குரு வாழ்க ! குருவே துணை !!

ஆசை அறுமின்கள் ஆசை அறுமின்கள் ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள் - திருமூலர்

Thursday, February 15, 2024

நிலம் (114) - கோவை மாஸ்டர் பிளான் ரிலீஸ்

கோவை உள்ளூர் திட்டக்குழுமம் புதிய மாஸ்டர் பிளானை வெளியிட்டுள்ளது. வெகு நீண்ட காலத்துக்குப் பிறகு வெளியாகி இருக்கிறது.

கோவை உள்ளூர் திட்டக்குழுமத்தை - LPA என்றும் அழைக்கலாம். அதாவது நகர எல்லைக்குள் இருக்கும் நிலங்களின் சர்வே நம்பர்களில் எந்தெந்த சர்வே நம்பர் வீடு கட்டலாம், கமர்சியல் நிலம் எது, கல்வி நிலங்கள் எவை, தார்ச்சாலைகள் செல்லும் சர்வே எண்கள், நிறுவனங்களுக்கு அனுமதி உள்ள சர்வே எண்கள், தண்ணீர் செல்லும் பாதை, சாலைகள் செல்லும் சர்வே எண்கள்  மற்றும் விவசாய நிலங்கள் எவையெவை என்ற விபரங்களை  நகர திட்ட அலுவலகம் வெளியிடுவார்கள். அதைத்தான் கோவை உள்ளூர் திட்டக்குழுமம் செய்திருக்கிறது. இதே போல பல கார்ப்பொரேஷன்களுக்கும் புதிய மாஸ்டர் பிளான் வெளியாகி உள்ளது.

பொதுமக்களிடம் நேரிடையாக பாதிப்பை உண்டாக்கும் இந்த மாஸ்டர் பிளான் என்னவென்று பலருக்கும் தெரியாது.

கோவையில் இரு மாஸ்டர் பிளான்கள் - 1992 பின்னர் 2012 என நினைவு - இந்த இரு மாஸ்டர் பிளான்களில் எதை மக்கள் பயன்படுத்துவது என பெரும் குழப்பம் நிலவியது. ஜெயலலிதா 2012 பிளானை நிறுத்தி விட்டார் என்றுச் செய்தி. அது உண்மையா எனத் தெரியாது. இதற்குப் பின்னால் பெரும் வேலைகள் உள்ளன. அதையெல்லாம் பொது வெளியில் எழுத முடியாது. 

ஆனால் கோவை உள்ளூர் திட்டக்குழுமம் 2012 பிளானைத்தான் செயல்படுத்தியதை நான் கண்டேன். ஏனென்றால் டிடிசிபி பிளாட் அப்ரூவல் பணிகளைச் செய்தவன் என்ற வகையில் தெரிய வந்தது. 

திமுக அரசு பொறுப்பேற்ற பின்னால் இந்த மாஸ்டர் பிளான் வெளியிட்டிருப்பது மக்கள் மீதான அவர்களின் அக்கரையைக் காட்டுகிறது. முதல்வர் முக ஸ்டாலின் அவர்களுக்கு மிக்க நன்றி.

இந்த மாஸ்டர் பிளானை இணையதளத்தில் வெளியிட்டுள்ளார்கள். கீழே இருக்கும் முகவரியினை கிளிக் செய்து பார்க்கவும்.

www.coimbatorelpa.com

இது எத்தனை நாளைக்கு இருக்கும் எனத் தெரியாது. ஆகவே டவுன்லோடு செய்து வைத்துக் கொள்ளுங்கள். கோவை மாவட்டத்தின் வெகு முக்கியமான அரசு ஆவணங்கள் இவை. 

இதில் முக்கியமாக சாலைகள் செல்லும் சர்வே எண்கள் மற்றும் திட்டமிடப்பட்டுள்ள சாலைகளின் சர்வே எண்கள் ஆகியவை குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் ஹாக்கா கிராமங்கள் பற்றிய விபரமும் இருக்கின்றது.

பலருக்கும் பெரும் குழப்பமாய் இருப்பது வார்டுகள். 

ரெவின்யூ வார்டுகள் என்பது வேறு. ஓட்டுப் போட உள்ள வார்டுகள் வேறு.

அதே போல ரெவின்யூ கிராமங்கள் என்பது தனி, கிராமங்கள் என்பது வேறு. இரண்டையும் குழப்பிக் கொள்ளக் கூடாது.

கொரலேசன் சர்வே நம்பர்கள் வேறு உண்டு. அந்த நம்பர்களைத்தான் இந்த புதிய மாஸ்டர் பிளானில் பயன்படுத்தி இருக்கிறார்களா என்று வேறு பார்க்க வேண்டும். 

