை இந்தப்பக்கமும் அந்தப்பக்கமும் இன்றி வெளியிட்டால் என்ன கெட்டுப் போகும்? 

தினமலர் என்பது பிராண்ட் - அது சார்பு நிலையில் இருந்து சரியான நிலைக்கு மாறவில்லை எனில் மக்கள் நிராகரித்து ஒதுக்கி விடுவார்கள். தினமலர் அந்த நிலையை நோக்கிச் செல்லும் என்று நம்புகிறேன். ஏனெனில் சுரை விதை - சுரைக்காயைத்தான் காய்க்கும்.

வளமுடன், நலமுடன் வாழ்க