கிராம புல எண்களையும், அதற்குரிய டவுன் சர்வே எண்களையும் ஒப்பீடு செய்து கொள்வது முக்கியம்.

இனி நிலம் வாங்கும் முன்பு, தொடர்புடைய நிலத்தின் பயன்பாடு என்னவென்பதை தெரிந்து கொள்ளுங்கள்.

இது பற்றிய ஆட்சேபனைகள் ஏதும் இருப்பின் குறிப்பிட்ட காலத்துக்குள் தகுந்த ஆதாரங்களுடன் கணபதியில் இருக்கும் அலுவலகத்தினைத் தொடர்பு கொள்ளுங்கள்.

சாலை ஓரமாக நிலம் வாங்கி விடாதீர்கள். கவனம் தேவை. எனக்கு வரும் அழைப்புகள் எதிர்காலத்தில் விலை உயரும் என சாலை ஓரமாக நிலம் கேட்கிறார்கள். அதற்குப் பின்னால் பல மறைக்கப்பட்ட விஷயங்கள் உள்ளன. ஆகவே கவனம்.

முன்பெல்லாம் டிடிசிபி அப்ரூவ்ட் மனைகளை நிலமெடுப்பின் போது விட்டு விடுவார்கள். புதிய நிலெமெடுப்பில் அதெல்லாம் இல்லை என்பதைக் கவனத்தில் கொள்க. 

நம்மிடைய இருக்கும் பலரும் காது வழிச் செய்திகளையே ரியல் எஸ்டேட் வியாபாரத்துக்குப் பயன்படுத்துகிறார்கள். எதுவாக இருந்தாலும் ஆவணங்கள் இன்றி முன்னெடுக்காதீர்கள்.

இப்போதைய காலம் அவ்வளவு எளிதானதல்ல. ஏமாற்றும் பேர்வழிகள் பலர் கடைகளை திறந்து வைத்திருக்கிறார்கள். 

கவனமாய் இருப்பது உங்கள் பொறுப்பு. 

வாழ்க வளமுடன்..!

காளப்பட்டி கிராமத்தில் வரக்கூடிய எதிர்கால சாலைகள் அமையவுள்ள சர்வே எண்கள் கீழே உள்ளன.

இது கெஜட்டில் வெளியான ஆர்டர் காப்பி. ரெபரென்சுக்காக வெளியிட்டுள்ளேன்.



Saturday, February 10, 2024

மித்ரே சிவா - உனக்குள் ஒரு ரகசியம் - ஓர் அலசல்

ஆனந்த விகடன் அடுத்த சுவாமி ஜியை, தமிழர்களுக்கு அறிமுகம் செய்து வைக்க தொடரை ஆரம்பித்து விட்டது. அதென்னவோ தெரியவில்லை தற்போது பிரபலமாக இருக்கும் பல சுவாமி ஜீக்கள் ஆனந்த விகடனில் தொடர் எழுதுகிறார்கள். பிரபல்யம் அடைகிறார்கள். ஏதேனும் டீல் இருக்குமோ?

மித்ரே சிவா அவர்களின் ஒரு கூட்டத்தில் கலந்து கொண்டேன். அவருடன் நேரில் பேசி இருக்கிறேன். அவரின் மனைவி கொடுத்த ஃப்ரூட் சாலட் அற்புதம். 

திடீரென்று விகடனைப் புரட்டிக் கொண்டிருந்தேன் மித்ரே சிவா எழுதிய உனக்குள் ஒரு ரகசியம் படித்தேன். 

அவரின் கருத்துக்கள் சில.

திட்டம் என்பது நம் அறிவுக்குள் உதிக்கிறது

அறிவு நிலையானது. ஆனால் வாழ்க்கை நிலையானதல்ல

முடிவு என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். அதைப்பற்றிச் சிந்திப்பதை விட்டுவிட்டு, திட்டத்தைச் செயல்படுத்த ஆரம்பிக்க வேண்டும். அப்படிச் செயல்படுகிறபோது நிறைய விஷயங்கள் நம் கண்ணுக்குத் தெரியத் தொடங்கும். மனத்தைக் கடந்த நிலைக்கு நாம் செல்வோம்.

கோயம்புத்தூருக்குக் காரில் செல்வது திட்டம். அந்தப் பயணத்தில் மட்டுமே நம் கவனம் இருக்க வேண்டும். பயணத்தின் இடையில் எது வேண்டுமானாலும் நடக்கலாம். வாகனம் பழுதாகலாம், பயணம் தடைப்படலாம், பாதையில் பிரச்னை ஏற்படலாம். எது நிகழ்ந்தாலும் அதற்கு ஏற்ப பயணத்திட்டத்தை மாற்றியபடி பயணத்தைத் தொடர வேண்டும். மாறாக, பயணத்தை ஆரம்பிக்கும்போதே கோயம்புத்தூரில் வாழ்வதுபோல் கற்பனை செய்யக் கூடாது. அங்கு தங்குமிடம், சாப்பிடும் உணவு என்று கற்பனை செய்து நிகழ்காலத்திலேயே அதை வாழ ஆரம்பித்துவிட்டால் செயல்பாட்டில் கவனம் சிதறிவிடும். இதுதான் பலரும் செய்யும் மிகப்பெரிய தவறு.

இந்தக் கணத்தில் நிதர்சனத்துக்குள் நீங்கள் ஆழமாகச் செல்லச் செல்ல, நீங்கள் நினைப்பதெல்லாம் சுலபமாக முடியும்.

நிற்க..!

அறிவு நிலையானது. வாழ்க்கை நிலையற்றது - 

அறிவு நிலையானதாம். அறிவு என்பதே ஒரு குப்பை என்பார் ஓஷோ. எவராலோ எந்தக் காலத்திலோ கொடுத்த விஷயம் தான் அறிவு. அறிவு எப்படி நிலையாக இருக்கும்? எனக்குத் தெரியவில்லை. உங்களுக்குத் தெரிகிறதா? இது என்னவென்று?

மனதைக் கடந்த நிலைக்கு நாம் செல்வோம்? - எப்போது தெரியுமா திட்டத்தினைச் செயல்படுத்தும் போது. 

மனதை ஆளத் தெரிந்தவனுக்கு திட்டம் எதற்கு, காசு பணம் எதற்கு?  

கோவைக்கு காரில் செல்வது ஒரு செயல். செயலைச் செய்பவர்களின் மன நிலையைப் பொறுத்து ஒவ்வொன்றும் மாறும். 

கோவைக்குப் பயணம் செல்பவர்கள் எதற்கு கோவையில் வாழணும்? - இதென்ன ஒப்பீடு?

மனதுக்குள் கொஞ்சம் ஆராய்ந்து பாருங்களேன். 

கனவு காணாமல், அக்கனவுக்குள் வாழாமல் எதுவும் சாத்தியப்படாது என்று பல அறிஞர்கள் சொல்லி இருப்பதை நினைவில் கொள்ளுங்கள்.

மிகச் சரியானது எது என்பதை அறிந்து கொள்ள முயலுங்கள். பிசினஸ் எது? ஆன்மீகம் எது? அறிவுரை எது? என்று ஆராய்ந்து பாருங்கள்.

விஜய் கட்சி அவல அரசியல் நகைச்சுவை

யுவராணியுடன் கபடி விளையாடி, மறைந்து போன ஸ்ரீ வித்யா முதுகைத் தடவி தமிழ் திரைப்படக் காவியங்களை தமிழ் சினிமா ரசிகர்களுக்கு கொடுத்த விஜய், அடுத்து நடிக்கும் படத்தின் தலைப்பு தமிழக வெற்றிக் கழகம்.

வெளியான படங்கள் எல்லாம் ஊத்திக் கொண்டன. மார்க்கெட்டிங்க் செலவு செய்து போலி ஹைப்பில் எத்தனை நாள் ஓட்ட முடியும்?  இனி ஒன்றும் செய்ய முடியாது என்ற நிலை. சம்பாதித்து வைத்திருக்கும் சொத்தினைக் காப்பாற்றிக் கொள்ளலாம் என்ற திட்டம்.

மோடியின் பரிவாரங்கள் - அமலாக்கத்துறை, வருமான வரித்துறை மற்றும் சிபிஐ மேலும் கவர்னர் பதவிப் பெறத் துடித்துக் கொண்டிருக்கும் நீதி கோலமான்கள் வரிசைகளின் பயமுறுத்தல்.

ஜோசப் விஜய் என்று நூலிபானின் கூவல்.

இந்த ஆபத்தெல்லாம் வந்து விட்டால் என்ன செய்வது? 

தூத்துக்குடியில் கொஞ்சம் உதவினார் போலும். அங்கே எவனோ ஒரு குசும்புக்காரன் வருங்கால முதல்வரேன்னு கூவியிருப்பான் போல.

ஒரே ஒரு அறிக்கை. கட்சி துவங்கியாச்சு.

இப்படியெல்லாம் தமிழ் நாட்டில் மட்டுமே நடக்கும். 

ஊடக விபச்சாரகர்கள் வாய் கிழிய பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதில் ஒரு நாதாரி விஜய் முதலமைச்சராவாராம் என்று பேட்டி. யூ டியூப்புகளில் பொய்கள் மட்டுமில்லை பல்லுப் படாமல் பேசுவதும் பெருகி வழிகின்றன.

ஆனானப் பட்ட சிவாஜி அரசியல் கதையே கந்தலானது. 

காமராஜருக்கே இலையே இல்லை என்று அனுப்பி விட்டது தமிழ் நாடு. 

கமல்ஹாசனுக்கே தண்ணி காட்டிக் கொண்டிருக்கிறது.

சிரஞ்சீவி காரு தொழிலைப் பார்க்கப் போயிட்டாரு.

இப்போது இவரு கடை விரிக்க வந்துட்டாரு.

பெயரைப் பாரு... ! 

தமிழக வெற்றிக் கழகம் - அது எங்கே இருக்குன்னுவாது தெரியுமா இவருக்கு?

மக்களுக்கு நல்லது பண்ணுன்னு இவரை எல்லாம் எவன் அழைச்சான்னு தெரியலை. 

அவல அரசியல் நகைச்சுவை.


நிலம் (113) - கோவை கணபதியில் நிலம் ஆக்கிரமிப்பு

எல்லோருக்கும் வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். கடந்த ஒரு வருடமாக பத்திரிக்கை வேலையில் இருந்ததால் தொடர்ந்து எழுத முடியவில்லை. பைசாவுக்கு பிரயோஜனம் இல்லாத பத்திரிக்கை வேலை அது. மாதத்தில் பதினைந்து நாட்களை விழுங்கி விடுகிறது. 

பெரிய அளவில் முதலீடு தேவைப்படும் பத்திரிக்கை தொழில். ஆகையால் அதிலிருந்து விடை பெற்றேன். இனி வழமை போல பதிவுகள் வரும்.

இதோ கோவையில் மீண்டும் ஒரு ஆக்கிரமிப்பு. கணபதி சி.எம். நகரில் சதுரடி ரூ.10000 என்று ரியல் எஸ்டேட் வெப்பில் படித்தேன். இந்த ஆக்கிரமிப்பு பற்றி படித்ததும் அதிர்ந்தேன்.

இதே போலத்தான் கோவில்பாளையம் ஆதித்யா கல்லூரியின் பின்புறமிருந்த ஒரு என்.ஆர்.ஐயின் இடத்தை சாதுரியமாக அபகரித்தனர். ஒரு வருடம் அலைந்து பட்டா மாற்றிக் கொடுத்தேன். பெரும் அலைச்சல் வேலை அது.

இனி அந்த ஆக்கிரமிப்புச் செய்தி. நன்றி : நவ் இந்தியர் டைம்ஸ்



இந்தச் செய்தியில் ஆடிட்டர் ராஜாராமுக்கே இந்தக் கதி என்றால் பிறருக்குச் சொல்லவும் வேண்டுமோ? குற்றவாளிகள் வழக்கை ரத்துச் செய்ய உயர் நீதிமன்றத்தில் வழக்கு வேறு தொடுத்திருக்கிறார்கள். இந்த அளவுக்கு அவர்களுக்கு தைரியம் கொடுத்திருப்பது என்ன தெரியுமா? சட்டம். சட்டத்தை அமலாக்கும் நபர்கள். இதற்குப் பின்னாலே பெரும் போராட்டம் இருந்திருக்கும். பெரும் வலி இருந்திருக்கும். பெரும் பணம் செலவாயிருக்கும். 

திருடர்களிடமிருந்தும், ஆக்கிரமிப்பாளர்களிடமிருந்து, கட்டப்பஞ்சாயத்து செய்பவர்களிடமிருந்தும் பொதுமக்கள் தப்பிப்பது பெரும் வேதனை தரும் வேலை. எங்கும் பணத்திற்கு மட்டுமே மதிப்பு. பணம் கொடுத்தால் பிணம் கூட உயிருடன் இருக்கிறது என சர்டிபிகேட் கொடுப்பார்கள். ஆகவே, அனைவரும் ஜாக்கிரதையாக இருக்கவும். 

உடனே அரசு சரியில்லை என்று ஆரம்பித்து விடாதீர்கள். எந்த அரசு வந்தாலும் இதே நிலைதான். ஆட்சியாளர்களுக்கு இதைப் போன்ற செய்திகள் கவனத்தில் கிடைப்பதே இல்லை. அப்படிக் கவனிக்கவும் முடியாது. ஏனெனில் அரசியல் என்பது அத்தனைச் சுலபமல்ல.

வாழ்க வளமுடன்